சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி
சிறந்த கம்யூனிஸ்ட் பண்புகளும் பாட்டாளி வர்க்க கடமைகளும்
இந்த ஆதாரங்கள் லியோஷோசி மற்றும் மாசேதுங் ஆகியோரின் போதனைகளின் அடிப்படையில் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் தலைவராக இருப்பதற்கான தார்மீகப் பண்புகளை விளக்குகின்றன. ஒரு கம்யூனிஸ்ட் தனது தனிப்பட்ட நலன்களைக் கட்சியின் பொது நலன்களுக்குக் கீழ்ப்படுத்தி, உழைக்கும் மக்களின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பது இதன் மையக்கருத்தாகும். சுயநலம், ஊழல் மற்றும் புகழார்வம் போன்றவற்றைத் தவிர்த்து, சமூக முன்னேற்றத்திற்காக எத்தகைய தியாகங்களையும் செய்யத் துணிபவரே உண்மையான புரட்சியாளர் என்று இந்த உரை வலியுறுத்துகிறது. மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளைக் கற்றுத் தேர்ந்து, துன்ப காலங்களில் முன்னிற்பதும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் கடைசியாக இருப்பதும் ஒரு கம்யூனிஸ்டின் உயர்ந்த அடையாளங்களாகக் காட்டப்படுகின்றன. மேலும், பாட்டாளி வர்க்க உணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலமே தூய்மையான மற்றும் வலிமையான கம்யூனிச அமைப்பைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை இந்தத் தொகுப்பு தெளிவுபடுத்துகிறது. இறுதியில், போலி கம்யூனிசப் பண்புகளைக் களைந்து, உன்னதமான நன்னெறிகளுடன் மக்கள் பணியாற்றுவதே ஒரு கம்யூனிஸ்டின் முதன்மைக் கடமையாக முன்வைக்கப்படுகிறது.
சிறந்த கம்யூனிஸ்ட் தலைவருக்கான மிக முக்கியமான பண்புகள் யாவை?
தனிப்பட்ட நலன்களை கட்சியின் நலன்களுக்கு கீழ்ப்படுத்துவது ஏன் அவசியம்?
பாட்டாளி வர்க்க விடுதலை என்பது ஒட்டுமொத்த மனிதகுல விடுதலை ஆவது எப்படி?
ஒலி வடிவில் இந்த கட்டுரையை கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
கட்டுரையை வாசிக்க கீழ் செல்லவும் தோழர்களே...
கட்சி உறுப்பினர் ஒருவரின் நலன்கள் கட்சியின் நலன்களுக்கு நிபந்தனையின்றி கீழ்ப்படுத்த வேண்டும்.
தனிப்பட்ட நலன்கள் கட்சியின் நலன்களுக்கு கீழ்ப்படுத்தப்பட வேண்டும். உள்ளூர் மற்றும் பகுதி கட்சி அமைப்பின் நலன்கள் முழு கட்சியின்
நலன்களுக்கு கீழ்ப்படுத்தப்பட வேண்டும், பகுதி நலன்கள் முழுமையின் நலன்களுக்கு கீழ்ப்படுத்தப்பட வேண்டும், தற்காலிக நலன்கள் நீண்டகால நலன்களுக்கு கீழ்ப்படுத்தப்பட வேண்டும். இது ஒவ்வொரு கம்யூனிஸ்டும்
கடைப்பிடிக்க வேண்டிய மார்க்சிய - லெனியக் கோட்பாடாகும்.
தனிப்பட்ட நலன்களுக்கும் கட்சியின் நலன்களுக்கும் இடையிலான சரியான உறவு பற்றி ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தெளிவாக இருக்க
வேண்டும்.
பாட்டாளி வர்க்கத்தினுடைய அரசியல் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பதற்கு அப்பால் தனக்கென்று சொந்த நலன்கள் எதுவும் கிடையாது. பாட்டாளி வர்க்கத்தின் இறுதி விடுதலை என்பது, தவிர்க்க இயலாதவாறு, மனித குலத்தின் இறுதி
விடுதலையாகவும் இருக்கும். அனைத்து உழைக்கும் மக்களையும், அனைத்து ஒடுக்கப்படும் தேசங்களையும் விடுவிக்காமல், மனித குலம்
முழுவதையும் விடுவிக்காமல் தனது முழு விடுதலையை பாட்டாளி வர்க்கத்தால் சாதிக்க முடியாது. அனைத்து உழைக்கும் மக்களின் அனைத்து ஒடுக்கப்படும் தேசங்களின் மொத்த மனித குலத்தின் விடுதலை லட்சியம்
என்பவை பாட்டாளி வர்க்க விடுதலை லட்சியத்துடன் ஒத்த நலன்களை
கொண்டுள்ளன; இவை பிரிக்க முடியாதவாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. எனவே பாட்டாளி வர்க்கம் மற்றும் முழு மனித
குலத்தின் விடுதலை, கம்யூனிசத்தை கொண்டு வருவது மனித சமுதாய முன்னேற்றம் ஆகியவைதான் கம்யூனிஸ்ட் கட்சியின் நலன்களாக உள்ளன.
கட்சி உறுப்பினரின் நலன்கள் கட்சியினுடைய நலன்களுக்கு உட்பட்டவை என்பதன் பொருள் வர்க்கங்கள் மற்றும் தேசங்களின் நலன்களுக்கு
கம்யூனிசத்தை நிறுவுதல் மற்றும் சமுதாய முன்னேற்றத்தை சாதித்தல் என்பவற்றுக்கு உட்பட்டவை என்பதாகும். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? நூல் பக்கம் - 61, 62)
இலக்கு விளக்கம்:- தனிப்பட்ட நபர்களின் நலன்கள் கட்சியின் நலன்களுக்கு
கீழ்ப்படுத்தப்பட வேண்டும் என்றார் லியோஷோசி. இதன் பொருள் என்ன?,
கட்சியின் நலன் என்றால் என்ன? கட்சியின் நலன் என்பது மிகப்பெருவாரியான உழைக்கும் மக்களின் நலன்தான் கட்சியின் நலன்.
அதாவது மிகப்பெருவாரியான உழைக்கும் மக்களின் வாழ்வை சிறப்பானதாக மாற்றி அமைக்கும் லட்சியம்தான் கம்யூனிஸ்ட் கட்சியின்
லட்சியமாகும். அந்த லட்சியத்துக்கு உட்பட்டுத்தான் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட நலன்கள் அமைய வேண்டும். உதாரணமாக
ஒருவர் தனது அலுவலகத்துக்கு செல்ல வேண்டியது அவசியம் என்ற நிலையில், அவர் ஒரு விபத்தை சந்திக்கிறார் என்று வைத்துக்
கொள்வோம், அதனால் அவருக்கு தலையில் அடிபட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் அலுவலகத்துக்கு போக வேண்டியது முதன்மையானதாக இருக்கிறதா? அல்லது மருத்துவமனைக்கு போக
வேண்டியது அவசியமாக உள்ளதா? தெளிவாகத் தெரியும் அவர் மருத்துவமனைக்கு போவதே முதன்மையானதாகும். இதுபோலவே ஒரு
தனி மனிதர் அவர் வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளில் அவர் சில பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் கம்யூனிஸ்ட்ஆக இருப்பவர் தனது தனிப்பட்ட நலன்களை
காட்டிலும் மிகப்பெருவாரியான உழைக்கும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருக்க முடியும். இப்படிச் சொல்வதால் அவர் அவரது தனிப்பட்ட நலன்களில் கவனம் செலுத்தக்கூடாது என்பது அல்ல.
தனிப்பட்ட நலன்களிலும் அவர் கவனம் செலுத்திய ஆக வேண்டும், எனினும் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் இங்கு பிரச்சனை. கட்சியின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு தன்னுடைய நலனுக்கு இரண்டாவது முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதைத்தான் லியோஷோசி இங்கு வலியுறுத்துகிறார். அந்த வகையில் லியோஷோசி,
பகுதி நலன்கள் முழுமையின் நலன்களுக்கு கீழ்ப்படுத்த வேண்டும் என்றும் தற்காலிக நலன்கள் நீண்டகால நலன்களுக்கு கீழ்ப்படுத்தப்பட வேண்டும் என்கிறார் லியோஷோசி. இந்த அடிப்படையை ஒவ்வொரு கம்யூனிஸ்டும்
பின்பற்ற வேண்டும், இதனை ஒரு தனிப்பட்ட நபர் பின்பற்ற முடியாது என்று சிலர் வாதாடுகிறார்கள். ஆனால் பொதுவுடமை இயக்கத்தில் அதன்
வரலாற்றில் மிகப்பெருவாரியான உழைக்கும் மக்களுக்காக தன்னுடைய உயிரையே கொடுத்து தியாகம் செய்த கம்யூனிஸ்டுகள் பலர் உண்டு.
அவர்கள் தங்களுடைய நலன்களை முதன்மை படுத்தவில்லை உழைக்கும் மக்களின் நலன்களைத்தான் முதன்மைப்படுத்தினார்கள் ஆகவே நடைமுறையில் சாத்தியமான உண்மையில் நடைபெற்ற ஒரு கொள்கையை இங்கே லியோஷோசி வலியுறுத்துகிறார்.
ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் தனிப்பட்ட நலன்களுக்கும் மிகப்பெருவாரியான மக்களின் நலங்களுக்காகப் பாடுபடும் கம்யூனிஸ்ட்
கட்சியின் நலன்களுக்கும் இடையிலான இயங்கியல் உறவை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று லியோஷோசி குறிப்பிடுகிறார்.
உதாரணமாக ஒருவரது வீட்டில் குப்பை சேர்ந்துள்ளது, அதேவேளையில் அவர் வசிக்கும் தெருவிலும் குப்பை சேர்ந்துள்ளது என்று
வைத்துக்கொள்வோம். அவர் தனது வீட்டு குப்பையை மட்டும் அகற்றிவிட்டால் போதும் தெருவிலுள்ள குப்பயை அகற்ற தேவையில்லை
என்று நினைத்து தனது வீட்டிலுள்ள குப்பைகளை மட்டும் அகற்றிவிட்டு திருப்தி அடைந்துவிட்டால் போதுமா? இல்லை. வெளியில் காற்று வீசுகிறது
வெளியிலுள்ள குப்பைகள் வீட்டுக்குள் வந்துவிடுகிறது. ஆகவே அவர் தனது வீட்டு குப்பையை மட்டும் அகற்றிவிட்டால் போதாது வெளியிலுள்ள குப்பைகளையும் அகற்ற வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வகையில் தனிப்பட்ட நலன்களுக்கும் சமூக
நலன்களுக்கும் இயங்கியல் உறவு இருப்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் புரிந்துகொள்ள வேண்டும் என்று மார்க்சியம் நமக்குப் போதிக்கிறது.
பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பதற்கு அப்பால் தனக்கென்று சொந்த நலன்கள் எதுவும் கிடையாது. பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பது மனிதகுல வரலாற்றில் தவிர்க்க முடியாதது என்பதை கம்யூனிஸ்டுகள் உணர்ந்திருக்கிறார்கள். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பது ஒட்டுமொத்த மனித குலத்தின் விடுதலையாகவே அமையும் என்றும்
மார்சியவாதிகள் கருதுகிறார்கள். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பது உலகம் முழுவதும் உள்ள அனைத்து உழைக்கும் மக்களையும் உலகம்
முழுவதும் உள்ள ஒடுக்கப்படும் அனைத்து தேசங்களையும் விடுதலை செய்வதிலேயே அடங்கி உள்ளது என்று மார்க்சியம் மிகத்தெளிவாகவே சொல்லியுள்ளது. ஆகவே மார்க்சியத்தின் லட்சியமானது, அடையாள
அரசியல்வாதிகள் போல், தலித்தியவாதிகள் போல், பெரியார் அம்பேத்காரை
பின்பற்றுபவர்களைப் போல் குறுகிய நலன் கொண்ட கொள்கை அல்ல. மிக விரிந்த உலகம் முழுவதிலும் வாழும் உழைக்கும் மக்களின்
விடுதலையையும், உலகம் முழுவதிலும் ஒடுக்கப்படும் சாதி மத இன மக்களின் விடுதலையும் உள்ளடக்கியதுதான் கம்யூனிஸ்டுகளின் லட்சியமாகும். ஒடுக்கப்படும் அனைத்து சக்திகளையும் விடிவித்து
அனைத்து மக்களையும் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாகவும், மிகச் சிறந்த
பண்பாளர்களாகவும் மிகச்சிறந்த நேர்மையானவர்களாகவும் மாற்றும்
உயரிய நோக்கம் கொண்டதுதான் மார்க்சியமாகும். இது ஒரு நாள் பணி அல்ல, இந்தப் பணி தொடர்ச்சியான விடாப்பிடியான நீண்ட காலப்
பணியாகும். இந்த நீண்ட கால பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தான் கம்யூனிஸ்ட்கள், அதற்காகப் பாடுபடுகின்ற கட்சிதான் கம்யூனிஸ்ட் கட்சி ஆகும். இந்த உண்மையை புரிந்துகொள்ளாத சில
கழிசடைகள்தான் மார்க்சியத்தைப் பற்றி பொய்யான அவதூறான கருத்துக்களை மக்களிடம் பரப்பி மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
தோழர் மாசேதுங் கூறியதாவது:- எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் ஒரு கம்யூனிஸ்ட் தனது தனிப்பட்ட நலன்களை முதன்மைப்படுத்தக் கூடாது; நாட்டின், மக்களின்
நலன்களுக்கு தனது நலன்களை கீழ்ப்படுத்த வேண்டும். எனவே சுயநலம், அசட்டுத்தனம், ஊழல், புகழ் நாட்டம் ஆகியவை கடும் கண்டனத்துக்கு
உள்ளாக்கப்பட வேண்டும்; அதே வேளையில், தன்னல மறுப்பு, எல்லா ஆற்றலையும் பயன்படுத்தி பணியாற்றுதல், பொதுவான கடமைகளை முழு
அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுதல், அமைதியாக கடும் பணிகளை ஆற்றுதல் ஆகியவை மதிப்பு மிக்கவையாக கருதப்படும். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி, பக்கம் 62)
இலக்கு விளக்கம்:- ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்று தோழர் மாவோ கூறுவதை கவனியுங்கள். 1. எல்லாக் காலத்திலும் எந்தச்
சூழ்நிலையிலும் தனது தனிப்பட்ட நலன்களை முதன்மைப்படுத்தக் கூடாது. 2. நாட்டின் மற்றும் மக்களின் நலனுக்கு தனது நலன்களை கீழ்ப்படுத்த
வேண்டும், 3. சுயநலம், அசட்டுத்தனம், ஊழல், புகழ்நாட்டம் ஆகியவை கடும் கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும். 4, தன்னல மறுப்பு, எல்லா ஆற்றலையும் பயன்படுத்தி பணியாற்றுதல், பொதுவான கடமைகளை முழு
அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுதல், அமைதியாக கடும் பணிகளை ஆற்றுதல் போன்றவை மதிப்புமிக்கதாக மதிக்கப்பட வேண்டும் என்றார் மாவோ.
ஆனால் இங்குள்ள கம்யூனிச அமைப்புகளிலுள்ள தலைவர்களில் பெரும்பாலோர் அவர்களது தனிப்பட்ட நலன்களையே முதன்மைப்படுத்துகிறார்கள், அமைப்பு பிளவுபட்டாலும் சீரழிந்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை அமைப்பை பல சிறுகுழக்களாக பிளவுபடுத்தி தனது புகழை வளர்த்துக்கொள்வதிலேயே குறியாக
இருக்கிறார்கள். இவர்கள் கடைந்தெடுத்த சுயநலவாதிகள். தன்னைச் சுற்றி ஒரு கூட்டத்தை உருவாக்கி அந்தக் கூட்டத்தின் கடவுளாகவே மாறி
கடவுளை வழிபடுவதைப்போலவே இவர்களையும் வழிபடச் செய்கிறார்கள்.
இத்தகைய நபர்கள் ஒரு சராசரி மனிதனாக இருப்பதற்கே தகுதியில்லாதவர்கள் ஒரு கம்யூனிச அமைப்பின் தலைவராக இருக்கமுடியுமா? இருக்கவே முடியாது. இத்தகையவர்களாலேயே
கம்யூனிச அமைப்புகள் பல்வேறு பிளவுகளைச் சந்தித்து மக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குழைத்து மக்களை பலவீனப்படுத்திவிட்டார்கள்.
ஆகவே மாவோவின் வழிகாட்டுதலின் படி கம்யூனிஸ்டுகள் தன்னலமற்றவர்களாக, மக்களுக்காக அர்ப்பணிப்புடன்
பணியாற்றுபவர்களாக, கட்சி மற்றும் மக்களின் நலனுக்காக முதன்மையாகப் பாடுபடுபவர்களாக இருக்க வேண்டும். ஆகவே ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உருவாகும் போது அதன் அமைப்பு விதிகளை
உருவாக்கும் போது கம்யூனிஸ்டுகள் பின்பற்றவேண்டிய பண்புகளை பட்டியலிட்டு அணிகளுக்கு கொடுக்க வேண்டும். கம்யூனிச பண்புகளை பெறுவது ஒவ்வொரு கம்யூனிஸ்டின் கடமை என்று தொடர்ந்து அடிக்கடி நினைவூட்டி உணர்த்துதல் மிகமிக அவசியமாகும். இவ்வாறு கம்யூனிச அமைப்புகளில் செயல்படுபவர்கள் மத்தியில் கம்யூனிச பண்புகளை வளர்க்கத் தவறியதால்தான் இந்திய பொதுவுடமை இயக்கமானது பின்னடைந்து சீரழிந்துவிட்டது.
சூழ்நிலை எதுவாக இருந்தாலும் கட்சிக்கும், புரட்சிக்கும் கம்யூனிச லட்சியத்துக்கும் கட்சி உறுப்பினரின் விசுவாசம் உறுதியாக இருக்கிறதா
என்பதற்கு, அவர் தனது தனிப்பட்ட நலன்களை முழுவதுமாகவும் நிபந்தனை இன்றியும் மேலே குறிப்பிட்டவற்றுக்கு கீழ்ப்படுத்துகிறாரா
இல்லையா என்பதுதான் உரைகல்லாக இருக்க முடியும். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி, லியோஷோசி, பக்கம் - 62)
இலக்கு விளக்கம்:- ஒருவர் சிறந்த கம்யூனிஸ்டா? என்பதை சோதித்து பார்ப்பதற்கு, அவர், சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அவர் புரட்சிக்கும்,கட்சிக்கும்,
கம்யூனிச லட்சியத்துக்கும் விசுவாசமாகவும் உறுதியாகவும் இருக்கிறாரா? அதற்காக தனது தனிப்பட்ட நலன்களை முழுவதுமாக கைவிடுகிறாரா? என்பதைக் கொண்டே அவர் கம்யூனிஸ்டா? அல்லது கம்யூனிசத்துக்கு
எதிரானவரா? என்று நாம் அளவிடவேண்டும். ஆனால் இந்தியாவில் கம்யூனிச அமைப்பில் சேர்ந்து செயல்படும் உறுப்பினர்கள் மற்றும்
தலைவர்களை இத்தகைய அளவீடுகள் கொண்டு அளந்து அவர்கள் கம்யூனிஸ்டா? அல்லது கம்யூனிசத்துக்கு எதிரானவரா? என்று அலசி
ஆராயும் முறை கடைபிடிக்கப்படுவதில்லை. அதன் காரணமாக பெரும்பான்மையான கம்யூனிச அமைப்புகளில் தலைவர்கள் உள்ளிட்டு
இவர்களிடம் கம்யூனிச பண்பிற்கு நேர்எதிரான பண்புள்ளவர்களாகவே பலர் இருக்கிறார்கள். அதன் காரணமான இந்த அமைப்புகள் எல்லாம்
பெயரளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளாகவே செயல்படுகின்றனர். முதலாளித்துவ கட்சிகளைப் போலவே இவர்களும் செயல்படுவதை நாம்
பார்க்கிறோம். ஆகவே கம்யூனிசத்தை விரும்பும் உழைக்கும் மக்கள் யார் கம்யூனிஸ்டுகள்? யார் கம்யூனிச வேடதாரிகள்? என்பதை இனம்பிரித்து
வேறுபாட்டை புரிந்துகொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் சிறந்த கம்யூனிஸ்டுகளை இனம்கண்டு அவர்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய வகையான புரட்சிகரமான கம்யூனிச
அமைப்பை கட்டுவதற்கு பாடுபட வேண்டும்.
எல்லா காலங்களிலும் எல்லா பிரச்சனைகளிலும் ஒரு உறுப்பினர் கட்சி முழுவதன் நலன்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். தனிப்பட்ட
விசயங்களையும் நலன்களையும் இரண்டாம் நிலையில் வைக்க வேண்டும்.
கட்சியினுடைய நலன்களின் முதன்மை நிலை என்பது உயரிய கோட்பாட்டு பிரச்சனையாகும்; இது நமது கட்சி உறுப்பினர்களின் சிந்தனைகளையும்
செயல்களையும் ஆளுமை புரிவதாக இருக்க வேண்டும். உறுப்பினர்கள் எல்லோரும் எத்தகைய தயக்கங்கள் அல்லது ஊசலாட்டங்கள் இன்றி தமது
சொந்த நலன்களை கட்சியின் நலன்களுக்காக விட்டுக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்; இரு நலன்களுக்கும் இடையில் எவ்வளவு அழுத்தங்கள்
இருந்தாலும் கட்சியின் நலன்களையே உயர்வாக கருத வேண்டும்.
எந்தவித தயக்கமும் இன்றி தனிப்பட்ட நலன்களை ஏன் சொந்த உயிரையும் கூட கட்சிக்காகவும், பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்காகவும்
நாட்டின் விடுதலைக்காகவும் மொத்த மனித குலத்தின் விடுதலைக்காகவும் தியாகம் செய்பவர்களாக இருக்க வேண்டும். இதைத்தான் "கட்சி ஆன்ம உரு" "கட்சி உணர்வு" "அமைப்பு உணர்வு" என்று நாம் வழக்கமாககூறுகிறோம். இதுதான் கம்யூனிஸ்டு நன்னெறியின் அதி உயர்
வெளிப்பாடாகும்; பாட்டாளி வர்க்க கட்சியினுடைய கோட்பாட்டு இயல்பின், ஆக மிக தூய பாட்டாளி வர்க்க உணர்வின் வெளிப்பாடாகும்.(சிறந்த
கம்யூனிஸ்ட் ஆவது எப்படி, லியோஷோசி, பக்கம் - (62, 63)
இலக்கு விளக்கம்:- எல்லாக் காலங்களிலும், எல்லா பிரச்சனைகளிலும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மற்றும் தலைவர்கள் கட்சி முழுவதன்
நலனுக்கு முன்னுரிமை தரவேண்டும். கட்சியின் நலனானது மிகப்பெருவாரியான உழைக்கும் மக்களின் நலனை அடிப்படையாகக்
கொண்டு கொள்கை வகுத்து செயல்பட வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டதாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனையை நாம்மறந்துவிடக்கூடாது. இதற்கு மாறாக முதலாளிகளின் நலன்காக்கும்
திருத்தல்வாத கட்சிக்கு நாம் முன்னுரிமை தரவேண்டிய அவசியமில்லை.
திருத்தல்வாத கட்சியை கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றவேண்டும், அல்லது அதிலிருந்து வெளியேறி உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை நாம்
கட்டவேண்டும். ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தனது சொந்தப் பிரச்சனைகளை இரண்டாம் நிலையிலேயே பார்க்கவேண்டும் இதன் பொருள் என்ன? தனது சொந்தப் பிரச்சனையை பார்க்கக்கூடாது என்பதல்ல. தனது சொந்தப்
பிரச்சனைக்கு முன்னுரிமை தந்தி கட்சியின் நலனையும் மக்களின் நலனையும் பின்னுக்கு தள்ளிவிடக்கூடாது என்பதே இதன் பொருளாகும்.
இந்தக் கொள்கைதான் கம்யூனிச அமைப்புக் கோட்பாடாகும். இந்தக் கோட்பாட்டை ஒருவர் பின்பற்றும்போதுதான் அவரது சிந்தனைமுறை,
செயல்பாடு அனைத்தும் கம்யூனிச லட்சியங்களை அடைவதை நோக்கிய விஞ்ஞான முறையாக அமையும். ஒரு கம்யூனிச அமைப்பு உருவாக்கும்
அமைப்பு விதிகளில் முதன்மையான விதியாக இது விளங்க வேண்டும்.
ஒருவர் தொடர்ந்து தனது சொந்த நலனையே, உதாரணமாக தனக்கு புகழ்வேண்டும், தனக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும் என்ற
நோக்கத்தையே முதன்மைப்படுத்தி செயல்பட்டால் அவர் கம்யூனிசத்திலிருந்து விலகிச் சென்றுவிடுவார். அப்படி விலகிச் சென்ற தலைவர்களை நாம் வரலாற்றில் காணலாம். ஆகவே கம்யூனிச லட்சியத்துக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படவேண்டும் என்ற உயர்ந்த
கோட்பாட்டை நமது சிந்தனையில் ஆழமாகப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். அதற்காக நாம் பாடுபடும்போது நமது உயிரைக் கொடுக்கவும்
நாம் தயங்கக்கூடாது. இதைத்தான் கட்சி உணர்வு என்றும், பாட்டாளிவர்க்க உணர்வு என்றும் மார்க்சியவாதிகள் போற்றுகிறார்கள். இத்தகைய
பாட்டாளிவர்க்க உணர்வுகொண்ட தலைவர்களை எங்கும் காணமுடியவில்லை என்பதுதான் வேதனைக்குரியதாக உள்ளது.
பாட்டாளிவர்க்க உணர்வுள்ள தலைவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் நடந்த வீரமிக்க வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்தியாகம்
செய்துவிட்டார்கள். தற்போது அப்படிப்பட்ட தியாகிகளை இங்கு காணமுடியவில்லை. அத்தகைய தியாகிகள் உருவாகும் போது அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்து, அவர்களது உணர்வுகளை மழுங்கடிப்பதை
பார்க்கிறோம். ஆகவே கம்யூனிசத்தை விரும்பும் உழைக்கும் மக்கள் கம்யூனிச உணர்வுகளை வளர்த்துக்கொண்டு பாட்டாளிவர்க்க
உணர்வாளர்களாக வளரவேண்டியது முதன்மையான கடமையாக உள்ளது.
அத்தகைய பாட்டாளிவர்க்க உணர்வாளர்களின் எண்ணிக்கை எந்தளவுக்கு வளர்கிறதோ அந்தளவுக்கு புரட்சிகரமான பாட்டாளிவர்க்க கட்சி உருவாகும்.
பாட்டாளிவர்க்க உணர்வாளர்களால் மட்டுமே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமுடியும். குட்டிமுதலாளித்துவ உணர்வாளர்களால்
ஒருபோதும் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமுடியாது.
கட்சியின் நலன்களுக்கு அப்பாற்பட்டு தனியான சொந்த நலன்கள் எதுவும் நமது கட்சி உறுப்பினர்களுக்கு இருக்கக் கூடாது. அவர்களுடைய தனிப்பட்ட நோக்கங்கள், கட்சியின் நலன்களுக்கு ஒத்திசைவாக இருக்க வேண்டும்.
மார்க்சிய லெனினிய தத்துவத்தை கற்பது, வேலைகளை செய்வதற்கான தமது ஆற்றலை வளர்த்துக் கொள்வது, புரட்சிகர அமைப்புகளை
உருவாக்குவது, வெற்றிகரமான புரட்சிப் போராட்டங்களில் மக்களை வழி நடத்துவது என்பவைதான் அவர்களுடைய நோக்கமாக இருந்தால் அவர்களுடைய நோக்கங்கள் கட்சியின் நலன்களுடன் ஒத்திசைவாக இருக்கும். கட்சிக்கு அதிகமாகச் செய்வது என்பது இவ்வாறுதான் இருக்கும். இத்தகைய உறுப்பினர்களும் ஊழியர்களும்தான் கட்சிக்கு அதிகமாக
தேவைப்படுகிறார்கள். இந்த நோக்கத்துக்கு அப்பாற்பட்டு, உயர் பதவிகளுக்கு சென்று பிரபலமடைவது, தனிநபர் வீர தீரம், புகழை நாடுவது போன்ற தனிப்பட்ட நோக்கங்களை அவர்கள் கொண்டிருக்கக் கூடாது.
அப்படி இல்லை எனில் அவர்கள் கட்சியினுடைய நலன்களில் இருந்து விலகிச் சென்று விடுவார்கள். கட்சிக்குள்ளேயே பிழைப்புவாதிகளாக கூட
மாறிவிடுவார்கள். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி, லியோஷோசி,பக்கம் - 63)
இலக்கு விளக்கம்:- ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரோ, அல்லது தலைவரோ அவருக்கும் கட்சியின் நலன்தான் (உழைக்கும் மக்களின் நலன்தான்) முதன்மையாக இருக்க வேண்டும், இதற்கு அப்பாற்பட்டு சொந்த தனிப்பட்ட
நலன்கள் இரண்டாம்பட்சமாகவே இருக்க வேண்டும். என்ற கம்யூனிஸ்டுகளின் கடமையை மீண்டும் மீண்டும் மார்க்சிய ஆசான்கள்
வலியுறுத்தினார்கள். இதனை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தனது சிந்தனையில் ஆழமாகப் பதியவைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு
கம்யூனிஸ்டின் சிந்தனையும் செயல்பாடும் கம்யூனிஸ்டு கட்சியின் (மக்களின் நலன்களுக்கு) நலன்களுக்கு ஒத்திசைவாகவே இருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு கம்யூனிஸ்டும் 1. மார்க்சிய லெனினிய ஆசான்களது போதனைகளை கற்றுக்கொள்ள வேண்டும், 2. புரட்சிகரமான
வேலைகளை செய்வதற்கான தனது ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும், 3. புரட்சிகரமான அமைப்புகளை உருவாக்க வேண்டும், 4.புரட்சிகரமான போராட்டங்களுக்காக மக்களை திரட்டி வழிகாட்ட வேண்டும்.
இந்தக் கடமையை செய்வதுதான் கட்சியின் நலன்களோடு ஒத்திசைவாக இருக்கிறது என்பதற்கான அடையாளமாகும். இதற்கு மாறாக, 1. மார்க்சிய லெனினிய ஆசான்களது போதனைகளை தானும் கற்றுக்கொள்ள மறுத்து
பிறருக்கும் கற்றுக்கொடுக்க மறுப்பதும், 2. புரட்சிகரமான வேலைகளை செய்வதற்கு தானும் பாடுபடாமல், பிறரையும் பாடுபடவிடாமல் தடுத்து
தான் விரும்பும் வேலைகளை மட்டுமே செய்துகொண்டும் பிறரையும் அவ்வாறு பயனற்ற வேலைகளிலேயே ஈடுபடுத்திக்கொண்டு இருப்பதும், பயனுள்ள வேலைகளை செய்ய மறுப்பதும் மற்றவர்களையும் பயனுள்ள
வேலைகளை செய்வதற்கு தடையாக இருப்பதும், 3. புரட்சிகரமான அமைப்புகளை உருவாக்குவது மற்றும் விரிவாக்கும் பணிகளில் ஈடுபடாமல்
இருக்கின்ற அமைப்புகளையே தனது சொந்த நலன்களுக்காகப் பிளவுபடுத்திஅமைப்பின் ஒற்றுமையையே சீர்குழைப்பதும், 4. புரட்சிகரமான
போராட்டங்களில் மக்களை ஈடுபடுத்தாமல் ஆட்சியாளர்களுக்கு உகந்த வழியிலான ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்ற போராட்டங்களில் மட்டும் ஈடுபடுத்துவது போன்ற போராட்டங்களை மட்டும் நடத்துவது
போன்றவை கம்யூனிஸ்ட் கட்சியின் நலன்களுடன் ஒத்திசைவாக இருக்காது. இத்தகைய ஒத்திசைவாக இல்லாத நிலையில் செயல்படுபவர்களே கம்யூனிச அமைப்பில் அதிகமாக காணப்படுகிறார்கள்.
ஆகவே ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோசலிச லட்சியங்களுக்காக தன்னை அற்பனித்துக் கொள்பவர்களே அதிகமாகத் தேவைப்படுகிறார்கள். இதற்கு மாறாக மக்களின் நலன்களுக்கு பாடுபடாமல் தனது சொந்த நலன்களுக்காகப் பாடுபடுபவர்கள் நமக்குத் தேவையில்லை. இத்தகைய சுயநலவாதிகள் உயர்பதவிக்கு ஆசைப்படுகிறார்கள், தனது
புகழுக்காக எவ்விதமான சதித்தனத்திலும் ஈடுபடத்தயாராக உள்ளனர், தாங்கள் பிரபல்யம் ஆகவேண்டும் என்றே விரும்புகின்றனர். உழைக்கும் மக்களிடம் மார்க்சிய கருத்துக்களை கொண்டுசெல்வதற்கோ, அவர்களிடம் சோசலிச உணர்வை ஊட்டுவதற்கு இவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை, சுயநலம் சுயநலம் இதுதான் இவர்களது லட்சியமாக உள்ளது. இத்தகைய சுயநலவாதிகளைக் கண்டுதான் மக்கள் கம்யூனிச
அமைப்பின் மீது நம்பிக்கை இழந்துவருகின்றனர். மேலும் அமைப்புகள் சிறு குழுக்களாகப் பிளவுபட்டு வருகிறது.
ஒரு உறுப்பினர் கட்சியின் நலன்களையும் நோக்கங்களையும் மட்டுமே மனதில் வைத்து செயல்பாடுவாரானால், உண்மையிலேயே
சுயநலமற்றவராகவும் தனிப்பட்ட நோக்கங்கள் இல்லாதவராகவும் கட்சியின் நலன்களிலிருந்து பிரிந்து செல்லாதவராகவும் இருப்பாரானால், புரட்சிகர நடைமுறை மற்றும் மார்க்சிய லெனினியத்தை கற்பதன் வாயிலாக இடையராது தமது அரசியல் உணர்வு மட்டத்தை உயர்த்தியவாறு
இருப்பாரானால், பின்வரும் உயரிய கம்யூனிசப் பண்புகள் அவருக்கு கைவரப்பெறும். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி, லியோஷோசி, பக்கம் -
63)
இலக்கு விளக்கம்:- ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு உயரிய பண்பான கம்யூனிச பண்பு வளரவேண்டுமானால் அவர் பின்பற்ற வேண்டியதைப் பற்றி லியோஷோசி கூறுவதை கவனியுங்கள். 1. கட்சியின் நலன்களையும் நோக்கங்களையும்
(உழைக்கும் மக்களின் நலனை உள்ளடக்கியது) மட்டுமே மனதில் வைத்து செயல்பட வேண்டும், 2. உண்மையிலே சுயநலமற்றவராக இருக்க
வேண்டும் (சுயநலமற்றவராக நடிக்கக்கூடாது), 3. மக்களின் நலன் அடிப்படையிலான நோக்கங்களைத் தவிர தனிப்பட்ட நலன்களுக்கான நோக்கம் இருக்கக்கூடாது, 4, கட்சியின் நலனை எப்போதும மறந்துவிடக்கூடாது அடக்குமுறையைக்கண்டு அஞ்சி கட்சியின் நலனை கைவிட்டுவிட்டு திருத்தல்வாதியாக மாறிவிடக்கூடாது. 5. அவருடைய பாட்டாளி வர்க்க உணர்வை தொடர்ந்து வளர்த்துக்கொள்ளமார்க்சிய
ஆசான்களது போதனைகளை தொடர்ந்து கற்றுக்கொண்டு அதனை பயன்படுத்துவதற்கான பயிற்சியையும் பெறவேண்டும். இவற்றை ஒருவர்
பின்பற்றினால் அவரால் சிறந்த கம்யூனிச பண்பாளராக வளரமுடியும் என்றார் லியோஷோசி. இங்கே லியோஷோசி ஒரு கம்யூனிஸ்ட் சிறந்த
கம்யூனிச பண்பாளராக வளரவேண்டும் என்கிறார் இது தவறான கருத்தா?
சில போலி கம்யூனிச தலைவர்கள், பிளவுவாத குறுங்குழுவாத தலைவர்கள் லியோஷோசியால் முன்வைக்கப்பட்ட சிறந்த கருத்துக்களை
படித்துவிட்டால் இந்த குறுங்குழுவாதிகளின் உண்மையான முகம் உலகுக்கு தெரிந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக லியோஷோசியின்
இந்த நூலை படிக்கக்கூடாது என்று அவர்களது அணிகளுக்கு தடைவிதித்துள்ளார்கள். ஆகவே ஒவ்வொரு கம்யூனிஸ்டும் சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி என்ற இந்த நூலைப்படித்து அவர்களது சோசலிச அறிவையும் உணர்வையும் வளர்த்துக்கொண்டு சிறந்த கம்யூனிசப்
பண்பாளர்களாக மாறவேண்டும்.
1. முதலாவதாக அவரிடம் உயரிய கம்யூனிச நன்னெறிகள் அதிக அளவில் இருக்கும். தெள்ளத் தெளிவான உறுதியான பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை அவர் மேற்கொள்வார். எல்லா தோழர்களிடமும், எல்லா புரட்சியாளர்களிடமும், எல்லா உழைக்கும் மக்களிடமும், அவர் அன்பு
காட்டி விசுவாசமாக இருப்பார்; எவ்வித தயக்கமும் இன்றி எல்லாருக்கும் உதவுவதுடன் எல்லோரையும் சமமாக நடத்துவார்; தன்னுடைய சொந்த
தனிப்பட்ட நலன்களுக்காக யாருக்கும் ஊறுசெய்ய மாட்டார்.
பாதிக்கப்பட்டவர்களின் இடத்தில் தன்னை வைத்துப் பார்த்து அவர்களுக்காக வருத்தப்படுவதோடு அவர்களுடைய விசயங்களில்
பரிவோடு நடந்து கொள்வார். மேலும், மனித குலத்தின் கொடிய எதிரிகளுக்கு எதிராக விழிப்புடன் போராடுவதில் ஊன்றி நிற்க கூடியவராக அவர் விளங்குவார்; கட்சியின் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காக, நாடு மற்றும் மனித குலம் முழுவதன் விடுதலைக்காகப்
போராடுவதில் ஊன்றி நிற்பவராக இருப்பார். எல்லோருக்கும் முன்னதாக தம்மை வருத்தத்துக்கு உட்படுத்திக் கொள்பவராகவும் (கஷ்டங்களை
தாங்கிக்கொள்பவராகவும்) எல்லோருக்கும் கடைசியில் மகிழ்ச்சியை அனுபவிப்பாராகவும் அவர் விளங்குவார், கட்சிக்கு உள்ளேயும் சரி மக்கள்
மத்தியிலும் சரி இன்னல்களை ஏற்பதில் முதல் நபராகவும் வசதி வாய்ப்புகளை அடைவதில் கடைசி மனிதராகவும் அவர் இருப்பார்.
பொருளாதார வசதிகளை அனுபவிப்பதில் மற்றவர்களுடன் தனது நிலையை ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்; புரட்சிக்காக செய்யும் பணிகளை
மற்றவர்களை விட தான் அதிகமாக செய்ய வேண்டும் என்றும், மற்றவர்களை விட அதிகமாகப் போராட்டங்களில் துயரங்களை ஏற்று
தாக்குப் பிடிக்க வேண்டும் என்றும் விரும்புவார். இவற்றில் தாம் முதல் நபராக இருக்க வேண்டும் என்று, அவர் முயற்சிப்பார். இன்னல்கள்
எதிர்ப்படும் தருணங்களில் துணிவுடன் முன்நிற்பவர்களாகவும், இடையூறுகள் எதிர்படும் தருணங்களில் தமது கடமைகளை முழுமையாக
நிறைவேற்றுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். செல்வங்களாலோ
கௌரவங்களாலோ அவர்களை ஊழல் படுத்த முடியாது; வாழ்வில் வறுமையோ, தாழ்நிலையோ அவர்களை கோட்பாடுகளில் இருந்து விலகச்
செய்யாது. அச்சுறுத்தல்களோ வன்முறைகளோ அவர்களை மண்டியிட வைக்க முடியாது.
விளக்கம்:- ஒருவர் உன்னதமான லட்சியங்களை மனதில் கொண்டு நேர்மையாக செயல்படுவார் என்றால் அவரால் ஒரு சிறந்த கம்யூனிச
பண்பு உள்ளவராக மாறமுடியும். அத்தகைய பண்புகளைப் பற்றி லியோஷோசி என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள். 1. அவரிடம்
உயரிய கம்யூனிச நன்னெறிகள் அதிக அளவில் இருக்கும். 2. அவர் தெள்ளத் தெளிவான உறுதியான பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை
மேற்கொள்வார். 3. எல்லா தோழர்களிடமும், எல்லா புரட்சியாளர்களிடமும், எல்லா உழைக்கும் மக்களிடமும் அவர் அன்பு காட்டி அவர்களை நேசிப்பார்.
4. எவ்வித தயக்கமும் இன்றி எல்லோருக்கும் உதவுவது, கூடவே எல்லோரையும் வேறுபாடு இல்லாமல் சமமாக நடத்துவார். 5
தன்னுடைய தனிப்பட்ட நலனுக்காக, யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டார், யாரைப் பற்றியும் அவதூறு செய்ய மாட்டார். 6. யாராவது
பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அவர்களது பாதிப்பில் இருந்து விடுதலை
பெறுவதற்கு அவர்களுக்கு உதவி செய்வார். 7. மனித குலத்தின் கொடிய எதிரிகளுக்கு எதிராக விழிப்போடு இருந்து போராடுவார். 8. மனித
குலத்தின் விடுதலைக்காகப் போராடுவதில் ஊன்றி நிற்பார். 9. மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் எதையும் தாங்கும் வகையில்
செயல்படுவார். 10. தொல்லைகள் வரும் பொழுது அதனை முன் நின்று எதிர்கொள்வார், அவர் எப்பொழுதும் கடைசியில்தான் எல்லோரும்
மகிழ்ச்சியுற்ற பிறகுதான் தனது மகிழ்ச்சியைப் பற்றி சிந்திப்பார். 11.பொருளாதார வசதிகளை தான் முதலில் பெறுவதற்கு எப்பொழுதும்
முயற்சி செய்யமாட்டார், மற்றவர்களின் பொருளாதார நலன்களுக்குமுன்னுரிமை கொடுப்பார். 12. போராட்டங்களின் போது தான்மட்டும் முன்னணியில் நிற்பார், அதில் ஏற்படும் துயரங்களை எதிர்கொள்வார். 13.
இன்னல்கள் மற்றும் இடையூறுகள் எதிர்படும் தருணங்களில் தமது கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவார். 14. இத்தகைய கம்யூனிச
பண்பு உள்ளவர்களை பணத்தைக் காட்டியோ கவுரவமான பதவிகளைக் காட்டியோ அவர்களை ஊழல் படுத்தவோ, அல்லது அவர்களது
கொள்கையை கைவிடச் செய்வோ முடியாது. 15. அவர்களது வாழ்வில் வறுமையோ அல்லது தாழ்ந்த நிலையோ ஏற்படும் பொழுது அவர்களது
கொள்கையை கைவிடச் செய்வதற்கு அச்சுறுத்தலோ அல்லது வன்முறையோ பயன்படுத்தி அவர்களை மண்டி இடச் செய்ய முடியாது.
இத்தகைய சிறந்த பண்புகள் கொண்டவர்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள். இத்தகைய பண்புகளை பெறுவதற்காக பாடுபடுபவர்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள். இது
உண்மையிலேயே மிகவும் கடினமான மற்றும் சிக்கலான பணியாகும், சிக்கலான முயற்சியாகும். இந்த முயற்சியில் ஈடுபட்டு வளர்ந்து வருகின்ற
அவர்கள்தான் சிறந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர்களாக இருக்க முடியும். அத்தகைய முன்னணி தலைவர்களால் மட்டுமே
கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களையும் சிறந்த கம்யூனிஸ்ட் பண்பாளர்களாக மாற்றுவதற்கான கல்வி இயக்கத்தை நடத்த முடியும். அத்தகைய சிறந்த கம்யூனிச பண்பாளர்கள் மற்றும்
பண்பாளர்களை உருவாக்கும் மார்க்சிய கல்வி இயக்கம் இல்லாமல் ஒரு மார்க்சிய கட்சியானது உருவாகவே முடியாது. ஒரு அமைப்பை உருவாக்கி
இருந்தாலும் அந்த அமைப்பில் உள்ள தோழர்களும் அதன் தலைவர்களும் இத்தகைய சிறந்த கம்யூனிசப் பண்பாளர்களாகவும் கம்யூனிச லட்சியம் கொண்டவர்களாகவும் இல்லை என்றால் அந்த அமைப்பு ஒருபோதும் கம்யூனிச அமைப்பாக வளர முடியாது..... இலக்கு ஆசிரியர் தேன்மொழி
No comments:
Post a Comment