கம்யூனிசத்தின் தத்துவார்த்த அடிப்படை கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை எனும் பிரபலமான நூல் வெளிவந்து 175 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாகின்றன. இதில்தான் கா.மார்க்சும் பி.எங்கெல்சும் கம்யூனிச உலகக் கண்ணோட்டத்தின் கோட்பாடுகளை எடுத்துரைத்தனர். ஆண்டுகள் செல்லச் செல்ல மார்க்சிய - லெனினியப் போதனையின் ஆதரவாளர் களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. இதன் செல்வாக்கு வளர்ந்து வருகிறது. மார்க்சிய - லெனினியத்தின் சக்தி எதில் அடங்கியுள்ளது?
இந்தப் போதனை யதார்த்தத்தைச் சரியான படி பிரதிபலிக்கிறது. உலக வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவை அல்லது ஞானத்தை அளிக்கிறது. மக்களுக்கு அவர்களது வாழ்க்கை மற்றும் உழைப்பின் உட்பொருளை விளக்குகிறது. நல்ல எதிர்காலத்திற்கான போராட்டத்திற்கு ஒன்று திரட்டுகிறது என்பதில்தான் இந்த சக்தி அடங்கியுள்ளது. மார்க்சிய - லெனினியப் போதனை கம்யூனிசத்தின் தத்துவார்த்த அடிப்படையாகத் திகழ்கிறது.
மகத்தான தேடு முயற்சிகளின் முடிவு.
மனிதகுல வரலாறு முழுவதன் நீண்ட, கடினமான வளர்ச்சி மார்க்சியத்தின் தோற்றத்திற்கு வழிகோலியது. இரக்கமற்ற சுரண்டல் கொடுமையால் தவித்த மக்கள் திரளினர் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றி எப்போதுமே கனவு கண்டு வந்தனர். இந்தக் கனவு பாடல்களிலும் கதைகளிலும் எதிரொலித்தது, பீரிட்டுக் கொண்டு எழுச்சிகளிலும் புரட்சிகளிலும் வெடித்தது.
மனிதகுலத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் சமுதாயத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ள முயன்றனர். இவர்கள் தத்துவஞான முறைகளையும் பொருளாதாரத் தத்துவங்களை யும் தோற்றுவித்தனர். தலைசிறந்த சமுதாய அமைப்புகளைத் தீட்டினார்கள்; இந்தச் சித்திரங்களில் நியாயத்தின் வெற்றியைப் பற்றிய மக்கள் நம்பிக்கை பிரதிபலித்தது. ஆனால் சமுதாய உறவுகளின் வளர்ச்சியின்மையும் விஞ்ஞான அறிவின் பற்றாக்குறையும் இந்தக் கருத்துக்களின் கற்பனாவாதத் தன்மையை நிர்ணயித்தன.
விஞ்ஞான கம்யூனிச உலகக் கண்ணோட்டம் தோன்றுவதற்கான முன்தேவைகள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான் முதிர்ச்சி யடைந்தன. முதலாளித்துவத்தோடு கூட சுரண்டல் அமைப்பிற்குக் குழிதோண்டக் கூடிய தொழிலாளி வர்க்கம் தோன்றியது. இந்த வர்க்கம் புரட்சிகரப் போராட்டங்களின் மூலம் (லியோன் மற்றும் சிலேஸிய நெசவாளர் எழுச்சிகள், சார்ட்டிஸ இயக்கம்) தன்னைப் பற்றி பறைசாற்றியது. முதலாளித்துவ உற்பத்தியின் வளர்ச்சி இயற்கை விஞ்ஞானத்தின் அதிதீவிர வளர்ச்சிக்கான உந்து சக்தியை அளித்தது. இது உலகைப் பற்றிய விஞ்ஞான பூர்வமான சித்திரத்தை அமைப்பதற்குத் தேவையான உண்மைகளைச் சேகரித்தது.புதிய உலகக் கண்ணோட்டத்திற்கான அடித்தளம் தயாரிக்கப்பட்டு இருந்தது. தத்துவஞான மற்றும் அரசியல் தத்துவங்களின் வளர்ச்சியும் இதற்குச் சான்று கூறியது. நடைமுறையின் தேவைகளைப் பிரதிபலிக்கும் முற்போக்கு சமுதாய சிந்தனை, மார்க்சியப் போதனை பதிலளிக்க வேண்டியிருந்த கேள்விகளை இந்த நேரத்தில் முன்வைத்தது. மூலச்சிறப்புள்ள ஜெர்மானிய தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு கற்பனாவாத சோசலிசம் ஆகிய மூன்றும் மார்க்சியத்தின் தத்துவார்த்த மூல ஊற்றுகள் ஆயின.
கி. ஹெகலும் லு, ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மானிய தத்துவஞானத்தின் தலைசிறந்த பிரதிநிதிகளாக இருந்தனர். ஹெகல் வளர்ச்சியைப் பற்றிய தத்துவஞான போதனையை - இயக்கவியலை - உருவாக்கினார். ஆனால் இதில் உண்மையான உலகின்வளர்ச்சியைப் பற்றிக் கூறப்படாமல், உலகின் அடிப்படையாகவும் இறுதிக் காரணமாயும்அவர் கருதிய ஏதோ ஒரு முழுமுதல் கருத்தின் வளர்ச்சியைப் பற்றிக் கூறப்பட்டிருந்தது என்பதில்தான் ஹெகலின் இயக்கவியல் மட்டுப்பாடு அடங்கியுள்ளது. இதற்கு மாறாகஃபாயர்பாக் மாயாவாத கற்பனைகளின் உதவியின்றி இயற்கையைக் கொண்டே இயற்கையை விளக்கலாம் என்று நிருபித்தார். ஆனால் ஹெகலிய இயக்கவியலின் மகத்தான முக்கியத்துவத்தை இவர் புரிந்து கொள்ளவில்லை. இயற்கைக்கும் வரலாற்றுக்கும் இதைப்பயன்படுத்த அவரால் இயலவில்லை. மார்க்சியத் தத்துவஞானத் தைத் தோற்றுவிப்பதற்கு அடிப்படை அம்சமாக விளங்கிய கரத்துக்கள் ஹெகல், ஃபாயர்பாக்கின் போதனைகளில் அடங்கியிருந்தன.
அரசியல் பொருளாதாரத்தில் ஆங்கிலேய பொருளாதார நிபுணர்களான ஆடம்ஸ்மித்தும், டேவிட் ரிக்கார்டோவும் மார்க்சியத்தின் முன்னோடிகளாக விளங்கினார்கள். சமுதாயத்தின் அனைத்து செல்வங்களின் முக்கிய மூல ஊற்றாக உழைப்பு விளங்குகிறது என்பதைக் காட்டிய அவர்கள் விஞ்ஞான அரசியல் பொருளாதாரத்தின் தோற்றத்திற்கு வலிகோலினார்கள்.
19 ஆம் நூற்றாண்டின் மகத்தான கற்பனாவாத சோசலிஸ்டுகளாகிய அ. சான் - சிமோன், ஷா. ஃபூரியே, ரா. ஓவன் ஆகியோர் முதலாளித்துவ அமைப்பைக் கடுமையாக விமர்சித்து தலைசிறந்த ஒரு சமுதாயத்தைப் பற்றிய திட்டங்களைத் தீட்டினார்கள். ஆனால் இந்த லட்சியங்களை அடைவதற்கான யதார்த்தமான பாதைகளைச் சுட்டிக் காட்ட அவர்களால் இயலவில்லை. சமுதாயத்திற்கு அறிவொளியூட்டுவதன் மூலமும் சுரண்டலாளர்களின் மனத்தை ஒழுக்க நெறி ரீதியாக மாற்றுவதன் மூலமும் இதை அடையலாம் என்று கற்பனாவாத சோசலிஸ்டுகள் வெகுளித்தனமாக நம்பினார்கள். என்றாலும் இவர்களது போதனைகளில் முற்போக்கு கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன; இவை பின்னர் விஞ்ஞான சோசலிசத்தின் தத்துவத்தில் விரிவாக்கப்பட்டன. மார்க்சும் எங்கெல்சும் தமது தத்துவார்த்த முன்னோடிகளை வெறுமனே பின்பற்றுபவர்களாக மட்டும் இருக்கவில்லை. கடந்த காலத்தின் சித்தாந்தச் செல்வத்தை விமர்சன நோக்கோடு மாற்றியமைத்த அவர்கள், மிக முற்போக்கான, புரட்சிகர வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை நலன்களைப் பிரதிபலிக்கக் கூடிய புதிய போதனையைத் தோற்றுவித்தனர். இதன் மூலம் மார்க்சிய ஆசான்கள் சமுதாய சிந்தனையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
இவர்கள் சமுதாய தத்துவத்தை வீண் கனவுகளிலிருந்தும் கற்பனாவாத முறைகளிலிருந் தும் விடுவித்து இதற்கு வரலாற்று வளர்ச்சி விதிகளைப் பயிலக் கூடிய உண்மையான விஞ்ஞானத்தின் தன்மையை அளித்தனர். இவர்கள் சமுதாயத் தத்துவத்தை வெகுஜன பாட்டாளி வர்க்க இயக்கத்தின் சித்தாந்தமாக மாற்றினார்கள். அமைதியான அறைகளினுள் "ஆன்மீகத்துறை உயர்குலத்தவரின்" சொத்தாக இருந்த இதை உழைப்பாளி மக்களின் நலனுக்கான வர்க்கப் போராட்டங்களின் பரந்த அரங்கிற்குக் கொண்டு வந்தார்கள். இவர்கள் சமுதாய சிந்தனையின் தியான முறையான நிலையையும் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையேயிருந்த பிளவையும் அகற்றினர். உலகை மாற்றியமைக்கத்தக்க ஆன்மீக ஆயுதத்தைக் கொண்டு உழைப்பாளிகளை ஆயுதந்தரிக்க வைத்தனர்.
மார்க்சியத்தின் உட்பிரிவுகள்.
சோசலிச அடிப்படைகளில் சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கு உலகைப் பற்றிய விஞ்ஞானப்பூர்வமான பிரிவு தேவைப்படுகிறது. எனவே மார்க்சியத்தின் முக்கிய உட்பிரிவுகளில் ஒன்றாக தத்துவஞானம் - இயற்கை, சமுதாயம் மற்றும் அறிதலின் வளர்ச்சியின் மிகப் பொதுவான விதிகளைப் பற்றிய விஞ்ஞானம் - விளங்குகிறது.
சமூக உறவுகளின் மத்தியில் பொருளாதார அல்லது உற்பத்தி உறவுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவற்றைப் பயிலாமல் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் எப்படி மாறிச் செல்வது என்ற கேள்விக்குப் பதில் காண முடியாது. ஆகவேதான் மார்க்சியத்தின் இன்னொரு முக்கிய உட்பிரிவாக அரசியல் பொருளாதாரம் - உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியைப் பற்றிய விஞ்ஞானம் - விளங்குகிறது.
மார்க்சியத்தின் மூன்றாவது முக்கிய உட்பிரிவு - விஞ்ஞானக் கம்யூனிசத் தத்துவம் ஆகும். தத்துவ ஞானத்தையும் அரசியல் பொருளாதாரத்தையும் ஆதாரமாகக் கொண்டு இது கம்யூனிச சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சியின் நியதிகளை வெளிப்படுத்துகிறது.
தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் மட்டுமே மார்க்சியத்தின் முழு உள்ளடக்கம் அல்ல. மார்க்சிய சிந்தனையானது வரலாற்று விஞ்ஞானம், சட்டத்துறை, நீதிநெறி, அழகியல் போன்ற சமுதாயத்தைப் பற்றிய ஞானங்களின் எல்லாத் துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. சரியாகச் சொல்வதெனில், சமூகப் புலப்பாடுகளை அதாவது நிகழ்வுப் போக்குகளை மார்க்சிய ரீதியான அணுகுமுறையோடு பயிலத் துவங்கிய போதுதான் இவை உண்மையான விஞ்ஞானத் தன்மையைப் பெற்றன.
மார்க்சியம் என்பது இயற்கை மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சியைப் பற்றிய பொதுவான விதிகள், சோசலிசப் புரட்சியின் வெற்றி, சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தின் கட்டுமானப் பாதைகள் ஆகியவற்றைப் பற்றிய விஞ்ஞானக் கருத்துக்கள் அடங்கிய இணக்கமான முறையாகும்.
மார்க்சிய தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம் அல்லது விஞ்ஞானக் கம்யூனிசத் தத்துவத்தைப் பயிலுகையில் இவை ஒரே முறை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்: மார்க்சியத்தின் உட்பிரிவுகள் அனைத்தும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத தொடர்புடையவை. மார்க்சிய லெனினிய ஆசான்களின் படைப்புகளின் மத்தியில் "முற்றிலுமாக" பொருளாதார அல்லது தத்துவஞான படைப்புகள் என்பவைகளே கிடையாது.
இவர்களுக்குத் தத்துவஞானம் சமூக உறவுகளின் பன்முகப் பகுப்பாய்விற்கான முறையாக விளங்கியது, இதன் அடிப்படையில் பின்னர் அரசியல் முடிவுகள் செய்யப்பட்டன. தன் பங்கிற்குப் பொருளாதார மற்றும் அரசியல் ஆராய்ச்சி தத்துவஞான பொதுமைப்படுத்தலுக்குத் தேவையான புதிய தகவல்களைத் தந்தது.
படைப்பாற்றலுள்ள, வளர்ந்து வரும் போதனை
கடந்த கால சிந்தனையாளர்கள் சகலவித வினாக்களுக்கும் இறுதி விடை அளிக்கவல்ல ஒரு தத்துவத்தைத் தோற்றுவிக்க முயன்றனர். ஆனால் எந்த ஒரு தத்துவத்திலாவது வாழ்க்கையின் சகலவித சம்பவங்களையும் முன்கூட்டியே அறிய இயலுமா? நம்மைச் சுற்றியுள்ள உலகம் எக்காலமும் வளர்ந்து வருகிறது, மனித அறிவும் இடையறாது செழுமை அடைந்து வருகிறது.
தத்துவம் புதிய உண்மைகளைக் கணக்கில் கொள்ளாமல் தேங்கிக் கிடக்கும் வறட்டுச் சூத்திரங்களின் தொகுப்பாக மாற்றப்பட்டால் இது வாழ்க்கையிலிருந்து பிரிக்கப்படுகிறது. யதார்த்தத்தை சரியான படி பிரதிபலிக்காததால் பயனற்றதாயும் ஏன் கெடுதலானதாயும் மாறுகிறது. எனவேதான் தத்துவம் எப்போதும் யதார்த்த வாழ்க்கையை, நடைமுறையை ஆதாரமாகக் கொண்டிருக்க தத்துவம் என் நண்பரே நிரை கண்டது. வாழ்க்கை எனும் கற்பகத்தரு பசுமையானது. என்று கேதே சரியாகக் குறிப்பிட்டார்.
சர்வபொது, முடிவான தத்துவங்களைத் தோற்றுவிப்பதற்காகச் செய்யப்பட்ட அனைத்து முயற்சிகளும் சந்தேகத்து இடமின்றி தோல்வியில் முடிந்தன. ஆண்டுகள் உருண்டோடின, இந்தத் தத்துவங்கள் அவற்றைத் தோற்றுவித்த சகாப்தத்தோடு சேர்ந்து மறைந்தன. எந்த வர்க்கத்தின் நலன்களை இவை பிரதிபலித்தனவோ அதோடு சேர்ந்து பழையதாயின. யதார்த்தத்தை மிக ஆழமாகப் பிரதிபலித்த கருத்துக்கள் மட்டுமே சமுதாய சிந்தனையின் பொக்கிஷத்தில் (கருவூலத்தில்) எஞ்சியிருந்தன. நடைமுறைத் தேவைகளைப் பிரதிபலிக்கக் கூடிய புதிய தத்துவங்களால் கிரகிக்கப்பட்டன. மார்க்சியப் போதனை சாராம்ச ரீதியாக இதற்கு முந்தைய தத்துவங்களிலிருந்து மாறுபடுகிறது. மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரமல்ல, மாறாக நடவடிக்கைக்கான வழிகாட்டியாகும் என்று திரும்பத் திரும்பக் கூறுவது லெனினுக்குப் பிடிக்கும். மார்க்சியத் தத்துவம் சமுதாய வளர்ச்சியின் நடைமுறையாலும் புதிய விஞ்ஞான சாதனைகளாலும் இடையறாது செழுமைப் படுத்தப்பட்டு வருகிறது. மார்க்சியம் என்பது உயிரோட்டமுள்ள, படைப்பாற்றலுள்ள, வளர்ந்துவரும் போதனை ஆகும். மார்க்சியத்தின் வளர்ச்சியில் லெனினது பங்கு இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வரலாறு புதியதொரு சகாப்தத்தில் நுழைந்தது. எந்த சோசலிசப் புரட்சியின் தவிர்க்க இயலாத் தன்மையை மார்க்சியம் நிருபித்ததோ அந்த சோசலிசப் புரட்சி நெருங்கிக் கொண்டிருந்தது.
முதலாளித்துவத்தைப் புரட்சிகரமாகத் தூக்கி யெறியும் கடமை பாட்டாளி வர்க்கத்தின் முன் நேரடியாக நின்றது. சர்வதேச புரட்சிகர இயக்கம் நல்ல அனுபவத்தைச் சேர்த்து வைத்திருந்தது. இயற்கை விஞ்ஞானங்களின் தீவிர வளர்ச்சி புதிய உண்மைகள், கண்டுபிடிப்புக்களுக்கான தத்துவஞான பொதுமைப் படுத்தலை அவசியமாக் கியது: மார்க்சியத்தைப் படைப்பாற்றலோடு வளர்ப்பதற்கான தேவை முதிர்ச்சியடைந்தது. இந்த வரலாற்றுக் கடமை லெனினால் நிறைவேற்றப்பட்டது. இவர் மார்க்சியத் தத்துவஞானத்தை வளர்த்தார். முதலாளித்துவத் தின் உச்சக் கட்டம் என்ற முறையில் ஏகாதிபத்தியத்தின் நியதிகளை ஆராய்ந்தார், சோசலிசப் புரட்சியின் தத்துவத்தையும் சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் போர்த்தந்திரம் மற்றும் நடைமுறைத் தந்திரத்தையும் கட்சியைப் பற்றிய போதனையையும் உருவாக்கினார்; சோசலிச மாற்றங்களின் முதல் அனுபவத்தைப் பொதுமைப்படுத்தி சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தின் கட்டுமான வழிகளைப் பற்றிய தத்துவத்தைத் தோற்றுவித்தார். லெனின் மார்க்சியப் போதனையின் எல்லா அம்சங்களையும் புதிய கருத்துக்களைக் கொண்டு செழுமைப்படுத்தினார். இதை குணாம்ச ரீதியான அதாவது பண்பு ரீதியான புதிய மட்டத்திற்கு உயர்த்தினார். எனவேதான் நாம் மார்க்சிய - லெனினியத்தைப் பற்றிப் பேசுகிறோம்.
லெனின் இறந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகிறது, இந்தக் காலகட்டத்தில் மனித வாழ்வில் மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, சோசலிசம் யதார்த்தமாக மாறியது மட்டுமல்ல, மனிதகுல முன்னேற்றத்தின் தீர்மானகரமான காரணியாகவும் மாறியுள்ளது. புதியசூழ்நிலைகள் புரட்சிகரத் தத்துவத்தின் மேற்கொண்ட வளர்ச்சிக்கான தேவைகளைத் தோற்றுவித்தன. இக்கடமையை மார்க்சிய - லெனினியக் கட்சிகள் கூட்டாக நிறைவேற்றி வருகின்றன. உலக கம்யூனிச இயக்கத்தின் தத்துவச் சிந்தனை, முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் புரட்சிகரமாக மாறிச் செல்லும் சகாப்தம் என்ற வகையில் நவீனசகாப்தத்தைப் பற்றியதொரு விரிவான வரையறுப்பைத் தந்து மார்க்சிய - லெனினியத்தைசெழுமைப்படுத்தியது. மார்க்சிய - லெனினியக் கட்சிகளின் ஆவணங்களில் நவீனமுதலாளித்துவத்தின் பொது நெருக்கடி, பொருளாதாரம், சமூக மற்றும் அரசியல் உறவுகள்,சமுதாயத்தின் ஆன்மீக வாழ்க்கை ஆகியவற்றில் இது வெளிப்படும் விதம் ஆகியவற்றைப்பற்றிய பகுப்பாய்வு தரப்பட்டுள்ளது; நவீன உலக புரட்சி நிகழ்ச்சிப் போக்கிற்குரிய அம்சங்கள்விளக்கப்பட்டுள்ளன; முதலாளித்துவம், சோசலிசம் என்ற இரு சமூக அமைப்புகளின் சகவாழ்வு மற்றும் போராட்டத்தின் நியதிகள் காட்டப்பட்டுள்ளன; புதிய சோசலிச சமுதாயம் தோன்றி வளர்வதன் அனுபவம் பொதுமைப் படுத்தப்பட்டுள்ளது.
மார்க்சிய - லெனினியத்தின் வளர்ச்சிக்கு சோவியத் யூனியன் கம்யூனிஸ்டுக் கட்சி பெரும் பங்காற்றியுள்ளது. - இதன் வேலைத்திட்டத்திலும் காங்கிரசுகளின் முடிவுகளிலும் மற்ற பத்திரங்களிலும் நவீன காலத்தின் முக்கியப் பிரச்சனைகளைப் பற்றிய ஆழ்ந்த தத்துவார்த்த ஆய்வு அடங்கியுள்ளது.
சமுதாய வளர்ச்சியின் விதிகளை வெளிப்படுத்தும் விஞ்ஞான தத்துவம் என்ற வகையில் மார்க்சியம் - லெனினியம் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பைத் தர உதவுகிறது. இது விஞ்ஞான ஆரூடத்தின் அடிப்படையாகத் திகழ்கிறது, சமுதாய வளர்ச்சியின் விஞ்ஞானக் கொள்கையை வகுக்க வகை செய்கிறது.
++++++++++++++++++++++++++++++++++
எமது விளக்கம். மார்க்ஸ் மற்றும் எங்கெல்சால் உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை வெளியாகிநூற்றி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அந்தக் கொள்கையும் மார்க்சியத்தின்போதனைகளையும் ஏற்றுக்கொண்டு உலகில் பலரும் கம்யூனிஸ்டுக் கட்சியின் பின்னால் திரண்டார்கள். இந்த கொள்கையின் அடிப்படையில் ரஷ்யாவில் மாபெரும் புரட்சி 1917 இல் நடத்தப்பட்டு, தொழிலாளி வர்க்கம் (கம்யூனிஸ்டுக் கட்சி) ஆட்சிக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும் புரட்சிகள் நடந்து கம்யூனிஸ்டுகளின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா போன்ற காலனி நாடுகளிலும் கம்யூனிஸ்டுக் கட்சிகள் உருவாகி, உலகில் பெரும்பகுதி மக்கள் கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இருந்தனர். ஆனால் தோழர் ஸ்டாலின் மற்றும் மாவோ அவர்களின் மறைவிற்குப் பிறகு இந்த கம்யூனிச நாடுகளில் கம்யூனிசக் கொள்கைகள் கைவிடப்பட்டது.
இங்கெல்லாம் கம்யூனிசம் தோல்வியடைந்து விட்டது என்று உலகம் முழுவதிலுமுள்ள முதலாளித்துவவாதிகளும் கம்யூனிச அமைப்பிற் குள்ளேயே இருந்து துரோகம் செய்தவர்களும் பிரச்சாரம் செய்ததாலும் உலகில் பல நாடுகளில் இருந்த கம்யூனிஸ்டுக் கட்சிகள் கம்யூனிசக் கொள்கையைக் கைவிட்டுவிட்டு திருத்தல்வாதம் மற்றும் சீர்திருத்தக் கொள்கைகளை கடைபிடிப்பதாலும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்கள் முதலில் இந்த போலி கம்யூனிஸ்டுக் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்தனர், அதனைத் தொடர்ந்து கம்யூனிசக் கொள்கையின் மீதே நம்பிக்கை இழந்து வருகின்றனர். இந்தச்சூழலைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியவாதிகளும் ஆளும் வர்க்கங்களும் தொண்டு நிறுவனங்களை நிறுவியும், டிராட்ஸ்கியம் போன்ற எதிர்ப்புரட்சிகரக் கொள்கைகளை பரப்பி கம்யூனிசத்தின் பக்கம் வரும் இளைஞர்களை குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தச் சூழலை நன்கு புரிந்துகொண்டு கம்யூனிசம் பற்றிய மார்க்சிய - லெனினிய ஆசான்களது போதனைகளையும் அதன் உண்மைத்தனத்தையும், உழைக்கும் மக்களுக்கு சோசலிச அமைப்பைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இல்லை என்பதையும் விளக்குவதோடு கூடவே சோசலிசத்தைப் பேசிக்கொண்டே உழைக்கும் மக்களை ஏமாற்றும் கயவர்களின் துரோகங்களைப் பற்றியும் மக்களிடம் விளக்கிச் சொல்லி மார்க்சிய - லெனினியத்தின் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு நாம் கடுமையாகப் பாடுபட வேண்டிய சூழலில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டியது ஒவ்வொரு கம்யூனிஸ்டு களின் கடமையாகும்.
2. மார்க்சியமானது மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றி ஆய்வு செய்கிறது. அந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு விஞ்ஞானப்பூர்வமான தீர்வை முன்வைக்கிறது. யதார்த்த சூழல்களிலிருந்தே அதைப் பற்றிய புரிதல் களிலிருந்தே மார்க்சியம் தனது கருத்துக்களை முன்வைக்கிறது. மக்களின் எதிர்கால வாழ்க் கைக்கு நமக்கு வழிகாட்டும் தத்துவக் கண்ணோட்டத்தை நமக்கு வழங்குகிறது.
3. மனிதகுல வரலாற்றில் உழைக்கும் மக்கள் சுரண்டலுக்கு ஆளாகி தொடர்ந்து வறுமையில் வாடி வந்தனர். இந்த வறுமையிலிருந்து மீள வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பமாக இருந்தது அதற்காகப் போராடிக்கொண்டு இருந்தனர். இந்த மக்களின் வறுமையைப் போக்குவதற்காகப் பல சிந்தனையாளர்கள், பொருளாதாரத் தத்துவங்களை உருவாக்கினார் கள், மனித சமூக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார்கள். ஆனால் அவர்களால் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சரியான விஞ்ஞானப்பூர்வமான வழியைக் காட்ட முடியவில்லை. ஆனால் மார்க்சும் எங்கெல்சும்தான் ஒரு விஞ்ஞானப்பூர்வமான வழியைக் காட்டினார்கள்.
4.மனிதகுல வரலாற்றில் உழைக்கும் மக்கள் சந்தித்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் பொருட்டே சமூக விஞ்ஞானத் தத்துவங்கள் தோன்றின. மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் மூளையில் இயல்பாக உறுவான தத்துவம் அல்ல மார்க்சியம். மனித சமூகம் சந்தித்த பிரச்சனைகளிலிருந்துதான் மார்க்சியம் தோன்றியது. அதாவது மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் நோக்கத்திலிருந்து தான் மார்க்சும் எங்கெல்சும் சிந்தித்தார்கள். அதன் விளைவுதான் மார்க்சிய சமூக விஞ்ஞானம் ஆகும்.
5. 19 ஆம் நூற்றாண்டில் புரட்சிகரமான தொழிலாளி வர்க்கம் உருவாகிப் போராடிக்கொண்டு இருந்தது ஒரு பக்கம். இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பல விஞ்ஞானங்களை விஞ்ஞானிகள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். இந்தச் சூழல்களிலிருந்தே மார்க்சியத்தை மார்க்ஸ் உருவாக்கினார். அதாவது ஒரு சரியான கொள்கை உருவாவதற்கு நாம் முயற்சி செய்தால் மட்டும் போதாது. அதற்குத் தேவையான புறச்சூழலும் நிலவ வேண்டும். இவ்விரண்டும் இணைந்துதான் புதிய கொள்கைகளும் கோட்பாடு களும் உருவாகின்றன.
6. நடைமுறையில் நமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான கொள்கைதான் நமக்குத் தேவை அத்தகைய கொள்கைகளை உருவாக்குவதற்கு வழிகாட்டும் சமூக விஞ்ஞானம்தான் மார்க்சியம் ஆகும்.
7. மார்க்சும் எங்கெல்சும் அவர்களது சமூக விஞ்ஞான கருத்துக்களை உருவாக்குவதற்கு தத்துவத் துறையில் ஹெகலையும், ஃபாயர்பாக்கையும் அவர்கள் உருவாக்கிய தத்துவங்களைப் படித்தார்கள். அதில் காணப்படும் சரியான அம்சங்களை ஏற்றுக் கொண்டார்கள். அதில் காணப்படும் தவறான அம்சங்களை விமர்சனம் செய்து அதனைப் புறக்கணித் தார்கள். இறுதியில் மார்க்சியத் தத்துவத்தைப் படைத்து வெளியிட்டார்கள். இதன் மூலம் மார்க்சிய ஆசான்கள் சமூகத்தில் நிலவும் கருத்துக்களை நாம் முதலில் உள்வாங்க வேண்டும் என்றும். அதனை விமர்சன ரீதியாக திறனாய்வு செய்ய வேண்டும் என்றும், அதில் காணப்படும் சரியான அம்சங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதில் காணப் படும் தவறான அம்சங்களை அது எப்படித் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களோடு விளக்கி அதனை புறக்கணித்து, நாம் வந்தடைந்த கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை வெளியிட வேண்டும் என்றும் நமக்கு மார்க்சும் எங்கெல்சும் வழிகாட்டுகிறார்கள். இந்த முறையை அவர்கள் பின்பற்றியதற்கு முதன்மையான காரணம் அவர்கள் மக்களை நேசித்தார்கள், மக்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான சரியான வழிகளைக் கண்டுபிடித்து மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. மேலும் இந்த நோக்கத்திற்காக பிற சமூக ஆய்வாளர்களும் சிறந்த கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள் என்றும் அவர்களிடமுள்ள சரியான கருத்துக்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்பினார்கள். மார்க்ஸ் மற்றும் எங்கெல்சுக்கு அவர்களுக்கென்று தனிப்பட்ட பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. ஆகவேதான் அவர்களிடம் அகம்பாவம் என்ற தீய குணம் அவர்களிடம் தோன்றவே இல்லை. ஆனால் இங்கே சில அரைகுறைகள் தனக்கு எல்லாம் தெரியும் தான் சொல்வதே சரியானது என்றும் பிறர் சொல்லும் கருத்துக்களை காதுகொடுத்துக்கூட கேட்ப்ப தில்லை. இத்தகைய அரைகுறைகளால் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும் முடியாது அதனை தீர்ப்பதற்கு வழிகாட்டவும் முடியாது.
ஆகவே மார்க்சும் எங்கெல்சும் பின்பற்றிய முறையில் சமூகத்தில் நிலவும் அனைத்து வகையான கருத்துக்களையும் உள்வாங்குவோம் அதனை மார்க்சிய லெனினிய சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்திலிருந்து பரிசீலிப்போம். அவற்றி லுள்ள சரியான கருத்துக்களை ஏற்றுக் கொள்வோம், அதிலுள்ள தவறான கருத்துக்களை விமர்சித்து சரியான ஆதரங்களோடு அந்தத் தவறை புரிந்துகொண்டு அதனை புறக்கணிப்போம். இறுதியில் சமூகத்தை மாற்று வதற்கான விஞ்ஞானப்பூர்வமான வழியைக் கண்டுபிடித்து அதன் அடிப்படையில் சமூகத்தை மாற்றுவோம்.
8. மார்க்சும் எங்கெல்சும் அவர்களது தத்துவ அரசியல் பொருளாதார முன்னோடிகளாக ஹெகலையும், ஃபாயர்பாக்கையும், ஆடம்ஸ் மித்தையும், ரிக்கார்டோவையும், ஓவன் போன்ற கற்பனாவாத சோசலிஸ்டுகளையும் எடுத்துக் கொண்டார்கள். எனினும் அவர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றவில்லை. மாறாக அவர்களை விமர்சனப் பூர்வமாகவே பார்த்து அவர்களிடமுள்ள சரியான அம்சத்தை ஏற்றுக்கொண்டு தவறான அம்சங்களை விமர்சித்துப் புறக்கணித்தார்கள். மேலும் தங்களையும், தங்களைப் பின்பற்றுபவர்கள், கண்மூடித்தனமாகப் பின்பற்றக் கூடாது என்றும் தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள சமூக விஞ்ஞான மானது பொதுவாக வழிகாட்டும் கோட்பாடுகளே ஆகும் என்றும், ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சனைகளை மார்க்சியக் கண்ணோட்டத்திலிருந்து குறிப்பாக ஆய்வு செய்து குறிப்பான முடிவெடுத்து செயல்பட வேண்டும் என்றே நமக்கு வழிகாட்டினார் கள். ஆனால் இங்குள்ள சிலர் தங்களைப் பின்பற்றுபவர்கள் தங்களை கண்மூடித்தனமாக ஆதரித்துப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்களை விமர்சிப்பவர்களை எதிரிகளாகவே பார்க்கிறார்கள். சமூகத்தை விஞ்ஞானப்பூர்வமாக மாற்றுவதற்குத் தடையாகவே இவர்கள் இருக்கிறார்கள். ஆகவே சமூகத்தை விஞ்ஞான அடிப்படையில் மாற்ற வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒவ்வொருவரும் மார்க்சிய ஆசான்கள் பின்பற்றிய அதே அனுகுமுறைகளைப் பின்பற்றி ஒவ்வொன்றையும் விஞ்ஞான அடிப்படையில் விமர்சனப்பூர்வமாகப் பார்த்து முடிவெடுப்பதற்கான பயிற்சியைப் பெற வேண்டும்.
9. சமூகத்தை மாற்றுபவர்களும் வளர்ப்பவர்களும் மக்களே என்பதை தெளிவாகவே மார்க்சியம் விளக்குகிறது. ஆகவே சமூகத்திலுள்ள வர்க்கங்களைப் பற்றி ஆய்வு செய்து வர்க்கங்களின் தயார் நிலையை கணக்கி லெடுத்து புரட்சிகர வர்க்கங்களுக்கு சரியான போதனை அளித்து போரிடுவதன் மூலமே சமூகத்தை மாற்ற முடியும் என்ற உண்மையை முன்வைத்தவர்கள்தான் மார்க்சிய ஆசான்கள் ஆகவே சமூகத்தை மாற்ற விரும்புபவர்கள் செய்ய வேண்டிய முதன்மையான பணியானது வர்க்கங்களைப் பற்றிய ஆய்வுதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய ஆய்வில்லாமல் பேசுவது வறட்டுத்தன மாகும். இந்த வகையில் வறட்டுத்தனமாக சமூக மாற்றத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில் வர்க்கங்களை ஆய்வு செய்து வரலாற்று வழியில் சமூகத்தை மாற்றுவதற்கான விதிகளை வகுத்துக்கொடுத்ததுதான் மார்க்சிய லெனினிய சமூக விஞ்ஞானம் ஆகும்.
10. தத்துவம், அரசியல் பொருளாதரம் போன்ற சமூக விஞ்ஞானத்தை அறிவுத் திறன் உள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி, சமூக மாற்றத்தை விரும்புகின்ற ஒவ்வொருவரும் உழைக்கும் தொழிலாளி மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோரால் புரிந்துகொள்ள முடியும் என்றும் உழைக்கும் மக்கள் இத்தகைய சமூக விஞ்ஞானத்தை கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், அத்தகைய புரிதலின் அடிப்படையிலேயே ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியைக் கட்டியமைத்து போராடி உழைக்கும் மக்களுக்கான உன்னதமான சமூகமான சோசலிச சமூகத்தை உழைக்கும் மக்கள் உருவாக்க வேண்டும் என்றும் அத்தகைய சோசலிச சமூகத்தை உழைக்கும் மக்களால் மட்டுமே உருவாக்க முடியும் என்று மார்க்சிய லெனினிய சமூக விஞ்ஞானம் நமக்குப் போதிக்கிறது.
11. சமூகத்தின் இருப்புக்கும் அதன் இயக்கத்துக்கும் அடிப்படை மக்கள் மத்தியில் நிலவும் பொருளாதார அல்லது உற்பத்தி உறவுகள்தான் முதன்மையானது என்பதுதான் மார்க்சிய லெனினிய சமூக விஞ்ஞானம் கூறுகிறது. இந்த உற்பத்தி உறவைப் புரிந்து கொள்ளாமல் சமூகத்தை முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கு மாற்றியமைக்க முடியாது.
12. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் ஆகிய மூன்று மட்டுமே மார்க்சியத்தின் உள்ளடக்கம் என்று கருதக் கூடாது. மார்க்சியமானது வரலாறு, சட்டத்துறை, நீதித்துறை, அழகியல், கலாச்சாரம், பண்பாடு போன்ற பல துறைகளைப் பற்றியும் சிந்தித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்தி அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை மிக்க சமூக விஞ்ஞானமாக மார்க்சிய லெனினியம் வளர்ந்துள்ளது.
13. மார்க்சியமானது தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் போன்ற பல துறைகளில் தனது ஆய்வுகளை செய்த போதும் இவற்றுக்கு இடையில் தொடர்புகள் இருப்பதையும் கணக்கிலெடுத்தே தனது ஆய்வுகளையும் முடிவுகளையும் எடுக்கிறது என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது. ஆகவேதான் ஒவ்வொரு பிரச்சனைகளையும் பல்வேறு கோணங்களிலிருந்து ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்று மார்க்சிய லெனினிய சமூக விஞ்ஞானம் நமக்குப் போதிக்கிறது.
14. மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வளிக்கும் ஒரு அட்டவணையை தயாரிக்க முயற்சிகள் செய்யப்பட்டது. அப்படி ஒரு அட்டவணையை தயாரிக்க முடியாது. மனித சமூகம் அவ்வப்போது குறிப்பான பிரச்சனைகளை சந்திக்கிறது. இந்த குறிப்பான பிரச்சனைகளுக்கு குறிப்பான தீர்வுதான் தேவைப்படுகிறது. ஆகவே பொதுவான சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத் திலிருந்து குறிப்பான தீர்வை அதாவது யதார்த்தத்திற்கு பொருத்தமான தீர்வை எடுத்து செயல்பட வேண்டும் என்றே சமூக விஞ்ஞானம் கூறுகிறது.
15. ஒரு தத்துவம் அல்லது ஒரு கொள்கையானது யதார்த்தமான சூழ்நிலையை மாற்றுவதற்குப் பொருத்தமானதாக இருந்தால் அந்த தத்துவமானது பயனளிக்கக் கூடியதாக இருக்கும். யதார்த்தத்துக்குப் பொருத்தமானதாக இல்லா விட்டால் அதனால் பயன் எதுவும் இருக்காது. அத்தகைய பொருத்தமில்லாத கொள்கையானது காலப்போக்கில் காலாவதியாகிவிடும்.
16. மார்க்சியமானது வறட்டுச் சூத்திரம் இல்லை. அது நடைமுறைக்கான வழிகாட்டியாகும். இந்த உண்மையை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது.
17. மார்க்ஸ் காலத்தில் முதலாளித்துவம் தோன்றி வளர்ந்துகொண்டு இருந்தது. இந்த முதலாளித்துவத்தைப் பற்றியும் மூலதனத்தைப் பற்றியும் மார்க்ஸ் ஆய்வு செய்து மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞானத்தைப் படைத்தார். லெனின் காலத்தில் முதலாளித்துவம் வளர்ந்து ஏகாதிபத்தியமாக மாறியவுடன், ஏகாதிபத்தியத் தைப் பற்றியும், பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றியும், காலனி ஆதிக்க விடுதலை பற்றியும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும், புரட்சியை நடத்துவதற்கான புதிய வகையிலான புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சி பற்றியும், புரட்சியை நடத்துவதற்குத் தேவையான திட்டம், போர்த்தந்திரம், செயல்தந்திரங்கள் பற்றியும், சோசலிசமாக மாறிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் ஆய்வு செய்து மார்க்சிய சமூக விஞ்ஞானத்தை மார்க்சிய லெனினிய சமூக விஞ்ஞானமாக லெனின் வளர்த்தார். ஆகவே தற்போது வளர்ந்துள்ள மார்க்சிய லெனினிய சமூக விஞ்ஞானத்தை கற்றுத் தேர்ச்சி பெறுவது நமது கடமையாகும். தேன்மொழி.
No comments:
Post a Comment