1. இந்தியாவை ஆள்பவர்கள் இந்திய கிராமங்களைப் பற்றியோ, அந்த கிராமங்களில் வாழும் மக்களைப் பற்றியோ, அங்கு நடைபெறும் விவசாயம் பற்றியோ எவ்விதமான கவலையும் கொள்வதில்லை ஏன்?
2. 1991 ஆம் ஆண்டில் கட்டமைப்பு மாற்றத் திட்டம் என்ற கொள்கையை இந்திய ஆட்சியாளர்கள் பின்பற்ற தொடங்கினர்.
3. உலகவங்கி, சர்வதேச செலாவணி நிதியம் (IMF), உலக வர்த்தக கழகம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் போடும் உத்தரவுகளுக்கு கீழ்படிந்தே இந்திய ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள்.
4. இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்றுமதி - இறக்குமதிக் கொள்கைகள் தாராளமயமாக் கப்பட்டது. பெரும்பாலான உற்பத்திப் பொருட்களின் மீதான இறக்குமதி மற்றும் சுங்க வரிகள் குறைக்கப்பட்டன. இதனால் அன்னிய கார்ப்பரேட் முதலாளிகள் அதிக லாபம் சம்பாதித்து பயனடைந்தனர்.
5. விவசாயத்துறையில் அரசு முதலீடு செய்வதைக் குறைத்துக்கொண்டது, மானியங்களை குறைத்தது. இதனால் விவசாயிகளுக்கு இதுவரை கிடைத்து வந்த சலுகைகள் தற்போது கிடைக்க வில்லை.
6. தொழிற்துறையை முழுவதுமாக தனியார்கள் கைப்பற்றிக் கொள்வதற்கு அரசு துணை போனது. இதனால் உழைக்கும் மக்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்து போனது.
7. பொதுவினியோகத் திட்டத்தை சீரமைப்பது என்ற பெயரில் ஏழைகளுக்கு வழங்கி வந்த உணவு மானியத்தை அரசு குறைப்பதன் மூலம் ஏழைகளுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.
8. 1950 - 1990 ஆம் ஆண்டு காலத்தில் விவசாய உற்பத்தித் துறையில் வளர்ச்சி விகிதமானது சீராக வளர்ந்து வந்தது. ஆனால் 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னால் இந்த வளர்ச்சியானதுகுறைந்துவிட்டது.
9. மக்கள்தொகை வளர்ச்சி விகிதமானது உணவுதானிய வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாக இருந்தது. மேலும் உள்ளூர் சந்தை விலையைவிடக் கூடுதலான விலைக்கு உணவு தானியங்களை இந்தியா இறக்குமதி செய்தது. இதன் மூலம் அன்னிய கார்ப்பரேட்டுகள் அதிகமான லாபத்தை இங்கிருந்து கொள்ளையடித்துச் செல்ல இந்திய ஆட்சியாளர்கள் வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
10. விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ந்தது. இதனால் விவசாயமானது இலாபம் இல்லாத தொழிலாக மாறியது.
11. நிலங்களில் பயிர் செய்து நஷ்டம் அடைந்து நிலங்களை விற்க்கும் நிலையை தவிர்ப்பதற்காக விவசாயிகள் நிலங்களில் பயிர் செய்வதையே கைவிட்டார்கள். அதனால் பயிர் செய்யும் நிலப்பரப்பு குறைந்துகொண்டு இருக்கிறது.
12. பயிர் செய்யும் நிலப்பரப்பு குறைந்ததால் விவசாயத்துறையில் வேலையில் ஈடுபடுபவர் களின் எண்ணிக்கை குறைந்து வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்தது.
13. கிராமப்புறத்தில் வாழ்ந்துவரும் தலித் சாதியைச் சேர்ந்தவர்கள் இந்த வேலை இழப்பின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டனர். இவர்கள்தான் இந்தியாவில் புலம்பெயறும் தொழிலாளிகளில் பெரும்பான்மையினர் ஆவார்கள்.
14. விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கியே விவசாயம் செய்கிறார்கள். விவசாயத்தில் லாபம் கிடைக்காமல் நஷ்டம் அடையும் போது கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டு மடிகிறார்கள்.
15. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது உள்ளூர் பிரச்சனை இல்லை. மாறாக நாடு தழுவிய பிரச்சனை ஆகும். இது இந்திய விவசாய சமூகம் மட்டுமல்லாது அனைத்து இந்திய மக்கள் சமூகப் பிரச்சனையாகும்.
16. உலக வர்த்தக கழகத்தின் உத்தரவுக்கு அடிபணிந்து சில விவசாய உற்பத்திப் பொருளுக்கான இறக்குமதி வரியைக் குறைத்ததால், அன்னியர்கள் அந்தப் பொருட்களை இங்கு இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு விற்றதால், அந்தப் பொருட்களின் விலை குறைந்து அந்தப் பொருட்களை உற்பத்தி செய்த இந்திய விவசாயிகளும் குறைந்த விலைக்கே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்திய விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். இதனால் அன்னிய கார்ப்பரேட்டுகள் லாபம் அடைந்தனர்.
17. விவசாயிகளுக்கு கொடுத்துவந்த மானியத்தை குறைத்ததால், விவசாயிகளின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்து இந்திய விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
18. உரம் போன்ற விவசாய இடுபொருள்கள் சந்தையில் தட்டுப்பாடுகள் ஏற்படுவதால் அதனை அதிக விலை கொடுத்து விவசாயிகள் வாங்க வேண்டியுள்ளதால் விவசாயிகளின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்து நஷ்டம் அடைகிறார்கள். ஆனால் இந்த இடுபொருட்களை உற்பத்தி செய்யும் உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளும், வணிகர்களும் லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆகவே விவசாய உற்பத்தியின் மூலம் லாபம் சம்பாதிப்பவர்கள் விவசாயத்தில் நேரடியாக ஈடுபடாத முதலாளிகளும், வணிகர்களும் மட்டும்தான். விவசாயத்தில் நேரடியாக ஈடுபடும் விவசாய நிலத்தின் சொந்தக்காரர்களும் அதில்உழைப்பைச் செலுத்தும் விவசாயக் கூலிகளுக்கும் போய்சேரவில்லை.
19. 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு தேசிய வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் கொள்கையை கைவிட்டது. அதன் விளைவாக விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் பெற்று விவசாயம் செய்தனர். அதனால் விவசாயிகளின் உற்ப்திச் செலவு அதிகரித்து விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்தமுடியால் நெருக்கடிக்கு ஆளானர்கள்.
20. தனியார் வங்கிகளுக்கு ஊக்கம் கொடுத்ததன் விளைவாகவும் விவசாயிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்க முடியால் போனது.
21. விவசாயத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறைந்துபோனது. விவசாயம், நீர்ப்பாசனம், வெள்ளத்தடுப்பு, கிராமப்புற தொழிற்சாலை, எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட ஊரக வளர்ச்சித் திட்டத்திற்காக செலவிடும் தொகையானது 1986 -1990 காலத்தில் 14.5% ஆக இருந்தது, 1995 - 2000 காலத்தில் 6% ஆக குறைந்துபோனது. பாசன வசதி பெற்ற நிலத்தின் அளவு 2.62% உயர்விலிருந்து 0.5% ஆக குறைந்தது. இதன் விளைவாக விவசாய வளர்ச்சியும் குறைந்தது.
22. பொது விநியோகத் திட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் என்றும் வறுமைக் கோட்டிற்கு மேலுள்ளவர்கள் என்றும் பிளவு ஏற்படுத்தி வறுமைக் கோட்டிற்கு மேலுள்ளவர் களுக்கு ரோஷன் பொருட்கள் கொடுப்பதில்லை என்ற திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் ரேஷனுக்காக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் அளவை குறைத்தார்கள். இது விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் நெருக்கடியைக் கொடுத்தது.
23. ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை கூட்டியதால் இந்திய மக்கள் அந்தப் பொருட்களை வாங்கவில்லை. அதனால் கிடங்குகளில் குவிந்த உணவுப் பொருட்கள் வீணாகின. பொது மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்காததால் அவர்கள் பட்டினியால் துண்பப்பட்டனர்.
24. சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்குகிறோம் என்று சொல்லி விவசாயி களிடமிருந்து நிலங்களை வலுக்கட்டாயமாக ஆட்சியாளர்கள் பறிமுதல் செய்து கார்ப்பரேட்டு முதலாளிகளிடம் ஒப்படைத்தனர். அதன் மூலம் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதே வேளையில் கார்ப்பரேட் முதலாளிகள் நல்ல பலன் அடைந்தனர்.
25. கிராமங்களிலுள்ள உடமை வர்க்கங்களான ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், சிறிதளவு பணக்கார விவசாயிகள், நிலமற்று கூலி விவசாயிகள், குறிப்பாக தலிச் சாதிகளைச் சேர்ந்த கூலி விவசாயிகள், நகரங்களிலுள்ள ஏழைகள் போன்ற அனைவரும் இந்த விவசாய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலுள்ள அனவருமே வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பெருநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆகவே விவசாயப் பிரச்சனை என்பது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல, இந்திய நாட்டுப் பிரச்சனை ஆகும்.
சில முதலாளித்துவ நாடுகளில், உதாரணமாக விவசாய நிலங்களுக்கு சொந்தக்கார்ரான நிலவுடமையாளர்களிடமிருந்து நிலங்களை குத்தகைக்கு முதலாளி வாங்கி, அதில் விவசாயக் கூலித் தொழிலாளர்களைப் பயன்படுத்தி விவசாயத்தில் முதலாளிகள் ஈடுபடுவார்கள். சில இடங்களில் அந்த முதலாளிகளுக்கே சொந்தமாக நிலங்கள் இருக்கும். அந்த நிலங்களில் முதலாளிகள் விவசாயம் செய்வார்கள். விவசாயத்துக்குத் தேவையான விதை, உரம், பூச்சிமருந்து போன்ற இடுபொருட்களை முதலாளிகள் அவர்களிடமுள்ள மூலதனத்தைக் கொண்டு வாங்குவார்கள். முதலாளிகளுக்குச் சொந்தமாக நவீன விவசாயக் கருவிகள் இருக்கும். அந்த நவீனக் கருவிகளை விவசாயத்திற்கு முதலாளிகள் பயன்படுத்துவார்கள். விவசாயத்தில் ஈடுபடும் தொழிலாளர்களை இந்த முதலாளிகள் மேற்பார்வையிடுவார்கள். விளைந்த பொருட்களை முதலாளிகள் சந்தைக்கு கொண்டு சென்று விற்பார்கள்.
தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட உபரியை லாபமாக பெற்றுக்கொண்ட முதலாளிகள் அந்த லாபத்தை நிலவுடமையாளர்களோடு பங்கிட்டுக் கொள்வார்கள். அந்த நாடுகளிலுள்ள முதலாளித்துவ அரசுகளும் இந்த முதலாளி களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும். பெரிய அளவிலான நிலத்தில் விவசாயம் செய்வதாலும், நவீன கருவிகளைப் பயன்படுத்துவதாலும் அதிகமாக விளைவிக்க முடிகிறது. அதன் காரணமாக விவசாயத்தில் ஈடுபடும் முதலாளிகள் அதிகமாக லாபத்தை அடைந்து முதலாளிகளும் நிலவுடமையாளர்களும் சுகபோகமாக வாழ்கிறார்கள். அங்கெல்லாம் ஒரு பக்கம் முதலாளிகள் மற்றும் நிலவுடமை யாளர்களும் மறுபக்கம் கூலித் தொழிலாளர்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலை வளர்கிறது. அங்கும் சிறுவித நில உடமையாளர்களும் இருந்தபோதும் அவர்களின் சிறுவுடமைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் கூலித் தொழிலாளர்களாக மாறுகிறார்கள். இந்த சூழலில் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி முதலாளிகள் மற்றும் நிலவுடமையாளர்களிடமிருந்து நிலங்களை பறிமுதல் செய்து அதனை சமூக உடமையாக மாற்றி சோசலிச உற்பத்தி முறையைக் கொண்டுவர முடியும்.
இங்கே நிலத்தின் மீதான உடமையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். உற்பத்திக் கருவிகளின் சொந்தக்காரர்களான முதலாளிகளும் சிறிய எண்ணிக்கையிலேயே இருப்பார்கள். உடமையற்ற வர்க்கமாகிய தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.சிறுவுடமை வர்க்கங்களின் எண்ணிக்கை யும் குறைவாகவே இருக்கும் அல்லது அந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கும். ஆகவே பெருவாரியான உழைக்கும் மக்களை அணிதிரட்டி சிறுபான்மையினரான சிறுவுடமை வர்க்கங்களை செயலற்ற நிலைக்கு உள்ளாக்கி அதாவது அந்த வர்க்கங்கள் உழைக்கும் வர்க்கங்களுக்கும், முதலாளி வர்க்கங்களுக்கும் ஆதரவு கொடுக்காத நடுநிலையில் வைப்பதன் மூலம் முதலாளி வர்க்கத்தையும் நிலவுடமை வர்க்கங்களையும் எதிர்த்துப் போராட முடியும். அந்த வகையில் சோசலிசத்திற்கான போராட்டத்தை கிராமங்களில் நடத்த முடியும். இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், கிராமங்களில் வாழும் வர்க்கங்களின் வாழ்நிலை யிலிருந்தும், அவர்களின் தேவைகளிலிருந்தும், அந்தத் தேவைகளை அடைவதற்கான அவர்களின் போராட்ட உணர்வுகளிலிருந்து மட்டுமே அங்கு எந்த முறையில் மக்களைத் திரட்டி எந்த வகையிலான நோக்கத்திற்காகப் போராட்டங்களை நடத்துவது என்பதை மக்களின் நலனில் அக்கறை உள்ள கம்யூனிஸ்டுகள் முடிவு செய்ய வேண்டும்.
அதற்கு கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் பொருளியல் வாழ்க்கையை அதாவது வர்க்க ஆய்வு செய்ய வேண்டும். அத்தகைய வர்க்க ஆய்வு செய்யாமலேயே இந்தியா ஒரு அரைநிலப்பிரபுத்துவ நாடு என்று சிலரும், இல்லை இல்லை இது ஒரு முதலாளித்துவ நாடு என்றும் மயிர்பிளக்கும் வாதங்கள் செய்வதால் எவ்விதமான பயனும் இல்லை. மாறாக இந்த விவாதங்கள் வெட்டியான விவாதங்களாகவே இருக்கின்றன என்றே கருத வேண்டியுள்ளது.
இந்திய கிராமங்களில் விவசாய உற்பத்தி எப்படி நடக்கிறது? அங்கு எத்தகைய வர்க்கங்கள் இருக்கின்றன?, அவர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது?, அவர்களின் தேவைகள் என்ன? அந்தத் தேவைகளை நிறைவேற்ற அவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்கின்ற கேள்விகள் நம்முன் உள்ளது. இந்தக் கேள்விகளுக்கு விடை காணாமல் கிராமங்களில் வாழும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தீர்வுகளை நாம் புரிந்துகொள்ள முடியாது. இதற்கு நாம் கிராமங்களுக்குச் சென்று கள ஆய்வு செய்து, அங்குள்ள வர்க்கங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய கிராமங்களில் வாழும் மக்களைப் பற்றி நமக்கு கிடைத்துள்ள மேலோட்டமான விவரங்களிலிருந்து நமது ஆய்வையும், புரிதலையும் தொடங்குவோம். மீண்டும் மீண்டும் புதிய விவரங்களை சேகரிக்கும் போது நாம் புதிய வகையான புரிதலுக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் நாம் நடைமுறைக்கான திட்டங்களை வகுத்து தொடர்ந்து செயல்பட்டு ஒரு தெளிவான புரிதலுக்கு வரமுடியும். மேலும் தெளிவான திட்டத்தை உருவாக்கி மக்களைத் திரட்டிப் போராடி தேவையான அல்லது பொருத்தமான சமூக மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். மக்களே வரலாற்றைப் படைக்கிறார்கள் என்பது மார்க்சியம். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நாம் செயல்பட வேண்டுமானால் நாம் வரலாற்றைப் படைக்கும் மக்களைப் புரிந்து கொள்ள வேண்டியது முதன்மையான அவசியமாகும். இவ்வாறு கிராமங்களிலுள்ள மக்களைப் புரிந்து கொள்வதற்கான கள ஆய்வு செய்து விவாதித்து புரிந்து கொள்வதற்கான விவாதங்கள் நடத்துவது பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாறாக கிராமங்களில் முதலாளித்துவம் வளர்ந்துவிட்டது அல்லது அரைநிலவுடமை நீடிக்கின்றது என்று விவாதம் செய்வது வெட்டி விவாதமாகும். உண்மையில் மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தி சமூக மாற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்ற உணர்வோ நோக்கமோ இல்லாதவர்கள்தான் இத்தகைய வெட்டி விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களால் விவாதத்தில் முன்வைக்கும் கேள்விகளுக்கு விடைகண்டு பதில் சொல்வதைக் காட்டிலும் கிராமங்களுக்குச் சென்று வர்க்கங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விவாதங்களில் ஈடுபடுவது பயனுள்ளதாக இருக்கும்.
இந்திய கிராமங்களில் ஏராளமான நிலங்களை தனக்குச் சொந்தமாக குவித்து வைத்திருப் பவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகும். காவிரி போன்ற நீர்ப்பாசன வசதி கொண்டிருக்கும் கிராமங்களில்தான் கோவில் மற்றும் மடங்களுக்குச் சொந்தக்கார ஆன்மீக நிலவுடமையாளர்களும், ஆன்மீகமற்ற நிலவுடமை யாளர்களும் மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ளனர். உதாரணமாக திருப்பனந்தாள் மடம் போன்றவை. இத்தகைய நிலவுடமையாளர்கள் அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு சுகபோக வாழ்க்கை நடத்துகிறார்கள். தற்போது இந்த மடத்துச் சாமியார்கள் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை நடத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு ஏராளமான வருமானத்தை ஈட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய நிலவுடமையாளர் களுக்கும் குத்தகை விவசாயிகளுக்கும் இடையே பகை முரண்பாடுகள் உள்ளது. இந்தச் சூழல் இந்திய கிராமப் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே நிலவுகின்றது. இந்த குத்தகை விவசாயிகள் கடன் வாங்கியே விவசாயம் செய்கிறார்கள். இந்த குத்தகை விவசாயிகளுக்கும் இவர்களுக்கு கடன் கொடுக்கும் வட்டிக்காரர்களுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளது. இந்த குத்தகை விவசாயிகள் விவசாயக் கூலிகளைக் கொண்டு விவசாயம் செய்கிறார்கள். இந்த குத்தகை விவசாயிகளுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் உண்டு.
ஆற்றுப்பாசன வசதி இல்லாத கிராமங்களில் பொதுவாக நிலக்குவியல்கள் இல்லை. அங்கெல்லாம் பெருவித நிலவுடமையாளர்கள் இல்லை. ஒரு ஏக்கர் அல்லது இரண்டு ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரான ஏழை விவசாயிகள் ஓரளவுக்கு அதிகமாகவே உள்ளனர். காலம் செல்லச் செல்ல அவர்களின் குடும்பச் சூழல் காரணமாக இந்த நிலங்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்டு பலரும் மிகச் சிறிய துண்டு நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக மாறிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலங்களில் அவர்கள் குடும்பத்தோடு பாடுபடுகிறார்கள். தேவை ஏற்படும் போது அரிதாகவே கூலிகளைப் பயன்படுத்துகிறார்கள். இத்தகையவர்கள் சிறிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரர்கள் என்ற முறையில் உடமை வர்க்கமாகவும், உழைப்பில் ஈடுபடுவதன் மூலம் உழைப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். இது போன்ற ஒரு ஏழை விவசாயிடம் பேசும்போது, தனக்குச் சொந்தமான நிலத்தை அரசாங்கமே எடுத்துக்கொள்ளட்டும், தனக்கு ஒரு வேலை கிடைத்தால் போதும், அதன் மூலம் தனக்கு கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழமுடியும் என்றார். இந்த உணர்வுதான் ஏழை விவசாயிகளின் வாழ்நிலையில் இருந்து ஏற்படுகிறது. இத்தகைய வர்க்கங்கள் இயல்பாக உடமைகள் பறிக்கப்பட்டு பொதுவுடமையாக மாற்றி அமைக்கும் சோசலிசக் கொள்கைக்கு உண்மையான ஆதரவாளர்களாகவும் அதற்காகப் பாடுபடுவதற்கும் தயாராகவும் இருப்பார்கள். இத்தகைய வர்க்கங்களின் உணர்விலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது, இவர்களுக்கு வேலை வேண்டும் அதன் மூலம் இவர்களின் வாழ்வுக்குத் தேவையான வருமானம் வேண்டும். ஆகவே இந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டு அனைவருக்கும் வேலை வேண்டும் என்ற கொள்கையைப் பிரச்சாரம் செய்து இவர்களை போராடுவதற்கு அணி திரட்ட முடியும். மேலும் சோசலிச மாற்றத்திற்காகவும் இத்தகைய வர்க்கப் பிரிவினர்கள் முன் வருவார்கள்.
இரண்டு ஏக்கருக்கு மேல் ஐந்து ஏக்கர்வரை நிலம் வைத்திருக்கும் நடுத்தர வர்க்க விவசாயிகளும், 5 இலிருந்து 15 ஏக்கர்வரை நிலத்துக்குச் சொந்தக்காரர்களான பணக்கார விவசாயிகளும் கிராமங்களில் உள்ளனர். இவ்விரு பிரிவினருக்கும் இடையில் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. இவர்கள் தங்களது நிலத்தில் பாடுபடுகின்றனர். சில வேளைகளில் அடுத்தவர்களின் நிலத்திலும் நூறுநாள் வேலைத் திட்டத்திலும் வேலை செய்கின்றனர்.
தற்போதுள்ள பொருளாதாரச் சூழலில் எப்படி நகரத்திலுள்ள நடுத்தர மக்கள் குடும்பத்திலுள்ள கணவனும் மணைவியும் வேலைக்குச் செற்றால் மட்டுமே வாழ முடியும் என்று கருதுகிறார்களோ. அது போலவே கிராமங்களிலுள்ள இந்த வர்க்கங்கள் குடும்பமாகவே அவர்களது நிலத்தில் பாடுபடுவதோடு வெளியிடங்களிலும் வேலைக்குச் செல்கிறார்கள்.
ஆகவே இந்த வர்க்கங்களும் ஒரு பக்கம் உடமையாளர்களாகவும், மறுபக்கம் உழைப்பாளர் களாகவும் இருக்கிறார்கள். இந்த வர்க்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்று நகரங்களில் நிரந்தரப் பணியில் சேர்ந்து நிரந்தர வருமானம் கிடைப்பவர்கள் வளமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அத்தகைய நிரந்தர வேலை கிடைக்காதவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். இவர்களில் பலர் வறுமையில் வாடினாலும் இவர்களுக்குச் சொந்தமான நிலங்களை பொதுவுடமையாக மாற்றுவதை விரும்பவில்லை. அதே வேளையில் தங்களுக்கென்று ஒரு நிரந்தர வேலையும் நிரந்தரமான வருமானமும் வேண்டும் என்றே விரும்புகிறார்கள். பெரிய நிலவுடமையாளர் களிடமிருந்து நிலங்களை கட்டாயப்படுத்தி கைப்பற்றி சமூக உடமையாக அதாவது சோசலிச உடமையாக மாற்றுவதுபோல், இத்தகைய வர்க்கங்களிடமிருந்து அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை கட்டாயப்படுத்தி பறிமுதல் செய்து சோசலிச உற்பத்தி முறையை ஏற்படுத்தலாமா? என்பது நம்முன் உள்ள கேள்வி.
அவ்வாறு செய்யக் கூடாது, ஏனெனில் அவ்வாறு நாம் செய்தால் இந்த வர்க்கப் பிரிவினர் ஆளும் வர்க்கங்களான பெருமுதலாளிகளுக்கு ஆதரவானவர்களாக மாறி நம்மை எதிர்த்துப் போராடுவார்கள். ஆகவே இந்த வர்க்கங்களிடம் கவனமாக அமைதியான முறையைக் கையாண்டு அவர்களிடம் சோசலிச உற்பத்தி முறையின் அவசியத்தை படிப்படியாக ஊட்டி வளர்க்க வேண்டும். அதற்கு இந்த வர்க்கங்களிடம் கூட்டுப் பண்ணையின் அவசியத்தை உணர்த்தி கூட்டுப் பண்ணை முறைக்கு அவர்களை அணிதிரட்டிட முடியும். ஆகவே கிராமங்களில் கூட்டுப்பண்ணை களை உருவாக்கி படிப்படியாக அதனை சோசலிசப் பண்ணைகளாக மாற்றும் திட்டத்தை முன்வைத்து அத்தகைய கூட்டுப்பண்ணைக்கு ஆதரவாக செயல்படும் அரசு முறைக்காக இந்த வர்க்கங் களை அணிதிரட்டிப் போராட முடியும். கூட்டுப் பண்ணை உற்பத்தி முறை என்பது சோசலிச உற்பத்தி முறை இல்லை. அது ஒருவகையான முதலாளித்துவ முறையே ஆகும். ஆகவே கிராமங்களில் சோசலிச உற்பத்தி முறையைக் கொண்டுவருவதற்கு முன்பு முதலாளித்துவ கூட்டுப் பண்ணை முறையை கொண்டுவருவதற்காக நாம் திட்டமிட்டு பாடுபட்டால் அதற்கான அரசு முறையை மக்களுக்கு முன்பு வைத்தால் மக்கள் நம்பக்கம் வருவார்கள். அதன் பின்புதான் கூட்டுப் பண்ணைகளை சோசலிசப் பண்ணைகளாக மாற்றுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்தலாம்.
கிராமங்களில் உடமையற்ற உழைக்கும் கூலிகள் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே உள்ளது. இவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக மட்டுமல்லாமல் நகர்ப்புறங் களுக்குச் சென்று உதிரித் தொழில் செய்பவர்களாகவும் உள்ளனர். இவர்களது வாழ்வு மிகக் கொடுமையானது. இவர்களுக்கும் சொத்துடைய விவசாயிகளுக்குமான முரண்பாடு அவ்வளவு கடுமையானதாக இல்லை. ஏனென்றால் சொத்துடமை உள்ள விவசாயிகளின் வாழ்க்கையும் மோசமாக இருப்பதை இவர்கள் பார்க்கிறார்கள். இவர்கள் மட்டுமல்லாது நிலவுடமை வர்க்கமல்லாத பிற அனைத்து வர்க்கங்களுக்கும் ஆட்சியாளர் களுக்கும் இடையிலுள்ள முரண்பாடு தான் மிகவும் கடுமையாகவும் வெளிப்படையாகவும் தெரிகிறது. ஏனென்றால் இந்த ஆட்சியாளர்கள் இதுவரை விவசாயிகளுக்கு சில சலுகைகள் மானியங்கள் கொடுத்து உதவி செய்தார்கள். ஆனால் தற்போது உலக வங்கி போன்ற கார்ப்பரேட்டு முதலாளிகளின் நிறுவனங்களுக்கு அடிபணிந்து விவசாயிகளுக்கு கொடுத்த சலுகைகளை நிறுத்தி விட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை காலில் போட்டு மிதித்துக்கொண்டும் விவசாயிகளின் வாழ்க்கை யைச் சீரழித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே அனைத்து விவசாயிகளும் ஆட்சியாளர்களை வெறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கூலித்தொழிலாளர்கள் பொதுவாகவே சோசலிசக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே உள்ளனர். ஆனாலும் அவர்களின் உதிரித் தன்மையின் காரணமாக அவர்களை ஒற்றுபடுத்தி ஒழுங்கமைப்பதில் நாம் சிரமங்களை எதிர்நோக்க வேண்டும்.
இங்கு முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மேலோட்டமான புரிதலிருந்தே வைக்கப்பட்டுள்ளது. இது முழுமையானது அல்ல. இது ஒரு துவக்கமே. கிராமங்களுக்குச் சென்று மேலும் மேலும் விவரங்களைத் திரட்டுவதன் மூலம் இந்தக் கருத்தை செழுமைப்படுத்திடலாம். இந்த மேலோட்டமான ஆய்விலிருந்து உடனடியாக இந்தியாவில் சோசலிச உற்பத்தியை உருவாக்குவதற்கான போராட்டங்களை இங்கு நடத்த முடியாது மட்டுமல்ல நடத்திடவும் கூடாது. எனினும் சோசலிச உற்பத்தி முறையை உருவாக்குவதற்கு இங்குள்ள வர்க்கங்களை தயார்படுத்துவதற்கான திட்டத்தை உருவாக்கி செயல்பட்டு அதில் வெற்றிபெற்று சோசலிச மாற்றங்களுக்காக நாம் பாடுபட வேண்டும். எனினும் இந்த மேலோட்டமான கருத்து விரிவான ஆழமான வர்க்க ஆய்விற்குப் பிறகு மாற்றம் அடையலாம்.
ஆகவே நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புவது கிராமங்களுக்குச் செல்வோம் மக்களிடம் சேர்ந்து வாழ்வோம், விவசாயிகளையும் பிற சமூகத்தினரையும் புரிந்துகொள்வோம். அதன் அடிப்படையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்போம். அதற்கு சிறந்த அற்பணிப்புக் கொண்ட தோழர்கள் தேவை. இறுதியாக இந்தியாவில் சோசலிச மாற்றங்கள் ஏற்பட வேண்டுமானால் இங்குள்ள உற்பத்திச் சாதனங்களை கைப்பற்றி சமூக உடமையாக மாற்றுவதற்கான நிலைக்கு உற்பத்திச் சாதனங்கள் வளர்ந்துவிட்டதா? இல்லை என்றால் இந்த உற்பத்திச் சாதனங்களை பொதுவுடமையாக மாற்ற வேண்டும் என்று மக்களின் உணர்வு மட்டம் வளர்ந்துள்ளதா? என்ற கேள்விக்கு நாம் விடை காணவேண்டும். அதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதா?
அத்தகைய ஆய்வுகள் நடத்தப்பட்டு முன்வைக்கப்பட்டு இருந்தால் அதனை படித்து நாம் விவாதிக்கலாம். இல்லை என்றால் அத்தகைய ஆய்வுகள் நடத்தி தரவுகளை சேகரித்து அதனை விவாதித்து நாம் முடிவு செய்யலாம்.-------------தேன்மொழி.
No comments:
Post a Comment