மார்க்சிய இயக்கவியல் பொருள் முதல்வாதம் பயிலுவோம். பகுதி - 4. பொருள்முதல்வாதம்.

 1. பொருள்முதல்வாதத்தை நாம் ஏன் கற்க வேண்டும்.

"வாழ்நிலைக்கும் சிந்தனைக்கும் இடையேயுள்ள உறவுகள் என்ன?" என்ற கேள்விக்கு இரண்டே இரண்டு விடைகள்தான் இருக்க முடியும். அவையிரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை, முரணானவை ஆகும்’’.

ஆன்மீகவாதம் அதற்குத் தந்த விடையையும், ஆன்மீகவாதத்தை ஆதரித்து நிற்கும் வாதங்களையும் சென்ற கட்டுரைகளில் பார்த்தோம். இந்த மூலப் பிரச்சனைக்கு மீண்டும் மீண்டும் நாம் செல்ல வேண்டும்.; அதற்குக் காரணம் இந்தப் பிரச்சனைதான் ஒவ்வொரு தத்துவ மெய்ஞானத் துக்கும் மூலவேராகக் காணப்படுகிறது. கிடைக்கிற இரண்டாவது விடையை இப்போது பரிசீலிக்க வேண்டும். தனக்கு ஆதரவாக பொருள்முதல்வாதம்

என்னென்ன வாதங்களை வைக்கிறது என்று பார்க்க வேண்டும். முன்பு செய்ததைவிட இன்னும் நன்றாக அதைப் பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு பொருள்முதல்வாதம் மிகமிக முக்கியம். பொருள்முதல்வாதம்தான் மார்க்சியத்தின் தத்துவ மெய்ஞானமாக விளங்குகிறது.

எனவே நாம் பொருள்முதல்வாதத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். அது நமக்கு ஒரு தீராக்கடமை ஆகும். காரணம், பொருள்முதல் வாதத்தின் கருத்தோட்டங்கள் பல பேர்களுக்குத் தெரியாது என்பது ஒன்று; அந்தக் கருத்தோட்டங்களைப் பலர் திரித்துப் புரட்டியிருக் கிறார்கள் என்பது மற்றொன்று. மேலும் நாம் பொருள்முதல்வாதத்தை அவசியம் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. நாம் பெற்ற கல்வியும் சரி, ஆரம்பப் பள்ளியிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் நமக்கு அளிக்கப்பட்ட போதனையும் சரி, நாம் வாழ்க்கை நடத்துகிற முறையும் சிந்திக்கிற முறையும் சரி, இவையெல்லாம் சேர்ந்ததன் பயனாய் நம்மை அறியாமலேயே நாம் எல்லோரும் ஆன்மீக கருத்துமுதல்வாதக் கருத்தோட்டங்களிலே ஊறிப்போயிருக்கிறோம். (இதற்கு பல உதாரணங்களை பின்னால் பார்ப்போம்) அப்படி ஏற்பட காரணம் என்ன? என்பதையும் பின்னால் பார்ப்போம். ஆகவே மார்க்சியத்தைக் கற்க விரும்புபவர்கள் அதற்கு ஆதாரமாக விளங்கும் பொருள்முதல் வாதத்தை நிச்சயமாக அறிந்து தீரவேண்டும்.

2. பொருள்முதல்வாதம் எதிலிருந்து பிறந்தது?

உலகை, பிரபஞ்சத்தை விளக்கும் முயற்சியே தத்துவஞானம் என்று நாம் பொதுப்படையாக வலியுறுத்திக் கூறினோம். அதே சமயத்தில் அந்தக் காலத்தில் மனிதனின் அறிவு எந்தத் தரத்திலிருந்ததோ அதைப் பொறுத்து இந்த விளக்கங்கள் மாறி வந்திருக்கின்றன என்பதையும் நாம் அறிவோம். மனிதனின் வரலாற்றுப் போக்கிலே பிரபஞ்சத்தை விளக்க முயன்றவர்கள் இரண்டு கண்ணோட்டங் களைக் கைக்கொண்டார்கள். இதை நாம் அறிவோம். ஒரு கண்ணோட்டம் விஞ்ஞானத்துக்கு எதிரானது; ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பல ஆன்மாக்களை வேண்டிக்கொள்வது; இயற்கைக்கு மேலான சக்திகளை வேண்டிக்கொண்டு நிற்பது; மற்றொன்று விஞ்ஞானப் பூர்வமான கண்ணோட்டம்; விவரங்களையும் அனுபவத்தையும் ஆதாரமாக்க் கொண்டிருப்பது.

இவற்றில் முதலில் சொன்ன கண்ணோட்டத்தை ஆன்மீகவாதிகள் ஆதரித்துப் பாதுகாக்கிறார்கள். இன்னொன்றை பொருள்முதல்வாதிகள் ஆதரித்துப் பாதுகாக்கிறார்கள்.

அதனால்தான் பொருள்முதல்வாதம் என்பது ‘’பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு விஞ்ஞானப் பூர்வமான விளக்கம்’’ என்ற முதல் கருத்தை மனதில் வாங்கிப் பதியவைக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறோம்.

மனிதனின் அறியாமையிலிருந்து ஆன்மீகவாதம் பிறந்தது. சமுதாய வரலாற்றலேஆன்மீகவாதக் கருத்தோட்டங்களை ஆதரிக்கும் சக்திகள் எல்லாம் இந்த அறியாமையைப்பேணிப் பாதுகாத்து வந்தன வளர்த்து வந்தன. இதையும் பின்னால் பார்ப்போம். ஆக அறியாமையிலிருந்து ஆன்மீகவாதம் பிறந்தது என்றால், அந்த அறியாமையையும் குருட்டு எண்ணங்களையும் எதிர்த்து விஞ்ஞானம் நடத்திய போராட்டத்திலிருந்து பொருள்முதல் வாதம் பிறந்தது.

அதனால்தான் பொருள்முதல்வாதத்தை எதிர்த்து மிகவும் கடுமையான போர் நடந்துவருகிறது. அதனால்தான் இன்றைய நாளில்கூட பொருள் முதல்வாதத்தின் நவீன வடிவமான இயக்கவியல் பொருள்முதல்வாதம் அதிகார வர்க்கப் பிடிப்பிலுள்ள, கல்வித்துறையில் புறக்கணிக்கப்பட்டும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டும் வருகிறது. அதிகமாகப் பரவாமலும் இருக்கிறது.

3. பொருள்முதல்வாதம் எப்படி ஏன் வளர்ந்தது?

பொருள்முதல்வாதத்தின் விரோதிகள் இந்த தத்துவ மெய்ஞானம் சென்ற 20 நூற்றாண்டுகளாக வளராமலேயே சப்பாணியாக இருந்து வந்திருக்கிறது என்று கூறுகின்றனர் இது தவறு. உண்மை இதற்கு நேர் எதிர்மாறானது. பொருள்முதல்வாதத்தின் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள் இந்த தத்துவ மெய்ஞானத்தில் ஏதாவதொன்று உயிர்த்துடிப்போடு எப்போதும் இயங்கிக்கொண்டே வந்திருப்பது தெரியும்.

பல நூற்றாண்டுகள் செல்லச் செல்ல மனிதனின் விஞ்ஞான அறிவு வளர்ந்துகொண்டேவந்தது. எண்ணங்கள், தத்துவங்கள் ஆகியவற்றின் வரலாற்றில் ஆரம்பத்தில் - அதாவது பண்டைய கிரேக்க நாகரீக காலத்தில் - விஞ்ஞான அறிவு மிகவும் குறைவாகத்தான் இருந்தது. முதன் முதலாக வந்த விஞ்ஞானிகளும் தத்துவ மெய்ஞானிகளாகவே இருந்தனர். ஏனென்றால் அந்த சகாப்தத்தின் போது தத்துவ மெய்ஞானமும் சரி, முளைவிட்டுக் கொண்டிருக்கும்விஞ்ஞானமும் சரி, இரண்டும் ஒன்றாகவே இருந்தன. விஞ்ஞானங்களின் விரிந்தஅம்சமாகத்தான் தத்துவ மெய்ஞானம் இருந்து வந்தது.

அதற்குப் பிறகு, உலகத்தின் விஷயங்களைப் பற்றியும் தோற்றங்களைப் பற்றியும் விஞ்ஞானம் சரியாகக் கணக்காக விளக்கங்கள் தரத் தொடங்கியதும், இந்த விஞ்ஞானப் பூர்வமான விளக்கங்கள் ஆன்மீகவாதிகள் அளித்து வந்த விளக்கங்களைத் தடுமாறச் செய்தன. அவற்றிற்கு முரணாக இருந்தன. இப்படிப் போகப் போக, விஞ்ஞானத்துக்கும் தத்துவ மெய்ஞானத்துக்கும் இடையே போர் மூண்டது.

ஆகவே அந்தச் சகாப்தத்திய ஆளும் வர்க்கத்தின் தத்துவ மெய்ஞானத்துக்கு முரணாக விஞ்ஞானங்கள் இருக்கவே, அவை தத்துவத் தோடு தொடர்பு கொண்டிராதபடி பிரித்துவைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆகவே, தத்துவ மெய்ஞானத்தின் உதவாக்கரை குழப்பங்களிலிருந்து விஞ்ஞானங்கள் தம்மை விடுவித்துக் கொண்டு விலகிவிடுவது ஒரு அவசர வேலையாகிவிட்டது. ஆடம்பரமான ஹேஷ்யங் களிலும் அனுமானங்களிலும் தத்துவ மெய்ஞானிகள் ஈடுபட விட்டுவிட்டு, துரிதமாகத் தீர்வு காணத் தகுந்த அளவுக்குப் பக்குவப்பட்டுள்ள வரையறுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளை கவனிக்கும் பொருட்டு விஞ்ஞானங்கள் தம்மை தத்துவ மெய்ஞானத்திலிருந்து அவசரமாக விடுவித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. அதிலிருந்துதான் விஞ்ஞானங்கள் வேறு, தத்துவ மெய்ஞானங்கள் வேறு, என்று ஆயிற்று. (என்று மோபிளான் கூறுகிறார்).

ஆனபோதிலும் விஞ்ஞானங்களுடன் பிறந்தது பொருள்முதல்வாதம். அது அவற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது, பொருள்முதல்வாதம் விஞ்ஞானங்களைச் சார்ந்து நிற்பது. எனவே விஞ்ஞானங்கள் முன்னேற முன்னேற, வளர்ந்து பரிணமிக்க அவற்றோடு கூடவே பொருள்முதல்வாதம் முன்னேறி வளர்ந்தது, பரிணமித்தது. அப்படி வளர்ந்த பொருள்முதல் வாதத்தின் வாரிசாக, நவீன காலத்திய பொருள்முதல்வாதமாக, மார்க்ஸ் எங்கெல்ஸ் வகுத்த இயக்க இயல் பொருள்முதல்வாதம் தத்துவ மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் மீண்டும் புதிதாய் ஒன்றுபடுத்தி வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறது.இந்த வரலாறும், பரிணாம வளர்ச்சியும், மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தோடு சம்பந்தப்பட்டு இருக்கிறது. அதைப் பின்னால் இன்னும் விரிவாகப் பயிலுவோம். என்றாலும் இப்பொழுதே ஒன்று சொல்லிவிட வேண்டும். பொருள்முதல்வாதமும் விஞ்ஞானங்களும் ஒன்றோடு ஒன்று இறுகப் பிணைக்கப்பட்டிருப்பவை. பொருள்முதல்வாதத்துக்கு ஜீவாதாரமாக விளங்குவது விஞ்ஞானமே, பொருள்முதல்வாதமும் முழுக்க முழுக்க விஞ்ஞானத்தைச் சார்ந்து நிற்கிறது. இந்த விஷயத்தை மனதில் பதிய வைத்துக்கொள்வது மிகமிக முக்கியமாகும்.

பொருள்முதல்வாதத்தின் அடிப்படைகள் என்னென்ன? பல்வேறு அம்சங்களின் பேரால் தம்மை பொருள்முதல்வாதமாகப் பறைசாற்றிக் கொள்ளும் தத்துவ மெய்ஞானங்கள் எல்லாம்பொதுவாய் உள்ள அடிப்படைகள் என்ன? இந்த விஷயத்தை ஸ்தாபித்து வரையறுப்புதான் இனிமேல் செய்யும் வேலை.

தொடரும்....தேன்மொழி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்