ஐந்து அரங்குகளில் தேர்வை எதிர்கொள்வோம். சௌ-என்-லாய்.-தேன்மொழி

 நமது முன்னணி ஊழியர்கள் ஐந்து அரங்குகளில் தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருப்பதன் அவசியம் பற்றி நான் பேச விரும்புகிறேன். அவை: சித்தாந்தம், அரசியல், சமூக உறவுகள், குடும்ப உறவுகள், அன்றாட வாழ்வு ஆகியனவாகும்.

முதலாவதாக, நாம் சித்தாந்த அரங்கில் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

நாம் அடிக்கடி குறிப்பிடுகிறபடி, நமது சிந்தனையை மறுவார்ப்பு செய்வதும் உலகைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் சரியான கண்ணோட்டத்தைப் பெறுவதுமே இதற்குத் தேவையாகும். இதன் பொருள் மார்க்சிய - லெனினியக் கண்ணோட்டத்தை அல்லது இயக்கவியல் - வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தைப் பெறுவதே ஆகும்.

இந்த நோக்கத்திற்காக, தோழர் மா.சே.துங்கின் நடைமுறை பற்றி, முரண்பாடு பற்றி ஆகிய விளக்கமான கட்டுரைகளிலும் அறிவு பற்றிய அவரது அண்மைக்கால குறிப்புகளிலும் (மே 1963 ல் கட்சியால் ஏற்கப்பட்ட தோழர் மாவோவின் "நமது அண்மைக்கால கிராமப்புற வேலைகளில் சில பிரச்சனைகளின் மீதான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் முடிவுகள் அதாவது 10 அம்ச முடிவுகள்"என்ற அறிக்கையிலிருந்து ஒரு பகுதி இங்கே குறிப்பிடப்படுகிறது. 1965 ல் இது "சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன?" என்ற தலைப்பிலான கட்டுரையாக மாவோவின் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள படைப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளது). உள்ள தத்துவார்த்த அடிப்படைக் கோட்பாடு களை நாம் கற்றுணர்வதும் எப்படிச் செயல்படுத்துவது என்பதை அறிந்து கொள்வதும் அவசியமாகும். இது வாழ்நாள் முழுவதற்குமான பெருமுயற்சியாகும். காலம் எப்போதும் முன்னோக்கிச் செல்கிறது என்பதை நாம் அறிவோம்.

காலத்துக்குப் பின்னே தேங்கி நின்றுவிடாமல் நமது சிந்தனையை காலத்தோடு ஒட்டி முன்னேறுவதே சித்தாந்த மறுவார்ப்பின் நமது நோக்கமாகும். காலங்கள் வளர்ச்சியை ஒருபோதும் நிறுத்துவதில்லை என்பதனால், நமது சிந்தனையை மறுவார்ப்பு செய்வதையும்நாம் நிறுத்திவிட முடியாது. இன்றிலிருந்து இன்னும் பத்தாயிரம் ஆண்டுகள் கடந்து போனாலும், முன்னேறியதற்கும் பின்தங்கிய தற்கும், பழமைக்கும், புதுமைக்கும், தனிமனிதனுக்கும் கூட்டுத்துவ சமூகவிருப்பத்துக்கும் இடையிலான முரண்பாடு கள் மக்கள் மனதில் தொடர்ந்து பிரதிபலிக்கவே செய்யும். எனவே அப்போதும் கூட சித்தாந்த மறுவார்ப்பு செய்து கொள்வது அவசியமாகவே இருக்கும். இந்தப் பணிக்கு இறுதி முடிவு ஏற்பட குறிப்பிட்ட ஆண்டு அல்லது குறிப்பிட்ட தேதியை இப்போதே நாம் எப்படி தீர்மானிக்க முடியும்? இது முற்று முழுதாக சாத்தியமே இல்லை. சித்தாந்த மறுவார்ப்பில் போதிய கவனம் செலுத்தாமல் போனால், அதன் விளைவாக புரட்சிகர ஊக்கம் குறைந்தால், புரட்சியில் பல்லாண்டுகளுக்கு முன்பே இணைந்து பணியாற்றிய தோழர்கள் கூட தமது தகுதிப் படிநிலையில் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படும். எனவே சித்தாந்த மறுவார்ப்பு செய்து கொள்வதை இடையறாத முயற்சியுடன் கூடிய பற்றுறுதி மிக்க நீண்டகாலக் கடமையாக நாம் மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் கொள்கையானது, நமது கண்ணோட் டத்தை விரிவுபடுத்த உதவும். இன்னும் பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் சித்தாந்த அரங்கில் முரண்பாடுகள் நீடிக்கவே செய்யும் என்கிற நிலையில், அப்போதும் மக்கள் தமது சிந்தனையை மறுவார்ப்பு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்கிற நிலையில், இந்தப் பணியானது ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாகவும் அதில் திருப்தி அடைந்துள்ள தாகவும் நாம் எப்படி கருத முடியும்? முடியாது, நாம் ஒருபோதும் திருப்தி அடையக் கூடாது.

சித்தாந்த அரங்கில் நம்மை உரமேற்றிக் கொள்ள, நமது சொந்த வர்க்க மூலத்தைப் பற்றி கவனத்தில் கொள்வதும், நம்மைச் சுற்றியிலுள்ள மக்களிடையே நிலவும் வர்க்க உறவுகளையும் நாம் கையாளுகிற பிரச்சனைகளில் பொதிந்துள்ள வர்க்க உறவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு நல்ல குடும்பப் பின்னணியிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்றும், நடைமுறை வேலைகளில் களங்க மற்றவர் என்றும், புரட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்துள்ளவர் என்றும் வைத்துக்கொள்வோம். உதாரண மாக உங்களுக்கு ஹாங்காங்கில் பணி ஒதுக்கப்பட்டிருந்தால், அங்கு நிலவும் குறிப்பான சமூக சூழ்நிலைமைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு நீங்கள் இன்னமும் கவனமாக ஆராய வேண்டும்.ஹாங்காங்கில் ஒதுக்கப்படும் பணிக்குப் பதிலாக, பெய்ஜிங்கில் அரசு தந்திர துறை யிலோ, அந்நிய நாடுகளுடனான வர்த்தகத் துறையிலோ ஒருவேளை நீங்கள் பணியாற் றிட நேரலாம். அது அந்நியர்களுடனும் வர்த்தகர்களுடனும் அடிக்கடி தொடர்புகளும் சந்திப்புகளும் கொண்டதாக இருக்கும். அப்போது நீங்கள் சந்திக்கின்ற மக்களையும் பிரச்சனைகளையும் பற்றி ஆராய்வது உங்களுக்கு அவசியமாகும். நாம் இப்போது முதலாளித்துவ நாடுகளுடன் நல்ல பயனுள்ள முறையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

அந்நாடுகளிடமிருந்து முழு இயந்திரச் சாதனங்களை இறக்குமதி செய்யும் திட்டங் களும் உள்ளன. இப்பணிக்குப் பொறுப் பேற்றுள்ள தோழர்களில் சிலருக்கு அந்நிய வர்த்தகர்களோடு அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். இத்தகைய உறவுகளை ஆழமாகப் பகுத்தாராய வேண்டி யது இத்தோழர்களுக்கு மிகவும் அவசியம் ஆகும். இது எனக்கும் பொருந்தும். ஏனெனில் நானும் வெளிநாட்டவரோடு அடிக்கடி தொடர்பு கொண்டுள்ள பணியில் ஈடுபட்டுள்ளேன். எவ்வாறாயினும், பல்வேறு வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகளில் நாம் ஆழமாகக் கவனம் செலுத்த வேண்டும்.

எனது சொந்த அனுபவத்தையே இங்கே நான் சித்தரிக்க விரும்புகிறேன். நான் ஒரு நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தேன். முதலாளித்துவக் கல்வியைத்தான் நான் பெற்றேன்.

இருப்பினும் சித்தாந்த மறுவார்ப்பின் மூலம் என்னை ஒரு புரட்சிகர அறிவு ஜீவியாக மாற்றிக் கொண்டுள்ளேன். கடந்த காலத்தில் ஐக்கிய முன்னணி தொடர்பான கட்சி வேலைகளை நான் மேற்கொண்டேன். அதன் காரணமாக, சியாங்கே ஷேக்குடனும் அமெரிக்காவின் ஜெனரல் மார்ஷலையும் (ஜார்ஜ் மார்ஷல் (1880 - 1959), இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவத்தின் தலைமை அதிகாரியாவார். 1945 ல் அமெரிக்க அதிபர் ட்ருமனால் சீனாவுக்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டார். 1946 ஜனவரியில் கோமிண்டாங் தரப்பின் பிரதிநிதியாக ஜாங்ஹூன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பின் பிரதிநிதியாக தோழர் சௌஎன்லாய் ஆகியோரும் நடுவராக மார்ஷலும் கொண்ட "மூவர் குழு" அமைக்கப்பட்டு சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதில் கோமிண்டாங் தரப்பை ஆதரித்து அது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக மார்ஷல் பெருமுயற்சி செய்தார். ஆகஸ்டு 1946 இல் இந்த நடுவர் நடவடிக்கை தோல்வியடைந்துவிட்டதாகப் பிரகடனப்படுத்திய மார்ஷல், விரைவிலேயே சீனாவை விட்டு வெளியேறினார்). பல சந்தர்ப்பங்களிலும் சந்தித்துப் பேச நேரிட்டது. எனது பள்ளிக்கூட நண்பர்கள் பலரும் கோமிண்டான் கட்சி உறுப்பினர்களாவர். இப்போது அவர்கள் தைவானில் வசிக்கிறார் கள். எனவே எனது சமூக உறவுகள் மிகவும் சிக்கலானவை. அவை கட்சி சார்ந்தவர்கள், கட்சி சாராதவர்கள், வெளிநாட்டினர் என பல தரப்பட்ட மக்களை உள்ளடக்கி உள்ளன.

மேலும் நான் பல்வகைப்பட்ட நடவடிக்கை களில் அடிக்கடி பங்கேற்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் நான் வெளிநாடுகளுக்குக் கூட பயணம் மேற்கொள்கிறேன். இத்தகைய பயணங்களில் வழக்கமாக நான் முதலாளித் துவ நாடுகளின் அரசுத் தலைவர்களைச் சந்தித்துப் பேச வேண்டியுள்ளது. எனது சமூகத் தொடர்புகளின் சிக்கலான தன்மை யானது, நான் தெளிவான உணர்வோடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

எனக்கு இப்போது 65 வயதாகிறது. ஆனால் நான் என்னுடைய சிந்தனையை மறுவார்ப்புசெய்து கொள்ள அவசியமில்லாத அளவுக்கு, சித்தாந்த ரீதியாக எஃகு உறுதி பெற்று விட்டதாகக் கூறிக் கொள்ள முடியுமா? நான் அவ்வாறு கூறத் துணிய மாட்டேன்.

தோழர் லியாவோலுயான் (லியாவோலுயான் , 1960-களில் சீன மக்கள் குடியரசின் விவசாயஅமைச்சர்), "நம்மை விடுங்கள்; தலைமை அமைச்சரான சௌஎன்லாயே சித்தாந்த மறுவார்ப்புசெய்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்று கூறுகிறாரே" என்று நான் சொன்னதை நினைவு கூர்ந்து ஒருமுறை குறிப்பிட்டார். அது ஒரு நல்ல நோக்கமுடைய குறிப்பாகும்: நான் அதைப் பெரிதும் பாராட்டினேன். நான் அடிக்கடி என்னைச் சித்தாந்த ரீதியாக மறுவார்ப்பு செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவது உண்மையே. அப்பெரு முயற்சியை நான் இன்னமும் தொடர்ந்து வருகிறேன். இதில் நான் முன்னோடியாகவே விளங்க விரும்புகிறேன்.

சித்தாந்த ரீதியில் புத்தாக்கம் செய்து கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோம் என்றே நம்புகிறேன். எல்லா வகையான சமூக உறவுகளும் இன்னும்பலவும் ஒருவரது சித்தாந்தத்தின் மீது செல்வாக்கு செலுத்திதாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் எச்சரிக்கையுடன் உணர வேண்டும். எனவே நாம் அடிக்கடி நம்மை பரிசீலனை செய்து கொண்டு நம்முடைய தோழர்களுடன் கருத்துக் களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

வழக்கமான குளியலைப் போலவே, "சித்தாந்த குளியலை" யும் நாம் ஒழுங்காகவும் முறையா கவும் மேற்கொள்ள வேண்டும்.

சித்தாந்த மறுவார்ப்பைக் காற்றுக்கு இணையாக, காற்று இல்லாவிடில் நமது உயிர் வாழ்வே இல்லை என்பதால், இன்றியமை யாததாகக் கருதவேண்டும். இல்லையேல் நமது சிந்தனை துருப்பிடித்து வீணாகிப் போவதையே நாம் காண்போம். ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் கட்சியில் சேர்ந்த நாளிலிருந்து தனது வாழ்நாள் முடியும் வரை தன்னை சித்தாந்த மறுவார்ப்பு செய்து கொள்ள மனதளவில் தயாராக இருக்க வேண்டும். கட்சியில் இன்னும் சேராத போதிலும், புரட்சியில் துணிந்து இறங்கி சோசலிச நிர்மாணத்திலும் சோசலிச கட்டுமானத்திலும் பணிபுரிந்து வரும் நமது நண்பர்களுக்கும் இது பொருந்தும்.

இரண்டாவதாக, நாம் அரசியல் அரங்கில் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக மிகவும் முக்கியமானது என்னவெனில், நமது அரசியல் நிலைபாட்டைவழுவாமல் பற்றி நிற்பதாகும். புரட்சி அணியில் சேர்ந்துவிட்டதாலேயே நம்முடைய சரியான அரசியல் நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்பவர்கள் என்று கருதிக் கொள்ள முடியாது.

அரசியல் நிலைப்பாடு என்பது மிகச்சாரமான கருத்துருவாகும். புரட்சிகர நிலைப்பாட்டைநீங்கள் நெறி பிறழாமல் பற்றி நிற்கிறீர்கள் என்பதை, உண்மையான போராட்டத்தில் உங்கள் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்தே மதிப்பிட முடியும். ஒரு போராட்டத்தில் நீங்கள் உறுதியாக நின்றிருப் பீர்கள்; மற்றொன்றில் அவ்வாறு இருந்திருக்க மாட்டீர்கள் எனவே அரசியல் நிலைபாட்டில் ஒருவரது உறுதி அல்லது ஊசலாட்டத்தைப் பற்றி நீண்டகால போராட்டங்களின் ஊடாகத் தான் மதிப்பிட முடியும்.

ஒருவரது அரசியல் உறுதியை மதிப்பிட, வேலையைப் பற்றிய அவரது மனப்பான்மை, கட்சிக் கொள்கைகளைப் புரிந்து கொள்வதும் நடைமுறைப் படுத்துவதும் மக்களுடனான அவரது உறவு, கட்சிப் பற்றை அவர் கண்கூடாக வெளிப்படுத்தும் விதம் ஆகியவற்றையும் நாம்பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும்.கட்சியில் இன்னும் சேராதவர்களைப் பொருத்தவரை, அவர்கள் பாட்டாளி வர்க்கத் தை மிக முன்னேறிய வர்க்கமாகக் கருதுகிறார்களா, அதன் சித்தாந்தத்தைத் தங்களின் வழிகாட்டியாக ஏற்கிறார்களா என்பதை வைத்தே தீர்மானிக்க முடியும். குறிப்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் என்னவெனில் நமது கவனத்துக்கு வரும்போதே தவறுகளைத் திருத்துவதிலும் - சுய விமர்சனத்தைப் பின்பற்றுவதிலும் நாம் எந்த அளவுக்கு தயாராக இருக்கிறோம் என்பதே ஆகும்.

நான் இதுவரை கூறியதிலிருந்து அரசியல் அரங்கில் சோதனைகளுக்கு முன் உறுதியாகநிற்பது அவ்வளவு எளிதானதல்ல என்பது தெளிவாகும். ஒருவர் புரட்சியில் நீண்ட காலத்துக்கு முன்பே சேர்ந்தவர், பல போர்க் களங்களில் பங்கேற்று போரிட்டவர், பாராட்டத்தக்க பல வீரச் செயல்களில் ஈடுபட்டவர் என்பதாலேயே அவர் அரசியல் நிலைபாட்டில் உறுதிமிக்கவர் என்று நாம் கணித்துவிட முடியாது. அப்படி எந்த உத்தரவாதமும் தரவும் முடியாது. இல்லையெனில் சென் டூ ஷியு, (சென்டூஷியு (1879 - 1942), மே - 4 புதிய கலாச்சார இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். செப்டம்பர் 1915 இல் அவர் யூத் (இளைஞன்) என்ற பத்திரிக்கையின் ஆசிரியர். 1918 இல் லீ டாஷா என்பவருடன் சேர்ந்து அவர் வீக்லி ரிவியு (வாராந்திர மதிப்பாய்வு) என்ற பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தி, புதிய கலாச்சாரத்தைப் பரப்பினார்.

மே 4 இயக்கத்தைத் தொடர்ந்து அவர் மார்க்சியத்தை ஏற்று அதைப் பிரச்சாரம் செய்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிறுவனர்களில் அவரும் ஒருவரானார். முதல் ஆறாண்டுகளுக்குக் கட்சியின் முதன்மைத் தலைவராகவும் செயல்பட்டார். முதலாவது புரட்சிகர உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய காலத்தில் அவர் வலதுசாரி சரணாகதிவாதத்தை முன்வைத்து பாரதூரமான தவறுகளை இழைத்தார். அதன் பிறகு புரட்சியின் எதிர்காலத்தின் மீதே நம்பிக்கை இழந்து டிராட்ஸ்கிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டார். கட்சிக்குள்ளேயே ஒரு தனிக்குழுவைக் கட்டிக் கொண்டு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து 1929 இல் அவர் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் அவர் ஒரு டிராட்ஸ்கிய அமைப்பில் ஊக்கமாகச்செயல்பட்டார். அக்டோபர் 1932 இல் கோமிண் டாங்கால் கைது செய்யப்பட்ட அவர் ஆகஸ்டு 1937 இல் விடுதலையானார். 1942 இல் அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்), இதே போலவே வாங்மிங் (வாங்மிங் (1904 - 74) சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் 1925 இல் சேர்ந்தார். பின்னர் அவர் கட்சியின் மத்திய கமிட்டியின் சாங்ஜியாங் குழுவின் செயலாளராகவும் சேவை செய்தார். 1931 க்கும் 1935 க்கும் இடைப்பட்ட காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் செல்வாக்கு பெற்றிருந்த இடது சாகசவாதத் தவறுகளின் தலைமைத் தளபதியாகத் திகழ்ந்தார். பிடிவாதமாக கட்சியின் விமர்சனத்தை ஏற்க மறுத்துவந்த அவர் சீனப் புரட்சியின் துரோகியாகச் சீரழிந்து போனார்.) இதே போல காவோ காங் (காவோ காங்(1905 - 54) சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியின் அரசியல் தலைமைக்குழுஉறுப்பினராக பல்வேறு காலங்களில் சேவை செய்தவர். மத்தியக் கமிட்டியின் வடகிழக்குபகுதிக் குழுவின் செயலாளராகவும், மத்திய மக்கள் அரசாங்கத்தின் துணைத் தலைவரா கவும் செயல்பட்டவர். 1953 இல் அரசின் திட்டக் கமிஷனின் தலைவராக அவர் நியமிக்கப் பட்டார். அதிலிருந்து அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1954 இல் இது கண்டறியப்பட்டு கட்சியின் தேசிய மாநாட்டுத் தீர்மானத்தின் மூலம் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்), இத்தகைய மூன்று பேரும் தமது புரட்சிகர நிலையிலிருந்து வழுவிதோல்வியடைந்ததை நாம் எப்படி விளக்க முடியும்? உண்மையில் சென்டூஷியுவின் சிந்தனைக்கும் மார்க்சிய லெனினியத்துக்கும் எந்த உறவுமில்லை. அவர் மார்க்சிய -லெனினி யத்தை வழிகாட்டும் தத்துவக் கோட்பாடாக எப்போதுமே ஏற்றுக்கொண்டவர் அல்ல என்பதைக் கூறவும் தேவையில்லை. வாங்மிங்கைப் பொருத்தவரை அவர் தனது தவறுகளை இன்னமும் ஒப்புக்கொள்ளவே மறுக்கிறார். எனவே, அரசியல் அரங்கில் சோதனைகளின் ஊடாக புரட்சிகர நிலைப்பாட்டை உறுதியாகப் பற்றி நிற்க, நம்மால் இயன்றதனைத்தையும் செய்ய நாம் எப்போதுமே முயல வேண்டும்.

மூன்றாவதாக, பழைய சமூகத்தின் தீய தாக்கங்களை எதிர்த்து நின்று ஈடுகொடுக்க வேண்டும்.

நாம் எப்போதுமே சித்தாந்த மற்றும் அரசியல் அரங்குகளில் உறுதியாக நிற்க வேண்டியதன்

அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளோம். நாம் இன்னும் இதர மூன்று அரங்குகளில் தேர்ச்சி அடைய வேண்டியிருப்பதன் அவசியத்தை இன்று உங்கள் கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். ஏனெனில் நாம் பரம்பரை யாக உருவாகி வளர்ந்து வந்த சீன சமுதாயமானது மிகவும் சிக்கலானது. அதை மாற்றியமைக்கும் கடமையில் நாம் போராடி வருகிறோம்.

இன்றைய சமுதாயத்திலும் கூட நேற்றைய பழமைப் பழக்க வழக்கங்களின் தாக்கம் நீடிக்கவே செய்கிறது.

நமது சிந்தனையை எளிதில் நச்சுப்படுத்தும் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ பழக்க வழக்கங்களின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கவே செய்கிறது. உங்கள் விழிப்புணர்வை நீங்கள் தளர்த்தும் வேளையில், உங்கள் மனத்தை மாசுபடுத்தும் வாய்ப்பை பழமைப் பழக்க வழக்கங்கள் அடைந்து விடுகின்றன. பழைய சமூகத்தை மாற்றியமைப்பது என்பது நமக்கு, குறிப்பாக தலைமைப் பொறுப்புகளில் உள்ள தோழர்களுக்கு மிகக் கடினமான பணி என்பதை இதிலிருந்து உணரமுடியும். பழமைப் பழக்க வழக்கங்களின் தாக்கம் ஒரே நாளில் மறைந்துவிடாது. அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். பழமைப் போக்கை மாற்றி யமைப்பதை ஒரே அடியில் சாதித்து விட முடியும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

இப்பழமைவாத தீய பழக்கவழக்கங்கள் சமுதாயத்தின் எல்லாத் துறைகளிலும் நமதுஅமைப்புகள், அரசு நிறுவனங்கள், அலுவலங்களிலும் ஊடுருவி விடுகின்றன. உதாரணமாக, பெய்ஜிங் நகரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், அந்நகரில் நீங்கள் எங்கு சென்றாலும் காலத்துக்கு ஒவ்வாத பழமைவாதப் போக்குகளையும் பழக்க வழக்கங்களையும் நீங்கள் எளிதில் இனங்காண முடியும். இந்நகரின் பழமைச் சமூகத்தை மட்டும் புதிதாக மாற்றியமைக்க பல பத்தாண்டுகள் பிடிக்கும். இக்கூட்டத்தில் பங்கேற்கும் 60 வயதுக்கு மேற்பட்ட தோழர்கள், இந்த நகரம் இறுதியாக புதிய மாற்றமடைவதைக் காணும் வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும் என்று அஞ்சுகிறேன். இதிலிருந்து பழைய சமுதாயத்தின் தீய தாக்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது எளிதானதல்ல என்பதை நாம் அறிய முடியும். பழைய சமுதாயத்தை மாற்றியமைக்கும் போராட்டத் தில் பங்கேற்பதன் மூலம் மட்டுமே நாம் நமது சிந்தனையை மறுவார்ப்பு செய்துகொள்ள முடியும். இல்லையென்றால் பழைய சமுதாயத்தின் தாக்கங்களுக்கு நாம் ஆட்படுகிறோமா அல்லது நமது போராட்டங்களுக்கு பழைய சமுதாயம் ஆட்படுகிறதா என்பதைக் கூறுவது சிரமமானதாகவேஇருக்கும். "நியான் விளக்குகளின் கீழேகாவலர்கள்" என்ற நாடகத்தில், "நாம் முதலாளித்துவத்தை மாற்றியமைக்கப் போகிறோமா? அல்லது அது நம்மை மாற்றியமைக்கப் போகிறதா?" என்று ஒரு உரையாடல் வரும். அது ஒரு பொருள் நிறைந்த கேள்வி.

உண்மையில், நீங்கள் பழைய சமுதாயத்தை மாற்றியமைக்க முற்படும்போது, அதற்குப் பதிலாக அது உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றமானது நீண்ட காலத்திற்கு தொடரக்கூடிய, மீண்டும் மீண்டும் நடக்கும் போராட்டமாகும். நீங்கள் ஒரு புறமும் பழைய சமுதாயம் மறுபுறமும் நின்று மாறி மாறி தாக்கங்களை ஏற்படுத்தும் நிகழ்ச்சிப் போக்குகளைக் கொண்டதாகும். குறிப்பிட்ட ஓரிடத்தில் சமூகச் சூழலில் நீங்கள் சோதனைகளில் வெற்றி பெற்றிருந்தாலும், நீங்கள் புதிய பகுதிக்கு பணி நிமித்தமாக மாற்றப்பட்டால் அங்குள்ள பழைய சமூக பழக்கவழக்கங்கள், பழமை மரபுகளுக்கு எதிராக நீங்கள் இன்னமும் தொடர்ந்து போராட வேண்டிய அவசியம் ஏற்படும். இங்கே உள்நாட்டில் நிலவும் சாதகமான சூழலில் நீங்கள் உறுதியாக நின்றிருக்கலாம்; ஆனால் ஹாங்காங்கிலோ, வெளிநாட்டிலோ நீங்கள் பணியாற்ற வேண்டியிருந்தால் அது வேறானது. எனவே பழைய சமூகத்தின் தீய தாக்கங்களை எதிர்த்து நிற்க மன உறுதியும் நீண்டகாலப் போராட்டத்துக்குத் தயாராக இருப்பதும் நமக்கு அவசியமாகும்.

நான்காவதாக, நாம் நம்முடைய உறவினர்களைச் சரியாக கையாள வேண்டும்.

இது நம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமின்றி, தூரத்து உறவினர்களுக்கும் பொருந்தும். உறவினர்களை நீங்கள் மாற்றப் போகிறீர்களா? அல்லது அவர்கள் உங்களை மாற்றப் போகிறார்களா? தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு ஊழியர் பதில் சொல்ல வேண்டிய முதற்கேள்வி இது. இது நீங்கள் சரியாகக் கையாள வேண்டிய விசயமும் கூட;அவ்வாறு இல்லையேல் உங்கள் உறவினர்களின் கருத்துக்களுக்கு நீங்கள் சாய்ந்தாட வேண்டிய வாய்ப்புகள் ஏற்படுமே தவிர, அவர்களை நீங்கள் மாற்றுவதற்கான வாய்ப்புகளே இல்லை. நம்முடைய உறவினர் கள் பற்றிய பிரச்சனையைக் கையாள்வதற்கு நாம் சமுதாயத்தின் உதவியைச் சார்ந்திருப் பதே மிகச் சிறந்த வழியாகும். மக்கள் திரள் மத்தியில் சென்று அவர்கள் மனப்பக்குவம் பெறவும் மறுவார்ப்பு செய்துகொள்ளவும் நாம் உதவ வேண்டும். மக்களை மாற்றியமைக்கும் செயலில், புதிய சமுதாயத்தின் ஆற்றல் மீதுநாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நமது உறவினர்களைச் சரியாகக் கையாள வேண்டும் என்று சொல்வது எளிது; ஆனால் செயலில் அது கடினமானது.

உங்களுக்குப் பல உறவினர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஒரே கூரையின் கீழ் எப்போதும் உங்களுடன் வாழும் உங்கள் குழந்தைகளும் உண்டு. இந்நிலையில், குழந்தைகளைப் பெற்றோர் மாற்றியமைக்க வேண்டுமா? அல்லது குழந்தைகளால் பெற்றோர் மாற வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. இங்கே தலைமைப் பொறுப் பிலுள்ள நம்முடைய அனைத்து ஊழியர் களையும் குறிப்பாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் 407 தோழர்களையும் (இந்தக் கூட்டத்தில் தலைமை அமைச்சர், துணைத் தலைமை அமைச்சர்கள் மற்றும் அரசு நிர்வாகக் குழுவுக்கு நேரடியாகக் கீழுள்ள 73 அரசாங்கத் துறைகளின் முதன்மைத் தலைவர்களும் பங்கேற்றனர்) கேட்டுக் கொள்கிறேன். நான் உட்பட, நாம் அனைவரும் இதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என விரும்புகிறேன். நமது குழந்தைகள் வீணாகிப் போகாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மேலாதிக்க பிரபுவைப் போலகுழந்தைகளிடம் நடந்து கொள்ளாதிருக்க கவனம் செலுத்தும் அதே வேளையில், அவர்களுக்கு அதீத செல்லங்கொடுத்து வீணாகிப் போகாமல் இருக்கவும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நம்பிக்கை ஊட்டும் ஒரு இளந் தலைமுறையை உருவாக்குவதில் அடைகிற தோல்வியை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்.

நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமூகங்களி லிருந்து வேறுபட்டதான சோசலிச சமுதாயம்நம்முடையது. இருப்பினும் பழமைச் சமூக வரலாற்றிலிருந்து பயனுள்ள படிப்பினை நாம் பெற முடியும். கிபூயின் வம்ச முதற்பேரரசன் கிபூயின் ஷிஹூவாங் (கி.மு.221 - 207) சீனாவை ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டான். ஆனால் அவன் தன் மகனுக்கு செல்லங்கொடுத்து சீரழித்தான். இதனால் அவனது மகனாகிய இரண்டாம் கிபூயின் ஆட்சியில் அப்பேரரசு சிதைந்து நொறுங்கியது. நமது குழந்தைகள் அரசுக்கும் சமூகத்துக்கும் சுமையாக மாறவோ,நமது புரட்சிகர இலட்சியத்துக்குத் தடையாகி நிற்கவோ நாம் அனுமதிக்கக் கூடாது. நம்முடைய தலைமை ஊழியர்கள் தங்கள் குழந்தைகள் மீது கண்டிப்புடன் இருப்பது நல்லது.அது அவர்களது முன்னேற்றத்துக்கு மிகவும் தேவையான தூண்டுகோலாக இருக்கும்.

ஐந்தாவதாக, நாம் நமது தேர்வை அன்றாட வாழ்வில் எதிர்கொள்ள வேண்டும்.

இது அன்றாட வாழ்வின் பொருளாதாய, சித்தாந்த அம்சங்கள் இரண்டையும் உள்ள டக்கியதாகும். பொருளாதார விடயங்களைப் பொருத்தவரையில், தலைமைப் பொறுப்பி லுள்ள ஊழியர்களாகிய நாம் எப்போதும், என்ன உடமையாகக் கொண்டிருக்கிறோமோ அதில் திருப்தியுடனும் அல்லது மிகவும் திருப்தியுடனும் எளிய வாழ்வை மேற்கொள்ள வேண்டும். நமது நியாயமான தேவைகளுக்கு மேல் அதிகமாக சலுகைகளைப் பெறும்போது, அதைக்கண்டு மலைப்படைந்து வெட்கப்பட வேண்டும்.

நாம் கடின உழைப்பையும் எளிய வாழ்வையும் சிறந்த குணங்களாக ஏற்றுக்கொண்டால் நமக்கு மன அமைதி கிட்டும். நம்முடைய சொந்த செலவினங்களைக் குறைப்பதன் மூலம் கூட்டுச் சமூக நலச் செலவுகளுக்கும் அரசின் நிதி திரட்டலுக்கும் நாம் உதவ வேண்டும். இதன் மூலம் நமது நாட்டை வலிமைமிக்க சோசலிச அரசாக விரைவாக மாற்றியமைக்க நாம் உதவ முடியும். அன்றாட வாழ்வின் சித்தாந்த அம்சத்தைப் பொறுத்த வரை, எல்லாவற்றுக்கும் மேலாக நாம் கம்யூனிச இலட்சியத்துக்கு அர்ப்பணித்துக் கொள்வதோடு, மக்கள் நலன் மீதும் எதிர்காலஉலகின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். இந்த வழியில் நாம் ஒரு உறுதியான பொறுப்புணர்வையும், உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் வளர்க்க வேண்டும்.

இயல்பாகவே இதன் பொருள், நாம் நாள் முழுவதும் அரசியல் போராட்டங்களிலும் நமதுவேலைகளிலும் மூழ்கிப் போக வேண்டும் என்பதல்ல. மனிதர்கள் என்ற முறையில் நமக்கு வாழ்வில் வண்ணமும் ஒளியும் நிறைந்த பல்சுவை மாற்றங்களும் பொழுது போக்குகளும் தேவையே. நமக்கு மனமகிழ்வும் ஓய்வும் அவசியமானதுதான். எனவே நமக்கு கலையும் பொழுது போக்குகளும் தேவை. ஆனால் அவை மக்களின் சிந்தனையைத் தூண்டுவனவாகவும் கலாச்சார, ஒழுக்க மட்டங்களை உயர்த்துவதாகவும் இருக்க வேண்டும். நமது கலையும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் போதனை அளிப்பதாக அமைய வேண்டும். எனவே நம்மிடமுள்ள கலைஞர்களும் கலைக் குழுக்களும் கற்பிக்கும் நோக்கத்துடன் செயல்பட வேண்டும். நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவவர்க்கங்களின் வக்கிரமான, சீரழிந்த சுவைகொண்ட கலை இலக்கியங்களையும், கொடுமைகளையும் கோரத்தையும் சித்த ரித்து பிற்போக்குத்தனத்தை புகழ்பாடும் படைப்புகளையும், வாழ்வின் ஒழுக்கக் கேடான வகைகளைக் காட்டும் இலக்கியங் களையும் நாம் வெறுத்து ஒதுக்க வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் அதிகார வர்க்க அணுகுமுறையோடு அவற்றைச் சகித்துக் கொண்டிருக்க அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் அவை நம் மீதும் குறிப்பாக, இளந்தலைமுறையினரின் ஆரோக்கியமான வளர்ச்சியிலும், தீய விளைவுகளையே ஏற்படுத்தும்.

முதலாளித்துவ நாடுகளில் நிலவும் குறிப் பிட்ட சில கலை - இலக்கியச் சிந்தனைப் போக்குகள் சீரழிவுத்தனமானவை என்பதை நாம் எச்சரிக்கையுடன் உணர வேண்டும். இந்தக் கலாச்சாரக் கழிவுக் குப்பைக் கூளங்கள் நமது அணிகளையும் இளந்தலை முறையினரையும் சீரழித்து விடாமல் காக்க வேண்டியது நமது கடமையாகும். நாம் இத்துறையில் பல விடயங்களை முறைப் படுத்த வேண்டியுள்ளது. அண்மையில் நடந்த அனைத்து சீன கலை - இலக்கிய வட்டங்களின் சம்மேளன மாநாட்டில் நான் இந்த விடயம் குறித்து பேசினேன்; நமது எழுத்தாளர்களும் கலைஞர்களும் மறுசீரமை யவும், தமது சித்தாந்த மறுவார்ப்புக்கு கூடுதல் முயற்சி எடுக்க வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கினேன்.

ஒரு தனிநபர் இவ்வைந்து அரங்குகளிலும் ஒரே நேரத்தில் தேர்வை எதிர்கொள்வது எளிதான செயல் அல்ல. அது நீண்ட காலத்தை எடுத்துக் கொள்ளும். இருப்பினும், முன்னணி ஊழியர்களாகிய நாம் இவ்வைந்து அரங்குகளிலும் ஒவ்வொரு சோதனையையும் எதிர்கொண்டு நிற்க உணர்வுப்பூர்வமான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்; நம்மைக் கடினமான சோதனைகளுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

(மத்திய கமிட்டிக்கும் அரசு நிர்வாகக் குழுவுக்கும் நேரடியாகக் கீழே இயங்கும் துறைகளைச் சேர்ந்த முன்னணி ஊழியர்களின் கூட்டத்தில் தோழர் சௌ என் லாய் ஆற்றிய உரையிலிருந்து சாரமாக எடுக்கப்பட்டதுதான் இந்தக் கட்டுரையாகும்).

எமது விளக்கம்.

சீனாவில் புரட்சி நடந்து மக்கள் ஜனநாயகக் குடியரசு உருவான பின்பு அந்த புரட்சியில் ஈடுபட்ட முதன்மையான தலைவர்கள் அடங்கிய கூட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரும், சீன மக்கள் ஜனநாயகக் குடியரசின் தலைவருமான தோழர் சௌ என் லாய் பேசும்போது, சீன நாட்டு மக்கள் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி மக்கள் சீனத்தை அமைத்துவிட்ட போதும் தொடர்ந்து சீன சமூகத்தில் முற்போக்கிற்கும், பிற்போக்கிற்கும் இடையிலான முரண்பாடு கள் நிலவவே செய்யும் என்றும் பழைய சமூகத்தில் நிலவிய தீய பழக்கவழக்கங்களும் புதிதாக நாம் உருவாக்கி வளர்த்துக்கொண்டு இருக்கும் பழக்கவழக்கங்களுக்கும் இடையி லான முரண்பாடுகள் நீடிக்கவே செய்கிறது என்றும்; நம்முடைய வாழ்நாள் முழுவதும் இத்தகைய முரண்பாடுகள் இருந்துகொண்டே இருக்கும் என்றும், இந்த முரண்பாடுகளில் தீயவற்றை நாம் அடையாளம் கண்டு அதனை புறக்கணிப்பதும், இதற்கு எதிராகவுள்ள சரியானவற்றை அல்லது தேவையானவற்றை நாம் இனம்கண்டு புதியவற்றை செயல்படுத்தி முன்னேற வேண்டும் என்றும். அதற்காக நாம்எப்போதும் மாறும் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ள நமது சிந்தனை ஆற்றலை தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையே சித்தாந்த மறுவார்ப்பு என்கிறார். அதாவது நமது சிந்தனையை வளர்த்துக் கொள்வதன் மூலம் புதிய சித்தாந்தங்களை உருவாக்க வேண்டும் அல்லது மறுவார்ப்பு செய்ய வேண்டும் என்கிறார்.

அதாவது நாம் பழைய கருத்துக்களிலேயே மூழ்கி கிடக்கக் கூடாது என்றும் புதிய புதிய கருத்துக்களை அதாவது மாறுகின்ற எதார்த்த சூழலுக்குப் பொருத்தமான கருத்துக்களை நாம் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டு அதனை நடைமுறையில் சோதித்துப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிறார். நாம் புதிய கருத்துக்களை உருவாக்குவதும் அதனை சோதித்து அறிவதி லும் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

சித்தாந்த அரங்கில் நாம் செய்ய வேண்டியது.

மாறிக்கொண்டே இருக்கின்ற உலகத்தைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் தொடர்ந்து கவனித்துக்கொண்டு அதனைப் பற்றிய நமது அறிவை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு நாம் நமது அறிவை வளர்த்துக்கொள்ளவில்லை என்றால் நமதுமூளை துருப்பிடித்துப் போய்விடும். இதன் பொருள் மார்க்சிய இயக்கவியல் பொருள் முதல்வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தைப் பெறுவதே ஆகும் என்று சொல்கிறார். ஆகவே நாம் மார்க்சிய சித்தாந்தத்தைப் படித்து தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல் அந்த கண்ணோட்டத்திலிருந்து நமது செயல்களை அமைத்துக் கொண்டு மேலும் மேலும் அதில்

பயிற்சி பெற வேண்டும். இது நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

காலம் எப்போதும் முன்நோக்கியே செல்கிறது, ஆகவே நமது சிந்தனையை காலத்தை ஒட்டியே சிந்தித்து முன்னேற வேண்டும். காலத்துக்குப் பின்னே எப்போதும் தேங்கி நின்றுவிடக் கூடாது. காலங்கள் ஒருபோதும் வளர்ச்சியை நிறுத்துவதில்லை, ஆகவே நாமும் நமது சிந்தனையை மறுவார்ப்பு செய்வதை நிறுத்திவிடக் கூடாது.

நாம் சித்தாந்த மறுவார்ப்பில் கவனம் செலுத்தாமல் போனால் நாம் கடந்த காலங்களில் எவ்வளவுதான் புரட்சிகரமாக செயல்பட்டிருந்தாலும் நாம் நமது புரட்சிகர தன்மையை இழந்துவிட வேண்டிய நிலை ஏற்படும்.

சீனாவில் புரட்சி நடத்தி உழைக்கும் வர்க்கம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் சித்தாந்தத் துறையில் முழு நிறைவு அடைந்துவிட்டதாக கருத முடியாது. அதற்குப் பிறகும் சமூகம் இயங்குகிறது. அப்போதும் சமூக முரண் பாடுகள் நீடிக்கிறது. ஆகவே புதிய சூழலில் ஏற்படும் புதிய சமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்காக நாம் சித்தாந்த மறுவார்ப்பு செய்து புதிய முடிவுகளை கண்டுபிடித்து செயல்பட வேண்டியது அவசியமாகவே உள்ளது. ஆகவே சித்தாந்த மறுவார்ப்பு செய்வதை ஒருபோதும் நிறுத்திக்கொள்ளக் கூடாது.

சமூக மாற்றத்தில் ஈடுபடும் நாம் ஒருபோதும் திருப்தி அடைந்துவிடக் கூடாது. தொடர்ந்து புதிய புதிய முறைகளைக் கையாண்டு சமூகத்தை முன்னேற்றுவதும் மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் எளிமை யாக்குவதும், வலிமையாக்குவதும், வளமாக்குவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

உழைக்கும் வர்க்கமானது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே இத்தகைய கடமைகளும் நமது சித்தாந்தத்தை மறு வார்ப்பு செய்துகொள்ள வேண்டியது அவசியமாக இருக்கும் போது இந்தியா போன்ற நாடுகளில் உழைக்கும் மக்கள்அடிமைகளாக இருக்கும் போது நமது சித்தாந்தத்தை மறுவார்ப்பு செய்துகொள்ள வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நமது சித்தாந்த உணர்வை உறுதிப்படுத் திக்கொள்ள வேண்டுமானால் நாம் எந்த வர்க்கப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்து நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எத்தகைய வர்க்கப் பிரிவினர் என்பதையும், அவ்வர்க்கங்களுக்கு இடையே உள்ள உறவுகளையும், நாம் இந்த வர்க்கங்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது சமூகத்தைப் பற்றிய புரிதல் என்பதே சமூகத்தில் வாழும் வர்க்கங்களைப் பற்றியும் வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகளைப்

புரிந்துகொள்வது என்பதே ஆகும். ஆகவே சமூகத்தை ஆய்வு செய்வது என்பது சமூகத்திலுள்ள வர்க்கங்களை ஆய்வு செய்வதே ஆகும். இந்த வர்க்க ஆய்வுதான் நமது சித்தாந்தத்தை மறுவார்ப்பு செய்வதற்கான வழியாகும். மேலும் நம்மை நாமே ஆய்வு செய்து கொள்வதும் அவசியம் ஆகும். நமது சிந்தனையும் செயல்பாடும் எந்த வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் ஆய்வு செய்து புரிந்து கொள்வதோடு கூடவே நமது சிந்தனையையும் செயல்பாட்டையும் பாட்டாளி வர்க்கத் தன்மை கொண்டதாகவே எப்போதும் அமைத்துக் கொள்ள முயல வேண்டும்.

நாம் அரசியல் பணி செய்யும் இடங்களில் நம்மைச் சுற்றியுள்ள வர்க்கங்கள் மற்றும் நமது உறவு மற்றும் தொடர்புகளில் உள்ள வர்க்கங்களை நாம் புரிந்துகொண்டால்தான் இந்த வர்க்கங்களை நமது இலட்சியத்துக்கு பயனுள்ள முறையில் எவ்வாறு கையாளுவது என்பதைப் பற்றி முடிவெடுத்து செயல்பட முடியும்.

தோழர் சௌ என் லாய், ஒரு நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும், அவரது வளர்ப்பு முறையால் நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ பண்புகளால் வளர்ந்த வராக இருந்தாலும் மார்க்சிய லெனினிய சித்தாந்தங்களை கற்றுத் தேர்ந்து ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டதாலும், சித்தாந்த மறுவார்ப்பின் மூலம் அவரை ஒரு புரட்சிகர அறிவுஜீவியாக வளர்த்துக் கொண்டதாக குறிப்பிடுகிறார். இவரோடு ஒப்பிடும் போது இங்குள்ள சிலர் அவர்கள் அவர்களது வாழ்நாளில் வளர்த்துக்கொண்ட தீய பண்புகளை கைவிட்டுவிட்டு ஒரு புரட்சிகரஜனநாயக சக்தியாக தங்களை வளர்த்துக்கொள்ளாதவர்களை இங்கே நாம் பார்க்கிறோம். அதற்கு காரணம் அவர்கள் சித்தாந்த மறுவார்ப்பு செய்துகொள்ள தவறுவதுதான் காரணமாகும். சௌ என் லாய் போன்ற தலைவர்களே ஒரு சிறந்த புரட்சிகர அறிவுஜீவியாக மாறுவதற்கு சித்தாந்த மறுவார்ப்பு அவசியம் என்றால் நம்மைப் போன்றவர்கள் ஒரு சிறந்த ஜனநாயகவாதிகளாக ஆக வேண்டுமானால் சிந்தனைத் துறையில் நாம் சித்தாந்த மறுவார்ப்பு செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு கம்யூனிஸ்ட் ஊழியர் அரசியல் பணிகளில் ஈடுபடும் போது அவர் பல்வேறு வர்க்கங்களின் மத்தியில் வேலை செய்ய வேண்டி வரும். உழைக்கும் வர்க்கங்களிடம் வேலை செய்யும் ஒருவர் இயல்பாக உழைக்கும் வர்க்கங்களிடம் இருக்கும் இயல்பான நல்ல பண்புகளைப் பெற்று தன்னை ஒரு பாட்டாளி வர்க்கப் பண்பாளராக வளர்த்துக்கொள்வது எளிதாகும். ஆனால் அரசு அமைப்புகளில் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டால் அரசுத்துறையைச் சேர்ந்தஅதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பழக வேண்டிய சூழலில் அவர், பிற்போக்கான பண்புகளை அதிகாரிகள் போன்ற வர்க்கங்களிடமிருந்து பெற்று பிற்போக்காளராக மாறுவதற்கு வாய்ப் புள்ளது. ஆகவே இத்தகைய பணியில் ஈடுபடும் ஒரு கம்யூனிஸ்ட் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அத்தகைய எச்சரிக்கை உணர்வை சித்தாந்த மறுவார்ப்பின் மூலமே அவரால் பெற முடியும்.

தோழர் சௌ என் லாய் அவர்களுக்கு அப்போது 65 வயதாகியிருந்தது. புரட்சியில் ஈடுபட்டு அவரது உணர்வுகளையும், சிந்தனை யையும் வெகுவாக வளர்த்திருந்தார். எனினும் தன்னுடைய சிந்தனையை மறுவார்ப்பு செய்துகொள்ள தேவையில்லாத நிலைக்கு அவரது சித்தாந்த அறிவை வளர்த்துள்ளார் அதில் மிகவும் உறுதியாக உள்ளவர் என்று கூற முடியாது என்று அவரே கூறினார். மிகச் சிறந்த மார்க்சிய லெனினிய சித்தாந்தவாதியான சௌ என் லாய் அவர்களே தனக்கு எல்லாம் தெரியும் இனிமேல் தான் தெரிந்துகொள்ள எதுவும் இல்லை என்று இறுமாப்புக் கொண்டவராக இல்லை. ஆனால் நமது நாட்டில் கம்யூனிச அமைப்பிலுள்ள தலைவர்களில் சிலர்தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்பு கொண்டவர்களாகவே இருக்கிறார் கள். இத்தகைய தலைவர்கள் அவர்களது சிந்தனையை மறுவார்ப்பு செய்துகொள்ள முயற்சி எடுப்பதே இல்லை. ஆகவேதான் இவர்களால் உழைக்கும் மக்களோடு தொடர்பு கொள்ளவும் முடிய வில்லை, மக்களை அணிதிரட்டவும் முடியவில்லை.

எல்லா வகையான சமூக உறவுகளும் இன்னும் பலவும் ஒருவரது சித்தாந்தத்தின் மீது செல்வாக்கு செலுத்தி தாக்கத்தை ஏற்படுத் தும் என்பதை நாம் எச்சரிக்கையுடன் உணர வேண்டும் என்கிறார் சௌ என் லாய். சமூகத்திலுள்ள வர்க்கங்களிடையே உள்ள பண்புகளில் எது சிறந்த பண்பு எது தீய பண்பு என்பதைப் பற்றி நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் சமூகத்திலுள்ள தீய பண்பு களுக்கு நாம் ஆளாகமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். குதர்க்கவாதம் செய்வது, பிறரை கேலி செய்வது, பிறரை மதிக்காமல் இருப்பது, அகம்பாவமாக பேசுவது, நடந்துகொள்வது, பொறாமைப்படுவது, கோபம் கொள்வது, பலிவாங்குவது, அவதூறு செய்வது, பிறர் சொல்வதை காதுகொடுத்து கேட்க மறுப்பது போன்ற தீய பண்புகள் சமூகத்தில் நிலவுகின்றது. இத்தகைய தீய பண்புகளுக்கு நாம் பலியாகிவிடக் கூடாது. இந்த கருத்தை சொல்வது எளிது ஆனால் இதனை கடைபிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல. தொடர்ந்து தனது சிந்தனையை மறுவார்ப்பு செய்துகொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்பவரால் இதனை எளிதாக சாதிக்க முடியும். ஆகவே நமது மூளையை துருபிடித்துவிடாமல் எப்போதும் மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மார்க்சிய லெனினிய கண்ணோட்த்தின் அடிப்படையில் நாம் சிந்திக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே நம்மால் உண்மையையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும் கற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்பட முடியும். இதற்கு மாறாக குதர்க்கமாகவும் தீய நோக்கத்தோடும் நாம் சிந்திக்கக் கூடாது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

சமூகத்தில் பல்வேறான சித்தாந்த கருத்துக்கள் நிலவுகின்றது. இதில் எந்த கருத்து சரியானது என்பதை ஒரு தனிநபர் தனது சொந்த முயற்சியின் மூலம் கண்டுபிடிப்பதைக் காட்டிலும் பல தோழர்களிடம் கருத்து விவாதங்கள்நடத்துவதன் மூலம் ஓரளவுக்கு சரியான கருத்தை வந்தடைய முடியும். ஆகவே சிந்தனைத் துறையில் சித்தாந்த மறுவார்ப்பை செய்வதற்கு கூட்டாக விவாதம் செய்வது ஒரு சரியான வழியாகும். நம்மைப் பற்றியும் நாம் பரிசீலனை செய்துகொள்ள வேண்டும், நம்மைப் பற்றி பிற தோழர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். நம்மைப் பற்றி பிற தோழர்கள் குறை கூறினால் அவர்களின் மீது வெறுப்பு கொள்ளாமல் நம்மிடம் தவறு இருக்கிறதா என்பதை பரிசீலனை செய்து தவறு இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆகவே தொடர்ந்து நமது சிந்தனையை மறுவார்ப்பு செய்து கொள்வதன் மூலமே நமது குறைகளை களைய முடியும், நாம் என்ன செய்ய வேண்டும் என்ற சரியான முடிவையும் எடுக்க முடியும்.

ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த உடனேயே அவர் கம்யூனிசக் கொள்கைகளைப் புரிந்துகொண்டு ஒரு சிறந்த கம்யூனிஸ்டாகச் செயல்படுவார் என்று சொல்ல முடியாது. அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்துகொண்டே கட்சியின் செயல்பாடுகளில் கலந்து கொண்டே கம்யூனிச சித்தாந்தங்களை படித்து உள்வாங்கவும், அதனை நடைமுறையில் சோதித்து பயிற்சி பெற்று தனது சித்தாந்த அறிவைப் பெற வேண்டும். ஆனால் இங்கு சில கம்யூனிஸ்டுகள் அவர்கள் கட்சியில் பொறுப்புள்ள பதவிகளில் இருக்கிறார்கள், ஆனாலும் அவர்களுக்கு மார்க்சியத்தின் அடிப்படைகள் கூடத் தெரியவில்லை.

அத்தகைய நபர்கள் சித்தாந்த மறுவார்ப்பில் ஈடுபடவில்லை என்றால் அவர்களால் உழைக்கும் மக்களுக்குஎவ்விதமான பயனும் இல்லை, மேலும் அவர்களை மக்கள் காலப்போக்கில் புறக்கணித்துவிடுவார்கள்.

சீனாவில் புரட்சி நடத்தி வெற்றிபெற்ற தலைவர்களே சித்தாந்த மறுவார்ப்பு செய்ய வேண்டும் என்று சௌ என் லாய் சொல்கிறார் என்றால் புரட்சி நடக்காத நாட்டில் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் மார்க்சிய சித்தாந்த அறிவை பெற்றிருக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதையும், அந்த அறிவை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்

அரசியல் அரங்கில் நாம் செய்ய வேண்டியது.

அரசியல் அரங்கில் நமது செயல்பாடுகள் அனைத்தும் கம்யூனிஸ்ட் கட்சியால் தீர்மானிக் கப்படுகிறது. அவ்வாறு கட்சியால் தீர்மானிக் கப்பட்டதை உறுதியா உணர்ந்து செயல்படு வதுதான் நமது கடமையாகும். புரட்சிகர கட்சியில் சேர்ந்துவிட்டாலேயே ஒருவர் அரசியல் நிலைபாட்டில் உறுதியாக உள்ளார் என்று சொல்ல முடியாது. கட்சி நடத்தும் போராட்டங்களில் ஒருவர் உறுதியாக நின்று பங்கெடுத்தால் மட்டுமே அவர் அரசியலில் உறுதியாக இருக்கிறார் என்று சொல்ல முடியும். ஆகவே ஒருவரது அரசியல் நிலைபாட்டின் உறுதித் தன்மையை நீண்ட காலம் அவர் போராட்டத்தில் ஈடுபடுவதை வைத்து மட்டுமே நாம் சொல்ல முடியும். அதாவது ஒருவர் தொடர்ந்து கட்சியின் முடிவை செயல்படுத்த வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

ஒருவர் கட்சியின் கொள்கைகளைப் புரிந்து கொள்ளும் விதம், கட்சியின் கொள்கையை வகுப்பதில் நடத்தப்படும் விவாதங்களில் அவர் பங்குகொள்ளும் விதம், கொள்கையை நடைமுறைப்படுத்தும் விதம், மக்களுடனான அவரது உறவு, அவர் மீதான விமர்சனங்களை அவர் எதிர்கொள்ளும் விதம், அவரிடமுள்ள சுய விமர்சனத் தன்மை, தோழர்களுடன் நட்புறவோடு தனது மாறுபட்ட கருத்தை முன்வைக்கும் பண்பு போன்றவற்றை வைத்து அவரை எடை போடுவதன் மூலமே அவரது அரசியல் நிலைபாட்டின் மீதான தன்மை பற்றி நாம் முடிவு செய்ய முடியும்.

கட்சியில் சேராதவர்களின் அரசியல் நிலைபாட்டை மதிப்பிடுவது எவ்வாறு? ஒருவர்தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரத் தன்மையை ஏற்றுக்கொள்கிறாரா? தொழிலாளி வர்க்க மார்க்சிய சித்தாந்தத்தை அவர் வழிகாட்டும் சித்தாந்தமாக ஏற்றுக்கொள்கிறாரா? என்பதை வைத்தே முடிவு செய்ய வேண்டும். மேலும் ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால் ஒருவர் தவறு செய்கிறார் என்பது கவனத்திற்கு வந்தவுடனேயே அந்தத் தவறை களைவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பது முக்கியமாகும். ஆனால் இங்கு ஒருவர் அவர் தலைவராகவும் இருக்கிறார், அவர் தொடர்ந்து தவறுகள் செய்துகொண்டே இருக்கிறார். தவறுகளை திருத்துவதற்கு எவ்விதமான முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. அவரைப் போன்றவர்களால் உழைக்கும் மக்களுக்கு எவ்விதமான நன்மையும் இல்லை.இத்தகைய நபர்கள் மார்க்சியக் கொள்கை மீது பற்றுக்கொண்டவர்களாக இருக்கவே முடியாது. மார்க்சியத்தை இவர்களால் பின்பற்றவும் முடியாது.

அரசியல் அரங்கில் சோதனைகளுக்கு முன்பு உறுதியாக நிற்பது அவ்வளவு எளிதானது அல்ல. சௌ என் லாய் கூறியது போல சீனாவில் மூன்று தலைவர்கள் அவர்களைப் போன்றவர்களும் ஆரம்பத்தில் கட்சியின் மற்றும் மார்க்சியத்தின் மீது பற்றுக்கொண்டு செயல்பட்டாலும் அவர்கள் இறுதிவரை அரசியல் மற்றும் சித்தாந்தத்தில் உறுதியாக நின்று செயல்படவில்லை.

அதன் காரணமாக அவர்களை கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள். ஆனால் இங்கு இவர்களைப் போன்றவர்கள் அரசியலிலும் மார்க்சிய சித்தாந்தத்திலும் உறுதியாக இல்லாமல் சிலர் இருக்கிறார்கள். இவர்கள்தான் அமைப்புகளில் மிகுந்த செல்வாக்கு படைத்தவர்களாகவும் இருக்கி றார்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் செல்வாக்கு படைத்த தலைவர்களாக அங்கு மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்தவர்களாக இருந்தார்கள். ஆகவே அவர்கள் தவறானவர் களை கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டு சரியானவர்களின் தலைமையில் புரட்சி நடத்தப்பட்டு வெற்றி காணப்பட்டது. ஆனால் இங்கு தவறானவர்களின் தலைமைதான் அமைப்புகளில் செல்வாக்கோடு இருப்பதால் இங்கு புரட்சியை நோக்கி ஒரு அடி கூட நம்மால் எடுத்து வைக்க முடியவில்லை. ஆகவே அரசியல் மற்றும் சித்தாந்தத் துறையில் மார்க்சிய லெனினியத்தை உயர்த்திப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை யை நாம் எந்தளவுக்கு வளர்க்கிறோமோ அந்தளவுக்கு நாம் புரட்சியை நோக்கி முன்னேற முடியும்.

பழைய சமுதாயத்தின் தீய தாக்கங்களை எதிர்த்துப் போரிடுதல்.

இந்திய சமூகம் மிகவும் சிக்கலான சமூகமாக உள்ளது. இங்கு பழைய தீங்கான பழக்க வழக்கங்கள் செல்வாக்கோடு உலா வருகிறது. அதன் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு நாம் கடுமையாகப் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். நாம் எந்தளவு அறிவை வளர்த்து விழிப்பு ணர்வோடு செயல்படுகிறோமோ அந்தளவுக்கு பழமையின் தாக்குதலை சமாளிக்க முடியும். இதிலிருந்து உடனடியாக நாம் விடுதலை அடைய முடியாது.

ஏனெனில் இந்த தவறான பழக்க வழக்கங்களை நாம் நீண்டகாலம் பின்பற்றிவந்துள்ளோம்.

ஆகவே இதிலிருந்து நாம் விடுபடுவது மட்டுமல்லாமல் உழைக்கும் மக்களையும் விடுவிப்பதற்கு நீண்டகாலம் தேவைப்படும். இந்த பழக்கவழக்கங்கள் நமது குடும்பத்திலிருந்து நாம் தொழில் செய்யும் இடங்களிலும் ஏன் புரட்சிகர அமைப்புகளுக் குள்ளும் ஊடுருவி செல்வாக்கு செலுத்துகிறது. ஆகவே இந்த தீயபழக்கவழக்கங்களை எதிர்த்து மிகப் பொறுமையாகவும் உறுதியாகவும் போராட வேண்டும். நமக்கு முன்பு உள்ள கேள்வி, இந்தப் பழைய தீய பழக்கவழக்கங்களுக்கு பலியாகி தீயவர் களாக மாறப் போகிறோமா? அல்லது இந்த தீய பழக்கவழக்கங்களை கைவிட்டு விட்டு புரட்சிகரமான ஜனநாயக சக்தியாக மாறப்போகிறோமா? பழமையை எதிர்த்து புரட்சிகரமான புதுமைக்கான போராட்டமானதுஒரு நீண்ட போராட்டமாகும். சமூக மாற்றத்துக்காக நாம் பாடுபடும் அதே வேளையில் இந்தப் போராட்டத்தையும் இணைத்தே நாம் நடத்திட வேண்டியது அவசியம் ஆகும்.

நமது உறவினர்களை கையாளுவது எப்படி?

நமது உறவினர்களை நாம் மாற்றப் போகிறோமா? அல்லது நமது உறவினர்கள் நம்மை மாற்றப் போகிறார்களா? என்பது நம்முன் உள்ள கேள்வியாகும். முதலில் நமது கருத்துக்களிலும் கொள்கையிலும் நாம் தெளிவாக இருக்க வேண்டும். நமது கொள்கைகள் பற்றிய எவ்விதமான கேள்விகளுக்கும் சரியான விடை நம்மிடம் இருக்க வேண்டும்.

அப்போதுதான் நமது உறவினர்களிடம் நமது கொள்கைகளை எடுத்துச் சொல்லி அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களை நம்பக்கம் கொண்டுவர முடியும். இல்லாவிடில் நாம் அவர்களின் வலையில் தான் விழவேண்டி வரும். எனினும் நமது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்து பரவலாக மக்களை நாம் தயாரித்து வைத்திருந்தால் மட்டுமே நம்மால் நமது உறவினர்களிடம் நமது செல்வாக்கை வளர்க்க முடியும். மக்களிடம் சென்று நமது கருத்துக்களை விளக்கும் போது மக்கள் நம்மைப் பார்த்து கேட்க்கும் கேள்வி களிலிருந்து நாமும் மனப்பக்குவம் பெற முடியும். மக்களையும் மனப்பக்குவம் பெற வைக்கவும் முடியும். அதைத் தொடர்ந்து நமது உறவினர்களையும் மனப்பக்குவம் உள்ளவர் களாக மாற்றவும் முடியும்.

மனப்பக்குவம் என்பது நமக்கு முதன்மையாகத் தேவையாக உள்ளது. இங்குள்ளகம்யூனிஸ்டுகளில் பலருக்கு சரியான மனப்பக்குவம் இல்லை. மக்களிடம் சென்று நாம் பணியாற்றுவதன் மூலமும் உழைக்கும் மக்களின் மீது நாம் நம்பிக்கை வைப்பதன் மூலமுமே இந்த மனப்பக்குவத்தை நாம் பெற முடியும். குடும்ப உறுப்பினர்களில் நமது குழந்தைகளும் அடங்குவார்கள். நமது குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்தி வளர்க்க வேண்டும்.

அவர்களை சுதந்திரமாக வளர்ப்பதோடு கூடவே அவர்கள் எவ்விதமான தீய பழக்கங்களிலும் ஈடுபடாமல் தடுப்பதற்கு அவர்களின் மீது கண்டிப்பும் காட்ட வேண்டும்.

நமது அன்றாட வாழ்க்கையை நாம் எப்படி நடத்துவது?

நமக்கு எந்தளவுக்கு பொருளாதாரம் இருக்கிறதோ அந்த அளவுக்குள் நாம் எளிமையாகவாழ்வதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். நம்முடைய தேவைக்கு அதிகமாக வரும்வருமானத்தை பொதுவான கட்சி மற்றும் உழைக்கும் வர்க்க இயக்க நலன்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். நாம் கம்யூனிச இலட்சியத்துக்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்.

மக்களின் நலன்களின் மீது நாம் அக்கறை காட்ட வேண்டும். நாம் எப்பொழுதும் கட்சிக்காக இயக்கத்துக்காக செயல்படும் அதே வேளையில் நாம் கலாச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும். அந்த கலாச்சாரமானது உழைக்கும் வர்க்கங்களின் நலன்களை உயர்த்திப் பிடிக்கவேண்டும். பிற்போக்காளர்களையும் அவர்களது கருத்துக்ளையும் அம்பலப்படுத்த வேண்டும்.

அதற்குப் பொருத்தமான கலை இலக்கிய குழுக்களை நாம் உருவாக்கி மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

இறுதியாக ஒரு தனிநபர் இந்த ஐந்து அரங்குகளிலும் தன்னை சிறந்தவராக வளர்த்துக்கொள்வதில் சிரமங்கள் உண்டு. எனினும் அவர் தொடர்ந்து முயற்சி செய்து நீண்ட காலத்தில் ஒரு சிறந்த மனிதராக மாற வேண்டும். ஆனால் சமூக இயக்கத்தில் முன்னணிகளாக செயல்படுபவர்கள் தாமதமின்றி இந்த ஐந்து அரங்குகளிலும் தன்னை வளர்த்துக்கொள்வது அவசர அவசியமாகும்.

தேன்மொழி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்