கீழ்காணும் பகுதி மூன்று பகுதிகளை கொண்டது. முதல் இரண்டு பகுதி மார்கஸ் வாழ்க்கை வரலாறு எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை மூன்றவது ஆங்கிலப்பகுதியை அப்படியே பகிர்கிறேன் ஆழமான தேடல் உள்ளவர்களுக்கு பயன்படும் அதனை முழுமையாக அதற்கான இணைப்பில் காணுங்கள்.
அறிமுகம்:-இந்த ஆதாரமானது கார்ல் மார்க்ஸின் ஆரம்பகால அறிவுசார் வளர்ச்சியையும், ஹெகலிய தத்துவத்துடனான அவரது உறவையும் விரிவாக விளக்குகிறது. மார்க்ஸ் எவ்வாறு புறநிலை யதார்த்தத்தை அதன் உள்முரண்பாடுகளுடன் புரிந்துகொள்ள ஹெகலின் தர்க்க முறையைப் பயன்படுத்தினார் என்பதையும், அதே சமயம் ஹெகலின் கருத்துமுதல்வாத வரம்புகளை எவ்வாறு அடையாளம் கண்டார் என்பதையும் இக்கட்டுரை அலசுகிறது. 19-ஆம் நூற்றாண்டு ஜெர்மனியில் நிலவிய அரசியல் சூழலில், மதத்தையும் அதிகாரத்தையும் விமர்சித்த இளம் ஹெகலியர்கள் குழுவில் மார்க்ஸ் ஆற்றிய முக்கிய பங்கை இது பதிவு செய்கிறது. குறிப்பாக, புரூனோ பாயர் மற்றும் மோசஸ் ஹெஸ் போன்ற சமகால அறிஞர்கள் மார்க்ஸின் ஆழ்ந்த அறிவுத்திறனையும் புரட்சிகரமான சிந்தனைப் போக்கையும் வியந்து பாராட்டியதை இந்தப் பகுதி சுட்டிக்காட்டுகிறது. இறுதியில், வெறும் தத்துவ விவாதங்களுடன் நிற்காமல், சமூக மாற்றத்திற்கான ஒரு புரட்சிகரக் கருவியாக தத்துவத்தை மார்க்ஸ் செதுக்கிய தொடக்ககால வரலாற்றை இது தொகுத்து வழங்குகிறது. மற்றும் மார்க்ஸின் தத்துவ வளர்ச்சியில் லுட்விக் பியர்பாக் ஏற்படுத்திய தாக்கத்தை மிக விரிவாக விளக்குகிறது. பியர்பாக்கின் படைப்புகள் மதத்தை ஒரு மனித கற்பனையாகவும், மனிதனின் உள்ளார்ந்த பண்புகளின் பிரதிபலிப்பாகவும் அடையாளப்படுத்தி பொருள்முதல்வாத சிந்தனைக்கு வித்திட்டன. ஹெகலியவாதத்தின் பிடியில் இருந்த மார்க்ஸ், பியர்பாக்கின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு மத விமர்சனத்திலிருந்து சமூக எதார்த்தத்தை நோக்கி நகரத் தொடங்கினார். இருப்பினும், பியர்பாக்கின் ஆன்மீக அணுகுமுறையையும் இயங்கியல் தர்க்கத்தை அவர் குறைத்து மதிப்பிட்டதையும் மார்க்ஸ் ஆரம்பத்திலேயே விமர்சித்தார். பியர்பாக்கை உண்மையை நோக்கிய ஒரு சுத்திகரிப்பு நெருப்பாக மார்க்ஸ் போற்றினாலும், அவர் காட்டிய வழியிலிருந்து விலகி ஒரு புரட்சிகரமான அறிவியல் பார்வையை உருவாக்க முனைந்தார். இறுதியில், ஜெர்மானிய தத்துவத்தின் போக்கை மாற்றியமைத்த ஒரு முக்கிய திருப்புமுனையாக இந்த வரலாற்று நிகழ்வை இக்கட்டுரை பதிவு செய்கிறது....
ஹெகலுடைய தத்துவஞானத்தைப் படித்தல், இளம் ஹெகலிய வாதிகளுக்கிடையில் இருத்தல்
தனது படிப்பில்
ஈடுபட்டிருந்தபோது அகநிலை எண்ண முதல் வாதக் கண்ணோட்ட நிலையிலிருந்து உலகை
வியாக்கியானம் செய்ய முயற்சிப்பது தத்துவார்த்த ரீதியில் வீணானது என்பதை மார்க்ஸ்
உணர்ந்தார். உண்மை நிலைகளை அவைகளின் உள்ளிணைந்த ஒழுங்குமுறைகளின்படி வியாக்கியானம்
செய்யவும் அல்லது அந்த உண்மை நிலைக்குள்ளேயே கருத்தைக் காண்பதற்கும்
அவருக்குள்ளிருந்த ஆர்வத்தின் காரணமாய் ஹெகலுடைய தத்துவஞானத்தின்பால் மார்க்ஸ்
ஈர்க்கப்பட்டார். அவர் அப்போது தத்துவஞான எண்ண முதல் வாதக் கருத்துக்களைத்தான்
அனுசரித்து வந்தார். அந்த ஆர்வத்தைத் தான் அவர் வெளியிட்டிருந்தார். அப்போது அவர்
எழுதியது: "புறநிலைப் பொருள் தானும் அதனுடைய சொந்த வளர்ச்சி முறையிலிருந்து
அதைக் கூர்ந்து காண வேண்டும். நம்மிஷ்டப்படி பிரிவினைகளைப் புகுத்தக்
கூடாது." (1. MEGA, Abt. 1, Bd. 1, Halbband 2, S. 42).
இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
ஹெகலுடைய தத்துவஞானம்
அக்காலத்திய வரலாற்று மாற்றங்களின் ஒரு பிரதிபலிப்பாகும். அந்த வரலாற்று மாற்றம்
ஐரோப்பாவில் 18 ஆம்
நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்
றாண்டின் தொடக்கத்திலும் நிகழ்ந்து கொண்டிருந்தது. அது பிரெஞ்சுப் புரட்சியின்
விளைவாக அதன் ஆழமான பதிவுகளின்கீழ் நிலப் பிரபுத்துவ சமுதாய உறவுகள் உடைந்து
தகர்ந்து வந்ததிலிருந்து எழுந்து தோன்றிக் கொண்டிருந்தது. இந்த சமுதாய வளர்ச்சிப்
போக்கு, அத்துடன்
விஞ்ஞானத்தின் வேகமான முன்னேற்றத்துடன் குறிப்பாக இயற்கை விஞ்ஞானங்களின் வேகமான
முன்னேற்றங்களுடன் சேர்ந்து பழைய மானசீக முறைச் சிந்தனை முறைகளுக்கு ஒரு பலமான
அடியைக் கொடுத்தது. பின் காலத்தில் ஏங்கல்ஸ் கீழ்க்கண்டவாறு எழுதினார்:
"ஆனால் இங்குதான் துல்லியமாக ஹெகலியன் தத்துவஞானத்தின் உண்மையான
முக்கியத்துவமும் புரட்சிகரமான குணாம்சமும் அடங்கியிருக்கிறது.... மனித சிந்தனை, செயல்பாடு
ஆகியவற்றின் விளைவுகளுக்கு ஒரு இறுதி நிலையை உண்டாக்கிய கருத்துக்களுக்கு அவர்
என்றைக்கும் நிலைக்கும்படியான ஒரு மரண அடியைக் கொடுத்தார்."( 2. Marx and
Engels, *Selected Works*, Vol. 3, Moscow, 1970, p. 339.) ஹெகலுடைய
மகத்தான பெரிய சாதனை தர்க்கவியல்
முறையை முதல்முறையாக ஒரு முறைப்படுத்தப்பட்ட வகையில் விளக்கிக் கூறியதாகும்.
ஹெகலுடைய தத்துவஞானம்
தொடர்ச்சியான படிப்படியான வளர்ச்சிப்போக்கின் கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு
ஏறும் நெறியின் வளர்ச்சிப் போக்கின் மொத்த வடிவமாக உலகைப் பற்றி முன் வைத்துப்
பேசுகிறது. ஹெகலுடைய கருத்தியல் வளர்ச்சியானது போராட்டத்தின் மூலமும் உள் முரண்பாடுகளுக்குத்
தீர்வு காண்பதன் மூலமும் முன் செல்கிறது. அதன் விளைவு, புதிய
கட்டத்திற்கான மாற்றம் ஏற்படுகிறது அல்லது பழைய முரண்பாடுகள்
"நீக்கப்பட்டு" புதிய முரண்பாடுகள் புதிய குணாம்சத்தின் உள்ளார்ந்த
உயிர்க் கூறுகளாகத் தோன்றுகின்றன. வளர்ச்சியானது தொடர்ச்சியும் தொடர்ச்சியில்லாமையும்
இணைந்த ஒற்றுமையிலும் படிப்படியான அளவு மாற்றமும் படிப்படியான வளர்ச்சியில்
ஏற்படும் துண்டிப்புகளும் இணைந்த ஒற்றுமையிலும் ஒரு புதிய குணாம்ச நிலைக்கு திடீர்
மாற்றங்கள் ஏற்படுவதிலும் காணப்படுகிறது. ஹெகல் இந்தக் கோட்பாடுகளைப் பிரதானமாக
மனித சமுதாய வரலாற்றிற்குப் பிரயோகம் செய்கிறார். அவர் உலக வரலாற்றை உயிர்த்
தத்துவத்தின் ஒரு விதியால் நிர்வகிக்கப்பட்ட வளர்ச்சியாக, அந்த உயிர்ப்
பொருள் அதன் சுதந்திரத்தை அடைவதையே அவ்வளர்ச்சியின் பொருளாகவும் காண்கிறார்.
எனினும் ஹெகலுடைய
தர்க்கவியல் ஒரு எண்ண முதல்வாத அடிப்படையைக் கொண்டிருந்தது. ஏன் என்றால் அவர்
எல்லாவற்றினுடைய சாரப் பொருளும் முழு முதல் மூலக்கருத்தேயாகும் என்று பிரகடனம்
செய்தார். அந்த முழுமுதல் காரணத்தின் சுயவளர்ச்சி என்னும் நிலைக்கு தர்க்கவியல்
இயக்கத்தின் மொத்த வளர்ச்சிப் போக்கு முழுவதையும் தாழ்த்தி விடுகிறார். ஹெகலுடைய
கூற்றுப்படி "முழு முதல் மூலக்கருத்து... இயற்கைக்குள் தன்னைத் தானே உடமை
மாற்றிக் கொள்கிறது. (அதாவது மாற்றம் கொள்கிறது) பின்னர் மீண்டும் அது
தனக்குத்தானே மனம் என்னும் தத்துவத்தில் அடங்கி வந்துவிடுகிறது. அதாவது
சிந்தனையிலும் வரலாற்றிலும் அடங்கி வந்துவிடுகிறது" என்று ஏங்கல்ஸ்
எழுதியுள்ளார்.( 1. Marx and Engels, *Selected Works*, Vol. 3, Moscow, 1970, p. 340.)
முழு முதல்
மூலக்கருத்தின் வளர்ச்சி ஹெகலுடைய தத்துவ ஞானத்தில் முழு முதல் உண்மையாக உச்ச
நிலையடைகிறது. இவ்வாறு அவருடைய சொந்த தத்துவ ஞான முறையைப் பேணிக் கோயில் கொள்ளச்
செய்துள்ளதானது, மனித சிந்தனையின் வளர்ச்சியின் மற்றும் பொதுவாக சகலவற்றின் வளர்ச்சியின்
இறுதி லட்சியம் என்ற முறையில் அது அவரே முன் எடுத்துரைத்துள்ள தர்க்கவியல்
முறைக்கு நேர்மாறான கூர்மையான வேறுபாடு கொண்டதாகும். அவரே எல்லையற்ற உண்மை
நிலைகளையும் தொடர்ச்சியான இயக்கமாகவும் இடை விடாமல் முடிவில்லாத மாற்றத்தைக்
கொண்டதாகவும் காண வேண்டும் என்று கூறியுள்ளதை கவனிக்க வேண்டும். ஹெகலுடைய தத்துவ
ஞானத்தின் வரையறையான குறைபாடு அவருடைய அரசியல் கருத்துக்களில் தெற்றென
விளங்குகின்றன. சமுதாய வளர்ச்சியின் உச்சகட்டம் வரம்புக்குட்பட்ட மன்னராட்சிதான்
என்பதும் அதனுடைய ஒரே கடமை பூர்ஷ்வா வர்க்கத்தின் தேவைகளுக்குத் தக்கபடி அவைகளை
அனுசரித்து பிரஷ்யன் அரசில் சில "அபிவிருத்தி"களைச் செய்தால் போதும்
என்பதுமாகும். இது ஹெகலுடைய தர்க்கவியல் முறையின் புறநிலை நோக்கான புரட்சிகரமான
உள்ளடக்கத்தை பழமைத் தன்மைமிக்க மானசீக கெழுமுறைகளின் தேவைகளுக்குத் தக்கபடி
கீழடக்கி பலியிட்டு விடுகிறது.
ஹெகலுடைய தர்க்கவியல்
முறைமைக்கும் அவருடைய மானசீகவியலான வகை முறைக்கும் இடையிலுள்ள முரண்பாடு ஜெர்மானிய
பூர்ஷ்வா வர்க்கத்தினுடைய உறுதியற்ற ஊசலாட்ட மான, தெளிவில்லாத குழப்பமான இயல்புடைய உலகக்
கண்ணோட்டத்தின் பிரதிபலிப்பாகும் ஜெர்மானிய பூர்ஷ்வா வர்க்கம் நிலப்பிரபுத்துவத்
தளைகளிலிருந்து தான் தப்பித்துக் கொள்ளப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டது. ஆனால்
அதற்காகப் புரட்சிகரமான வழிகளைக் கடைப்பிடிப்பதைத் தவிர்த்து ஒதுக்கியது.
பிற்போக்கு சக்திகளுடன் சமரசம் செய்து கொள்வதையே விரும்பியது.
மார்க்ஸ் பெர்லின்
நகரத்திற்கு வருவதற்கு முன்பே ஹெகலுடைய தத்துவ ஞானத்தைப் பற்றி ஓரளவு
அறிந்திருந்தார். ஆனால் அதைப் பற்றி 1837 வசந்த காலம் வரை ஆழ்ந்து கவனம் கொண்டு படிக்கத்
தொடங்கவில்லை. அவர் இரவும் பகலுமாக சரியாக உணவிறக்கம் இல்லாமல் புத்தகங்களிலேயே
மூழ்கியிருந்ததன் காரணமாக அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு
பெர்லின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஸ்ட்ராலோ என்னும் ஊரில் ஓய்வு எடுத்துக்
கொண்டிருந்த காலத்தில், அங்குதான் அவர், "ஹெகலுடைய பல
சீஷ்யர்களுடன் சேர்ந்து அவரைப் பற்றி அடிமுதல் நுனிவரை அறிவதற்கு இடமுண்டாயிற்று."( 1. MEGA, Abt. 1,
Bd. 1, Halbband 2, S. 219.)
1831-ல் ஹெகல் இறந்து விட்டார். இதற்கிடையில்
இந்த தத்துவ ஞான சீடர்களிடையே கருத்து வேறுபாடுகளும் பிளவுகளும் ஏற்பட்டன. ஜெர்மனி
முழுவதும் ஏற்பட்ட இதர கிளர்ச்சிகளின் சத்தமும் ஓசையும் பெர்லினிலும் சற்றே
கேட்கத்தான் செய்தது. இதனால் அரசர்கள் கொண்டு வந்த தணிக்கை, சீர்திருத்தம், கோயில்களின்
பூசல்கள் முதலியவை சில பகுதி மக்களை ஆகர்சித்தன. பொதுவாகவே இந்தத் தீவிரமான
இளைஞர்களின் மகாசபையானது தத்துவ ஞானத்தின் மூலமும் தர்க்க வழி சிந்தனை மூலமும்
எதையும் படித்து அறிந்து நிலவியிருக்கின்ற அரசியல் ஆட்சிமுறை முழுமையையும்
நியாயப்படுத்துவதையும் வலியுறுத்தினார்கள்.
இடதுசாரிக்
குழுவினர் இளம்
ஹெகலியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களில் டெலிச், ஸ்ட்ராஸ், பாஹர் சகோதரர்கள், எட்கர், புரூனோ, அர்னால்டு ரூஜ், லூத்விக்
பியர்பாக் முதலியோர்கள், ஹெகலுடைய தத்துவ
ஞானத்திலிருந்து தீவிரமான முடிவுகளுக்கு வர முயன்றார்கள். அவருடைய தர்க்கவியல்
முறையைப் பயன்படுத்தி கத்தோலிக்க மதத்தின் பாடுகளைப் பொதுவாக மதத்தை முழுமையையும்
விமர்ஸனம் செய்தார்கள். இதை முதன் முதலில் டேவிட் ஸ்ட்ராஸ் என்பவர் "இயேசுவின் வாழ்க்கை" என்னும் இரண்டு
தொகுதிகள் நூலின் மூலம் செய்தார் (இந்த நூல் 1835 ஆம் ஆண்டு பிரசுரம் செய்யப்பட்டது). இது கிறிஸ்தவ மதபோதனை
நூல்களைத் தானாக உதித்த கட்டுக் கதைகளின் தொகுப்பு என்றும் ஆரம்பகால கிறிஸ்தவ
சபைக் கூட்டத்தின் நம்பிக்கையையும் ஆசை உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கற்பனைக்
கட்டுக்கதைகள் என்றும் கூறியது. புரூனோபாயர் என்பவர் இன்னும் மாறுபட்டு கிறிஸ்தவ
மத போதனை நூல்கள் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கட்டுக்கதைத் தோற்றம் என்றும், மனிதனுடைய சுய
உணர்வுகளின் வளர்ச்சி நிலைகளைக் குறிக்கும் ஒரு கட்டத்தின் பிரதிபலிப்பு என்றும், இந்த கட்டத்தை
மனிதகுலம் நிச்சயம் வென்று அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்குச் செல்லும், அதனுடைய உணர்வு
நிலையின் சரியான பக்குவ நிலைக்குச் செல்லும் என்றும் நம்பினார். பாஹர் மதத்தைப்
பற்றியும் கிறிஸ்தவ மத நூல்களைப் பற்றியுமான விமர்ஸனத்தை ஸ்ட்ராஸைக் காட்டிலும்
மிக அதிகமாக வெகுதூரம் கொண்டு சென்றார். கிறிஸ்துவினுடைய தெய்வீக மூலதனத்தைப்
பற்றி மட்டுமல்ல, கிறிஸ்து என்பவர்
ஒருவர் இருந்ததைப் பற்றிய சந்தேகத்தையே கிளப்பினார். மிகப் பழம் காலத்தின் ஆன்மீக
வாழ்க்கைத் தத்துவ ஞானப் போக்குகள் ஆகியவற்றுடன் கிறிஸ்தவ மதத்தின் ஆரம்பத்தை
இணைத்தார்.
இளம் ஹெகலியர்களுக்கும்
சனாதன மதவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற இந்தக் கருத்து மோதல் வாக்குவாதங்கள் சமய
மதத்தின் வடிவத்தைக் கொண்டிருந்த போதிலும் அவைகளுக்குத்
திட்டவட்டமான
அரசியல் உள்ளடக்கம் இருந்தது. எதேச்சதிகார ஆட்சியின் பிரதான தூண்களில் ஒன்றான மதம்
தெய்வக் கொள்கையின் திருவெளிப்பாடு என்னும் வகையில் மறுக்கப் படுவதன் மூலம், மதம் என்பது மனித
ஆத்மாவின் விளைவே என்று வலியுறுத்தப்பட்டதன் மூலம் ஆட்சி ஆட்டம் கண்டது. விமர்ஸனத்தின்
மூலம் உண்மை நிலையை மாற்றுவதற்கான கோட்பாடுகளை முன் வைப்பதன்மூலம் இளம்
ஹெகலியர்கள் மதத்தை விமர்ஸனம் செய்வதிலிருந்து முன்னுக்குச் சென்று பிற்போக்கு
உணர்ச்சிவாதிகள் மற்றும் பிரஷ்யன் எதேச்சதிகாரத்தின் அரசியலையும்
சித்தாந்தத்தையும் விமர்ஸனம் செய்தார்கள். அதன் மூலம் அவர்களுடைய தத்துவஞானம்
தீவிர ஜெர்மானிய பூர்ஷ்வா வர்க்கத்தின் தத்துவ ஞானமாக ஆயிற்று.
எண்ண முதல்வாதம்தான் இளம்
ஹெகலியர்களின் அடிப்படையான பலவீனமாகும். ஹெகலுக்கு நேர்மாறாக அவர்கள் வரலாற்றைப்
பற்றி ஒரு அகநிலைச் சார்பான கருத்தோட்டத்தில் சாய்ந்திருந்தார்கள். அதன்மூலம்
மனிதர்களுடைய நடைமுறை செயல்பாட்டை குறிப்பாக வெகுஜன இயக்கத்தைக் குறைத்து மதிப்பிட்டார்கள்.
வெறும் தத்துவார்த்த விமர்ஸனத்தின் மேலான தன்மையில் ஆழ்ந்த நம்பிக்கையை வைத்துக்
கொண்டிருந்தார்கள். தலைசிறந்த தலைவர்கள் விமர்ஸன பூர்வமாக சிந்திப்பதன் மூலம்
மனிதனுடைய சுய உணர்வு நிலையின் முன்னேற்றத்திற்கு உறுதி அளிக்க முடியும் என்றும்
அதன் விளைவாக எல்லா துறைகளிலும் முன்னேற்றம் காண முடியும் என்றும் நம்பினார்கள்.
மார்க்ஸ் பெர்லின்
பல்கலைக்கழகத்தில் மாணவராக இருக்கும் போதே இளம் ஹெகலியர்களைப் பற்றி அறியலானார்.
பழைய பண்பற்ற மத வெறியர்கள் மிகவும் புனிதமானதாகக் கருதிய மதக் கோட்பாடுகளையும்
தத்துவஞான கோட்பாடுகளையும் இளம் ஹெகலியர்கள் கடுமையாக விமர்சித்து எதிர்த்த
காரணத்தாலும், அவர்களில்
சிலரிடம் சிறந்த தீவிரமான அரசியல் கொள்கைப் பிடிப்பு, மனச்சாட்சி
சுதந்திரம், பத்திரிகை
சுதந்திரம் முதலியவை பற்றிய அவர்களின் முற்போக்கான நிலை ஆகிய காரணங்களினாலும்
அவர்களிடம் ஒரு சமயம் மார்க்ஸிற்கு மிகுந்த அனுதாபம் ஏற்பட்டதுண்டு. பெர்லினில்
"டாக்டர் கிளப்" என்னும் பெயருடன் இளம் ஹெகலியர்களின் குழு ஒன்று
செயல்பட்டு வந்தது. அதன் உறுப்பினர்களுடன் மார்க்ஸ் நெருங்கிய நட்புக்
கொண்டிருந்தார். அந்தக் குழுவிற்கு ஒரு பல்கலைக் கழக இறைமை நூல் தத்துவ
விரிவுரையாளராக இருந்த புரூனோபாயர் என்பவர்தான் உயிரும் ஆத்மாவுமாக
இருந்தார். அதன் உறுப்பினர்களில் காரல் பிரடெரிக் கோப்பன் என்பவர் ஒருவர். அவர்
ஒரு வரலாற்று ஆசிரியர். அவர் அறிவொளி இயக்கத்தின் பண்புத்திரள் போதகராகவும்
அதன்மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டவராகவும் இருந்தார். அவர் விரைவில் மார்க்ஸினுடைய
நல்ல நண்பரானார். அடால்ப் ருட்டன்பர்க் என்னும் புவியியல் ஆசிரியரும் அந்தக்
குழுவில் ஒரு உறுப்பினராவார்.
மார்க்ஸும் விரைவில் அந்தக் கிளப்பின் சிறந்த அறிவுத்துறைத் தலைவர்களில் ஒருவரானார். அவருடைய மிக விரிவான ஞானம், வலுவான வாதத்திறன், காரண காரிய ஆராய்ச்சியில் அவருடைய ஆழமும் உறுதிப்பாடும் அந்தக் கிளப்பில் நீண்டகால உறுப்பினர்களாகவும் வயதில் பெரியவர்களாகவும் இருந்தவர்கள் உள்பட பலருடைய கவனத்தையும் கவர்ந்தது. அவர்மீது பற்றும் மரியாதையும் வைத்தனர். மார்க்ஸிற்கு சரிசம அந்தஸ்து கிடைத்தது மட்டுமல்ல, பலரும் இவருடைய மேலான தலைமைத் தன்மையையும் உணரத் தலைப்பட்டார்கள், ஒப்புக்கொள்ளத் தொடங்கினார்கள். கோப்பன் என்பவர் பெருமளவில் மார்க்ஸினுடைய செல்வாக்கிற்குட்பட்டார். அவர் 1840-ல் எழுதிய "பிரடெரிக்டெர் கிராஸ் அண்ட் சின் வைடர் சாக்கரி" என்னும் நூலை மார்க்ஸிற்கு சமர்ப்பணம் செய்தார். 1841-ல் மோசஸ் ஹெஸ் என்னும் ஒரு பிரபலமான இளம் ஹெகலியர் தன்னுடைய நண்பர் பெர்த்தோல்டு ஆர்பாக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்: "நீங்கள் ஒரு ஆகச் சிறப்புமிக்க கூறப்போனால் அநேகமாக இன்று வாழும் ஒரே ஒரு உண்மையான தத்துவ ஞானியாக டாக்டர் மார்க்ஸைச் சந்திக்கத் தயாராகலாம். அவர் எனது பேரன்புக்கும் வழிபாட்டுக்கும் உரியவர். அவர் இன்னும் ஒரு இளைஞர்தான் (அவருக்கு அதிகமாகப் போனால் வயது 24 இருக்கும்) அவர் மத்திய கால மதத்திற்கும் அரசியலுக்கும் இறுதி அடி கொடுக்கப் போகிறார். அவர் மிகுந்த தெளிவான தத்துவ ஞான மெய்யார்வத்தை கூரிய ஆர்வமிக்க நகைத் திறனுடன் இணைக்கிறார். நீங்கள் சற்று கற்பனை செய்து பாருங்கள். ரூஸோ, வால்டேர், ஹோல்பாக், லெஸ்ஸிங், ஹீன், ஹெகல் ஆகிய எல்லோரும் சேர்ந்த ஒரு மனிதராக இருந்தால் எவ்வாறு இருக்குமோ அத்தகைய ஒரு மகத்தான மனிதராக மார்க்ஸ் இருந்தார். இவர்கள் எல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டவர் என்று சொல்லும்போது அவர் ஒரு வெறும் யாந்திரீகக் கலவையல்ல - இது டாக்டர் மார்க்ஸைப் பற்றி ஓரளவு நீங்கள் புரிந்துகொள்ள உதவும்."( MEGA, Abt. 1, Bd. 1, Halbband 2, S. 261.) பலரும் இத்தகைய கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தனர்.
பியர்பாக்கியைப்
பற்றி மார்க்ஸுடைய மனப்பான்மை
மார்க்ஸ் தனது ஆய்வுக்
கருத்துரையைப் பூர்த்தி செய்த அதே ஆண்டில்தான் ஜெர்மனியின் சித்தாந்த வாழ்வில் ஒரு
மிக முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. பியர்பாக் அவர்களுடைய "கிறிஸ்துவ
மதத்தின் சாராம்சம்" என்னும் நூல் வெளியிடப்பட்டது. அந்த நூல் அந்நாளைய
தலைமையான முக்கிய சிந்தனையாளர்களின் உள்ளங்களையெல்லாம் வலுவாக விடுதலை
செய்விக்கும் விளைவுகளை உண்டாக்கியது. ஒரு வகையில் கூறப்போனால் பியர்பாக்தான் இளம்
ஹெகலியர்களின் எண்ண முதல்வாதத்தை அதன் எல்லைக்குள் அடக்கி வெற்றி கண்ட முதலாவது
தத்துவஞானியாவார். அவருடைய புத்தகம் மதத்தை எதிர்த்துள்ள ஒரு பொருள் முதல்வாத
விமர்ஸனத் தாக்குதலாகும். இயற்கை மனித சிந்தனைக்கு - உள்ளத்திற்கு - அப்பால்
சுயேச்சையாக இருந்து நிலை கொண்டிருக்கிறது என்று பிரகடனம் செய்தது. அந்த
இயற்கையின் அடிப்படையில்தான் அந்த இயற்கைதன்னின் விளைவுப் பொருளான மனிதர்கள்
தோன்றி வெளிப்பட்டார்கள் என்றும் பிரகடனம் செய்தது. இயற்கைக்கும் மனிதனுக்கும்
அப்பால் எதுவுமில்லை என்றும் மேலான பரம்பொருள் என்பதெல்லாம் மனிதனுடைய மதக்
கற்பனைகள் மூலம் சிருஷ்டிக்கப்பட்டவை தவிர வேறில்லையென்றும் அவையெல்லாம் மனிதனுடைய
சொந்த சாராம்சத்தின்
வேடிக்கை விசித்திரமான பிரதிபலிப்பைத் தவிர வேறில்லை என்றும் அவர் பிரகடனம்
செய்தார். கடவுளைப் பற்றி மனிதனுடைய கருத்துருவம், கடவுள் சகலவிதமான குணங்களையும் தன்னகத்தே
கொண்டுள்ள சர்வகுணவடிவானவர் என்பது தனி மனிதனுடைய ஆசாபாச குணமம்சங்கள் இல்லாதவர், மனித ஜீவன்கள்
அனைத்திற்கும் மனித குலம் முழுவதற்கும் மனித இனம் முழுவதற்கும் சொந்தமானவர் அல்லது
பியர்பாக் அவர்களே கூறியிருப்பதைப் போல இனப் பொதுவியல்பான ஒரு ஜீவன் என்ற வகையில்
மனிதனுக்குச் சொந்தமானது. அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "நீங்கள் காதல்
மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். காதல் தெய்வீகமானது என்று அதற்கு ஒரு தெய்வீகத்
தன்மை உண்டாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். காரணம் நீங்களே காதலிக்கிறீர்கள். கடவுள்
ஞானம் மிக்கவர் என்று நீங்கள் நம்புகிறீர்கள். கடவுள் ஒரு நற் செயலாற்றும் பரந்த
பரம்பொருள் என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஏன் என்றால் நல்லனவற்றையும்
நியாயமானவற்றையும் உங்களுடைய தலைசிறந்த குணாதிசயங்கள் என்று நீங்கள்
கருதுகிறீர்கள்.... எனவே கடவுள் என்பது மனிதனுடைய சாராம்சம்தான். அது ஆகப் பெரிய
உண்மையின் வடிவமாகக் காணப்படுகிறது."( L. Feuerbach, *Das Wesen des
Chirstenthums* C Leipzig, 1904. S. 75, 77.) அதன் விளைவாக
மனிதன் தன்னுடைய மனித சாராம்சத்தை மீண்டும் தானே பெறுகிறான். அதையே அவன் தானே
கடவுள் என்னும் கருத்துரு வத்திற்கு மாற்றிக் கொடுத்து விடுகிறான்.
அந்த சமயத்தில் கூட
பியர்பாக்கின் சில கருத்துக்கள், இளம் மார்க்ஸ் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டிருந்த
கருத்துக்களுடன் முரண்பட்டு மோதின. பியர்பாக்கினுடைய ஆன்மீக சிந்தனை நோக்கான
அணுகுமுறையை மார்க்ஸால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. மார்க்ஸ் தத்துவ ஞானத்தை ஒரு
செயலுாக்கமுள்ள அம்சமாகக் கண்டார். ஆனால் பியர்பாக் தர்க்கவியலைக் குறைத்து
மதிப்பிட்டார். எனவே அக்கருத்து மார்க்ஸ் கொண்டிருந்த தர்க்கவியலின் புரட்சிகரமான
பாத்திரம் பற்றி தெளிவுமிக்க கருத்துடன் மோதியது. எனினும் மொத்தத்தில் மார்க்ஸ்
பியர்பாக்கினுடைய புத்தகத்தை அது விஞ்ஞானத்தின் புலனறியும் அடிவானக்காட்சி எல்லையை
அகலப் படுத்துவதற்கு உதவியது என்ற வகையில் வரவேற்றார். மதத்தின் நிலை உலகிற்குரிய
மக்களின் வாழ்க்கையி லிருந்துள்ள மூலாதாரத்தைப் பற்றிய தனது சொந்தக்
கருத்துக்களின் காரணமாகவும் மார்க்ஸிற்கு பியர்பாக்கின் பால் ஒரு ஆகர்ஷிப்பு
இருந்தது. மார்க்ஸினுடைய சொந்தப் பொருள் முதல்வாதக் கருத்தோட்டங்கள்
பக்குவமடைந்ததை ஒட்டி ஜெர்மானிய சாஸ்திரீய தத்துவஞானத்தின் கடைசி பிரதிநிதியான, அதன் எண்ண
முதல்வாத அடித்தளங்களுக்குச் சரியான வலுமிக்க மரண அடி கொடுத்த பியர்பாக்கின்
வலுவான செல்வாக்கு மார்க்ஸிடம் அதிகரித்தது.
இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
பியர்பாக்கின்
புத்தகத்தைப் பற்றி மார்க்ஸ் எழுதிய முதல் மதிப்புரை "ஸ்ட்ராஸிற்கும்
பியர்பாக்கிற்கும் இடையில் லூதர் செய்யும் மத்தியஸ்தம்" என்னும் சிறிய
தலைப்பில் 1842 ஆம் ஆண்டில்
எழுதி அதே ஆண்டில் பின்னர் வெளியிடப்பட்டது. அது அந்தக் காலத்தில் பியர்பாக்கியைப்
பற்றி மார்க்ஸ் எவ்வளவு உற்சாகமாக இருந்தார் என்பதைக் காட்டியது. இதர இளம்
ஹெகலியர்களைப் போலவே மார்க்ஸும் அப்போது கிறிஸ்துவ மதத்தின் சாராம்சம் என்னும்
நூலில் உறுதியான நாத்திகக் கருத்து வெளிப்படுத்தப் பட்டிருப்பதை மட்டுமே
பிரதானமாகக் கண்டார் என்பது உண்மை. அதிலிருந்த பொருள் முதல்வாத உள்ளடக்கத்தை அவர்
அவ்வளவாக உணரவில்லை. காரணம் அப்போது அவர் மொத்தத்தில் இன்னும் எண்ண முதல்வாதியாகவே
இருந்தார். எனினும் அவருடைய கட்டுரையில் அவர் பியர்பாக் பக்கமேதான்
சார்ந்திருந்தார். பியர்பாக் எல்லா விஷயங்களையும் "அவை எவ்வாறு இருந்ததோ அவ்வாறேதான்"
(*Marx, Engels, Werke*, Bd. 1, S. 26) கண்டார். ஆனால்
அதற்கு நேர் மாறாக ஸ்ட்ராஸ் "ஒரு ஊகம் செய்யும் கடவுள் கொள்கை கண்ட
சமயவாதியின் கண்களுக்கு எப்படித் தோன்றுமோ அவ்வாறுதான்" எல்லா விஷயங்களையும்
கண்டார் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். நிதான வகையைச் சேர்ந்த இளம்
ஹெகலியர்களுடைய மனப்பான்மை ஸ்ட்ராஸைப் போலவே பியர்பாக்கினுடைய கருத்தோட்டங்களை பகை
உணர்வோடுதான் வரவேற்றார்கள். இதை மூட நம்பிக்கை களிலிருந்து தப்பித்துக்
கொள்வதற்கு திட்டவட்டமான விருப்ப மின்மையைக் காட்டுவதாகவே மார்க்ஸ் அவர்களைப்
பற்றிக் கருதினார். அவர்களுடைய இந்தப் போக்கு உண்மையாக சரியாக கிரகித்துக்
கொள்வதிலிருந்து அவர்களைத் தடுத்தது. மார்க்ஸ் கீழ்க்கண்ட முடிவுக்கு வந்தார்: "உண்மையில்
உங்களுக்கு உண்மையிடம் செல்வதற்கும் சுதந்திரம் அடைவதற்கும் நெருப்போடை வழியாக
அன்றி வேறு வழியே இல்லை. பியர்பாக் நம் காலத்திய சுத்திகரிப்புக்
கருவியாகும்." (Ibid., S. 27)
Ibid., S. 27 - நெருப்போடை இங்கு ஒரு சிலேடைச் சொல்லாகும்.
பயர்பாக் என்னும் பெயரில் பயர் என்றால் நெருப்பு, பாக் என்றால் ஓடை என்றும் பொருளுண்டு. -
பதிப்பாசிரியர்.
*************************.மேற்காணும் பகுதி நூலின் பக்கம் 67-69 ல்
மேலும் ஆங்கிலப்பகுதியின் உள் செல்ல இந்த இணைப்பை அழுத்தி ஆங்கில பகுதியை முழுமையாக வாசிக்கவும் தோழர்களே
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக