1. தேசிய மற்றும் காலனிப் பிரச்சனைகள் மீதான பூர்வாங்க நகல் ஆராய்ச்சி உரைகள்.
(கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்காக)
தேசிய மற்றும் காலனிப் பிரச்சனைகள் மீதான பின்வரும் நகல் ஆராய்ச்சி உரைகளைக் கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் விவாதிப்பதற்காகச் சமர்பிக் கிறேன். இந்த சமயத்தில் எல்லாத் தோழர்களையும் குறிப்பாயும் இந்த மிகவும் சிக்கலான பிரச்சனைகளில் எதையேனும் பற்றி ஸ்தூலமான தகவல் வைத்திருக்கும் தோழர்களை மிகவும் சுருக்கமான வடிவில் (இரண்டு அல்லது மூன்று பக்கங்களுக்கு மேற்படாமல்) பிரத்தியோகமாயும் பின்வரும் அம்சங்கள் மீது தமது கருத்துக்கள், திருத்தங் கள், சேர்ப்புகள் மற்றும் ஸ்தூலமான குறிப்புகளைத் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்:
ஆஸ்திரிய அனுபவம்; போலீஸ்-யூத மற்றும் உக்ரேனிய அனுபவம்; அல்சாஸ் - லாரேன் மற்றும் பெல்ஜியம்; அயர்லாந்து;டேனிஷ் - ஜெர்மன், இத்தாலி - பிரெஞ்சு, இத்தாலிய ஸ்லாவ் உறவுகள்; பால்கன் அனுபவம்; கீழ்த்திசை மக்களினங்கள்; அகண்ட இஸ்லாமித்தை எதிர்த்த போராட்டம்; காகசில் உறவுகள்; பஷ்கீர் மற்றும் தாத்தார் குடியரசுகள்; கிர்கீசியா; துருக்கிஸ்தான், அதன் அனுபவம்; காலனிகள்; சீனா - கொரியா - ஜப்பான் 1920, ஜூன் - 5, நி.லெனின்.
(குறிப்பு: அகண்ட இஸ்லாமியம்- இஸ்லாமிய அல்லது முகம்மதிய சமயத்தைப் பின்பற்றிய வரும் எல்லா மக்களினதும் ஒற்றுமையைப் பிரச்சாரம் செய்துவரும் ஒரு சமய அரசியல் சித்தாந்தம் ஆகும். சென்ற நூற்றாண்டின் இறுதியில் கீழ்த்திசை நாடுகளில் உள்ள சுரண்டும் வர்க்கங்களின் மத்தியில் இது விரிவாகப் பரவியிருந்தது. உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லீம்களை எல்லா மெய்நம்பிக்கையாளர்களதும் காலிஃப் என்ற முறையில் துருக்கி சுல்தானுக்குக் கீழ்ப்படியச் செய்வதற்காக இந்த சித்தாந்தம் துருக்கியில் பயன்படுத்தப்பட்டது.
அகண்ட இஸ்லாமியம் மூலம் முகம்மதிய மக்களின் ஆளும் வர்க்கங்கள் தமது நிலைகளை வலுப்படுத்திக் கொள்ள முயன்றன. கீழ்த்திசை நாடுகளில் இருந்த உழைக்கும் மக்களின் புரட்சிகர இயக்கத்தை அடக்கின).1. சமத்துவம் பற்றிய பிரச்சனையைப் பொதுவாகவும் தேசிய சமத்துவத்தைக் குறிப்பாகவும் கருத்தியலாகவும் சம்பிரதாய மாகவும் (பெயரளவாகவும்) முன்வைப்பது என்பது முதலாளித்துவ ஜனநாயகத்தின் சுய இயல்பிலேயே காணப்படுகிறது. பொதுப்பட்ட தனிநபர் சமத்துவம் எனும் வேடத்தின் கீழ் முதலாளித்துவ ஜனநாயகம் சொத்துடமை யாளர் மற்றும் பாட்டாளியின், சுரண்டலாளர் மற்றும் சுரண்டப்படுவோரின் சம்பிரதாயமான (பெயரளவிலான) அல்லது சட்ட முறையிலான சமத்துவத்தைப் பிரகடனம் செய்கிறது, அதன் மூலம் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைப் படுமோசமாக ஏமாற்றுகிறது. எல்லா மனிதர்களும் பரம சமம் என்ற சாக்கில் முதலாளி வர்க்கம், தனே பண்ட உற்பத்தி உறவுகளின் பிரதிபலிப்பாக இருக்கும் சமத்துவம் எனும் கருத்தை வர்க்கங்கள் ஒழிக்கப்படுவதை எதிர்த்த தனது போராட்டத் தில் ஒரு ஆயுதமாக மாற்றுகிறது. சமத்துவம் வேண்டும் எனும் கோரிக்கையின் மெய்யான அர்த்தம், வர்க்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையாக இருப்பதில்தான் அடங்கியிருக்கிறது.
2. முதலாளித்துவ ஜனநாயகத்தை எதிர்த்துப் போராடி அதன் பொய்மையை (போலித் தனத்தை) அம்பலப்படுத்த வேண்டும் எனும் அடிப்படை கடமைக்குப் பொருத்தமான முறையில், முதலாளித்துவ ஆதிக்கத்தை வீழ்த்துவதற்கான பாட்டாளிகளின் போராட்டத் தின் உறுதியான ஆதரவைத் தெரிவிக்கும் அமைப்பு என்ற வகையில், கம்யூனிஸ்டுக் கட்சியானது தேசியப் பிரச்சனையிலும் கூடக் கருத்தியலான சம்பிரதாயமான கோட்பாடுகள் மீது தனது கொள்கையை ஆதாரப்படுத்தக் கூடாது. மாறாக முதலாவதாயும் ஒரு பிரத்தியேக வரலாற்று நிலைமை பற்றிய பிரதானமாயும் பொருளாதார நிலைமைகள் பற்றிய ஒரு துல்லியமான மதிப்பீட்டின் மீது ஆதாரப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, உழைக்கும், சுரண்டப்படும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்களுக்கும், ஆளும் வர்க்கங்களின் நலன்களை உணர்த்துகின்ற ஒட்டுமொத்தமான தேசிய நலன்கள் எனும் பொதுவான கருத்துருவுக்கும் இடையிலான தெட்டத்தெளிவான வேறுபாடு மீது ஆதாரப் படுத்த வேண்டும். மூன்றாவதாக, ஒடுக்கப்பட்ட சார்புநிலையில் உள்ள அடிமைப்படுத்தப்பட்ட தேசங்களுக்கும், ஒடுக்கும் சுரண்டும்சர்வசுதந்திர தேசங்களுக்கும் இடையிலான இதே அளவிலான தெட்டத்தெளிவான வேறுபாடு மீது ஆதாரப்படுத்த வேண்டும். இதன் மூலமே, மிகவும் அற்பமான சிறுபான் மையாக இருக்கும் ஆகச் செல்வம் படைத்த முன்னேறிய முதலாளித்துவ நாடுகள், உலக மக்கள் தொகையின் மிகப்பெரிய பெரும் பான்மையை காலனி மற்றும் நிதித்துறை அடிமைத்தனத்தில் வைத்திருப்பதை (இந்த நிலை நிதி மூலதனம் மற்றும் ஏகாதிபத்திய சகாப்தத்தின் தன்மைக் குறிப்பான அம்சம் ஆகிவிட்டது) மட்டுப்படுத்திக் காட்டும் முதலாளித்துவ ஜனநாயகப் பொய்யுரைகளை எதிர்த்துப் போராட முடியும்.
3. ஜெர்மன் ஜங்கர்களுடனும் (குறிப்பு: ஜங்கர்கள் - பிரபுத்துவ நிலவுடமையாளர்கள்), கெய்சருடனும் செய்துகொள்ளப்பட்டதான பிரேஸ்த் - லிட்டோவ்ஸ்க் உடன்படிக்கையை விடவும் (குறிப்பு: பிரேஸ்த் - லிட்டோவ்ஸ்க் சமாதான உடன்படிக்கை - சோவியத்து ரஷ்யாவுக்கும் ஜெர்மனி கூட்டணி நாடுகளுக்கும் "ஜெர்மனி, ஆஸ்திரியா, - ஹங்கேரி, பல்கேரியா மற்றும் துருக்கி" இடையே 1918 மார்ச் 3 ஆம் தேதி சோவியத்து ரஷ்யாவுக்கும் மிகவும் கடுமையான நிபந்தனைகளுடன் பிரேஸ்த் - லிட்டோவ்ஸ் கியில் செய்துகொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதை எதிர்த்து முன்வந்த டிராட்ஸ்கி மற்றும் "இடதுசாரி கம்யூனிஸ்டுகளின்" கட்சி விரோதப் பிரிவை எதிர்த்து உறுதியான போராட்டம் நடந்தது. லெனின் மேற்கொண்ட மாபெரும் முயற்சிகளினால்தான் ஜெர்மனியு டனான இந்த உடன்படிக்கை கையெழுத் திடப்பட்டது. 1918 நவம்பரில் ஜெர்மனியில் நடைபெற்ற புரட்சி வெற்றிபெற்று முடியாட்சி வீழ்த்தப்பட்ட பின்னர், இந்தக் கொள்ளைக் காரத் தனமான அநீதியான பிரேஸ்த் - லிட்டோவ்ஸ்க் உடன்பாட்டை ரத்து செய்வதாக அகில ரஷ்ய மத்திய நிர்வாகக் கமிட்டி 1918 நவம்பர் 13 இல் அறிவித்தது) அதிகமாக இகழார்ந்த "மேலைய ஜனநாயகங்களின்" வெர்சேய் உடன்படிக்கை (குறிப்பு: வெர்சேய் சமாதான உடன்படிக்கை - முதல் ஏகாதிபத்திய உலகப் போருக்கு (1914 - 1918) முடிவு கட்டிய இந்த உடன்படிக்கை ஒருபுறம் அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டீஷ் சாம்ராஜ்யம், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், போரின் போது இவற்றுடன் கூட்டு கொண்ட அரசுகளுக்கும், மறுபுறம் ஜெர்மனிக்கும் இடையே 1919 ஜூன் 28 இல் கையொப்பமிடப்பட்டது.
முதலாளித்துவ உலகு வெற்றிபெற்றநாடுகளுக்கு இடையே பகிர்ந்துகொள்ளப் பட்டதற்குச் சட்ட அந்தஸ்து அளிப்பதற்காகவும், சோவியத்து ரஷ்யாவை நசுக்குவதற்கும் உலகெங்கும் புரட்சி இயக்கத்தை தோற்கடிப்பதற்கும் ஏற்றவாறு சர்வதேச உறவுகளின் அமைப்பை ஏற்படுத்துவதற் காகவும் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை யே ஆகும் இது.) பலவீனமான தேசங்களுக்கு எதிரான மிகவும் கொடுமையான நீசத்தன மான வன்முறைச் செயல் என்பதை நடை முறையில் நிதர்சனப்படுத்திக் காட்டியதன் மூலம் 1914 - 18 ஏகாதிபத்தியப் போரானது, முதலாளித்துவ ஜனநாயகத் தொடர்களின் பித்தலாட்டத்தை எல்லா தேசங்களுக்கும், உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கும் மிகத் தெளிவாக வெளிக்காட்டியது.
சர்வதேச சங்கமும், ஆட்டான்டு நாடுகளின் (குறிப்பு: சர்வதேச சங்கம் - முதலாவது, இரண்டாவது உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இயங்கிவந்த சர்வதேச நிறுவனம். முதல் உலகப் போரில் வெற்றிபெற்ற அரசுகளால் பாரிஸ் சமாதான மாநாட்டில் 1919 இல் இச் சங்கம் அமைக்கப்பட்டது. 1920 முதல் 1934 வரை யிலான காலப்பகுதியில் சர்வதேசச் சங்கத்தின் நடவடிக்கைகள் சோவியத் யூனியனுக்குப் பகைமையானதாக இருந்தன.
1920 - 21 இல் இது சோவியத் அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய தலையீட்டை ஏற்பாடு செய்த கேந்திரங்களில் ஒன்றாக இருந்தது.
1934 செப்டம்பர் 5 இல் பிரெஞ்சு அரசுறவுத்துறையின் முன்முயற்சியின் பேரில் சர்வதேசசங்கத்தின் 34 உறுப்பு நாடுகள் சோவியத் ஒன்றியம் அச்சங்கத்தில் சேரவேண்டும் என்று அழைப்பு விடுத்தன. சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கமுடன் சோவியத் ஒன்றியம் சர்வதேச சங்கத்தில் சேர்ந்தது. ஆயினும் ஒரு சமாதான முன்னணி யை உருவாக்குவதற்கான சோவியத் ஒன்றியத்தின் முயற்சியை மேலை வல்லரசுகளின் பிற்போக்கு வட்டங்கள் கடுமையாக எதிர்த்தன. சர்வதேச சங்கம் 1946 ஏப்ரல் வரையில் நிலவியது.), (குறிப்பு:ஆன்டான்டு (முக்கூட்டு நேச அணி) - இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜாராட்சி ரஷ்யா அடங்கிய ஏகாதிபத்தியக் கூட்டணி. முதல் உலகப் போரின் போது அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான், இத்தாலி, இதர சில நாடுகள் இதில் சேர்ந்தன.) நாடுகளின் போர்ப் பிற்காலக் கொள்கை முழுவதும் இந்த மெய்ப்பாட்டை மேலும் அதிகத் தெளிவாகவும் தனித்தன்மையுடனும் வெளிக்காட்டின. விளைவாக முன்னேறிய நாடுகளில் உள்ளபாட்டாளிகள் மற்றும் காலனி, சார்பு நாடுகளில் இருக்கும் உழைப்பாளி மக்கள் திரள் இரு தரப்பினரதுமான புரட்சிகரப் போராட்டம் எங்கும் தீவிரமடைந்து வருகிறது.
முதலாளித்துவத்தின் கீழ் தேசங்கள் சமாதானமாயும் சமத்துவமாயும் சேர்ந்து வாழ முடியும் எனும் குட்டிமுதலாளித்துவ தேசியவாதப் பிரமைகளின் வீழ்ச்சியை அவைதுரிதப்படுத்துகின்றன.
4. தேசிய மற்றும் காலனிப் பிரச்சனைகள் மீதான கம்யூனிஸ்டு அகிலத்தின் கொள்கைமுழுவதும், நிலப்பிரபுகளையும் முதலாளி களையும் வீழ்த்துவதற்கான ஒரு கூட்டான புரட்சிகரப் போராட்டத்திற்காக எல்லா தேசிய இனங்களையும் நாடுகளையும் சேர்ந்த பாட்டாளிகள் மற்றும் உழைக்கும் மக்கள் திரளின் ஒரு நெருக்கமான ஒற்றுமையை முதன்மையாயும் சார்ந்திருக்க வேண்டும் என்பது இந்த அடிப்படையான மெற்கோள் களில் இருந்து தொடர்கிறது. ஏனென்றால் இந்த ஒற்றுமை மட்டுமே முதலாளித்துவத்தை எதிர்த்த வெற்றியை உத்தரவாதம் செய்யும், அது இல்லாமல் தேசிய ஒடுக்குமுறை மற்றும் அசமத்துவத்தை (சமத்துவத்துக்கு எதிரானது) ஒழிப்பது என்பது சாத்தியமில்லை.
5. உலக அரசியல் நிலைமை இப்போது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நாள் நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்கிறது. உலக அரசியல் நிகழ்ச்சிகள், சோவியத் ரஷ்யக் குடியரசுக்கு எதிரான உலக முதலாளிகளின் போராட்டம் எனும் தனியொரு மையத்தின் மீது தவிர்க்க முடியாதபடி ஒருமுகப்படுத்தப் பட்டுள்ளன. சோவியத் ரஷ்யக் குடியரசைச் சுற்றிலும் எல்லா நாடுகளிலுமுள்ள முன்னணித் தொழிலாளர்களின் சோவியத் இயக்கங்கள் ஒரு புறமும், காலனிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மத்தியிலான எல்லா தேசிய விடுதலை இயக்கங்கள் மறுபுறமும் தவிர்க்க முடியாதபடி சேர்ந்து நிற்கின்றன. உலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சோவியத் அமைப்பு முறை பெறும் வெற்றியில் மட்டும்தான் தமது விமோசனம் இருக்கிறது என்பதை அவை தமது கசப்பான அனுபவத்தில் இருந்து உணர்ந்து வருகின்றன.
6. இதன் பின்விளைவாக, இப்போது எவரும் பல்வேறு தேசங்களின் உழைக்கும் மக்கள் இடையே மேலும் நெருக்கமான ஒற்றுமை தேவை என்பதன் வெறும் அங்கீகாரம் அல்லதுபிரகடனத்துடன் அமைந்துவிட முடியாது.எல்லா தேசிய மற்றும் காலனி விடுதலை இயக்கங்களும் சோவியத் ரஷ்யாவுடன் மிகவும் நெருக்கமான நேச அணியினை சாதனையாக்கிக் கொள்ள உதவும் ஒரு கொள்கையை பின்பற்ற வேண்டும். இந்த நேச அணியின் வடிவம், ஒவ்வொரு நாட்டின் பாட்டாளிகளின் மத்தியிலுமான கம்யூனிஸ்டு இயக்கம், அல்லது பின்தங்கிய நாடுகள், தேசிய இனங்களின் தொழிலாளர் விவசாயிகள் மத்தியிலான முதலாளித்துவ ஜனநாயக விடுதலை இயக்கம் ஆகிய வற்றின் வளர்ச்சியின் அளவை வைத்து வரையறை செய்யப்பட வேண்டும்.
7. கூட்டாட்சி என்பது பல்வேறு தேசங்களின் உழைக்கும் மக்களின் பூரண ஒற்றுமைக் கான ஒரு இடைக்கால வடிவம் ஆகும். கூட்டாட்சியின் காரிய சாத்தியத் தன்மை, ரஷ்ய சோவியத் ஒன்றிய குடியரசுக்கும் இதர சோவியத் குடியரசுகளுக்கும் (ஹங்கேரிய, பின்னிஷ், மற்றும் லாத்விய குடியரசுகளுடன் கடந்த காலத்திலும், இப்போது அசெர்பை ஜான் மற்றும் உக்ரேனிய குடியரசுகளுடனும்) (குறிப்பு: ஹங்கேரி - 1919 மார்ச் 21 இல் ஹங்கேரியில் சோவியத் அரசதிகாரம் நிலைநாட்டப்பட்டது. ஹங்கேரியில் நடைபெற்ற சோசலிஸ்டுப் புரட்சி சமாதான முறையில் இருந்தது. முதலாளி வர்க்கத்தால் மக்களை எதிர்க்க இயலவில்லை. உள்நாட்டு
வெளிநாட்டு இடர்பாடுகளைத் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் அது புரட்சி வளர்ச்சியடைவதைத் தடுக்கும் கருத்துடன் சில காலம் வலதுசாரி சமூக - ஜனநாயகவாதி களிடம் அரசாதிக்கத்தை ஒப்படைக்க முடிவு செய்தது. எனினும் இதற்கிடையில் ஹங்கேரிய கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு மக்கள் திரளின் மத்தியில் வெகுவாக வளர்ந்து விட்டிருந்தது. கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமை வேண்டும் சமூக -ஜனநாயக அணிகளின் கோரிக்கை மிகவும் விடாப்பிடியாக இருந்தது. இதன் விளைவாக சமூக - ஜனநாயகத் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்த கம்யூனிஸ்டுத் தலைவர் களிடம் கூட்டு அரசாங்கம் அமைக்கும் யோசனையை முன்வைத்தனர். பேச்சுவார்த்தைகளின் போது சமூக ஜனநாயகத் தலைவர்கள் கம்யூனிஸ்டுகள் முன்வைத்த பின்வரும் நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; சோவியத்து அரசாங்கத்தை அமைத்தல், முதலாளிய வர்க்கத்தை நிராயுத பாணியாக்குதல், செஞ்சேனையும் மக்கள் மிலிஷியாவையும் உருவாக்குதல்,நிலப்பிரபுக்களின் எஸ்டேட்டுகளைப் பறிமுதல் செய்தல், தொழில்துறையைத் தேசவுடமை ஆக்குதல், சோவியத் ரஷ்யாவுடன் கூட்டணி சேருதல் இத்தியாதி இதில் உட்படும். இதே சமயம் இரு கட்சிகளையும் ஹங்கேரி சோசலிஸ்டுக் கட்சியாக இணைப்பது குறித்த உடன்பாட்டில் கையொப்பமிடப்பட்டது. இந்த இணைப்பு நடைமுறையின் போது தவறுகள் செய்யப்பட்டன, அவை பின்னால் பாதித்தன. சீர்திருத்தவாத நபர்களை விலக்கித் தனிமைப்படுத்தாமல் இந்த இணைப்பு இயந்திரிக முறையில் நிறைவேற்றப்பட்டது.
1919 ஆகஸ்டு 1 இல் அன்னிய ஏகாதிபத்தியத் தலையீட்டாளர்களின் மற்றும் உள்நாட்டு எதிர்ப்புரட்சியாளர்களின் கூட்டு நடவடிக்கை களின் விளைவாக ஹங்கேரியிலிருந்த சோவியத் அரசதிகாரம் வீழ்த்தப்பட்டது)
(குறிப்பு: பின்னீஷ் - 1918 ஜனவரி இறுதியில் ஆட்சி அதிகாரம் தொழிலாளர் கரங்களுக்கு மாற்றப்பட்ட பிறகு பிரகடனம் செய்யப்பட்ட பின்லாந்தின் சோசலிஸ்டு குடியரசாகும். 1918 மார்ச் 1 ந் தேதி பின்லாந்தின் சோசலிஸ்டு தொழிலாளர் குடியரசுக்கும் ரஷ்ய சோவியத் ஒன்றிய குடியரசுக்கும் இடையிலான உடன்படிக்கை பெத்ரோகிராதில் கையொப்ப மிடப்பட்டது. பூரண சமத்துவ உரிமை, அரசுரிமைக்கு மதிப்பு எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் பரஸ்பரம் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை வரலாற்றி லேயே முதல் தடைவையாக இரு சோசலிஸ்டு அரசுகளுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட உடன்பாடாகும்.
1918 மே மாதத்தில் ஜெர்மன் படைகளின் தலையீட்டின் விளைவாக கடுமையான உள்நாட்டுப் போருக்குப் பிறகு பின்லாந்தில் புரட்சி அடக்கப்பட்டது.).
(குறிப்பு: லாத்விய குடியரசு - லாத்வியப் பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும் ஜெர்மன்ஆக்கிரமிப்பாளர்களையும், எதிர்ப்புரட்சி அரசாங்கத்தையும் எதிர்த்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக 1918 டிசம்பர் 17 ஆம் தேதி இடைக்கால லாத்விய சோவியத்து அரசாங்கம் நிறுவப்பட்டது. அது சோவியத்துகளின் கரங்களில் ஆட்சி அதிகாரத்தை மாற்றி வழங்கும் அறிக்கையை வெளியிட்டது. சோவியத்து ஆட்சியை நிலைநாட்டவும் லாத்விய சோவியத் சோசலிஸ்டுக் குடியரசை வலுப்படுத்தவும் லாத்விய மக்கள் நடத்தி வந்த போராட்டத்துக்கு ரஷ்ய தோழமை உதவிகளைப் புரிந்தது.
1919 மார்ச் மாதத்தில் அமெரிக்கா மற்றும் ஆன்டான்டு ஏகாதிபத்தியவாதிகள் வழங்கியஆயுதத் தளவாடங்களுடன் ஜெர்மன்சைனியத்தின் பிரிவுகளும் வெண்காவலர் களும் சோவியத் லாத்வியாவுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கினார்கள். மே மாதம் சோவியத் லாத்வியாவின் தலைநகரான ரீகாவை பிடித்துக்கொண்டார்கள். 1920 ஜனவரி ஆரம்பத்துக்குள் மூர்கமான சண்டைக்குப் பிறகு லாத்வியாவின் பரப்பு முழுவதையும் தலையீட்டாளர்கள் கைப் பற்றிக் கொண்டுவிட்டார்கள்.) இடையிலான உறவுகளாலும், முன்னாளில் அரசுத்துவமோ சுயாட்சியோ அனுபவத்திராத, ரஷ்ய சோவியத் ஒன்றிய குடியரசில் இருக்கும் தேசிய இனங்கள் விசயத்தில் (உதாரணம் 1919, 1920 இல் முறையே தோற்றுவிக்கப்பட்ட, ரஷ்ய சோவியத் ஒன்றியக் குடியரசில் உள்ள பஷ்கீர் மற்றும் தாத்தார் சுயாட்சிக் குடியரசுகள்) உள்ள உறவுகளாலும் ஒருங்கே நடைமுறையில் ஏற்கனவே நிதர்சனப்படுத் தப்பட்டுள்ளது (உண்மையாக செயல்படுத்தப் பட்டுள்ளது).
8. இந்த விசயத்தில், சோவியத்து அமைப்பு முறை மற்றும் சோவியத் இயக்கத்தினது அடிப்படையில் உதித்தெழுந்து வரும் இந்தப் புதிய கூட்டாட்சிகளை மேலும் வளர்ப்பதும் ஆராய்ந்து அனுபவம் மூலம் சோதிப்பதும் கம்யூனிஸ்டு அகிலத்தின் கடமையாகும். கூட்டாட்சி என்பது பூரண ஒற்றுமைக்கான ஒரு இடைக்கால வடிவம் என்பதை அங்கீகரிக்கும் போது, எப்பொழுதுமே மேலும் நெருக்கமான கூட்டாட்சி ஒற்றுமைக்குப் பாடுபடுவது அவசியம்.
இதன் தொடர்பாக முதலாவதாயும், இராணுவ நோக்கு நிலையில் இருந்து அளவிடற்கரிய வகையில் அதிக வலிமை கொண்ட உலகம் முழுவதன் ஏகாதிபத்திய வல்லரசுகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் சோவியத் குடியரசுகள் மிகவும் நெருக்கமான நேச அணி இல்லாமல் தொடர்ந்து நீடித்து நிலவுவது சாத்தியமல்ல என்பதை மனதில் இருத்த வேண்டும்.
இரண்டாவதாக, சோவியத்து குடியரசுகள் இடையே நெருக்கமான பொருளாதார நேச அணிஅவசியம் என்பதையும், இல்லாவிடில் ஏகாதிபத்தியத்தால் நாசப்படுத்தப்பட்ட உற்பத்தி சக்திகளை மீட்டமைக்க முடியாது. உழைக்கும் மக்களின் வளமான வாழ்வை உறுதிப்படுத்த முடியாது என்பதையும் மனதில் இருத்த வேண்டும். மூன்றாவதாக, ஒரு ஒற்றை உலகப் பொருளாதாரத்தைப் படைத்து உருவாக்கும் திசையிலான போக்கு இருக்கிறது என்பதையும், ஒரு பொதுத் திட்டத்திற்கு ஏற்ற முறையில், ஒருமுற்றிணக்கமான ஒரு முழுமையாக இது எல்லா தேசங்களையும் சேர்ந்த பாட்டாளி களால் ஒழுங்குறுத்தப்படும் என்பதையும் மனதில் இருத்த வேண்டும். இந்தப் போக்கு முதலாளித்துவத்தின் கீழ் முற்றும் தெட்டத் தெளிவாகத் தன்னைத்தானே ஏற்கனவே வெளிக்காட்டிக் கொண்டுவிட்டது. இது சோசலிசத்தின் கீழ் மேலும் வளர்க்கப்பட்டு நிறை முடிவை எய்துவது திண்ணம்.
9. அரசுக்கு அகத்தேயான உறவுகள் துறையில் கம்யூனிஸ்டு அகிலத்தின் தேசியக் கொள்கைதேசங்களின் சமத்துவம் பற்றிய வெறும் சம்பிரதாயமான, முற்றும் பிரகடன உருவிலான,உண்மையில் பொறுப்பு ஏற்காத அங்கீகாரத்தோடு கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. இந்தஅளவோடு முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் - அவ்வாறு இருப்பதாக வெளிப்படையாக ஒத்துக்கொள்வோர் மற்றும் சோசலிஸ்டுகள் என்ற பெயர் சூடியவர்கள் (இரண்டாம் அகிலத்தின் சோசலிஸ்டுகளைப் போன்றவர்கள்) இருசாராரும் - ஒருங்கே நின்று விடுகிறார்கள்.
எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் அவற்றின் "ஜனநாயக" அரசியல் சட்டங்கள் இருந்த போதிலும் தேசங்களின் சமத்துவமும், தேசியச் சிறுபான்மையினருக்கு உத்தரவாதம்செய்யப்பட்டுள்ள உரிமைகளும் இடையறாது மீறப்படுவதைக் காணலாம். இதை கம்யூனிஸ்டுக் கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் அதற்கு வெளியேயும் ஒருங்கே, தமது பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சியில் நிலையுறுதியுடன் கட்டாயம் அம்பலப்படுத்த வேண்டும்.
அத்தோடு, முதலாவதாக, முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் முதலில் பாட்டாளி வர்க்கத்தையும் பிறகு உழைக்கும் மக்கள் திரள் முழுவதையும் ஒற்றுமைப்படுத்துவதன் மூலம், சோவியத்து அமைப்பு முறை மட்டுமே தேசங்களின் உண்மையான சமத்துவத்தை உறுதிப்படுத்தும் ஆற்றல் உடையது என்று இடையறாது விளக்க வேண்டியது அவசியம்.
இரண்டாவதாக, சார்ந்து நிற்கும், உரிமைகள் இழந்த தேசிய இனங்களின் (உதாரணமாக அயர்லாந்து, அமெரிக்க நீக்ரோ இனத்தவர் இத்தியாதி) மத்தியிலும் காலனிகளிலும் நிலவும் புரட்சிகர இயக்கங்களுக்கு எல்லாக் கம்யூனிஸ்டுக் கட்சிகளும் நேரடியான உதவி வழங்க வேண்டும்.
பிரத்தியோக (சிறப்பான) முக்கியத்துவம் உடைய இந்தப் பிந்தைய நிபந்தனைஇல்லாமல், சார்பு நாடுகள் மற்றும் காலனிகள் ஒடுக்கப்படுவதை எதிர்த்த போராட்டமும், அதே போல பிரிந்து செல்வதற்கான அவற்றின் உரிமை அங்கீகரிக்கப்படுவதும் எல்லாம் போலியானவிளம்பரப் பலகைகளே ஆகும். இதற்கு இரண்டாம் அகிலத்தின் கட்சிகளே சான்று ஆகும்.
10. சொல்லளவில் சர்வதேசியத்தை அங்கீகரிப்பதும், செயலில், பிரச்சாரம், கிளர்ச்சி, நடைமுறை வேலையில் அதை குட்டி முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் அமைதிவாதத்தால் மாற்றீடு செய்வதும், இரண்டாம் அகிலத்தின் கட்சிகள் மத்தியில் மட்டுமின்றி, அதில் இருந்து விலகிக் கொண்ட கட்சிகளின் மத்தியிலும், இப்போது கம்யூனிஸ்டு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் கட்சிகளின் மத்தியிலும் கூட, அடிக்கடி நடைபெறுவது மிகவும் சகஜமாகி விட்டது. இந்தத் தீமையை எதிர்த்து, மிகவும் ஆழ வேரூன்றி விட்டதான குட்டி முதலாளித்துவ தேசியத் தப்பெண்ணங் களை எதிர்த்துமான போராட்டத்தின் அவசர அவசியம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஒரு தேசிய சர்வாதிகாரத்தில் (அதாவது தனி ஒரு நாட்டில் நிலவி உலக அரசியலை நிர்ணயிக்கும் ஆற்றல் இன்றி) இருந்து ஒரு சர்வதேசிய சர்வாதிகாரமாக (அதாவது குறைந்தபட்சம் சில முன்னேறிய நாடுகளை ஈடுபடுத்தியதான ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக, ஒட்டுமொத்தமாக உலக அரசியலை நிர்ணயிக்கும் ஆற்றல் பெற்றதாக) மாற்றும் கடமையின் ஏறுமுக மான அவசரம் முன்னைவிட பெரிதாக காட்சி அளிக்கிறது. தேசங்களின் சமத்துவத்தை அங்கீகரிப்பதை மட்டுமே சர்வதேசியவாதம் என்று குட்டி முதலாளித்துவ தேசியவாதம் பிரகடனம் செய்கிறது. இதற்கு மேல் எதுவும் இல்லை.இந்த அங்கீகாரம் முற்றிலும் சொல்லளவிலேயே எனும் மெய்விவரம் ஒருபுறம் இருக்க, குட்டி முதலாளித்துவ தேசியவாதம் தேசிய சுயநலன்களை அப்படியே பேணி வைத்திருக்கிறது.
ஆனால் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதம் முதலாவதாக, எந்த ஒரு நாட்டிலுமான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள் உலகுதழுவிய அளவிலான அப்போராட்டத் தின் நலன்களுக்கு கீழடங்கியதாக இருத்தல் வேண்டும் எனவும், இரண்டாவதாக, முதலாளி வர்க்கத்தை எதிர்த்து வெற்றி ஈட்டும் ஒரு தேசம் சர்வதேச மூலதனத்தை வீழ்த்துவதற்காக மிகப் பெரிய தேசியத்தியாகங்களைச் செய்ய இயல வேண்டும், அவற்றை விருப்புடன் செய்யத் தயாராக வேண்டும் எனவும் கோருகிறது.
இவ்வாறாக, ஏற்கனவே முழுமையான முதலாளித்துவ நாடாக இருந்து, பாட்டாளி களின் முன்னணிப் படையாக மெய்யாகவே செயல்படும் தொழிலாளர் கட்சிகளைக் கொண்ட நாடுகளில், சர்வதேசியவாதக் கருத்துரு மற்றும் கொள்கையானது சந்தர்ப்பவாத, குட்டி முதலாளித்துவ அமைதிவாதப் போக்கில் புரட்டப்படுவதை எதிர்த்த போராட்டமே முதன்மையான முக்கியமான கடமையாகும். 11. நிலப்பிரபுத்துவ அல்லது தந்தைவழி மற்றும் தந்தைவழி விவசாயி உறவுகள் மோலோங்கி நிலவும், மேலும் அதிகமாகப் பின்தங்கி நிற்கும் நாடுகள், தேசிய இனங்கள் சம்பந்தப் பட்டவரை, பின்வருபவனவற்றை மனதில் இருத்துவது குறிப்பாயும் முக்கியமானது.
முதலாவதாக, இந்த நாடுகளில் இருக்கும் முதலாளித்துவ ஜனநாயக விடுதலை இயக்கத்துக்கு எல்லா கம்யூனிஸ்டுக் கட்சி களும் உதவ வேண்டும்; இந்தப் பின்தங்கிய தேசம் காலனி முறையில் அல்லது நிதித் துறையில் எந்த நாட்டைச் சார்ந்ததாக இருக்கிறதோ, அந்த நாட்டின் தொழிலாளர்கள் மிகவும் செயலூக்கமான ஆதரவும் தர வேண்டுவது அவர்களது பிரதானக் கடமையாகும்; இரண்டாவதாக, பின்தங்கிய நாடுகளில் செல்வாக்குள்ள சமயகுருமார் மற்றும் இதர பிற்போக்கு, மத்தியகால நபர்களை எதிர்த்துப் போராட வேண்டுவது அவசியம்; மூன்றாவதாக, அகண்ட இஸ்லாமியம், இதுபோன்ற போக்குகளை எதிர்த்துப் போராடுவது அவசியம். இவை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை கான்கள், நிலப்பிரபுக்கள்,முல்லாக்களின்நிலைகளைவலுப்படுத்திக் கொள்வதற்கான முயற்சியுடன் இணைக்க முயல்கின்றன; நான்காவதாக, பின்தங்கிய நாடுகளில் நிலப்பிரபுக்கள், பேரளவான நிலவுடமை முறை, நிலப்பிரபுத்துவ முறையின் எல்லா வெளிப்பாடுகள் அல்லது மீதமிச்சங்களையும் எதிர்த்துப் போரிடும் விவசாயிகள் இயக்கத்துக்கு விஷேச ஆதரவு தர வேண்டுவது அவசியம். மேலும் மேற்கு ஐரோப்பிய கம்யூனிஸ்டு பாட்டாளி வர்க்கத்துக்கும், கீழ்த்திசையில் காலனிகளில், பொதுவாக பின்தங்கிய நாடுகளில் நிலவும் புரட்சிகரமான விவசாயி இயக்கத்துக்கும் இடையே சாத்தியமான அளவு மிகவும்நெருக்கமான நேச அணியினை நிறுவுவது மூலம்விவசாயிகள் இயக்கத்துக்கு மிகவும் புரட்சிகரமான தன்மையை வழங்க முயல வேண்டும். முதலாளித்துவத்துக்கு முந்தியதான உறவுகள் மேலோங்கி இருக்கும் நாடுகளில் "உழைக்கும் மக்களின் சோவியத்துகள்" போன்றவற்றை நிறுவுவது மூலம் சோவியத்து அமைப்பு முறையின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பிரயோகிக்க சகல முயற்சி களும் மேற்கொள்ளப்பட வேண்டுவது பிரத்தியோகமாயும் அவசியம்.
ஐந்தாவதாக, பின்தங்கிய நாடுகளின் முதலாளித்துவ ஜனநாயக விடுதலை இயக்கப்போக்குகளுக்கு ஒரு கம்யூனிஸ்டு வண்ணம் தர நடத்தும் முயற்சிகளை எதிர்த்து உறுதியுடன்போராட வேண்டுவது அவசியம். இந்த நாடுகளில் பெயரில் மட்டுமின்றி மெய்யாகவே கம்யூனிஸ்டாக இருக்கப் போகும் வருங்கால பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் சக்திகள் ஒன்றுதிரட்டப்படும், தமது சொந்த தேசங்களில் முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்களை எதிர்த்த போராட்டத்தின் தங்கள் விசேஷப் பணி களைப் புரிந்துகொள்வதற்குரிய பயிற்சி தரப்படும் எனும் நிபந்தனையின் மீது மட்டுமே காலனி மற்றும் பின்தங்கிய நாடுகளின் முதலாளித்துவ ஜனநாயக தேசிய இயக்கங்களுக்கு கம்யூனிஸ்டு அகிலம் ஆதரவு அளிக்க வேண்டும். காலனி மற்றும் பின்தங்கிய நாடுகளில் முதலாளித் துவ ஜனநாயகத்துடன் கம்யூனிஸ்டு அகிலம் தற்காலிக கூட்டணி அமைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதனுடன் இணைந்து விடக் கூடாது. எல்லா சந்தர்ப்ப சூழல்களிலும் அது மிகவும் கரு வடிவில்இருந்தபோதிலும் கூட பாட்டாளி வர்க்க இயக்கத்தின் சுதந்திரத்தை உறுதியாகப் பற்றி நிற்க வேண்டும்;ஆறாவதாக, அரசியல் ரீதியில் சுதந்திரமான அரசுகள் என்ற வேடத்தில் அவற்றை பொருளாதார ரீதியிலும் நிதி விசயத்திலும் இராணுவத் துறையிலும் முழுமையாகச் சார்ந்து நிற்கும் அரசுகளை நிறுவும் பான்மையில் ஏகாதிபத்திய வல்லரசுகள் திட்டமிட்டுச் செல்படுத்திவரும் மோசடியை எல்லா நாடுகளின், குறிப்பாக பின்தங்கிய நாடுகளின் பரவலான உழைக்கும் மக்கள் திரள் மத்தியில் இடையறாது விளக்கிக்கூறி அம்பலப்படுத்துவது அவசியம். இன்றுள்ள சர்வதேச நிலைமைகளின் கீழ், ஒரு சோவியத் குடியரசுகளின் ஒன்றியத்தில் மட்டுமின்றி வேறு வழியில் பலவீனமான சார்பு நாடுகளுக்குவிமோசனம் கிட்டாது.12. காலனிகளையும் பலவீனமான தேசிய இனங்களையும் ளகாதிபத்திய வல்லரசுகள் காலங்காலமாக ஒடுக்கி வருகின்றன. இந்த ஒடுக்குமுறையால் ஒடுக்கப்பட்டுவரும் நாடுகளின் மக்கள் திரளின் மத்தியில், ஒடுக்கும் தேசங்களுக்கு எதிரான பகைமை உணர்ச்சி நிரம்பி வழிகிறது,
அதோடு பொதுவாக இந்த தேசங்கள் பாலும், இவற்றின் பாட்டாளிகளிடமும் கூட அவநம்பிக் கை எழும்பியுள்ளது. இந்தப் பாட்டாளிகளின் அதிகாரப் பூர்வமான தலைவர்களில் பெரும் பான்மையினர் 1914 -19 இல் சோசலிசத்துக்கு இகழத்தக்க முறையில் துரோகம் செய்தார்கள். "நாட்டை காப்பது" என்பதை, காலனிகளை ஒடுக்கவும் சார்பு நாடுகளை நிதித் துறையில் ஒட்டக் கறக்கவும் ஆன தமது "சொந்த" முதலாளிகளின் "உரிமையைக்" காப்பதற்குப் பயன்படும் ஒரு சமூக - தேசிய வெறி முகமுடியாக்கினர். இவை எல்லாம் முற்றிலும்
நியாயமாகவே ஏற்பட்ட இந்த அவநம்பிக் கையை மேலும் அதிகரித்தன. மறுபுறத்தில், ஒரு நாடு எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப் பின்தங்கியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறுவீத விவசாய உற்பத்தி, தந்தைவழி மரபுகள், தனிமையின் பிடிப்பு அதிக வலுவாக இருக்கின்றது. இது தவிர்க்க முடியாத வகையில் மிகவும் ஆழமான குட்டி முதலாளித்துவ தப்பெண்ணங்களுக்கு, அதாவது தேசிய தன்னாணவம், தேசியக் குறுமனப் பாங்குக்கு விஷேச வலுவையும் விடா உறுதியையும் தருகிறது. இந்த தப்பெண்ணங்கள் நிச்சயமாயும் மிகவும் மெதுவாகவே மறைந்தொழியும். காரணம் அவை முன்னேறிய நாடுகளில் ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் மறைந்த பின்னரே, பின்தங்கிய நாடுகளின் பொருளாதார வாழ்க்கையின் அடித்தளம் முழுவதும் அடிப்படையாக மாற்றம் அடைந்த பின்னரே மறைய முடியும். எனவே ஆக நெடுங்காலமாக ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டி ருக்கும் நாடுகள், தேசிய இனங்களின் மத்தியில் நிலவும் தேசிய உணர்வுகளின் மீதமிச்சங்களை தனிப்பட்ட எச்சரிக்கையு டனும் கவனத்துடனும் கருதிப் பார்க்க வேண்டுவது அனைத்து நாடுகளின் வர்க்க உணர்வுடைய கம்யூனிஸ்டுகளின் கடமை யாகும். அதோடு இந்த அவநம்பிக்கையையும் இந்தத் தப்பெண்ணங்களையும் மேலும் துரிதமாக வென்று அகற்றும் நோக்கத்துடன் ஒரு சில சலுகைகளை வழங்குவதும் இதே அளவுக்கு அவசியமானது. எல்லா நாடுகளையும் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த, உலகம் முழுவதிலுமுள்ள பாட்டாளிவர்க்கமும், அதைப் பின்பற்றும் உழைக்கும் மக்கள் திரளும் சுயவிருப்பமுடன் நேச அணிக்காகவும் ஒற்றுமைக்காகவும் பாடுபடா விட்டால், முதலாளித்துவத்துக்கு எதிரான பூரண வெற்றியை சாதிக்க முடியாது. - லெனின்.
1920 ஜூன் 5 இல் எழுதப்பட்டது. 1920 ஜூலை 14 இல் மூன்றாவது கம்யூனிஸ்டு அகிலம் சஞ்சிகை, இதழ் 12 இல் வெளியிடப்பட்டது.
இந்த கட்டுரையிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1. முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் பெயரளவிலான ஜனநாயகத்தைப் பற்றி பேசி சொத்துடையவர்கள் மற்றும் சொத்தில்லாதவர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை அதாவது வர்க்கப் பகைமையிலான வேறுபாடுகளை பாதுகாத்துக்கொண்டே சமத்துவம் பற்றி கருத்தியலாக வாய்ச்சவுடால் அடிக்கிறார்கள். ஆகவே மனிதர்களுக்கு இடையே உண்மை யான சமத்துவமானது வர்க்க வேறுபாடு களை அதாவது ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதன் மூலமே அடைய முடியும். சீர்திருத்தங்களின் மூலம் சமத்துவம் என்று பேசுவது நம்மை முட்டாள்களாகக் கருதி ஏமாற்றும் வேலையாகும்.
2. போலியான ஜனநாயகமான முதலாளித் துவ ஜனநாயகத்தின் பொய்யான ஏமாற்றைஎதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராடி உண்மையான ஜனநாயகமான உழைக்கும் வர்க்க ஜனநாகத்தை உருவாக்க வேண்டும்.
3.தேசங்களின் விடுதலைக்கான போராட்டத் தில் பெயரளவிலான தேசம் பற்றிய முதலாளித்துவ ஏமாற்றுப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தி அந்த தேசம் கடந்து கொண்டிருக்கும் வரலாற்று கட்டத்தையும் அதன் பொருளாதார நிலமைகளையும் பற்றி விரிவாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் அந்த தேசப் பிரச்சனைக்கான தீர்வை முன்வைத்து மக்களைத் திரட்டிப் போராட வேண்டும்.
4. உழைக்கும் வர்க்கமும் சுரண்டும் வர்க்கமும் ஒன்றிணைந்த தேசத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கான தேசத்திற்கும் இடையி லான வேறுபாட்டை கம்யூனிஸ்டுகள் எப்போதும் மறந்துவிடக் கூடாது. நாம் எப்போதும் தேசியப் பிரச்சனையிலும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தே இருக்க வேண்டும்.5. இதேபோல் ஒடுக்கும் தேசங்களுக்கும் ஒடுக்கப்படும் தேசங்களுக்கு இடையிலான வேறுபாட்டையும் நாம் மறந்துவிடக் கூடாது. நாம் எப்போதும் ஒடுக்கப்படும் அடிமைப் படுத்தப்படும் தேசங்களுக்கு ஆதரவாகவே இருக்க வேண்டும்.
6. உலக மக்களில் பெரும்பான்மையாக உள்ளவர்களை புதிய காலனி ஆதிக்கத்தின் மூலமும், நிதித்துறையில் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு சில செல்வம் படைத்த நாடுகளின் ஆதிக்கத்தை மூடிமறைக்கும் முதலாளித்துவ ஜனநாயகப் பொய்யுரைகளை எதிர்த்து நாம் போராட வேண்டும்.
7. ஒருசில செல்வம் படைத்த நாடுகள் அப்போது பல பின்தங்கிய நாடுகளை காலனிகளாக நேரடியாக அடிமைப்படுத்தி ஆண்டார்கள். ஆனால் இப்போது நிதித்துறையில் இந்த நாடுகளை அடிமைப் படுத்தி ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பல நிபந்தனைகளின் மூலம் கடன் கொடுத்து இந்த நாடுகளின் அரசியல் சுதந்திரத்தைப் பறிக்கிறார்கள்.
8. ஜெர்மன் ஜங்கர்களுடன் சோவியத்து அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் மற்றும் இரண்டாம்உலக யுத்தம் முடிந்தவுடன் வெற்றிபெற்ற ஏகாதிபத்திய நாடுகள் தோல்வியடைந்த நாடான ஜெர்மனியிடம் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் எல்லாம் ஏகாதிபத்திய வாதிகளின் நேர்மையற்ற, பலவீனமான நாடுகளை அடிமைப்படுத்தும் நீசத்தனமான ஒப்பந்தங்கள் என்று லெனின் அம்பலப் படுத்தினார். அதேபோலவே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இந்தியா போன்ற நாடுகளிடம் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களும் இந்தியா போன்றபலவீனமான நாடுகளை அடிமைப் படுத்துவதாகவே உள்ளன. (உயர் கல்வியை ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகள் நடத்துவதற்கு இந்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள்).
9. இது போன்ற ஒப்பந்தங்கள் மூலம் ஏகாதிபத்தியங்கள் தங்களது நோக்கங்களை அடைய முடியாத நிலை ஏற்படும் போது, அவர்கள் யுத்தங்களின் மூலமே அவர்களது நோக்கங்களை அடைவதற்கு முற்பட்டனர். அதேபோலவே இப்போதும் யுத்தங்களை நடத்திக்கொண்டு இருக்கின்றனர். (அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஆப்கான் மீதும் ஈராக் மீதும் நடத்திய போர்கள் மற்றும் ரஷ்ய ஏகாதிபத்தியவாதிகள் உக்ரேன் மீது நடத்தும் போர்).
10. முன்னேறிய நாடுகளான பிரான்ஸ் போன்ற நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் மற்றும்ஏகாதிபத்திய சார்பு நாடுகளிலுள்ள (இந்தியா) ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக விவசாயிகளின் போராட்டங்கள் உலகெங்கும் தன்னியல்பாக நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால் இந்தப் போராட்டங்களுக்கு லெனினியத்தைப் பின்பற்றும் கட்சிகள் தலைமை கொடுக்கவில்லை.
மாறாக இந்தப் போராட்டங்களை விவசாயிகளின் சங்கங்கள், மற்றும் தொண்டு நிறுவனங்கள் தலைமையில் நடக்கிறது.
11.இன்றைய ஏகாதிபத்தியக் காலக்கட்டத்தில், முதலாளித்துவத்தின் கீழ் தேசங்களுக்கு இடையில் அல்லது நாடுகளுக்கு இடையில் சமாதானம் நிலவ முடியும் என்று சிலர் கருதுகிறார்கள். அவ்வாறு கருதுபவர்கள் எப்படி ஒரு தேசத்தில் முதலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்கம் என்ற பிரிவு முதலாளித்துவத்தில் நீடிக்கிறதோ, அதேபோலவே நாடுகளுக்கு இடையில் செல்வம் மிகுந்த ஒடுக்கும் நாடுகள் என்றும் வளர்ந்துவரும் ஒடுக்கப்பட்ட நாடுகள் என்று பிளவுகளும் நீடிக்கிறது என்பதை புரிந்துகொள்ள மறுக்கின்றனர், அல்லது மூடிமறைக்கின்றனர்.
12. தேசிய விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி, ஏகாதிபத்திய காலனி அல்லது புதிய காலனிய எதிர்ப்பு போராட்ங் களாக இருந்தாலும் சரி, நிதிமூலதன ஆதிக்கத்தை எதிர்த்தப் போராட்டத்தில் இந்த ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் அனைத்து தேசிய இனங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு இடையில் ஒரு நெருக்கமான ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தை நெஞ்சில் ஏந்தி நீண்டகாலத் திட்டம் வகுத்து ஒவ்வொரு நாட்டு கம்யூனிஸ்டுகளும் செயல்பட வேண்டும்.
13. இத்தகைய ஒற்றுமையை சாதிப்பதன் மூலமே உலக முதலாளித்துவத்தை எதிர்த்தப்போராட்டத்தில் உழைக்கும் வர்க்கமானது வெற்றிபெற முடியும்.
14.அன்றைய உலக நிலமைகளில் ஏகாதிபத்தியவாதிகள் புதிதாக உருவாகிய ரஷ்ய சோவியத்து அரசை வீழ்த்துவதற்கு கங்கணம்கட்டி செயல்பட்டார்கள். ஆனால் சோவியத்து ரஷ்யாவுக்கு ஆதரவாக உலகிலுள்ள பல நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் அணிதிரண்டு இருந்தார் கள், காலனி நாடுகளிலுள்ள தேசவிடுதலை இயக்கங்களும்சோவியத்து ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்தனர். இவ்வாறு ஆதரவாக நின்றவர்கள் அனைவரும் சோவியத்துஅமைப்பு முறையின் மூலம் மட்டுமே தங்களுக்கு விமோசனம் என்று உணர்ந்து இருந்தனர். இந்தச் சூழல்தான் ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்கும் அதன் தொடர்ச்சிக் கும் அடிப்படையாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு உலகில் மூன்றில் ஒருபகுதியில் சோசலிசம் வெற்றிபெற்று, உலகிலுள்ள ஏகாதிபத்திய நாடுகள் பலவீனமடைந்திருந்தது. இந்தச் சூழலை லெனினிய முறையில் உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுகள் பயன் படுத்த தவறிவிட்டனர். அதற்கு காரணம் இந்த கம்யூனிஸ்டுகள் லெனினியத்தை கைவிட்டு விட்டு குருஷேவைப் பின்பற்றியதே ஆகும். ஆகவே இப்போதும் இவர்கள் குருஷேவின் வழியை கைவிட்டுவிட்டு லெனினிய வழியைப் பின்பற்றுவதன் மூலமே உழைக்கும் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க முடியும்.
15. ஒடுக்கப்பட்ட தேசங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு இடையில் ஏகாதிபத்தி யங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமை வேண்டும் என்று பெயரளவில் பேசு வதோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு தேசங்களிலும் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக தேசங்களின் விடுதலைக்காக நடக்கும் இயக்கங்களோடு உணர்வுப் பூர்வமான ஒற்றுமையைஏற்படுத்துவதற்காக கம்யூனிஸ்டுகள் பாடுபட வேண்டும்.
16. ஒவ்வொரு நாடுகளிலும் நடக்கும் உண்மையான ஜனநாயகப் போராட்ட இயக்கங்களையே நாம் இந்த ஒற்றுமைக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டும். போலியான ஜனநாயகவாதிகளை நாம் அடிப்படையாகக் கொள்ளக் கூடாது.
17. பல்வேறு தேசிய மக்களுக்கு இடையிலான ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டதே கூட்டாட்சி ஆகும். இத்தகைய கூட்டாட்சியை முதன் முதலில் உருவாக்கிய நாடு ரஷ்ய சோசலிச சோவியத்து ஒன்றியமாகும். இத்தகைய கூட்டாட்சியின் மூலமே தேசங்களின் முழுமையான ஐக்கியத்தை நாம் அடைய முடியும்.
18. கூட்டாட்சி என்பது பல்வேறு தேசங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் பூரணமானஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான ஒரு இடைக்கால வடிவம் ஆகும். எப்படி வர்க்கங்களற்ற கம்யூனிச சமூகத்தைப் படைப்பதற்கு இடையிலான தற்காலிகமான அரசு வடிவமாக சோசலிசம் இருக்கிறதோ, அதே போலவே தேசங்களுக்கு இடையில் பூரணமான ஒற்றுமை ஏற்படுத்துவதற்கான இடைக்கால அரசு வடிவமாக தேசங்களின் கூட்டரசு இருக்கிறது.இந்தியாவில் இருப்பது போன்று தேசங்களை கட்டாயமாக இணைத்து ஒற்றை ஆட்சி சர்வாதிகார முறையின் மூலம் இங்குள்ள தேசங்களை ஒருபோதும் ஒன்றுபடுத்த முடியாது.
ஆனாலும் இந்தியாவை ஆளும் பெருமுதலா ளிகளுக்கும் அவர்களுக்கு பின்புலமாக இருக்கும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களுக்கும் இந்தியாவிலுள்ள தேசங்களைச் சேர்ந்த மக்களின் ஒற்றுமை முக்கியம் இல்லை. மாறாக இந்தியாவிலுள்ள செல்வ வளங்களை சூறையாடுவது இங்குள்ள மக்களை சுரண்டி கொள்ளை யடிப்பது மட்டுமே அவர்களது நோக்கமாக உள்ளது. அதற்காகவே இங்குள்ள தேசங்களின் அடிப்படை உரிமைகளை கட்டாயமாகப் பறித்துக்கொண்டு ஒற்றை சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறார்கள்.
(உதாரணமாக ஜி.எஸ்.டி வரிக்கொள்கையின் மூலம் இங்குள்ள தேசிய அரசுகள் அதாவது மாநிலங்கள் செயல்படுவதற்குத் தேவை யான நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கான உரிமைகளை பறித்து மாநிலங்களை அடிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள், மேலும் இந்த மாநில மக்கள் உழைப்பால் உருவாக்கிய நிதிகளைக் வரி என்ற பெயரில் கைப்பற்றி ஏகாதிபத்தியங்களிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவது என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களுக்கு கப்பம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்).
19. இந்த கூட்டரசுகளை ரஷ்யாவில் உருவாக்கி ஒவ்வொரு தேசங்களுக்கும் விரும்பினால் சேர்ந்திருக்கவும், விரும்பி னால் பிரிந்து போவதற்கும் அவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டதன் காரணமாகவே அங்குள்ள தேசங்கள் ரஷ்ய சோவியத்து ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றுவிட்ன என்றும் ஆகவே தேசங்களுக்கு இத்தகைய சுயநிர்ணய உரிமை கொடுக்கக் கூடாது என்று சிலர் வாதாடுகிறார்கள். ஆனால் ரஷ்யாவில் குருஷேவ் காலத்தில் அங்கு சோசலிசக் கொள்கைகள் கைவிடப்பட்டதால் அதற்கு எதிரான முதலாளித்துவ கொள்கைகளைப் பின்பற்றி தேசங்களை சுரண்டியதால்தான் அந்த தேசங்கள் ரஷ்ய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றன என்ற உண்மையை இவர்கள் பார்க்க மறுக்கின்றனர் அல்லது மூடிமறைக் கின்றனர். இதன் மூலம் இந்த தேசங்களை எவ்வளவு சுரண்டினாலும், அடிமைப்படுத் தினாலும் இந்த தேசங்கள் பிரிந்து செல்லக்கூடாது என்ற கொள்கையாளர் களாகவே இவர்கள் இருக்கிறார்கள். இதன்மூலம் இவர்கள் முதலாளித்துவத்தையும் அதன் சுரண்டல் மற்றும் அடக்குமுறையை ஆதரித்து கம்யூனிச விரோதிகளாகவே இருக்கிறார்கள். ஒரு கணவன் தினம் குடித்துவிட்டு வந்து மணைவியை கொடுமைப்படுத்தினாலும் கல்லானாலும் கணவன் என்று கருதி அந்தக் கணவனிடம் மணைவி அடிமைப்பட்டே வாழ வேண்டும் என்ற பிற்போக்குவாதிகளைப் போன்றவர் களே இவர்கள்.
20. தேசங்கள் விரும்பினால் பிரிந்து செல்வதற்கு உரிமை வேண்டும் என்ற போதிலும். பல தேசங்கள் விரும்பி ஒன்றுபட்டு இருப்பதில் பல சாதகங்கள் இருக்கிறது. ஒரு தேசத்துக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அந்த தேசத்துக்குள்ளே கிடைக்காது, ஆகவே அவர்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்க் வேண்டுமானால் அந்த தேசங்களுக்கு வெளியே உள்ள தேசத்தின் ஆதரவு அவசியமாகும். இது போன்ற தேவை களுக்காக பல தேசங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டரசின் கீழ் இருப்பது ஒவ்வொரு தேசங்களுக்கும் சாதகமானதே. மேலும் ஏகாதிபத்தியவாதிகள் எந்த தேசத்தையும் சுதந்திரமாக வளர்வதற்கு அனுமதிக்க மாட்டார்கள். ஆகவே அவர்களுக்கு அடங்காத தேசங்களின் மீது இராணுவ ஆக்கிரமிப்பு செய்வார்கள். ஆகவே இத்தகைய ஆக்கிரமிப்புகளிலிருந்து தேசங்களைப் பாதுகாக்க பல தேசங்கள் ஒன்றுபட்டு கூட்டரசுகளில் இருப்பது ஏகாதிபத்தியங்களைஎதிர்த்துப் போராடுவதற்கான பலத்தை பெறுவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆகவே நாம் சுதந்திரமான கூட்டரசிற்காகப் பாடுபட வேண்டும் என்ற போதும் அந்த கூட்டரசானது உண்மையான கூட்டரசாக இருப்பதற்காகவும் நாம் பாடுபட வேண்டும்.அதாவது அந்த அரசானது ஏகாதிபத்தி யங்களை சார்ந்து இருக்காமல் ஏகாதிபத்தி யத்தை எதிர்க்கும் அரசாக இருக்க வேண்டும்.
21. ஏகாதிபத்தியவாதிகளால் ஒரு ஒற்றை உலகப் பொருளாதாரத்தைப் படைத்து உருவாக்கும் திசையிலான போக்கு உலகில் உருவாகிக்கொண்டு இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். இது ஒரு பொதுவான திட்டத்திற்கு ஏற்ற முறையில், ஒரு முற்றிணக்கமான ஒரு முழுமையாக எல்லா தேசங்களையும் சேர்ந்த உழைக்கும் வர்க்கங்களின் தலைமை மற்றும் செல்வாக்கின் கீழ் இதனை ஒழுங்குபடுத்தப்படுவதாக இருக்க வேண்டும்.இதற்கான தயாரிப்புகளை இன்றைய ஏகாதிபத்தியவாதிகள் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மையே எனினும் இதனை ஏகாதிபத்தியவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்களால் ஒழுங்க மைப்தை நாம் அணுமதிக்கக் கூடாது என்பதையும் நாம் மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும். ஏனெனில் இத்தகைய உலக ஒழுங்கமைப்பானது உழைக்கும் வர்க்கத்தின்கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தப்படும் போது மட்டுமே உலக மக்களுக்கு நன்மைபயப்பதாக இருப்பதோடு மட்டு மல்லாமல் இந்த அமைப்பு வளரும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
இதற்கு மாறாக ஏகாதிபத்தியங்களின் கட்டுப்பாட்டில் இருக்குமானால் அதனால் உலகமக்களுக்கு மிகக் கடுமையான பாதிப்புகளே ஏற்படும். ஆகவே இத்தகைய சூழலிலும் நாம் தேசங்களுக்கு இடையிலான உழைக்கும் மக்களின் ஒற்றுமையை உயர்த்திப்பிடித்து செயல்படுவதன் மூலமே ஏகாதிபத்தியவாதிகளின் தீய நோக்கங் களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆகவே தேசங்கள் பற்றிய லெனினியக் கொள்கையை அதாவது தேசங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அதன் அடிப்படையிலான தேசங்களின் ஒற்றுமைக்காகப் பாடுபடு வதையே நமது லட்சியமாக இருக்க வேண்டும். இந்தக் கொள்கைதான் தேசங்களின் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில் தேசங்களின் பிரிவினைக்கு எதிரான ஒற்றுமைக்கான கொள்கையாகவும் இருக்கிறது.
22. சட்டத்தின் மூலம் தேசங்களின் உரிமைகளை பெயரளவில் ஏற்றுக்கொண்டுநடைமுறையில் தேசங்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடுவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.
23. தேசங்களுக்கு இடையிலான சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் அங்கீகரிக்கும் ஆட்சி முறையானது சோசலிச சோவியத்து ஆட்சி முறை மட்டுமே என்பதை உழைக்கும் மக்களிடம் பிரச்சாரம் செய்வது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். வேறு எந்த ஆட்சிமுறையிலும் தேசங்களுக்கு சுதந்திரமோ சமத்துவமோ கிடைக்காது.
24. உரிமைகள் இழந்து ஏகாதிபத்தியங்களை சார்ந்து நிற்கும் நாடுகளில் ஏகாதிபத்திய சார்புக்கு எதிராக செயல்படும் இயக்கங் களுக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு கொடுக்க வேண்டும்,உதவி செய்ய வேண்டும்.25. சொல்லளவில் சர்வதேசியத்தை அங்கீகரித்துவிட்டு நடைமுறையில் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தையும், அமைதி வாதத்தையும் கம்யூனிஸ்டுகள் பின்பற்றக் கூடாது.
26. தேசங்களின் சுதந்திரத்திற்காகப் போராடுவது அல்லது அதனை ஆதரிக்கும் அதேவேளையில் பல தேசங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்காகப் பாடுபடுவதன்மூலமே குட்டி முதலாளித்துவ தேசியவாதங்களுக்கு நாம் பலியாகாமல் நம்மைபாதுகாத்துக்கொள்ள முடியும்.
27. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஒரு தேசிய சர்வாதிகாரத்திலிருந்து தொடங்கி அதாவது ஒரு தனி நாட்டில் அதனை செயல்படுத்தி பிற நாடுகளுக்கும் விரிவு படுத்துவதன்மூலம் சர்வதேச பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக வளர்க்க வேண்டும்.
28. குட்டி முதலாளித்துவ தேசியவாதமானது குறுகிய அளவிலான தேசத்தின் சுயநலத்தையேகுறிக்கிறது. ஆனால் பாட்டாளி வர்க்கமானது உலகம் முழுவதிலுமுள்ள பாட்டாளி வர்க்கங்களின் நலன்களுக்கு கீழ்ப்பட்டதாகவே தனது சொந்த தேசத்தின் நலனைப் பார்க்கிறது, பார்க்க வேண்டும்.
29. ஒரு தேசத்தின் நலனும் அதன் விடுதலையும் சர்வதேச நிதி மூலதனத்தை வீழ்த்துவதில்தான் அடங்கி இருக்கிறது. ஆகவே ஒரு தேசியவாதி சர்வதேச ஏகாதிபத்தியங்களை எதிர்த்துப் போராடாமல் ஒரு தேசத்தின் விடுதலை சாத்தியமில்லை என்பதை உணர வேண்டும். ஆகவேதான் சர்வதேசியவாதிகளான கம்யூனிஸ்டுகளால் மட்டுமே ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்க முடியும் என்கிறோம்.
30. பின்தங்கிய காலனி நாடுகளில் நடக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த நாடுகளை காலனி ஆதிக்கம் செய்யும் அல்லது நிதித்துறையில் சார்பு நாடாக வைத்திருக்கும் ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள தொழிலாளி வர்க்கமானது ஒடுக்கப்பட்ட நாடுகள் அல்லது தேசங்களுக்கு ஆதரவாக நின்று சொந்த நாட்டு ஏகபோக ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டும்.
31. பின்தங்கிய நாடுகளிலுள்ள பிற்போக்கு மதவாதிகள் மற்றும் நிலப்பிரபுத்துவ குணம் கொண்டோரை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராட வேண்டும்.
32. அகண்ட இஸ்லாம் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டும்.
33. பின்தங்கிய நாடுகளில் நடக்கும்விவசாயிகளின் இயக்கத்துக்கு சிறப்பான முறையில்ஆதரவு கொடுக்க வேண்டும். முன்னேறிய நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்க இயக்கத்தையும் பின்தங்கிய நாடுகளிலுள்ள விவசாய இயக்கங்களையும் இணைக்க வேண்டும். விவசாயிகளின் இயக்கத்தின் பக்கம் உள்ள நியாயங்களை நாடு முழுவதும் பரப்ப வேண்டும்.
34. பின்தங்கிய நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தின் சோவியத்துக்களை உருவாக்கிசோவியத்தின் ஆட்சி முறையின் அவசியத்தை உழைக்கும் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
35. பெயரளவிலான கம்யூனிஸ்டு கட்சியாக இல்லாமல் உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சியை கட்ட வேண்டும்.
36. இந்த நாடுகளிலுள்ள முதலாளித்துவ ஜனநாயகம் பேசி சீர்திருத்தவாதத்திற்குள் மக்களைமுடக்குபவர்களை எதிர்த்து உறுதியாகப் போராட கம்யூனிஸ்டுகளுக்கு உரிமை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் காலனி ஆதிக்கவாதிகளை எதிர்த்தப் போராட்டத்தில் முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுடன் தற்காலிகமாக கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைத்துக்கொள்ள வேண்டும். அதே வேளையில் அவர்களோடு முழுவதுமாக ஐக்கியப்பட்டுவிடக் கூடாது.
37. அரசியல் ரீதியாக சுதந்திரம்என்ற பெயரில் பின்தங்கிய நாடுகளின் நிதி மற்றும் இராணுவரீதியில் அடிமைப்படுத்துவதற்கு ஏகாதிபத்தியங்கள் செய்யும் முயற்சிகளை தொடர்ந்து மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.
38. பின்தங்கிய நாடுகளை காலனி ஆதிக்கம் செய்துவரும் நாடுகள் மற்றும் அந்த நாடுகளைச்சேர்ந்த மக்களின் மீது ஒடுக்கப்படும் நாட்டு மக்கள் வெறுப்புணர்வு கொண்டுள்ளார்கள். மக்களின் மீதான வெறுப்புணர்வை நாம் மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
39. ஒரு நாட்டில் சிறுவீத உற்பத்தி எந்தளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த நாடு பின்தங்கிய நாடாகவே இருக்கும். அதன் காரணமாகவே அந்த நாடுகளில் குட்டி முதலாளித்துவ தப்பெண்ணங்களும், தேசிய பெருமிதம் கொண்டவர்களும், குறுகிய தேசிய உணர்வு கொண்டவர்களும் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இத்தகைய தீய பண்புகள் உலகில் ஏகாதிபத்தியங்கள் ஒழிக்கப்பட்டு, பின்தங்கிய நாடுகளில் தொழில்துறை வளர்ச்சி ஏற்பட்டு அந்த மக்களின் பொருளியல் வாழ்க்கையில்மாற்றங்கள் ஏற்படும் போதுதான் அந்த மக்களிடத்திலுள்ள குறைகள் களையப்படும் என்ற போதிலும் கம்யூனிஸ்டுகள் தங்களிடத்தில் உள்ள இந்தக் குறைகளை களைந்துகொண்டு பிற மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து செயல்படுவதன் மூலம் நிலவுகின்ற இந்தச் சூழலிலேயே மக்களிடத்தில் பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்துவதற்குப் பாடுபட வேண்டும். ஆகவே கம்யூனிஸ்டுகள் தனிப்பட்ட எச்சரிக்கையோடு மக்களை அணுகி அவர்களிடத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதற்கு முன்பு கம்யூனிஸ்டுகள் தங்களை சிறந்த கம்யூனிஸ்டுகளாக மாற்றிக் கொள்ளவேண்டும்.
40. எல்லா தேசிய இனங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் உலகம் முழுவதிலுமுள்ளபாட்டாளி மக்களும் சுய விருப்பத்தின் அடிப்படையில் உலகம் முழுவதிலும்ஏகாதிபத்தியங்களை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் ஒன்றுபட்டு செயல்படுவதன் மூலமேஉலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களுக்கு உன்னதமான சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இதுதான் லெனினியம் நமக்கு காட்டும் வழியாகும். ஆகவே உலகில் ஏகாதிபத்தியங்களை ஒழிக்கும் வரை லெனினியம் வாழும். அதனைத் தொடர்ந்துஉலகம் முழுவதிலும் கம்யூனிசத்தைப் படைப்பதற்கும் மார்க்சியம் லெனினியம் என்ற சமூக விஞ்ஞான சித்தாந்தமே நம்முடைய ஆயுதமாக இருக்கும். … தேன்மொழி.
No comments:
Post a Comment