முன்னுரை.
வாழ்க்கையை உணர்வுடன் அணுகுவதற்கு ஒவ்வொரு மனிதனும், நவீன சகாப்தத்தின்உட்பொருள் எதில் அடங்கியுள்ளது, வரலாறு எந்தத் திசையை நோக்கிச் செல்கிறதுஎன்பதைப் பற்றிய தெளிவான புரிதலைக் கொண்டிருப்பது அவசியம். 20 ஆம் நூற்றாண்டு மனிதகுலத்தின் வாழ்வில் விரைவான, ஆழமான மாற்றங்கள் நடைபெற்று வரும் நூற்றாண்டு ஆகும். எனவே இது மிகப் பல்வேறான பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தொழில் நுட்பத்திலும் அன்றாடவாழ்விலும் மின்சக்தி பரவி இருந்த போது இது மின்சார நூற்றாண்டு என்று அழைக்கப்பட்டது. பின்னால் பௌதீக விஞ்ஞானிகள் நம் நூற்றாண்டை அணுசக்தி நூற்றாண்டு என்றும் கணித நிபுணர்கள் கணக்கீட்டு அமைப்புகளின் நூற்றாண்டு என்றும்இரசாயன விஞ்ஞானிகள் செயற்கைப் பொருட்களின் நூற்றாண்டு என்றும் வானவியலாளர்கள் விண்வெளிப் பறத்தல்களின் நூற்றாண்டு எற்றும் அழைத்தனர். இந்தப்பெயர்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நியாயமானதே. ஆனால் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எவ்வளவு மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தாலும், சமுதாயவளர்ச்சியின் முக்கிய திசையை நிர்ணயிப்பது இவையல்ல. விஞ்ஞானமும் அதன் நடைமுறைரீதியான பயன்படுத்தலும் சமூக அமைப்பையும் குறிப்பிட்ட சமுதாயத்தில் யார் ஆதிக்கம்செலுத்துகிறார்கள் என்பதையும் சமுதாய வளர்ச்சி யாருடைய நலன்களுக்கு - சோசலிசத்தில்உள்ளதைப் போன்று மக்கள் அனைவரின் நலன்களுக்குமா அல்லது முதலாளித்துவத்தில் உள்ளதைப் போன்று பெரும் சொத்துடமையாளர்களின் நலன்களுக்கா -கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் பெரிதும் சார்ந்துள்ளன.
கம்யூனிசத்திற்கான பாதையைத் திறந்துவிட்டுள்ள ஆழமான புரட்சிகர மாற்றங்கள்தான் 20ஆம் நூற்றாண்டின் முக்கிய சிறப்பு அம்சமாகும். குறிப்பாக நமது சகாப்தத்தில்தான் மனிதகுலம் சகலவித வர்க்க மற்றும் தேசிய ஒடுக்குமுறைகளுக்கும் தீர்மானகரமான முடிவுகட்டுகிறது. நியாயத்தின் அடிப்படையில் சமுதாய உறவுகளை மாற்றியமைக்கிறது,
பிற்போக்கு, தப்பெண்ணங்கள், அறிவின்மை ஆகியவற்றுடனான கடுமையான, கண்டிப்பான போராட்டத்தில் சமாதானம் மற்றும் சோசலிசத்தின் உயர் லட்சியங்களைப் பூமியில் நிலைநாட்டுகிறது. நமது சகாப்தத்தின் முக்கிய உள்ளடக்கம் முதலாளித்துவத்திருந்து சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் நோக்கிய மாற்றமாகும்.
சமுதாயத்தை மாற்றியமைக்கும் வரலாற்று நிகழ்ச்சிப் போக்கில் சோவியத் யூனியன் விஷேச (சிறப்பான) இடத்தை வகிக்கின்றது. இதுதான் மனிதகுலத்தை கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்லும் பாதையை முதன் முதலாக அமைக்கிறது. இது வரலாற்றின் முன்னும் எதிர்காலத் தலைமுறைகளின் முன்னும் சோவியத் மக்களின் மீது மகத்தான பொறுப்பைச் சுமத்துகிறது.
கம்யூனிசத்தைக் கட்டுவது என்பது வாழ்க்கைக்குத் தேவையான தொழில்துறை மற்றும் விவசாயப் பொருட்களை அபரி மிதமாக (ஏராளமாக) உற்பத்தி செய்யும் பொருட்டு புதிய ஆலைகளையும் மின்சார நிலையங்களையும் கட்டுவது, பயிர் சாகுபடி செய்வது, மக்களுக்கு நீண்ட வாழ்வையும் நல்ல ஆரோக்கியத்தையும் அளிப்பதற் காகவும் மக்களின் வாழ்க்கை வசதிகளைச் செழுமைப்படுத்துவதற்காகவும் நல்ல வசதி யுள்ள வீடுகளையும் ஆரோக்கிய விடுதி களையும் கட்டுதல், சமத்துவம், தோழமை உணர்வுள்ள பரஸ்பர (ஒருவருக்கொருவர்) உதவி, ஒருமைப்பாடு (ஒற்றுமை), சர்வதேசியவாதம் (உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களின் நல்வாழ்வை லட்சியமாகக் கொண்ட உணர்வு அல்லது சிந்தனை) ஆகிய கோட்பாடுகளைக் கொண்ட புதிய வகையான சமூக உறவுகளை மக்களிடையே நிலைநாட்டுதல் ஆகியவற் றைக் குறிக்கும். புதிய வாழ்க்கையின் படைப்பாளியை, ஆன்மீக செழுமை (செழிப்பான சிந்தனை மற்றும் உணர்வு நிலை), மனத் தூய்மை, உடல்கூறு ரீதியான மேம்பாடு ஆகியவற்றை இணைத்து நிற்கக் கூடிய பன்முக வளர்ச்சியடைந்த தனிநபரை, கம்யூனிச மனிதனை வளர்த்து பயிற்றுவிப்பது என்பது இதன் பொருள்.
கம்யூனிச சமுதாயமானது லட்சக்கணக்கான மனிதர்களின் செயல்முனைப்பான உழைப்பின் பயனாக, மக்கள் அனைவரின் லட்சியமாகத் தோன்றுகிறது. கம்யூனிசம் என்பது சாதாரண கட்டுமானம் அல்ல, சாதாரண தொழிலாளர்களின் கைகள் மட்டும் இதற்குப் போதாது, மனவெழுச்சி மிக்க இதயங்கள் வேண்டும், அலட்சியமாகக் காரியத்தை நிறைவேற்றும் நபர்கள் தேவையில்லை. மாறாக நமக்கு எது தேவை, எதை நிர்மாணிக்கின்றோம் என்பதை நன்கறிந்த உற்சாகம் மிக்கவர்கள்தான் தேவை.
நமது காலத்தில் பல நூறு விஞ்ஞானங்கள்உள்ளன. சமுதாய வாழ்வில் விஞ்ஞானங் களின் பங்கு அதிகரித்து வருகிறது. உற்பத்தி, விஞ்ஞான சாதனைகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது.
மனித குல வளர்ச்சிப் பாதையைத் தெளிவாக அறிந்துகொள்ளவும் சர்வதேச நிலவரத்தை நன்கு தெரிந்து கொள்ளவும் தனது நாட்டின் அயல் நாட்டுக் கொள்கையைப் புரிந்து கொள்ளவும் ஒவ்வொருவருக்கும் சமுதாய விஞ்ஞானத்தின் அடிப்படைகளைப் பற்றிய அறிவு அவசியம்.
சமுதாயத்தைப் பற்றிய அறிவு அன்றாட நடைமுறை நடவடிக்கையிலும் அவசிய மானது. சோசலிச, முதலாளித்துவ உற்பத்தி ஒழுங்கமைப்புகளின் அடிப்படையாக எத்தகைய கோட்பாடுகள் விளங்குகின்றன, சோசலிச, முதலாளித்துவ அரசுகள் எப்படி அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன, குடிமக்களின் உரிமைகளும் கடமைகளும் யாவை என்பனவற்றை அறிந்தாக வேண்டும். அரசியல் அறிவு சித்தாந்த முதிர்ச்சியும் உறுதியும் தனிப்பட்டவாழ்விலும் மனிதனுக்கு அவசியமானவை. இவை தவறான நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்று கின்றன, சரியான பாதையில் செல்ல உதவுகின்றன.
சமுதாய வாழ்க்கை சிக்கலானது, பன்முகத் தனைமையை உடையது. வரலாறு, தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சட்ட விஞ்ஞானம், நீதிநெறி போன்ற பல விஞ்ஞானத் துறைகளின் ஆராய்ச்சிப் பொருளாக இது திகழ்கிறது. உண்மையான சோசலிசம் நிலவும் நாடுகளில் இவை மார்க்சிய - லெனினியக் கருத்துக்களின் அடிப்படையில் வளர்ந்து வருகின்றன.
இந்த தொடர் கட்டுரையில் சமுதாயம், அதன் வளர்ச்சி விதிகள், சோசலிசம், கம்யூனிசம் ஆகியவற்றைப் பற்றிய மார்க்சிய லெனினிய விஞ்ஞானத்தின் முக்கிய முடிவுகள் அடங்கியசுருக்கமான பாடத்திட்டத்தை கற்றுக்கொள்ள முயற்சி செய்வோம். =========================
நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.
உலகில் ஏழை என்றும் பணக்காரன் என்றும் இரண்டுவகையான பிரிவினர்கள்தோன்றியதிலிருந்து பணக்காரர்கள், வரலாற்று வளர்ச்சியில் அடிமைச் சமூகத்தில்ஆண்டைகளாகவும், நிலவுடமைச் சமூகத்தில் நிலப்பிரபுத்துவ பண்ணையார்களாகவும், முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிகளாகவும், ஏகபோக முதலாளித்துவ சமூகத்தில் நிதிமூலதன முதலாளிகளாவும் இருந்தனர்.அந்தந்த சமூகச் சூழலுக்கு ஏற்ப இந்த பணக்கார சுரண்டும் வர்க்கங்கள் உழைக்கும் மக்களைச் சுரண்டி உல்லாசமாக வாழ்ந்து வந்தனர், தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். அதே வேளையில் இந்த சமூககங்களில் முறையே உழைக்கும் மக்கள் அடிமைகளாகவும், பண்ணை அடிமைகளாகவும், தொழிலாளர்களாகவும் வெவ்வேறு வகையிலான அடிமைகளாக இருந்தார்கள், இப்போதும் இருந்துவருகிறார்கள்.
இவ்வாறு அடிமைகளாக இருக்கும் உழைக்கும் மக்கள் தொடர்ந்து ஏழ்மை நிலையிலேயே இருந்து கொண்டு பல்வேறுவிதமான துண்பங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இத்தகைய உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பல்வேறு மதத் தலைவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். பல்வேறு வகையான அரசியல் தலைவர்களும் வழிகாட்டியுள்ளார்கள். இவர்களின் வழிகாட்டு தலைப் பின்பற்றி உழைக்கும் மக்கள் பல காலமாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் உழைக்கும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் கூட அதாவது மனிதர்களின் அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையிலேயே பல கோடிக்கணக்கான மக்கள் உலகில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இத்தகைய மோசமான சூழலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற ஆசையும் முயற்சியும் ஏழை உழைக்கும் மக்களிடம் தொடர்ந்து காணப் படுகிறது. எனினும் அவர்களுக்கு வழிகாட்டு வதற்கான ஒரு சரியான கொள்கையும், வழிகாட்டும் தலைவர்கள் அடங்கியஅமைப்பும் உழைக்கும் மக்களுக்குத் தேவையாக இருந்தது. இந்தத் தேவையை, அதற்கான கருத்தியல் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த மாபெரும் தலைவர்கள்தான் காரல் மார்க்சும், எங்கெல்சும் ஆவார்கள். இவ்விரு தத்துவ புரட்சியாளர்களின் தத்துவ வழிகாட்டுதலைப் பின்பற்றியே ரஷ்யாவில் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி ரஷ்யாவிலுள்ள உழைக்கும் மக்கள் செயல்பட்டு உழைக்கும் மக்களுக்கு உண்மையிலேயே அரசியல் அதிகாரத்தை வழங்கிய சோசலிச ஆட்சியை உருவாக்கி அங்கே சோசலிச சமூகத்தை கட்டியமைக்கப் பாடுபட்டு சாதனை புரிந்தார்கள். அன்றிலிருந்து உலகில் பல நாடுகளிலும் ரஷ்யாவில் அமைக்கப்பட்டதுபோன்றசோசலிச அமைப்பை உருவாக்க வேண்டும் என்று விரும்பி உழைக்கும் மக்கள் அந்தந்தநாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி செயல்பட்டுஅவர்களது நாடுகளில் சோசலிச சமூக அமைப்பை உருவாக் கினார்கள். உலகில் மூன்றில் ஒருபங்கு நாடுகளில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து உலகில் உழைக்கும் மக்களுக்குத் தேவையான சமூக அமைப்பு சோசலிசமா? அல்லது முதலாளித் துவமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் சோசலிச சோவியத்து அரசு உருவாகி மக்களின் நல்வாழ்விற்காகப் பாடுபட்டு பல சாதனைகள் புரிந்து வெற்றி கண்டது. ஆனாலும் ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் ஊடுருவிய கம்யூனிச எதிர்ப்பாளர்களின் சதியின் மூலம் அங்கே சோசலிச அரசை சிறிது சிறிதாக வீழ்த்தப் பட்டது. இதன் காரணமாக சோசலிசக் கொள்கையே தவறு என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. அது சரியா? இல்லை.
விஞ்ஞான வளர்ச்சியில் எப்போதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளில் சில சாதகமான அம்சங்களும் சில பாதகமான அம்சங்களும் சேர்ந்தே இருப்பதை நாம் காணலாம். உதாரணமாக ரைட் சகோதரர் களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆகாய விமானத்தில் மனிதர்கள் உயரப் பறப்பதற்கான சாதகமான அம்சம் இருந்த போதும் அதில் மனிதர்களுக்குத் தேவையான பல விசயங்கள் அதில் இல்லை. இத்தகைய குறைபாடுகள் இருந்தபோதும் ரைட் சகோதரர்களின் சாதனை போற்றத் தகுந்ததே ஆகும். இதன் காரணமாக ஆகாய விமானம் பற்றிய விஞ்ஞானமே தவறானது என்று சொல்லி அந்த விஞ்ஞானத்தை விஞ்ஞானிகள் யாரும் புறக்கணிக்க வில்லை. அவர்கள் கண்டுபிடித்த விமானத்தில் இருந்த குறைபாடுகளை அவர்களுக்குப் பின்னால் வந்த விஞ்ஞானிகள் சரிசெய்து நவீன விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி பல்வேறு விதமான நவீன வசதிகளுடன் கூடிய விமானங்களை உருவாக்கிவிட்டார்கள். இதோடு விஞ்ஞானிகள் திருப்தி அடையவில்லை. மேலும் மேலும் ஆராய்ச்சி களில் ஈடுபட்டு புதிய வகையிலான விமானங்களை வடிவமைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இங்கே பொருளியல் விஞ்ஞானிகளில் விஞ்ஞானத்தைமறுப்பவர்கள் யாரும் இல்லை. ஆகவே இந்தகைய விஞ்ஞானமானது தொடர்ந்து வளரும். எனினும் இந்த விஞ்ஞானத்தின் வளர்ச்சியை தடுப்பவர்களும் உலகில் உண்டு. தங்களுக்கு லாபம் வந்தால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானத்தை பெருமுதலாளிகள் வளர்ப்பார்கள். அவர்களுக்கு லாபம் இல்லை என்றால் அந்த விஞ்ஞானத்தை வளர்க்க மாட்டார்கள். எனினும் இவர்களும் விஞ்ஞானமே தவறு என்று கூற மாட்டார்கள். ஆனால் சமூக விஞ்ஞானமான மார்க்சிய லெனினியத்தை தவறு என்று கூறுபவர்கள் உண்டு. அவர்களின் நலன்களுக்கு எதிரான கருத்துக்களை மார்க்சிய லெனினியம் என்ற சமூக விஞ்ஞானம் வெளிப்படுத்தி உழைக்கும் மக்களின் நலன்களுக்காக உழைக்கும் மக்களின் கடமையை எடுத்துச் சொல்லி அவர்களுக்கு இந்த சமூக விஞ்ஞானம் வழிகாட்டுகிறது. இந்த சமூக விஞ்ஞானத்தை உழைக்கும் மக்கள் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் செயல்பட்டால் அவர்கள் வெற்றியடைவது மட்டுமல்லாமல் அவர்களது வாழ்க்கையை வளமானதாக அமைத்துக் கொள்ள முடியும்.
இதனால் மக்களை ஏமாற்றி சுரண்டுபவர் களின் நலன்கள் பாதிக்கப்படுகிறது ஆகவேதான் இந்த சுரண்டல் பேர்வழிகள் மார்க்சிய லெனினியம் என்ற சமூக விஞ்ஞானத்தை தவறானது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
பொருளியல் விஞ்ஞானத்தில் சில குறைகள் இருந்தாலும் அதனை விஞ்ஞானத்தின் துணைகொண்டே விஞ்ஞானிகள் களைந்து செழுமைப்படுத்தி விஞ்ஞானத்தை தொடர்ந்துவளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் அது போலவே மார்க்சிய லெனினியம் என்ற சமூக விஞ்ஞானத்தை ரஷ்யா மற்றும் சீனாவில் நடைமுறைப்படுத்தி அதில் காணப்பட்ட குறைகளின் காரணமாக தோல்வியை சந்தித்தோம். இந்த தோல்வியை காரணமாகஎடுத்துக்கொண்டு மார்க்சிய லெனினிய சமூக விஞ்ஞானமே தவறானது என்ற முடிவிற்கு வருவது விஞ்ஞானம் ஆகாது. மாறாக பொருளியல் விஞ்ஞானிகள் கடைபிடித்த முறையைக் கையாண்டு மார்க்சிய லெனினிய சமூக விஞ்ஞானத்தை கையாண்டதில் நாம் செய்த தவறுகளை களைந்து அதனை வளர்ப்பதுதான் சமூக விஞ்ஞானிகளின் கடமையாகும்.
அதாவது மார்க்சிய லெனினிய சமூக விஞ்ஞானம் தவறான சமூக விஞ்ஞானம் இல்லை.மாறாக அந்த விஞ்ஞானத்தை நடைமுறைப் படுத்துவதில் ஈடுபட்ட சமூக விஞ்ஞானிகள் தான் தவறு செய்துள்ளார்கள். அவர்கள் செய்த தவறுகள் என்ன? என்பதையும் இதே சமூக விஞ்ஞானத்தின் அடிப்படையி லேயேதான் சமூக விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள முடியும்.
அப்படி புரிந்துகொண்டு தவறுகளை களைந்து புதிய சூழலுக்கு உகந்த புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து செயல்படுவதன் மூலமே இந்த சமூகத்தை புதிய முறையில் வளமான சமூகமாக மாற்ற முடியும். ஆகவே நாம் ஒவ்வொருவரும் மார்க்சிய லெனினியம் என்ற சமூக விஞ்ஞானத்தை கற்றுக்கொண்டு சமூக விஞ்ஞானிகளாக மாறி இந்த சமூகத்தை வளமான சமூகமாக மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டியது நமது கடமையாகும்.
நமது வாழ்க்கையை நாம் எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு சமூக விஞ்ஞானம் வழிகாட்டுகிறது. அத்தகைய சமூக விஞ்ஞானம்தான் மார்க்சிய லெனினியம் ஆகும்.
சென்ற இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சிறப்பாக வளர்ச்சிபெற்றது. அதனுடன் கூடவே மார்க்சிய லெனினியம் என்ற சமூக விஞ்ஞானமும் வளர்ந்தது. பொருளியல் விஞ்ஞானத்தில் மனித சமூகம் எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும் இந்த வளர்ச்சியின் பயன்கள் மனிதர்கள் அனைவருக்கும் கிடைக்கவில்லை என்றால் அதனால் என்ன பயன்? இந்தப் பயன்கள் யாவும் அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கான வழிகாட்டும் விஞ்ஞானமான சமூக விஞ்ஞானத்தை மக்கள் புரிந்துகொண்டு செயல்பட்டு இந்தப் பலன்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்தால் மட்டுமே இந்த விஞ்ஞான வளர்ச்சி என்பது முழுமையான வளர்ச்சியாக இருக்க முடியும்.
ஆகவே இந்த விஞ்ஞான வளர்ச்சியின் பலன்களை மக்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற சோசலிசக் கொள்கையை நாம் பின்பற்ற வேண்டுமா? அல்லது இந்தப்பலன்களை ஒருசிலர் பெற்றால் மட்டுமே போதும் என்ற முதலாளித்துவக் கொள்கையை நாம் பின்பற்ற வேண்டுமா? சிந்தியுங்கள்.சிலர், மக்களிடையே சமத்துவம் வேண்டும் என்ற சோசலிசக் கொள்கையின் மீது கடுமையாக வெறுப்பு கொண்டுள்ளார்கள். அவ்வாறு சோசலிசக் கொள்கையின் மீது வெறுப்புக் கொண்டுள்ளவர்கள் எந்தக் கொள்கையை ஆதரிக்கிறார்கள். முதலாளித்துவக்கொள்கையையே ஆதரிக்கிறார்கள். அதன் மூலம் மக்களிடையே ஏற்றத்தாழ்வான வேற்றுமைகள் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களது விருப்பம் உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிரானதாகும். ஆகவே உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிரான கொள்கை உடையவர்களை உழைக்கும் மக்களாகிய நாம் ஆதரிக்கலாமா? ஆதரிக்கக் கூடாது.
கடந்த இருபதாம் நூற்றாண்டில் இரண்டு உலகப் போரை உலகத்தையே ஆளவேண்டும் என்ற விருப்பம் கொண்ட ஏகாதிபத்தியவாதிகள் நடத்தினார்கள். அதன் மூலம் கோடிக்கணக்கான மக்களை படுகொலை செய்தார்கள். மக்கள் உருவாக்கிய பல கோடிக்கணக்கான சொத்துக்களை நாசப்படுத்தினார்கள். இந்த நாசகார நிதிமூலத ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு நேர் எதிராக மக்களைத் திரட்டிப் போராடி ரஷ்யா போன்ற நாடுகளில் பல தியாகங்கள் புரிந்து உழைக்கும் மக்களுக்கான உன்னதமான ஆட்சியை கம்யூனிஸ்டுகள் உருவாக்கினார்கள். இவர்களில் யார் உழைக்கும் மக்களுக்கான நண்பர்கள் சிந்திக்க வேண்டும்.
இருபதாம் சூற்றாண்டில் வளர்ந்த சமூக விஞ்ஞானமாகிய மார்க்சிய லெனினியம் என்ற விஞ்ஞானம்தான் சமூகத்திலுள்ள வர்க்க வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ளச் செய்தது.
தேசிய ஒடுக்குமுறைகளையும், தேசங்களை ஒடுக்குகின்ற ஏகாதிபத்தியங்களைப் பற்றியபுரிதலை நமக்கு ஏற்படுத்தியது. சமுதாயத்திலுள்ள உற்பத்தி உறவுகள்தான் சமூகத்தின் தன்மைக்கு அடிப்படையாக உள்ளது என்பதையும் சமூக மாற்றம் அல்லது வளர்ச்சி என்பது சமூக வளர்ச்சிக்குத் தடையாக உள்ள நிலவுகின்ற உற்பத்தி உறவுகளை ஒழித்துக்கட்டிவிட்டு சமூக வளர்ச்சிக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளை உருவாக்க வேண்டும் என்ற சமூகவிஞ்ஞான உண்மையை நாம் புரிந்துகொள்ளச் செய்தது. பிற்போக்கான எண்ணங்கள் பழக்கவழக்கங்கள், அறிவில்லாத மூடத்தனமான போக்குகளைஎதிர்த்து கடுமையாகப் போராட வேண்டும் என்ற உணர்வை இந்த மார்க்சிய லெனினிய சமூகவிஞ்ஞானம் நமக்கு ஏற்படுத்தியது.
இன்றைய சகாப்தமானது முதலாளித் துவத்திலிருந்து சோசலிசமாக சமூகம் மாறுகின்ற சமூகமாக இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்திய வரலாற்றுக் கட்டமாக இருபதாம் நூற்றாண்டு திகழ்ந்தது. இதனை சரியாகப் புரிந்து செயல்பட்ட மக்கள் வெற்றிபெற்று சாதனை படைத்தார்கள். இதனை சரியாகப் புரிந்துகொள்ளாமலும் இதனை புறக்கனித்தவர்களும் தோல்வி யடைந்தார்கள். ஆகவே நாம் சமூக விஞ்ஞானத்தைப் புரிந்துகொண்டு செயல் பட்டால் வெற்றியடையலாம், இல்லை யென்றால் தோல்விதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சமுதாயத்தை மாற்றியமைப்பதில் சோவியத் து மக்கள் சிறப்பான சாதனை படைத்தார்கள்.
அதற்குப் பிறகு வந்தவர்கள் இந்த சாதனையைத் தொடரத் தவறிவிட்டார்கள்.
கம்யூனிசத்தை கட்டுவது என்பது விவசாயம், தொழில் மற்றும் பிற துறைகளில் நவீனத்தைவளர்த்து மனிதர்களின் வாழ்வை கஷ்டம் இல்லாமலும் மகிழ்ச்சியாக வாழ வைப்பதற் கான ஒரு செயல்முறையாகும். ஒவ்வொரு தனி மனிதனின் தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்வதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகும். இந்த முயற்சியில் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு அவரவர்களுடைய கருத்துக்களையும் சுதந்தி ரமாக முன்வைத்து விவாதித்து முடிவெடுத்து செயல்படுத்தும் முறையாகும். கம்யூனிசம் என்பது பல கோடிக்கணக்கான மக்களின் உணர்வுப்பூர்வமான ஒற்றுமையின் அடிப் படையில் தியாக உணர்வுள்ள முன்னோடி களின் கடுமையான முயற்சிகள் மற்றும் தியாகங்களின் மூலம் மனித சமூகம் அடை யும் ஒரு புரட்சிகரமான சமூகம் ஆகும். இத்தகைய சமூகத்தை உருவாக்க வேண்டு மானால் நாம் ஒவ்வொருவரும் மார்க்சிய லெனினியம் என்ற சமூக விஞ்ஞானத்தை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் அதனை அடிப்படையாகக் கொண்டு உழைக்கும் மக்களைத் திரட்டி அவர்களுடன் நாம் ஒன்றுபட வேண்டும். மக்களின் முன்னோடியாக தியாகம் செய்வதற்கு முன்வர வேண்டும். அத்தகைய தியாகிகளின் எண்ணிக்கையை நாம் எந்தளவுக்கு வளர்க்கிறோமோ அந்தளவுக்கு நம்மால் மக்களைத் திரட்டி வெற்றிபெற்று புதிய உலகை கம்யூனிச உலகை நம்மால் படைக்க முடியும்...... தொடரும்..தேன்மொழி.
No comments:
Post a Comment