பெண் விடுதலையும் பல்வேறு போக்குகளும்-2

உலகில் இடம்பெற்ற வரலாற்றுத் திருப்பம் மிக்க போராட்டங்கள் புரட்சிகள் சமூக மாற்றங்களில் பெண்களின் பங்களிப்பு மகத்தானதாக இருந்து வந்திருக்கிறது.நவம்பர்ரசிய புரட்சி, சீனப் புரட்சி,வியட்நாம் கொரிய கியூப புரட்சிகளில் மட்டுமன்றி சுதந்திரப் போராட்டங்களில் தேசிய விடுதலை இயக்கங்களில் பெண்கள் அளித்த பங்களிப்புகள் பாரியன.அங்கெல்லாம் பெண்கள் பால் வேறுபாடின்றி பங்கு கொண்டு சமூகவிடுதலையின் ஊடாகத் தமது விடுதலைக்கும் போராடினர். நமது நாட்டிலும் கூட இடதுசாரி இயக்கத்தை தோற்றுவிப்பதிலும் அதன் ஊடாக தொழிற்சங்க வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் பெண்களின் பங்கு கணிசமானதாகும்.

ஆதலால் இன்றைய சூழலில் பெண்கள் மேலும் பலவழிகளில் ஒடுக்குதல்களைச் சந்திப்பதற்கான நிலைமைகளே வளர்ந்து வருகின்றன.எனவே அவை அனைத்தையும் எதிர் கொள்ளக் கூடியபெண் விடுதலைக்கான நேரிய சிந்தனையும் உறுதியான செயற்பாடும் தேவையாகின்றது. அத் தேவையை நிறைவு செய்ய பெண்கள் முன்னுக்கு வந்தால் மட்டுமே சாத்தியமாகும். சிந்தனைத் தெளிவுடனும் செயலூக்கத் திறனுடனும் முன்நிலை நோக்கி பெண் விடுதலை இயக்கத்திற்கான முன்னோடிகள் என்போர் வெளிவர வேண்டும்.

பெண்களின் விடுதலை என்பது சமூகத்தின் அடித்தள நிலையில் வாழ்ந்து வரும் பெண்களிடத்தில் இருந்தே தொடங்கப்படல் வேண்டும். அவர்கள் உழைப்பு ரீதியாகச் சுரணடப்படுகின்றனர். அதனால் வறுமை, நோய்,கல்விஅறிவின்மை, சுகாதாரச் சீர்கேடு போன்றவற்றோடு குடும்பச் சுமைக்குப் பெண்கள் உள்ளாகி நிற்கிறார்கள்.பண்பாட்டு வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியவர்களாகிபழமைவாத மூடநம்பிக்கைகளினால் கட்டுண்டவர்களாகிக் காணப்படுகின்றனர்.

நமது இன்றைய சமூக அமைப்பிலே காணப்படும் ஆணாதிக்க நடைமுறைகள் மற்றும் பண்பாட்டு அம்சங்களை பெண்களே உள்வாங்கி அவற்றோடு இணங்கி அவற்றையே பெண்களுக்குரிய சமூக வாழ்வியலாக்கிக் கொள்ளும் போக்கு முனைப்புடனேயே காணப்படுகின்றது. இவற்றைப் பேணிப் பாதுகாத்து வருவதில் சினிமா, ஒளி-ஒலி ஊடகங்கள் மற்றும் வணிகப் பத்திரிகைகள் தமது பங்கை வழங்குகின்றன. மதக்கருத்துக்கள் பண்பாட்டு நடைமுறைகள் தொடக்கம் ஆபாச பத்திரிக்கைகள் வரை பெண்களை இரண்டாம் தரத்திலும் போகத்திற்குரிய தாகவுமே வைத்து வருகின்றன.

இந்நிலையில் பெண் விடுதலை என்று வெறுமனே மேற்கில் இருந்து சிலரது அகவிருப்புக்கு விரும்பியதை எடுத்து இங்குள்ள பெண்களின் விடுதலைக்குப் பொருத்திக் கொள்ள இயலாது,

எனவே பெண் விடுதலையை சமூக விடுதலை சமூக மாற்றம் என்பதிலிருந்து பிரித்தெடுத்து தத்தமது அளவுக்கும் மேற்கத்தியமுதலாளித்துவஏகாதிபத்தியத் தேவைகளுக்கும்ஏற்றவிதமாகமுன்னெடுப்பதை மார்க்சியவாதிகள் கடுமையாக எதிர்க்க வேண்டும்.ஏனெனில் ஏகாதிபத்திய அமைப்பு முறையினதும் அவற்றின் சுரண்டல் ஒடுக்கு முறைகளிலிருந்தும் விடுதலை வேண்டி நிற்கும்மனிதர்களிடையே ஆண்பெண் முரண்பாட்டையே பிரதானமான ஒன்றாகக் கொள்ளும் போக்கை மார்க்சியவாதிகள்தயவு தாட்சண்யமின்றி எதிர்த்தே நிற்க்க வேண்டும்.

மார்க்சியம்மட்டுமேதான் பெண்ஒடுக்குமுறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்தி உலகப் பார்வையை வழங்கியது.வெறுமனே சுட்டிக் காட்டியது மட்டுமன்றி நடைமுறைப் போராட்டங்கள் புரட்சிகள் வாயிலாக பெண் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்துஆண்-பெண் சமத்துவத்தை நாட்டிலும் வீட்டிலும் நடைமுறைப்படுத்த வழிகாட்டியது. சோஷலிசத்தின் கீழ்தான். முன்பு எப்பொழுதும் அனுபவித்திராத சுதந்திரத்தைப் பெண்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர்.அதில் முழுமையோ திருப்தியோ அல்லது முடிவான அம்சங்கள் யாவும் நிறைவுடையனவாக இருந்தன என்று கூறிவிட முடியாது.ஆனால் மனிதகுல வரலாற்றில் வர்க்கங்கள் தோற்றம் பெற்ற பின்னான சமூக அமைப்புகளில் சோஷலிச சமூக அமைப்பில் மட்டுமே பெண்கள் தமக்குரிய சமூக சமத்துவத்தை நிலைநாட்டக் கூடியதாக இருந்ததை மறுத்துவிட முடியாது.

ஆக இன்னும் சில கூறுகள் பற்றி அறிவோம்

பண்பாட்டுத் தளத்தில் பெண்

எந்த வகை ஒடுக்குமுறையும் முன்னதாகப் பண்பாட்டுத் தளத்தில் கட்டமைக்கப் பட்டுவிடுகிறது. பெண்களை இரண்டாந்தர நிலையில் வாழப் பழக்கிவிட்டதில் வேறெந்த வழிமுறையைக் காட்டிலும் பண்பாட்டுவடிவம் அதிகம் பங்களித்துள்ளது.தமிழர் சமூகத்தில் அதற்குரிய இடங்களை  அலசுவோம். பல்வேறுவகையான ஒடுக்கு முறைகளை ஆளும்வர்க்கம் சுமத்தும் பொழுது ணரப்படாமல் இன்றும்வாழ்வது போலவே,பண்பாட்டின் பேரால் நிகழும் ஒடுக்குமுறை பல நூறு ஆண்டுகளாக சகித்துக் கொண்டு ஏற்றுக் கொண்டும் வாழும் வாழ்க்கைமுறையாக இருப்பதை காண்கிறோம். 

அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் தகர்த்துக் கட்டமைக்கும் புதிய பண்பாடு மிகப்பிரதானமாய்ப் பெண்விடுதலை சார்ந்து அமையும்.அது மூடத்தனமான சகித்தலுக்கு அப்பால் கடந்தகாலத்தை விமர்சன பூர்வமாய் அணுகி மரபின்பேரால் ஒடுங்கிக் கிடத்தலை நிராகரிக்கும்.

மது சமூகம் புராதன குலக்குழு முறையைப் பூரணமாகத் தகர்த்து வர்க்க சமூகமாய்த் தகர்ந்துவரலாற்றைத் தொடக்கவில்லை. யாதும் ஊரே, யாவரும் கேளிர்என்ற வீரயுக முழக்கம், அனைத்துத் தமிழகத்தையும் ரூர் எல்லைக்குட்படுத்தும் பேரரசு தொடக்கம் இன்றைய உலகமயமாதல் வரையான வரலாற்றுப் போக்குக்கு உதவியுள்ளது.

அங்கே யாதும் ரூரா முடிகிறதாயினும் யாவரும் கேளிர் ஆதல் ஒருபோதும் சித்தித்ததில்லை.ஒரூர் என அனைத்துப் பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் போது வென்றடக்கப்டுவோர் அடங்கிவாழப் பழகிவிட ஏற்ற பண்பாடு ஒன்றை இந்து மதம் வழங்கியிருந்தது. வெளியிலிருந்து தமிழகத்தில் புகுத்தப்பட்ட இந்து மத கோட்பாடுகள் தமிழின் பக்திப் பேரியக்கத்தின் வாயிலாகப் புதிய பரிணமிப்பையும் கண்டிருந்தது.

இந்துப்பண்பாட்டின் விசேட குணாம்சம் புராதனகுக்குழு முறைமையைத் தகர்த்து விடாமல் அவற்றை கட்டிக் காக்கும் திறன் கொண்ட சாதிய கோட்பாடுகளும் அடங்கும்.

புராதனகுக்குழு வாழ்முறையில் இல்லாதஒடுக்குமுறையின் வடிவங்கள் புதிய  கோட்பாடுகள் உழைப்புபிரிவினைகளை சாதியாகப்பரிணமித்தபின் ஒடுக்குமுறைக்கு உதவுவது போலவே; பெண் ஒடுக்குமுறை வளர்ச்சி பெற்றதை காணலாம்.

ருதுவானபின் மாதாந்த இரத்தப்போக்கை தீட்டாகக் கருதவவில்லை புராதன குக்குழு முறையில்; ஆனால் உழைப்புபிரிவினைதொழில்பிரிவினைகள்சாதியாக உருதிரண்ட சமூகத்தில் பெண்ணின் இரத்தப்போக்கை தீட்டாக கருதும்முறையும்அதனைபுனிதப்படுத்தும் முறையும் ஒடுக்குமுறைக் குரிய முதன்மைக் காரணியாக ஆயிற்று.

பேய்மகளிர் என சுடலைசென்று பிணங்களுடன் பல சடங்குகளைச் செய்த பெண் பூசாரிகள் பின்னர் வரலாற்றிலிருந்து மறைந்து,ஸ்தூலவடிவமற்ற,சூட்சுமப் பேய்களாகக் கருதப்படும் நிலை தோன்றியுள்ளது.கைலாசபதியின் பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்எனும் நூல் பேய்மகளிர் இந்த மண்ணில் வாழ்ந்த பெண்பூசாரிகள் என்பதை வலியுறுத்துவது.

அக்காலத்தில் பெருவழக்காகக் காணப்பட்ட தெய்வம் கொற்றவை எனும் பெண். புராதன பொதுவுடமைப் பண்பு நிலவிய பெண்ணுரிமைச் சமூகக் கடவுளர்களில் தாயாக விளங்கியவள் கொற்றவை.

அந்த தாயுரிமைச் சமூக இயல்பின்படி முருகன் கொற்றவை மைந்தனாயே அடையாளம் பெற்றான்.சாதியச் சமூகமாக மாறியபின்னர்,பெண் பூசாரிகளின் சடங்கு உரிமையை மறுத்து வீட்டுக்குள் முடக்கிப் பூசகர்களாக (பிராமணர்களாக பரிணமித்து) உரிமையை அபகரித்து கொற்றவையைஇரண்டாம் நிலைப்படுத்தி ஆணாதிக்கமுழுமுதற்கடவுளை மேலாதிக்கம் கொள்ள வகை செய்தனர்.

பண்பாட்டுத் தளத்தில் பெண் பெற்ற இந்த இரண்டாம் நிலை சமூக வாழ்வில் அடைந்த தோல்வியின் வெளிபாடு தொடர்ந்தும் இரண்டாம் நிலைப்படுத்த இந்தப் பண்பாடே உதவியும் வந்தது. தீட்டுக்குரியவளான பெண் கோயிலினுள் மூலஸ்தானத்தை நெருங்க முடியாத வளாக்கப்பட்டாள்.சாதியச்சமூகம் மக்களின் ஒரு பகுதியைத் தீண்டத்தகாதவராக்கிக் கோயிலுக்கு வெளியே நிறுத்தியதை ஆய்வு செய்யும் பொழுது(எனது ஜாதி அன்றும் இன்றும் நூலில் விரிவாக விலக்கியுள்ளேன்) பெண் சமுகத்தில் குடும்பத்தில் உள்ள உறவுகளும் ஒடுக்குதலும் தீட்டு தீண்டாமையும் ஏதோ ஒருவகையில் சமூக வளர்ச்சி போக்கில் மதப்போர்வையில் மக்களை ஒடுக்க-ஒதுக்க-சுரண்ட பயன்பட்ட மத அடையாளமாகா உள்ளது எனலாம்.

மாதாந்தத் தீட்டுஉள்ளபோது உயர்சாதிப் பெண்களும் மூலஸ்தானமென்ன, கோயில் எல்லையையே தொடமுடியாத தீண்டத்தகாதவர்கள் ஆனார்கள் என்பதுதான் தொடர்ச்சியான புரிதலாக உள்ளது.

த்தகைய பெண்ணடிமைதனம்சாதிய ஒடுக்குமுறையைபேணும் சமூக மாற்றத்தைப் பெறுவதற்கு முன்னர் வீரயுகப் பண்பாடு நிலவியது வரை பெண்ணுரிமை பேணப்பட்டு வந்துள்ளமையைக் காண முடியும்.

காதல் வாழ்வில் பெண்ணுடைய விருப்பம் அவசியப்பட்டிருந்துள்ளது. மடலேறல், வரைபாய்தல் மூலமாகப் பெண்ணை இரக்கத்தின் பேராலாயினும் இணங்கச் செய்ய வேண்டியிருந்தது.விருப்பத்துக் குரியவனுடன் உடன் போக்கில் செல்லப் பெண்ணுக்கு வீரயுகக்காலத்தில் முடிந்திருக்கிறது. பின்னர் பெண்ணின் விருப்பம் கருத்திற் கொள்ளப்படாமலே குடும்பச் சங்கிலியால் பிணைக்கப்படும் பெண்,கற்ப்பு நெறிப்பேணித் தனிச் சொத்தாகஒடுங்கிதன்-குடும்பம்-சமூகத்திற்கு நல்ல பெயரைத் தரவேண்டியவளாகிறாள். அதன் காரணத்தால் அவள் மீது கற்பு திணிக்கப்படுகிறது; கணவன் முன் நாணமும் பிற ஆடவர் முன் வராமையும் போதிக்கப்படுகிறது. இந்தக்கற்பும் நாணமும் முன்னர் வீரயுகப் பண்பாட்டில் வீரத்தின் இலக்கணங்களாக விளங்கியவை.கற்பெனப்படுவது சொற்திறம்பாமையாக இருந்தது.சொல்லைக் காக்க முடியாவிட்டால் உயிரைத்துறந்தாயினும் கற்பைப்பேணுதல் வீரம்.கற்பெனச் சொல்வதாயின் அதனை இருகட்சிக்கும் (ஆண்களுக்கும் பெண்களுக்கும்)உரியதாக்குவோம் எனப் பிரகடனப்படுத்திய பாரதியின் குரல் காதலரிருவர் கருத்தொருமித்து வாழும் புதிய கலாசாரத்தின் பாற்பட்டது.

இத்தகைய இலட்சிய வீறு இன்னும் எதிர்காலக் கனவாகத்தான் நம் மூகம் கட்டமைத்த பழமைப்பண்பாடே இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது.இந்தப் பழைமைப் பண்பாட்டில் பெண் போகப்பொருளாகவும் பிள்ளைபெறும் யந்திரமாகவும் வீட்டு வேலைக்காரியாகவும் இழிவுபடுத்தப்பட்டு வந்துள்ளாள்.

நாயக்கர் காலத்தில் தேவதாசியர் கொஞ்ச நஞ்சம் இருந்த கலை பேண்பவர் என்ற அடையாளங்களையும் இழந்து முற்றிலும் இச்சைப்பொருட்களாய் இழிவுபடுத்தப் பட்டனர். முன்னர் சிற்பக் கலைக் குறியீடுகளாயிருந்த பல அம்சங்கள் நாயக்கர் காலத்தில் காமச் சுவையூட்டும் போகத்துக்குரிய சின்னங்களாக நசிவுற்றன.

இவ்வாறு பொதுமகளிர் என ஒரு பிரிவினர் மிக மோசமாக ஒடுக்கப்பட்ட அதேவேளை இல்லத்தரசிகள் வெறும் பிள்ளைபெறும் இயந்திரங்களாயும் வேலைக்காரிகளாயும்  இழிவுபடுத்தப்படும் நிலை மென்மேலும் இறுக்கமடைந்து வந்திருக்கிறது. எதிர்க் கலாசாரத் தளத்தில் பெரியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன் போன்றோர் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான பன்முகப்பட்ட போராட்டங்களை முடுக்கிவிட்டனர்.ஒடுக்கப்பட்ட பெண்கள் மீதான உயர்சாதியினரின் பாலியல் வக்கிரங்களை அம்பலப்படுத்தும் படைப்புகளை சின்னப்பபாரதியிலிருந்து டானியல் வரை பலர் படைத்தளித்தனர்.

கடந்த நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களில் பெண்ணியம் எழுச்சி பெற்றது. பெண் மீதான ஒடுக்கலின் பன்மைப் பரிமாணங்களைப் பெண்ணியம் வெளிப்படுத்தியிருந்தது.பலபேசாப்பொருட்கள் இலக்கியத் தளத்தில் பேசப்பட்டன. ஆயினும், ஏனைய பல சமூக ஒடுக்கலுக்கு எதிரான பன்முகப் போராட்டங்களுடன் பெண் விடுதலைப் போராட்டத்தை இணைக்காமல் ஒற்றைப் பரிமாணத்தில் பெண்ணியம் பெண்களின் போராட்டத்தை முடுக்கிவிட்டு இறுதி ஆய்வில்பெண்மீதான ஒடுக்குமுறையைப் பேணும் அதிகாரத்துவ சமூக அமைப்பு நிலைபெற உதவுவதாகவே அமைந்து விட்டுள்ளது.

 

இத்தகைய செயல்முறையைத் தூண்டுகிற பின் நவீனத்துவம் சமூகத்தைப் புறநிலை ரீதியாகக் காணும் இயங்கியல்-பொருள் முதல்வாதபோக்கை மறுத்து தடைகளை ஏற்படுத்திவருகிறது.

பின்நவீனத்துவவாதிகளும் பெண்ணிய வாதிகளும் பெண் ஒடுக்கலை ஒற்றைப் பரிமாணத்திலேயே பார்ப்பதைக் கண்டு கொள்ள முடியும்.அந்தந்த நேரத்துக்கு அததை முனைப்பாக்கி ஒற்றைப்பரிமாணப் போராட்டங்களை வளர்க்கவே பின்நவீனத்துவம் தூண்டுகிறது.ஒரு போராட்டத்துக்குஎதிராக மற்றொன்றை அவர்கள் முன்வைப்பர்.இதனால் மக்கள் விடுதலைக்கான வெகுஜன மார்க்கம் முறியடிக்கப்படுகிறது.அத்தகைய குறுகிய நோக்கங்களுக்கு அப்பால் மாக்ஸியம் பிரச்சனைகளைப் பன்மைப் பரிமாணத்தில் அணுகி,அவசியப்படும் அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுத்து,ஒருமுகப்படுத்தி,மக்கள் விடுதலையைச் சாத்தியமாக்க வழிகாட்டுகின்றது.அந்த வெகுஜன மார்க்கத்திற்கு எதிராகவன்றி,ஒன்றுபட்டு உடன் செல்லும் போராட்டமாக பெண்விடுதலைப் போராட்டம் விளங்குவது அவசியம்.அவ்வாறில்லாத அதிதீவிரவாத முழக்கங்கள் இறுதியில் சரணாகதியை அடையும்;அல்லது திட்டமிட்டே ஆளும் கும்பலின் பக்கம் நின்று ஒடுக்குமுறை களுக்கு முண்டுகொடுக்கும்.

மாறாக,பண்பாட்டின் பேரால் மாதர்தம்மை இழிவுசெய்யும் அனைத்துச் சொல்லாடல்கள் கருத்தியல்கள் ஆகியவற்றைத் தகர்த்து,பெண் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களைத் தீர்க்கமான வேலைத்திட்டம் ஒன்றின் அடிப்படையில் வகுத்து,மக்கள் விடுதலையின் தவிர்க்கவியலாத ஒரு பகுதியாக அதனை வளர்த்தெடுப்போம்.ஒரு சமூகத்தின் வளர்ச்சி மட்டத்தை பெண் வகிக்கும் இடத்தைக் கொண்டு மதிப்பிட முடியும்என்பதால்,பெண்விடுதலைக் கருத்தியல் விருத்திசெய்யப்படுவது உடனடிப் பணியாகும்.

==++++++++++++++++++++++++++++++++++++===

தொடரும்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்