மார்க்சியம்: வர்க்கப் போராட்டமும் திருத்தல்வாத எதிர்ப்பும்-ஒலி வடிவில்

 

மார்க்சியம்: வர்க்கப் போராட்டமும் திருத்தல்வாத எதிர்ப்பும்

இந்த கட்டுரையை கேட்க ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்வும்

இந்தக் கட்டுரை வர்க்கப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, மார்க்சியத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் பின்நவீனத்துவ மற்றும் திருத்தல்வாத கருத்துக்களைக் கடுமையாக விமர்சிக்கிறது. சமுதாயத்தை வெறும் சிறு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கும் போக்குகளைத் தவிர்த்து, பாட்டாளி வர்க்கத் தலைமையிலான ஒன்றிணைந்த போராட்டமே ஒட்டுமொத்த மானுட விடுதலைக்கு வழிவகுக்கும் என்று இது வாதிடுகிறது. கட்சி அமைப்பின் அவசியத்தை மறுக்கும் நபர்களுக்குப் பதிலாக, ஜனநாயக மத்தியத்துவத்தைப் பின்பற்றும் வலுவான புரட்சிகரக் கட்சியால் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக, குடும்பம் மற்றும் அரசு சார்ந்த ஒடுக்குமுறைகளை வேரறுக்க தனிச்சொத்துடைமை ஒழிப்பே தீர்வாகும் என மார்க்சியக் கண்ணோட்டத்தை இது முன்னிறுத்துகிறது. இறுதியாக, பொருளாதாரவாதச் சிக்கலில் இருந்து தொழிலாளர்களை மீட்டு, மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டுவதே இன்றைய காலத்தின் கட்டாயம் என்று இப்பாடப்பகுதி விளக்குகிறது.

மார்க்சியம் சமூகம் பல வர்க்கங்களாக பிளவுண்டு இருக்கிறது எனக் கூறுவதன் மூலம் பன்மைத்தன்மையை ஏற்கவே செய்கிறது. ஆனால் மார்க்சியத்தை மறுத்து வர்க்கத்தை மறுத்து சமூகத்தில் உள்ள மக்களை தனித்தனியாக பிரித்து சமூக இயக்கத்தை மறுத்து அவர்களை சாதி ஒடுக்குமுறையிலாக, பாலின ஒடுக்குமுறைகுள்ளாகும் பெண்ணாக, இன்னும் பல பிரிவுகளில் பிரித்து  விளிம்பு நிலை மக்கள் என்ற சொல்லாடலின் மூலம் ஏதோ புதிய ஒன்றைக் கண்டுபிடித்து விட்டதைப்போல் ஓயாது ஒலமிடுகின்றனர். உண்மையில் இந்த பிரச்சினைகள் சமூக பிரச்சினைதான் ஆனால் இவை எப்படி ஏன் என்பதனை மார்க்சியம் கூறுகிறது. 

மார்க்சியம் பல பிரிவுகளாக உள்ள அனைத்துப் பகுதியினரின் நலன்களுக்காகவும் அதாவது அனைத்து (இவர்களின் மொழியில்) விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும் போர்க்குரல் கொடுக்கிறது. மார்க்சியம் பன்மைத்தன்மையைக் காணும் அதே நேரத்தில் இவைகளுக்கிடையே உள்ள இயக்கவியல் விதியான உறவையும் அதாவது ஒருமையையும் மார்க்சியம் வலியுறுத்துகிறது. குறிப்பிட்ட கட்டத்தில் வரலாற்று வளர்ச்சி விதி காரணமாக தோற்ற மெடுத்த புரட்சிகர வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தை அனைத்துப் பிரிவினரையும் விடுவிப்பதற்கான தலைமைச் சக்தியாக மார்க்சியம் முன்னிலைப் படுத்துகிறது. எனவேதான் பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவ சமுதாயத்திலுள்ள வர்க்கமாக மட்டுமல்லாமல் அனைத்துப் பிரிவுகளையும் இல்லாதொழிக்கிற சமூகப்பிரிவாக மார்க்சியம் காண்கிறது. ஏனென்றால் இவ்வர்க்கத்திற்கு இழைக்கப்பட்ட தீங்கு சமூக முழுமைக்கும் இழைக்கப்பட்ட தீங்காக மார்க்சியம் காண்கிறது. இங்கேதான் முழுமைக்கும் பகுதிக்கும் இடையிலான உறவை மார்க்சியம் தெளிவாக நிலைநாட்டுகிறது.  சமுதாயத்தின் இதர பிரிவுகள் அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முடியாது. இதன் காரணமாக இதர சமூகப் பிரிவுகள் அனைத்தையும்விடுவிக்கிற ஒரு பகுதியில்தான், சுருங்கக் கூறின் இப்பிரிவில்தான் மானுடம் தன்னை முழுமையாக மீட்டெடுப்பதன் மூலமே இந்தப் பிரிவு தன்னை மீட்டுக் கொள்கிறது என்பதை மார்க்சியம் நிலைநாட்டுகிறது. இதனை புரிந்துக் கொள்ளாமல் தனித்தனி விடுதலை பேசி மக்களை இச்சமூக அமைப்புக்குள்ளே வாழ சொல்லும் அயோக்கியதனம்தான் இந்த பின்நவீனதுவ குப்பைகள். 

உலகமயமாதலும், தாராளமயமாதலும், தனியார் மயமாதலும் கொடிகட்டிப் பறக்கும் இந்த நேரத்தில், காவி பயங்கரவாதம் ஆட்சிப் பொறுப்பைக் கைபற்றி நச்சுக் கரங்களை கொடூரமாக நீட்டிவரும் இந்த நேரத்தில், சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த இலட்சியத்துடன் வர்க்கப்போராட்டத்தை முன்னெடுத்துச்செல்லும் புரட்சியாளர்களுக்கு மார்க்சியத்தை மக்கள் மயமாக்குவது அவசியமாகும். அதனை பேசுவதே எமது நோக்கம்.


பாட்டாளிவர்க்கப் பேராசான் ஸ்டாலினது மறைவிற்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய குருஷ்சேவ்,பிரஷ்னேவ் திருத்தல்வாதக் கும்பல் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு என்பதை அனைத்து மக்களுக்குமான அரசு என்றும், பாட்டாளி வர்க்கத்தின் இரும்புக் கோட்டையான கம்யூனிஸ்ட் கட்சியை வெகுமக்கள் கட்சி எனவும் மாற்றம‌டையச் செய்து மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளுக்குத் துரோகமிழைத்தது. சமாதானப் பூர்வமான மாற்றம், சமாதானப் பூர்வமான போட்டி, சமாதான சகவாழ்வு என்ற கோரிக்கைகளை முன்வைத்து வர்க்கப் போராட்டத்தை முற்றிலுமாக கைவிடுவதற்கு அடித்தளமிட்டது. அதனால் உலகில் பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சிகள் வர்க்க அரசியலையும் வர்க்கப் போராட்டத்தையும் கைவிட்டு, பாராளுமன்றவாத, பொருளாதாரவாத, சீர்திருத்தவாத, திருத்தல்வாதக் கட்சிகளாக தரங்கெட வழியேற்படுத்தி பாட்டாளிவர்க்க சர்வதேசியத்திற்குத் துரோகமிழைத்தது.


அதனால் தங்களின் புரட்சிகர கோட்பாட்டை கைவிட்டு முதலாளித்துவத்துடன் கைகோர்த்து கொண்டது நவீனத் திருத்தல்வாதம். மார்க்சிய தத்துவத்தை மறுக்கும் பின்நவீனத்துவத்துடனும் இன்று கரங்கோர்த்து ஊழிக்கூத்தாடுகின்றன நவீன திருத்தல்வாதம் பின்னர் ஏகாதிபத்தியம் தங்களின் குப்பைகளை எல்லா பெயர்களிலும் இங்கே கொட்டவே செய்கின்றனர்.


அதன் அடிப்படையில் திருத்தல்வாதிகள் தொளதொளப்பான, போர்க்குணமற்ற, தாராளத்தன்மை கொண்ட ஒரு அமைப்பு வடிவத்தையாவது ஏற்கின்றனர் இவைதான் இன்று கட்சியாக உள்ளது. இந்தப் பின்நவீனத்துவவாதிகள் கட்டுடைப்பது என்ற பெயரால் மையப்படுத்தப்பட் கட்சி அமைப்பே கூடாது என்கின்றனர். கட்சி என்றால் அதிகாரத்துவம் மேலோங்கிவிடும் என்கின்றனர்.


கம்யூனிஸ்ட் கட்சி என்பது அதிகார வர்க்க அமைப்பு அல்ல. ஜனநாயக மத்தியத்துவத்தை கோட்பாடாக‌க் கொண்ட கட்சி. சுயவிமர்சனத்தையும், விமர்சனத்தையும் ஆயுதமாகத் தரித்த கட்சி. சமூகத்தின் புறநிலை வளர்ச்சிப் போக்குகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அரசியல் அதிகாரத்திற்கான வர்க்கப் போராட்டத்தை வழிநடத்தும் கட்சி. பரந்துபட்ட மக்களுடன் நெருக்கமான தொடர்புடைய கட்சி. இத்தகைய பண்புகள் இல்லாவிட்டால் அதனைக் கம்யூனிஸ்ட் கட்சி எனக் கூறமுடியாது. ஆனால் தன்னெழுச்சியை வழிபடும் பின்நவீனத்துவவாதிகளோ, தன்னெழுச்சிகளை ஒழுங்குபடுத்தி வர்க்கப் போராட்டத்தை நோக்கி ஒருமுகப்படுத்துகிற கட்சியமைப்பே வேண்டாம் என்கின்றனர். அதோடு மட்டுமின்றி "குடு்ம்பம்" என்ற அமைப்பே இருக்கக்கூடாது எனக் கூச்சல் போடுகின்றனர். குடும்பத்தின் தோற்றம் என்பது தனிச்சொத்துடைமையை அடித்தளமாகக் கொண்டது. தனிச்சொத்துடமையை அடித்தளமாகக் கொண்டே குடும்பம், அரசு போன்றவை தோற்றமெடுத்தன என மார்க்சியம் நமக்கு போதிக்கிறது. எனவே தனிச்சொத்துடமையும் சுரண்டலும் இல்லாது ஒழிக்கப்படும் வர்க்கங்களற்ற சமுதாயத்தில் அதாவது கம்யூனிச சமுதாயம் என்ற இலக்கை அடையப் பெறும்போது ஒடுக்குமுறை கருவியான அரசு போன்றவை உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதே மார்க்சியம்.

ஆனால் இன்றைய சுரண்டல் அமைப்பில் குடும்பத்தை ஜனநாயகப் படுத்தவும், ஆணாதிக்கத்திற்கு எதிராக ஆண், பெண் சமத்துவத்தை ஏற்படுத்தவும் போராட வேண்டும். ஆனால் இந்த கடமைகளை மறுக்கின்ற, கட்டுடைக்க வழிகாட்டும் வழிமுறை என்ன தெரியுமா? எல்லாவிதமான சமூக வக்கிரங்களுக்கும் வரவேற்பளிப்பது, ஜனநாயக உரிமை என்ற பெயரால் இந்தச் சீரழிவுகளுக்கு அங்கீகாரம் தேடுவது. இத்தகைய சீழ்பிடித்த கழிசடைத் தத்துவம்தான் பின்நவீனத்துவம். மேலும் பின்நவீனத்துவவாதிகள் சமூகத்தினது முழுமையை அல்லது ஒருமையை ஏற்பதே இல்லை. சமூகம் பன்மைத்தன்மை கொண்டிருப்பதை பல பிரிவுகளாக பிளவுண்டிருப்பதை மட்டுமே முன்னிலைப் படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக பெண்கள் என்றால் மேட்டுக்குடிப் பெண்கள், மத்தியதர வர்க்கப்பெண்கள், பழங்குடிப் பெண்கள், தலித் பெண்கள், விலை மாதர்கள், திருநங்கைக‌ள் என்று பிரித்துக் கொண்டே போவார்கள். அதேபோல் சாதியையும் தங்களின் பின்நவீனத்துவ நேர்காட்சிவாத கண்ணாடி அணிந்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை மறுத்து; வர்க்க பேதத்தை மறுத்து; இறுதியாக அவர்களின் போராட்டத்தையே சிதைத்து உழைக்கும் மக்களுக்கு விரோதமாக ஆளும் வர்க்க சேவையில் முன்னிலை வகிக்கின்றனர் இவர்கள் உழைக்கும் மக்கள் விரோதிகளே மார்க்சியவாதிகள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஒழுங்கு படுத்தப்பட்ட ஆலை உற்பத்தியில் இருக்கும் தொழிலாளர்கள் பொருளாதாரவாதத்தின செல்வாக்கில் இருக்கிறார்கள். நவீன திருத்தல்வாதிகளின் பிழைப்பு வாதக் கொள்கைதான் தொழிலாளர்களைப் பொருளாதார வாதத்துக்குள் தள்ளிவிட்டது. மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தைத் திரித்து பாமரத்தனமான சோசலிச சித்தாந்தத்தை திருத்தல்வாதிகள் பிரச்சாரம் செய்வதனால்தான் மார்க்சியம் அல்லாத பல்வேறு அரசியல் போக்குகள் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் புகுந்து மார்க்சியத்தை விட மார்க்சியம் அல்லாத போக்குகள் வெற்றி பெற முடிகிறது. ஆகவே, தொழிலாளர்கள் தலைமையிலான உழைக்கும் மக்கள் கூட்டை சமூக அடிப்படையாகவும், மார்க்சிய – லெனினியத்தை சித்தாந்த அடிப்படையாகவும் கொண்ட புரட்சிகர கட்சியால் மட்டுமே  இந்த சீர்கெட்ட அரசியலுக்கு மாற்றாக உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தத்துவ அரசியலாக இருக்கும்...

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்