பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும்-4

இலக்கு 44 ல் வெளியாகியுள்ள கட்டுரைதான் பாட்டாளி வர்க்க புரட்சியும்  ஓடுகாலி காவுத்ஸ்கியும்-4

l   இந்த பகுதி எழுதுவதன் நோக்கம் லெனின் தன்நாட்டில் புரட்சிக்கு முன் தத்துவார்த்த தளத்தில் புரட்சிக்கு எதிரான புரட்சியை காட்டிக் கொடுக்கும் திருத்தல்வாத போக்கை அம்பலப்படுத்தினார் இன்று நமது நாட்டில் அதே காவுத்ஸ்கியவாதம் மேலோங்கியுள்ளது அதனை விவரிக்க இந்த தொடர். ஜனநாயம் என்று பொதுவாக பேசுவதும் பாராளுமன்றம் மூலம் உழைக்கும் மக்களுக்கு ஏதோ செய்வதாக பேசுவதும் உண்மையில் மார்க்சிய வகைப்பட்டதா?

முந்தைய இதழின் தொடர்ச்சி. அரசு பற்றிய லெனின் போதனை:

ஜனநாயகக் குடியரசு என்று சொல்லப்படும் ஒரு அரசும் கூட ஒரு வர்க்கத்தை இன்னொரு வர்க்கம் அடக்குமுறை செய்வதற்கான ஒரு இயந்திரமே தவிர வேறு எதுவும் இல்லை. ஆக ஜனநாயகமான ஒரு முதலாளித்துவக் குடியரசு முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தையும், விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில முதலாளிகள் பெரும் திரளான உழைக்கும் மக்களையும் ஒடுக்கப் பயன்படும் ஒரு இயந்திரமாகவே உள்ளது. ஆக சுதந்திரமான ஒரு குடியரசிலும்கூட முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரமாகவே இருக்கின்றது. மேலும் தற்கால ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளில் ராணுவ வகைப்பட்ட சர்வாதிகாரம் நிறுவப்பட்டிருப்பதையும் காணலாம். இது அரசு பற்றிய ஜனநாயக குடியரசு பற்றிய மார்க்சிய-லெனினியப் போதனை ஆகும்.

தற்கால முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசுகள் அனைத்தும் இந்த அரசு இயந்திரத்தை நீடித்து வைத்திருக்கின்றன. எனவே பொதுவான ஜனநாயகம்என்று ஆரவாரத்துடன் கூக்குரலிடுவது உள்ள படியே முதலாளித்துவ வர்க்கத்தினரையும், சுரண்டலாளர்கள் என்ற முறையில் அவர்களது தனியுரிமைகளையும் ஆதரிப்பதே ஆகும் என லெனின் எடுத்துரைத்தார்.

முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பு முறையின் கீழ் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்துடமை வர்க்கங்களின் எந்த பிரதிநிதி நாடாளுமன்றத்தில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவர் மற்றும் அடக்குவார்என்பதை முடிவு செய்யும் உரிமைகளை அனுபவிக்கின்றன என்ற மார்க்சியப் போதனையை லெனின் திரும்பத் திரும்ப நினைவூட்டினார்.

பாரீஸ் கம்யூன் அனுபவம்:பாரீஸ் கம்யூன் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பு முறை மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வரலாற்று வழியிலான மரபுவழிபட்ட தன்மையையும். வரம்புக்குட் பட்டதான மதிப்பையும் மிகத்தெளிவாகவே எடுத்துக் காட்டுகிறது. முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்புகள் மத்திய காலங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் முன்னேற்றமானவையாக இருப்பினும், பாட்டாளிவர்க்கப் புரட்சி சகாப்தத்தில் இவற்றை அடிப்படையாக (முற்றாக) மாற்றுவதென்பது தவிர்க்க முடியாத தேவையாகும் என்ற வரலாற்றுப் படிப்பினையை தொகுத்துக் கூறி முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகம் வரலாற்று வழியில் காலாவதியாகி விட்டது என்பதை எடுத்துக் காட்டினார்.

கம்யூனானது முதலாளித்துவ அரசு இயந்திரத்தையும் அதிகார வர்க்கம் நீதித்துறை இராணுவம் மற்றும் போலீஸ் இயந்திரம் ஆகியவற்றின் அடித்தளம் வரைக்கும் சென்று அவற்றை நசுக்கவும் முயன்றது. சட்டமியற்றல் மற்றும் நிர்வாக அதிகாரத்திற்கு இடையே பிரிவினை இல்லாத தொழிலாளர் திரளின் ஒரு சுயாட்சி நிர்வாக நிறுவனம் மூலம் மாற்றீடு செய்ய முயன்றது இம்முயற்சிகளில்தான் உண்மையிலே கம்யூனின் முக்கியத்துவம் அடங்கி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டி பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தைப் பற்றிய மார்க்சீய போதனையை எல்லா வகையான சந்தர்ப்பவாதிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாத்தார்.

பாரீஸ் கம்யூனின் அனுபவத்திற்கு பிறகு மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்து வத்தினால் தயார் நிலையில் வைக்கப் பட்டிருக்கும் அரசு இயந்திரத்தை தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக் கொண்டு அதைத் தனது குறிக்கோளுக்குப் பயன்படுத்த முடியாது, அதை தகர்த்தெறிய வேண்டும் என்று எடுத்துரைத்த புரட்சியைப்பற்றிய அடிப்படையான விதியை  லெனின் உறுதியாக ஆதரித்ததுடன் அதை மேலும் செழுமைப்படுத்தினார்.

புரட்சியின் உயிர்நாடி: மார்க்சிய-லெனினிய போதனையின்படி ஒவ்வொரு புரட்சியிலும் உயிர்நாடியான பிரச்சினை அரசு அதிகாரப் பிரச்சினைதான். பாட்டாளி வர்க்கப் புரட்சியில் உயிர் நாடியான பிரச்சினை பாட்டாளிவர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் பொருட்டு, முதலாளித்துவ அரசு அதிகார நிறுவனங்களைப் பலாத்காரத்தின் மூலம் ஒழித்துக் கட்டி, பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுவதும், முதலாளித்துவ அரசை அகற்றி அதனிடத்தில் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதும் ஆகும்.

திருத்தல்வாதிகளுக்கு எதிரான லெனினின் போராட்டம்: பலாத்காரப் புரட்சியையும், பழைய அரசு இயந்திரத்தை உடைத்தெறியும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையும் பெர்ன்ஸ்டைன் எதிர்த்தார். முதலாளித்துவம் சமாதான முறையில் சோசலிசமாக வளர்ச்சி யடையும்என்று அவர் வாதிட்டார். நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் அரசியல் அமைப்பு அழிக்கப்படக் கூடாது என்றும் அதற்கு மாறாக, அது மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் பெர்ன்ஸ்டைன் கூறினார்.

திருத்தல்வாதத்தின்தலைமகன் பெர்ன்ஸ்டைனை *லெனின் பின்வருமாறு விமர்சனம் செய்தார்:
------------------
( * Bernstein (
பெர்ன்ஸ்டைன்) எடுவார்ட் (1850-1932) ஜேர்மன் சமூக-ஜனநாயவாதத்திலும் இரண்டாவது அகிலத்திலும் கடைக்கோடிச் சந்தர்ப்பவாதக் குழுவினரின் தலைவர். திரிபுவாதம்,சீர்திருத்தவாதம் ஆகியவற்றின் சித்தாந்தவாதி.மூலம் பெயர்க்குறிப்பகராதி.) -ர்
----------------------------
மார்க்சியத்தின் நேரடியான புரட்சிகரத் தன்மையைத் தவிர்த்துவிட்டு பிறவற்றை மட்டுமே மார்க்சியமாக பெர்ன்ஸ்டைன் வாதிகள்  ஏற்றுக்கொண்டனர் இப்பொழுதும் ஏற்கின்றனர். பாராளுமன்றப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்துக்கு மட்டுமே பொருந்தும் ஆயுதங்களில் ஒன்று என்று அவர்கள் கருதவில்லை மாறாக பலாத்காரம்”,“கைப்பற்றுதல்”, சர்வாதிகாரம்போன்றவற்றை தேவையற்றதாகச் செய்து விடுகிற முக்கியமான ஒரே போராட்ட வடிவமாக பார்க்கின்றனர்.”

(
லெனின் - இராணுவப் படைகளின் வெற்றியும், தொழிலாளர் கட்சியின் பணிகளும்)

முதலாளித்துவப் பாராளுமன்ற அமைப்பில் வர்க்க முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்தை மேற்கொள்ள இனியும் இடமில்லைஎன்றும் பலாத்காரத்தின் மூலம் அரசைத் தூக்கியெறிய வேண்டும் எனப் பிரசாரம் செய்வது கேலிக்குரியதுஎன்றும் ஓடுகாலி காவுத்ஸ்கி கூறினார்.  “இதுவரை இருந்தது போலவே இப்போதும் நமது அரசியல் போராட்டத்தின்நோக்கம்,நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று, நாடாளுமன்றத்தை அரசாங்கத்தின் எஜமானனாக மாற்றி, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகத்தான் இருந்து வருகிறதுஎன்று ஓடுகாலி காவுத்ஸ்கி வாதிட்டார் அவரை  லெனின் பின்வருமாறு விமர்சனம் செய்தார்.

கயவர்களும் முட்டாள்களும்தான் முதலாளித்துவ நுகத்தடியின் கீழ், கூலி அடிமை என்ற நுகத்தடியின் கீழ் நடத்தப்படும் தேர்தல்களில் பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சிக்கு வரும் என்று நினைக்க முடியும். இது ஒரு மிகப் பெரிய ஏமாற்று அல்லது முட்டாள்தனமாகும். இது வர்க்கப் போராட்டத்துக்கும் புரட்சிக்கும் பதில் பழைய அமைப்பின் கீழ் பழைய அதிகாரத்துக்குஓட்டுப்போட்டுக்  கொண்டிருக்க வேண்டும் என்று போதிக்கிறது.”

(
லெனின் - ‘இத்தாலியன், பிரெஞ்சு, ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுக்கு வாழ்த்துக்கள்’)

பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அனைத்தையும் தழுவிய விதிகளில் ஒன்றான பலாத்காரப்புரட்சி என்ற விதியையும், பழைய அரசு நிறுவனங்களை ஒழித்துக் கட்டுவதின் அவசியத்தையும் ஆளும் வர்க்கங்களின் சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அதனிடத்தில் பாட்டாளிவர்க்கத்தின் தலைமையின் கீழ் ஆளப்படும்வர்க்கங்களின் சர்வாதிகாரத்தை நிறுவுவதின்அவசியத்தையும்முதலாளித்துவச் சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அதனிடத்தில்பாட்டாளிவர்க்கச்சர்வாதிகாரத்தை நிறுவுவதின் அவசியத்தையும், பண்டைய திருத்தல்வாதிகளிலிருந்து நவீனதிருத்தல்வாதிகள் வரை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். சமாதான மாற்றத்திற்கு வாய்ப்புண்டு என்று வாதிடுகின்றனர்.  சமாதான மாற்று பாதைக்காக வாதிட்ட பழைய திருத்தல் வாதிகள் தங்களது வாதத்திற்கு நியாயம் கற்பிப்பதற்காக, 1870- களில் அமெரிக்க இங்கிலாந்து போன்ற நாடுகளில் தொழிலாளர்கள் தங்கள் இலட்சியத்தை சமாதான முறையில் அடைய முடியும்என்று மார்க்ஸ் கூறியதை ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஓடுகாலி காவுத்ஸ்கியைப் பற்றி விமர்சனம் செய்தபோது லெனின் இந்த வாதத்தை மறுத்தளித்தார். அவர் பின்வருமாறு கூறினார்:

சாத்தியப்பாட்டை மார்க்ஸ் ஏற்றுக் கொண்டார்என்ற வாதம் குதர்க்கவாதிகளின் வாதம்.மேற்கோள்களையும்குறிப்புகளையும் வைத்துக்கொண்டு செப்பிடுவித்தை காட்டுகிற ஏமாற்றுப் பேர்வழிகளின் வேலையாகும். முதலாவதாக, இந்த சாத்தியப்பாட்டை ஒரு விதிவிலக்கு என்ற அளவில்தான் அவர் ஏற்றுக் கொண்டார். இரண்டாவதாக, அப்பொழுது ஏகபோக முதலாளித்துவம், அதாவது ஏகாதிபத்தியம் இருக்கவில்லை. மூன்றாவதாக, அப்போது இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்றுள்ளது போல முதலாளித்துவ அரசு இயந்திரத்தில் முழுமையான கருவியாக பணிபுரியக் கூடிய இராணுவம் இருக்கவில்லை

”(லெனின், “பாட்டாளிவர்க்க புரட்சியும் ஒடுகாலி காவுட்ஸ்கியும்”)

நாடாளுமன்றத்தின் அதிகார எல்லை:
நாடாளுமன்ற முறை அரசாங்கம் உள்ள முதலாளித்துவ நாடுகளில், நாடாளுமன்ற அமைப்புகள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப் படுகிறதே ஒழிய, அதிகார வர்க்கமும், இராணுவமும் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை அவை நிலையானவை. இந்த அரசு பொறியமைவு முதலாளி வர்க்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாடாளுமன்ற அமைப்புகளுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் உண்டே ஒழிய அதற்கு செயலாற்றும் அதிகாரம் இல்லை. அரசாங்கத்தின் அலுவல்கள் அனைத்தும் நாடாளுமன்றம் என்ற திரைக்குப் பின்னால் தேர்ந்தெடுக்கப்படாத அந்த நிலையான அமைப்பினால் (பொறியமைவினால்) செய்யப்படுகிறது. புதிதாக ஒரு நாடாளுமன்ற அமைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டதும், அந்த அமைப்பும் கூட அந்த தேர்ந்தெடுக்கபடாத இராணுவ, அதிகார வர்க்க அமைப்பால்தான் பெரும்பாலும் கூட்டப்படுகிறது. தேர்ந்தெடுக்கப் படாத நிலையான அமைப்புகளான அதிகார வர்க்கமும், போலீசும், இரணுவம் ஆகியவைதான் நாடாளுமன்ற அமைப்புகளுக்கான தேர்தலையே நடத்துகிறது. தொடரும்…

++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்