அரசும் புரட்சியும் 1871 ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூனது அனுபவம், மார்க்சின் பகுத்தாய்வு - பாகம் 3.

4. தேசிய ஒற்றுமையின் நிறுவன ஒழுங்கமைப்பு

... தேசிய நிறுவன ஒழுங்கமைப்புப் பற்றிய சுருக்கமான உருவரையில் - இந்த ஒழுங்கமைப்பை வளர்த்து விரிவாக்கக் கம்யூனுக்கு அவகாசம் கிடைக்கவில்லை - மிகச்சிறிய கிராமத்துங்கூட கம்யூன்தான் உரிய அரசியல் வடிவமாய் இருக்குமென்று அது மிகத்தெளிவாகக் குறிப்பிடுகிறது.. கம்யூன்கள் பாரிசில் தேசியப் பிரதிநிதிக் குழுவைதேர்ந்தெடுப்பதாய் இருந்தன.

.... ஒருசிலவே ஆயினும், மத்திய அரசாங்கத்திடம் இனியும் எஞ்சியிருக்கக் கூடிய முக்கியமான பணிகள், - வேண்டுமென்றேதிரித்துக்கூறப்பட்டுள்ளது போல - ஒழித்துக் கட்டப்பட்டுவிட  மாட்டா, மாறாக, கம்யூனுடைய,அதாவது முற்றிலும் அதற்குப் பொறுப்பு கூற வேண்டியவர்களான அதிகாரிகளுக்கு அவை மாற்றப்படும்.......தேசிய ஒற்றுமை குலைக்கப்பட்டுவிடாது; மாறாக, கம்யூன் அமைப்பால் அதுஒழுங்கமைக்கப்படும். இந்த ஒற்றுமையின் உருவகமாய் வேடம் தரித்து, ஆனால் தேசத்தைச்சாராமல் சுயேச்சையானதாகவும் அதற்கு மேம்பட்டதாகவும் இருக்க விரும்பிய அரசுஅதிகாரம்,தேசத்தின் உடலில் புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் அமைந்த அரசு அதிகாரம் ஒழிக்கப்படுவதன் மூலம் தேசிய ஒற்றுமை எதார்த்தஉண்மையாக்கப்படும். பழைய அரசாங்க அதிகாரத்தின் வெறும் அடக்குமுறை உறுப்புகள் வெட்டியெறியப்பட்டு, அதேபோதில் அதன் நியாயமான பணிகள் சமுதாயத்தைவிட மேம்பட்டதாய் நிற்க உரிமை கொண்டாடிய இந்த அதிகாரத்திடமிருந்து பிடுங்கப்பெற்று, சமுதாயத்துக்குப் பொறுப்பு கூற வேண்டியவர்களான ஊழியர்கள்வசம்மீட்டமைக்கப்படும். 

மார்க்சின் இந்த கருத்துரைகளைத் தற்கால சமூக - ஜனநாயகத்தின் சந்தர்ப்பவாதிகள் புரிந்துகொள்ள எந்தளவுக்கு தவறிவிட்டார்கள் - மறுத்துவிட்டார்கள் என்றால் இன்னும் பொருத்தமாயிருக்கும் - என்பதற்கு ஓடுகாலி பெர்ன்ஷ்டைனது ஹெரஸ்திராதியப் புகழ் பெற்ற சோசலிசத்தின் முதற்கோள்களும் சமூக - ஜனநாயகவாதிகளுடைய கடமைகளும் என்னும் புத்தகம் தெளிவான எடுத்துக்காட்டாகும். மார்க்சின் மேற்கூறிய வாசகம் குறித்துதான் பெர்ன்ஷ்டைன் எழுதினார்: இதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை இந்த வேலைத்திட்டம் இதன் சாராம்சக் கூறுகள் யாவற்றிலும் புருதோனின் கூட்டாட்சிக் கோட்பாட்டை மிகவும் ஒத்திருக்கிறது.. மார்க்சுக்கும் குட்டிமுதலாளித்துவபுருதோனுக்கு மிடையே (சிலேடைப் பொருளில் தொனிக்கவேண்டுமென்று குட்டி முதலாளித்துவஎன்னும் சொல்லை பெர்ன்ஷ்டைன் மேற்கோள் குறிகளிட்டு உபயோகிக்கிறார்) ஏனைய யாவற்றிலும் எவ்வளவுதான் வேறுபாடு இருப்பினும், இந்த விவகாரங்களில், அவர்களுடைய வாத முறைகள் மிக மிக நெருங்கி வந்துவிடுகின்றன.நகராண்மைக்கழகங்களுடைய முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது உண்மைதான் என்று பெர்ன்ஷ்டைன் மேலும் தொடர்ந்து எழுதுகிறார். இருப்பினும் மார்சு்சும் புருதோனும்நினைக்கிற மாதிரி தற்கால அரசுகளை இப்படி அடியோடு கலைத்து அவற்றின்ஒழுங்கமைப்பை இப்படி முற்றிலும் மாற்றுவதும் (கம்யூனால் அனுப்பப்பட்டபிரதிநிதிகளாலான மாநில அல்லது மாவட்ட சபைகளுடைய பிரதிநிதிகளைக் கொண்டுதேசிய சபை அமைக்கப்படும்படி) இதன் விளைவாய் தேசிய பிரதிநித்துவத்துக்கான பழைய முறையை மறையச் செய்வதுமே ஜனநாயகத்தின் முதற் பணியாய் இருக்குமென்பதுசந்தேகத்துக்குரியதாகவே எனக்குத் தோன்றுகிறது (பெர்ன்ஷ்டைன், முதற்கோள்கள், ஜெர்மன் பதிப்பு, 1899, பக்கங்கள் 134, 136).

புல்லுரிவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் அமைந்த அரசு அதிகாரத்தைஒழிப்பது பற்றிய மார்க்சின் கருத்தோட்டங்களைப் புரூதோனின் கூட்டாட்சிக்கோட்பாட்டுடன் போட்டுக் குழப்புவது முழுக்க முழுக்க அபாண்டமே ஆகும். ஆனால், இந்தக்குழப்படி ஏதோ தற்செயலாய் நிகழ்வதல்ல. ஏனெனில் மத்தியத்துவத்துக்கு எதிராய்கூட்டாட்சிக் கோட்பாடு குறித்து இங்கு மார்க்ஸ் பேசவேயில்லை, எல்லா முதலாளித்துவ

நாடுகளிலும் செயல்படும் பழைய,முதலாளித்துவ அரசுப் பொறியமைவை நொறுக்குவதுபற்றியே பேசுகிறார் என்பது எந்த சந்தர்ப்பவாதிகளுக்குப் புலப்படாததுதான்.

இந்த சந்தர்ப்பவாதிக்குப் புலப்படு வதெல்லாம் குட்டிமுதலாளித்துவ அற்பத்தனமும்சீர்திருத்தவாதச் சகதியும் மலிந்துவிட்ட சூழலில் தன்னைச் சுற்றிலும் தான் காண்பதுதான்,அதாவது நகராண்மைக் கழகங்கள்தான்பாட்டாளி வர்க்கப் புரட்சி குறித்து சிந்திக்கும் பழக்கத்தையே இந்த சந்தர்ப்பவாதி விட்டொழித்துவிட்டார்.

இது நகைக்கத்தக்கதே.ஆனால்,இங்கு மிகவும் குறிப்பிடத் தக்கது என்னவெனில் இந்த விவகாரத்தில் யாருமே பெர்ன்ஷ்டைனை எதிர்த்து வாதாட வில்லை.பலரும் பெர்ன்ஷ்டைனை எதிர்த்து வாதாடியிருக்கிறார்கள் முக்கியமாய் ரஷ்ய வெளியீடுகளில் பிளெஹானாவையும் ஐரோப்பிய வெளியீடுகளில் காவுத்ஸ்கியையும் குறிப்பிடலாம்.ஆயினும் இந்த விவகாரத்தில்மார்க்சை பெர்ன்ஷ்டைன் திரித்துப் புரட்டியது குறித்து இவர்களில் எவருமே எதுவுமேகூறியதில்லை.

இந்த சந்தர்ப்பவாதி புரட்சிகர வழியில் சிந்திக்கவும் புரட்சி குறித்து நினைக்கவும் அறவே மறந்துவிட்டதால், அவர் கூட்டாட்சிக் கோட்பாட்டை மார்க்சுக்கு உரியதாகக் கற்பித்துக் கூறுகிறார். அராஜகவாதத்தின் மூலவரான புருதோனுடன் மார்க்சை இணைத்துக் குழப்புகிறார். மரபு வழுவாத மார்க்சியவாதிகள் என்றும் புரட்சிகர மார்க்சியத் தத்துவத்தின் காவலர்கள் என்றும் கூறிக் கொள்ளும் காவுத்ஸ்கியையும் பிளெஹானாவையும்

பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் அவர்கள் மௌனம் சாதித்துவிடுகின்றனர்.!

மார்க்சியத்துக்கும் அராஜகவாதத்துக்கும் இடையிலுள்ள வேறுபாடு குறித்து அளவுக்கு மீறி கொச்சையான கருத்துக்களை வெளியிடுவது காவுத்ஸ்கிகள்,சந்தர்ப்பவாதிகள் ஆகிய இருசாராருக்குமுரிய குணாதிசியமாய் இருப்பதற்கான மூல காரணங்களில் ஒன்று இங்கு அடங்கியுள்ளது.இதை பிற்பாடு நாம் விவாதிப்போம். கம்யூனுடைய அனுபவம் குறித்து மார்க்ஸ் கூறும் மேற்கண்ட கருத்துரைகளில் கூட்டாட்சிக் கோட்பாட்டின் சாயல் சிறிதும் காணப்படவில்லை. சந்தர்ப்பவாதி பெர்ன்ஷ்டைன் காணத் தவறும் அதே விவரத்தில்தான் மார்க்ஸ் புரூதோனுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.

தற்கால அரசுப் பொறியமைவு நொறுக்கப்பட வேண்டும் என்பதே இவருடைய நிலையும் - இதில் மார்க்ஸ் புரூதோனுடன்உடன்பாடு கொண்டிருந்தார்.இந்த விவரத்தில் மார்க்சியத்துக்கும் அராஜகவாதத்துக்கும் (புரூதோன், பக்கூனின் ஆகிய இருவரின் அராஜகவாதத்துக்கும்) இடையே கருத்து ஒற்றுமை இருப்பதை சந்தர்ப்பவாதிகளோகாவுத்ஷ்கிவாதிகளோகாணவிரும்பவில்லை. ஏனெனில் இங்கிருந்துதான் அவர்கள் மார்க்சியத்திடமிருந்து விலகி ஓடினர்.

கூட்டாட்சிக் கோட்பாடு பற்றிய பிரச்சனையில்தான் மார்க்ஸ் புரூதோனுடனும்பக்கூனினுடமும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்). கூட்டாட்சிக் கோட்பாடு அராஜகவாதத்தின் குட்டிமுதலாளித்துவக்கருத்துக்களிலிருந்து தர்க்க வழியில் இயல்பாய் பெறப்படும் ஒன்று.

மார்க்ஸ் மத்தியத்துவவாதி.மேலே தரப்பட்ட அவருடைய கருத்துரைகளில் மத்தியத்துவத்திலிருந்து எவ்விதத்திலும் அவர் விலகிச் சென்றுவிடவில்லை.அரசு பற்றிய அற்பத்தனமான மூடபக்தியில் மூழ்கிக் கிடப்போரே முதலாளித்துவ அரசுப் பொறியமைவை அழிப்பது மத்தியத்துவத்தை அழிப்பதாகுமென நினைத்துத் தவறிழைக்க முடியும்.

பாட்டாளி வர்க்கத்தினரும் ஏழை விவசாயிகளும் அரசு அதிகாரத்தைத் தாமே மேற்கொண்டு, முற்றிலும் சுதந்திரமாய்த் தம்மை கம்யூன்களில் ஒழுங்கமைத்துக் கொண்டு, மூலதனத்தைத் தாக்குவதிலும், முதலாளிகளின் எதிர்ப்பை அடக்குவதிலும்,தனியார் உடமைகளாக இருக்கும் ரயில் பாதைகளையும் ஆலைகளையும் நிலத்தையும் இன்ன பிறவற்றையும் தேசம் அனைத்தின், சமுதாயம் முழுமையின் உடமைகளாய் மாற்றுவதிலும் எல்லாக்கம்யூன்களுடைய செயலையும் ஒன்றுபடுத்திக் கொண்டால், அது மத்தியத்துவம் இல்லாமல்பிறகு என்ன? சிறிதும் முரணில்லாத ஜனநாயக மத்தியத்துவத்தோடு, பாட்டாளி வர்க்க மத்தியத்துவமும் இல்லாமல் பிறகு என்ன?

மனமுவந்த முறையிலான மத்தியத்துவம், கம்யூன்கள் தாமே முன்வந்து ஒரு தேசமாய்ஒன்றிணைவது, முதலாளித்துவ ஆதிக்கத்தையும் முதலாளித்துவ அரசுப் பொறியமைவையையும்அழித்திடுவதற்காகப் பாட்டாளி வர்க்க கம்யூன்கள் மனமுவந்துஒன்றாய் ஒன்றிவிடுவது சாத்தியமே என்பதை பெர்ன்ஷ்டைன் நினைத்துக்கூட பார்க்க இயலாதவராய் இருக்கிறார்.எல்லாக் குட்டிமுதலாளித்துவ அற்பவாதிகளையும் போலபெர்ன்ஷ்டைன் மத்தியத்துவத்தை முற்றிலும் மேலிருந்தே, முற்றிலும் அதிகாரிகளாலும்

இராணுவக் கும்பலாலும் மட்டுமே பலவந்தமாய் திணிக்கப்பட்டு நிலைநிறுத்தப்படும்ஒன்றாகவே கற்பனை செய்துகொள்கிறார்.

மார்க்ஸ் தமது கருத்துக்கள் திரித்துப் புரட்டப்படுமெனமுன்னறிந்துவைத்திருந்தாற் போல,கம்யூனானது தேசிய ஒற்றுமையை அழிக்க விரும்பிற்று,மத்திய அதிகாரத்தை ஒழிக்கவிரும்பிற்று என்னும் குற்றச்சாட்டு மனமறிந்து வேண்டுமென்றே செய்யப்படும் ஏமாற்றமாகுமெனத் தெளிவுபட வலியுறுத்தினார். வேண்டுமென்றேதான் மார்க்ஸ் தேசிய ஒற்றுமை.... ஒழுங்கமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். முதலாளித்துவ, இராணுவ,அதிகாரவர்க்க மத்தியத்துவத்தை எதிர்த்து உணர்வுப்பூர்வமான, ஜனநாயக வழிப்பட்ட,பாட்டாளி வர்க்க மத்தியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆனால், கேட்க விரும்பாதவர்களைப் போன்ற டமாரச் செவிடர்கள் வேறுயாரும் இல்லை.

அரசு அதிகாரம் அழிக்கப்பட வேண்டும்,புல்லுரிவியாய் வளர்ந்து வேண்டாத தசைப்பிண்டமாய் இருப்பதை வெட்டி எறிய வேண்டும். என்பதுதான் தற்கால சமூக -ஜனநாயகத்தின் (கம்யூனிஸ்டு அமைப்புகளிலுள்ள) சந்தர்ப்பவாதிகள் கேட்க விரும்பாதஉண்மையாகும்.

 5. புல்லுருவி - அரசை ஒழித்தல்

 இப்பொருள் குறித்து மார்க்ஸ் கூறியதை ஏற்கனவே மேற்கோளாய்க் கொடுத்திருக்கிறோம். இப்பொழுது கூடுதலாய் மேலும் சிலவற்றைத் தரவேண்டும்.

...வரலாற்றின் புதிய படைப்புகள்,அவை ஓரளவு உருவ ஒற்றுமை கொண்டிருக்கக் கூடிய சமுதாய வாழ்வின் பழைய, மரபற்று மறைந்துவிட்ட வடிவங்களின் நேர் பிரதிகளாகத் தவறாகக் கருதப்படுகின்றன. இப்போது பொதுவாய்ப் புதிய படைப்புகளுக்கு ஏற்படும் கதியாகும் என்று அவர் எழுதினார். இவ்வாறுதான், நவீன அரசு அதிகாரத்தை தகர்த்திடும் அல்லது நொறுக்கிடும் இந்தப் புதிய கம்யூனும் மத்தியகால கம்யூனுடைய மறுபிறவியாய் ....சிறு அரசுகளுடைய கூட்டமைப்பாய் (மாண்டிஸ்கியேவும் ஜிராண்டுவாதிகளும் கற்பனை செய்தவற்றைப் போன்றதாய்) ... அதீத மத்தியத்துவத்துக்கு எதிரான பழைய போராட்டத்தின் மிகைப்பட்ட ... வடிவமாய் ... கருதப்பட்டிருக்கிறது.

... புல்லுரிவியாய் வளர்ந்த வேண்டாத தசைப் பிண்டமானது, சமுதாயச் செலவில் உண்டு கொழுத்து சமுதாயத்தின் தங்குதடையற்ற இயக்கத்தைத் தடுத்திடும் அரசானது இதுகாறும்உறிஞ்சி இழுத்துக் கொண்ட சக்திகள் அனைத்தையும் கம்யூன் அரசியல் அமைப்பு சமுதாய உடலுக்கு மீட்டளித்திருக்கும்.இந்த ஒரு செயலாலேயே பிரெஞ்சு நாட்டின் புத்தெழுச்சிதுவக்கி வைக்கப்பட்டிருக்கும்......கம்யூன் அரசியல் அமைப்பு கிராமப்புற உற்பத்தியாளர்களை அவர்களது மாவட்ட மைய நகர்களது சித்தாந்தத் தலைமையில் கொண்டு வந்திருக்கும்;அங்கே நகர உழைப்பாளிகளின் வடிவில் அவர்களது நலன்களின்இயற்கையானகாப்பாளர்களைப் பெற்றுத் தந்திருக்கும்.

கம்யூன் இருப்பதானது இயல்பாகவே பிரதேச சுயாட்சி நிர்வாகத்தைக் குறிப்பதாகும். ஆனால்,பிரதேச சுயாட்சி இனி அரசு அதிகாரத்தின் எதிர் எடையாய் இருக்காது, ஏனென்றால் அரசுஅதிகாரமே இப்பொழுது தேவையற்றதாகிவிடும்

புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் விளங்கும்அரசு அதிகாரத்தைதகர்த்திடல்,அதைவெட்டி எறிதல், அதை நொறுக்குதல் அரசு அதிகாரம் இப்பொழுது தேவையற்றதாகி விடல் - இவையே கம்யூனுடைய அனுபவத்தை மதிப்பிடுகையிலும் பக்த்தாராய்கையிலும் அரசு குறித்து மார்க்ஸ் உபயோகிக்கும் தொடர்கள்.

இவையாவும் அரை நூற்றாண்டுக்குச் சற்று குறைவான காலத்துக்கு முன்பு எழுதப்பட்டவை.

திரித்துப் புரட்டப்படாத மார்க்சியத்தை பெருந்திரளான மக்களுக்குத் தெரியப்படுத்த இன்று அகழ்வாய்வு நடத்தி புதைபொருள் தேடுவது போலத் தேடிப்பிடித்தாக வேண்டியிருக்கிறது. தம்வாழ்நாளில் நடைபெற்ற கடைசி பெரும் புரட்சியைக் கண்ணுற்றதிலிருந்து மார்க்ஸ்வகுத்தளித்த முடிவுகள்,அடுத்த பெரிய பாட்டாளி வர்க்கப் புரட்சிகளுக்குரிய காலம் பிறந்துவிட்ட ஒரு நேரத்தில் மறக்கப்பட்டுவிட்டன.

....கம்யூனுக்கு முந்திய எல்லா அரசாங்க வடிவங்களும் சாராம்சத்தில் அடக்கி ஒடுக்கும் தன்மையனவாகவே இருந்திருக்கையில் கம்யூன் மட்டும் மிகுந்த நெகிழ்வுடைய அரசியல் வடிவமாய் இருந்ததென்பதை கம்யூனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பலவகை விளக்கங்களும், கம்யூனில் வெளிப்பட்ட பலவகை நலன்களும் காட்டுகின்றன. அதன் மெய்யான இரகசியம் இதில்தான் அடங்கியிருந்தது: சாராம்சத்தில் அது தொழிலாளி வர்க்க அரசாங்கம் ஆகும், உற்பத்தியாளர் வர்க்கம் அபகரிப்பாளர் வர்க்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தின் விளைவாகும், உழைப்பானது பொருளாதார விடுதலை பெரும் பொருட்டு இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட அரசியல் வடிவம் ஆகும்......

இந்தக் கடைசி நிபந்தனை இல்லையேல் கம்யூன் அரசியல் அமைப்பு சாத்தியமற்றதாகவும் பகற்கனவாகவுமே இருந்திருக்கும்.…

 சமுதாயத்தை சோசலிச முறையில் புனரமைப்பதற்குரிய அரசியல் வடிவங்களைக் கண்டுபிடிப்பதில் கற்பனாவாதிகள் முனைந்திருந்தனர்.அரசியல் வடிவங்களைப் பற்றிய பிரச்சனையையே அராஜகவாதிகள் முற்றிலும் புறக்கணித்துவிட்டனர்.தற்கால சமூக - ஜனநாயகவாதத்தின் சந்தர்ப்பவாதிகள் நாடாளுமன்ற ஜனநாயக அரசுக்குரிய முதலாளித்துவ அரசியல் வடிவங்கள் இறுதி வரம்பென்றும் இவற்றுக்கு அப்பால் அடியெடுத்து வைக்கக் கூடாது என்றும் கருதிவிட்டனர். இந்த முன்மாதிரியின் முன் மண்டியிட்டு வணங்கி மண்டையை உடைத்துக் கொண்டனர். இந்த வடிவங்களை தகர்த்திட வேண்டும் என்ற முயற்சி எதனையும் அராஜகவாதமெனக் கூறி கண்டித்தனர்.

அரசு மறைந்தே தீருமென்றும்,அதன் மறைவுக்கான இடைக்கால வடிவம் (அரசுக்கும் அரசு இல்லாததற்கும் இடைப்பட்ட காலத்துக்குரிய வடிவம்)ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கமாகவே இருக்குமென்றும் சோசலிசம்,அரசியல் போராட்டம் இவற்றின் வரலாறு முழுவதிலுமிருந்து மார்க்ஸ் முடிவிற்கு வந்தார்.ஆனால்,இந்த வருங்காலத்திற்குரிய அரசியல் வடிவங்களை மார்க்ஸ் கண்டுபிடிக்க முற்படவில்லை. பிரெஞ்சு வரலாற்றை உற்றுநோக்கி, அதனை பகுத்தாய்ந்து, 1851 ஆம் ஆண்டிலிருந்து பெறப்படும் முடிவினை, அதாவது முதலாளித்துவ அரசுப் பொறியமைவு அழிக்கபடுவதை நோக்கி விவகாரங்கள் முற்றிச் சென்றன என்னும் முடிவினை எடுத்துரைப்பதோடு நின்றுவிட்டார்.

பிறகு பாட்டாளி வர்க்கத்தின் வெகுஜனப் புரட்சி இயக்கம் வெடித்ததும் மார்க்ஸ், இவ்வியக்கம் தோல்வியுற்ற தென்றாலும், குறுகிய காலத்துக்கே நடந்ததென்றாலும், தெளிவாக பலவீனம் கொண்டிருந்தாலும், இது கண்டுபிடித்த வடிவங்களை ஆராயமுற்பட்டார்.

உழைப்பானது பொருளாதார விடுதலை பெறும் பொருட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியால் இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட வடிவம்தான் கம்யூன்.

முதலாளித்துவ அரசுப் பொறியமைவை நொறுக்குவதற்குப் பாட்டாளி வர்க்கப் புரட்சியால்மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியே கம்யூன்.நொறுக்கப்படும் அரசுப் பொறியமைவிற்குப் பதிலாய் அமையக் கூடியதாகவும் அமைந்தாக வேண்டியதாகவும் இறுதியாக கண்டுபிடிக்கப்பட்ட அரசியல் வடிவம் இதுவே.

1905ஆம் ஆண்டு,1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சிகள் கம்யூனின் பணியை வேறுவிதசூழ்நிலைகளிலும் வேறுவித நிலைமைகளிலும் தொடர்ந்து நடத்திச் சென்றதையும், மார்க்சின் உன்னத வரலாற்று வழிப் பகுத்தாய்வை மெய்ப்பித்து உறுதி செய்ததையும் பிற்பாடு நாம் காண்போம்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

1.பாரீசில் நடைபெற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சியும் அதன் விளைவாய் ஏற்பட்ட கம்யூன் அரசமைப்பு வடிவ, அனுபவத்திலிருந்தும்தான் காரல்மார்க்ஸ் தனது அரசு பற்றிய இறுதி முடிவுகளுக்கு வந்தார்.

2.மிகச் சிறிய கிராமத்துக்குங் கூட கம்யூன் தான் சிறந்த அரசியல் வடிவமாக இருந்தது என்பதுநடைமுறை உண்மையாகும்.

3. கம்யூன்கள் தேசத்தின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கக் கூடியதாக இருந்தது.

4. மத்திய அரசாங்கத்திடம் இருக்கும் பணிகளை ஒழித்துக்கட்டுவதாக இருக்காது, மாறாக அந்தப் பணிகளை மக்களுக்குப் பொறுப்பு கூறும் அதிகாரிகளுக்கு மாற்றப்படுவதாக இருந்தது.

5. கம்யூனானது தேசிய ஒற்றுமையை குலைத்துவிடும் என்று சிலர் கருதினார்கள். ஆனால், உண்மையில் கம்யூனானது தேசிய ஒற்றுமையை ஒழுங்கமைத்தது.

6.இதற்கு மாறாக தேசத்தை சாராமல் சுயேச்சையாகவும்அதற்குமேம்பட்டதாகவும் இருந்ததுமுதலாளித்துவ அரசு அதிகாரம். இந்த அதிகாரத்தை ஒழிக்க விரும்பியதுதான் கம்யூன் அரசுஅதிகாரம்.

7. தேசத்தின் உடலில் புல்லுரிவியாய் (வயலில் நெற்கதிருக்கு இடையில் முளைக்கும் களை போல) வளர்ந்து சமூகத்திற்கு அல்லது மக்களுக்கு வேண்டாத தசைப் பிண்டமாய் (மனித உடம்பில் மனிதனுக்கு தேவையில்லாமல்,பயனில்லாத தசைகளை)அமைந்த முதலாளித்துவ அரசு அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை கம்யூனின் அனுபவம் நிருபித்தது.மேலும்இந்த கம்யூன் அரசாங்கத்தில்தான் தேசத்தின் ஒற்றுமை பாதுகாக்கப்படும்.

8.முதலாளித்துவ அரசு அதிகாரம் என்பது சமுதாயத்துக்கு மேம்பட்டதாக கருதப்பட்டது.ஆனால்,கம்யூன் அரசு அதிகாரம் என்பது மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய கடமையைக் கொண்டவர்களைக் கொண்ட அரசாங்கமாக இருந்தது.

9. மார்க்சின் அரசு பற்றிய கருத்துரைகளை பெர்ன்ஷ்டைன் மறுத்துவிட்டார். பெர்ன்ஷ்டைன்புரூதோனின் கூட்டாட்சி கோட்பாட்டை யர்த்திப் பிடித்தார், மார்க்சின் கோட்பாடுகளைஏற்க மறுத்தார்.

10.தற்கால அரசுகளை இப்படி அடியோடு கலைத்து அவற்றின் ஒழுங்கமைப்பை இப்படி முற்றிலும் மாற்றுவதும் (கம்யூனால்அனுப்பப்பட்டபிரதிநிதிகளாலான மாநில அல்லது மாவட்ட சபைகளுடைய பிரதிநிதிகளைக் கொண்டு தேசிய சபை அமைக்கப்படும்படி)இதன் விளைவாய் தேசிய பிரதிநித்துவத்துக்கான பழைய முறையை மறையச் செய்வதுமேஜனநாயகத்தின் முதற் பணியாய் இருக்குமென்பதுசந்தேகத்துக்குரியதாகவே எனக்குத்தோன்றுகிறது என்றார் பெர்ன்ஷ்டைன்.இதன் மூலம் முதலாளித்துவ அரசுப் பொறியமைவை கலைக்க வேண்டும் அல்லது தகர்க்க வேண்டும் என்ற மார்க்சின் கருத்தை பெர்ன்ஷ்டைன் ஏற்கவில்லை.

11. எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் செயல்படும் பழைய, முதலாளித்துவ அரசுப் பொறியமைவை நொறுக்கவது பற்றியே காரல்மார்க்ஸ் தொடர்ந்து பேசிவந்தார். இந்த கருத்தை சந்தர்ப்பவாதிகள் புரிந்துகொள்ளவில்லை,புரிந்து கொண்டாலும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆகவே முதலாளித்துவ அரசு இயந்திரத்தை நொறுக்க வேண்டும்என்ற கருத்தை ஏற்று பிரச்சாரம் செய்ய மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சந்தர்ப்பவாதிகளே ஆவார்கள்.

12.குட்டிமுதலாளித்துவ அற்பதனமும்,சீர்திருத்தவாத சகதியும் நிறைந்துவிட்ட சமூகத்தில் சந்தர்ப்பவாதிகள் காண்பதெல்லாம் முதலாளித்துவ அரசியல் நிறுவனங்களான பஞ்சாயத்து போர்டு, மாநகராட்சி, சட்டமன்றம் மற்றும் நாடாளு மன்றங்கள் மட்டும்தான்.சந்தர்ப்பவாதிகள் இந்த முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அப்பால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க மாட்டார்கள் என்கிறார் லெனின்.

13. பாட்டாளி வர்க்கப் புரட்சி குறித்தும் பாட்டாளி வர்க்க அரசு குறித்தும், இந்த சந்தர்ப்பவாதிகள் ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள் என்கிறார் லெனின். பாட்டாளி வர்க்கஅரசு பற்றி சிந்திக்காதவர்கள் அத்தகைய பாட்டாளி வர்க்க அரசு உருவாக்குவதற்காகமக்களிடம் பிரச்சாரம் செய்வார்களா? செய்ய மாட்டார்கள். அவ்வாறு பிரச்சாரம் செய்ய மறுப்பவர்கள், பாட்டாளி வர்க்க அரசை அமைப்பதற்கு மக்களைத் திரட்டுவார்களா? மக்களை திரட்ட மாட்டார்கள். அவ்வாறு மக்களை திரட்ட மறுப்பவர்கள் பாட்டாளி வர்க்க அரசை அமைப்பதற்கு புரட்சி செய்வார்களா? புரட்சி செய்ய மாட்டார்கள். அத்தகைய புரட்சியில் ஈடுபட மறுக்கும் சந்தர்ப்பவாதிகள், புரட்சிக்கு எதிரான எதிர்ப்புரட்சி வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இத்தகைய சந்தர்ப்பவாதிகளை சர்வதேச பொதுவுடமை இயக்க வரலாற்றில் நாம் கண்டுள்ளோம். அத்தகைய சந்தர்ப்பவாதிகள்தான், புரூதோன், பெர்ன்ஷ்டைன், காவுத்ஸ்கி, டிராட்ஸ்கி, குருஷேவ், கோர்பர்ஷேவ், டெங்சியோபிங் போன்றவர்கள் ஆவார்கள். இந்தியாவிலும் இத்தகைய சந்தர்ப்பவாத தலைவர்களின் தலைமையில்தான் இந்திய பொதுவுடமை இயக்கங்கள் உள்ளன.அதன் காரணமாகவே இந்தியாவில் பொதுவுடமை இயக்கம் மக்கள் இயக்கமாக மாறவில்லை.ஆகவே அரசு பற்றிய மார்க்சின் போதனைகளையும் கொள்கைகளையும் மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு தகுதியான கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டு பிரச்சாரம் செய்ய வேண்டியது மிகமிக அவசியம் ஆகும்.

14. பிளெஹானவும், காவுத்ஸ்கியும் பெர்ன்ஷ்டைனை எதிர்த்துப் போராடி இருக்கிறார்கள். ஆனால், காரல்மார்க்சின் கொள்கையான முதலாளித்துவ அரசுப் பொறியமைவை நொறுக்க வேண்டும் என்ற கொள்கையை திருத்தும் பெர்ன்ஷ்டைனது திருத்தல்வாதத்தை எதிர்த்து இவர்கள் போராடவில்லை. இவர்களைப் போலவே இந்தியப் பொதுவுடமையாளர்கள் பல குழுக்களாகப் பிரிந்துள்ளனர். இவர்களுக்கு இடையே கருத்து மோதல்கள் உள்ளது.ஆனால், இவர்களில் எவரும் காரல்மார்க்சின் போதனையான முதலாளித்துவ அரசுப் பொறியமைவை நொறுக்க வேண்டும் என்ற கருத்திற்கு ஆதரவாக நின்று மார்க்சின் கருத்தை மறைப்பவர்கள் அல்லது புறக்கணித்து எதிர்ப்பவர்களை எதிர்த்துப் போராடுவதும் இல்லை,அத்தகைய திருத்தல்வாதத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதும் இல்லை.

15.இந்த சந்தர்ப்பவாதிகள் புரட்சிகர வழியில் சிந்திக்கவும் புரட்சி குறித்து நினைக்கவும்அறவே மறந்துவிட்டதால் புரூதோனின்கூட்டாட்சிக்கோட்பாட்டையேமார்க்சின் கோட்பாடாக திரித்துக் கூறினார்கள் என்கிறார்லெனின்.அது போலவே இந்தியாவில் மார்க்ஸ்,மற்றும் லெனினது பாராளுமன்ற அரசியல் கோட்பாடுகளைதிரித்து பெர்ன்ஷ்டைன் போன்றவர்களின் அரசு பற்றிய திருத்தல்வாத கோட்பாடுகளையே மார்க்சியன் கோட்பாடாக திருத்தி மக்களையும் அணிகளையும் ஏமாற்றி வருகிறார்கள்.

16.மார்க்சியத்துக்கும்அராஜகவாதத்துக்கும் இடையிலான வேறுபாட்டை அளவுக்கு மீறி கொச்சையாக விளக்கம் கொடுத்து பிரச்சாரம் செய்தவர்கள் காவுத்ஸ்கியும் சந்தர்ப்பவாதிகளும் ஆவார்கள் என்றார் லெனின். அது போலவே இந்தியாவில் மார்க்சியத்துக்கும் அராஜகத்துக்கும் இடையிலான வேறுபாட்டை சரியாகப் புரிந்துகொள்ளாமலேயே நிலவுகின்ற அரசுப் பொறியமைவை பலாத்காரம் கொண்டு கலைக்க வேண்டும் என்ற கருத்தை அராஜகவாத கருத்தாகவும்,அதற்காக செய்படுபவர்களை அராஜகவாதிகளாகவும் பார்த்து சந்தர்ப்பவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

17.தற்கால அரசுப் பொறியமைவை நொறுக்க வேண்டுமென்ற கருத்தில் புரூதோன் மற்றும் பக்கூனின் அராஜகவாதக் கருத்தோடு காரல்மார்க்ஸ் உடன்பட்டிருந்தார்.ஆனால், அராஜகவாத குட்டிமுதலாளித்துவ கருத்தான கூட்டாட்சி கோட்பாட்டில்தான் புரூதோன்மற்றும் பக்கூனின் கருத்துக்களை மார்க்ஸ் எதிர்த்தார். இந்த உண்மையை சந்தர்ப்பவாதிகள் புரிந்துகொள்ளவில்லை. இந்தியப் பொதுவுடமையாளர்களிலுள்ள சந்தர்ப்பவாதிகளும் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள மறுத்து, முதலாளித்துவ அரசுப் பொறியமைவை பலாத்காரமாகதகர்க்க வேண்டும் என்று சொல்பவர்களை அராஜகவாதிகள் என்று சித்தரிக்கிறார்கள்.

18.காரல்மார்க்ஸ் ஒரு மத்தியத்துவவாதி.எனினும் முதலாளித்துவ அரசுப் பொறியமைவைஅழிக்க வேண்டும் என்று காரல்மார்க்ஸ் சொல்வதால் அவர் மத்தியத்துவத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார் என்று சிலர் கருதினார்கள் அது உண்மையல்ல.அரசு பற்றிஅற்பத்தனமான மூடபக்தியில் மூழ்கி கிடப்பவர்கள்தான் முதலாளித்துவ அரசுப்பொறியமைவை அழிப்பது மத்தியத்துவத்தை அழிப்பது என்று முட்டாள்தனமாககருதுவார்கள் என்றும் நினைப்பார்கள் என்றார் லெனின். இந்தியாவிலும் நிலவுகின்ற அரசுப் பொறியமைவை கலைப்பதன் மூலம் மக்களிடையே கட்டுப்பாடு இல்லாமல் போய்விடும் என்றும் தடியெடுத் தவனெல்லாம் தண்டல்காரன் ஆகிவிடுவான் என்றும் சந்தர்ப்பவாதிகள் கருதுகிறார்கள். அது உண்மையல்ல. மாறாக நிலவுகின்ற அரசுப் பொறியமைவை கலைத்துவிட்டாலும் வேறுவகையான அரசை உருவாக்குவதன் மூலம் இதைக் காட்டிலும் சிறந்த கட்டுப்பாடுடைய அரசையும் சமூகத்தையும் உருவாக்க முடியும் என்றார் லெனின்.

19. பாட்டாளி வர்க்கத்தினரும் ஏழை விவசாயிகளும் அரசு அதிகாரத்தைத் தாமேமேற்கொண்டு, முற்றிலும் சுதந்திரமாய்த் தம்மை கம்யூன்களில் ஒழுங்கமைத்துக் கொண்டு, மூலதனத்தைத் தாக்குவதிலும்,முதலாளிகளின் எதிர்ப்பை அடக்குவதிலும்,தனியார் உடமைகளாக இருக்கும் ரயில் பாதைகளையும் ஆலைகளையும் நிலத்தையும் இன்ன பிறவற்றையும் தேசம் அனைத்தின், சமுதாயம் முழுமையின் உடமைகளாய் மாற்றுவதிலும்எல்லாக் கம்யூன்களுடைய செயலையும் ஒன்றுபடுத்திக் கொண்டால்,அது மத்தியத்துவம்தானே.இத்தகைய மத்தியத்துவத்துவமே ஜனநாயக மத்தியத்துவம் ஆகும்.இத்தகைய ஜனநாயக மத்தியத்துவமே பாட்டாளி வர்க்க அரசமைக்கு அடிப்படையான ஜனநாயகக் கோட்பாடாகும். இத்தகைய ஜனநாயகமே உண்மையான ஜனநாயகமாகும். இந்தியாவில் இத்தகைய ஜனநாயக மத்தியத்துவத்தின் அவசியத்தை பொதுவுடமையாளர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்வதில்லை,அதற்காகப் போராட வேண்டும் என்ற உணர்வுவை மக்களிடம் ஏற்படுத்தவும் தவறி இருக்கிறார்கள்.மக்கள் தேர்தலில் இவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டால் போதும் என்று கருதுகிறார்கள். ஆகவேதான் இந்த கேடுகெட்ட பாராளுமன்ற ஆட்சியை மிகவும் உயர்ந்த ஜனநாயக ஆட்சி என்று மெச்சி புகழ் பாடுகிறார்கள். இவர்களை நாம் மார்க்சியவாதிகள் என்று சொல்ல முடியுமா?

20.முதலாளித்துவ்வாதிகளும்திருத்தல்வாதிகளும் முதலாளித்துவ,இராணுவ, அதிகாரவர்க்கத்தின் மத்தியத்துவத்தை சமூகத்தின் கட்டுப்பாட்டுக்கும் ஒழுங்கமைப்புக்கும்அவசியமானது என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால், உணர்வுப்பூர்வமான ஜனநாயக வழிப்பட்ட, பாட்டாளி வர்க்கத்தின் மத்தியத்துவத்தை காரல்மார்க்ஸ் வலியுறுத்துகிறார்.

ஆகவே காரல்மார்க்ஸ் மத்தியத்துவத்தை மறுக்கவில்லை,மாறாக அதிகாரவர்க்க மத்தியத்துவதை (முதலாளித்துவ ஜனநாயகம் அல்லது சர்வாதிகராம்) எதிர்க்கிறார். அதற்குமாற்றாக பாட்டாளி வர்க்கத்தின் மத்தியத்துவதை (பாட்டாளி வர்க்க ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம்)வலியுறுத்துகிறார்.இதன் மூலம் மிகப்பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்பதே காரல்மார்க்சின் நிலைபாடாகும்.இதற்கு நேர் எதிராகசிறுபான்மையினரான முதலாளிகளுக்கு ஜனநாயகம் வேண்டும் என்பதே முதலாளித்துவ சீமான்களின் வாதம் ஆகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

21.சந்தர்ப்பவாதிகளும்திருத்தல்வாதிகளும் புல்லுருவியாய் வளர்ந்துவிட்ட வேண்டாத தசைப்பிண்டமாக உள்ள முதலாளித்துவ அரசை தகர்க்க வேண்டும் என்ற மார்க்சின் போதனையை காதுகொடுத்து கேட்க்கக்கூட தயாரில்லாத டமாரச் செவிடர்களாக இருக்கிறார்கள் என்றார்லெனின். அதாவது நெற்பயிரை வளர்க்க நிலத்தில் விவசாயி உரமிடுகிறார் தண்ணீர்பாய்ச்சுகிறார். இந்த உரத்தையும் தண்ணீரையும் உறிஞ்சி வளர்ந்துவிட்ட புல்லுருவி அல்லது களையினால் விவசாயிக்கோமக்களுக்கோ எவ்விதமான பயனும் இல்லை. ஆகவேதான் விவசாயி நிலத்தில் வளர்ந்துள்ள களையை அதாவது புல்லுரிவியை பிடிங்கி எறிகிறார்.

அதுபோலவே அரசு அதிகாரிகளும் ஆளும் அரசியல்வாதிகளும் மக்களின் வரிப்பணத்தில்தான் வாழ்கிறார்கள். ஆனால் இவர்கள் மக்களுக்கு எதுவும் செய்வதில்லை. பெயருக்கு மக்களுக்கு ஏதோ செய்வது போல நாடகமாடி மக்களை ஏய்க்கிறார்கள். ஆனால் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உதாரணமாக விவசாயிகள் ஓர் ஆண்டு போராடி வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.மக்களின் கோரிக்கைகளை இவர்கள் ஒருபோதும் நிறைவேற்றுவதில்லை. மாறாக மக்கள் கோரிக்கை வைத்துப் போராடினால் அதனை பலாத்காரத்தைக் கொண்டு அடக்குகிறார்கள். ஆகவேதான் இவர்களை புல்லுருவிகள் என்றும் வேண்டாத தசைப் பிண்டம் என்றும் காரல் மார்க்ஸ் வரையறுத்தார். ஆகவே எவ்வாறு விவசாயி பயிரை காக்க களைகளை பிடுங்கி எறிகிறாரோ, அதேபோல சமூகத்திற்குத் தேவையில்லாத முதலாளித்து அரசுப் பொறியமைவை உழைக்கும் மக்கள் அழித்துவிட்டு அதனிடத்தில் உழைக்கும் மக்களுக்கு உண்மையில் சேவை செய்யும் உழைக்கும்

வர்க்கத்திற்கான அரசை உருவாக்க வேண்டும் என்பதே மார்க்சிய ஆசான்களது போதனை ஆகும். இதனை நாம் மறந்துவிட்டதாலும் இதனை செயல்படுத்த தவறியதாலும் தான் நாம் வேதனையிலும் வறுமையிலும் வாடிக்கொண்டு இருக்கிறோம். 22. புல்லுருவியாய் வளர்ந்துவிட்ட முதலாளித்துவ அரசானது சமூகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும் சக்திகளை எல்லாம் ஒடுக்கி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் நிலையில், கம்யூன் அரசானது சமூக வளர்ச்சிக்குப் பயன்படும் சக்திகளுக்கு எல்லாம் ஊக்கம் கொடுத்து உற்சாகம் ஊட்டி வளர்க்க வேண்டும் என்ற தனது கடமையைச் செய்வதன் மூலம் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு உணர்வுப்பூர்வமாகப் பாடுபடும். இத்தகைய செயலின் மூலம் மட்டும்தான் இந்தியா போன்ற நாடுகள் புத்தெழுச்சி பெற்று உயர்ந்திடும். இந்த நாடுகளில் வாழும் மக்களும் புதியதோர் உலகத்தில் உல்லாசமான வாழ்க்கை வாழ்வார்கள்.

23. கம்யூன் அமைப்பானது கிராமங்கள் மட்டுமல்லாது நகரங்களிலும் செயல்படும். அதன் மூலம் கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கும நகரங்களிலுள்ள உழைப்பாளர்களுக்கும் ஒரு சிறந்த வகையான ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சி செய்யும். அதன் மூலம் நமது நாட்டிலுள்ள அனைத்து வகையான உழைக்கும் மக்களிடையே சகோதர பாசத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த முயற்சி எடுக்கப்படும்.

24.தேசிய சுயநிர்ணயம் என்றும் மாநில சுயாட்சி என்று பேசப்படும் கருத்துக்களைஉண்மையில் நடைமுறையில் சாதிப்பதற்கு நமக்குத் தேவை இத்தகைய கம்யூன் அரசமைப்பு முறைதான். அதாவது இத்தகைய கம்யூன் அரசமைப்பு முறையானது பிரதேச சுயாட்சி முறையாகவே இருக்கும் என்கிறார் லெனின். ஏனென்றால் கம்யூன் அரசமைப்பை நிர்வகிப்பது உழைக்கும் மக்களாகவே இருப்பதால்தான் அது சுயாட்சித் தன்மை பெற்றதாக இயல்பாகவே இருக்கிறது.

25. மார்க்சியம் தோன்றி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் பலரும் மார்க்சியத்தைமறந்துவிட்டார்கள். ஆகவே மார்க்சியத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த இன்று அகழ்வாராய்வு நடத்திப் புதைபொருள் தேடுவது போல தேடிப்பிடித்தாக வேண்டியிருக்கிறது என்றார். லெனின் காலத்திலேயே மார்க்சியத்திற்கு இந்த நிலைமை என்றால் இன்றைய காலத்தில் மார்க்சியத்தின் நிலையை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். உண்மையில் மார்க்சிய லெனினியத்தை கற்க வேண்டியவர்கள் எல்லாம் அதனை கற்பதற்கு எவ்விதமான முயற்சியும் எடுக்காத இழிவான நிலையில்தான் கம்யூனிசத்தை நேசிப்பவர்கள் உள்ளனர். இதன் காரணமாக கம்யூனிசத்தின் எதிரிகள் காரல்மார்க்சின் கொள்கைகளுக்கும் லெனினது கொள்கைகளுக்கும் எதிராக பல்வேறுவிதமான தவறான, மற்றும் மக்களுக்கு தீமை விளைவிக்கும் கருத்துக்களை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் மார்க்சியத்திற்கு எதிரான விஷக் கருத்துக்களை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே நமது கடமை மார்க்சிய ஆசான்களது போதனைகளை ஆழமாக கற்று நாம் சந்திக்கும் பிரச்சனைகளில் அதனை பொருத்தி குறிப்பான தீர்வு காண்பதற்கான பயிற்சியை நாம் பெற வேண்டும்.

26.கம்யூனுக்கு முந்தைய எல்லா அரசு வடிவங்களும் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கும் தன்மை உடையதாகவே இருந்தது.ஆனால் கம்யூன் அமைப்புதான் நெகிழ்வு தன்மை உடையதாக இருந்தது என்பதை கம்யூன் வரலாறு நிருபித்தது. இதற்கு காரணம் கம்யூனானது தொழிலாளி வர்க்க அரசாக இருந்தது. உதாரணமாக சீனாவில் உருவான கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான அரசு சீனாவிலுள்ள ஒரு அரசனை கைது செய்து சிறையில் அடைத்தது.

ஆனால் அந்த அரசனை சிறையில் கொடுமைகள் செய்யவில்லை (தமிழ் நாட்டில் ஒரு தந்தையையும் மகனையும் கைது செய்து போலீஸ் அடித்தே கொலை செய்தது போலசெய்யவில்லை) மாறாக அந்த அரசனை வேலை செய்யச் சொன்னார்கள். அவரும் வேலை செய்தார். அப்போதுதான் வேலை செய்வதனால் ஏற்படும் துன்பத்தை உணர்ந்து அவர் திருந்தினார்.

27.உற்பத்தியாளர்அதாவதுதொழிலாளர்களுக்கும் அபகரிப்பாளர் அதாவது முதலாளிகளுக்கும் இடையே நடந்த போராட்டத்தின் விளைவாகவே பிரெஞ்சு தேசத்தில் கம்யூன் அரசு வடிவம் உருவானது. ஆகவேதான் உலகத்தில் உழைப்பவர்களுக்கும் பிறர் உழைப்பைச் சுரண்டி வாழ்பவர்களுக்கும் இடையே போராட்டங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும்.இந்தப் போராட்டமானது கம்யூன் என்று சொல்லப்படும் தொழிலாளர் வர்க்கத்தின் அரசு உருவாகும்வரை நீடிக்கும். தொழிலாளர் வர்க்க அரசு உருவாகி அந்த அரசும் சமூகத்திற்குத் தேவையில்லை என்ற சூழல் அதாவது கம்யூனிச சமூக அமைப்பு வர்க்கமற்ற சமூகம் உருவான பின்பு அரசு என்பதே சமூகத்திற்கு தேவையில்லாமல் போய்விடும்.

இதைத்தான் காரல்மார்க்ஸ் கண்டுபிடித்த உண்மையாகும்.இந்த சூழலை நோக்கித்தான் மனித சமூகம் முன்னேறும்.

28.சமூகத்தில் மனிதர்கள் ஏற்றத்தாழ்வில்லாமல் வாழ வேண்டுமானால் அந்த சமூகத்திற்கு எத்தகைய அரசியல் வடிவம் தேவை என்பதை கண்டுபிடிக்க அராஜகவாதிகள் தவறுகிறார்கள்.

ஆனால்,திருத்தல்வாதிகள் அல்லது சந்தர்ப்பவாதிகள் நிலவுகின்ற நாடாளுமன்ற அரசியல்வடிவமே போதுமானது என்றும் இதுவே இறுதியானது என்றும் கருதுகிறார்கள்.சந்தர்ப்பவாதிகள் நாடாளுமன்ற ஆட்சி முறையை மண்டியிட்டு வழிபடுகிறார்கள்.ஆகவேதான் இந்த நாடாளுமன்ற ஆட்சி முறையை தகர்க்க வேண்டும் என்ற காரல்மார்க்சின் கருத்தை அராஜகவாத கருத்தாக சித்தரிக்கிறார்கள்.

29.வரலாற்றில் தொழிலாளி வர்க்கப் போராட்ட அனுபவங்களிலிருந்து சமூகத்தில் அரசு மறைந்தே தீரும் என்ற முடிவிற்கு காரல்மார்க்ஸ் வந்தார்.மேலும் அரசு மறைவதற்கு முன்பு அதாவது நிலவுகின்ற முதலாளித்துவ அரசு ஒழிக்கப்பட்டு இடைக்காலத்தில் ஓர் அரசுஉருவாகும் என்றும் அதுதான் தொழிலாளர்களின் அரசு என்றும் அதைத்தான் நாம் சோசலிசஅரசு என்று கூறுகிறோம்.

30. உழைப்பானது பொருளாதாரத்தில் மூலதனத்துக்கு அடிமைப்பட்டு இருக்கிறது. இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகப் பல போராட்டங்கள் வரலாற்றில்நடந்துள்ளது. அந்தப் போராட்ட வரலாற்றிலிருந்து இறுதியாக இந்த விடுதலைக்கு ஒரேசாதனம் பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்தின் அவசியத்தை வலியுறுத்தும் இந்த கம்யூன் அரசுவடிவம்தான் என்பதை கண்டுபிடித்ததில்தான் காரல் மார்க்சின் மேதமை அடங்கியுள்ளது.

இந்த உண்மையை காரல்மார்க்சும் அவரைப் பின்பற்றிய எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்ற தலைவர்களும், இந்த மார்க்சிய லெனினிய ஆசான்களது போதனைகளை ஏற்று செயல்பட்ட மற்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உண்மையான கம்யூனிஸ்டுகள்தான் ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால் பிறர் இந்த கருத்தை ஏற்காமல்,மார்க்சின் கொள்கைகள் தவறானது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்,அல்லது இந்த கொள்கையை மூடிமறைத்து பல்வேறுவிதமான பிரச்சனைகளை முன்னுக்கொண்டு வந்து இந்தப் பிரச்சனையிலிருந்து மக்களை திசைதிருப்பி மக்களுக்குத் துரோகம் செய்கிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் மார்க்சியத்தை எதிர்த்து மக்களை ஏமாற்றினாலும் மார்க்சியத்தால் முன்வைக்கப்பட்ட அடிப்படை கொள்கைகளையும் இலட்சியங்களையும் உழைக்கும் மக்கள் புரிந்துகொள்வார்கள். அந்த கொள்கைகள் அனைத்தும் உழைக்கும் மக்களின் நல்வாழ்விற்கான கொள்கைகள் என்பதை புரிந்து கொள்வார்கள். அந்த லட்சியத்தை நிறைவேற்ற எல்லாவிதமான தியாகங்களை செய்தும் போராடி வெற்றி பெற்வார்கள். நிலவுகின்ற புல்லுருவி, வேண்டாத தசைப் பிண்டமான முதலாளித்துவஅரசைதூக்கியெறிவார்கள், உழைக்கும் மக்களுக்கான உன்னதமான அரசைப் படைப்பார்கள். இந்தஉண்மையை உழைக்கும் மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை அணிதிரட்டுவதுதான் கம்யூனிஸ்டுகளின் உண்மையான நடைமுறைப் பணியாகும்.

தேன்மொழி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்