மார்க்சியத்தின் எதிரிகளை எதிர்த்துப் போராடுவோம்.-AI யின் ஒலி வடிவில்

லெனினியமும் திருத்தல்வாதத்திற்கு எதிரான சித்தாந்தப் போராட்டமும்

இப்பகுதி மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், கம்யூனிச இயக்கங்களுக்குள் ஊடுருவும்   திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தையும் விளக்குகிறது. மறைந்த தோழர் அஜ.கான் அவர்கள் வெளியிட்ட 'திருத்தல்வாதம்' என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியப் புரட்சிகர இயக்கங்கள் சந்திக்கும் சித்தாந்தப் பின்னடைவுகளை இது அலசுகிறது. லெனினிய போதனைகளின்படி, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் நிலவும்  சந்தர்ப்பவாதம் மற்றும் பாராளுமன்றவாதப் போக்குகளைக் களைந்தால் மட்டுமே உண்மையான புரட்சியை முன்னெடுக்க முடியும் என வலியுறுத்தப்படுகிறது. பிளவுபட்டுக் கிடக்கும் இடதுசாரி அமைப்புகள், தங்களுக்குள் ஆரோக்கியமான சித்தாந்த விவாதங்களை நடத்தி, வர்க்க அரசியலின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டியதன் கட்டாயத்தை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. சரியான புரட்சிகரத் தத்துவமும், சமரசமற்ற போராட்ட குணமும் இருந்தால் மட்டுமே முதலாளித்துவச் சூழலில் கம்யூனிச இயக்கத்தை வலுப்படுத்த முடியும் என்பது இதன்
மையக்கருத்தாகும். இந்தியச் சூழலில் மார்க்சிய ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைச் சரியாகப் புரிந்து செயல்படுவதே தற்போதைய பின்னடைவிலிருந்து மீள்வதற்கான வழியாக முன்மொழியப்படுகிறது.

திருத்தல்வாதம் என்றால் என்ன மற்றும் அது கம்யூனிச இயக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது?

லெனினிய அணுகுமுறைப்படி சித்தாந்தப் போராட்டமும் உட்கட்சி ஒற்றுமையும் எவ்வாறு சாத்தியமாகும்?

இந்திய மார்க்சிய லெனினிய இயக்கங்கள் பிளவுபடுவதற்கான முக்கிய காரணங்கள் யாவை?

திருத்தல்வாதம். செங்யென்-சி. மார்க்சியத்தின் எதிரிகளை எதிர்த்துப் போராடுவோம்.! 

அறிமுகம்:- திருத்தல்வாதம், இன்றைய சமூகத்தில் மார்க்சியவாதி என்று தன்னைச் சொல்லிக்கொண்டே மார்க்சியத்தை மறுப்பதும், எதிர்ப்பதும், திருத்துவதும், குழப்புவதும் போன்ற சதித்தனமான துரோக வேலைகளை பலர் செய்துகொண்டிருக்கும் வேளையில் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்களை எதிர்த்து சித்தாந்தத் தளத்தில் விடாப்பிடியான கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டிய சூழலில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் இருக்கிறார்கள். இதனை 2014 ஆண்டுகளிலேயே உணர்ந்த தோழர்தான் அஜ.கான். தோழர் கான் அவர்கள் சிறந்த மார்க்சிய லெனினிய சிந்தனையாளர். அவர்தான் திருத்தல்வாதம் என்ற தலைப்பில் மார்க்சியத்துக்கு எதிரான போக்குகளை தொகுத்து தோழர் செங் யென் சி யின் படைப்புகளை மொழிபெயர்த்து 2014 ஆம் ஆண்டு ஒரு சிறப்பான நூலைக் கொண்டுவந்தார். இந்த நூலை மக்களுக்கு அறிமுகம் செய்த தோழர் கான் அவர்கள் மறைந்துவிட்டார். தோழர் கான் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, அவரால் வெளியிடப்பட்ட நூலில் உள்ள கருத்துக்களை விளக்கி தொடர் கட்டுரையாக இலக்கு இணைய இதழில் கொண்டுவர இலக்கு ஆசிரியர் குழு முடிவு செய்து அதனை முகநூலிலும் பதிவிடுகிறோம். இந்தக் கருத்துக்களை தோழர்கள் படித்து புரிந்துகொண்டு மார்க்சிய லெனினியத்துக்கு எதிரான துரோகக் கருத்துக்களை எதிர்த்து போராட வேண்டும் என்று இலக்கு ஆசிரியர்குழு தோழர்களை கேட்டுக் கொள்கிறது. தோழர் கான் அவர்களை நினைவுகூர்ந்து இந்த தொடர் கட்டுரையை துவங்குகிறோம்.

பதிப்புரை

1967 ஆம் ஆண்டு நச்சல்பாரி போராட்டத்திற்கு பிறகு இந்திய சமூகத்தைப் பற்றிய வர்க்க ஆய்வினை மிகச் சரியாகவே ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டது குறித்து அனுபவங்களை நாம் மார்க்சிய லெனினிய இயக்க வரலாற்றினை படிக்கும்போது அறிய முடிகிறது. மக்கள் போராட்டங்களையும் கட்சி கட்டும் முயற்சிகளிலும் அது சிறிது முன்னேற்றம் அடைந்தது எனினும் வழக்கம் போலவே உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம், பாராளுமன்றவாதம் போன்ற போக்குகளைப் போலவே இந்திய மாலெ இயக்கங்களுக்குள்ளும் பல்வேறுவிதமான போக்குகள் எழுந்தன. இதனால் இந்தியா முழுமைக்குமாக உருவான மாலெ இயக்கம் பிறகு பல்வேறு அரசியல் போக்குகளைக் கொண்ட பல மாலெ இயக்கங்களாக பிரிய ஆரம்பித்து இன்று பல குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இது இந்திய புரட்சிக்கு மாபெரும் பின்டைவுதான்.

விளக்கம்:- இந்திய பொதுவுடமை இயக்க வரலாற்றில் 1967 ஆம் ஆண்டு உருவான நக்சல்பாரி என்று சொல்லப்படும் மார்க்சிய லெனினிய கட்சியானது இந்திய மக்களிடையே புரட்சிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்திய சமூகத்திலுள்ள வர்க்கங்களைப் பற்றி சமூக விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு செய்து ஒரு விஞ்ஞான அடிப்படையிலான திட்டத்தை உருவாக்கி ஒரு புரட்சிகரமான ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கான முயற்சியில் மாலெ கட்சி ஈடுபட்டது. வரவேற்கப்பட வேண்டிய பணியை செய்வதற்கு அந்த கட்சி முயற்சி செய்தது. அந்த வகையில் மாலெ கட்சியானது மக்களைத் திரட்டி போராடியது. கட்சியை கட்டுவதற்கான முயற்சியில் சிறிது முன்னேற்றம் அடைந்தது. ஆனால் மாலெ கட்சிக்குள்ளும் மார்க்சியத்தை மறுக்கும் சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம் மற்றும் பாராளுமன்றவாதம் போன்ற பிற்போக்குத்தனமான போக்குகள் உருவானது. தற்போது பின்நவீனத்துவம், கலைப்புவாதம், அடையாள அரசியல்,பிராங்பார்ட்வாதம், கதவடைப்புவாதம், குறுங்குழுவாதம், தலைமை வழிபாட்டுமுறை, போன்று இன்னும் பல மோசமான போக்குகள் மார்க்சிய லெனினிய அமைப்புக்குள் வளர்ந்து செல்வாக்கு செலுத்திக்கொண்டு இருக்கின்றது. இத்தகைய மார்க்சியமல்லாத, மார்க்சியத்துக்கு எதிரான போக்குகளை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டியது நமது கடமையாகும். இத்தகைய போக்குகளை எதிர்த்துப் போராடி முறியடிக்காததனால்தான் இந்தியாவில் பொதுவுடமை இயக்கமானது கடுமையான பின்னடைவை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு தோழர்களும் மார்க்சியத்துக்கு எதிரான இத்தகைய போக்குகளைப் பற்றி மார்க்சிய ஆசான்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு அதனை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் ஈடுபடும்போது நாம் தயவுதாட்சம் பார்க்கக் கூடாது. நமது நண்பராகவே இருந்தாலும் அவரிடம் இத்தகைய தவறான கருத்து இருந்தால் அந்தக் கருத்தை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 50 ஆம் ஆண்டை நெருங்கப் போகிற மாலெ இயக்கங்களின் வரலாற்றையும் மற்றும் இதுவரைக்கும் அவர்கள் அடைந்த வளர்ச்சிகளையும் குறித்து திரும்பிப் பார்க்க வேண்டிய இத்தருணத்தில் இந்நூலை நான் கொண்டுவரவேண்டிய அவசியம் குறித்து சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும். இந்நூலில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் ஏற்கனவே லெனின் அவர்களின் பல நூல்களில் அனைவரும் படித்ததுதான். மேலும் ரஷ்யப் புரட்சியின் முன்னும் பின்னும் எழுந்த திருத்தல்வாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து லெனின் அவர்கள் கடுமையாகப் போராடி அவைகளை முறியடித்தார் என்பதையும் நாம் படித்து இருக்கிறோம். ஆனால், அவர் ஒவ்வொரு கட்டத்திலும் அதாவது கட்சிக்குள் உள்ளேயும் வெளியேயும் எழுந்த ஒவ்வொரு போக்கையும் எவ்வாறு அவர் முறியடித்தார் என்பதை தொகுப்பாகப் படிக்கும்போதுதான் முதலில் புரட்சியைவிட ஒரு புரட்சிகர தத்துவத்தை நிலைநாட்டுவதும் முக்கியமானது ஆகும் என்பதை உணரமுடிகிறது. அதுவே லெனினியம் நமக்கு சுட்டிக்காட்டுகிற உண்மையாகும். கட்சியின் முக்கியத்துவமும் புரட்சிகர அரசியலும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. (திருத்தல்வாதம் நூல், பக்கம் 9)

விளக்கம்:- இந்தியாவில் பொதுவுடமை இயக்கம் தோன்றி வளர்ந்தது முதல் அதன் தொடர்ச்சியாக மார்க்சிய லெனினிய கட்சி உருவாகி வளர்ந்தது முதல் தற்போது பொதுவுடமை இயக்கமானது பலவாறு பிளவுபட்டு மக்களின் செல்வாக்கை இழந்து பின்னடைந்த வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டியது தற்போது அவசியமாக உள்ளது. திருத்தல்வாதம் என்று நூலில் லெனின் அவர்களால் அவ்வப்போது மார்க்சியத்தை மறுப்பவர்களை எதிர்த்துப் போராடி அம்பலப்படுத்திய கருத்துக்களை தொகுத்து தோழர் செங்யென்சி அவர்களால் கொண்டுவரப்பற்ற தொகுப்பையே இங்கு மொழிபெயர்த்து காலக்குறி வெளியீட்டகம் கொண்டுவந்தது. இந்த நூலைப் படிக்கும் போது லெனின் அவர்கள் கட்சிக்குள் உள்ளேயேயும் வெளியேயும் முன்கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பவாதக் கருத்துக்களை எப்படியெல்லாம் எதிர்த்துப் போராடி முறியடித்தார் என்பதை நாம் அறிய முடிகிறது.

கம்யூனிஸ்டுக் கட்சி என்றால் அந்தக் கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் மார்க்சியத்தை பின்பற்றுபவர்களாகவும், அவர்கள் அனைவரும் மார்க்சியத்தில் தேர்ச்சிபெற்றவர்களாக இருப்பார்கள் என்று கருதுவது தவறு என்பதை லெனினை ஆழமாகப் படித்து அறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால் அப்பாவிகள் வெளுத்தலெல்லாம் பால் என்று கருதி கம்யூனிஸ்டுக் கட்சி என்றாலே புனிதமான கட்சி என்று கருதி அதன் தலைவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக கருதுகிறார்கள். அது தவறானது என்பதை நாம் லெனினைப் படித்து புரிந்துகொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் மார்க்சிய லெனினியத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்களும் உண்டு, மார்க்சியத்தை திருத்தி துரோகம் செய்பவர்களும் உண்டு என்பதை நாம் உணர வேண்டும். ஆகவேதான் லெனின் கட்சிக்குள்ள இருந்த மார்க்சியத்தை திருத்தும் துரோகக் கருத்துக்களை எதிர்த்துப் போராடி அந்தக் கருத்துக்கள் எப்படி மக்களுக்கு துரோகம் செய்கின்ற கருத்து என்பதை அணிகளுக்குப் புரியவைத்து துரோகக் கருத்துக்களை முறியடித்தார் என்பதை நாம் புரிந்துகொண்டு கட்சிக்குள் வரும் தவறான கருத்துக்களைப் பற்றி லெனினது போதனைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு நம்மை ஏமாற்றும் திருத்தல்வாதிகளையும் கலைப்புவாதிகளையும் அடையாளம் கண்டு அவர்களை எதிர்த்துப் போராட முடியும். லெனினது கருத்துக்களை தொகுப்பாகப் படிக்கும் போதுதான் நாம் சமூகப் புரட்சியை நடத்துவதற்கு முன்பாகவே புரட்சிகரமான மார்க்சிய லெனினிய தத்துவத்தைப் படித்து தேர்ச்சி பெறுவது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் ஒரு புரட்சிகரமான கட்சி இருக்க முடியாது. ஆகவே புரட்சிகரமான தத்துவத்தைப் படித்து தேர்ச்சி பெற்று அதன் அடிப்படையில் நாம் புரட்சிகரமான கட்சியை கட்ட வேண்டும் என்ற லெனினது போதனையை நாம் பின்பற்ற வேண்டும். ஒரு புரட்சிகரமான கட்சியும் அதனால் உருவாக்கப்படும் புரட்சிகரமான அரசியல் இல்லாமல் ஒரு நாட்டில் புரட்சிகரமான அரசியல் இருக்க முடியாது. அத்தகைய புரட்சிகரமான அரசியலை அடிப்படையாகக் கொண்ட கட்சி இல்லாமல் புரட்சியும் இல்லை, சமூக மாற்றமும் இல்லை. ஆகவே நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? 1. நமக்குத் தேவை முதன்மையாக புரட்சிகரமான மார்க்சிய லெனினியத் தத்துவம், 2. இந்த தத்துவக் கண்ணோட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட புரட்சிகரமான அரசியல் வேண்டும். 3. புரட்சிகரமான தத்துவத்தையும், அரசியலையையும் உறுதியாகப் பின்பற்றுக்கூடிய உறுப்பினர்களையும் தலைவர்களையும் கொண்ட புரட்சிகரமான கட்சி வேண்டும். 4. புரட்சிகரமான கட்சியின் தலைமையையும் வழிகாட்டுதலையும் உணர்வுப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு பின்பற்றக்கூடிய மக்கள் திரள் அமைப்புகள் வேண்டும். இந்த நான்கு விசயங்களையும் சாதிப்பதற்கு நாம் பாடுபட வேண்டும்.

முதலாளிதுவவாதிகள் தங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தபோதிலும் தங்களுடைய ஆட்சிமுறைக்கு ஒரு பங்கம் ஏற்படுகிறது என்றால் அதை முறியடிக்க அவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் இணைந்துகொள்கிறபோது ஒட்டுமொத்த சமூகத்தையே காப்பாற்ற நினைக்கும் மாலே புரட்சியாளர்கள் நாட்டில் உள்ள சாதாரண பிரச்சனைக்கான போராட்டத்தில்கூட ஒன்றிணைந்து செயல்பட முடியாமல் போகமுடிந்ததற்கு காரணம் என்ன? என்ற கேள்வி எல்லோரிடமும் எழுவது நியாயம்தான். அதற்கான காரணத்தை அவவியக்கங்கள் வருங்காலத்தில் தெளிவுபடுத்துவது போல் அவர்களுக்கு இடையே ஓர் ஒற்றுமை ஏற்படும் நம்பிக்கையில் நாம் இருப்போம். 100 பூக்கள் மலரட்டும் 100 கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்று மாவோ சொன்ன கருத்தின் அடிப்படையில் கருத்துக்கள் முட்டி மோதி ஒரு தெளிவான அரசியலுக்கு அவர்கள் வந்தடையட்டும். ஆனால் அவர்களுக்கிடையே எதிர்காலத்தில் ஒற்றுமை என்ற இலக்கை நோக்கி குறைந்தபட்சம் ஒரு அரசியல் உரையாடலயாவது அவர்கள் தோழமை ரீதியில் தொடர வேண்டும். என்பதே எனது கோரிக்கை. சமூக மாற்றமும் புரட்சியும் மார்சியமும் யாருடைய தனிப்பட்ட சொத்து அல்லவே. நாங்கள்தான் இந்நாட்டில் புரட்சி செய்வோம் என்று யாரும் சொல்லிவிட முடியாது. நாடு வலது அரசியலை நோக்கி நகர்த்தப்பட்டு அதையொட்டி அனைத்து பிழைப்புவாதக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் போது இடதுசாரிப் புரட்சியாளர்கள் மேலும் மேலும் பிரிந்து கொண்டிருக்கின்றனர்..எனவே லெனின் சுட்டிக் காட்டுவது போல வர்க்க அரசியலைச் சுற்றி மாலெ இயக்கப் புரட்சியாளர்கள் அணி திரள வேண்டிய கட்டாயச் சூழலை இக்காலகட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதையும் அதற்கு லெனினிய அணுகுமுறை எவ்வளவு அவசியம் என்பதையும் இத்தொகுப்பு நமக்கு உணர்த்தும் என்று நம்புகிறேன்.சில நேரங்களில் இந்திய மாலெ இயக்கங்களின் செயல்பாடுகளை பார்க்கும்போது லெனினியம் சரியாகப் படிக்கப்படவில்லையோ சரியாக உணரப்படவில்லையோ என்று கூட உணரத் தோன்றுகிறது. லெனின் அவர்கள் சொல்லுவதுபோல சந்தர்ப்பவாதமும் திருத்தல்வாதமும் நீடித்த நோய்தான். அதைக் குணப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டுமெனில் புரட்சியாளர்களின் நீடித்த ஒற்றுமையும் அவர்களுக்குள் நீண்ட நெடிய விவாதமே அவசியமானதாகும் அதுதான் அந்நோய்க்கு மருந்தாகும். (திருத்தல்வாதம் நூல், பக்கம் 10)

விளக்கம்:- முதலாளித்துவவாதிகளும் அவர்களின் அரசியல் கட்சிகளும் அவர்களுக்கிடையில் எலியும் பூணையுமாகச் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும் அவர்களது ஆட்சிமுறைக்கு ஒரு கெடுதல் வரும்போது அவர்களுக்கு இடையிலுள்ள சண்டைகளை மறந்துவிட்டு அவர்கள் ஒன்றுபட்டு போராடுவதை வரலாற்றில் நாம் பார்க்கிறோம். அதுபோல உழைக்கும் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உழைக்கும் மக்களுக்குகாகப் பாடுபடுவதாகச் சொல்லும் கம்யூனிஸ்டுகள் பல பிரிவாக பிரிந்து நின்றுகொண்டிருக்கும் இவர்கள் தங்களுக்கு இடையிலுள்ள பிரிவினைகளை மறந்துவிட்டு ஒன்றுபடுவதில்லையை ஏன்? என்பதற்கான காரணத்தை நாம் ஆய்வு செய்து புரிந்துகொள்ள வேண்டும். இந்த காரணத்தை வருங்காலத்தில் புரிந்துகொண்டு ஒற்றுமைக்கு எதுவெல்லாம் தடையாக இருக்கிறதோ அந்தத் தடைகளை எல்லாம் அகற்றுவதற்கான வழிமுறைகளை கண்டுணர்ந்து ஒற்றுமைக்காகப் பாடுபட்டு ஒன்றுபடுவார்கள் என்று நம்பிக்கையோடு நாம் முயற்சி செய்யவேண்டியது மிகமிக அவசியமாகும். ஆனாலும் அது அவ்வளவு லேசான விசயம் அல்ல. அதற்கு ஆழ்ந்த மார்க்சிய அறிவும் பொறுமையும் சிறந்த பக்குவம் கொண்ட நபர்களின் முன்முயற்சி அவசியமாகும். சுயநலம் சிறிதும் இல்லாத அற்பணிப்புணர்வுள்ள மார்க்சிய லெனினிய தத்துவத்தில் ஆழ்ந்த அறிவுள்ள நபர்கள் இங்கு உருவாக வேண்டும். அத்தகைய தன்மை படைத்தவர்களின் கூட்டு முயற்சி மூலமே பிளவுபட்டுள்ள கம்யூனிச இயக்கங்களை ஒன்றிணைக்க முடியும். அத்தகைய முயற்சியை நோக்கி பொதுவுடமை இயக்கம் முன்னேறும், அது காலத்தின் கட்டாயமாகும்.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் ஒன்றுபடுவதற்கான வழியை லெனின் நமக்குப் போதித்துள்ளார. அதைத் தொடர்ந்து மாவோவும் 100 பூக்கள் மலரட்டும் 100 கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்றும் அதன் அடிப்படையில் நாம் தெளிவான ஒன்றுபட்ட கருத்தை வந்தடைய முடியும். அவ்வாறு வந்தடைந்த ஒன்றுபட்ட கருத்தின் அடிப்படையில் நம்மிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். நாம் ஒன்றுபடுவதற்கு நமக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படுவது அவசியமாகும். அந்த கருத்தொற்றுமையானது மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே அமையவேண்டும். ஆகவே நமது கருத்தொற்றுமைக்காக விவாதம் செய்ய வேண்டும். அந்த விவாதங்கள் மார்க்சிய ஆசான்களது போதனையையே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே பிரிந்திருக்கும் கம்யூனிஸ்டுகள் தங்களுக்கிடையிலுள்ள கருத்துக்களை விவாதிப்பதற்கு ஒரு பத்திரிக்கையை துவங்கி ஒவ்வொருவருடைய கருத்துக்களை அந்தப் பத்திரிக்கை மூலமாகவே விவாதத்தை நடத்த வேண்டும். மேலும் ஆங்காங்கே உள்ள அமைப்புகளில் ஒன்றுபட்டு விவாதங்கள் நடத்திட வேண்டும். மக்களின் எதிரியை எதிர்த்த போராட்டங்களில் ஒன்றுபட வேண்டும் அதே வேளையில் நமக்கிடையிலுள்ள வேறுபாடுகளை தீர்த்துக்கொள்ள சித்தாந்தப் போராட்டத்தை நடத்திடவும் ஒன்றுபடவேண்டும்.

இத்தகைய முயற்சியின் மூலம் கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமைக்காக சித்தாந்தப் போராட்டம் நடத்திட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆகவே ஒவ்வொரு அமைப்பைச் சேர்ந்தவர்களும் பிற அமைப்பைச் சேர்ந்தவர்களோடு தோழமையாக கருத்துக்களை பகிர்ந்துகொண்டு ஒன்றுபட முன்வரவேண்டியது அவசியமாக உள்ளது. இந்த அவசியத்தை உணர்ந்து நடைமுறையை வகுத்துக்கொள்ளவில்லை என்றால் நான்கு மாடுகளை பிரித்துவிட்டு சிங்கம் கொன்றது என்ற கதையில் வருவது போல முதலாளித்துவவாதிகள் கம்யூனிச இயக்கத்தை பிளவுபடுத்தியே அழித்துவிடுவார்கள். சமூக மாற்றம், புரட்சி, மார்க்சியம் ஆகியவை ஒரு தனிப்பட்ட நபருக்கோ, ஒரு தனிப்பட்ட கட்சிக்கோ சொந்தமானது அல்ல. அதாவது இவற்றை எல்லாம் தெளிவாக அறிந்துகொண்டு செயல்பட ஒருசிலரால் மட்டுமே முடியும் என்று சிலர் கருதுகிறார்கள். அது உண்மையில்லை மார்க்சியத்தை யாரும் முயற்சி செய்து படித்து புரிந்துகொள்ள முடியும் புரிந்துகொள்ள வேண்டும். மார்க்சியத்தை ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு கட்சியோ உணர்வுப்பூர்வமாக முயற்சி செய்தால் மக்களுக்கு போதிக்க முடியும். அதேபோலவே இங்கு சிலர், மற்றும் சில கட்சிகள் தாங்கள்தான் இந்த நாட்டில் புரட்சி செய்வோம் தங்களிடம்தான் புரட்சிகரமான கொள்கை இருக்கிறதாக மார்தட்டிக்கொள்கிறார்கள். அது உண்மையானால் அவர்கள் அதனை நடைமுறையில் நடத்திக்காட்ட வேண்டும். பல ஆண்டுகளுக்குப் பிறகும் அதனை அவர்களால் சாதிக்க முடியவில்லை என்றால் அவர்கள் வாய்வீச்சாளர்களாகவே இருக்கிறார்கள். ஆனாலும் ஒருவரோ ஒரு கட்சியோ உணர்வுப்பூர்வமாக அற்பணிப்போடு முயற்சி செய்தால் அவர்களால் புரட்சிகரமான கொள்கைகளை வகுக்க முடியும் புரட்சியையும் நடத்த முடியும். ஆகவே நமக்குத் தேவை புரட்சிகரமான வர்க்க உணர்வு, அதைத்தொடர்ந்து மார்க்சிய லெனினிய தத்துவ அறிவு மற்றும் பயிற்சியும் இருந்தால் யாராலும் புரட்சிகரமான கொள்கை வகுக்க முடியும் புரட்சியையும் நடத்திட முடியும் என்பதை கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். தற்போது நாட்டில் வலதுசாரி அரசியலும் சந்தர்ப்பவாத அரசியலும் பிழைப்புவாத அரசியலும் செல்வாக்கோடு வளர்ந்துகொண்டு இருக்கிறது. அதே வேளையில் கம்யூனிஸ்டுகள் மேலும் மேலும் பிளவுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனை முறியடித்து கம்யூனிஸ்டுகளுக் கிடையில் ஒற்றுமை ஏற்படுவதற்கு பாட்டாளிவர்க்க தத்துவம் மற்றும் அரசியலை உயர்த்திப்பிடித்து கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட வேண்டும். அதற்கு கம்யூனிசத்துக்கு எதிரான திருத்தல்வாதக் கருத்துக்களைப் பற்றி லெனினது போதனையை நாம் கற்றுத் தேறவேண்டும். ஆகவே தோழர்களே நாம் ஒன்றுபடுவதற்கு லெனினிய அனுகுமுறையைப் பின்பற்றி ஒன்றுபடுவோம். உழைக்கும் மக்களின் ஒற்றுமை ஓங்குக!. இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகளின் கொள்கை முடிவுகள், அவர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது கம்யூனிஸ்டுகள் மார்க்சிய ஆசான்களின் போதனைகளை சரியாகப்படித்தும் புரிந்துகொள்ளத் தவறியிருக்கிறார்கள் என்று இந்திய பொதுவுடமை இயக்கத்தில் நீண்டகாலம் பணியாற்றிய மூத்த கம்யூனிசத் தலைவர்கள் கருதுகிறார்கள். அது உண்மையே. ஏனெனில் மார்க்சிய ஆசான்களின் போதனைகளை கற்றுத்தருவதற்கு எந்த கம்யூனிஸ்டுக் கட்சியும் முயற்சி செய்யவில்லை என்பதே உண்மையகும். சந்தர்ப்பவாதமும் திருத்தல்வாதமும் கம்யூனிச அமைப்புக்குள் இருக்கும் நீடித்த நோய் ஆகும் என்று லெனின் சொன்ன உண்மையை நாம் உணரவேண்டும். சமூகத்தில் வர்க்கங்கள் இருப்பதாலும் இந்த வர்க்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்து செயல்படுகிறார்கள் என்பதாலும் ஒவ்வொரு வர்க்கமும் அதன் வர்க்கத்தின் கருத்துக்களை கட்சிக்குள் கொண்டுவந்து செல்வாக்கு செலுத்த முயற்சிக்கும் என்பதாலும் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் எப்போதும் சந்தரப்பவாதமும் திருத்தல்வாதமும் இருக்கும் இத்தகைய சந்தர்ப்பவாதக் கருத்துக்களை கட்சிக்குள் கொண்டுவரும் நபர்களும் இருப்பார்கள். அவர்களையும் அவர்களது திருத்தல்வாதக் கருத்துக்களையும் கம்யூனிஸ்டுகள் எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டே கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமையையும் பேணவேண்டும். அதற்கான வழிதான் விமர்சனம், சுயவிமர்சனம், மற்றும் உட்கட்சி சித்தாந்தப் போராட்டம் ஆகிய இரண்டு வழிமுறைகளை மார்க்சிய ஆசான்கள் நமக்குப் போதித்துள்ளார்கள். இந்த போதனையைப் பின்பற்றி செயல்படுவதன் மூலமே கம்யூனிஸ்டுகளால் சந்தர்ப்பவாதத்தையும் திருத்தல்வாதத்தையும் முறியடித்து கட்சிக்குள் ஒற்றுமையை பாதுகாக்க முடியும். தேன்மொழி


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்