அடையாள அரசியலின்

 March 8, 2022

 
தோழர் சிவகாமி அடையாள அரசியலின் பிழைப்புவாதத்துக்குச் சமகால சாட்சி.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் தனியாக நின்றார்.
நடிகர் கார்த்திக்குடன் இணைந்து 2014ல் காங்கிரசுடன் மேடை ஏறினார்.
2016 ல் திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் எம்எல்ஏ க்குப் போட்டியிட்டார்.
2022 உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக கூட்டணியில் நின்று தற்போது பாஜகவுடன் மேடையேறி இருக்கிறார்.
2006 ல் இருந்து இவரைக் கவனித்து வருகிறேன்.
அடையாள அரசியலின் அங்கீகார, பிழைப்புவாத அரசியலுக்கு இவரே சான்று.
தமிழ்த்தேசிய வெறுப்பு, திராவிட வெறுப்பின் எலைட் முகம் இவர்.
"புலிகள் அமைப்பின் பெண்கள்" பற்றி, புதிய தலைமுறை விவாதத்தில் வாய்க்கூசாமல் இவர் கக்கிய விசத்தை, சுப்ரமணியன் சாமி, காங்கிரஸ் கூட, கக்கியதில்லை.
மேடை ஏறிப்பேசும்போது, "விக்டிமைஸ்டு நிலைமையைக்" கையில் ஆயுதமாகக் கத்திபோல் தூக்கி, நிகழ்வு ஏற்பாட்டாளர்களையும் குத்திக்கிழிக்கத் தயங்கமாட்டார்.
விசிகவை விட, புரட்சி பாரதத்துடன் உறவு வைத்திருப்பது, காங்கிரஸ், திமுக, அதிமுக எனத் தாவித்தாவி, இப்போது பாஜக வுடன் மேடை ஏறி இருப்பது வரை தோழர் சிவகாமியின் அரசியல், அடையாள அரசியலின் அதிகாரத் துய்ப்பின் இப்போதைய சான்று.
அறிவுசீவி கூட்டம் என்ற ஒன்றே கிடையாது. ஆனால் புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு, கவர்ச்சிகரமாகப் பேசியும் எழுதியும் வரும் பலரும் இங்கே அறிவுசீவிகளாக வலம் வருகிறார்கள்.
பின்நவீனத்துவத்தின் விளைவு இவர்கள்.
அடையாள அரசியல் தவிர்க்க முடியாதது. ஆனால் இந்த அடையாள அரசியலை அடையாளங்கண்டு மதிப்பிட்டு அரசியலாக விமரிசித்து ஒதுக்கிவிட முடியும். ஆனால் இங்கே இவர்கள் பின்னே அடித்துப்பிடித்து ஓடத்தான் போட்டி நடக்கிறது.
"தனிமனித விடுதலையே, சமூக விடுதலை" என்று இவர்கள் இயங்குவது, தன் சொந்த லாபத்துக்காக.
வலதுசாரிகளின் அரசியல் இந்தத் தாராளவாதிகளுக்கு அரசியல் செய்ய மிகத் தோதான வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. வலதுசாரி அரசியலை மூர்க்கமாக எதிர்ப்பார்கள். ஆனால் இவர்கள் மீது ஒரு சிறு வழக்கு கூட இருக்காது. இது எப்படிச் சாத்தியம்?
கவிஞர்களாக, கட்டுரையாளர்களாக, சூழலியலாளர்களாக, கல்விப்புல என்ஜிஓ களாக, சாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பாளர்களாக, பத்திரிக்கையாளர்களாக, ஆசிரியர்களாக, டாக்குமென்ட்ரி எடுப்பவர்களாக, மேடைப்பேச்சாளர்களாகப் பலரும் இயங்குவார்கள்.
பாஜக எதிர்ப்பு, திமுக ஆதரவு என, பெரிய அரசியல் புலிகளாக வேசம் கட்டுவார்கள். அரசு ஒத்தோடித்தனத்தை ஒருபோதும் கைவிடமாட்டார்கள். இவர்களைச் சுற்றி எப்போதும் ஒருகூட்டம் இருக்கும். இவர்களுக்கு உள்ளேயே சண்டையிட்டும் கொள்வார்கள். அதன்மூலம் வெளிச்சத்திலேயே இருப்பார்கள்.
நிச்சயமாக இது நபர்கள், அவர்களின் வெளிச்சம், அங்கீகாரம் பற்றிய விவகாரம் இல்லை.
இந்த அரசியல், மடைமாற்றும் தடை அரசியல்.
இந்தத் தாராளவாதப் பிழைப்புவாதிகளால் மக்களுக்கான அரசியலைச் செய்யவே முடியாது. ஆனால் அப்படியான ஒரு பிம்பத்தை இவர்கள் கட்டிக்கொண்டே இருப்பார்கள். காட்டிக்கொண்டே இருப்பார்கள்.
இந்த அரசியலைப் புரிந்துகொள்வதும், அதனை அம்பலப்படுத்துவதும் அவ்வளவு எளிதல்ல.
ஆனால் அது காலத்தேவை.
சிவகாமிகள் நம்முடனேயே இருக்கிறார்கள்.
புரிந்துகொள்வோம்!

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்