தமிழ்தேச விடுதலை இயக்கங்களும் அதன் செயல்பாடுகளும்- மார்க்சியவாதியின் விமர்சன பார்வை-01

நம் மத்தியில் உள்ள தமிழர் உரிமை இறையாண்மை பேசுவோர் உண்மையில் நாம் வாழும் சமூக அறிவியலை ஆம் மார்க்சிய இயங்கியலை புரிந்துக் கொண்டார்களா என்பது கேள்விகுறியாக உள்ளது. அவர்கள் பேசும் அரசியல் செயல்பாடுகள் குறித்து ஒரு தெளிவான கண்ணோட்டம் வேண்டும் அல்லவா அதற்கானதே இந்தப்பகுதி.

இந்த கட்டுரையை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே

மார்க்சியம் மற்றும் தமிழ்த் தேசியக் கேள்வி: ஓர் ஆய்வு

இந்தக் கட்டுரை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆழமாகப் பகுப்பாய்வு செய்கிறது. ஐரோப்பிய வரலாற்றுத் தேசங்களின் உருவாக்கத்தையும், லெனின் மற்றும் ஸ்டாலின் முன்வைத்த சுயநிர்ணய உரிமை கோட்பாடுகளையும் கொண்டு தமிழகச் சூழலை இது ஒப்பிடுகிறது. பெரியார் மற்றும் திராவிட இயக்கங்களின் செயல்பாடுகள் ஆளும் வர்க்க நலன் சார்ந்தவை என்றும், அவை உழைக்கும் மக்களின் வர்க்க முரண்பாடுகளைக் கணக்கில் கொள்ளவில்லை என்றும் ஆசிரியர் விமர்சிக்கிறார். இன்றைய தமிழ்த் தேசிய அமைப்புகள் சாதி, வர்க்கம் மற்றும் சிறுபான்மையினர் குறித்த தெளிவான அரசியல் பார்வையின்றி இருப்பதை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இறுதியில், இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயத்தைப் பெறுவதே உண்மையான விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் வழிவகுக்கும் என மார்க்சியத் தீர்வை முன்வைக்கிறது. இனம் மற்றும் வர்க்கப் போராட்டங்களை இணைப்பதன் மூலமே ஒடுக்குமுறையிலிருந்து முழுமையான விடியலைப் பெற முடியும் என்பது இதன் மையக்கருத்தாகும்.

மார்க்சிய அடிப்படையில் தமிழ்த் தேச விடுதலை இயக்கங்கள் ஏன் விமர்சிக்கப்படுகின்றன?

தேசிய ஒடுக்குமுறைக்கான காரணம் புரிந்துக் கொள்ள மார்க்சியம் மட்டுமே இதுவரை தீர்வை முன்வைத்துள்ளது. அதனை தவிர மற்ற எந்த அறிவுஜீவிகளின் கருத்துகளும் வெற்றிபெறவில்லை.

உலகில் இதுவரை பல்வேறு விதமான தத்துவங்கள் கண்ணோட்டங்கள் உள்ளன. மார்க்சியத்தை தவிர மற்ற எல்லா தத்துவங்களும் நாம் வாழும் சமூக அமைப்புகுள்ளேயே வாழ வழி தேட சொல்லுகிறது! அதாவது நிலவுகின்ற பிற்போக்கு சமூகத்தை பாதுகாக்கச் சொல்கிறது.

இந்த பிற்போக்கு சமூகத்தில் வளமாக வாழ்பவர்களுக்கு ஆதரவான தத்துவம்தான் இந்த தத்துவ கருத்துக்கள் எல்லாம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் மார்க்சியம் மட்டும்தான் இந்த ஏற்றத்தாழ்வான வர்க்க சமூகத்தின் அடிப்படைகளை தெள்ளத் தெளிவாக கூறியதோடு அல்லாமல் இந்த ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணமான சமூக அமைப்பை விளக்குவதோடு மட்டுமல்லாமல் இந்தப் பிரச்சினைக்களுக்கு காரணமான அடிப்படையான சமூக அமைப்பையும் அரசமைப்பையும் தகர்த்து ஏற்றத்தாழ்வற்ற சுரண்டல் முறையற்ற ஒரு சமூகத்தை படைக்க சொல்லுகிறது. அதன் மூலம் மார்க்சியம் மட்டும்தான் ஒடுக்கப்பட்டு கிடக்கும் மக்களுக்கு ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைகான வழிமுறை முன்வைக்கிறது, அதே வேளையில் சுரண்டுபவர்களுக்கு பாதகமான கருத்தை முன்வைக்கிறது. 

மார்க்சியமானது இங்குள்ள வலிமை படைத்த ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்நாட்டு ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தை கோருகிறது. இவை சாதாரணமானவை அல்ல. அதற்கான பணி நீண்டநெடியவை. இங்குள்ள அரசுக்கு எதிரான போராட்டத்தை உழைக்கும் வர்க்கங்கள் நடத்திக்கொண்டிருப்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். அதனை பற்றி தெரியாதவர் உண்டோ? ஆனால் நம் தேசியம் பேசுவோர் நிலை என்ன?

வரலாற்று தேசங்கள்:-

முதலாளித்துவத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் பயனாக ஐரோப்பாவில் நிலமானியத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கான மாற்றம் (Transition from Feudalism to Capitalism) நிகழ்ந்தது. அம்மாற்றத்தின் போது ஐரோப்பாவில் நவீன தேசிய அரசுகள் (Modern National States) உருவாகின. அத்தகைய அரசுகள் “வரலாற்றுத் தேசங்கள்” (Historical Nations) ஆகும். இவை தவிர்ந்த “வரலாற்றுத் தேசியங்கள் அல்லாதவை” (Non-historic Nations) வரலாற்றின் மிச்ச சொச்சங்களாக உள்ளன. இவை பிற்போக்கானவை. எங்கெல்ஸ் கருத்துப்படி “These relics of a nation mercilessly trampled under foot in the course of history”; வரலாறு தன்போக்கில் முன்னேறிச் செல்கின்ற போது இரக்கம் காட்டாமல் சிறு தேசியங்களை தன் காலடியில் போட்டு மிதித்துச் செல்கிறது.

இத்தேசியங்களின் சிதைவுகளே மிஞ்சியுள்ளன என்பதே இக்கூற்றின் பொருள். தேசங்களின் சுயநிர்ணய உரிமை - கம்யூனிஸ்டுகளிடையே நடைபெற்ற விவாதம் முதலாம் உலகயுத்தம் ஆரம்பித்த வேலையில் ஐரோப்பாவில் சோஷலிஸ்டுகள் மத்தியில் தேசியவாத இனவாத உணர்வுகள் கிளப்பப்பட்டன. பெரும்பாலான சோஷலிசக் கட்சிகள் தத்தம் தந்தையர் நாட்டுக்காக (தாய் நாட்டிற்காக) போரில் ஈடுபடும்படி தொழிலாளர்களைக் கேட்டன. நாடுகளின் தேசிய எல்லைகளை தாண்டிய உலகத்தொழிலாளர் ஐக்கியம் என்ற கருத்து குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டினதும் ஆளும் குழுக்களின் சார்பாக தொழிலாளர்களை பீரங்கித் தீனியாக்குவதில் ஐரோப்பாவின் சோஷலிசக் கட்சிகள் முன்நின்றன. அவ்வேளையில் ரோசா லக்சம்பேர்க் (Rosa Luxemburg) அவர்களின் குரல் மட்டும் தனித்து ஒலித்தது.

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு தந்தையர் நாடு என ஒன்று உள்ளதா? அப்படியாயின் உழைக்கும் ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கிய மக்கள் திரள் தான் அத்தந்தையர் நாடு” என்ற பொருள்தரும் கேள்வியை அவர் கேட்டார். (“What other Fatherland is there than the Great mass of working men and Women?”)

1914 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் சோஷலிசமும் தேசியவாதமும் ஒன்றோடொன்று இணங்கிப் பயணிக்க முடியாதவை என்பதை நிரூபிக்க துடித்துக் கொண்டிருந்தன. தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க உணர்வு, அதன் உலகத் தொழிலாளர் ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் சர்வதேசியம் (Internationalism) ஆகிய இரண்டும் ஒருபுறம் ஒன்றாக வைத்து நோக்கப்பட்டன. ஐரோப்பாவில் அக்காலத்தில் கிளர்ந்தெழுந்த தேசியவாதமும், நாட்டுப்பற்றும் இன்னொருபுறம் வைத்து நோக்கப்பட்டன. தேசியவாத இலக்குகளை குறியாக வைத்துக் கொண்டு நாட்டுப்பற்றுடன் செயற்படும்படி தொழிலாளர் வர்க்கத்தைக் கேட்கும் போது வர்க்க சமரசத்தையும் வர்க்க இணைவையும் கோருவதாகவே அது அமையும். அது மட்டுமன்றி இனவாதம், பாசிசம், சந்தர்ப்பவாதம் ஆகியனவற்றையும் தழுவிக் கொள்ளும்படி இடதுசாரிக் கட்சிகளை கோருவதாகவே பொருள்படும். ஐரோப்பிய சமூக ஜனநாயக கட்சிகள் இச்சந்தர்ப்பவாதத்தை ஏற்றுக் கொண்ட வேளையில் கம்யூனிஸ்டுகள் தேசங்களின் சுயநிர்ணயம் என்ற சிக்கலான பிரச்சினைக்கு விடைகாணும் தேவை எழுந்தது. அதனை லெனின் ஸ்டாலின் போன்றோர் தன் நாட்டில் செயல்படுத்தி உலகிற்கும் வழிகாட்டினர். அதனை நம்மவர்கள் எந்தளவு புரிந்துக் கொண்டுள்ளனர்?

தமிழ்தேச ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களின் வரலாற்று பிண்ணனி

"தனித்தமிழ்நாடு" கோரிக்கை முக்கியமாக 1950கள் மற்றும் 1960களில் சில அரசியல் கூறுகளால் முன்வைக்கப்பட்டது. 

இவற்றின் செயல்பாடுகள் பெரும்பாலும்:- 

அரசியல் மற்றும் நீதித்துறை அடிப்படையில்: தனி தேசியத் தகுதி கோரி போராட்டங்களும் தங்களை தக்கவைத்துக்கொள்ள பிரச்சார இயக்கம் நடத்தினர். அதாவது பிரச்சாரமானது- இலக்கியம், சிற்றிதழ்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் மூலம் கருத்தை பரப்ப செய்தனர் அன்றைய சினிமா இதற்கு பெரும் பணியாற்றியது.

கலாச்சார தேசியவாதம்: தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் தனித்துவத்தை வலியுறுத்தி ஒரு தனித்துவமான தேசிய அடையாளத்தை முன்நிறுத்தினர்.

பிரிவினைவாதத்திலிருந்து மாற்றம்: 1960களுக்குப் பிறகு, இந்த கோரிக்கை பெரும்பாலும் மாநில சுயாட்சி மற்றும் மத்திய-மாநில உறவுகளில் நியாயம் கோரிக்கைகளாக மென்மையாக்கப்பட்டது. பிரிவினைக் கருத்து முக்கிய அரசியலில் விலகி ஆளும் வர்க்கமாய் அமைந்த நிலைக்கு முன்னேறியது.

"தமிழர் இயக்கம்" என்பது இன்று தமிழ்நாட்டில் ஒரு மாநிலவாதம் மற்றும் கலாச்சார தேசியவாதம் ஆகும், பிரிவினைவாதம் அல்ல. இதன் முக்கிய குறிக்கோள் இந்திய ஒன்றியத்திற்குள் தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி, கலாச்சாரம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதாகும். 

சுருக்கமாக, தமிழகத்தில் உள்ள தமிழர் இயக்கத்தின் செயல்பாடுகள்:

மாநிலத்தின் உரிமைகளுக்கான அரசியல் போராட்டம்- மொழி மற்றும் கலாச்சார பாதுகாப்ப- சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான பாடுபாடு- பொருளாதார நலன்களை முன்னெடுத்தல்-இவை அனைத்தும் இந்திய கூட்டரசு சட்டகத்திற்குள், ஜனநாயக மற்றும் அமைதியான வழிகளில் நடைபெறுகின்றன.

உண்மையில் 25-01-2025 அன்று - மொழிப்போர் தியாகிகளுக்கு பேரணி நடத்தப்பட்டு, வீர முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன..!இத்துடன் நில்லாமல் மொழிப் போர் தியாகிகள் தாளமுத்து – நடரஜன் இருவருக்குமான நினைவிடத்தையும் திறந்து வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், அதே சமயம் தற்போது தமிழகம் முழுக்கவுள்ள நெடுஞ்சாலைகளில் இந்தி எழுதப்பட்டு வருவதோடு, சாதாரண சிற்றூர்களிலும் தமிழ், ஆங்கிலத்தோடு இந்தியில் எழுதப்பட்ட ஊர் பெயர் பலகைகள் முளைத்த வண்ணம் உள்ளது..!இது குறித்த எதிர்ப்போ, கோபமோ முதல்வர் ஸ்டாலின் பேச்சில் இல்லாதது அவரின் அரசியலை வெளிச்சமிட்டு காட்டுகிறது

ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இன பிரச்சனை வேறொரு வடிவத்திலும் எழுந்தது. முதலில் வளர்ந்த ஏகாதிபத்திய அரசுகள் பின் தங்கியிருந்த ஏராளமான நாடுகளை தமது காலனி, அரைக்காலனி நாடுகளாக மாற்றின. இதன் மூலம் அக்காலனி, அரைக்காலனி நாடுகளின் சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சியையும், பொருளாதார, சமூக வளர்ச்சியையும் தடுத்தன. உலக முழுவதும் ஒடுக்கும் நாடுகளாகவும், ஒடுக்கப்படும் நாடுகளாகவும் பிரிந்தன. இவ்வாறு தேசிய இன பிரச்சனையானது காலனி, அரைக்காலனி நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்குமிடையேயான முரண்பாடாக வடிவெடுத்தது. இதனை எதிர்த்து காலனி, அரைகாலனி நாடுகளில் தேசவிடுதலை இயக்கங்கள் தோன்றின.

தமிழ் நாட்டை புரிந்துக் கொள்வோம்

தமிழ்நாடு என்பதன் வரலாறு எல்லோரும் அறிந்தவையே. அதேபோல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பகுதி இருந்தாலும் தமிழர்களுக்கான ஒரு நாடாக இந்தப்பகுதி இல்லை.

அன்றைய மன்னர்களும் மண்ணை ஆள பலப்பகுதிகளை இணைத்துக் கொண்டாலும் முழுமையாக தமிழர்களின் நாடாக பகுதியாக ஆங்கிலேயர்களின் ஆட்சி அதிகாரத்தால்தான் ஒன்றிணைந்தது நமது தமிழ் பகுதி. இவை ஆங்கிலேயர்களின் தேவையையும் அவசியமும் கலந்ததே. அதே நேரத்தில் அவர்களின் உழைக்கும் மக்கள் விரோத பணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஆக நாம் இன்று சந்திக்கும் பல பிரச்சினையின் காரணகர்த்தா அவர்களே ஆவார்கள். தமிழகத்தின் முக்கிய கருத்தியலாக திகழும் பெரியாரும் தமிழக விடுதலை பற்றிய கருத்துகளும்.

1960 மே மாதம் பெரியார் அன்றைய நாம் தமிழர் கட்சித் தலைவர் சி.பா.ஆதித்தனாரோடு இணைந்து சுதந்தரத் தமிழ்நாட்டைக் கோரியும் தமிழ்நாடு நீங்கலான இந்திய வரைபடத்தை கொளுத்தவேண்டும் என்று அறைகூவல் விடுத்தும் ஓர் இயக்கம் நடத்துகிறார். ஈரோடு, தஞ்சை. திருவையாறு, திருப்பத்தூர் என பல நகரங்களில் கூட்டங்களில் கலந்துகொண்டு இக்கோரிக்கையை வலியுறுத்தி ஏன் சுதந்தர நாடு வேண்டும் என்று பேசுகிறார். 1956 மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு திராவிடநாட்டுக் கோரிக்கையை கைவிட்டுவிட்ட பெரியார், தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கைக்காக போராடுவதாக அறிவிக்கிறார். பல கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், இந்த கோரிக்கைக்கு உடன்பட்ட ஆதித்தனாரோடு இணைந்து இயக்கம் காண்பதாகவும் கூறுகிறார். இது ஒரு இனப் போராட்டம் என்கிறார் பெரியார். “நமது சமுதாய இழிவு நீங்கவே இன்றைக்கு நாடு பிரியவேண்டும்; விடுதலை அடையவேண்டும் என்பதாக நாங்கள் சொல்லுகிறோம் என்றால் அது ஏதோ அரசியல் காரணத்துக்காக சொல்லுகிறோம் என்று நீங்கள் நினைக்கக்கூடாது. பணத்தை அவன் கொள்ளையடித்துக்கொண்டு போய்விடுகிறானே என்பதுகூட முக்கியமல்ல, பின்னே எதற்காக என்றால், சமுதாய நோக்கத்துக்காகத்தான் நாடு பிரியவேண்டும் என்று கேட்கிறோம். 3000 ஆண்டுகளாக இருந்துவருகிற பிறவி இழிவு அவமானம் நம்மைவிட்டு ஒழியவேண்டும் என்றால் நமக்கு இதைத்தவிர வேறு வழியே கிடையாது” என்பதுதான் பெரியாரின் பார்வை (சுதந்தரத் தமிழ்நாடு ஏன்?   பெரியார் ஈவெரா, பக்கம் 32). நம் நாட்டை நாம்தான் ஆளவேண்டும், நமது மொழிக்காரன், இனத்தவன் அல்லாமல் வேறு யாரும் ஆளக்கூடாது என்றார் -பெரியார்.

1960 மே 22 இல் ஈரோட்டில் பேசியது):“நம் நாட்டை நாம் ஆளவேண்டும் என்று கேட்பதற்குக்கூட நாதி இல்லையேநம் நாட்டு ஆதிக்கம் நமக்கு வரவேண்டும் என்று கேட்கிறோம் என்றால், ஆட்சி நம் கைக்கு வரவேண்டிய அவசியம்கூட இல்லை. நம் நாடு பிரிந்து அதிகாரம் பார்ப்பான் கையிலிருந்தால்கூட பரவாயில்லை. டெல்லி ஆதிக்கம் போச்சு என்று தெரிந்தால் அப்புறம் பார்ப்பனர்களெல்லாம் நாம் சொன்னபடி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்! ‘சோத்துக்கில்லாத பார்ப்பான் சொன்னபடியெல்லாம் கேட்பான்’.  பிறகு நம் இஷ்டப்படி நாம் பார்ப்பானிடம் வேலைவாங்கமுடியும்.” (சுதந்தரத் தமிழ்நாடு ஏன்? பெரியார் ஈவெரா, பக்கம் 17)

இந்திய வரைபடம் எரிப்பு தொடர்பாக தஞ்சை, திருவையாறு, திருப்பத்தூர் போன்ற நகரங்களில் பேசியதிலிருந்து தொகுத்ததிலிருந்து: “இந்த நாடு சுதந்தரமான நாடான நிலையில் பார்ப்பான் ஆண்டால்கூட பரவாயில்லை. அவனுக்கு இந்த நாட்டின்மீது பற்று இருக்குமானால் சரி. ஏன், இந்த இராஜகோபாலாச்சாரியே வேண்டுமானாலும் ஆளட்டுமே! அப்போது இன்றைய தினம் வடநாட்டு அரசாங்கத்தில் பார்ப்பான் எஜமானானாகவே இருந்து உத்தரவு போடுவதால் பார்ப்பனர்களுக்கு கொண்டாட்டம். நாளை நாடு பிரிந்தால் இந்த சி.ஆர். அவர்களே மந்திரியாக வந்தாலும் அவரை மந்திரி ஆக்கும் நாம் சொல்கிறப்படித்தானே கேட்டாகவேண்டும். இல்லையெனில் வீட்டுக்கனுப்பும் அதிகாரம் நம்மிடம்தானே இருக்கும்?’ - (சுதந்தரத் தமிழ்நாடு ஏன்பெரியார் ஈவெரா, பக்கம் 31)

இவ்வாறான பெரியாரின் எழுத்துக்கள் வர்க்க ரீதியாக ஆளும் வர்க்க நிலையிலிருந்து அதிகாரத்திலிருக்கும் சிலரின் நலனுக்கானதாக உள்ளதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அடக்கப்பட்டு ஒடுக்கபட்டு கிடக்கும் மக்களின் விடுதலைகானவையாக பெரியாரின் நிலைபாடு இல்லை என்பது நடைமுறையில் அவரின் அடிவொற்றி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்போர் தமிழரின் பெயரில் தமிழ் உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொண்டிருப்பதையும், ஒடுக்கிக்கொண்டு இருப்பதையும் நாம் பார்க்கிறோம்.

இங்கே அரசு பற்றிய மார்க்சியத்தின் கருத்தை பெரியார் புறக்கணிப்பது நன்றாகவே தெரிகிறது. அரசு என்பது ஒரு வர்க்கத்தின் ஆட்சி என்பதை பெரியார் புரிந்துகொள்ளவில்லை. பெரியார் தனியுடமை முதலாளித்துவ சிந்தனையாளராக இருப்பதால் அரசை தனிநபரின் ஆட்சியாகப் பார்க்கிறார். ஆகவேதான் தமிழ்நாடு பிரிந்து ராஜாஜி ஆட்சித் தலைவராக இருந்தாலும் பரவாயில்லை என்கிறார். இந்தப் பார்வையைத்தான் பெரியார் அம்பேத்காரை பின்பற்றுபவர்களும் திருத்தல்வாதிகளும் மக்களிடம் பரப்பியுள்ளார்கள். அதாவது தேர்தல்மூலம் அரசாங்கத்தை மாற்றிவிட்டால் போதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசு அதிகார நிறுவனங்கள் நீடிக்கட்டும் என்பதே இவர்களின் நிலைபாடாக இருக்கிறது. ஆனால் மார்க்சியமானது இந்த அரசாங்கத்தை மட்டுமல்ல இந்த அதிகாரவர்க்க அரசையே தகர்க்க வேண்டும் என்கிறது. இந்த அரசு நிறுவனங்களை தகர்த்துவிட்டு உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்கினால் மட்டுமே தேசங்களின் விடுதலையானது நிரந்தரமாகும்.

வரலாற்றை பார்ப்போம் தமிழ்த் தேசிய இயக்கங்கள் வரலாற்று ரீதியாக பல வடிவங்களில் தோன்றியுள்ளன. இவை மொழி, கலாச்சாரம், அரசியல் உரிமைகள் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டவை. தமிழ் மக்களின் அடையாளம், உரிமைகள் மற்றும் சுயநிர்ணயம் ஆகியவற்றிற்கான போராட்டத்தின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக இவை கருதப்படுகின்றன.

தமிழ்த் தேசியவாதத்தின் முன்னோடி திராவிட இயக்கமாகவும் அவை ஆளும் வர்க்க நலனில் இருந்து உதித்தது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கிய கோரிக்கைகளாக இருந்துள்ளவை திராவிட கருத்தியலில் வளர்ந்த ஓட்டரசியல் மற்றும் நல் கல்விப்புலமை பெற்றவர்கள் தொடங்கி அனைத்து முக்கிய கட்சிகளும் திராவிட கருத்துக்களின் (சமத்துவம், சாதி ஒழிப்பு, பகுத்தறிவு) பின்னணியைக் கொண்டவையாகவும் வர்க்கம் கடந்து ஆளும் வர்க்க எதிர்ப்பை விட பார்ப்பனர் எதிர்ப்பை முதன்மை கொண்டவ்ர்களாக வளர்த்த பெருமை இவர்களையே சாரும். இவை ஒரு வகையில் வர்க்க ரீதியாக சுரண்டும் மற்றும் அடக்கி ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தையும் எல்லா ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் உழைக்கும் வர்க்கத்தையும் சமப்படுத்தி ஒரைவகையான தமிழ் இனமாகவும் இருவேறு பிரிவினரையும் ஒரே நேர்கோட்டில் காணும் பார்வை உள்ளவராகவே இருக்கிறார்கள். அதாவது தமிழ் இனத்திலுள்ள வர்க்க வேறுபாடுகளை இவர்கள் பார்க்கத் தவறுகிறார்கள். அந்தப் பார்வை இல்லாத காரணத்தால் தமிழ் தேசிய இனப்பார்வை இல்லாமல் திராவிட இனப்பார்வை கொண்டவர்களாகவே இருந்தார்கள். காங்கிரஸ், பிஜேபி கட்சிகள் தேசிய இனப்பார்வை இல்லாமல் இந்திய தேசியம் பேசினார்கள்/பேசுகிறார்கள், திராவிட இயக்கத்தவர் திராவிட தேசம் பேசினார்கள்/பேசுகிறார்கள்.

இவ்விரு கட்சிக்களுக்கும் தேசிய இனம் பற்றிய புரிதலே இல்லை. அதேபோல் இதிலிருந்து விலகி நிற்கும் பல்வேறு பெயர்களில் இயங்கும் தமிழ்தேச அமைப்புகள் என்ன அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ளது பார்ப்போம்?

இந்த அமைப்புகள் தமிழ்நாட்டு அரசியலின் சிக்கலான, வளமான தன்மையை புரிந்துகொள்ள உதவுகிறது. தேசிய இனப்பிரச்சினை” (National Question) பற்றிய புரிதல் குறித்து விவாதிக்கப்படும் சில சிக்கல்களைப் பின்வருமாறு விளக்கலாம்:

1. உலகில் இதற்கு முன்னர் படிப்பினையான ரசிய தேசிய இனப்பிரச்சினையின் தீர்வை ஏற்பதில் இவர்களிடையே பல குறைப்பாடுகள் உள்ளன. அதில் குறிப்பாக, “மார்க்சிய-லெனினிய கோட்பாட்டின்படி: தேசிய இனப்பிரச்சினைஎன்பது பல தேசியங்கள்/இனங்கள் ஒரே அரசியல் எல்லைக்குள் வாழும் போது எழும் அரசியல் சுதந்திரம் சோசலிச நிர்மாணம், சுயநிர்ணயம் மற்றும் சமத்துவ பிரச்சினைகளைக் குறிக்கும் இவர்களுக்கு தெளிவின்மையை வெளிப்படுத்துகிறது.

2. பன்முகத்தன்மை புரிதல் சிக்கல்: தமிழ்நாட்டுக்குள் உள்ள பிற சிறுபான்மை சமூகங்களின் (தெலுங்கு, கன்னட, மலையாளி, இன்னும் சிலர்) தேசிய இன அடையாளங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.

எடுத்துக்காட்டு: தமிழ்த் தேசியவாத விவாதங்களில் பெரும்பாலும் தமிழர் மற்றும் தமிழர் அல்லாதவர் என்ற நிலையாக மட்டுமே பார்க்கலாம். அரசியல் நடைமுறை சிக்கல்கள்

அ. சுயநிர்ணய உரிமை கோட்பாடு கருத்தியல் முரண்பாடு: தமிழ் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் போது, தமிழ்நாட்டுக்குள் வாழும் பிற சிற்பான்மை தேசிய இனங்கள் உரிமை மற்றும் சிந்தனை முழுமையற்றதாக உள்ளது.

நடைமுறை சவால்: பல இன, மொழி சமூகங்கள் கலந்த தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம்எவ்வாறு அனைத்து சமூகங்களுக்கும் உள்ளடக்கியதாக அமையும் என்பதில் தெளிவின்மை.

ஆ. கூட்டாட்சி vs பிரிவினை பற்றி தெளிவற்ற நிலைப்பாடு: தமிழ்த் தேசியவாதிகள் இடையே அரசு வர்க்கம் பற்றியும் கூட்டாட்சியில் இணைந்துகொண்டே தமிழர்களின் உரிமையைப் பாதுகாப்பதா? அல்லது முழுமையான பிரிந்து செல்வதன் மூலம் மட்டுமே தமிழர்களின் உரிமையை பாதுகாப்பதா? எவ்வகையில் என்பது குறித்த தெளிவின்மை உள்ளது.

சமூக-பொருளாதார அம்சங்கள்.

1. வர்க்கம்-இனம் இடைத்தாக்கம்

சிக்கல்: தேசிய இன அடையாளப் போராட்டங்களுக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கும் இடையேயான தொடர்பைப் புரிந்து கொள்ளும் திறன் குறைவு.எடுத்துக்காட்டு: தமிழ்த் தேசியவாத விவாதங்களில் அரசியல் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் வேறுபட்ட வர்க்கப் பிரச்சினைகள் பெரும்பாலும் கண்டுக் கொள்ளப்படுவதில்லை.

2. சாதி-இனம் இணைப்பு சிக்கல்: தமிழ்த் தேசியவாதத்தில் சாதிப் பிரச்சினைகள் எவ்வாறு இணைகின்றன/முரண்படுகின்றன என்பதில் முழுமையான பகுப்பாய்வு இல்லாதது. கருத்தியல் வளர்ச்சி சிக்கல்கள் உலகளாவிய கருத்தியல் விவாதங்களுடன் இணைப்பின்மை.

சிக்கல்: புதிய காலனிய, உலகமயமாக்கல், உலகை சுரண்டும் ஒற்றை உலக கோட்பாடு போன்ற நவீன கோட்பாடுகளுடன் புரிதல் குறைவு எனலாம்.

முடிவு:- தமிழ்த் தேசியவாதிகள் தேசிய இனப்பிரச்சினையைப் புரிந்து கொள்ளும் போதுசிக்கலான இன அமைப்புகளை எளிமையாக்கும் போக்கு· தமிழர் அடையாளத்தை மையமாகக் கொண்ட ஒருதலைப்பட்ச பார்வை· வர்க்கம், சாதி, பாலினம் போன்ற பிற அம்சங்களுடன் இணைக்கும் திறன் குறைவு கோட்பாடுகளுடன் தேடல் இல்லாதது இந்தச் சிக்கல்கள் தமிழ்த் தேசியவாதத்தின் கருத்தியல் வளர்ச்சிக்கும், நடைமுறை அரசியல் தாக்கத்திற்கும் தடையாக உள்ளன. ஒரு முழுமையான, உள்ளடக்கிய மற்றும் புரட்சிக்கான கோட்பாட்டின் தேவை தொடர்ந்து உள்ளது. சுரண்டலிலிருந்து விடுதலை என்பது எந்த நுகத்தடியிலிருந்து விடுதலை என்பது தெளிவாக இருக்க வேண்டும்.

ஊசலாட்டத்தில் சாதிக்க முடியாது. ஆளும் வர்க்க கருத்தியல் பின் ஓடிக் கொண்டே ஆளும் வர்க்கத்தை எதிர்பதாக பூச்சாண்டி காட்டுவது உண்மையில் தமிழ் தேச விடுதலையை கானல் நீராக்கும் வேலையே எனலாம்.

நமக்கு முன் உள்ள பணி

146 கோடிகளுக்கும் மேல் மக்கள் தொகையுடைய இந்தியாவானது ஒரு பல்தேசிய அரசு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும். தங்களின் சொந்த மொழி, வாழ்க்கை முறைகள், மரபுகள், பண்பாடு, தனித்தன்மையுடன் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் மிகவும் பழமையானவை ஆகும். அவற்றில் சில உதித்து எழுந்து கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் பல விழித்தெழ உள்ளன.

பிரிந்து போவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை உணர்தல் என்பது தேசிய இனங்களுடைய இன்றைய வரலாற்றுக் கடமையாகும். அவற்றின் இறுதி ஒற்றுமையானது முழுமையான சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே நிகழ முடியும்.

இந்தியா பலகோடி மக்கள்தொகை கொண்ட பலதேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு ஆட்சிப்பகுதியாகும். இங்குள்ள தேசிய இனங்களில் பெரும்பாலானவை மிகப் பழமையானவையாகும். ஒவ்வொரு தேசிய இனமும் அவர்களுக்கென்று தனிச் சிறப்பான மொழியும் தனிச் சிறப்பான வாழ்க்கை முறையையும், மரபுகளையும் பண்பாட்டை கொண்டும் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்துவருகிறார்கள். இந்த தேசிய இனங்களுக்கு இடையே ஒற்றுமையைக் காட்டிலும் வேற்றுமையே அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவில் சில தேசிய இனங்கள் இப்போதுதான் உதித்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் சில தேசிய இனங்கள் வருங்காலத்தில் உதித்தெழும். இந்தச் சூழலில் ஒவ்வொரு தேசிய இனமும் அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக்கொள்ள முயற்சி செய்வது நியாயமானதாகும். அதேவேளையில் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தேசிய இன மக்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்த்துக்கொள்வதும் மிகமிக அவசியமானதே ஆகும். இந்த ஒற்றுமையிலும் ஒரு நியாயம் இருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு தேசிய இனமும் சுந்திரமாக வாழ்வதற்கும், தேசிய இனங்களுக்கு இடையே ஒற்றுமையை பாதுகாப்பதற்கும் ஒரேவழிதான் உண்டு. அதாவது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் (தேசத்துக்கும்) பிரிந்துபோகும் உரிமையான சுயநிர்ணய உரிமையை வழங்கி அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இந்திய கூட்டரசில் ஒன்றிணைக்க வேண்டும். இங்கே தேசிய இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை உருவாக்குவதே நமது இறுதி நோக்கமாகும். இந்த இறுதி நோக்கத்தை நிறைவேற்ற ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் அல்லது தேசத்துக்கும் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயம் என்ற வழிமுறையைத் தவிர வேறுவழி இல்லை.

இங்கே தேசிய இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை உருவாக்குவதே நமது இறுதி நோக்கமாகும். இந்த இறுதி நோக்கத்தை நிறைவேற்ற ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் அல்லது தேசத்துக்கும் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயம் என்ற வழிமுறையைத் தவிர வேறுவழி இல்லை. ஒவ்வொரு தேசிய இனத்தையும் கட்டாயப்படுத்தி ஒற்றை ஆட்சியின் கீழ்கொண்டு வந்து அடக்கினால், அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒவ்வொரு தேசிய இனமும் அந்த அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த வழிமுறையில் தேசிய இனங்களுக்கு இடையில் எப்போதும் ஒற்றுமையை ஏற்படுத்தவே முடியாது. ஆகவே இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தேசிய இனமும் சுயநிர்ணய உரிமையின் அவசியத்தை உணர்வது இன்றைய வரலாற்றுக் கட்டத்தின் கடமையாகும் என்று மார்க்சிய லெனினியவாதிகள் பகிரங்கமாக அறிவிக்கிறார்கள்.

தொடரும் விவாதம்...

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்