உலகிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் உள்ள முரண்பாடு பற்றிய விதி, அதாவது எதிர்மறைகளின் ஒற்றுமை பற்றிய விதி, பொருள்முதல்வாத இயங்கியலின் அடிப்படை விதியாகும். “இயங்கியல் என்பது சரியான கருத்தில் உலகிலுள்ள ஒவ்வொன்றினுடைய சாரத்துக்குள்ளும் அடங்கியுள்ள முரண்பாட்டை ஆராய்ந்து கற்பதே ஆகும்”என்று லெனின் கூறினார். இவ்விதிதான் இயங்கியலின் சாரமாகும் என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார்.
அவர் இதை இயங்கியலின் உட்கரு எனவும் குறிப்பிடுவது உண்டு. எனவே, இவ்விதியை நாம் ஆராயும் பொழுது இயங்கியல் தொடர்பான பல்வேறு வகைப் பிரச்சனைகளை, எத்தனையோ தத்துவப் பிரச்சனைகளை தொடாமல் இருக்க முடியாது. இப்பிரச்சனைகள் அனைத்திலும் நாம் தெளிவு பெற்று விடுவோமேயானால் பொருள்முதல்வாத இயங்கியலின் அடிப்படை களைப் புரிந்தவர்கள் ஆவோம்.
இப்பிரச்சனைகளாவன:-
1. இரு உலக நோக்குகள்.
2. முரண்பாட்டின் அனைத்தும் தழுவிய தன்மை.
3. முரண்பாட்டின் குறித்த தன்மை.
4. முதன்மை முரண்பாடும் ஒரு முரண்பாட்டின் முதன்மை அம்சமும்.
5. ஒரு முரண்பாட்டு அம்சங்கங்களின் ஒத்த இயல்பும் போராட்டமும்.
6. முரண்பாடுகளுக்கு இடையே விளையக்கூடிய பகைத் தன்மையின் இடம்.
அண்மைக் காலத்தில் சோவியத் தத்துவ வட்டாரங்களில் டெபோரின் கொள்கைக் குழாமின் கருத்துமுதல்வாதம் பற்றிய திறனாய்வு நமது கவனத்தைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
(டெபோரின் சோவியத் தத்துவ அறிஞர்களில் ஒருவராவார். சோவியத் ஒன்றியத்தின் சமூக விஞ்ஞானக் கழகத்தின் ஒரு உறுப்பினராகவும் இருந்தவர். 1930 ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவில் உள்ள தத்துவ வட்டாரங்கள் அனைத்தும் டெபோரின் குழுவினரை விமர்சித்தன. கோட்பாட்டிலிருந்து நடைமுறையையும்; அரசியலிருந்து கோட்பாட்டை யும் தனித்தனியே பிரிக்கக் கூடிய தவறுகளை இழைத்து, இயல்பான கருத்துமுதல்வாதிகளாகவே டெபோரினும், அவரது குழுவினரும் இருக்கின்றனர். என்று தத்துவ வட்டாரங்கள் விமர்சித்தன).
டெபோரினது கருத்துமுதல்வாதம் சீனப் பொதுவுடமைக் கட்சியிலும் ஒரு தவறான செல்வாக்கினை உருவாக்கியது. நமது கட்சிக்குள் காணப்படும் வறட்டுத் தத்துவ சிந்தனைக்கும் டெபோரினது கருத்தோட்டத்திற்கும் தொடர்பு ஏதும் இல்லை எனக் கூறிவிட முடியாது. எனவே, நமது இன்றைய தத்துவ ஆராய்வு, வறட்டுத் தத்துவச் சிந்தனையை வேரறுப்பதையே தனது முதன்மைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.
1. இரு உலக நோக்குகள். மனித அறிவின் வரலாறு முழுக்க, இப்பேரண்டத்தின் நியதி பற்றிய இரண்டுவிதக் கண்ணோட்டங்கள் இருந்து வருவதைக் காணலாம். ஒன்று, "இயங்காவியல்" அல்லது இயக்க மறுப்பியல் ( Metaphysical outlook) கண்ணோட்டம்; மற்றொன்று, "இயங்கியல்" கண்ணோட்டம் (Dialectical outlook) இவை இரண்டும் ஒன்றுக் கொன்று எதிரான இரு உலக கண்ணோட்டங்கள். லெனின் கூறினார்: வளர்ச்சி (பரிணாமம்) பற்றிய அடிப்படையான (அல்லது சாத்தியமான, வரலாற்று ரீதியாகக் காணப்படுகின்ற) இரு கருத்துக் களாவன: குறைதலும் அதிகரிப்புமான, ஒன்றே திரும்பத் திரும்ப ஏற்படுவதான வளர்ச்சி; இதற்கு மாறாக, வளர்ச்சி என்பது இணைந்த எதிரும் புதிருமான இரண்டு கூறுகளின் விளைவாகவே நிகழ்கிறது எனப் பார்த்தல் (ஒன்றை மற்றது மறுக்கும் இரு கூறுகளின் ஒற்றுமையையும், ஒன்றுக்கொன்று தனிப்பட்ட எதிரானவையாகப் பிரிதலும் அவை ஒன்றை ஒன்று பாதிக்கும் தொடர்பையும் பார்த்தல்) இரண்டு மாறுபட்ட உலகக் கண்ணோட்டங்களையே லெனின் இங்கு சுட்டிக் காட்டுகிறார்.
சீனத்தில் இயங்காவியலைக் குறிப்பதற்காக "ஹ்சுவான்-ஹ்சுவே" என்ற வேறொரு சொல்லும் வழங்குகிறது. சீனத்திலும் சரி, ஐரோப்பாவிலும் சரி கருத்துமுதல்வாத உலகக் கண்ணோட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாக உள்ள இச்சிந்தனை முறை மனித சிந்தனையில் நீண்ட நெடுங்காலம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஐரோப்பாவில், முதலாளிய வர்க்கத்தின் துவக்கக் காலத்தில் அவ்வர்க்கத்தின் பொருள்முதல் வாதம் இயங்காவியல் தன்மை கொண்டதாகவே இருந்தது. பல ஐரோப்பிய நாடுகளில் சமூகப் பொருளாதாரம் மிக வளர்ச்சியடைந்த முதலாளிய பொருளாதாரமாக முன்னேற்றம் கண்டு, உற்பத்தி சக்திகள், வர்க்கப் போராட்டங்கள், அறிவியல், கண்டுபிடிப்புகள் முதலியன வரலாற்றில் முன்னெப் போதும் கண்டிராத அளவிற்கு வளர்ந்து, தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கம் மாபெரும் உந்து சக்தியாக வளர்ந்துவிட்ட சூழ்நிலையில்தான், பொருள்முதல்வாத இயங்கியல் பார்வையெனும் மார்க்சிய உலக நோக்குத் தோன்றியது. பின்னர், பொருள்முதல்வாத இயங்கியலை எதிர்ப்பதற்காக முதலாளிய வர்க்கத்திடையே வெளிப்படையானதும், வெட்கங்கெட்டதுமான பிற்போக்கு கருத்துமுதல் வாதக் கொள்கையுடன், கொச்சைப் பரிணாமக் கொள்கையும் சேர்ந்து வெளிப்பட்டது. இந்த இயங்காவியல் அல்லது கொச்சைப் பரிணாமவாத உலக நோக்கானது, பொருட்களை தனித்தனியாக இயங்கிக் கொண்டிருக்கின்றவையாகவும், நிலையான வையாகவும், ஒருதலைச் சார்பானதாகவும் பார்க்கிறது. அது பேரண்டத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும், அவற்றின் வடிவங்கள் வகைகள் ஆகியவற்றையும் ஒன்றுக்கொன்று என்றுமே பிரிந்துள்ளவையாகவும் மாறா இயல்புடையனவாகவும் கருதுகிறது. மாற்றம் என்பதை அளவில் கூடுதல் அல்லது குறைதல் அல்லது இடமாற்றம் என்றே இக்கண்ணோட்டம் பார்க்கிறது. அளவு கூடுவது அல்லது குறைவது, அல்லது ஒன்று ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாறுவது ஆகிவற்றிற்கான காரணம், பொருட்களின் உள்ளே இருப்பது இல்லை மாறாக பொருட்களுக்கு வெளியே உள்ளது அதாவது மாற்றத்துக்கான உந்து சக்தி பொருட்களுக்கு வெளியில் இருக்கிறது என்று இந்நோக்கு கருதுகிறது. இப்பேரண்டத்தில் உள்ள வெவ்வேறு வகையான அனைத்துப் பொருட்களும், அவற்றின் பண்புகளனைத்தும் அவை முதலில் தோற்றம் பெற்ற காலத்தில் எப்படி இருந்தனவோ, அவ்வாறேதான் மாற்றமில்லாமல் அப்படியே இருந்து வருகின்றன என்று இயங்காவியலாளர்கள் கருதுகின்றனர்.
பின்னர் ஏற்பட்ட மாறுதல்கள் அனைத்தும் அளவில் ஏற்பட்ட கூடுதல் அல்லது குறைவாகவே இருக்கின்றன என்றும் அவர்கள் கருதுகின்றனர். ஒருபொருள் மீண்டும் மீண்டும் அதே பொருளாகவே திரும்பவும் மாறுகிறதேயன்றி, அதற்கு மாறுபட்ட வேறொரு பொருளாக அது மாற்றமடைய முடியாது என அவர்கள் வாதாடுகிறார்கள். அவர்களுடைய கருத்துப்படி, முதலாளியச் சுரண்டல், முதலாளியப் போட்டி, முதலாளிய சமுதாயத்தின் தனிமனிதச் சித்தாந்தம் ஆகியவை அனைத்தையும் பண்டைய அடிமைச் சமுதாயத்திலும் அதற்கு முந்தைய தொண்மைச் சமுதாயத்திலும் கூடக் காண முடியும்; அவை ஒருபோதும் மாறா வண்ணமே இருந்துவரும். புவியியல், தட்பவெட்ப நிலைமை போன்ற சமுதாயத்துக்கு வெளியே உள்ள காரணிகளையே இவர்கள் சமூக வளர்ச்சிக்கான காரணங்களாகக் காட்டுகின்றனர். இவர்கள் ஒன்றின் வளர்ச்சிக்கான காரணத்தை, அதற்கு வெளியே, மிகவும் எளிதான வழியில் கண்டறிய முயல்வதோடு, அதற்கு உள்ளே உள்ள முரண்பாடுகளிலிருந்துதான் அதன் வளர்ச்சி உருவாகிறது என்கிற பொருள்முதல்வாத இயங்கியல் கோட்பாட்டை மறுக்கவும் செய்கிறார்கள். இதன் விளைவாக, பொருட்களின் பண்புகளில் உள்ள பல்வேறுவகை வேறுபாடுகளையோ, ஒரு பண்பு மற்றொரு பண்பாக மாறுவதையோ இவர்களால் விளக்க முடிவதில்லை. ஐரோப்பாவில், இத்தகைய சிந்தனை 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் எந்திரவியல் பொருள்முதல்வாதமாகவும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கொச்சைப் பரிணாமவியலாகவும் இருந்தது. சீனாவில், "விண்ணுலகம் மாறுவதில்லை அதுபோல " தவோவும் மாறுவதில்லை" என்ற கூற்றில் இந்த இயங்காவியல் சிந்தனை வெளிப்படுத்தப் பட்டுள்ளது. (துங் சுங் - ஷூ (கி.மு. 179 - 104) வின் கூற்றே இது. இவர் ஹன் வம்சத்தில் "கன்பூசிஸ்" தத்துவத்தை விளக்கிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவராய் விளங்கினார்) இக்கருத்து, உளுத்துப் போன நிலவுடமை ஆளும் வர்க்கங்களால் நெடுங்காலம் தூக்கி நிறுத்தப்பட்டு வந்தது. ஐரோப்பாவிலிருந்து கடந்த நூற்றாண்டுகளாக இறக்குமதி செய்யப்பட்டு வந்த எந்திரவியல் பொருள்முதல்வாதமும், கொச்சைப் பரிணாமவிய லும் முதலாளிய வர்க்கத்தால் ஆதரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த இயங்காவியல் உலக நோக்குக்கு எதிராக பொருள்முதல்வாத இயங்கியல் உலக நோக்கு அமைந்துள்ளது. ஒரு பொருளின் வளர்ச்சியை ஆய்ந்தறிய வேண்டுமானால், நாம் அதை உள்ளார்ந்தும், அப்பொருள் இதர பொருள்களுடன் கொண்டுள்ள தொடர்புகளைக் கொண்டும் ஆய்ந்தறிய வேண்டுமென்று பொருள்முதல்வாத இயங்கியல் சொல்கிறது. பொருள்களின் வளர்ச்சி என்பதை அப்பொருளின் உள்ளியக்கம், அவற்றின் இன்றியமையாத் தன்னியக்கம் என்றே புரிந்துகொள்ள வேண்டும். அதே வேளையில் ஒவ்வொரு பொருளும் தனது இயக்கத்தில் தன்னைச் சுற்றியுள்ள பொருட்களுடன் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தாகவும், ஒன்றை யொன்று பாதிப்பனவாகவும் இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும். ஒரு பொருளின் வளர்ச்சிக்கான அடிப்படைக் காரணம் பொருளுக்கு வெளியே இருப்பதன்று; அதற்கு உள்ளேயே இருப்பதாகும்; இது அதற்குள்ளே நிலவும் முரண்பாட்டு இயல்பில் பொதிந்துள்ளது. ஒவ்வொரு பொருளிலும் இந்த உள் முரண்பாட்டு (அகமுரண்பாடு - வழக்குச் சொல்) இயல்பு உள்ளது. எனவேதான், அப்பொருள் இயக்கமும் வளர்ச்சியும் பெறுகிறது. ஒரு பொருளுக்குள்ளே உள்ள முரண்பாட்டு இயல்புதான் அப்பொருளின் வளர்ச்சிக்கான அடிப்படை காரணம். அதே வேளையில் அப்பொருள் பிற பொருள்களுடன் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டுள்ள உறவுகளும் ஒன்றையொன்று பாதிப்பதும் அப்பொருளின் வளர்ச்சிக்கான இரண்டாம் நிலைக் காரணங்களே ஆகும். இவ்வாறாக, எந்திரவியல் பொருள்முதல்வாதமும் கொச்சைப் பரிணாம வியலும் கற்பிக்கிற புறக்காரணக் கோட்பாட்டை - வளர்ச்சிக்கான உந்து சக்தி பொருளுக்கு வெளியில் உள்ளது என்ற கொள்கையை - பொருள்முதல்வாத இயங்கியல் எதிர்க்கிறது. வெறும் புறக்காரணங்கள் எந்திரவியல் இயக்கத்தை, அதாவது, அளவு மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்த வழிவகுக்குமே யொழிய, பொருட்களின் பண்புகள் ஆயிரமாயிரம் வகைகளில் ஏன் மாறுபடுகின்றன என்பதையோ, ஒரு பொருள் வேறு ஒரு பொருளாக மாறுவது ஏன் என்பதையோ, அக்கொள்கையால் விளக்க முடியாது என்பது தெளிவு. உண்மையில் புறச்சக்தியால் தூண்டப்படுகிற எந்திரவியல் இயக்கமும் கூட பொருட்களுக்குள் இருக்கும் உள்முரண்பாட்டு இயல்பால்தான் ஏற்படுகிறது. இதேபோல, தாவரங்களிலும் விலங்குகளிலும் ஏற்படுகிற இயல்பான வளர்ச்சி - அவற்றின் அளவில் ஏற்படும் வளர்ச்சிக்கான முதன்மைக் காரணம், அவற்றில் உள்ள உள் முரண்பாடுகளே ஆகும். அது போலவே, சமுதாய வளர்ச்சிக்கு முதன்மையாக இருப்பவை புறக்காரணங்கள் அன்று - உட்காரணங்கள்தான். ஒரே வகையான புவியியல், தட்பவெப்ப நிலைமைகளைக் கொண்ட பல்வேறு நாடுகள் தத்தம் வளர்ச்சியில் வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் கொண்டவை யாகவே உள்ளன. மேலும், புவியியல் அமைப்பும், தட்ப்பவெப்ப நிலைமையில் மாற்றங்கள் ஏற்படாத நிலையிலும் கூட அதே நாட்டில் மாபெரும் சமுதாய மாற்றங்கள் உண்டாகக் கூடும். ஏகாதிபத்திய ரஷ்யா, சோசலிச சோவியத் ஒன்றியமானது. உலகிலிருந்து ஒதுங்கி நின்ற நிலவுடமை ஜப்பான், ஏகாதிபத்திய ஜப்பானாகியது. இருந்தும் இந்த நாடுகளின் புவியியலிலும், தட்பவெப்ப நிலைமைகளிலும் யாதொரு மாறுதலும் ஏற்படவில்லை. நீண்ட நெடுங்காலமாக நிலவுடமை ஆளுமைக்கு உட்பட்டிருந்த சீனம், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மாபெரும் மாறுதல்களுக்கு உட்பட்டு வருகிறது; இப்போது அது, விடுதலையும் சுதந்திரமும் பெற்ற ஒரு புதிய சீனமாக மாறும் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இருந்தும், சீனத்தில் புவியலிலோ, தட்பவெப்ப நிலையிலோ யாதொரு மாறுதலும் இதுவரை ஏற்படவில்லை. இப்புவி முழுவதிலும், அதன் பகுதி ஒவ்வொன்றிலும் புவியியலிலும், தட்பவெப்ப நிலைமைகளிலும் மாறுதல்கள் ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால், மாறுதல்கள் சமுதாய மாற்றங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அற்பமானவையாகவே இருக்கின்றன. புவியியல், தட்பவெப்ப நிலைமைகளில் மாறுதல்கள் வெளிப்பட பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கின்றன. ஆனால், சமுதாய மாற்றங்கள் ஏற்பட ஆயிரக்கணக்கான, நூற்றுக்கணக்கான, சில பத்தாண்டுகள், அவ்வளவு ஏன் புரட்சியின் காலத்தில் ஒரு சில ஆண்டுகள் அல்லது ஓரிரு மாதங்கள் கூட பிடிக்கின்றன. இயற்கையில் ஏற்படும் மாறுதல்களுக்கான முதன்மைக் காரணம், இயற்கையில் உள்ள உள் முரண்பாடுகளின் வளர்ச்சியே என பொருள்முதல்வாத இயங்கியல் கூறுகிறது. சமுதாய மாற்றங்களுக்கான முதன்மைக் காரணம், சமுதாயத்தில் உள்ள உள் முரண்பாடுகளின் வளர்ச்சியாகும். அதாவது, உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடு, வர்க்கங்களுக்கு இடையே உள்ள முரண்பாடு, பழமைக்கும் புதுமைக்கும் இடையே உள்ள முரண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியே ஆகும். இம்முரண்பாடு களின் வளர்ச்சியே, சமுதாயத்தை முன்னுக்குத் தள்ளி, பழைய சமுதாயத்தை அகற்றி புதிய சமுதாயத்தை நிறுவுவதற்கான உந்து சக்தியை வழங்குகிறது. பொருள்முதல்வாத இயங்கியல் புறக்காரணங்களைப் புறக்கணிக்கின்றதா? ஒருபோதும் இல்லை. புறக்காரணங்கள் மாறுதலுக்கான சூழ்நிலை; அகக்காரணங்களோ மாறுதல்களுக்கான அடிப்படை. புறக்காரணங்கள் அகக்காரணங்கள் வழியாகவே செயல்படுகின்றன என்று பொருள்முதல்வாத இயங்கியல் கருதுகின்றது. பொருத்தமான வெப்பநிலையில் ஒரு முட்டை குஞ்சாக மாறுகிறது. ஆனால், எந்த வெப்ப நிலையிலும் ஒரு கல் குஞ்சாக மாறுவதில்லை. ஏனெனில், இரண்டுமே வெவ்வேறான அடிப்படை கொண்டவை. பல்வேறு நாட்டு மக்களுக்கு இடையே ஒருவருக்கொருவரின் இடைவிடாத பாதிப்புகள் இருந்து வருகின்றன. முதலாளிய சகாப்தத்தில், இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சகாப்தத்தில் பல்வேறு நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் துறைகளில் இந்நாடுகள் ஒன்றுக்கொன்று ஏற்படுத்திக் கொள்ளும் செல்வாக்கும் பாதிப்புகளும் மிகப் பெரியவை. அக்டோபர் சோசலிசப் புரட்சி ரஷ்ய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் கூட ஓர் புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
இது, உலகின் பிற நாடுகளில் உள்மாறுதல்கள் ஏற்படுவதற்கு உரியதொரு செல்வாக்கினை உருவாக்கியது. அதைப்போலவே, இன்னும் குறிப்பிடத்தக்க ஆழமான முறையில் சீனத்தின் உள் மாறுதல்களிலும் செல்வாக்கு செலுத்தியது. ஆயினும், இம் மாற்றங்கள் சீனம் உட்பட இந்த நாடுகளின் வளர்ச்சியின் உள்விதிகளுக்கு ஏற்பத்தான் நடந்தேறின. போரில் ஒரு படை வெல்கிறது. மற்றொரு படை தோற்கடிக்கப் படுகிறது. வெற்றியும் தோல்வியும் அகக்காரணங்களால்தான் முடிவு செய்யப் படுகின்றன. தனது வலிமையைக் கொண்டோ அல்லது திறமை வாய்ந்த தலைமைப் பண்பு கொண்டோ, ஒரு படை வெல்கிறது. தனது வலுக்குறைவினாலோ அல்லது திறமையற்ற தலைமைப் பண்பு காரணமாகவோ, மற்றொரு படை தோல்வியடைகிறது. எனவே, அகக் காரணங்கள் வழியாகவே புறக்காரணங்கள் செயல்படுகின்ற. 1927 இல் சீனத்தில் பாட்டாளி வர்க்கம் சீனப் பெரும் முதலாளிய வர்க்கத்தால் தோற்கடிக்கப்பட்டது ஏன்? சீனப் பாட்டாளி வர்க்கத்துக்குள்ளேயே (சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளேயே) இருந்த சந்தர்ப்பவாதமே இத்தோல்விக்கு காரணமாகும்.
நாம் இந்த சந்தர்ப்பவாதத்தை துடைத்து அழித்த பின்னரே சீனப்புரட்சி தொடர்ந்து முன்னேறத் தொடங்கியது. அதற்குப் பிறகும் சீனப் புரட்சி பகைவர்களால் கடுமையான பின்னடைவுகளுக்கு உள்ளாக்கப்பட்டது. ஏனெனில், நமது கட்சிக்குள் துணிச்சல்வாதம் தலையெடுத்ததுதான் காரணமாகும். இந்த துணிச்சல்வாதத்தை நாம் துடைத்து அழித்தோம்; நமது லட்சியம் மேலும் முன்னேறியது. இவ்வாறு, ஓர் அரசியல் கட்சியானது தனது அரசியல் வழியில் சரியாக இருந்தால் தனது அமைப்புகளை உறுதியாகக் கொண்டிருந்தால் புரட்சியை வெற்றிக்கு வழிநடத்திச் செல்ல முடியும் என்பது தெளிவு.
பண்டைக் காலத்திலேயே சீனத்திலும் ஐரோப்பா விலும் இயங்கியல் உலகநோக்கு தோன்றியது. இப்பண்டைய இயங்கியல், தன்னியல்பான எளிமையான தன்மையைக் கொண்டிருந்தது. அப்போதைய சமுதாய வரலாற்று நிலைமைகளில், முறையானதொரு கோட்பாட்டமைப்பை அப்போது உருவாக்கிக் கொள்ள அதனால் முடியவில்லை. எனவே, அதனால் உலகைப் பற்றிய முழுமையான விளக்கத்தைச் சொல்ல முடியவில்லை. அதனுடைய இடத்தை இயங்காவியல் எடுத்துக் கொண்டது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த புகழ்பெற்ற ஜெர்மன் தத்துவவாதி ஹெகல், இயங்கியலுக்கு மிகத் தலையாய பங்களிப்பை வழங்கினார். ஆனால் இவரது இயங்கியல், கருத்துமுதல்வாதமாகவே இருந்தது. பாட்டாளி வர்க்க இயக்கத்தின் மாபெரும் செயல் வீரர்களாகிய மார்க்சும் எங்கெல்சும் மனித அறிவின் வரலாற்றிலுள்ள ஆக்கப்பூர்வமான சாதனைகளை எல்லாம் ஒன்றிணைத்து ஹெகலின் இயங்கியலில் உள்ள அறிவுக் கூறுகளைத் திறனாய்வு நோக்கில் உள்வாங்கிக் கொண்டு இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்னும் மாபெரும் கோட்பாட்டைப் படைத்தார்கள். அதன் பின்னரே, மனித அறிவின் வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் நடந்திராத பெரும் புரட்சி நடந்தேறியது. இக்கோட்பாட்டை லெனினும் ஸ்டாலினும் மென்மேலும் வளர்த்தெடுத்தனர். சீனத்தில் இது பரவியவுடன், மிக விரைவில் சீன சிந்தனை உலகில் மாபெரும் மாறுதல்களை ஏற்படுத்தியது.
இந்த இயங்கியல் உலக நோக்கு முதன்மையாக நமக்குக் கற்றுத்தருவது என்ன? வெவ்வேறு வகைப்பட்ட பொருட்களில் உள்ள முரண்பாடுகளின் - எதிரும் புதிருமான கூறுகளின் இயக்கத்தைக் கூர்ந்து கவனித்து பகுப்பாய்வு செய்வதில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தகைய பகுப்பாய்வின் அடிப்படையில், முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்று நமக்கு இது சொல்கிறது. எனவே, பொருள்களில் உள்ள முரண்பாட்டின் விதியை பருண்மையான முறையில் உணர்ந்து கொள்வது நமக்கு மிகமிக முதன்மையாகும்.
+++++++++++++++++++++++++++++++++
குறிப்புகள்.
இயங்காவியல், இயங்கியல் என்ற சொற்களுக்குச் சில விளக்கங்கள் வழங்கக் கடமைப்பட்டுள்ளோம். மார்க்சியத் தத்துவத்தில் கையாளப்படும் இச்சொற்கள் அவை நேரடியாக வழங்கும் பொருள்களுக்கும் கூடுதலான, ஆழமான பொருள்களைக் கொண்டுள்ளன. எனவே எவற்றைக் குறிக்க இச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ அவற்றை முழுவதுமாக வெளிப்படுத்தும் போதிய தன்மை இச்சொற்களுக்கு இல்லை. ஆயினும் இச்சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. சிலர் "இயக்க மறுப்பியல்" என்றே "இயங்காவியலை"க் குறிப்பிடுகின்றனர். "இயங்காவியல்" (meta physical) என்ற சொல்லை மாவோ கீழ்காணும் பொருளில் பயன்படுத்துகிறார்.
எந்திரமான, படிப்படியாக வளர்ச்சியடைகிற, நேர்கோட்டில் செல்லுகிற, பாய்ச்சல்களையும் திருப்பங்களையும் ஒப்புக்கொள்ளாத, ஒரு பொருளின் இயக்கத்துக்கு ஒரு புறக் காரணத்தையே கற்பிக்கிற, ஒரு பொருளில் ஏற்படும் மாற்றத்துக்கு அதற்கு உள்ளேயே உள்ள அகக் காரணம்தான் காரணம் என்பதை ஏற்காத ஒரே பொருளில் இரண்டு முரண்பட்டக் கூறுகள் உள்ளன என்பதைப் பார்க்காத, மேலோட்டமாகப் பார்க்கிற, பொருளின் உட்சாரத்தைக் காணாத, அதைக் காண இயலாத, உட்சாரம் என்பது இருப்பதையே ஒப்புக்கொள்ளாத, பொருட்களைத் தனித்தனியாகப் பார்க்கிற கண்ணோட்டம். இதற்கு நேர்மாறான எதிர்மறையே, இயங்கியல் ( dialectical) என்பதாகும்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
1. எந்தப் பொருளையும், அல்லது பிரச்சனைகளையும் நாம் திறனாய்வு செய்வதற்கு இயங்கியல் முறையைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இயங்கியல் முறைதான் பொருள்களை ஆய்வு செய்வதற்கான ஒரே விஞ்ஞான முறையாகும்.
2. இயங்கியல் முறையில் நாம் ஆய்வு செய்வதற்கு இயங்கியல் விஞ்ஞானமானது சில விதிகளை நமக்கு வகுத்துக் கொடுத்துள்ளது. அத்தகைய விதிகளில் முரண்பாடு பற்றிய விதிதான் மிகவும் அடிப்படையான விதியாகும். இந்த முரண்பாடு பற்றிய விதியையே இந்த தொடர் கட்டுரையின் மூலம் நாம் படித்து புரிந்துகொள்ளப் போகிறோம்.
3. இயங்கியல் முறையிலான ஆய்வு என்பது ஒவ்வொரு பொருளிலும் அல்லது பிரச்சனை களிலும் அதன் சாரத்துக்குள் உள்ள முரண்பாடுகளை ஆராய்வதுதான் என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
4. ஒரு பொருள் அல்லது பிரச்சனையில் ஏற்படும் மாற்றம் அல்லது இயக்கத்துக்கு அடிப்படை அந்தப் பொருளுக்குள் உள்ள இரண்டுவிதமான எதிர்மறைகளின் ஐக்கியமும் போராட்டமும்தான் அடிப்படையாகவும் சாரமாகவும் உள்ளது. ஆகவே ஒரு பொருளை நாம் புரிந்துகொள்ள வேண்டு மானால் அந்தப் பொருளுக்குள் இருக்கும் இந்த இரண்டு எதிர்மறைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அடிப்படையை நாம் எப்போதும் மறக்கக் கூடாது.
5. முரண்பாடு பற்றிய விதியின் அடிப்படையில் பொருள்களை நாம் ஆராயும்போது இயங்கியல் விஞ்ஞானம் தொடர்பான பல்வேறுவிதமான பிரச்சனைகளையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது வரும்.
6. கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளும் இயங்காவியல் கண்ணோட்டம் கொண்ட தவறான கண்ணோட்டம் கொண்டவர்களும் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே அவர்களைப் போன்றவர்கள் இயங்கியல் முறையில் திறனாய்வு செய்யும் திறமையை வளர்த்துக்கொள்வதற்கு தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். விஞ்ஞான முறையை கற்றுக்கொள்வதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் நாம் சில கஷ்டங்களை சந்தித்தே ஆகவேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
7. இயங்காவியல் என்ற கண்ணோட்டம் என்பது விஞ்ஞானத்திற்கு எதிரான, விஞ்ஞானத்தை மறுக்கும் கண்ணோட்டமாகும். இயங்கியல் கண்ணோட்டம் என்பது விஞ்ஞானத்தை ஏற்றுக்கொண்ட விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட கண்ணோட்டம் ஆகும். ஆகவே உண்மையை அறிவதில் ஆர்வமுடையவர்கள் விஞ்ஞானத்தின் மூலமாகவே உண்மையை அறிய முடியும் என்பதால் இயங்கியல் கண்ணோட்டம் உடையவர்களாகவே தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
8.பொருள்களின் வளர்ச்சியை இயங்காவியலாளர் கள் ஒரு நிலையே திரும்பத் திரும்ப ஏற்படுகிறது என்றும், குறைதல் அல்லது நிறைதல் என்பதாகவே இருக்கிறது என்று கருதுகிறார்கள். இது தவறானதாகும்.
9.இயங்கியலாளர்கள், வளர்ச்சி என்பது இணைந்த எதிரும் புதிருமான இரண்டு கூறுகளின் விளைவாகவே நிகழ்கிறது என்றும், ஒன்று மற்றொன்றாக மாறுகிறது என்பதே வளர்ச்சி என்றும் பார்க்கிறார்கள்.
10.இயங்காவியல் என்பது கருத்துமுதல்வாதக் கண்ணோட்டதிலிருந்து பிரிக்க முடியாது.
11.இயங்காவியலானது பொருட்களை தனித் தனியாக இயங்கிக்கொண்டு இருப்பதா கவும், நிலையானதாகவே இருக்கிறது என்றும் பார்க்கிறது. இயற்கை எப்போதும் ஒரே மாதிரி யாகவே இருக்கிறது என்றும் மாற்றங்கள் அனைத்தும் அளவில் மட்டுமே மாற்றங்கள் நடந்து கொண்டிருப்பதாகப் பார்க்கிறது.
12. இயங்காவியல் பொருட்களின் பண்பு முதலில் எப்படி இருந்ததோ அதே மாதிரியாகவே எப்போதும் இருக்கிறதாகப் பார்க்கிறது. அதாவது பொருட்களில் ஏற்படும் பண்பு மாற்றத்தை இது காணத் தவறுகிறது.
13. தற்போது நிலவும் முதலாளியச் சுரண்டல், முதலாளியப் போட்டியானது மிகப் பழங்காலத்தி லிருந்தே அதாவது அடிமைச் சமூகத்திலிருந்தே இருந்துவருவதாக இயங்காவியல் கருதுகிறது. இதன் மூலம் மனித சமூகம் கம்யூனிச சமூகமாக மாறாது என்று இயங்காவியலாளர்கள் கருதுகிறார்கள்.
14. இயங்காவியலாளர்கள் மனித சமூகத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு புவியல், தட்பவெப்ப நிலைமைகள் போன்ற சமூகத்திற்கு வெளியிலுள்ளதையே காரணமாகக் காட்டுகிறார் கள். சமூகத்திற்குள்ளே உள்ள முரண்பாடுகள்தான் சமூகத்தின் மாற்றத்திற்கு காரணம் என்பதை இயங்காவியலாளர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை.
15. ஒரு பொருளின் வளர்ச்சியை ஆய்வு செய்து உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அந்தப் பொருள்ளுக்குள் இருக்கும் உள்ளார்ந்த தன்மையையும், அந்தப் பொருள் பிற பொருள்களுடன் கொண்டுள்ள தொடர்புகளையும் அல்லது உறவையும் கவனமாக பரிசீலிப்பதன் மூலமே அந்தப் பொருளின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் நமக்கு வழிகாட்டுகிறது.
16. பொருள்களின் வளர்ச்சி என்பது அந்தப் பொருளின் உள்ளியக்கம் என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அதே வேளையில் தன்னைச் சுற்றியுள்ள பொருட்களோடு ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும், ஒன்றையொன்று பாதிப்பதாகவும் இருக்கிறது என்று இயங்கியல் கூறுகிறது.
17. ஒரு பொருளின் வளர்ச்சிக்கு அடிப்படையானது அந்தப் பொருளுக்கு உள்ளே இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று இயங்கியல் கூறுகிறது. வளர்ச்சிக்கு காரணம் பொருளுக்கு வெளியே இருக்கிறது என்று இயங்காவியல் கூறுகிறது.
18. ஒரு பொருளின் வளர்ச்சிக்கான அடிப்படையானது அந்தப் பொருளுக்குள்ளே உள்ள முரண்பாடாகும் என்றும் அப்பொருள் பிற பொருள்களுடனான தொடர்புகள் என்பது இரண்டாம்பட்ச காரணமாகும் என்று இயங்கியல் கூறுகிறது. இதன் மூலம் புறக்காரணத்தை இயங்கியல் மறுக்கவில்லை. புறக்காரணம் என்பதை இரண்டாம்பட்சமாகக் கருதுகிறது. புறக்காரணத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
19. புவியியல் மற்றும் தட்பவெப்பங்களில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றாலும் சமூகத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை நாம் காணலாம். ஆகவே சமூக மாற்றத்திற்கு சமூகத்திலுள்ள முரண்பாடுகளே முதன்மையான காரணமாக இருக்கிறது என்று இயங்கியல் கூறுகிறது. ஆகவே நாம் சமூக மாற்றத்தை புரிந்துகொள்ள வேண்டுமானால் சமூகத்திற்குள் நிலவும் முரண்பாடுகளை அதாவது வர்க்க முரண்பாடுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். வர்க்கங்களைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.
20. இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சியைப் போன்று சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படாது. இயற்கையில் அக முரண்பாட்டின் அடிப்படையில் புறச் சூழல்கள் சாதகமாக இருந்தால் மாற்றங்கள் இயல்பாக நடந்துவிடும். அதாவது ஒரு நெல் விதையைத் தூவிவிட்டு புறச் சூழல்களான காற்று நீர் போன்றவை சாதகமாக இருந்தால் நெல்லானது முளைவிட்டு தானாக வளர்ந்துவிடும். ஆனால் சமுதாய வளர்ச்சியானது இப்படி தானாக வளராது. சமூகத்தில் உள்ள முரண்பாடுகளைப் புரிந்துகொண்டு அந்த சமூகம் எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறது என்பதை மனிதர்கள் சரியாக கணித்து அத்தகைய மாற்றங்களை துரிதப்படுத்துவதற்கான செயல்களில் மனிதர்கள்
உணர்வுப்பூர்வமாக ஈடுபடுவதன் மூலமே சமூகமானது மாறும். அதாவது சமூகமானது தானாக மாறாது மனிதர்களின் உணர்வுப் பூர்வமான செயல்பாட்டின் மூலமே சமூகம் மாறும். மேலும் சமூகத்தின் மாறுதலுக்கான அடிப்படை சமூகத்திற்குள்ளேயே இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு சமூகத்திலுள்ள வர்க்கங்களைப் பற்றி தெளிவாக ஆய்வு செய்து, சமூகத்தை மாற்றுவதற்கு விரும்பும் வர்க்கங்கள் ஒன்றுதிரண்டு சமூக மாற்றத்திற்கு எதிராக இருக்கும் வர்க்கங்களை எதிர்த்துப் போராடுவதன் மூலமே சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்று இயங்கியல் பொருள்முதல்வாதம் நமக்கு எடுத்துச் சொல்கிறது. எனவே இயங்கியல் பொருள்முதல் வாதக் கண்ணோட்டத்திலிருந்து சமூகத்தை அதாவது சமூகத்தில் நிலவும் வர்க்கங்களை ஆய்வு செய்து சமூக மாற்றத்திற்கான திட்டத்தை வகுத்து வர்க்கங்களைத் திரட்டி வர்க்கப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நடத்துவதன் மூலமே சமூகத்தை மாற்றி உழைக்கும் மக்களுக்கு உன்னதமான வாழ்க்கையை ஏற்படுத்த முடியும்.
அதனை நாம் சாதிப்பதற்கு முரண்பாட்டின் விதிகளைத் தெரிந்துகொள்வோம். ........ தேன்மொழி.
No comments:
Post a Comment