மார்க்சிய அரசியல் தத்துவம் கற்றலும் போதிப்பதும் சுயவளர்ப்பு பயிற்சி பற்றிய விவாதம்...
இந்த விவாத பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேளுங்கள் தோழர்களே
1. வர்க்க சமுதாயத்தில் அனைவரது நலன்களையும் பாதுகாக்கும் பொதுவான கருத்து அல்லது கொள்கை இருக்கவே முடியாது. ஒவ்வொரு கருத்தும் ஒன்று சுரண்டும் வர்க்கத்துக்கான கருத்தாக இருக்கும் அல்லது சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கங்களுக்கான கருத்தாக மட்டுமே இருக்கும்.
2. மனித சமூக வரலாற்றைப் படைப்பவர்கள் தனிமனிதர்கள் அல்ல, உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட முயற்சியின் மூலமாகவே வரலாறு படைக்கப்படுகிறது. வரலாற்றில் தனிநபரின் பாத்திரம் ஒரு சிறிய பங்களிப்பே ஆகும்.
3. உலகைப் பற்றி விளக்கம் கொடுப்பது மட்டுமல்ல தத்துவத்தின் கடமை. உலகை விளக்குவதோடு அதனை மாற்றியமைக்க வழிகாட்டுவதே தத்துவத்தின் முதன்மையான பணியாகும்.
4. ஒருவர் மார்க்சிய தத்துவ அரசியலை படித்துப் புரிந்துகொள்ளவதோடு அவரது கடமை முடிந்துவிடாது. அவர் கற்றதை விளக்கி மற்றவர்களுக்குப் போதித்து ஒவ்வொருவரையும் சிறந்த மார்க்சியவாதியாக வளர்ப்பதும் அவரது கடமையாகும்.
5. தத்துவத்தில் இரண்டுவகை உண்டு ஒன்று விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவம் மற்றொன்று விஞ்ஞானத்தை மறுக்கும் தத்துவம். விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட தத்துவம் உழைக்கும் மக்களின் நலனை பாதுகாக்கும், விஞ்ஞானத்தை மறுக்கும் தத்துவம் சுரண்டும் முதலாளிகளின் நலனை பாதுகாக்கும்.
6. மார்க்சிய தத்துவ அரசியலை அறியாமையிலுள்ள ஏழை உழைக்கும் மக்களால் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில் மார்க்சியம் உழைக்கும் மக்களின் வாழ்க்கையையும் அதனை சிறப்பாக அமைத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றியும் எடுத்துச் சொல்வதால் உழைக்கும் மக்களால் அதனை புரிந்துகொள்ள முடியும். எனினும் மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம் என்பதால் மார்க்சியத்தை உழைக்கும் மக்களுக்கு விளக்கி போதிப்பதற்கு ஒரு ஆசிரியர் அவசியம் வேண்டும். அத்தகைய ஆசிரியராக ஒரு பாட்டாளிவர்க்க கட்சி இருக்கவேண்டும்.
7. மார்க்சிய தத்துவத்தின் மூலம், சமூக வளர்ச்சிக்கு எவ்விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் முரண் இல்லாமல் பாடுபடும் வர்க்கம்தான் பாட்டாளி வர்க்கமாகும். அத்தகைய பண்பு கொண்டவர்தான் கம்யூனிஸ்ட் ஆவார். அத்தகைய பண்பு கொண்ட கட்சிதான் பாட்டாளி வர்க்க கம்யூனிஸ்ட் கட்சியாகும்.
8. மார்க்சிய தத்துவத்தை உள்வாங்கி அந்தக் கண்ணோட்டத்திலிருந்துதான் சமூகத்தின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்தால்தான் நாம் உண்மையை கண்டுபிடிக்க முடியும். இதற்கு மாறாக மார்க்சியத்தை
மறுக்கும் தத்துவக் கண்ணோட்டத்திலிருந்து சமூகப் பிரச்சனைகளை ஆராய்ந்தால் நம்மால் உண்மையை காணமுடியாது.
9. ரஷ்யாவில் லெனின் தலைமையில் போல்ஷ்விக்குகள், மார்க்சிய கண்ணோட்டத்திலிருந்து சமூகத்தை ஆய்வுசெய்து புரட்சிக்கான வழியை கண்டுபிடித்து செயல்பட்டதாலேயே ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகள் வெற்றிபெற்றார்கள்.
10. ரஷ்யப் புரட்சியின் நாயகர்கள் ரஷ்ய தொழிலாளர்களும் விவசாயிகளுமே ஆவார்கள். அவர்களுக்கு தலைமைதாங்கி வழிகாட்டியது லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி.
11. ரஷ்ய கம்யூனிஸ்டுகளைப் போல் இல்லாமல் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் மார்க்சிய கண்ணோட்டத்திலிருந்து இந்திய சமூக மாற்றத்திற்கான திட்டம் வகுத்து செயல்படத் தவறியதால் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் இதுவரை வெற்றிபெற முடியவில்லை.
12. ஆரம்பகால இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடி உயிர் தியாகம் செய்தனர். பின்பு, இந்திய பெருமுதலாளிகளின் ஆட்சியை எதிர்த்தும் போராடி உயிர் தியாகம் செய்தனர். ஆனால் அவர்களது தியாகம்
அனைத்தும் வீணாகிக்கொண்டு இருக்கிறது ஒரு வேதனையான விசயமாகும்.
13. ரஷ்ய கம்யூனிஸ்டுகள் ஆரம்பத்தில் பல குழுவாக இருந்த போதும் இஸ்கரா பத்திரிக்கையின் மூலம் குழுக்களுக்கு இடையே பொதுவான கொள்கையை உருவாக்க சித்தாந்த விவாதங்களை நடத்தி ஒன்றுபட்ட புரட்சிகரமான கட்சியை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் கட்டி சாதனை புரிந்தார்கள். ஆனால் இந்தியாவில் ஒன்றுபட்ட கட்சியை பல குழுக்களாகப் பிளவுபடுத்தி கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து தோல்வியடைந்து மக்களின் செல்வாக்கை இழந்தனர். இதற்கு காரணம் இங்குள்ள கம்யூனிஸ்டுகள் சித்தாந்தப் போராட்டத்தின் அவசியத்தை உணரவில்லை, மேலும் மார்க்சிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் உணரவில்லை.
14. கம்யூனிஸ்டுகளின் லட்சியம் சுரண்டலற்ற வர்க்கங்களற்ற மக்கள் அனைவரும் வாழ்நிலையிலும் சிந்தனை மற்றும் பழக்கவழக்கங்களிலும் ஒன்றுபட்டவர்களாக வாழும் நிலையான கம்யூனிச சமூகத்தைப் படைப்பதுதான். இந்த லட்சியத்துக்காக நம்பிக்கையோடு உழைப்பாளர்கள் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். இது ஒரு நீண்டகால பணியாகும்.
15. அறிவுஜீவிகள் முதலில் சுயநல உணர்வை கைவிடவேண்டும். உழைக்கும் மக்களை நேசிக்க வேண்டும். பாட்டாளி வர்க்க உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். மார்க்சியத்தை கற்று அதனை திருத்தாமல் மக்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் சமூகத்தைப் பற்றி ஆய்வு செய்து விவாதித்து சமூக மாற்றத்துக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். அத்தகையவர்களே பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகள் ஆவார்கள்.
16. கம்யூனிஸ்டுகள் தவறே செய்யமாட்டார்கள் என்று கருதக்கூடாது. செய்த தவறுகளை உணரவேண்டும், நமது தவறை பிறர் சுட்டிக்காட்டினால் அதனை பரிசீலித்து தவறை களைய வேண்டும். அதுதான் உண்மையான சுயவிமர்சனமாகும்
17. விமர்சனம் சுயவிமர்சனம் என்ற ஆயுதம்தான் ஒருவரை சிறந்த கம்யூனிஸ்டாக வளர்ப்பதற்கும் ஒரு கட்சியை சிறந்த கம்யூனிஸ்ட் கட்சியாக வளர்ப்பதற்கும் பயன்படும் மிகச்சிறந்த வழிமுறையாகும்..
18. கம்யூனிஸ்டுகள் மற்றவர்களிடமிருந்து தேவையானவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று தலைகணம் கொள்ளக்கூடாது, சுயதிருப்தியடைந்து தேங்கிவிடவும்கூடாது.
19. கம்யூனிஸ்டுகள் மிகப்பலராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பொதுவான கொள்கையை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு பிறருடைய மற்றும் பிற உழைக்கும் வர்க்க அமைப்புகளிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
20. நூறு பூக்கள் பூக்கட்டும் நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும். பலவிதமான கருத்துக்களையும் நாம் பரிசீலித்து அதில் சரியான கருத்தை எடுத்துக்கொண்டு தவறான கருத்தைப் புறக்கணிக்க வேண்டும்.
21.கம்யூனிஸ்டுகளிடம் உள்ள சுயதிருப்தி, தற்பெருமை, பிரச்சனைகளை ஆராய்வதற்கும் விவாதிப்பதற்கும் மார்க்சிய இயக்கவியலை அனுகுமுறையை பயன்படுத்த தவறுதல், சாதனைகளை மட்டுமே பேசுவது குறைபாடுகளையும் தவறுகளையும் கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது, முகஸ்துதியை விரும்புவது, பிறர் நம்மீது வைக்கும் விமர்சனங்களை வெறுப்பது, மார்க்சியத்தை கற்பதலிலும், களப்பணி செய்வதிலும் ஆர்வமின்றி இருப்பது, குறுகிய அளவில் மட்டும் கவனம் செலுத்துவது, தனது பணியைப் பற்றி தானே
பீற்றிக்கொள்வது, அகம்பாவமாக இருப்பது, குறுகிய வட்டத்துக்குள்ளேயே சிந்தித்து செயல்படுவது அதாவது கிணற்றுத்தவளையாக இருப்பது, வெளி உலகத்தைப் பற்றி பரந்த அளவிலான அறிவை வளர்த்துக்கொள்ள தவறுவது, மற்றவர்களிடம் தனது சாதனையை மட்டும் கூறிவிட்டு தனது குறைகளையும் தவறுகளையும் மறைப்பது, தமது பணிகளைப் பற்றி மேலோட்டமாக மட்டும் பேசுவது போன்ற குறைகளையும் தவறுகளையும் கம்யூனிஸ்டுகள் உணர்வுப்பூர்வமாக களைய வேண்டும். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
22. ஒரு கம்யூனிஸ்டின் அனுகுமுறையானது ஜனநாயகப்பூர்வமாக இருக்கவேண்டும். உழைக்கும் மக்களை மதிக்க வேண்டும். உழைக்கும் மக்களின் நலனுக்கு எதிரான கருத்துக்களை விட்டுக்கொடுக்காமல் எதிர்த்துப் போராடவேண்டும். மக்களின் எதிரிகளை எதிர்த்தும் துணிவுடன் போராட வேண்டும்.
23. எந்தவொரு விசயத்தையும் மார்க்சிய இயக்கவியல் பார்வையோடு அனுகவேண்டும்.
24. சாதனைகள இருக்கும்போது குறைபாடுகளும் இருக்கும், உண்மை இருக்கும்போது உண்மைக்கு எதிரான தவறுகளும் இருக்கும், எல்லா விசயங்களும் இயக்கங்களும் எப்போதும் இயங்கிக்கொண்டே மாறிக்கொண்டேதான் இருக்கும், இந்த உண்மையைப் புரிந்துகொண்டு விவாதங்கள், நடைமுறை போராட்டங்களில் நமது அனுகுமுறை இருக்க வேண்டும்.
25. மக்களின் நலனுக்கான மற்றும் வளர்ச்சிக்கான கருத்தையே மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும். மற்றவர்களிடமிருந்து தீய தவறான மக்களின் நலனுக்கு எதிரான கருத்துக்களை கற்றுக்கொண்டு பின்பற்றக் கூடாது.
26. கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்கின்ற குட்டிமுதலாளித்துவ வர்க்கப் பிரிவினர் குட்டிமுதலாளிய பண்புகளையும் கொள்கை கோட்பாடுகளையும் தொடரக்கூடாது. அந்த தீய பண்புகளை கைவிடுவதற்கு தொடர்ந்து பாடுபட வேண்டும்.
27. கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் தங்களது கட்சி மட்டும்தான் சரியான கொள்கை கொண்ட கட்சி என்று குறுகிய மனப்பான்மையோடு கருதாமல் பிறரிடமும் பிற கம்யூனிச அமைப்புகளிடமும் சரியான கொள்கை இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என்பதை உணர்ந்து பிறரிடமிருந்தும் பிற கம்யூனிச அமைப்புகளிடமிருந்தும் சரியான கருத்துக்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
28. பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், கட்சி, அமைப்பு, கருத்துக்கள், சிந்தனைமுறை இவையனைத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றங்களில் ஒன்று முற்போக்கான மாற்றம், மற்றொன்று பிற்போக்கான மாற்றமாக இருக்கிறது. இதனை பரிசீலித்து கம்யூனிஸ்டுகள் முற்போக்கான மாற்றங்களுக்காக சிந்தித்து செயல்பட வேண்டும்.
29. கருத்தியலிலும், நடைமுறையிலும் இயக்கவியல் பார்வையை கம்யூனிஸ்டுகள் உடனடியாகப் பெறமுடியாது. அதற்கு தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் விடாப்பிடியாக பாடுபடவேண்டும். அதற்கு மார்க்சிய கல்வியும் மார்க்சிய பயிற்சியும் அவசியமாகும். விடாப்பிடியான தொடர்ந்த முயற்சியின் மூலமாகவே கம்யூனிஸ்டுகள் இயக்கவியல் பார்வையைப் பெறமுடியும்.
30. ஒவ்வொரு பொருளின் மற்றும் சமூகத்தின் இயக்கத்திலும் இரண்டு எதிர்மறைகள் போராடி தனது குணாம்சங்களை மாற்றிக்கொள்கின்றன என்பது இயக்கவியல் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை கம்யூனிஸ்டுகள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இன்றைய சமூகத்தில் ஆதிக்கத்திலுள்ள முதலாளிகள் அவர்களுக்கு எதிரான தொழிலாளர்களின் கூட்டு முயற்சி வளர்ச்சி பெறுவதால் முதலாளிகள் அவர்களது ஆதிக்கத்தை இழப்பார்கள். இப்போது ஆதிக்கத்திலுள்ள முதலாளிகள் எப்போதும் ஆதிக்கத்திலேயே இருப்பார்கள் என்று கருதுவது சமூகத்தின் இயக்கத்தையே மறுப்பதாகும். ஆகவே தொழிலாளர்கள் என்ற சக்தி வளர்ச்சி பெறுவதற்காக கம்யூனிஸ்டுகள் பாடுபட்டால் முதலாளிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி வெற்றிபெறமுடியும் என்ற நம்பிக்கையை விஞ்ஞான அடிப்படையில் வளர்த்துக்கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment