மார்க்சியத்தை மறுக்கும் பல்வேறு போக்குகள்

இந்த விவாதத்தின் இன்றைய தேவைக்கருதி அவரின் முகனூல் பகுதியிலிருந்து அப்படியே பகிர்கிறேன்.

 முன்னுரை.

 * * * * * * * * * * * * * * * * * * 

‘’எங்களுடைய போதனை, செயலுக்கு ஒரு வழிகாட்டியே தவிர வறட்டுச் சூத்திரமல்ல’’ – எனும் எங்கெல்ஸின் புகழ்மிக்க வரிகளோடு இந்தக் கட்டுரையைத் துவக்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


‘’மார்க்சிய விவாதங்கள்’’ எனும் தலைப்பிலுள்ள இந்நூலானது மார்க்சியத்தின் உள்ளேயும் வெளியேயும் நடக்கின்ற விவாதங்களாகவும் கருத்துக்களாகவும் இருக்கிறது. அணிந்துரையில் ‘கட்சி சாரா மார்க்சிய வாசிப்பு’ என்றும் ‘கட்சி சார்ந்த மார்க்சிய வாசிப்பு’ என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், மார்க்சியம் என்கிற தத்துவம் மற்றும் மார்க்சியம் என்கிற அரசியல் என்பதாக இரு பிரிவுகளை அணிந்துரை சுட்டுகிறது.

இந்தக் கட்சி சாரா மார்க்சிஸ்டுகளால் எப்போதும் பிரபலப்படுத்தப்படுகின்ற கிராம்ஷி, டிராட்ஸ்கி, ஃப்ராங்க்பர்ட் ஸ்கூல், ஹெர்பர்ட் மார்க்யூஸ், அல்தூஸர் . . . போன்ற சிந்தனைகள் விளக்கப்படுகின்றன.

மதம் குறித்த சமூகவியல் பார்வை – எமிலி டர்க்வெஸ்ம், மாக்ஸ்வேபர், பின் நவீனத்துவம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற தலைப்புகளிலெல்லாம்கூட ’மார்க்சிய’ விவாதங்கள் நடத்தப்படுகின்றன.

பூக்கோவின் அதிகாரம் பற்றிய கருத்தாக்கம், தெரிதாவின் கட்டுடைத்தல் போன்ற விவகாரங்களோடு மார்க்சிய நோக்கு குறித்த உறவுகளையும் இந்நூல் தருகிறது.ஃப்ராய்டு, ஹெகல், சார்த்தர், உள்ளிட்ட சிந்தனையாளர்களின் கருத்துக்களும் இந்நூலிலே விவாதிக்கப்படுகின்றன.

பழைய பொருள் முதல்வாதம், புதிய பொருள் முதல் வாதம், இதில் மார்க்சின் தத்துவம் அரசியல் பொருள் முதல் வாதம், என முதல் கட்டுரை கண்டுபிடித்துச் சொல்கிறது. பொருள் குறித்த மார்க்சின் பார்வை, வர்க்கப் போராட்டம் குறித்தெல்லாம் முதல் கட்டுரை பேசுகிறது. 

தத்துவங்களின் உலக வரலாற்றிலிருந்தும், இந்தியத் தத்துவ மரபுகளிலிருந்தும் நாம் இயங்கியலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என இரண்டாவது கட்டுரை தொடர்கிறது. ஹெராக்ளிடஸ், கெளதம புத்தர், சாங்கியம், சாக்ரடீஸ், இந்திய பக்திச் சிந்தனை, ஹெகல் எனும் வரிசையில் விளக்கம் சொல்லப்பட்டு மார்க்சிய இயங்கியல் கட்டுரை முடிகிறது.

அடுத்ததாக, முரண்பாடு பற்றி பர்மினிடிஸ், டெக்கார்ட், ஹெகல், காண்ட் ஆகியோரின் வழியாக மார்க்ஸ் வந்தடைந்த முரண்பாடு பற்றிய விளக்கம் இக்கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது.

எதிர்வுகள் என்கிற சொல்லைக் கொண்டு அதன் இயங்கியலை விளக்குவதாக பொருளும் கருத்தும், சாராம்சமும் நிகழ்வும், உள்ளடக்கமும் உருவமும், முழுமையும் பகுதிகளும், பிற எதிர்வுகளும் அவற்றின் இயங்கியலும் எனும் தலைப்புகளில் விரிவாக அக்கட்டுரை அமைந்திருக்கிறது.

அதன்பிறகு, வரலாறு குறித்த மார்க்சியக் கொள்கை, மார்க்சியப் பண்பாட்டியல், மனிதநேய மார்க்சியமும் அல்தூசரின் மார்க்சியமும், மதம் குறித்த மார்க்சியக் கொள்கை, இந்திய மதங்கள் குறித்து மார்க்ஸ், மதம் குறித்த சமூகவியல் சிந்தனை என்கிற தலைப்புகளில் வருகின்றன.

டிராட்ஸ்கி, மார்கியூஸ், புது மார்க்சியம், இருத்தலியல், பாசிசம் குறித்த ஃப்ராங்பர்ட் பள்ளிச் சிந்தனைகள், ஃப்ராய்டிஸம், புதிய இடதுசாரி அரசியல், பிரெஞ்சு மார்க்சியம், ஷோர்ஷ் இசார், லூசியன் கேவ், மோரிஸ் மெர்லோபோன்தி, மோரிஸ் தொரஸ், கரோதி, மோரிஸ் கோதலியே, லூயி அல்தூஸர், பாலிபர் . . . .இன்னும் ஏராளமான பெயர்கள், ஏராளமான சிந்தனைப் போக்குகள், ஏராளமான நிகழ்ச்சிகள் – இந்த ஏராளமானவைகளைக் கடந்து வருவது தாராளமானதாக இருக்கவில்லை.           

இந்நூல் குறித்த கட்டுரை ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ளப்பட்டதின் அடிப்படையிலேயே இந்நூலை வாசிக்கத் தொடங்கினேன். ‘’கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல’’ என்னும் உவமையைவிட வேறொரு உதாரணம் சொல்லத் தோன்றவில்லை எனக்கு.  

மார்க்சியத்தின்மீது அறிவார்ந்த நம்பிக்கை கொண்டவன் நான். சமகாலச் சமூகங்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இறுதித் தீர்வு மார்க்சியத்தில்தான் இருக்கிறது என்பதை உறுதியாக ஏற்றுக் கொண்டிருப்பவன். காரணம் மார்க்சியம்தான் அனைத்துப் பிரச்சினைகளும் உருவாகும் இடத்தை மிகச் சரியாகச் சுட்டிக் காட்டுகிறது. புத்துணர்ச்சி மிக்கதாக, இளமைத் துடிப்புள்ளதாக நான் ஒவ்வொரு வாசிப்பிலும் மார்க்சியத்தை உணர்ந்திருக்கிறேன். இன்றும் உணர்கிறேன்.

‘’மார்க்சிய விவாதங்கள்’’ என்னும் இந்நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போதே இடையிடையே வெவ்வேறு நூல்களின் சிற்சில பகுதிகள் நினைவுக்கு வந்தன. அவைகளையும் எடுத்து வாசித்தேன். அவற்றில் சில இந்நூலுக்குப் பொருத்தமான எதிர்வினைகளாக இருந்தன. இந்நூலை வாசிக்கும்போது தோன்றிய சிந்தனைகளை அவைகள் சிலவேளைகளில் மேலோட்டமாகவும் சில வேளைகளில் முழுமையாகவும் பிரதிபலிப்பதாய் இருந்தன. அந்நூல் களிலுள்ளவை களையும் இந்நூலிலுள்ளதும் எவ்வாறு எதிர்கொள்கின்றன  என்பதை பார்வையாளர்கள் ஒப்பீடு செய்து புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முழுநூலுக்குமான கண்ணோட்டத்தை உள்வாங்கியபோதிலும் என்னளவில் இந்நூலை முழுமையாக விமர்சனம் செய்ய இக்கருத்தரங்கின் நேரம் இடம் கொடுக்காது என்பதால் சில தலைப்புகளை மட்டும் இங்கு எடுத்து வந்திருக்கிறேன்.  ஆனால், நூல் முழுவதையும் வாசிக்க வேண்டுமென்று வாசகர்களைக் கோருகிறேன். இந்நூலில் தனித்தனிக் கட்டுரைகளாக அமைந்திருப்பதும் நான் இம்மாதிரி வந்திருப்பதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

(தொடரும்)

(அடுத்து வருவது பகுதி - 2)

குருசாமி மயில்வாகனன்.

22.04.2006

துணை நின்ற நூல்கள் :

1. பின் நவீனத்துவம் – ஓர் ஆய்வு – க. இளங்கோ – காட்வெல் பதிப்பகம்.

2. சமர் – இதழ் 27. – பி. ரயாகரன் – 10.11.2000.

* * * * * * * * * * * *

முனைவர் ந. முத்துமோகன் எழுதியுள்ள ‘மார்க்சிய விவாதங்கள்’ நூல் குறித்து 22.04.2006 அன்று பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் தலைமையில் பேராசிரியர் அ.மார்க்ஸ் மற்றும் முனைவர் முரளி ஆகியோர் உரையாற்ற ’’புதிய காற்று’’ இதழ் மதுரையில் நடத்திய திறனாய்வுக் கூட்டத்தில் தோழர் ஏர் மகாராசனால் வாசிக்கப்பட்ட கட்டுரையின் முதல் பகுதி.

சட்டியைச் சுற்றும் பூனைகள்.
பகுதி 5.
அணிந்துரை (சி.சொக்கலிங்கம்) குறித்து
* * * * * * * * * * * * * * * * * * ** * *
முனைவர் ந. முத்துமோகனின் ‘மார்க்சிய விவாதங்கள்’ எனும் இந்நூலை முக்கியத்துவத்தோடு குறிப்பிட்டு இருகரம் நீட்டி வரவேற்கும் இந்நூலிற்கான அணிந்துரை குறித்தும் சொல்லியாக வேண்டும். இந்த அணிந்துரை பற்றி இங்கு குறிப்பிடப்போகும் கருத்துக்கள் இந்நூல் குறித்தனவாகவும் கொள்ளலாம்.
‘’மார்க்சிய அணுகலில் விடுபட்டுப்போன ஓர் இடைவெளியைத் தொட முயலும் முயற்சியின் பாதைகள் – மார்க்சிய பன்முக வாசிப்பை வீரியப்படுத்தின. பல நுண் தளங்களுக்குள்ளும் மார்க்சிய ஒளிக்கதிர்கள் புகுந்தன. இந்தியத் தமிழ்ச் சூழலுக்கான மார்க்சியம் எது என்கிற கேள்விக்கான பதிலைத் தேடின.’’9
இவ்வாறு சொல்லும் அணிந்துரையானது, கட்சி சாரா மார்க்சிய வாசிப்பு கட்சியின் இடத்தைத் தகர்ப்பதாகவும், கட்சி சார்ந்த மார்க்சியவாதிகள் காட்சி சாராதோர் பார்வையைக் கண்டுகொள்ளாததாகவுமான நிலையிருப்பதாகவும் சொல்கிறது. மேலும் தத்துவமும் அரசியல் நடைமுறையும் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டுமென்கிறது.
இவ்வாறு விரிவாகச் சொல்லுகின்ற அணிந்துரையானது, ’’இந்த இரு பக்கங்களையும் மார்க்சிய குவிமையத்தை நோக்கி பரிசீலித்து கட்டமைத்து வளர்த்தெடுக்கும் அவசியமான பணி. இதனை நிறைவு செய்யும் நீண்ட பிரயாணத்தின் மிக முக்கியமான தொடக்கம் என இந்நூலை மதிப்பிட முடியும்.’’10 என்றும் கூறுகிறது.
‘’ஆனால், கட்சி சாரா மார்க்சியவாதிகள் என்று ஒருபோதும் இருக்க முடியாது! என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதுபோலவேதான் கட்சி சாராதவன் மார்க்சியவாதியாகவும் இருக்க முடியாது’’
இன்றைய 138ஆவது பிறந்த நாளை நினைவு கூர்வதோடு தோழர் லெனின் சொல்வதைக் கேட்கலாம். ‘’ஏற்கனவே நாம் தெளிவுபடுத்தியதுபோல, கட்சி சார்பில்லாமைக் கோட்பாடானது நமது புரட்சியின் முதலாளித்துவத் தன்மையினது விளைவாகும் – அல்லது வெளியீடாகும் எனலாம். முதலாளித்துவ வர்க்கம் கட்சி சார்பில்லாமைக் கோட்பாட்டின் பக்கம்தான் சாயும் . . . .
இதையே மறுதலையாய்ச் சொன்னால், மனம் அறிந்தோ, மனம் அறியாமலோ முதலாளித்துவ அமைப்பை ஆதரித்து நிற்போர் கட்சி சார்பில்லா மனப்பாங்கு என்னும் கருத்தால் கவரப்படுபவர்களாகவே இருப்பர்.”
இன்னும் தெளிவாகச் சொல்கிறார்.
‘’கட்சி சார்பில்லாமை என்னும் கருத்து முதலாளித்துவக் கருத்தாகும். கட்சிக் கருத்து சோசலிசக் கருத்தாகும். இந்த ஆய்வுரை பொதுவாகவும் மொத்தத்திலும் முதலாளித்துவச் சமுதாயம் அனைத்துக்கும் பொருந்துவதாகும்’’11 என்கிறார்.
இதே நேரத்தில் ‘’எங்களுடைய போதனை செயலுக்கு ஒரு வழிகாட்டியே தவிர, வறட்டுச் சூத்திரமல்ல.’’எனும் எங்கெல்சின் புகழ் பெற்ற வரிகளை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.
இவ்விமர்சனத்தை முடிக்கலாமென்று நினைக்கிறேன்.
தோழர் லெனின் கூறுகிறார்.
இது இங்கு பொருத்தமானது.
’’இவர்கள் எப்போதும் தம்மை மார்க்சியவாதிகளாய் அழைத்துக் கொண்ட போதிலும், மார்க்சியம் குறித்து இவர்களுக்குள்ள கருத்தோட்டமானது முழுக்கமுழுக்கப் பகட்டுப் புலமையின் பாணியிலேதான் இருக்கிறது. மார்க்சியத்தில் தீர்மானகரமாய் இருப்பது எதுவோ அதை – அதாவது, மார்க்சியத்தின் புரட்சிகர இயக்கவியலை – புரிந்துகொள்ள இவர்கள் அறவே தவறி விடுகின்றனர் . . . சூடான பால்ச் சட்டியைச் சுற்றிக் கொண்டிருக்கும் பூனையைப்போல, தொலைவிலிருந்தபடி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து முறித்துக் கொள்வது போகட்டும். அதனிடமிருந்து சற்றே தடம் புரள்வதற்கும்கூடத் துணிவில்லாத, கோழைகளான சீர்திருத்தவாதிகளாகவே ஆவோம் என்று தம்மைத்தாமே இவர்கள் தம் நடத்தையின் மூலம் அம்பலப்படுத்திக் கொள்கின்றனர். அதேபோது, அடாவடியான வாய்வீச்சையும் வீம்புப் பேச்சையும் கொண்டு தமது கோழைத்தனத்தை மூடி மறைத்துக் கொள்கிறார்கள்.’’12
ஆக, கட்சி சாராதவர்களின் பிரதிநிதியாக ‘மார்க்சிய விவாதங்கள்’ எனும் இந்நூல் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது உண்மையானால் (உண்மையென்றே நினைக்கிறேன்) கட்சி சாராதவர்களின் இலக்கியங்கள், சிந்தனைகளைக் கம்யூனிஸ்டுகள் புறம் தள்ளுகிறார்கள். லெனின் கூறியபடி அது முதலாளித்துவக் கருத்து என்பதினாலேயே நாம் புறந்தள்ளுகிறோம். இது குறித்தும் தோழர் லெனின் கூறுவதோடு இக்கட்டுரையை வாசிக்க வாய்ப்பளித்த புதியகாற்றிற்கு நன்றி கூறி முடிக்கிறேன்.
“சோசலிசப் பாட்டாளி வர்க்கத்திற்கு இலக்கியமானது தனி ஆட்கள் அல்லது கோஷ்டிகள் செல்வம் திரட்டிக் கொள்வதற்குரிய சாதனமாய் இருக்க முடியாது என்பது மட்டுமல்ல. இக்கோட்பாடு; உண்மையில் இலக்கியமானது பாட்டாளி வர்க்கத்தின் பொது லட்சியத்தைச் சாராத ஒன்றாய், தனி ஆள் முயற்சியாய் இருக்க முடியாது என்பதும் ஆகும். கட்சி சார்பில்லா மனப்பாங்குடைய எழுத்தாளர்கள் ஒழிக! இலக்கியத்துறை மீமனிதர்கள் (super men) ஒழிக1.’’12
(தொடரும்)
(அடுத்து வருவது பகுதி - 1)
குருசாமி மயில்வாகனன்.
22.04.2006
நூலாதாரங்கள்:
9. மார்க்சிய விவாதங்கள் – ந. முத்துமோகன் – அணிந்துரை – சி.சொக்கலிங்கம் – காவ்யா வெளியீடு.
10. மார்க்சிய விவாதங்கள் – ந. முத்துமோகன் – அணிந்துரை – சி.சொக்கலிங்கம் – காவ்யா வெளியீடு.
11. சோசலிச சித்தாந்தமும் கலாச்சரமும் குறித்து – லெனின் – ப,48. - மாஸ்கோ வெளியீடு.
12. சோசலிச சித்தாந்தமும் கலாச்சரமும் குறித்து – லெனின் – ப,290 – புரட்சி குறித்து - மாஸ்கோ வெளியீடு.
13. சோசலிச சித்தாந்தமும் கலாச்சரமும் குறித்து – லெனின் – ப,34 – கட்சி நிறுவனமும் கட்சி இலக்கியமும் - மாஸ்கோ வெளியீடு.
துணை நின்ற நூல்கள் :
1. பின் நவீனத்துவம் – ஓர் ஆய்வு – க. இளங்கோ – காட்வெல் பதிப்பகம்.
2. சமர் – இதழ் 27. – பி. ரயாகரன் – 10.11.2000
சட்டியைச் சுற்றும் பூனைகள்.
பகுதி 3.
மார்க்சியத்தைப் புதுப்பித்தல்
* * * * * * * * * * * * * * * * * * * * *
இனி, ‘’மார்க்சியத்தைப் புதுப்பித்தல்’’ என்று சொல்லிக் கொண்டு அலைபவர்களைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.
இந்தக் கருத்து தொடர்ந்து பலரால் கூறப்பட்டு வந்திருக்கிறது. லெனின் காலத்திலேயும் இது இருந்ததை நாமறிவோம்.
முதலில் ப்ராங்பர்ட் நிறுவனத்தினரைப் பார்க்கலாம். அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சார வேலைகளுக்கு முழுக்கூலிகளாக செயல்பட்டவர்கள்தான் ப்ராங்பர்ட் பள்ளியினர் என்பது வெட்ட வெளிச்சமான விசயம்தான். வருடத்திற்கு 30,000 அமரிக்க டாலர் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இன்னும் குறிப்பாக, ‘’மார்க்சிய விவாதங்கள்’’ நூலிலே குறிப்பிடப்படுகின்ற "கிரிக்சைமர்" 1955 வரை அமெரிக்க அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். இதே கும்பலில் இருந்த "ஹெர்பர்ட் மார்க்யூஸ்" 1950 வரை அமைச்சராயிருந்தார்.
கம்யூனிஸ்டுகள் அமெரிக்காவில் வேட்டையாடப்பட்ட காலகட்டம் அது.
ப்ராங்பர்ட் கும்பலைச் சேர்ந்த "கார்ல்விட் ஃபோகல்", விசாரணையின்போது கம்யூனிஸ்டுகளைக் காட்டிக் கொடுத்தான்.
"லோலெந்தால்" என்பவனோ Voice of America எனும் அமரிக்க டிவியின் இயக்குநராகி கம்யூனிச எதிர்ப்பு வேலைகளைத் தொடர்ந்தான்.
"கோர்க்சைமர்" என்பவன் ஜெர்மனியின் பிரதமராக இருந்த "கோன்ராட்டினார்" என்பவனோடு சேர்ந்து, ஜெர்மன் டிவியில் கம்யூனிச எதிர்ப்பு நிகழ்ச்சிகளை நடத்தினான்.
இப்படி முழுக்க அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கம்யூனிச எதிர்ப்பு வேலைகளுக்கான கைக்கூலிகளாகச் செயல்பட்டவர்களை, புது மார்க்சியர்கள், நவீன மார்க்சியர்கள், மார்க்சியத்தை செழுமைப்படுத்த முயன்றவர்கள் என்றெல்லாம் எழுதுவது படுபிற்போக்கானது மட்டுமல்ல கம்யூனிச எதிர்ப்புக் கைக்கூலிகளை ஆதரிக்கும் வேலையுமாகும் என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
கிராம்ஷி,
அல்தூஸர்,
ப்ராங்பர்ட் – பற்றியெல்லாம் பேசுபவர்கள் ஏன்
லெனினுடைய மார்க்சியம் பற்றியும்
மாவோவின் மார்க்சியம் பற்றியும் தனியாகப் பேச மறுக்கிறார்கள்.
ப்ராங்பர்ட் கும்பலோ அல்லது அல்தூஸரோ சொல்வதை ப்ராங்பர்ட்டிஸம், அல்தூஸரிஸம் என்று சொல்லாமல், ப்ராங்பர்ட் மார்க்சியம், அல்தூசர் மார்க்சியம் என்று எழுதுவதிலிருந்தே இவர்களது மார்க்சிய வேடத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
பிரஞ்சு மார்க்சியம் எனும் கட்டுரை சார்த்தரை, அல்தூசரை, போக்கோவை, லூசியன் சேவ்வை . . இன்னும் லக்கான், போத்ரியன், லியோத்தார், தெரிதா, லபிகா, பாலிபர், லப்ரியோலா, ஷான் – பியர் கோட்டான் என்று பலரையும் குறிப்பிடுகிறது. அவர்களைச் சிந்தைகளைக் கோடிட்டேனும் காட்டுகிறது.
இருப்பினும் ஜார்ஜ் பொலிட்சரைப் பற்றி வெறும் தகவலை மட்டுமே தருகிறது. ‘மார்க்சிய மெய்ஞானம்’ என்கிற தனது சிறப்பான நூல் மூலம் இன்றும் கம்யூனிஸ்டுகளுக்கு நடைமுறையில் பயன்பட்டுக்கொண்டிருக்கும் பொலிட்சரைவிட மேற்சொன்ன ‘’மார்க்சிஸ்ட்டுகள்’’ எனத் தம்மை அழைத்துக் கொண்டவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? இருத்தலியம், அமைப்பியம், பின்நவீனத்துவம் என்று குழப்பி சோம்பேறிகளுக்கு சோறூட்டுவதைத்தான் செய்தார்கள்.
டிராட்ஸ்கி
டிராட்ஸ்கி குறித்து பல்வேறு பிரச்சினைகளைப் பேசினாலும், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை வர்க்கப் போராட்டத்தின் ‘முடிவா’க முன்வைத்தவர் டிராட்ஸ்கி என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
லெனினால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஓடுகாலி டிராட்ஸ்கியை, லெனினுடைய ‘இடையறாத புரட்சி’ எனும் கோட்பாட்டை மறுத்து ‘நிரந்தரப் புரட்சி’ எனும் அராஜகக் கோட்பாட்டை முன்வைத்த டிராட்ஸ்கியை மண்ணுக்கேற்றவாறு மார்க்சியத்தைப் பிசைந்து கொண்டிருப்பவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பது வேடிக்கையானது.
டிராட்ஸ்கி குறித்து இந்நூலில் அமைந்துள்ள கட்டுரையானது வழக்கமான, புளித்துப்போன ஸ்டாலினிய எதிர்ப்பு நிலையிலேயே எழுதப்பட்டிருக்கிறது.
பின் நவீனத்துவம்
சுருக்கமாகப் பார்க்கலாம். பின் நவீனத்துவத்திற்கும் மார்க்சியத்திற்கும் இடையில் பொதுத் தளங்கள் உண்டு என்றும், பின் நவீனத்தின் உட்புகுந்து மார்க்சியம் அதன் மறுபக்கத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்துவிட வேண்டும் என்றும் ‘மார்க்சிய விவாதங்கள்’ நூல் குறிப்பிடுகிறது.
பின்நவீனத்துவம் ஒரு இயக்க மறுப்பியல் தத்துவம். மார்க்சியம் ஒரு இயக்கவியல் தத்துவம். இரண்டும் எதிரெதிரானவை. முரண்பட்டவை. ஒன்றுபட முடியாதவை. அவ்வகையில் பின் நவீனத்துவம் மார்க்சியத்திற்கும் எதிரான தத்துவமே.
மார்க்சியத்தின் தாக்குதலினால் வீழ்கின்ற முதலாளித்துவம் போடும் வேடமே பின்நவீனத்துவம். அதை மார்க்சியம் விடுபட்ட இடத்தைச் சுட்டுகிறது எனவும், மார்க்சியத்தின் தொடர்ச்சியாகவும், செழுமைப்படுத்தத் தேவையானது என்று சொல்வதெல்லாம் கபடத்தனமானது.
(தொடரும்)
(அடுத்து வருவது பகுதி - 4)
குருசாமி மயில்வாகனன்.
22.04.2006
துணை நின்ற நூல்கள் :
1. பின் நவீனத்துவம் – ஓர் ஆய்வு – க. இளங்கோ – காட்வெல் பதிப்பகம்.
2. சமர் – இதழ் 27. – பி. ரயாகரன் – 10.11.2000.
= = = = = = = = = = = = = =

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்