l வரும் மார்ச் 8ம் தேதி “உலக மகளிர் தினம்” உண்மையில் அன்று பல்வேறு விதமான பெண்ணிய விரும்பிகளும் புரட்சி பேசுபவர்களும் முற்போக்காளர்களும் பெண்ணின் இன்றைய நிலைக்குறித்து பேசுவர் அவையெல்லாம் நாம் வாழும் சமூகத்தில் உள்ள குறைகளே என்றாலும் அதனில் இருந்து விடுப்பட என்ன பணி செய்துக் கொண்டுள்ளனர்என்பதனைஆராய்ந்தாலே தெரிந்துக் கொள்ள முடியும் அவர்களின் நோக்கம். கடந்தகால வரலாறுகளை பேசி நிகழ்கால நிகழ்வுகளை முன்னிறுத்தி பெண்களே பாதுகாப்பாக இருங்கள் காலம் மிக மோசமானது என்று அறிவுறை பகிரும் அனைவரும் இந்த சமூக இயக்கத்தை காண்பதில்லை என்பேன். ஆக அதனை நோக்கிய ஒரு தேடல்தான் இவை.
“நாம் என்று குறிப்பிடும்போது ஆண், பெண் என்ற இருபாலாரையும் குறிக்க விளைகின்றேன். கடந்த காலத்தின் விளைச்சலான சமகால அறுவடைகளை அறுத்துக்கொண்டிருக்கும் இன்றைய மனிதர்களே நாளைய வரலாற்றை படைக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள் என்பதை மறுக்கவொண்ணாது; சமூகக்கடமை என்று வரும்போது அதனைப் பிறர் பணியாக நினைத்து தம் கடமையை மறுக்கும் நிலை மாற்ற எண்ணியே ஒருமையில் இல்லாமல் பன்மையில் நாம்” என்ற பதத்தைப் பயன்படுத்த விரும்புகின்றேன். நம் எல்லோரதும் கூட்டுப் பொறுப்பு என்பதைக் குறிக்கவே இந்த வார்த்தையை எழுத முனைகின்ற நான் இவை நம் எல்லோரும் அறிந்திருக்க செயல்பட வேண்டிய அவசியம் என்பதனை வலியுறுத்தவே எனலாம்.
“பெண் என்ற சொல்லின் பின்னால் நமது சமூக வரலாற்றெழுதிகள் கட்டமைத்து வைத்திருக்கும் பல ஆயிரம் ஆண்டுப் படிமங்கள் ஏன் நாம் தினம் தினம் பழகும் பேசும்மொழியில் பெண்ணை தெரியாமளே மிகக் கொடூரமாக ஒடுக்கும் வார்த்தை பயன்பாடு, நமது எண்ணத்தில் எழுகின்ற பலவையும்.
‘பெண்ணடிமைப்பெருங்கோட்டைமதில்கள்’நம் அனைவரதும் உள்ளங்களை ஆட்படுத்திக் கொண்டுள்ளன.வரலாறும் பண்பாடும் சமகாலச் சமூகத்தின் சிந்தனை மீது ஆதிக்கப் பாறாங்கல்லைச் சுமத்தியுள்ளன.
இன்றையதகவல்தொழில்நுட்ப்பவளர்ச்சியானது ஆதிக்கப் பண்பாட்டுச் சிந்தனைகளைநமதுவீட்டுகளின்கூரைகளைப் பிய்த்துக் கொண்டு கதவுகளை உடைத்துக் கொண்டு நமது சமூகச் சிந்தனையின் மீது தொடர்ந்து நாட்டாண்மைசெய்துக் கொண்டிருக்கின்றன.
சமூகப் பிரச்சினைகளுக்காக போரிட்டு வாழ்ந்த மனிதர்களை தனித்தனித் தீவுகளாக, தனிமனித அகவயச் சிந்தனையுள் மூழ்கடித்து தனியாட்களாக தவித்து கரையேற முடியாதபடி கல்லோடு கட்டிக் கடலுக்குள் வீசப்பட்டவர்களாக மூச்சுத் திணறிக் கொண்டுள்ளனர்.
உலகமயத்தின் சூழ்சியில் சிக்குண்டுள்ள மனிதகுலம் விடுதலைக்கு விடை தேட முனைவதையே பெரும் வில்லங்கமாகக் காணுகின்றனர் ஏகாதிபத்தியவாதிகள்.
இந்த நிலையைக் கணக்கில் கொண்டே பெண் விடுதலை பேச நினைக்கும் நாம் பெண்விடுதலைக்கு பாடுபடுவோர்களையும் அவர்களின் நோக்கங்களையும் ஆய்வோம். அதேபோல் பெண் எப்படி இச் சமுகத்தில் அடிமையாக்கப்பட்டால் அதிலிருந்து விடுபட மார்க்சியம் மட்டுமே எப்படி வழிகாட்டி என்பதனை பார்ப்போம்.
நம்மைப் பொறுத்தவரை கருத்தும் அது உருவாக்கும் கொள்கையும் அதன் வழியாக உருவாகும்நடைமுறையும்தான் முக்கியமானதாகும்.அவற்றின்அடிப்படையிலேயே எவ்வகைச் செயற்பாட்டாளர் களையும் நாம் நோக்குதல் வேண்டும்.
எனவே பெண் விடுதலையை சமூக விடுதலை சமூக மாற்றம் என்பதிலிருந்து பிரித்தெடுத்து தத்தமது அளவுக்கும் மேற்கத்திய முதலாளித்துவ ஏகாதிபத்தியத் தேவைகளுக்கும் ஏற்றவிதமாக முன்னெடுப் பதை மார்க்சியவாதிகள் கடுமையாக எதிர்க்கவே செய்வார்கள். ஏனெனில் முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்பு முறையினதும் அவற்றின் சுரண்டல் ஒடுக்கு முறைகளிலிருந்தும் விடுதலை வேண்டி நிற்கும் மனிதர்களிடையே ஆண்-பெண் முரண்பாட்டையே பிரதானமான ஒன்றாகக் கொள்ளும் போக்கை மார்க்சியவாதிகள் தயவு தாட்சண்யமின்றி எதிர்த்தே நிற்க வேண்டும்.
நிலவுடைமைச் சமூகம் வளர்ச்சி பெற்ற பின்பு, குடும்பம், பொருளாதாரம், அரசு நிறுவனஅமைப்புவரலாற்றுஅடிப்படையிலான ஆணாதிக்கப் போக்கினைப் பற்றி ஏங்கல்ஸ் குறிப்பிடுவது வரலாற்றுக்கு முந்திய புராதனமான சமூகங்களில் பெண்ணுக்குச் செயலூக்கமான பங்கிருந்தது. அது பின்னர் வேளாண்மைச் சமூக மாற்றத்தால் புதிதாக உருவான குடும்பம், நிலவுடைமை, அரசு ஆகியவற்றால் ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலைமையே பெண்ணுக்கான முழுவாழ்வாக அமையலாயிற்று என்று ஏங்கல்ஸ் கூறுகிறார்.
பெண் எல்லா இடங்களிலும் அனைத்துச் சமூகத்திலும் ஒடுக்கப்பட்டாள். நவீன முதலாளித்துவத்தில் மேலும் ஒடுக்கப்பட்டாள்.பெண்கள் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களாய் நியமனம் செய்யப்பட்டு, சுரண்டப்பட்டார்கள், பலர் வீட்டு வேலை செய்பவர்களாய் மாறினர். பணம்,மதிப்பீடுகளை முடிவு செய்கிற போது பெண் வெளியே சென்று பணி செய்ய வேண்டிய நிர்பந்தம் நேர்ந்தது. நாள் முழுவதும் செய்யப்படுகிற வீட்டு வேலைகளுக்குச் சம்பளமில்லாததால், அவள் உழைப்பிற்கு மதிப்பில்லாமல் போனது.முதலாளித்துவச் சமூகத்தில் பெண்கள் குறைந்த கூலிக்கு வரும் உழைப்பாளிகளாக்கப்பட்டு அவர்களைப் பயன்படுத்தி லாபம் பெறுவது முதலாளித்துவப் போக்காகிவிட்டது.
மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தில் பெண்ணைப்பற்றி, பெண்ணின் சமூகத் தகுதி நிலையைப் பற்றி விளக்கும்போது, உயிர்உற்பத்தி செய்வதிலும், சமூகத்தில் உற்பத்தி சக்திகளைஉருவாக்குவதிலும்,சுதந்திரமாகவும் சமஉரிமை பெற்றும் வாழ்ந்து வந்த பெண்கள் மேற்கூறிய முதலாளித்துவத்தின் போக்கினாலும் தனிச் சொத்துரிமையாலும், துணைநிலையினராகவும், சார்பு மாந்தராகவும் மாறிப் போயினர். இம்மாற்றம் வரலாற்றுநிகழ்ச்சியில்தவிர்க்கவியலாத மாற்றமாகியது என விளக்குகின்றனர்.
பொதுவாகப் பெண்கள் மணவாழ்க்கையை ஏற்ற பின்பு கல்வி கற்றிருந்தாலும் கற்காவிட்டாலும் அடுக்களையில்தான் தம் வாழ்நாட்களைப் போக்குகின்றனர்.இப்போக்கைப் பொருளாதாரத்தில் இடைநிலையிலும் கீழ்நிலையிலும் உள்ளோரிடத்துக் காணலாம்.மேட்டுகுடியில் பிறந்த பெண்கள் பெரிதும் அடுக்களைப் பக்கம் செல்வது என்பது அரிது. அதற்காக அவர்கள் வேலையாட்களை வைத்துள்ளனர்.
உலகின் மனிதகுல வரலாறானது மகத்துவம் வாய்ந்தது.கூட்டு உழைப்பில் வாழத்தொடங்கிய துவக்ககால குலக்குழு,நாடோடி,நிலவுடைமை ஆகிய முச்சமூகப் படிநிலைகளில் மானுடச்சமூகம் வளர்ச்சி பெற்றது.நிலவுடைமைச் சமூகத்தில்தான் குடும்பஅமைப்பு உருவானது.இக்குடும்பத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெண் பாதுகாப்பதோடு குடும்ப நிர்வாகத்தையும் பெண் பார்ப்பதாக அமைந்தது.நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்க காலத்தில் தான் தாய்வழிச் சமூகம் மறைந்துதந்தைவழிசமூகம் வளர்ச்சி பெற்ற நிலையில் பெண்ணின் உழைப்பு சுரண்டப்பட்டுக் குடும்ப அரசியல், பொருளாதாரம், உடலமைப்பு போன்ற அடிப்படையில் பெண் அடிமைப் படுத்தப்படுகிறாள். இவ்வாறு பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கப் போக்கே தந்தைவழிச் சமூகமாகும். இந்நிலையில் உலகளவில் பெண்ணை அடிமைப்படுத்து வதோடு மட்டுமல்லாமல் பெண்ணைப் பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகமாக இம்மானுடச்சமூகம் திகழ்கிறது.
தாய்வழிச் சமூக அமைப்பில், பெண்ணுக்கு முதன்மை இடம் கொடுக்கப்படுகிறது. மனிதகுலப் பரிணாம வளர்ச்சியின் உயிர் நாடியாகப் பெண் திகழ்வதோடு, சமுதாயத்தின் முக்கிய ஆக்கப் பணிகளிலெல்லாம் பெண் முதன்மை இடம் பெற்றிருந்தாள் என அறிய முடிகின்றது. பெண் ஆணைச் சார்ந்து இருப்பதில்லை. சந்ததித் தோற்றம் தாயை முன்வைத்து அறியப்படுகிறது. பெண் வேட்டையாடிய போது குழந்தைகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தாள். தந்தை என்பவர் இல்லை. இந்நிலையிலேயே தாய்வழிச் சமூகம் நிகழ்ந்திருந்தது. “தந்தை வழிச் சமூகமானது ஆண் ஆதிக்கத்தை உள்ளடக்கிக் கொண்டு பெண், குழந்தை, அடிமை, குடும்பப் பணிப்பெண் ஆகியோர் மீது ஆட்சி செய்து அவர்களை அடக்குகிறது எனக் (ஏங்கல்ஸ் - 1877)'' கூறுகின்றனர். இந்நிலையில் தாய்வழிச் சமூகத்தில் பெண் சுதந்திரமாக வாழ்ந்திருந்ததையும், தந்தைவழிச் சமூகத்தில்தான் பெண் அடிமையாக் கப்படுவதும் தெளிவாகின்றது.
நாம்வாழும் சமூகக் கட்டமைப்பில் பயமும் பாதுகாப்பின்மையும் பெண்ணை அச்சுறுத்திக் கொண்டுள்ளன. எனவே மெளனமாய் பண்பாட்டுக்குள் அவளது வாழ்வு தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.
“இரண்டாயிரம் ஆண்டுப் பழைமையாக திகழும் நம் பண்பாட்டின் பேரால் செயலில் உள்ள பிற்போக்கை உடைக்க வெறும் கலாச்சாரத்தால் போராட்டத்தால் மட்டும் முடியாது அதற்கு அடித்தளமான சமூக மாற்றமும் வேண்டும்” அதனை பற்றி விரிவாக பேசுவோம்.
பெண்களது விடுதலை என்பது பொத்தம் பொதுவான ஒரு முழக்கமாக மட்டும் வைத்து விட்டு இருந்துவிட முடியாது. பெண் விடுதலை என்று உரத்துக் கூறும் போது எதிலிருந்து அல்லது எவற்றிலிருந்து விடுதலை என்ற வினா எழுகின்றது.பெண்கள் மீதான ஒடுக்குமுறை சமூக அடிப்படைகளையும் அவற்றின் தோற்றத்திலும் அறிவியல் அடிப்படையில் அடையாளம் காணுதல் வேண்டும்.
பெண்களைப்பிணைத்திருக்கும்கண்களுக்குத் தெரியாத அடிமைச் சங்கிலிகளை நமது சமூகச் சூழலில் ஒவ்வொரு வீட்டிலும் தெளிவாக அடையாளம் காண முடியும்.அவை பெண்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை பெண் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள்மீது பூட்டப்பட்ட நுகத்தடிகளாகவே காணப்படுகின்றன.
வீட்டில் பிள்ளை பிறந்ததும் ஆண் என்றால் இனிப்பு கொடுத்துக் குதூகலித்துக் கொள்வதும், பெண் என்றால் சோகமடைந்து ஏதோ கொடுப்பதும் இன்றுவரை தொடரப்படும் வழக்கமாகும். பிறப்பிலிருந்தே பெண்கள் இரண்டாம் தர நிலையிலே வளர்க்கப்படுகிறார்கள். சடங்கு சம்பிரதாயம், கட்டுப்பாடு என்பவற்றால் பெண்கள் அடிமைத்தனத்துக்குள் அமுக்கப்படுகின்றனர்.
பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் பற்றியும் அவற்றிலிருந்து விடுதலை பெறுவது என்பதும் பேசாப் பொருளாக இருந்த காலம்போய் இன்று ஓரளவுக்குச் சமூகத்தில் பெண் விடுதலை பற்றிய குரல்கள் மேலெழும்பி ஒலிக்கவே செய்கின்றன.இருப்பினும் அவை அமைப்பு ரீதியாகவும் இலக்கு நோக்கியும் திருப்தி தருவதாக இல்லை.
பெண்களின் விடுதலை பற்றிய கோரிக்கைகள் பல்வேறு நிலைகளிலும் தளங்களிலும் வற்புறுத்தப்படுகின்றன.அவை நாடு,மாநில ரீதியாகவும் சர்வதேச அளவிலும் அதிக கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெறுகின்றன.ஆனாலும் பெண்கள் மீதான ஒடுக்கு முறையினை அடையாளம் காண்பதிலும் அதற்குரிய விடுதலை மார்க்கத்தைத் தெரிவு செய்வதிலும் வேறுபாடுகளும் முரண்நிலைகளும் காணப்படுகின்றன.இதில் முக்கியமான முரண்பாடு மார்க்சியவாதிகளுக்கும் தீவிரப் பெண்ணியவாதிகளுக்குமிடையே தான் காணப்படுகின்றது.
பின்நவீனத்துவமும் பெண் விடுதலையும்
குறிப்பாக சோஷலிசத்தின் தற்காலிகப் பின்னடைவிற்குப் பின் மாக்சியம் தோல்வி கண்டு விட்டதாக பிரசாரம் முன் தள்ளப்பட்டுள்ள சூழலில்; பெண் விடுதலை பற்றிய நவீனகருத்தியல்களான பின்நவீனத்துவத்தை முதலாளித்துவம் வேகமாக வளர்த்தெடுத்தது. அதன் பின்புலத்தில் பெண்ணிய விடுதலை பற்றிய தீவிர கருத்தாக்கங்கள் நமது சூழலுக்கு பொருந்தாவிடினும் வலிந்து முன்வைக்கப்பட்டன. மேற்குலகிலே பேசப்படும் பெண்ணியக் கருத்துக்களை NGOகள் மூலம் சிலர் நம்மிடையே வேர்பரப்பும் வேலையை செய்துக் கொண்டுள்ளனர்.
முதலாளித்துவ அமைப்பின் தொழில்துறை வளர்ச்சியும், சுரண்டல் அமைப்பும் ஒரு ஆணின் உழைப்பில் மட்டுமே ஒரு குடும்பம் வாழமுடியாத நிலையை உருவாக்கியபோது பெண்களும் வீட்டுக்கு வெளியே சமூக உழைப்பிலும் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.இத்தகைய இரட்டைச் சுமைகளும்,ஆணதிகாரமும் அழுத்தியதால் பெண் விடுதலை இயக்கங்கள் பிரிட்டன்,அமெரிக்கா போன்ற தொழில் வளர்ச்சி அடைந்தநாடுகளிலேயே முதலில் எழுந்தன.இன்று தீவிர பெண்நிலை வாதிகள்,மார்க்சியப் பெண்நிலைவாதிகள் என்று பல பிரிவாக இவர்கள் வளர்ந்து வருகின்றனர்.இதில் தீவிர பெண் நிலை வாதத்தை ஆதரிப்போர் ஆண்களால் முன்னெடுக்கப்படும் சமூகவிடுதலை இயக்கங்களை ஆதரிக்க மறுப்பதுடன்,பாலியல் பிறழ்வுகளை ஊக்குவிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர் களாகவும்,மார்க்சியப் பெண்நிலை வாதிகள் தமது தனித்துவத்தைப் பேணுவதுடன் ஆண்களுடன் இணைந்து தமது பொதுப்போராட்டங்களை ஏற்றுக் கொள்வதுடன் புதிய ஒழுக்கமுறைக்கு வழிகோலுபவர்களாகவும் இருந்து வருகின்றனர்.
அதனை புரிந்துக் கொள்ள முயற்சிப்போம்:-
பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும் அவற்றுக்கான நீண்டகால வேர்களும் ஐரோப்பிய அமெரிக்க சூழலிலிருந்து வேறுபட்டவைகளாகும்.நாம் இன்றும் நிலவுடமை வழிவந்த பழமைவாதக் கருத்தியல்களால் கட்டுண்டவர்களாகவே இருந்து வருகின்றோம்.பெண்கள் பற்றிய கண்ணோட்டத்திற்கும் மதிப்பீட்டிற்கும் அத்தகைய பழமைவாத அளவுகோல் கொண்டே அளக்கப்படுகின்றது.ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை வரையறை செய்து நடைமுறையாக்கிக் கொள்ள இன்றும் “மனுதர்மம்” கூறும் விதிகளைப் பின்பற்றுபவர்களாக நமது பெண்கள் இருந்து வருவதையே நமது சமூகம் உயர்வாகக் கருதுகிறது. தொடரும் வழக்கமாகவும் உள்ளது. பிறப்பிலிருந்தே பெண்கள் இரண்டாம் தர நிலையூடாகவே வளர்க்கப்படுகிறார்கள்.
பழமையை போற்றுதல் மதம் பண்பாடு என்பவற்றால் பெண்கள் குறிப்பிட்ட வட்டங்களுக்குள் இருத்தப்படுகின்றனர்.
சடங்குகள் அனைத்திலும் பெண்ணடிமைத் தனம் நிலைநிறுத்தப்படுகின்றது. பொட்டு,பூ, பட்டுப்புடவை, தங்க ஆபரணங்கள், காலுக்கு-மெட்டி,கொலுசு முதல் அலங்காரம் வரை பெண்களை அழகுப் பதுமைகளாக்கி ஆண்களின் போகப் பொருளாக்கிக் கொள்கிறார்கள். அத்துடன் வாழ்விழந்தவள்-விதவை,அமங்கலி, வேசை-விபச்சாரி போன்றனவும் பெண்களுக்குரியனவாகவே சமூகத்தில் நிலைபெற்று நிற்கின்றன. எவ்வளவிற்கு பெண்கள் கல்வியில், உயர் தொழில்களில், கலைகளில், இலக்கியத்தில், போராட்டங் களில் இன்னும்பிற சமூக செயற்பாடுகளில் தகுதிகள் பெற்றிருந்தாலும் அவர்கள் ஆண்களுடன் சமத்துவத்தைப் பெற முடியாத நிலை காணப்படுகின்றது. மனிதன் என்னும் ஆண் உயிரியும் மனித வழியில் வந்த பெண் உயிரியும் சமத்துவமானவர்கள் என்று இங்குள்ள மனிதர்கள் என்றுமே காண்பதில்லை. “என்னதான் இருந்தாலும் அவன் ஆண்பிள்ளையல்ல, இவள் பெண், இப்படிப் பேசியிருக்கப்படாது”என்பதன் ஊடாகப் பெண்ணின் இரண்டாம் தர நிலையை அடையாளம் காணமுடியும். மதம் பண்பாடு நாகரீகம் என்பவற்றின் நீட்சியும் அவற்றின்ஊடாக உருவாக்கப்பட்ட சடங்கு சம்பிரதாய நடைமுறைகள் மூலம் பெண்கள் மீதான ஒடுக்குதல்கள் அன்றாட வாழ்வில் அவர்களுக்குரிய கடமைகள் என்ற பெயரில் சுமத்திக் கொள்ளப் படுகின்றன. இவற்றை பெண்களும் தமக்குரிய வாழ்வியல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனஏற்று நடந்தும் கொள்கின்றனர்.பெண்கள் பற்றி வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வரும் கருத்தியல்கள் யாவும் அல்லது நடைமுறைகள் எல்லாம் ஏன்? எப்படி? எதற்காக? என்ற கேள்விகளுக்கு அப்பாலே இருந்து வருகின்றன. அவற்றைத் தகர்ப்பதற்கு மாற்றுக் கருத்தியல் மூலமே முடியும் அதற்கான அடிதளத்தை தகர்பதன் ஊடாகவே அவை நிகழ்த்த முடியும்.
குடும்ப அலகு என எடுத்துக்கொள்ளும் போது ஆண்ஆதிக்கம் என்பது மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது.இந்த ஆண் ஆதிக்க சிந்தனையும் அதன் செயற்பாடும் வரலாற்று ரீதியாக வளர்ச்சி பெற்று வந்த ஒன்றாகுமென்பதை அறிந்தவைதான்.ஆனால் தனிச் சொத்துடமையின் வளர்ச்சியும் வர்க்கங்களின் தோற்றமும் பெண்களின் நிலையைப் பின்தள்ளப்பட்டது.சொத்துக்குரியவன் ஆண் என்றும் அவனது ஆதிக்கமே முதன்மை பெற்று வளர்ச்சி பெற்று சமூக இறுக்கம் பெற்றுக்கொண்டது.ஆண் எதிலும் முதன்மைக்குரியவன் என்பதும் பெண் அந்த ஆணுக்கு கட்டுப்பட்டஇரண்டாம் நிலையானவள் என்பதும் நிலைநிறுத்தப் பட்டது.குழந்தைகளைப் பெற்றுப் பராமரித்து வளர்த்துப் பெரியவர்களாக்கும் தாய்மார் களாலேயே மீறமுடியாத கருத்துக்களாக அவை ஊட்டி வளர்க்கப்படுகிறது.
இவற்றுக்கு அப்பால் உழைப்பு ரீதயாகப் பெண்களின் நிலையை நோக்கினால் அங்கேயும் பாகுபாடுதான்.குடும்பத்தில் பெண்களால் செய்யப்படும் அன்றாட வேலைகளுக்கு எவ்வித மதிப்பும் கணிக்கப்படுவதில்லை.பெண்ணானவள் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்தே தீரவேண்டும் என்ற அடிப்படை குடும்பஅலகின்ஒருவிதியாகஉள்ளது.குடும்பங்களுக்கு வெளியே வந்து பெண்கள் உழைப்பில் ஈடுபடும் போது அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் பெண் என்ற காரணத்திற்காக குறைத்தே வழங்கப்படுகின்றது.நமது நாடு ஒரு விவசாய நாடாக இருப்பதாலும் கிராமப்புறங்கள் பரந்து காணப்படுவதாலும் விவசாய உற்பத்தியில் பெண்களின் உழைப்பு அதிக பங்கை வகிக்கின்றது இன்றும்அவைகண்ணுற்றால்தெளிவாகும்.ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆண்களை விட சிலமடங்கு குறைவானதாகும்.தொழிலாளப் பெண்களுக்கு சம சம்பளம் என்பது போராடிப் பெற்றுக் கொண்ட போதிலும் வேறு பல வழிகளில் அவர்களுக்குரிய சம்பளம் வெட்டிக் குறைக்கப்படுவது நுணுக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் சம்பளம் முதல் சகல நடவடிக்கைகளிலும் இரண்டாம் தரமாக நடத்தப்படுகின்றனர்.குறைந்த ஊதியத்தில் கூடிய வேலை வாங்கப்படுவதற்குப் பெண்களே பயன்படுத்தப் படுகின்றனர்.தற்போதைய பல்தேசியக் கம்பெனிகளில் குறிப்பாக ஆடைத்தொழிற்சாலைகளில் தொண்ணுாறு சதவீதமானவர்கள் பெண்களாகவே உள்ளனர். கிராமப்புறங்களில் இருந்து வேலைதேடி வரும் இவ்இளம் பெண்களின் உழைப்பை இத்தொழிற்சாலைகள் மிகக் குறைந்தசம்பளத்தில் அடிமை கொள்கின்றன.அதனால்சகல இடங்களிலும் பெண்களை வேலைக்கு அமர்த்துவதால் குறைந்தசம்பளமும் குறைந்த சலுகை களுடன் அதிகலாபம்சம்பாதிக்கலாம் என்ற நிலை காணப்படுகின்றது.தொழிற் சாலைகளில் மட்டுமன்றி வர்த்தக நிறுவனங்கள் அலுவலகங்கள் வியாபாரத் தலங்கள் யாவற்றிலும் பெண்களது உழைப்பு கடுமையாகச் சுரண்டப்படுகின்றது.இவற்றுடன் கூடவே பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
குடும்பத்திற்கு உள்ளும் அதற்கு வெளியேயும் பெண்கள் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகின்றநிலை தொடர்த்தான் செய்கின்றன. பலவகையில்.பெண்கள் வியபாரப் பொருட்கள் போன்று பயன்படுத்தப்படுகின்றனர். விளம்பரத்தில், சினிமாவில், சின்னத்திரைநாடகத்தில் இன்னும் பிற துறைகளில் பெண்கள் நுகர்வுக்குரியவர்களாக்கப்படுகின்றனர்.அழகுகாட்டுபவர்களாக,ஆபாசமாக நடிப்பவர்களாக,ஒழுக்கத்தைகெடுப்பவர்களாகப் பெண்களே காட்டப்படுகிறார்கள்.இன்றைய சீரழிவுகளுக்குப் பெண்களே காரணமாக இருக்கிறார்கள் என்று பழமைவாதிகள் கூறிக் கொள்வது ஆணாதிக்க நிலை நின்றேயாகும்.
நமது மதங்களிலும் பண்பாட்டிலும் பழம் பெரும் இலக்கியங்களிலும் பெண்களைத் தெய்வங்களாகப் போற்றிப் புகழ்ந்து கொண்டே பெண்அடிமைத்தனம் வளர்க்கப்பட்ட வரலாற்றைக் காணலாம். அவர்களுக்கு உயர்வான இடம் அளிப்பதற்கல்ல.ஆணாதிக்கப் பாலியல் நுகர்வுக்கானசுரண்டலை நடத்தவேயாகும்.
பெண் ஒடுக்குமுறையை ஆழ்ந்து நோக்கும் போது வர்க்கம்,இனம், சாதியம், நிறம் மதம் போன்றவற்றின் ஊடாகவும் குடும்ப சமூக உறவுகளின் அடிப்படையிலும் பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளை அடையாளம் கண்டுகொள்ளலாம்.பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு ஒற்றைப் பரிமாணக் கண்ணோட்டம் தவறானதாகும்.ஆணாதிக்கம் உட்பட பெண்களைப் பிணைத்திருக்கும்பல்வகைஒடுக்குதல்களையும் அவற்றுக்கான சமூக உறவு வேர்களையும் கண்டு கொள்ளல் வேண்டும். அதன் மூலமே பெண் விடுதலைக்கான மார்க்கத்தைக் கண்டறிய முடியும்.
ஆக ஏகாதிபத்திய இறக்குமதி சரக்கான பெண்ணியம் பின்நவீனத்துவம் என்ற போக்குடையவை பெண் விடுதலைக்கான வழிகாட்டியில்லை, போராட்டகளத்தில் ஒன்றுபட்டு போராடாமல் ஆணாகவும் பெண்ணாகவும் பிரிபதில்லாமல் பெண் ஒடுக்குமுறைக்கு காரணமான இந்த சமூகத்தை மாற்றி அமைபதற்குபதில் ஆண்களே பெண்களுக்கு எதிரானவர்கள் ஆக பெண்கள் ஆணுக்கு எதிராகப் போராட சொல்வது எதிரியான சமூக அமைப்பை காக்க இந்த போராட்ட வடிவம் பயன்படிகிறதே ஒழிய பெண் விடுதலைக்கானவை அல்ல என்பேன்.
l பெண்களின் விடுதலையை தனி ஒரு விடுதலையாக்கிக் கொள்ள முடியாது. அவ்வாறே பெண்கள் மட்டுமே அதில் பங்கு பெறுபவர்களாகவும் இருந்து விடமுடியாது. ஏனைய சமூக ஒடுக்குமுறைகளோடு பெண் ஒடுக்குமுறையானது கொண்டிருக்கும் உறவைக் காணுதல் வேண்டும். சமூக விடுதலைக்கான போராட்டங்களுடன் பெண் விடுதலையும் இணைக்கப்பட முடியும். அப்பொழுதுதான் பெண்களின் விடுதலை உட்பட ஏனைய விடுதலையும் சாத்தியமாகக் கூடிய சமூக அமைப்பு மாற்றம் நிகழ முடியும்.
இன்று உலகமயமாதல் எனும் ஏகாதிபத்திய நிகழ்ச்சித்திட்டம் பல்வேறு தளங்களிலும் முன்தள்ளப்படுகின்றது. அதனைச் சாத்தியப்படுத்துவதற்கான நவீன கருத்தியல்கள் ஏற்கனவே மூன்றாம் உலக நாடுகளில் புகுத்தப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் ஒட்டுமொத்த விடுதலை, வர்க்கப் போராட்டம், அதன் வாயிலான சமூக மாற்றம் அதற்கான மாக்சியக் கோட்பாடு, புரட்சிகரப் போராட்டங்கள் போன்றயாவும் மறுத்து நிராகரிக்கப் படுகின்றன. இவற்றைச் செய்வதற்கே பல நூறுவகையான அரசசாரா நிறுவனங்கள் (NGO) செயல்பட்டுகொண்டுள்ளன. அந்த வகையிலேயேபெண்களின் விடுதலையைத் தனிக் கூறாக்கி ஏனைய சமூகப் பிரச்சனைகளில் சம்பந்தப் படாதவாறு விலக்கிவைக்கப்படுதல்நடைமுறையாக்கிக் கொள்ளப்படுகின்றது.
இதனை பற்றி சற்று விரிவாக ஆராய்வோம்.
வரலாற்று ரீதியாகப் பெண்கள் மீதான ஒடுக்குமுறையை சரியானபடி அடையாளம் கண்டு அதனை சமூகப் புரட்சியுடன் இணைத்து சமூகமாற்றத்தின் மூலம் பெண் விடுதலையை கடந்த நூற்றாண்டில் நடைமுறையாக்கியது மாக்சியம்மட்டுமேயாகும். எதிர்காலத்திலும் கூட மாக்சியக் கோட்பாட்டிற்கு மட்டுமே பெண்களின் விடுதலையை சாத்தியமாக்கக் கூடிய தகுதியும் வலிமையும் உண்டு.
நமது சமூகத்தில் படிந்து இறுகிய நிலையில் இருந்துவரும் பழமைவாத ஆதிக்ககருத்தியல்உடைத்துநொறுக்கப்படல் வேண்டும். அதனின்று பெண்கள் வெளியே வரல் வேண்டும். சிந்தனையில் செயலில் புதிய திசை நோக்கிப் புறப்படல் வேண்டும். பெண்களைப்பிணைத்திருக்கும் விலங்குகள் எவை என்பதை சரியானபடி அடையாளம் காணுதல் வேண்டும். அறிவும் ஆற்றலும் செயலூக்கமும் கொண்ட பெண்கள் முன்னுக்கு வருதல்வேண்டும். பெண்களின் விடுதலைக்கான பாதையில் செயலாற்ற பெண்கள் முன் வராதவரை பெண் விடுதலைபற்றிப்பேசுவதுஅர்த்தமற்றதாகும்.
பெண்களின் விடுதலை என்பது சமூகத்தின் அடித்தள நிலையில் வாழ்ந்து வரும் பெண்களிடத்தில் இருந்தே தொடங்கப்படல் வேண்டும். அவர்கள் உழைப்பு ரீதியாகச் சுரணடப்படுகின்றனர். அதனால் வறுமை, நோய்,கல்விஅறிவின்மை, சுகாதாரச் சீர்கேடு போன்றவற்றோடு குடும்பச் சுமைக்குப் பெண்கள் உள்ளாகி நிற்கிறார்கள். பண்பாட்டு வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியவர்களாகி பழமைவாத மூடநம்பிக்கைகளினால் கட்டுண்டவர் களாகிக் காணப்படுகின்றனர்.
நமது இன்றைய சமூக அமைப்பிலே காணப்படும் ஆணாதிக்க நடைமுறைகள் மற்றும் பண்பாட்டு அம்சங்களை பெண்களே உள்வாங்கி அவற்றோடு இணங்கி அவற்றையே பெண்களுக்குரிய சமூக வாழ்வியலாக்கிக் கொள்ளும் போக்கு முனைப்புடனேயே காணப்படுகின்றது. இவற்றைப் பேணிப் பாதுகாத்து வருவதில் சினிமா, ஒளி-ஒலி ஊடகங்கள் மற்றும் வணிகப் பத்திரிகைகள் தமது பங்கை வழங்குகின்றன. மதக்கருத்துக்கள் பண்பாட்டு நடைமுறைகள் தொடக்கம் ஆபாச பத்திரிக்கைகள் வரை பெண்களை இரண்டாம் தரத்திலும் போகத்திற்குரிய தாகவுமே வைத்து வருகின்றன.
இந்நிலையில் பெண் விடுதலை என்று வெறுமனே மேற்கில் இருந்து சிலரது அகவிருப்புக்கு விரும்பியதை எடுத்து இங்குள்ள பெண்களின் விடுதலைக்குப் பொருத்திக் கொள்ள இயலாது, ஆணாதிக்கத்தை உரத்துக் கூறிக் கொண்டே, பாலியல் பிறழ்வுகளுக்கு நியாயங்கள் சொல்லியபடி அல்லது குடும்பஅலகு அவசியமற்றது என்ற பெண்ணியவாதநியாயங்களுடன் பெண்களை அவர்களுக்குரிய விடுதலைக்காக அணிதிரட்ட முடியாது. இவற்றை நகரங்களில் நல்ல வசதி வாய்ப்போடு இருந்து கொண்டு பெண்ணிய விடுதலை எனமுழங்கிக் கொள்ளலாம்.அவை ஒரு போதும் உண்மையான அர்த்தத்தில் பெண் விடுதலையாகிக்கொள்ள முடியாது. பதிலாக நமது சமூகச் சூழலில் ஏகப்பெரும்பான்மையான பெண்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இருந்து பெண் விடுதலை தொடங்கப்படல் வேண்டும். சமூக வாழ்வில் பெண்கள் பொதுவாகவும் குறிப்பாகவும் பின்தங்கி இருப்பதற்கான காரணங்களை விளங்க வைப்பதன் மூலமே அவர்களது கண்களுக்குத் தெரியாதவாறு பிணைக்கப்பட்டிருக்கும் பெண்ணடிமை விலங்குகளை அடையாளம் காட்ட இயலும். அவ்வாறு நடைமுறை ரீதியாகவும் அறிவு பூர்வமாகவும் கண்டு கொள்ளப்படும்போதே அவற்றை உடைப்பதற்கான சிந்தனையும் அமைப்பு ரீதியாக அணிதிரளும் தேவையும் உணரப்படும்.
பெண் விடுதலை வேண்டும் எனக் கவிதைகள் படைத்து விட்டு கதைகளும் நாவல்களும் எழுதிக் கொள்வதுடன் பெண்கள் பலர் தம்மை மட்டுப்படுத்தி குடும்ப வாழ்வுக்குள் கட்டுப்படுத்திக் கொள்கின்றனர். சமூக அக்கறையில் ஊக்கமுள்ளவர்களாகவும் தீவிரசெயற்பாடுகள் கொண்ட நிலையிலும் இருந்து வந்த பெண்கள் பலர் திருமணத்திற்குப் பின்பு யாவற்றிலும் இருந்து தூர விலகி பழைமைவாத பண்பாட்டுக் குடும்ப சூழலுக்குள் தங்களை இழந்து விடுகின்றனர். இதனால் பெண்விடுதலையை அமைப்பு வழியில் முன்னெடுப்பதற்குரிய தளங்களில் பெண்களே முன்வராத நிலை காணப்படுகின்றது.
பாரதி பாடிய பெண்விடுதலை சமூகத்தில் சாத்தியப்பட வில்லையே எனக் குற்றம் சுமத்துவோர்உள்ளனர்.சோஷலிசத்தின் கீழும் பெண்விடுதலை முழுமை பெறவில்லை என ஆதார விளக்கம் தரும் பெண்நிலைவாதிகள் இருக்கிறார்கள்.இவர்கள் நடுத்தர வர்க்க அல்லது உயர் நடுத்தர வர்க்க நிலை நின்றே இத்தகைய தர்க்கங்களைப் புரிந்து கொள்கிறார்கள்
உலகில் இடம்பெற்ற வரலாற்றுத் திருப்பம் மிக்க போராட்டங்கள் புரட்சிகள் சமூக மாற்றங்களில் பெண்களின் பங்களிப்பு மகத்தானதாக இருந்து வந்திருக்கிறது. நவம்பர் ரசிய புரட்சி, சீனப் புரட்சி,வியட்நாம் கொரிய கியூப புரட்சிகளில் மட்டுமன்றி சுதந்திரப் போராட்டங்களில் தேசிய விடுதலை இயக்கங்களில் பெண்கள் அளித்த பங்களிப்புகள் பாரியன.அங்கெல்லாம் பெண்கள் பால் வேறுபாடின்றி பங்கு கொண்டு சமூகவிடுதலையின் ஊடாகத் தமது விடுதலைக்கும் போராடினர்.நமது நாட்டிலும் கூட இடதுசாரி இயக்கத்தை தோற்றுவிப்பதிலும் அதன் ஊடாக தொழிற்சங்க வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் பெண்களின் பங்கு கணிசமானதாகும்.
ஆதலால் இன்றைய சூழலில் பெண்கள் மேலும் பலவழிகளில் ஒடுக்குதல்களைச் சந்திப்பதற்கான நிலைமைகளே வளர்ந்து வருகின்றன.எனவே அவை அனைத்தையும் எதிர் கொள்ளக் கூடியபெண் விடுதலைக்கான நேரிய சிந்தனையும் உறுதியான செயற்பாடும் தேவையாகின்றது. அத் தேவையை நிறைவு செய்ய பெண்கள் முன்னுக்கு வந்தால் மட்டுமே சாத்தியமாகும். சிந்தனைத் தெளிவுடனும் செயலூக்கத் திறனுடனும் முன்நிலை நோக்கி பெண் விடுதலை இயக்கத்திற்கான முன்னோடிகள் என்போர் வெளிவர வேண்டும்.
l எனவே பெண் விடுதலையை சமூக விடுதலை சமூக மாற்றம் என்பதிலிருந்து பிரித்தெடுத்து தத்தமது அளவுக்கும் மேற்கத்தியமுதலாளித்துவஏகாதிபத்தியத் தேவைகளுக்கும்ஏற்றவிதமாகமுன்னெடுப்பதை மார்க்சியவாதிகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். ஏனெனில் ஏகாதிபத்திய அமைப்பு முறையினதும் அவற்றின் சுரண்டல் ஒடுக்கு முறைகளிலிருந்தும் விடுதலை வேண்டி நிற்கும்மனிதர்களிடையே ஆண்-பெண் முரண்பாட்டையே பிரதானமான ஒன்றாகக் கொள்ளும் போக்கை மார்க்சியவாதிகள்தயவு தாட்சண்யமின்றி எதிர்த்தே நிற்க்க வேண்டும்.
மார்க்சியம்மட்டுமேதான் பெண்ஒடுக்குமுறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்தி உலகப் பார்வையை வழங்கியது.வெறுமனே சுட்டிக் காட்டியது மட்டுமன்றி நடைமுறைப்போராட்டங்கள் புரட்சிகள் வாயிலாக பெண் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்துஆண்பெண் சமத்துவத்தை நாட்டிலும் வீட்டிலும் நடைமுறைப்படுத்த வழிகாட்டியது.சோஷலிசத்தின் கீழ்தான். முன்பு எப்பொழுதும் அனுபவித்திராதசுதந்திரத்தைப் பெண்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர்.அதில் முழுமையோ திருப்தியோ அல்லதுமுடிவான அம்சங்கள் யாவும் நிறைவுடையனவாக இருந்தன என்று கூறிவிட முடியாது.ஆனால்மனிதகுல வரலாற்றில் வர்க்கங்கள் தோற்றம் பெற்ற பின்னான சமூக அமைப்புகளில் சோஷலிச சமூக அமைப்பில் மட்டுமே பெண்கள் தமக்குரிய சமூக சமத்துவத்தை நிலைநாட்டக் கூடியதாக இருந்ததை மறுத்துவிட முடியாது.
ஆக இன்னும் சில கூறுகள் பற்றி அறிவோம்
பண்பாட்டுத் தளத்தில் பெண்
எந்த வகை ஒடுக்குமுறையும் முன்னதாகப் பண்பாட்டுத் தளத்தில் கட்டமைக்கப் பட்டுவிடுகிறது. பெண்களை இரண்டாந்தர நிலையில் வாழப் பழக்கிவிட்டதில் வேறெந்த வழிமுறையைக் காட்டிலும் பண்பாட்டுவடிவம் அதிகம் பங்களித்துள்ளது.தமிழர் சமூகத்தில் அதற்குரிய இடங்களை அலசுவோம்.பல்வேறுவகையான ஒடுக்குமுறைகளைஆளும்வர்க்கம் சுமத்தும் பொழுது உணரப்படாமல் இன்றும்வாழ்வது போலவே,பண்பாட்டின் பேரால் நிகழும் ஒடுக்குமுறை பலநூறுஆண்டுகளாக சகித்துக் கொண்டு ஏற்றுக் கொண்டும் வாழும் வாழ்க்கைமுறையாக இருப்பதை காண்கிறோம்.
அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் தகர்த்துக் கட்டமைக்கும் புதிய பண்பாடு மிகப்பிரதானமாய்ப் பெண்விடுதலை சார்ந்து அமையும்.அது மூடத்தனமான சகித்தலுக்கு அப்பால் கடந்தகாலத்தை விமர்சன பூர்வமாய் அணுகி மரபின்பேரால் ஒடுங்கிக் கிடத்தலை நிராகரிக்கும்.
நமது சமூகம் புராதன குலக்குழு முறையைப் பூரணமாகத் தகர்த்து வர்க்க சமூகமாய்த் தகர்ந்து வரலாற்றைத் தொடக்கவில்லை.
ஒருவர் மார்க்ஸியச் சிந்தனையை உள்வாங்கிக் கொண்டதனால் அவர் எப்போதுமே மார்க்ஸியத்துக்கு முரணற்ற விதமாகவே தனது நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பார் என்று கூற முடியுமா? மார்க்ஸியம் என்பது விஞ்ஞான முறையிலான ஒரு சமூக ஆய்வுமுறை என்பதால், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் என அங்கு எதுவும் இல்லை. மார்க்ஸிய அணுகுமுறை வழிப் பெறப்படும் அறிவு என்பது, சமூக நடைமுறையினின்று ஒதுங்கி நின்று பெறுவதல்ல. ஒருவரது சமூக நடைமுறையும் அனுபவமும் சிந்தனையைப் பதப்படுத்துகின்றன. எனவே,எவரது நிலைப்பாடும் எடுத்த எடுப்பிலேயே சரியானதும் நிரந்தரமானதுமான ஒரு தன்மையைப் பெற இயலாது. ஒரு மார்க்ஸியவாதியின் சிந்தனை அவரைச் சூழவுள்ள சமுதாயத்தின் வரலாற்று வழியிலான சிந்தனையினின்றோ சமகால நடைமுறையினின்றோ விடுபட்ட ஒன்றாக இருக்க முடியாது. அது அவரது உலக நோக்கின் வளர்ச்சிக்கு ஏற்ப மேலும் தெளிவும் உறுதியும் பெறலாம் அல்லது சீரழியலாம். எனவே, ஒரு மாக்ர்ஸியவாதியின் சிந்தனை எப்போதும் சமூகநடைமுறை எனும் சாணைக் கல்லில் தீட்டப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது.
மார்க்ஸியவாதிகளினிடையே பெண்ணுரிமை பற்றிக் கருத்து வேறுபாடுகள் இல்லாமலிருக்க முடியாது.எனினும் வேறு எந்தச் சமூகப் பிரச்சனையும் பற்றிய கருத்து வேறுபாடுகளைப் போன்றனவே சமூக விடுதலை பற்றிய தெளிவான உறுதியான நிலைப்பாட்டிற்கும் பசப்பான மார்க்ஸியத்துக்கும் உள்ள வேறுபாட்டை விலக்கியும், வேறுபாடுகள் இருப்பதற்கு ஒவ்வொருவரது சமூக அனுபவமும் பங்களிக்கிறது. ஆயினும் நேர்மையான எந்தவொரு மார்க்ஸியவாதியும் ஆண்-பெண் சமத்துவம் பற்றி அடிப்படையில் முரண்பட இடமில்லை. நாம் வாழும் சமுதாயத்தின் ஆணாதிக்கத் தன்மையை மழுப்ப இடமில்லை. எந்த அறத்தின் பேராலும் வேறுபாட்டைப் புறக்கணிக்கும் போதே பால் வேறுபாட்டின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும் ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்த அங்கு இடமில்லை.
எந்தவொரு சமூகப் பிரச்சனையின் தீர்விலும் நீண்டகால மார்க்ஸிய இலக்கிற்கும் உடனடியான சூழ்நிலையில் நடைமுறைப்படுத்தக் கூடிய காரியங்களுக்குமிடையே உள்ள “தீவிர இடதுசாரிப்” போக்கும் பிற குழப்பங்களும் உருவாகின்றன. இதன் விளைவாக,உடனடியாகச் செய்யக்கூடியனவற்றைச் செய்ய இயலாது போவது மட்டுமன்றி, நீண்டகால இலக்கும் தவற விடப்படுகிறது. இந்த விதமான சிறுபிள்ளைத்தனம் காலப்போக்கில் ஊசலாட்டமான சிந்தனையாகவும் முடிவில் வலதுசாரிச் சிந்தனையாகிச் சீரழிவதையும் நாம் கண்டுள்ளோம். இது மார்க்ஸியத்துக்கு மட்டுமன்றி சமூக விடுதலைக்கான எந்தச் சிந்தனைப் போக்கிற்கும் உரிய ஒரு பண்பாகும்.
மார்க்ஸியவாதிகள் பற்றிய பொதுவான பெண்ணிய நிலைப்பாடு என்று எதுவும் இல்லை.எனினும்,ஒரு பெண்ணிய வாதி சமூகத்தின் பிற ஏற்றத்தாழ்வுகள் பற்றியும் ஒடுக்குமுறைகள் பற்றியும் அக்கறையுள்ளவராக இருக்கும் போது, முற்போக்கான ஒரு பெண்ணியச் சிந்தனை உருவாகிறது. பிற சமூக முரண்பாடுகளினின்றும் ஆண்பெண் முரண்பாட்டைப் பிரித்து நோக்க இயலாது என்பதோடு ஒரு முரண்பாட்டின் தீர்வு பிற முரண்பாடுகளுடைய தீர்வுடன் நெருக்கமாகவும் இறுக்கமாகவும் தொடர்பு கொண்டுள்ளது என்பதும் தெளிவாகும் போது,மார்க்ஸியத்தையும் சமூக விடுதலைக்கான அதன் செயற்பாட்டையும் நட்புணர்வுடன் பார்க்க இயலுமாகிறது. இதன் மூலம், பெண்ணியவாதமும் பெண்ணுரிமைக்கான போராட்டமும் வலுப்பெறுகின்றன.அதேவேளை,பிற சமூக ஒடுக்குமுறைகட்கு எதிரான போராட்டங்களும் வலுப்பெறுகின்றன.மறுபுறம்,பெண்ணியத்தை ஆண்பெண் முரண்பாட்டுக்குள் குறுக்கிக்கொள்ளும் போது,ஆணைப் பிரதான எதிரியாக்கி,மற்ற முரண்பாடுகளை அலட்சியம்செய்யும் போக்கு எழுகிறது.இது உயர்நடுத்தர வர்க்கம் சார்ந்த பெண்ணியவாதிகளிடையே பொதுவாகக் காணப்பட்டு வந்த ஒன்றாகும். இதற்கான உதாரணங்களை ஒவ்வொரு நாட்டிலும் காணலாம். இப்போக்கின் ஒரு முக்கிய விளைவாக,பெண் விடுதலை என்பதைத் தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணின் சமூக மேம்பாட்டை வைத்து அளக்கும் தன்மையையும் நாம் காணலாம். ஒரு பெண் பிரதமராவதோ,ஜனாதிபதியாவதோ புறக்கணிக்கத்தக்க ஒரு நிகழ்வல்ல. ஆயினும் அது சமூக அளவில் பெண்களது நிலையில் எந்த விதமான மேம்பாட்டின் அளவுகோலும் ஆகாது.
ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினர் அமைச்சராகியோ குடியரசுத் தலைவராகியோ இந்தியாவின் சாதி ஒடுக்குமுறை ஒழியவில்லை. தொழிலாளி வர்க்கத்தவர் அல்லது ஏழை விவசாயக் குடும்பத்தவர் ஆட்சி அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்ததன் மூலம் முதலாளியமோ நிலவுடைமைச் சமுதாயமோஎங்கும் முடிவுக்கு வரவில்லை. ஒரு தமிழர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகினார் அப்பொழுது ஒடுக்குமுறை ஓயந்துவிட்டதா? தமிழர்களுக்கு என்ன பயன் கிடைத்தது?
அதேவேளை தனிப்பட்ட முறையில் பெண்களின் சமூக மேம்பாடும் சமவாய்ப்பும் தேயைான இடங்களில் சிறப்புச் சலுகைகளும் பற்றி நாம் அலட்சியமாக இருக்க முடியாது.
இவற்றை வலியுறுத்தும் அதே வேளை பெண்விடுதலை என்பது மேற்தட்டுப் பெண்களின் மேம்பாடும் ஆணுக்கு நிகரான நிலையும் மட்டுமல்ல என்பதையும் நாம் வலியுறுத்த வேண்டும்.
ஒவ்வொரு துறையிலும் மேல்நிலை கண்ட பெண்களின் எண்ணிக்கையை வைத்துச் சமுதாயத்தின் பெண்கள் நிலையை அளவிடும் ஒரு போக்கை நாம் காணலாம். இதற்கும் அரசாங்க உயர் பதவிகளில் எத்தனை சிறுபான்மைத் தேசிய இனத்தவர் உள்ளனர் என்ற அடிப்படையில் தேசிய இனப்பிரச்சனை பற்றிய முடிவுகட்கு வருவதற்கும் அதிக வேறுபாடு இல்லை. இந்த விதமான உயர்-நடுத்தர வர்க்கப் பார்வை ஒடுக்குமுறைக்கான சமூக அடித்தளத்தைப் பெயர்ப்பது பற்றிக் கவலைப்படுவதில்லை. வர்க்கம்,சாதி, இனம் என்ற முறைகளில் ஆதிக்க நிலையில் இருந்து கொண்டு, பெண்ணியத்தைத் தனியே ஆண்பெண் முரண்பாடாக மட்டுமே வரையறுக்கிறவர்கள் பலர் தமது தனிப்பட்டகாண்கிறோம்.இது எவரதும் தனிப்பட்ட கோளாறு அல்ல. ஒருவரது வர்க்க நிலைப்பாடும் சமூகப் பார்வையுமே அவரது சிந்தனையையும் செயலையும் தீர்மானிக்கின்றன. சமகாலப் பெண்ணியவாதியிடையே உயர்-நடுத்தர வர்க்கப் பெண்களது ஆதிக்கமும் செல்வாக்கும் மிகுதியாக இருப்பதனாலேயே பெண்ணிய இயக்கங்கள் பிற சமூக விடுதலை இயக்கங்களுடன் இணைந்து முன் செல்ல இயலாமலுள்ளது.
“மாக்ஸியம் வர்க்க முரண்பாட்டை முதன்மைப் படுத்துகிறது.எனவே அதற்கு வேறுமுரண்பாடுகள் பற்றிய அக்கறையில்லை” என்பது, முதலாளித்துவ வாதிகள் முதல் பெண்ணிய வாதிகள் வரையிலான பலரும் பிரயோகித்து வந்துள்ள கொச்சைப் படுத்தப்பட்ட விளக்கம் மட்டுமன்றி மார்க்சியத்தை புரிந்துக் கொள்ளாத பொய்யுமாகும். இது தமது ஆளும் வர்க்கச் சார்பை மூடிமறைப்பதற்காகச் சிலரால் முன்வைக்கப்பட்டு வந்துள்ள ஒரு வாதமேயாகும்.இதே வாதம் பலமுனைகளில் காணலாம் சாதிய எதிர்ப்புத் தொடர்பாக தமிழகத்துத் தலித்தியர்களாலும் (அவர்களைப் போல செய்யும் சிலராலும்)முன்வைக்கப்பட்டு வந்துள்ள வாதங்களினின்றும்அதிகம் வேறுபட்டதல்ல.
இவ்வாறான வாதங்களிற் பல,தனிமனிதர்களின் தவறுகளை மிகைப்படுத்தி ஒரு முழு இயக்கத்தினதும் சிந்தனைப் போக்குடன் குழப்புவன. அதினும் முக்கியமாக, மார்க்ஸியத்தக்குத் துரோகம் செய்த சந்தர்ப்பவாத "இடதுசாரி அரசியல் கட்சிகளது நடத்தையை நேர்மையான இடதுசாரிகள் மீதும் மார்க்ஸிய லெனினியச் சக்திகள் மீதும் சுமத்துகிறவையாகும்.
இன்னொருபுறம்,அரசியலைத் தவிர்த்தும் சமூக மாற்றத்தைத் தவிர்த்தும் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்க முயலுகிற அரசுசாரா அமைப்புக்கள் (என்.ஜி.ஓ) மூலம் பிற பாரிய சமூகப் பிரச்சனைகள் போன்று பெண்ணுரிமைப் பிரச்சனையும் கூறு போடப்பட்டு வருகிறது. பெண்ணுரிமைக்கான இயக்கங்கள் வெகுசன இயக்கங்களாகவும் வெகுசனபோராட்டத்துக்கான உந்து சக்திகளாகவும் செயற்படாத போது,அவற்றின் செயற்பாடுகள் தேக்கமடைகின்றன.இதன் விளைவாக,அவை, அவற்றிற் சம்பந்தப்பட்டவர்களது சமூகப்பார்வைக்கேற்பவும் நோக்கங்கட்கு அமையவும் இலகுவான வழிகளைத் தேடுகின்றன. இன்று பல நல்ல சக்திகளது சீரழிவுக்குக் காரணமாகி யுள்ள என்.ஜி.ஓ பெண்ணிய வாதிகளையும் விட்டுவைக்கவில்லை.என்.ஜி.ஒ.க்கள் செய்கிற கெடுதல் பல விதங்களில் முக்கியமானது. தனிமனித மட்டத்தில்,அரசியல், சமூக உணர்வின் அடிப்படையில் ஒருவர் செய்கிறகாரியங்கள் அவர் வாழுகிற சமுதாயத்துக்கு அந்நியமான ஒரு நிறுவன நிதியுதவியில் கூலிக்காகச் செய்யப்படுகின்றன. சாதாரணமாக உழைத்துப் பெறக்கூடிய ஊதியத்திலும் பெரிய தொகைகள் சன்மானமாகக் கிடைப்பதன் விளைவாக,என்.ஜி.ஓ.வையே சார்ந்து வாழும் தேவை காலப்போக்கில் அதிகமாகிறது. என்.ஜி.ஒ.க்களில் தம்மைத் தொடர்புபடுத்திக் கொண்ட பல முன்னாள் இடதுசாரிகளும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் மிகவும் சீரழிந்து அரசியற் செயற்பாட்டைநிராகரித்து என்.ஜி.ஓ.அறப்பணிகள் மட்டுமே சமூகநலனைப் பேண முடியும் என்று வாதிப்பதை நாம் கேட்கலாம். இந்தச் சீரழிவை விட,திட்டமிட்ட முறையிலேயே என்.ஜி.ஒ.க்கள் புரட்சிகர அரசியலை மறுதலிப்பதற்கான மாற்றுச் சிந்தனைகளைப் புகுத்துகின்றனர். அவர்களிடம் கை நீட்டிப் பணம் பெறுகிற ஆய்வறிவாளர்களை விட யார் இதை நன்கு செய்ய முடியும்? என்.ஜி.ஓ.ஆதரவு,அரசியல் நிலை தடுமாறுகிற ஒருவருக்கு முதலில் ஒரு ஊன்றுகோல் போல உதவுகிறது.பிறகு அந்த ஊன்றுகோலின்றி நடக்க முடியாதளவுக்கு ஒருவரது சிந்தனை முடமாக்கப்பட்டு விடுகிறது. போதை மருந்துக்குப் பழக்கப்பட்ட ஒருவர் போல என்.ஜி.ஒ.க்கு அடிமையான ஒருவரால் சுதந்திரமாகச் செயற்பட முடியாமற் போகிறது.
என்.ஜி.ஒ.க்களில் பெண்ணுரிமை அமைப்புக்கள் சார்ந்துள்ளவரையும், அவற்றால் பெண்ணிய அரசியலை அடிப்படையான பிற சமூகப் பிரச்சனைகளுடன்தொடர்புபடுத்திச் செயற்பட முடியாது போய்விடும். அவை வெளியிடும் நூல்களோ அவை நடத்தும் நிகழ்ச்சிகளோ மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களோ ஒரு அலுவலர் தனது பணியைச் செய்கிற தோரணையில் “கடமையைச் செய் (மாதாந்த ஊதியத்தை விட அதிகமாக) பலனை எதிர்பாராதே’ என்ற விதமாகச் சமூக ஈடுபாடின்றி ஈடேறுகின்றன. இந்தவிதமான செயற்பாடு, ஒரு முதலாளியக் கட்சிக்கே ஏற்றதல்ல. சமூக நீதிக்காகச் செயற்பட வேண்டியவர்கள் இப்படியான ஒரு கூலிப் பட்டாளமாகமுடங்கிவிடுவதன் மூலம் அவர்களது போராட்ட வலிமை நிர்மூலமாகி விடுகிறது.
நம் முன்னுள்ள பிரச்சனைகளை நாம் தெளிவாக அடையாளங் காணாமல் சமூக நீதிக்காப் போராட முடியாது. மறுபுறம் நம்முடைய மதிப்பீடுகளும் கொள்கைகளும் சரியானவை என்பதால் மட்டும் யாரும் ஒரு வலிய சக்தியாக வளரமுடியாது. மார்க்ஸியவாதிகள் பற்றியும் மார்க்ஸியம் பற்றியும் திட்டமிட்ட பொய்ப்பிரசாரங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப் படுகின்றன. அவற்றை உடனுக்குடன் திருத்தவும் சரியாயின் கருத்தைத் தெளிவுபடுத்தவும் வேண்டியுள்ளது. தவறான தகவல்களை நம்பி மார்க்ஸியத்தையும் மார்க்ஸியவாதிகளையும் எதிர்க்கின்ற பெண்ணிய வாதிகட்கும் தமது சுய லாபத்துக்காக வேண்டுமென்றே தகவல்களைத் திரிக்கிறவர்கட்குமிடையே நாம் வேறுபாடு காணவேண்டும்.
சமூகவிடுதலை இயக்கங்களை ஆதரிக்க மறுப்பதுடன்,பாலியல் பிறழ்வுகளை ஊக்குவிக்கும் நிலைப் பாட்டைக் கொண்டுள்ளவர்களாகவும்,மார்க்ஸியப் பெண்நிலை வாதிகள் தமது தனித்துவத்தைப் பேணுவதுடன் ஆண்களுடன் இணைந்து தமது பொதுப் போராட்டங்களை ஏற்றுக்கொள்வதுடன் புதிய ஒழுக்கமுறைக்கு வழிகோலுபவர் களாகவும் இருந்து வருகின்றனர்.
தவறான பழமைக்கருத்துக்களில் இருந்து முற்றாக விடுபடாத நமது சமூகத்தில் பெண்விடுதலைக்கு எதிரான கருத்துடையவர்களாகவும் இருக்கின்றனர். உயிரியல், உளவியல், உடற்கூற்றுக் காரணங்கள் எதைக்கூறினும் இரத்தமும், சதையும், உடலும்,உயிரும்,உணர்வும் கொண்ட ஒரு மானிட உயிரி என்ற வகையில் பெண் சுதந்திரமானவள்.ஒடுக்கப்படும் பெண்களுக்கு ஒடுக்குதலுக்கு எதிராகப் போராடும் உரிமை உண்டு. பெண்கள் தமது விடுதலைக்கு தாமே போராட வேண்டும்.
பெண்விடுதலை என்பது சமூகவிடுதலையின் ஒருபகுதி என்றவகையில் பெண்கள் தமது விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை ஒடுக்கு முறைகளுக்கு எதிரான ஏனைய போராட்டங்களுடனும் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.பகுதியும்,முழுமையும் இணையும் இத்தகைய போராட்டங்களினால்தான் முற்றுமுழுதான சமூக விடுதலையை விரைவுபடுத்த முடியும்.
நாம் வாழும் சமூகத்தில் பெண் ஒடுக்குமுறை போன்று பல்வேறு ஒடுக்குமுறைகள் நிலவுகின்றன. ஒரு சமூகத்தின் பொருளாதார அமைப்பு, கல்வி, கலை, கலாசாரம்,மத நம்பிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி இயக்குகின்ற அதிகார நிறுவனம் அரசாகும். அந்த வகையில் அதன்கீழ் உள்ள அனைத்து அடக்குமுறைகளுக்கும் அரசே காரணமாகின்றது.முதலாளித்துவ அரசுகள் எங்கும் வசதி படைத்த ஒரு சாராரின் நலன்களைப் பேணுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
மனித வாழ்வைத் தீர்மானிப்பது எண்களோ,ஆண்டவன் தலையில் எழுதிய எழுத்துக்களோ,மாறும் கிரகங்களோ அல்ல.ஒரு நாட்டின் அரசும்,அதன் ஆளும்முறையும்தான் என்பதே அனுபவப்பூர்வமான உண்மையாகும். மனிதர்களால் உருவாக்கப பட்ட பணமும்,பண்டங்களும்,சுதந்திரப் போட்டிச் சந்தைகளும் அவர்களையே அந்நியப்படுத்தி அநாதைகளாக்கி யுள்ளது. அதிஷ்டத்தையும், அமானுட சக்திகளையும் நம்பி வாழும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. அரசை அமைத்தவர்களும்,அதனைச் சார்ந்தவர்களும் தம்மை அதிஷ்டசாலிகளாகவும்,ஆண்டவனின் ஆசீர்வாதம் பெற்றவர்களாகவும் அன்றிலிருந்து இன்றுவரை கூறிக்கொள்கின்றனர்.ஆளப்படுகின்ற மக்கள் பாவிகளாகவும்,சமூகத்தில் பின்தங்கியவர்களாகவும் கருதப்படுகின்றனர்.எனவே மனிதகுல விடுதலைக்கு வழிகாட்டிய மார்க்சியத் தத்துவம்,மக்களை ஒடுக்கும் அரசுகளை ஒழித்து,மக்கள் தமக்கான அரசுகளை உருவாக்கும் மார்க்கத்தையே காட்டி நின்றது. அந்த வழியிலே நின்று விடுதலைபெற்ற நாடுகளில் பெண் ஒடுக்குமுறை முற்றுமுழுதாக இல்லாவிட்டாலும் பெருமளவு குறைந்துள்ளது.
தொடரும்.....
No comments:
Post a Comment