நாட்டுப்புற ஏழை மக்களுக்கு - லெனின் ; சமூக ஜனநாயகவாதிகள் எதை விரும்புகிறார்கள் என்பது பற்றி விவசாயிகளுக்கான விளக்கம் பகுதி 1.

 நூல் அறிமுகம்:-  இந்நூலை வி..லெனின் 1903ஆம் ஆண்டு வசந்தகாலத்தின் பொழுது ரஷ்யாவில் தன்னிச்சையான விவசாயிகள் இயக்கம் எழுச்சியடைந்து கொண்டிருந்த தருணத்தில் எழுதினார். விவசாயிகளுக்கு லெனின் விடுத்த முதல் அறைகூவலாகத் திகழ்ந்த இந்நூலில் சமூக - ஜனநாயகத்தின் அடிப்படை இலட்சியங்களும் அதன் விவசாய செயல்திட்டமும் எளிய விஞ்ஞான வடிவில் விளக்கப்படுகின்றன. "செல்வமும் வறுமையும், நாட்டுப்புறத்திலுள்ள சொத்துடையவர் களும் தொழிலாளிகளும்" , "மக்கள் அனைவருக்கும், தொழிலாளர்களுக்கும் என்ன அபிவிருத்திகளைப் பெறுவதற்காக சமூக - ஜனநாயகவாதிகள் பாடுபடு கிறார்கள்?", "எல்லா விவசாயிகளுக்கும் சமூக - ஜனநாயகவாதிகள் கொண்டுவர முயலுகின்ற அபிவிருத்திகள் எவை?" என்ற உட்தலைப்புகள் இந்நூல் எவ்வளவு எளிமையானது, புரியக்கூடியது என்று விளக்குகின்றன. விவசாயிகளின் வர்க்கக் கட்டமைவைப் பற்றிய பகுப்பாய்வின் அடிப்படையில் லெனின், நாட்டுப்புறத்தில் வர்க்கப் போராட்டம் நடைபெறுவது தவிர்க்க இயலாதது என்ற முடிவிற்கு வருகிறார். விவசாயிகளின் நிலையையும் கடமை களையும் அவர்களுக்கு விளக்கும் லெனின், தொழிலாளி வர்க்கத்துடனான கூட்டில்தான் கிராமப்புற ஏழை மக்களால் சுரண்டலலிருந்து இறுதியாக விடுதலை அடைய முடியும்; இத்தொழிலாளி வர்க்கம், பண்ணையடிமை முறையின் எச்சங்களை ஒழித்துக்கட்டவும் அரசியல் விடுதலைக்காகவும் விவசாயிகள் அனைவரின் போராட்டத்தை தலைமை தாங்க வல்ல ஒரே சக்தி என்பது மட்டுமல்ல, கிராமப்புற ஏழை மக்களுடன் கூட்டு சேர்ந்து உற்பத்திச் சாதனங்களின் மீதான தனியுடமையை ஒழித்துக்கட்டி, சோசலிச மாற்றங்களை நிறைவேற்ற வல்ல சக்தியும் இதுதான் என்று எழுதினார்.

இச்சிறு நூல் பிரபல மார்க்சியப் பிரசுரத்துக்கு எடுத்துக்காட்டாகும்., இது பன்முறை மறுபிரசுரம் செய்யப்பட்டு ரஷ்ய கிராமங்கள், நகரங்களில் பரப்பப்பட்டது, இது புரட்சிகர சமூக - ஜனநாயக கருத்துக்களை விவசாயிகள் மத்தியில் பரப்புவதில் பெரும் பங்காற்றியது.

1. நகரத் தொழிலாளிகளின் போராட்டம் நகரங்களில் தொழிலாளிகளின் கிளர்ச்சிகளைப் பற்றி உண்மையில் ஏற்கனவே பலவிவசாயிகள் கேள்விப் பட்டிருப்பார்கள். சிலர் தலைநகர் களுக்கும், ,(மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க், இன்றைய லெனின்கிராட் போன்ற நகரங்களை இங்கே குறிக்கப்படுகிறது.) தொழிற்சாலைகளுக்கும் சென்றிருப்பதால், கலகங்கள் என்று போலீசார் குறிப்பிடுபவற்றைத் தாங்களே நேரில் கண்டிருப்பர். இக்கிளர்ச்சிகளில் பங்கு கொண்ட தற்காக அதிகாரிகளால் தத்தம் கிராமங்களுக்கு அனுப்பப்பட்ட தொழிலாளிகளை வேறுசிலர் அறிவார்.

தொழிலாளிகளால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், அல்லது தொழிலாளிகளின் போராட்டத் தைப் பற்றிய பிரசுரங்களை இன்னும் சிலர் பார்த்திருப் பார்கள். வேறு சிலரோ நேரடி அனுபவமுள்ள மக்களிடமிருந்து நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை மட்டுமே கேள்விப்பட்டிருப்பார்கள்.

முன்பெல்லாம் மாணவர்கள் மட்டுமே கலகம் செய்தனர். ஆனால் இப்போதோ, பெரிய நகரங்களிலெல்லாம் ஆயிரக்கணக்கான, பத்தாயிரக் கணக்கான தொழிலாளி கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் எஜமானர்களை, அதாவது தொழிற்சாலைச் சொந்தக்காரர்களை எதிர்த்து, முதலாளிகளை எதிர்த்துப் போராடுகின்றனர். தொழிலாளிகள் வேலை நிறுத்தங்களைப் பிரகடனம் செய்கின்றனர்.

தொழிற்சாலையிலுள்ள எல்லாத் தொழிலாளிகளும் ஒரே நேரத்தில் வேலையை நிறுத்தி விடுகின்றனர்; கூலி உயர்வை கோருகின்றனர், ஒரு நாளில் பதினோரு மணி அல்லது பத்துமணி நேரம் தங்களை வேலை வாங்கக் கூடாது என்றும் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும் என்று கோருகின்றனர். தொழிலாளியினுடைய வாழ்க்கையின் சுமையைக் குறைக்கக் கூடிய வேறு சிலவற்றையும் கூடத் தொழிலாளிகள் கோருகின்றனர். தொழிற்சாலை களில் வேலை நிலைமைகள் நல்லவையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்; தொழிலாளிகளின் அங்கங்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்க, இயந்திரங்கள் விசேசச் சாதனங்களால் பாதுகாக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர், தங்களுடைய குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வசதியை விரும்புவதோடு, மருத்துவமனைகளில் நோயுற்றோருக்குத் தக்க சிகிட்சை தரப்பட வேண்டும் என்றும் விரும்புகின்றனர்; மேலும் தொழிலாளிகள் வசிக்கும் இல்லங்கள், பன்றிக் கொட்டில்கள் போலிருக்கும் நிலை மாறி, மனிதர்கள் வாழும் வீடுகளாக இருக்க வேண்டுமென விரும்புகின்றனர்.

தொழிலாளிகளின் போராட்டத்தில் போலீசார் குறுக்கிடுகின்றனர். போலீசார் தொழிலாளி களைப் பிடித்துச் சிறையில் தள்ளுகின்றனர், எவ்வித வழக்கு விசாரணையுமில்லாமல் அவர் களுடைய கிராமங்களுக்குத் திருப்பி அனுப்புகின்றர், ஏன் சைபீரியாவுக்குக் கூட கடத்து கின்றனர். வேலை நிறுத்தங்களையும் தொழிலாளர் கூட்டங்களையும் தடைசெய்யும் சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் போலீசாரை எதிர்த்தும் அரசாங்கத்தை எதிர்த்தும் தொழிலாளிகள் போராட்டம் நடத்துகின்றனர். தொழிலாளிகள் கூறுகின்றனர்: கோடிக்கணக்கான தொழிலாளி மக்களாகிய நாங்கள் நீண்டகாலமாக முதுகு வணங்கி இருந்து விட்டோம்! நீண்டகாலமாக நாங்கள் பணக்காரர் களுக்காக உழைத்தோம், ஆனால் நாங்கள் வறியவர்களாகவே இருந்துவருகிறோம். எங்களைக் கொள்ளையிட அவர்களுக்கு நாங்கள் நீண்டகாலமாக அனுமதித்துவிட்டோம்! நாங்கள் சங்கங்களில் ஒன்றுசேர விரும்புகிறோம், எல்லாத் தொழிலாளி களையும் ஒரு மாபெரும் தொழிலாளர் சங்கத்தில் (தொழிலாளர் கட்சியில்) ஒன்று திரட்டவும் நல்வாழ்வுக்காக ஒன்றுசேர்ந்து பாடுபடவும் நாங்கள் விரும்புகிறோம். இப்போது இருப்பதை விட புதியதான, மேலான சமூக அமைப்பைப் பெற நாங்கள் விரும்புகிறோம்; இப்புதிய, மேலான சமூகத்தில் பணக்காரர்களோ ஏழைகளோ இருக்கக் கூடாது; எல்லோரும் உழைக்க வேண்டும். விரல்விட்டு எண்ணக் கூடிய சில பணக்காரர்கள் அல்ல, எல்லா உழைப்பாளி களும் பொது உழைப்பின் பலன்களை நுகர்தல் வேண்டும். லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களை சுரண்டுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆவதற்கு இயந்திரங்களும் இதர முன்னேற்றங்களும் உதவக் கூடாது; அவை மக்கள் அனைவருடைய வேலைச் சுமையைக் குறைக்க உதவ வேண்டும். இந்தப் புதிய, மேலான சமுதாயம் சோசலிச சமுதாயம் எனப்படுகிறது. இந்த சமுதாயத்தைப் பற்றிய போதனைசோசலிசம் எனப்படும். இம்மேம்பாடான சமுதாய அமைப்பைப் பெற வேண்டி போராடுகின்ற தொழிலாளர் சங்கங்கள் சமூக - ஜனநாயகக் கட்சிகள் (கம்யூனிஸ்டு கட்சிகள்) எனப்படுகின்றன. கிட்டதட்ட எல்லா நாடுகளிலும் (ரஷ்யாவையும் துருக்கியும் தவிர) இவற்றைப் போன்ற கட்சிகள் வெளிப்படையாக இயங்குகின்றன. நம் தொழிலாளிகளும், படித்த ஜனப்பகுதியின் மத்தியிலே தோன்றியுள்ள சோசலிஸ்டுகளோடு சேர்ந்து அதைப் போன்ற கட்சியை அமைத்துள்ளனர்; அதுதான் ரஷ்ய சமூக -ஜனநாய எல்லா அரசாங்க அதிகாரிகளையும் தாங்களாகவே தேர்வு செய்யவும் அரசாங்க விவகாரங்கள் எல்லாவற்றையும் விவாதிக்க எல்லா வகைப்பட்ட கூட்டங்களையும் கூட்டவும் எவ்வித செய்தித் தாள்களையும் நூல்களையும் யாரிடமும் அனுமதி கேட்க்காமல் தாங்களே வெளியிடவும் மக்களுக்கு உள்ள உரிமையாகும்.

மற்ற ஐரோப்பிய மக்கள் எல்லோரும் அரசியல் சுதந்திரத்தை நீண்ட காலத்திற்கு முன்னரே போராடி பெற்றுவிட்டனர். துருக்கியிலும் ரஷ்யாவிலும் மட்டும் மக்கள் முறையே சுல்தான் அரசாங்கத்திற்கும் ஜாரின் எதேச்சிகார அரசாங்கத்திற்கும் அரசியல் ரீதியில் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். ஜாரின் எதேச்சிகாரம் என்பது ஜாருடைய எல்லையற்ற ஆதிக்கமாகும்.

அரசாங்கத்தை அமைப்பதிலோ, அரசாங்கத்தை நிர்வகிப்பதிலோ மக்களுக்கு எவ்விதப் பங்குமில்லை. ஜாரினால், அவரது தனிப்பட்ட (குறிப்பு - * இங்கேயும் கீழேயும், அதேபோல் இப்பதிப்பின் 16, 19 பக்கங்களிலும் "அரசாங்க டூமா" என்ற வார்த்தைகளுக்குப் பதில் 1905ஆம் ஆண்டு பதிப்பில் "பொதுமக்கள் பிரதிநிதிகளின் சபை" என்ற சொற்டொடர் உள்ளது (-ர்) வரம்பில்லாத, எதேச்சிகார அதிகாரத்தினால் எல்லாச் சட்டங்களும் இயற்றப்படுவதோடு எல்லா அதிகாரிகளும் நியமிக்கப் படுகிறார்கள். ஆனால் எல்லா ரஷ்யச் சட்டங்களையும் எல்லா ரஷ்ய அதிகாரிகளையும் ஜார் மன்னனால் அறிந்திருக் கக்கூட முடியாது என்பது கூறாமலேயே விளங்கும். நாட்டில் நடப்பனவற்றையுங்கூட ஜாரினால் தெரிந்துகொள்ள முடியாது. மிகவும் செல்வந்தர்களான, உயர் குடும்பத்தில் உதித்த விரல்விட்டு எண்ணக் கூடிய சில அதிகாரிகளின் சித்தத்தை ஜார் அப்படியே ஊர்ஜிதம் அதாவது உறுதி செய்கிறார்.

 

எவ்வளவுதான் ஆசையிருந்தாலும், ஒரு தனி மனிதனால் ரஷ்யா போன்ற பரந்த நாட்டை ஆள முடியாது. ரஷ்யாவை ஆளுவது ஜார் அல்ல, ஒரு தனிநபரின் எதேச்சிகாரம் என்று பேச்சு முறையில் சொல்லலாம்! விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் செல்வந்தர்களான, மிகவும் உயர்குடியில் பிறந்த அதிகாரிகளால் ரஷ்யா ஆளப்படுகிறது. இந்த விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் எதை விரும்பிச் சொல்லுகிறார்களோ அதை மட்டுமே ஜார் தெரிந்து கொள்கிறார். விரல்விட்டு எண்ணக் கூடிய, உயர் குடியைச் சேர்ந்த பிரபுவம்சத்தினரின் விருப்பத்திற்கு எதிராக எதையும் செய்ய ஜாருக்கு எவ்வித வாய்ப்பும் கிடையாது. ஜாரோ ஒரு நிலப்பிரபு, பிரபுவம்சத்தைச் சேர்ந்தவர்; மிகச் சிறு வயதிலிருந்தே இந்த உயர்குடி மக்களிடையேதான் அவர் வாழ்ந்து வந்திருக்கிறார்; அவரை வளர்த்தவர்களும் கல்வி கற்பித்தவர்களும் அவர்களே ஆவர்; இந்த உயர்குடிப் பிரபுவம்சத்தினருக்கும் பணக்கார நிலப்பிரபுக் களுக்கும், ஜார் தர்பாருக்கு வரும் மிக மிகப் பணம் படைத்த வியாபாரிகளில் சிலருக்கும் ரஷ்ய மக்களைப் பற்றி என்ன தெரியுமோ அது மட்டுமே ஜாருக்கும் தெரியும்.

ஒவ்வொரு வோலஸ்த் (குறிப்பு - வோலஸ்த் - புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் மிகத் தாழ்ந்தநிலை நிர்வாக - நிலப்பரப்பு அலகு (சில கிராமங்களையும் சிற்றூர்களையும் இணைத்தது) இது உயெஸ்டின் ஒரு பகுதியாக இருந்தது. உயெஸ்டு குபேர்னியாவின் ஒரு பகுதியாக விளங்கியது) நிர்வாகக் காரியாலயத்தின் சுவரிலும் ஒரே மாதிரியான படம் ஒன்று தொங்குவதை நீங்கள் காணலாம். முடிசூட்டு விழாவுக்காக வந்திருந்த வோலஸ்த் நிர்வாகிகளோடு பேசிக் கொண்டிருக்கும் ஜாரை (தற்போதைய ஜாரின் தந்தையாரான மூன்றாம் அலெக்சாந்தரை) அது சித்தரிக்கிறது. ‘’உங்களது பிரபுவம்சத் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்’’ என்று ஜார் அவர்களுக்கு உத்தரவு இட்டுக் கொண்டிருக்கிறார். தற்போதைய ஜாரான இரண்டாம் நிக்கலாய் இதே சொற்களைத் திருப்பிச் சொல்லியிருக்கிறார். இவ்வாறு, பிரபுவம் சத்தினரின் உதவியாலும் அவர்கள் மூலமாகவுமே நாட்டை ஆள முடியும் என்பதை ஜார்கள் தாங்களாகவே ஒப்புக்கொள்கின்றனர். பிரபுவம்சத்தினருக்கு விவசாயிகள் கீழ்படிந்து நடக்குமாறு பணித்து ஜார் சொன்ன இந்தச் சொற்களை நாம் நன்றாக நினைவில் வைக்க வேண்டும். ஜாரின் ஆட்சி மிகச் சிறந்த ஆட்சி முறை என்று காட்ட முயல்வோர் மக்களுக்கு எவ்வகைப்பட்ட பொய்யைக் கூறுகிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த ஆட்கள் கூறுகிறார்கள்- ‘’வேறு நாடுகளில் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது; ஆனால் பணக்கார்ர்களே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; அவர்கள் அநியாயமான முறையில் ஆள்வதோடு ஏழைகளை ஒடுக்குகிறார்கள். ரஷ்யாவிலோ அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது அல்ல; நாடு முழுவதையும் எதேச்சிகார ஜார் ஆளுகிறார் ஏழை, பணக்காரன் யாவருக்கும் மேலே ஜார் நிற்கிறார், ஜார் நியாயமானவர், ஏழை,பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் ஒவ்வொருவருக்கும் நீதி வழங்குகிறார்’’.

 

இதைப் போன்ற பேச்சு வெறும் பாசாங்கு ஆகும். நம் அரசாங்கத்தால் வழங்கப்படும் நீதி எத்தகையது என்பது ஒவ்வொரு ரஷ்யனுக்கும் தெரியும். ஒரு சாதாரணத் தொழிலாளியோ, பண்ணை உழைப்பாளியோ நம் அரசாங்கச்சபைக்கு அங்கத்தினராக வர முடியுமா என்பது ஒவ்வொரு வருக்கும் தெரிந்ததே. மற்ற ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளும் வயல்களில் பயிரிடும் பண்ணை உழைப்பாளிகளும் அரசாங்க டூமாக்களுக்கு (நாடாளுமன்றங்களுக்கு) தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொழிலாளிகளுடைய துயரம் நிறைந்த நிலைமை களை எல்லா மக்களுக்கும் முன்பு சுதந்திரமாக அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்; ஒன்றுசேரும்படியும் மேலான வாழ்வுக்காகப் போராடும்படியும் தொழிலாளி களுக்கு அவர்கள் அறைகூவல் விடுத்தனர். மக்கள் பிரதிநிதிகளுடைய அப்படிப்பட்ட பேச்சுக்களை எவனும் தடுக்கத் துணியவில்லை. எந்த போலீஸ்காரனும் அவர்கள் மீது விரல் கூட வைக்கத் துணியவில்லை.

எமது கருத்து -

நாட்டுப்புற ஏழை மக்களுக்கு லெனினால் எழுதப்பட்ட நூல் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தொழிலாளி, விவசாயி மற்றும் அறிவுஜீவிகளின் கைகளில் எப்போதும் வைத்திருக்க வேண்டிய நூலாகும். இந்த நூலில் சோசலிச சமுதாயத்தின் அவசியம் பற்றியும் அதற்காகவே தொழிலாளிகளும் கம்யூனிஸ்டுகளும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும், சோசலிச சமுதாயத்தில் மட்டுமே மக்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள் என்ற கருத்தை லெனின் மிகவும் எளிமையாக விளக்குகிறார்.

 

சோசலிசம் அல்லாத பிற சமூகங்களில் குறிப்பாக ஜார் மன்னன் போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சியில் மக்கள் சுதந்திரமின்றி அடிமைகளாகவே வாழ்கிறார்கள் என்பதை ஜார் மன்னன் எப்படிப்பட்டவன், அவனுக்கு மக்களின் மீது எவ்விதமான அக்கறையும் இல்லை என்பதையும் ஜாரின் ஆட்சியில் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் இங்கே லெனின் எளிமையாக விளக்குகிறார். லெனினால் விளக்கப்பட்ட ஜாரையும் இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள், இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் மக்களுக்கு மேலானவர்களாக அன்றைய பிரபுகுலத்தவர்களைப் போன்று வலம் வருவதை நாம் பார்க்கலாம். இந்த அரசியல்வாதிகள் போடும் போஸ்டர்களில் இந்த அரசியல் தலைவர்களின் படங்களை மட்டுமே நாம் காணலாம். இன்றைய அரசியல்வாதிகள் தலைவர்களை மட்டுமே மக்களிடம் முன்நிறுத்துகிறார்கள். அவர்களின் புகழ்பாடுவதையே அரசியலாக்க் கொண்டுள் ளனர். அன்றைய ரஷ்யாவிலும் ஜார் மன்னன் புகழ் பாடப்பட்டது, இப்போதும் இந்த அரசியல் தலைவர்களின் புகழ்தான் பாடப்படுகிறது.

 

அன்றைய ரஷ்யாவில் ஜார் மன்னனுக்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது தெரியாது, அதேபோல் இன்று நம்மை ஆளும் மந்திரிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதும் தெரியாது, அப்படியே தெரிந்தாலும் அதைப் பற்றி இவர்கள் கவலைப் படுவதில்லை.

 

அன்றைய ரஷ்யாவில் ஜார் மன்னனுக்கு கோரிக்கை கொடுக்கச் சென்ற மக்களை ஜாரின் இராணுவம் சுட்டுக் கொன்றது. இரத்த ஞாயிறு என்று அதனை வரலாறு பேசுகிறது.

 

தற்போதும் ஒரு ஆண்டுகாலம் விவசாயிகள் போராடிய போதும் இதுவரை அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத நரேந்திர மோடிக்கும் அன்றைய ஜார் மன்னனுக்கும் என்ன வேறுபாடு உள்ளது.

 

இன்றைய இந்திய ஆட்சியாளர்களும் அன்றைய ஜாரின் ஆட்சிகாலத்தில் உள்ள ஆட்சியாளர்கள் நடந்துகொண்டது போலவே பல விசயங்களில் நடந்துகொள்வதை இந்த நூலூப் படித்து ஒப்பிட்டுப் பார்த்து புரிந்துகொள்ள முடியும், புரிந்துகொள்ள வேண்டும். தொடரும்......... தேன்மொழி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்