கிராமபுற மக்களை சந்திப்பதும் அவர்கள் சார்ந்த உழைப்பு இன்று வாழும் நிலை பற்றிய தேடுதலில் தொடங்கிய எனது எழுத்துகள், நேற்று ஒரு தோழருடனான விவாதம் இதை எழுத தூண்டியது இவை பல பத்திரிக்கையிலிருந்து நான் சேகரித்த தகவல்களின் அடிப்படையில்.
இன்றைய தேதியில் மொத்த மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் ஊரகப் பகுதியில் வசிக்கிறார்கள் என்கிறது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. எனில், விவசாயத் துறையின் வீழ்ச்சியென்பது 72 சதவீதம் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கக் கூடியது.1991-ம் ஆண்டு துவங்கி 2012 வரையிலான கால அளவில் சுமார் ஒன்றரை கோடி விவசாயிகள் ‘இல்லாமல்’ போயுள்ளனர். கடந்த பதினோரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 77 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு ‘காணாமல்’ போயுள்ளனர். திட்ட கமிஷனின் இந்த அறிக்கை, விவசாயம் சாராத துறைகள் உள்ளிட்டு, பொதுவாகவே புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்காத வளர்ச்சி தொடர்ந்து நீடித்து வருவதை சுட்டிக் காட்டியுள்ளது. முன்பு விவசாயத்தில் ஈடுபட்டிருந்தோர் பலரும் தற்போது பல்வேறு சேவைத் துறைகளுக்கும், விவசாயக் கூலிகளாகவும் இடம் பெயர்ந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.(ஆதாரம்- மத்திய திட்ட கமிஷனின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின்’ (Institute of Applied Manpower research) ஆய்விலிருந்து).
பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்தவர்கள் தங்கள் வாரிசுகளை விவசாயத்தில்ஈடுபடுத்த விரும்பவில்லை.விவசாய நிலம் என்பது அசையாத சொத்து. எனினும் விவசாயம் செய்து வருமானம் பெறுவது கடினம் என்பதால் நிலத்தை விற்காமல் வேறு தொழில் செய்து லாபம் பார்த்து விவசாயத்தில் முதலீடு செய்யும் போக்கு உள்ளது.
டாக்டர்கள், வழக்குரைஞர்கள், பள்ளி ஆசிரியர்கள், கந்து வட்டி கறக்கும் பைனான்சியர்கள், ரியல் எஸ்டேட் செய்வோர் விவசாயத்தை விடாமல் செய்வதுடன் தொழில் லாபத்தை நிலத்தில் முதலீடு செய்வோர் உண்டு.
வெளிநாடுகளில் கணினித் தொழில்நுட்பம் கற்ற மென்பொருள் பொறியாளர்கள் தாங்கள் ஈட்டிய வருமானத்தை விவசாய முதலீடுகளாக மாற்றி இயற்கை வழி விவசாயம் செய்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் வேறு தொழில் மூலம் வருமானத்திற்கு வழியில்லாத விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை.விவசாயம் செய்வதில் இளைஞர் சமுதாயத்திற்கு ஆர்வம் இல்லை எனலாம்.
இப்படி பல்வேறு முரண்பாடுகளை தன்னகத்தே கொண்டுதான் கிராமமும் விவசாயமும் வாழ்கிறது.
நாடு முதலாளித்துவ உற்பத்தியில் ஈடுஇணையற்று முன்னேறிக் கொண்டுள்ளதாக பேசுபவர்கள் உலகமய தாசர்களே!, இவர்களுக்கோ இது குதூகலத்தின் காலமாய் இருக்கிறது. நாட்டின் நுகர்பொருள் கலாச்சாரம் அதிகரித்திருப்பது, ஒரு சிறு பிரிவினருக்கு சேவைத் துறையில் வளமான வேலைகள் கிட்டியிருப்பது, ஒரு புதிய மேல் நடுத்தர வர்க்கம் உதித்தெழுந்திருப்பது, நவீன மின்னணுப் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் சந்தை விரிவடைந்திருப்பது மற்றும் இவற்றின் பயன்பாடு அதிகரித்திருப்பது உள்ளிட்டவைகளைச் சுட்டிக்காட்டும் இவர்கள், புதிய பொருளாதாரக் கொள்கைகளை விதந்தோதுகிறார்கள்.
இவ்வாறாக கொண்டாடப்படும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் சுயேச்சையான பொருளாதாரக் கட்டமைப்பை சிதைத்துள்ளதோடு இதைப் பன்னாட்டு மூலதனத்தோடு நேரடியாக பிணைத்துள்ளது. தற்போது உலகளவில் முதலாளித்துவம் ஒரு கட்டமைப்பு நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் அதன் பாதிப்புகளை இந்தியாவும் எதிர்கொண்டு நிற்கிறது. தற்போது ஆலைத் தொழில்துறையில் 2004-2007 காலகட்டத்தில் இருந்த 14 சதவீத கார்ப்பரேட் முதலீடு இன்னும் 10 சதவீதமாக குறைந்துள்ளது வளர்ச்சி, இணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான முதலாளிகள் சங்கம் (P.H.D Chambers). தொழில்துறை வளர்ச்சி என்பது அனேகமாக பூஜ்ஜியத்தை அடைந்து விட்டது என்று கண்ணீர் வடிக்கிறது அச்சங்கம்.(2021 நாளேட்டிலிருந்து)
திரு பி.சாய்நாத் ஆற்றிய உரையிலிருந்து கீழே சேகரிக்கப் பட்டவை:-
இந்த நாட்டில் யார் யார் விவசாயிகள்?
உண்மையில் இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் விவசாயத்துடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். எப்படி திரைப்படத் துறையில் இருப்பவர்களை எல்லாம் நடிகர்கள் என சொல்ல முடியாதோ, கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களை எல்லாம் மாணவர்கள் என்றழைத்திட முடியாதோ, அது போல விவசாயத் துறையுடன் தொடர்புடைய வர்கள் எல்லாம் விவசாயிகள் அல்ல.
யார் விவசாயி? என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பில் வரையறை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளில் பல்வேறு பிரிவினர் உள்ளனர். இவர்களில் ஒரு வகைதான் பிரதானமான விவசாயி என்பவர்.
எவர் ஒருவர் ஆண்டொன்றுக்கு குறைந்தது 183 நாட்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறாரோ அவர் தான் பிரதானமான விவசாயி ஆவார். இவர் தான் முழுமையாக தன்னுடைய தொழிலில், வாழ்வாதாரத்தில் மற்றும் வருமானத்தில் விவசாயத்தை சார்ந்திருப்பவராகக் கருதப்படுகிறார்.
எவரொருவர் ஆண்டொன்றுக்கு 3 முதல் 6 மாத காலம் விவசாயத்தில் ஈடுபடுகிறாரோ (இதில் 1 முதல் 3 மாத காலம் கேஷூவல் தொழிலாளியாக இருந்திருக்கலாம்) அவர் பகுதிநேர விவசாயி ஆவார்.
இவர்களுக்கு அடுத்து விவசாயத் தொழிலாளர்கள் என்ற பிரிவினர் உள்ளனர். இவர்களையும் பிரதானமான விவசாயத் தொழிலாளி மற்றும் பகுதிநேர விவசாயத் தொழிலாளி என வகைப்படுத்திடலாம்.
இந்நிலையில், நமது மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரதானமான விவசாயிகளையே உண்மையான விவசாயிகளாகக் கருதுகிறது. இதனடிப்படையில் பார்த்தால், இந்திய மக்கள் தொகையில் 8 சதவீதத்திற்கும் குறைவானவர்களே விவசாயிகள் ஆவர். பிரதானமான விவசாயிகளின் எண்ணிக்கையுடன் பகுதிநேர விவசாயிகளின் எண்ணிக்கையை சேர்த்தால் இது 9.9 சதவீதமாக இருக்கும். விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் கூட அது இந்திய மக்கள் தொகையில் வெறும் 23 சதவீதம் மட்டுமே ஆகும்.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியனவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பிரதானமான விவசாயி என்ற அடையாளத்தை இழந்துள்ளனர்.
பிரதானமான விவசாயி என்ற அடையாளத்தை இவர்கள் இழந்ததனை நாம் அறிந்து கொள்வது எப்படி?
மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களில் விவசாயிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிற அதே நேரத்தில் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் விவசாயிகளின் எண்ணிக்கை 13 லட்சம் குறைந்துள்ள அதே நேரத்தில் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 லட்சமாக அதிகரித்துள்ளது. இதிலிருந்து, விவசாயிகள் தங்களது நிலத்தின், வாழ்வின் மீதான கட்டுப்பாட்டினை இழந்துள்ளனர் என்பதனையும், ஓராண்டில் 183 நாட்கள் விவசாயத்தில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளதோடு விவசாயத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். இதன் மூலமாகவே விவசாயிகள் தங்களது அடையாளத்தை இழந்துள்ளனர் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
60, 70, 80-களில் இந்தியாவில் விவசாயிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வந்தது. 1991 மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு இடைப்பட்ட 20 ஆண்டு காலத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை 72 இலட்சம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட இந்த 20 ஆண்டுகளில் விவசாயிகள் என வகைப்படுத்தப்பட்டவர்களில் 150 லட்சம் பேரை நாடு இழந்துள்ளது. அப்படியானால், நாளொன்றுக்கு சராசரியாக 2000 விவசாயிகளை இழந்து வருகிறோம். கடந்த பத்தாண்டுகளைப் பார்த்தோமேயானால், நாளொன்றுக்கு 2035 விவசாயிகளை இழந்துள்ளோம். எனவே, நமது மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் விவசாயிகள் எனச் சொல்வது சரியல்ல.
ஆனால், 50 முதல் 60 சதவீதத்தினர் விவசாயத்துடன் தொடர்புடையவராக உள்ளனர் என்பதே உண்மையாகும். திட்டக் கமிஷனின் புள்ளி விவரத்தின் படி 2005 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் விவசாயத் துறையில் 140 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
கார்ப்பரேட் கரங்களில்இந்திய விவசாய நெருக்கடியை ஒரு வரியில் சொல்வதானால், இந்திய விவசாயத்தை சிறு விவசாயிகளின் கைகளிலிருந்து பறித்து பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திட ஆட்சியாளர்கள் எடுத்துள்ள முடிவே நெருக்கடியின் உள்ளடக்கம் எனக் குறிப்பிடலாம். உதாரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் எவரெல்லாம் விவசாயிகள் என பதிவு செய்யப்பட்டுள்ளனர் எனப் பார்க்கலாம்.
விவசாயத் துறையில் அளிக்கப்படும் கடன், கிராமப்புறக் கடன் ஆகியனவற்றின் கீழ் விநியோகிக்கப்படும் தொகையானது நாட்டிலுள்ள பெருநிறுவனங்களுக்கு கிடைத்திடும் வகையில் இது தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவர் மகாராஷ்டிர மாநிலத்தில் 2010-ம் ஆண்டில் அனைத்து வங்கிகளாலும் விநியோகிக்கப்பட்டுள்ள கடன் குறித்து ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் படி, விநியோகிக்கப்பட்ட மொத்த கடனில் 53 சதம் மும்பை நகரின் மெட்ரோ கிளைகளின் வாயிலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. வெறும் 38 சதம் மட்டுமே அம்மாநிலத்தின் ஒட்டு மொத்த கிராமப்புற பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளின் வாயிலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
மும்பை பெருநகரில் விவசாயிகள் எங்குள்ளனர்?
மும்பை நகரில் வசித்து வரும் முகேஷ் அம்பானியும் அமிதாப் பச்சனும் தான் நவீன விவசாயிகள்.
உத்தரபிரதேசத்தில் தனக்கு நிலம் இருப்பதால் தனக்கு விவசாயக் கடன் அளிக்கப்பட வேண்டும் என மகாராஷ்டிராவில் அமிதாப்பச்சன் விண்ணப்பித்ததைப் பார்த்தோம். இது மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் காணப்படும் நிலையல்ல. ஒட்டுமொத்த தேசத்திலும் இத்தகைய நிலை நிலவுகிறது.
1990-க்குப் பிறகு நாடு முழுவதிலும் உள்ள பல கிராமப்புற வங்கிகளுக்கு அரசு மூடுவிழா நடத்தியுள்ளது. 1993-ல் இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட, ஷெட்யூல்ட், கிராமப்புற வங்கிகள் என அனைத்து வகை வங்கிகளின் 60 சதம் கிளைகள் கிராமப்புறப் பகுதிகளில் செயல்பட்டு வந்தன. ஆனால், 2008ல் இந்த எண்ணிக்கை 48 சதவீதத்திற்கும் குறைவானது. இதன் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாக 2009-10ல் கிராமப்புறப் பகுதிகளில் புதிய கிளைகளை திறப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வங்கி வர்த்தகத் தாளாளர் (கரஸ்பான் டென்ட்) என்ற புதிய நடைமுறையை அமலாக்கத் துவங்கியுள்ளனர். நவீன கந்து வட்டிக்காரர்களான இவர்கள் ஒவ்வொருமுறை கடன் தொகை வழங்கிடும்போது அல்லது கடனுக்கு ஒப்புதல் அளித்திடும்போது சம்மந்தப்பட்ட விவசாயியிடமிருந்து ஒரு தொகையைப் பெற்றுக் கொள்கின்றனர். அளிக்கப்பட வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தகை நடைமுறையால் என்னவெல்லாம் நடக்கிறது என்று கதை கதையாக செய்திகள் கன்னியாகுமரியிலிருந்து வந்துள்ளன.
விவசாயக் கடன் குறித்த புதிய வியாக்கியானம்
சொல்லப்போனால் விநியோகிக்கப்படும் விவசாயக் கடன் தொகையின் அளவு பெருமளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், இந்தக் கடன் தொகையெல்லாம் சிறிய விவசாயிகளைச் சென்றடைவதில்லை.
விவசாயக் கடன் திட்டத்தின் கீழ் பல்வேறு விஷயங்கள் இணைக்கப்பட்டு அவை நியாயப்படுத்தப்படுகின்றன. இவற்றில் சில கேலிக்கூத்துக்களும் நடைபெறுகின்றன.
2010-ம் ஆண்டில் அவுரங்காபாத் நகரைச் சார்ந்த வர்த்தகர்களின் சிறிய குழு ஒன்று ஒரே நாளில் 150 மெர்சிடஸ் பென்ஸ் கார் வாங்கியது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும், லிம்கா சாதனைப் பட்டியலிலும் இடம் பெற்றது. 150 மெர்சிடஸ் பென்ஸ் கார்களை வாங்கிட இவர்கள் செல வழித்தது 66 கோடி ரூபாய்கள் ஆகும். இதில் 44 கோடி ரூபாய் தேசியமயமாக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடமிருந்து 7 சதவீத வட்டிக்கு பெறப்பட்ட கடன் தொகையாகும்.
விவசாயி ஒருவர் டிராக்டர் ஒன்றினை வாங்கிட எத்தனை சதவீத வட்டிக்கு கடன் தொகை கிடைக்கும் என்ற கேள்வியை இவ்வங்கியின் கிளை மேலாளரைக் கேட்ட போது அவர் சொன்ன பதில் 14 சதவீத வட்டி என்பதாகும் ஆடம்பரப் பொருளான மெர்சிடஸ் காருக்கு 7 சதவீத வட்டியில் கடன், அதே நேரத்தில் உற்பத்திக்கு பயன்படுகிற டிராக்டர் வாங்கிட 14 சதவீத வட்டியில் கடன் என்பது வேடிக்கையாக இருக்கிறது. சிறு விவசாயிகளின்பால் இந்திய அரசானது எத்தகைய பகைமை உணர்வைக் கொண்டிருக்கிறது என்பதனை இது காட்டுகிறது. எத்தகைய பாரபட்சமான முறையில் சிறு விவசாயிகள் நடத்தப்படுகிறார்கள் என்பதனை இது விளக்குகிறது.
விவசாயக் கடன் பற்றி இவர்கள் அளிக்கும் புதிய வியாக்கியானத்தின் படி, முகேஷ் அம்பானி சென்னை அண்ணா சாலையில் ஓர் குளிர்பதனக் கிடங்கினைத் திறக்கிறார் என்றால் அதற்கு அவருக்கு 4 சதவீத வட்டியில் விவசாயக் கடன் கிடைக்கும். ஏனென்றால், குளிர்பதனக் கிடங்கில் காய்கறிகளை பாதுகாப்பது என்பது விவசாயம் ஆகும்.
ஆனால், இந்த காய்கறிகளை விளைவிக்கும் விவசாயி அவனுக்குத் தேவையான கடன் தொகை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை நிலவுகிறது.
நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளைச் சந்திக்கின்ற போது அவர்கள் சொல்வதெல்லாம் மிகக் குறைந்த அளவிலான வட்டி விகிதம் அறிவிக்கப்படுகிறது, எனினும் கடன் எதுவும் எங்களுக்குக் கிடைப்பதில்லை என்பதேயாகும்.
நாடு தழுவிய அளவில் 2010-ம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் குறித்த ஆய்வு ஒன்றினை டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சைச் சார்ந்த பேராசிரியர் ராம்குமார் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின்படி, சிறு விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ரூ.5000 முதல் ரூ.2 லட்சம் வரையிலான கடன்களின் எண்ணிக்கை மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2000 முதல் 2008 வரையிலான ஆண்டுகளில் இத்தகைய கடன்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதே நேரத்தில், 10 கோடி ரூபாய்க்கு மேல் அளிக்கப்படும் கடன்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 10 கோடி, 25 கோடி என கடன் தொகை பெறும் விவசாயி யாரையேனும் உங்களுக்குத் தெரியுமா? அப்படி எந்த விவசாயியாவது உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளாரா? அப்படியானால் இந்தக் கடன் தொகையெல்லாம் எங்கே போகிறது என்று பார்த்தால் அவையெல்லாம் விவசாயிகளைச் சென்றடைவதில்லை. மாறாக கார்ப்பரேட் நிறு வனங்களையே சென்றடைகின்றன. விவசாயத்திற்கான இயந்திர உற்பத்திக்கு இக்கடன் தொகைகள் செல்கின்றன. எல்லா வகையான கடன் தள்ளுபடி திட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன.
No comments:
Post a Comment