புனித குடும்பம்: மார்க்சிய தத்துவத்தின் எழுச்சி-(10-07-2026)- ஒலி வடிவில்-01

மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் இணைந்து எழுதிய "புனித குடும்பம்" என்ற நூல்,

இளம் ஹெகலியர்களின் அகநிலைவாதக் கருத்துக்களைத் தகர்த்து, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கினை மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. வெறும் தத்துவப் பேச்சோடு நின்ற இளம் ஹெகலியர்களைக் கடுமையாகச் சாடும் இந்நூல், சமூக மாற்றத்திற்கு பொருளாயத உற்பத்தியே அடிப்படை என்ற வரலாற்றுப் பொருள்முதல்வாதச் சிந்தனையை முன்வைக்கிறது. தனிச்சொத்துரிமையின் வீழ்ச்சியும், அதன் விளைவாக எழும் தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியும் முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை இது தர்க்கரீதியாக விளக்குகிறது. பியர்பாக்கின் சில தாக்கங்கள் இதில் தென்பட்டாலும், அவரது மனிதாபிமானக் கருத்துக்களுக்குப் புதிய கம்யூனிச விளக்கத்தை அளிப்பதன் மூலம் மார்க்ஸும் ஏங்கல்ஸும் அவரிடமிருந்து வேறுபடுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், இந்நூல் பாட்டாளி வர்க்கச் சித்தாந்தம் உருவாவதற்கான ஒரு மிகமுக்கியமான தத்துவ மைல்கல்லாக அமைகிறது. இறுதியில், அரசாங்கம் மற்றும் மதம் குறித்த பழைய பார்வைகளைத் தகர்த்து, உழைக்கும் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கான தத்துவார்த்த அஸ்திவாரத்தை இது உறுதிப்படுத்துகிறது.

கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கல்ஸ் இணைந்து எழுதிய முதல் நூல் "புனித குடும்பம்" ஆகும். இது மார்க்சிய தத்துவத்தின் பரிணாம வளர்ச்சியிலும், பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தின் தத்துவார்த்த அடித்தளத்தை அமைப்பதிலும் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும்.

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைய இணைப்பை அழுத்தவும் தோழர்களே

இந்த நூலின் ஆழமான கருத்துக்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்:

1. இளம் ஹெகலியர்கள் மீதான விமர்சனம் (Critique of Young Hegelians)

  • மார்க்ஸும் ஏங்கல்ஸும் இந்த நூலை முக்கியமாக புரூனோ பாயர் மற்றும் அவரைச் சார்ந்த 'இளம் ஹெகலியர்களை' விமர்சிப்பதற்காகவே எழுதினர்.
  • இளம் ஹெகலியர்கள் ஆரம்பத்தில் முற்போக்கானவர்களாக இருந்தாலும், பின்னர் தங்களின் ஜனநாயகப் பற்றுநிலையைக் கைவிட்டு, வெறும் அராஜகவாத உள்ளம் கொண்டவர்களாக மாறிவிட்டனர். அவர்கள் உழைக்கும் மக்களை (வெகுஜனங்களை) மந்தமானவர்கள் என்றும், முன்னேற்றத்திற்குத் தடையானவர்கள் என்றும் வெறுத்து ஒதுக்கினார்கள்.
  • தொழிலாளி வர்க்கத்தைப் புறக்கணித்துவிட்டு, வெறும் "விமர்ஸன விமர்ஸனம்" (Critical criticism) என்ற தத்துவார்த்தத் துறையுடன் மட்டுமே அவர்கள் தங்களை நிறுத்திக் கொண்டதை மார்க்ஸ் கடுமையாகக் சாடினார். இவர்களுடைய அகநிலை எண்ண முதலாளித்துவம் (Subjective Idealism) கேலிக்கூத்தானது என்று மார்க்ஸ் அம்பலப்படுத்தினார்.

2. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Historical Materialism)

  • "வரலாறு" என்பது தானாக இயங்கும் ஒரு அப்பாற்பட்ட சக்தி அல்ல என்பதை மார்க்ஸ் தெளிவாக நிறுவினார். வரலாறு என்பது, "தனது குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குத் தொடர்ந்து முயலும் மனிதனுடைய செயல்பாட்டைத் தவிர வேறில்லை".
  • மனித வரலாற்றின் அடிப்படையாக பொருளாயத உற்பத்தியை (Material Production) மார்க்ஸ் கண்டார். மனிதர்கள் பொருள்களை உற்பத்தி செய்யும் போது ஏற்படும் சமுதாய உறவுகளே வரலாற்றை தீர்மானிக்கின்றன.
  • அரசாங்கத்திற்கும் சமுதாயத்தின் பொருளாதார அமைப்பிற்கும் உள்ள நெருக்கமான தர்க்கவியலான பிணைப்பை மார்க்ஸ் உணர்ந்தார். ஒவ்வொரு வரலாற்று சகாப்தத்திலும் உள்ள பொருளாதாரக் கட்டமைப்புதான் (அடித்தளம்), அதன் அரசாங்கத்தை (மேற்கட்டுமானம்) நிர்ணயிக்கிறது என்பதை விளக்கினார்.

3. பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பணி (The Historic Mission of the Proletariat)

  • மார்க்சியத்தின் மிக முக்கியக் கோட்பாடான 'பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான பங்கு' இந்த நூலில்தான் முதன்முதலாகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
  • முதலாளித்துவ சமுதாயத்தில் பூர்ஷுவா வர்க்கமும் (முதலாளிகள்), பாட்டாளி வர்க்கமும் (தொழிலாளர்கள்) நேரெதிர் சக்திகளாக உள்ளனர். முதலாளிகள் தனிச்சொத்துரிமையைப் பாதுகாப்பதில் குறியாக உள்ளனர். ஆனால், அந்த தனிச்சொத்துரிமையால் தோற்றுவிக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம், தனது சுரண்டல் மற்றும் கொடுமைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, அந்த அமைப்பையே அழித்துத் தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
  • முந்தைய புரட்சிகள் (எ.கா: பூர்ஷுவா புரட்சி) ஒரு சிறுபான்மையினரின் நலனுக்காகவே நடந்தன. ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை என்பது, சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்து விடுவிக்கும் மனிதகுலம் முழுவதற்குமான விடுதலையாகும். வரலாற்றில் முதல்முறையாக, ஒரு வர்க்கத்தின் நலன் பெரும்பான்மை மக்களின் நலனோடு நேரடியாக ஒத்துப்போகிறது என்பதை மார்க்ஸ் நிரூபித்தார்.

4. தர்க்கவியல் பொருள்முதல்வாதத்தின் உருவாக்கம் (Dialectical Materialism)

  • "புனித குடும்பம்" நூல், 17 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான தத்துவஞான வரலாற்றின் முதல் பொருள்முதல்வாதப் பகுப்பாய்வாகும். இது பொருள்முதல்வாதத்திற்கும் எண்ணமுதல்வாதத்திற்கும் (Idealism) இடையிலான போராட்டத்தை மையப்படுத்தியது.
  • மார்க்ஸ் பழைய பொருள்முதல்வாதத்துடன் தன்னை நிறுத்திக் கொள்ளாமல், தர்க்கவியல் முறையைக் கையாண்டு ஒரு 'புதிய பொருள்முதல்வாதத்திற்கு' அஸ்திவாரம் இட்டார். சமுதாயத்தின் முரண்பாடுகளை (உதாரணமாக, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான முரண்பாடு) பகுப்பாய்வு செய்து, இந்த முரண்பாடுகளின் போராட்டமே ஒரு புதிய சமுதாயப் புரட்சிக்கான முன்தேவை என்று விளக்கினார்.

5. வரவேற்பும் பியர்பாக்கின் செல்வாக்கும்

  • இந்நூல் வெளியான போது, முற்போக்கு மற்றும் தீவிரவாதப் பத்திரிகைகளால் "மிக அதிகமான ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது" என்று வரவேற்கப்பட்டது. அதேசமயம், அரசாங்கம், மதம், சொத்து ஆகியவற்றிற்கு எதிராகக் கலகத்தைக் கிளப்புகிறது என்று பழமைவாதப் பத்திரிகைகள் இதைத் தாக்கின.
  • இந்நூல் எழுதப்பட்ட காலத்தில் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் மீது தத்துவஞானி பியர்பாக்கின் (Feuerbach) செல்வாக்கு ஓரளவுக்கு இருந்தது. தாங்கள் பியர்பாக்கைக் காட்டிலும் பல படிகள் முன்னேறிவிட்டோம் என்பதை அறியாமல், தங்களை "உண்மையான மனிதாபிமான வாதிகள்" என்று அவர்கள் அழைத்துக் கொண்டனர். எனினும், பின்னர் 1867-ல் இதைப் படித்த மார்க்ஸ், இதிலிருந்த "பியர்பாக் வழிபாடு" வேடிக்கையானது என்று உணர்ந்தார்.

சுருக்கமாகச் சொன்னால், "புனித குடும்பம்" நூலானது, மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் தங்களது சித்தாந்த எதிரிகளிடமிருந்து தங்களை முழுமையாக வேறுபடுத்திக் காட்டி, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான மற்றும் விஞ்ஞான கம்யூனிஸத்திற்கான தத்துவார்த்த அடித்தளத்தை ஆணித்தரமாக நிறுவிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணமாகும்....

புனித குடும்பம்

இளம் ஹெகலியர்கள் மீது கூட்டாகத் தாக்குவதற்கான தயாரிப்பு

ஏங்கல்ஸ், பாரிஸிற்கு வருவதற்குள்ளாக மார்க்ஸ், இளம்ஹெகலியன்களுக்கு எதிராகக் குறிவைத்து ஒரு நூல் எழுதத்  திட்டமிட்டிருந்தார். "ஹெகலுடைய சட்டத்தின் தத்துவஞானத்தைப்பற்றிய விமர்ஸனத்திற்குப் பங்களிப்பு 'அறிமுகவுரை" என்னும் அவருடைய கட்டுரையில் மார்க்ஸ் பகிரங்கமாகவே "தத்துவார்த்தக் கட்சி"யைக் கண்டனம் செய்தார். அந்த "தத்துவார்த்தக் கட்சி" ஜெர்மாலிய பிற்போக்கு அமைப்பு முறையை எதிர்த்துள்ள போராட்டத்தில் அவர்களை வெறும் தத்துவார்த்தத் துறையுடன் மட்டும் நிறுத்திக் கொண்டிருந்தது. அதிலும் அதைப் பற்றிய இன்னும் அதிகமாக விவரிப்பதற்கு அதற்குள்ள தனி உரிமையை வலியுறுத்தியது.( 1. Marx, Engels, Werke, Bd., 1, S. 384.)  1844 ஆம் ஆண்டு 'பொருளாதாரம் மற்றும் தத்துவஞான கையெழுத்துப் பிரதிகள்' என்னும் எழுத்துரைக்கான முகவுரையில் மார்க்ஸ் பகிரங்கமாகவே, இளம் ஹெகலியர்களுடன் ஒரு சித்தாந்த எல்லைக்கோடு அமைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார். "பழைய தத்துவஞான ரீதியான குறிப்பாக ஹெகலியன் தத்துவஞானத்தின் அனுபவச் சார்பற்ற மனதின்  மூலதத்துவ ஆராய்ச்சி முறை ஒரு இறைமை நூல் கேலிச்சித்திர வடிவத்தின் திரித்து முறுக்கப்பட்டதன் உச்ச நிலைச் சேர்க்கையாகவும் இறுதி விளைவாகவும்" (2. Karl Marx, Economic and Philosophic Manuscripts of 1844, p. 22.) கூறப்பட்ட கருத்துக்களுடன் சரியான எல்லைக் கோடு அமைத்து வேறுபடுத்திக் கொள்ள வேண்டிய  அவசியத்தை வலியுறுத்தினார். 1844 ஆகஸ்டு ஆரம்பத்தில் மார்க்ஸ் பாயரைத் தாக்கப் போவதாக உள்ள தனது விருப்பத்தை பியர்பாக்கிற்குத் தெரிவித்தார்.

பாரிஸில் ஏங்கல்ஸ் தங்கியிருந்த போது இளம் ஹெகலியன் களைப் பற்றிய தனது கருத்து மார்க்ஸினுடைய கருத்துக்கு ஒத்திருந்ததைக் கண்டார். மார்க்ஸ், பாயர் சகோதரர்களுக்கு எதிராக எழுத வேண்டிய பிரசுரத்தில் தன்னுடன் சேரும்படி ஏங்கல்ஸ் அழைப்பு விடுத்தார். அவர்கள் அவ்வேலையில் உடனடியாக இறங்கினார்கள். ஏங்கல்ஸ் தனது பங்கை பாரிஸில் இருக்கும் போதே ஏறக்குறைய 30 பக்கங்கள் எழுதி முடித்தார். மார்க்ஸ், தனது நண்பர் ஜெர்மனிக்குப் போன பின்னரும் தொடர்ந்து 1844 செப்டம்பர் முதல் நவம்பர் வரை அந்த வேலையைத் தொடர்ந்து செய்தார்.

இளம் ஹெகலியர்களைப் பற்றி பகிரங்கமான விமர்ஸனம் செய்வதற்கு அவர்களுக்குமிருந்த அவசியத்திற்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தன. ஒரு விஞ்ஞான பூர்வமான பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டுமானால் அதற்கு அன்னிய சித்தாந்தப் போக்குகளுக்கும் அவர்களுடைய சித்தாந்தத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை இடைவிடாமல் வரையறுத்துக் கொண்டிருப்பதன் மூலம்தான் சாத்தியப்படும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இதற்கிடையில் இளம் ஹெகலியர்கள் குறிப்பாக பெர்லினில் இருந்தவர்கள், பாயர் சகோதரர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த கூட்டம் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் அடைந்துவிட்டது. அவர்கள் தங்களுடைய ஜனநாயகப் பற்றுநிலையை கைவிட்டு விட்டனர். பின்னர் பாட்டாளி வர்க்கத்தினுடைய சித்தாந்தங்களாக  பொது தீவிர பூர்ஷுவா வர்க்கத்தினுடைய சித்தாந்தங்கள் பலவற்றிற்கு சாய்ந்து விட்டனர். மதத்தை எதிர்த்தும், பிரஷ்ய அரசை எதிர்த்தும் உள்ள போராட்டத்தில் அவர்கள் நேச சக்தியாக இருந்த நிலை இனி எப்போதும் இல்லை. ஆனால் இப்போது அவர்கள் வெறும் அராஜகவாத உள்ளம் கொண்ட படிப்பாளிகளாகி விட்டார்கள். அவர்கள் "வெகுஜனங்களை" செயலற்றவர்கள் என்றும் மந்தமானவர்கள் என்றும் முன்னேற்றத்திற்குத் தடையானவர்கள் என்றும் வெறுத்து ஒதுக்கினார்கள். பாயர் சகோதரர்களின் கருத்துப்படி, அதனுடைய ஒரே தூண்டுவிசை "அறிவாதார ஆராய்ச்சி மூலமான விமர்ஸன விமர்ஸனம்" ஆகும். இதில் பாயர் சகோதரர்கள் தங்களை அந்த இயல்பின் உருவகமாகக் கருதிக் கொண்டனர்.

1843, 1844 ஆண்டுகளில் சார்லட்டன்பர்க்கிலிருந்து புரூனோ பாயர் வெளியிட்ட அல்ஜிமீன் லிட்டரேச்சர் - ஜீட்டுங் என்னும் வாரப் பத்திரிகையில் இளம் ஹெகலியர்கள் தங்களுடைய கடந்த கால எதிர்ப்பு மனப்பான்மையைப் பற்றி பகிரங்கமாக மறுப்புக் கூறினார்கள். அதனுடைய எட்டாவது இதழில் "1842" என்னும் தலைப்பில் புரூனோபாயருடைய கட்டுரை ஒன்று வெளிவந்தது. அதில் "ரெயினிஷி ஜீட்டுங்" கைவிட்டு விட்டபடியான "1842 ஆம்  ஆண்டு தீவிர வாதத்தை"க் கைவிட்டு விட்டதாக அறிவித்தார். மார்க்ஸ், ஏங்கல்ஸ் மற்றும் இதர ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுக்கும் தெளிவாக சுட்டிக்காட்டும் முறையில் பாயர் "சோஷலிஸத்தில் ஏதோ புதியதைக் கண்டு கொண்டிருப்பதாக நம்பிக்கை" கொண்டிருப்பவர்களுடைய கருத்தோட்டங்களை வெறுத்து ஒதுக்கினார். அரசியலில் அவனுக்குள்ள வெறுப்பைக் கூறி ஆர்ப்பரித்தார். விமர்ஸனம் என்பதில் அரசியல் தன்மை இழந்து விட்டது. அதில் அரசியலுக்கு இடமில்லை என்று அறுதியிட்டுக் கூறினார். ஜெர்மனியில் இது ஒரு அபாயகரமான குறிப்பிட்ட கருத்தோட்டமாக இருந்தது. ஜெர்மனி அப்போது பூர்ஷுவாப் புரட்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அரை நிலப்பிரபுத்துவ எதேச்சதிகார ஆட்சியை ஒழித்து வெற்றி கொள்வதற்கு ஆற்றல் படைத்த ஒரே சக்தியான தொழிலாளி வர்க்கத்தையும் விரிவான மக்கள் பகுதியையும் அது புறக்கணித்தது.

அல்ஜிமீன் லிட்டரேச்சர் - ஜீட்டுங்கில் பாயருடைய கொள்கை வழியினால் பிற்போக்காளர்கள் நல்ல அனுகூலங்கள் அடைந்தார்கள், இதை சர்க்கார் தணிக்கையாளருடைய ஒரு அறிக்கையின் மூலம் தெளிவாகக் காணலாம். அந்தத் தணிக்கையாளர் எழுதினார்: "பாயர்கள் எனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறார்கள், தணிக்கை முறையின் கட்டளைக் குறிப்புகளை மிகச் சிறந்த முறையில் அவர்கள் அனுசரித்துக் கொண்டார்கள்." நேர்மாறாக பாயருடைய கொள்கை வழியை ஜனநாயக பத்திரிகைகள் கடுமையாகக் கண்டித்தன. புறநிலையில் அவர்களுடைய தத்துவ ஞானத்தின் பிற்போக்கான சமுதாய விளைவுகள், மனதிலுள்ள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பது உண்மை நிலையில் அவைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஒப்பாகும் என்னும் அவர்களுடைய அகநிலையான கருத்தோட்டத்தில் படிந்துள்ளன. "எனக்கு வெளியில் நிலைகொண்டிருக்கும் உண்மையான புறநிலை நிகழ்ச்சிக் கோர்வையை வெறும் குறிக்கோள் நிலையாக என்னுள் நிலை கொள்ளும் அகநிலை நிகழ்ச்சிச் கோர்வையாக" (K. Marx, and F. Engels, The Holy Family, p. 111.) மாற்றுவதற்கு அவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர் என்று மார்க்ஸ் கூறினார்.

மார்க்ஸிற்கும் ஏங்கல்ஸிற்கும் இளம் ஹெகலியர்களுடைய போலியான தீவிரவாதத்தை அம்பலப்படுத்த வேண்டிய கடமையும், அவர்களுடைய "அறிவாராய்ச்சி விமர்ஸன விமர்ஸனத்திற்கு" தங்களுடைய சொந்தப் பொருள் முதல் வாதம் மற்றும் கம்யூனிஸ்டுக் கருத்தோட்டங்கள் மூலம் பதிலளிக்கும் கடமையும் எதிர்நோக்கி யிருந்தது.

மார்க்ஸ் வேலை செய்யச் செய்ய பாயர்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட பிரசுரம் விரிவடைந்து 20 அச்சுப் பக்கங்களைக் கொண்ட புத்தகமாகியது. இதில் மார்க்ஸ் அவருடைய 1844 ஆம் ஆண்டு பொருளாதாரம் மற்றும் தத்துவஞான கையெழுத்துப் பிரதிகளில் இருந்த சில கருத்துக்கள் முக்கியமான சில பொருள் குறிப்புகளைப் பயன்படுத்தினார். பூர்ஷுவாப் பொருளாதாரவாதிகளின் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள், அரசியல் அமைப்பாண்மை சிறப்புக் குழுக்களின் வரலாறு பற்றி அவருடைய தயாரிப்பு எழுத்துரைகளிலிருந்து எடுக்கப்பட்ட பல குறிப்புகள் ஆகியவற்றையும் பயன்படுத்தினார். ஆங்கிலேய, பிரெஞ்சு பொருள்முதல்வாதிகளைப் பற்றிய தனிப் படிப்பாய்வு நடத்தினார். அவர்களில் முக்கியமானவர்கள், பிரான்ஸிஸ் பேக்கன், லாக்கி, ஹோப்ஸ் மற்றும் ஹெல்விட்டியஸ் ஆகியோராவர். அந்த எழுத்துவேலை மிகவும் பெரியதாக இருக்கும் என்பதை ஏங்கல்ஸ் அறிந்தபோது அவர் மார்க்ஸிற்கு எழுதினார்: "அது நல்லது; எந்த வகையிலும் அதிகமாகவே அளவுதான். உங்கள் எழுத்து மேஜையில் இடமிருக்கும். அதுவெளிவரவேண்டும்." (Marx, Engels, Werke, Bd., 27, S. 16.

 கையெழுத்துப் பிரதி 1844 நவம்பர் இறுதியில் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனால் செப்டம்பர் கடையிலும் அக்டோபர் தொடக்கத்திலும் ஜெர்மன் பத்திரிகைகளில் மார்க்ஸ், பாயர் சகோதரர்களுக்கு எதிராக "விமர்ஸன விமர்ஸனத்தைப் பற்றிய ஒரு விமர்ஸன ஆய்வு" என்னும் தலைப்பில் ஒரு பிரசுரம் எழுதிக் கொண்டிருந்தாகவும், அதன் ஒரு பகுதியை "சுதந்திரத்" தொகுதிக்குரிய சேர்ந்த ஜே. புரோபெல்லின் கலந்து புத்தகத்தைப் பிரசுரம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் புரோபெல்லுடைய கூட்டாளியான ரூஜே அதைத் தடுத்தார். மார்க்ஸ் பின்னர் பாரிஸில் ஒரு வெளியீட்டாரைக் கண்டுபிடிக்க முயன்றார். ஆனால் அதில் வெற்றி பெறவில்லை. அது 1845 பிப்ரவரி கடைசியில் பிராங்க்போர்ட் ஆன் - மெயின் சஞ்சிகையில் புனித குடும்பம் அல்லது புரூனோ பாயர் அண்ட் கம்பெனிக்கு எதிராக, விமர்ஸன விமர்ஸனத்தைப் பற்றிய விமர்ஸன ஆய்வு" என்னும் தலைப்பில் வெளிவிடப்பட்டது. (Frankfurter Ober-Postamts-Zeitung, October 14, 1844.)

புனித குடும்பம்

இது பிரதானமாக ஒரு தத்துவஞான நூலாகும். சில அதிமுக்கியமான தத்துவஞானப் பிரச்சனைகளைப் பற்றிய பொருள் முதல்வாத வியாக்கியானமும், புதிய கண்ணோட்டத்தின் தத்துவஞான எதிர்ப்பாளர்மீது ஒரு போர்க்குணமிக்க தீவிரமான தாக்குதலும் அதில் அடங்கியுள்ளது. அதில் பெரியதொரு பகுதி இளம் ஹெகலியர்களின் அகநிலை எண்ண முதலாளித்துவத்தைப் பற்றிய விமர்ஸனமாகும். அந்த அக நிலை எண்ண முதலாளிவாதம் அதனுடைய மோசமான வடிவத்திலும் அடிக்கடி கேலிக் கூத்தான வடிவத்திலும் சாஸ்திரிய ஜெர்மன் எண்ண முதல்வாதத்தின் அத்தனை குறைபாடுகளையும் கொண்டிருந்தன. எனவே அந்த விமர்ஸனம் சாராம்சத்தில் முக்கியமான எண்ணமுதல்வாதம் முழுமைக்கும், அதனுடைய வழி முறைகள் மீதும் அதன் திரித்துக் கூறப்பட்டுள்ள தாக்குதலுக்கும் பிரயோகிக்கப்பட்டது. இளம் ஹெகலியன்கள் சுய-உணர்வு நிலையைத் துதிபாடுவதைக் கிண்டல் செய்து மார்க்ஸஸும் ஏங்கல்ஸஸும் எழுதினார்கள்: "விமர்ஸன விமர்ஸகர்கள்... உணர்வு நிலையும் உயிரும் தெளிவாக வேறுபட்டு இருக்கும் உலகம் ஒன்று இருக்கிறது என்னும் கருத்தைக் கிரகித்துக் கொள்ள முடியாது: நான் அதன் நிலை நிற்பை எனது சிந்தனையிலிருந்து நீக்கிவிட்டாலும் அந்த உலகம் தொடர்ந்து நீடித்து இருக்கத்தான் செய்யும்." (K. Marx and F. Engels, The Holy Family, p. 254-55.)

புனித குடும்பம் 17-வது நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதிவரையிலுள்ள காலத்தின் தத்துவஞான வரலாற்றின் முதலாவது பொருள்முதல்வாத முறையிலான பகுப்பாய்வாகும். தத்துவஞானத்தின் இரு பிரதான போக்குகளான பொருள் முதல் வாதத்திற்கும் எண்ண முதல் வாதத்திற்கும் இடையிலான ஒரு போராட்டமாக அவ்வரலாற்றை முன்வைத்தது. அதில் பொருள் முதல்வாதக் கருத்துக்கள் மற்றும் கற்பனாவாத சோஷலிஸம் மற்றும் கம்யூனிசம் ஆகியவற்றிற்கிடையேயும் மேலும் பொருள் முதல் வாதத்தின் வரலாறு மற்றும் இயற்கை விஞ்ஞானத்தின் முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் இடையிலுள்ள உள்ளார்ந்த இணைப்பைப் பற்றி சிறப்பாக வலியுறுத்திக் கூறுகிறார்.

தத்துவஞானத்தின் வரலாற்றில் பொருள்முதல்வாதத்தின் மகத்தான முற்போக்கான முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் அதே சமயத்தில் மார்க்ஸ் தன்னுடைய சொந்த கருத்தோட்டங்களை முந்தைய காலத்துப் பொருள்முதல்வாதக் கருத்தோட்டங்களுடன் சேர்ந்து ஒன்று எனக் கருதவில்லை. காரணம் அவர் ஒரு புதிய பொருள்முதல் வாதத்திற்கு அஸ்திவாரம் போட்டுக் கொண்டிருந்தார். அந்தப் புதிய பொருள் முதல் வாதம், தர்க்கவியல் முறையின் சகல சாதனங்களையும் கொண்டு செழுமைப்பட்டு தர்க்கவியல் பொருள்முதல் வாதமாகியது.

புனித குடும்பம் பொருளாயத உலகத்தின் சிந்தனையில் பிரதிபலிக்கும் பொருளாயத உலகத்தின் புறநிலையான வளர்ச்சிப் போக்கில் உள்ளடங்கியுள்ள இனப் பொதுப் பண்பாக தர்க்கவியலைக் கையாண்டுள்ளது. அதனால்தான் அது சமுதாய உண்மை நிலைக் கூறுகளை அவைகளின் தர்க்கவியல் இயக்கத்தில் அங்கு அவைகளின் உள்ளார்ந்த முரண்பாடுகளை ஆதாரமாக, அவைகளுடைய போராட்டம் ஒரு புதிய குணநிலைக்கு ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கான முன் தேவையாக பகுப்பாய்ந்தது.

மார்க்ஸ் எண்ணமுதல்வாதத்தின் அறிவாதார முறையின் மூலவேர்களை அம்பலப்படுத்தினார். குறிப்பாக முழுதளாவிய,  பொது மூலத்திலிருந்து தனிமூலத்தைப் பிரித்துவிடுதலையும், நுண்ணிய தனிப்பொருள்களை வெறும் பொதுக் கருத்துருவங்களின் வடிவங்களாக கையாளுவதையும் மார்க்ஸ் அம்பலப்படுத்தினார். மார்க்ஸ் வேடிக்கையாக மறைமுகமாகக் கிண்டல் செய்து எழுதினார்: அந்த ஊகக்கோட்டை தத்துவஞானி "ஒரு மிகப்பெரிய அதிசயத்தைச் செய்திருக்கிறார். அவர் ஆப்பிள், பேரி முதலிய உண்மையான இயற்கை பொருண்மையை உண்மையல்லாத காண்பு பெரிய அதிசயத்தை வகையான "பழத்திலிருந்து"( K. Marx and F. Engels, The Holy Family, p. 81.) *என்னை முதலாவது* தத்துவ ஞானிக்கு உண்டாக்கியுள்ளார்". பொதுப்பண்புகளின் பொருள்களை அடையானம் காண்பதன் மூலம் "ரூஷ்டிக்குள்ள ஒரு செயல்" என்றாகிவிடுகிறது. மார்க்ஸ் இந்த எண்ணைமுதல்வாத, மானசீகமுறைக் கருத்துருவங்களை, தனிப்பண்புக்கும் முழுதளாவிய பொதுப்பண்புக்கும் இடையிலுள்ள உறவைப் பற்றிய தர்க்கவியல்-பொருள் முதல்வாதக் கருத்தோட்டத்தின் மூலம் வேறுபடுத்திக் காட்டினார். பொதுப் பண்பிலிருந்து குறிப்பிட்ட வற்றையும், தனிப்பண்பையும் தனியே பிரிப்பது தவறு என்றும், ஏன் என்றால் ஸ்தூலமான ஐம்பொறிகளால் உணரக் கூடிய புறநிலைப் பொருள் உலகத்திலிருந்து பொதுவான கருத்துருவங்களுக்கு நிகழும் மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்குள்ள ஒரே வழி இந்தப் புறநிலைப் பொருள்களிலுள்ள உள்ளிணைந்த நுணுக்கமான புறநிலையான பண்புப் பொருள்களை தெளிவாக வெளிப்படுத்துவதாகும்.

புனித குடும்பம் மேலும் எதிர் சக்திகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய தர்க்கவியல்களைப் பற்றிய தெளிவிறுக்கு ஒரு முக்கியமான பங்கை ஆற்றியிருக்கிறது. பூர்ஷுவா வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலுள்ள பகைமையான முரண்பாட்டின் இயல்பைப் பற்றி பகுத்தாராயும்போது, மார்க்ஸ் அதனுடைய உள் கட்டமைப்பு ஒரு பழமையான பக்கத்தையும் மற்றும் ஒரு புரட்சிகரமான பக்கத்தையும் உள் கொண்டிருக்கிறது என்பதையும் அங்கு "இந்த எதிர்மறை அமைப்பிற்குள் தனிச் சொத்துடையவர்கள்... பழமையின் பக்கமும், பாட்டாளி அதனை அழிக்கும் பக்கத்திலும் இருக்கிறார்கள்" (K. Marx and F. Engels, The Holy Family, p. 51.) என்பதையும் கட்டினார். போராகிக் கொண்டிருக்ககம் இந்த இரு பக்கங்களும் ஒத்துப்போக முடியாதபடி உள்ளார்கள் என்பதை அவர் வலியுறுத்தினார். ஏன் என்றால் தனிச்சொத்து உரிமையாளர்கள் பகைமையை பேணிக் காக்கும் குறிக்கோளைக் கொண்ட செயலை ஆதாரமாகக் கொண்டுள்ளனர். பாட்டாளி வர்க்கமோ அதை அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஆனால் எதிர் எதிர் சக்திகள் என்னும் வகையில் பாட்டாளி வர்க்கமும் பூர்ஷுவா வர்க்கமும் ஒரு சாப்பு நிலையிலான ஒற்றுமையைப் போலவும் அமைந்திருக்கின்றன. ஏன் என்றால் இரண்டும் முதலாளித்துவ அமைப்பிலிருந்தே தோன்றி எழுந்திருக்கின்றன. அதனால் தான் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலமாக இந்த முரண்பாட்டைத் தீர்ப்பது தனிச்சொத்து உடைமையையும் அதன் விளைவான எந்தவித சொத்துமில்லாத பாட்டாளிகளையும் ஒழித்து நீக்கி விடுகிறது.

வரலாற்றைப் பற்றிய பொருள் முதல்வாதக் கருத்தோட்டத்தைப் பற்றிய பல அடிப்படையான கருத்துரைகளைப் பற்றிய விரிவான விளக்கம் அப்போது உருவாக்கப்பட்டது. அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கத்தில் மய்யமாக இருந்தது. இளம் ஹெகலியர்கள் தர்க்கவாத வகை பிரிவுகளை அது ஏதோ தனக்குச் சொந்தமான நிலைப்பாட்டைக் கொண்டும் மனிதர்களுடைய செயல்களை ஆதிக்கம் கொண்டுமிருப்பதாக முன் வைத்திருப்பதற்கு நேர்மாறாக மார்க்ஸும், ஏங்கல்ஸும் கூறினார்கள்: வரலாறு "மனிதனுக்குரிய செயல்பாடாகும்....... 'வரலாறு' ஒரு அப்பாற்பட்ட தனிநபர் அல்ல. தனது சொந்த குறிப்பிட்ட குறிக்கோளுக்காக மனிதனை உபயோகப்படுத்திக் கொள்ளும் ஒரு அப்பாற்பட்ட தனிநபர் அல்ல. வரலாறு என்பது தனது குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குத் தொடர்ந்து முயலும் மனிதனுடைய செயல்பாட்டைத் தவிர வேறில்லை."( K. Marx and F. Engels, The Holy Family, p. 125.)

மார்க்ஸ், அரசாங்கத்திற்கும் சிவில் சமுதாயத்திற்கும் இடையிலுள்ள உறவைப்பற்றி மேலும் அதிகமான தெளிவான அறிவாற்றலைப் பெற்றார். அடிப்படை, மேல் கட்டுக்கோப்பு ஆகியவற்றின்  பொருள் முதல்வாத தத்துவத்திற்கான அடித்தளத்தைப் போட்டார். ஒவ்வொரு வரலாற்று சகாப்தத்திலும் ஒரு குறிப்பிட்ட திட்ட வட்டமான பொருளாதாரக் கட்டமைப்பும் அதற்கு ஒத்திசைவான அரசியல் அமைப்பு முறையுடன் இருக்கிறது என்பதை அவர் காட்டினார். "இதேபோல... பழைய அரசாங்கம் அடிமை அமைப்பு முறையை அதனுடைய இயல்பான அடிப்படையாக வைத்திருந்தது போல இன்றைய நவீன அரசாங்கம் சிவில் சமுதாயத்தைக் கொண்டிருக்கிறது."( K. Marx and F. Engels, The Holy Family, p. 152.) ^1 பூர்ஷுவா அரசாங்கத்தை, பூர்ஷுவா சமுதாயத்தின் ஒரு "அரசியல் தலைமை அமைப்பாக" ஏங்கல்ஸுடைய கருத்தோட்டம்மகாவும், தனது சொந்த கருத்தோட்டமாகவும் முறைப்படுத்தி உருவாக்கினார். அதன் மூலம் அரசாங்கம் என்பது பொருளாதார அடிப்படையின் மீதுள்ள ஒரு அரசியல் மேல் கட்டுக்கோப்பு என்னும் கருத்தோட்டத்திற்கு மிகவும் நெருக்கமாக வந்து விட்டார்.

அரசாங்கத்திற்கும் ஒரு பொருளாதார அமைப்பிற்கும் இடையில் ஒரு வகையான ஒத்திசைவு இருக்கிறது என்பது மட்டுமல்லாமல் ஒரு நெருக்கமான தர்க்கவியலான பிணைப்பும் இருக்கிறது என்பதைப் பற்றி மார்க்ஸ் முழுமையாக உணர்ந்திருந்தார். எந்த அரசாங்க வடிவமும் இறுதியில் அந்த சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையினால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கமும் அதன் பங்காக அந்த அமைப்பின் மீது எதிரச் செயல் ஆற்றும் விளைவையும் செலுத்துகிறது. இவ்வாறாக பூர்ஷுவா அரசு பூர்ஷுவா சமுதாயத்திற்கு இடையூறு செய்கின்ற நிலப்பிரபுத்துவ உரிமைகளையும் சலுகைகளையும் அழிக்கிறது. முதலாளித்துவ வளர்ச்சிக்கு வாய்ப்புக் கொடுத்து அதை வளர்க்கிறது.

"சிவில் சமுதாயம்" என்னும் தெளிவில்லாத கருத்துவகுத்தை இன்னும் அதிகமாக குறிப்பிட்ட தக்கதாகச் செய்வதற்கு சமுதாயம் முழுவதன் வளர்ச்சியை நிர்ணயிக்கும் பிரதான அம்சத்தை வரையறுப்பதற்கு அவர் முயற்சித்துப் பார்த்தார். அதை பொருளாதாரத் தேவைப் பொருள்களின் உற்பத்திதான் என்பதை அவர் ஏற்கனவே கூர்ந்து கவனித்திருந்தார். உற்பத்தியின் நிகழ்ச்சிப் போக்கில்  மனிதர்களுக்கிடையில் வடிவமைக்கிற சமுதாய உறவுகளாகவே உற்பத்தி உறவுகளை அவர் பார்த்தார். இந்த உறவுகள் தெளிவாக வரையறுத்துக் குறிப்பிடப்படுபவை. அவைகளில் "மனிதனுக்கு உயிரூவாக புறநிலைப் பொருள் மனிதனின் புறநிலைப்படுத்தப் பட்ட உயிரூருப் பொருளாக, அதே சமயத்தில் அது இதர மனிதர்களுக்காக மனிதன் நிலையிலிருப்பதாக, இதர மனிதர்களுடன் அவனுக்குள்ள மனித பூர்வமான உறவுகளாக, மனிதனுக்கு மனிதன் உள்ள சமுதாய உறவாக இருக்கிறது." (K. Marx and F. Engels, The Holy Family, p. 60.)

 பொருளாயத உற்பத்தியை மனித குல வரலாற்றின் அடிப்படையாக மார்க்ஸ் கண்டார். இது அவருடைய பொருளாதார மற்றும் தத்துவஞான கையெழுத்துப் பிரதிகளிலிருந்து ஒரு அடி முன்னேற்றமாகும். "ஒரு குறிப்பிட்ட காலத்தின் தொழிலைப் பற்றிய எந்த ஞானமும் இல்லாமல் அதாவது வாழ்க்கை வாழ்க்கை தன்னின் உடனடியான உற்பத்திமுறையைப் பற்றிய போதுமான ஞானம் இல்லாமல்" எந்த ஒரு வரலாற்றுக் காலகட்டத்தையும் புரிந்து கொள்ள முடியாது.( K. Marx and F. Engels, The Holy Family, p. 201)

புனித குடும்பம், வரலாற்றில் மக்களுடைய தலைமைப் பாத்திரம் பற்றியும் - புரட்சிகரமான சகாப்தங்களில் அது மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது வரலாற்று வளர்ச்சியின் செயல்போக்கில் அதன்மேல் வளர்ச்சி பற்றிய மிகமுக்கியமான கருத்துரையை முறைப்படுத்தி உருவாக்கியது. எப்படி எனினும், இதற்கு முந்தைய எல்லாப் புரட்சிகளும் ஒரு சிறுபான்மையின்  நலனுக்காகவே நடந்திருக்கின்றன. அதனால்தான் மக்கள் குறிப்பிட்ட குறைந்த அளவிலேயே இதுவரை வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கில் தங்கள் செல்வாக்கைச் செலுத்தினர். ஆனால் சமுதாய முன்னேற்றம் மேலும் மேலும் அதிகமாக அதிகமாக மக்கள் தங்களுடைய நலன்களையே நிறைவேற்ற நிறைவேற்ற வரலாற்றின் வளர்ச்சிப்போக்கில் அவர்களுடைய செல்வாக்கின் செயல்பரப்பு நிச்சயம் அதிகமாக வளரும். சோஷலிஸப்புரட்சி ஒரு புதிய சகாப்தத்தைத் திறந்துவிடும். அப்போது "வரலாற்றுச் செயல்பாடு மிக அதிகமான அளவில் முழுமையாக தீர்க்கமாக நிறைவேற்றப்படும் போது அது மக்களுடைய செயல்பாடாக இருப்பதால் அம்மக்களுடைய செயல் அளவும் அதிகரிக்கும்." ( K. Marx and F. Engels, The Holy Family, p. 110.) லெனினும் இந்தக் கருத்தை மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளார். சமுதாய வளர்ச்சியைப் பற்றி மார்க்ஸினுடைய கருத்துக்களில் இது மிகவும் தெளிவான ஒளிமிக்க கருத்துக்களில் ஒன்று என்று லெனின் கருதினார்.

வரலாற்றைப் பற்றிய பொருள் முதல்வாதக் கருத்தோட்டத்தைப் பற்றிய மார்க்ஸ் ஏங்கல்ஸுடைய முறைப்படுத்தப்பட்ட உருவாக்கம் விஞ்ஞான கம்யூனிஸ தத்துவத்தைப் பற்றி அவர்களுடைய விவரமான விளக்கத்துடன் கையோடு கையாக சேர்ந்தே சென்றது. எல்லாவற்றிற்கும் மேலாக வரக்கூடிய சோஷலிஸ்ட் புரட்சியின் ஆகப் பிரதானமான செயலுாக்கமுள்ள தலைமையாளான சக்தியாக உலக வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் பங்கு இருக்கிறது என்னும் கோட்பாட்ட்டைப் பற்றிய அவர்களுடைய கருத்து விளக்கம் சேர்ந்தே சென்றது. புனித குடும்பத்தில் மார்க்ஸ் முதல் தடவையாக முறைப்படுத்தி உருவாக்கிய கருத்து உழைக்கும் வர்க்கத்தினுடைய பங்கு சமூக பொருளாதார அம்சங்களால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதாகும். மற்றும் முதலாளித்துவ சமுதாயம் இரண்டு சக்திகளுக்கும் - தனிச்சொத்துடைமை மற்றும் பாட்டாளி வர்க்கம் - ஆகிய இரு சக்திகளுக்குமிடையில் ஒரு நிரந்தரமான பழையமை மிக்கதான கட்டமைப்புக்குள்ளே வளர்ச்சியடைகிறது. அந்த இரு சக்திகளுக்கு மிடையிலுள்ள பகைமை முதலாளித்துவ உறவுகளின் வளர்ச்சியினால் திரும்பத் திரும்ப இடைவிடாமல் உருவாக்கி விடுவிக்கப்படுகிறது. அத்தகைய முதலாளித்துவ உறவுகளை சேமித்துப் பாதுகாப்பதில் முதலாளிகள் - தனிச் சொத்துடைமை உரிமையாளர்கள் – உண்மையான  பிணைப்புடன் அக்கறை கொண்டிருக்கிறார்கள். அதனுடைய பங்காக பாட்டாளி வர்க்கம், அதனுடைய வாழ்க்கை நிலைமைகள் "இன்றைய சமுதாயத்தின் மனிதத் தன்மையற்ற கொடுமைகள் அனைத்தும் சேர்ந்த வாழ்க்கையிலை மொத்தத்தின் தொகுப்பாக" நிறைந்து அந்த உறவுகளை ஒழிப்பதற்கு நாட்டம் கொண்டிருக்கிறது. "தனிச் சொத்துடைமைதான் பாட்டாளி வர்க்கத்தை தோற்றுவித்ததன் மூலம் தனக்குத்தானே வழங்கியுள்ள தீர்ப்பின் தண்டனையை பாட்டாளி வர்க்கத்தின் மூலம் நிறைவேற்றிக்கொள்கிறது." (>  1. K. Marx and F. Engels, The Holy Family, p. 52.) இதன் காரணத்தால் அதன் புற நிலையான சூழ்நிலைகளின் குணத்தால் பாட்டாளி வர்க்கம் நிச்சயம் முதலாளித்துவ சமுதாயத்தை அழித்தே தீரும். "இந்த அல்லது அந்த பாட்டாளியோ அல்லது பாட்டாளி வர்க்கம் முழுவதுமோ குறிப்பிட்ட நேரத்தில் தன்னுடைய குறிக்கோளாக எதைக் கருதினாலும் சரி, அது முதலாளித்துவ சமுதாயத்தை அழிக்கும் வேலையைச் செய்தே தீரும். இதில் உள்ள வினாக்குறி என்னவென்றால் பாட்டாளி வர்க்கம் என்பது என்ன, அதனுடைய பொருண்மையின் விளைவாக அது நிர்ப்பந்தமாக என்ன செய்ய வேண்டியதேற்படுகிறது"(>  1. K. Marx and F. Engels, The Holy Family, p. 53.) என்பதாகும்.

பாட்டாளி வர்க்கம் தனது வரலாற்று வாழ்க்கைப் பணித்திட்டக் கடமையைப் பற்றி விழிப்புள்ள நிலையை வளர்க்க வளர்க்க - அந்த விழிப்பு நிலை முதலாளித்துவ சுரண்டல் சுமை அதிகரிப்பால் மேலும் அதிகமாகி முன்செல்கிறது - இன்று நிலைகொண்டிருக்கக் கூடிய அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபடத் தொடங்குறிறது. அது அதை ஒரு மிக வலுவுள்ள சக்தியாக மாற்றம் செய்கிவிக்கிறது. மற்றொரு பிரச்சனை மார்க்ஸ் மேற்கொண்டது, பாட்டாளி  வர்க்கம், இதர சுரண்டப்படும் வர்க்கங்கள் சம்பந்தமாக அவைகளை விடுவிக்கும் பொறுப்பைக் கொண்ட வாழ்க்கைப் பணித்திட்டம் பற்றியதாகும். முந்தைய புரட்சிகளின் அனுபவங்களைப் பற்றி அவர் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அவற்றில் ஒவ்வொன்றிலும் அதன் தலைமை தனது சொந்த வரையறுத்துக் குறிக்கப்பட்ட நல உரிமைகளால் உந்தப்பட்ட வர்க்கமாக இருந்தது. அந்த நலவுரிமைகள், வெளிப்படையாக இல்லாவிட்டாலும் பொதுவாக மனிதகுலம் முழுவதினுடைய நலவுரிமைகளாக வெளிப்படுத்தப்பட்டன.

 இவ்வாறாக பூர்ஷுவா புரட்சி நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் உறவுகளை உடைத்தெறிந்தது. அது பிரதானமாக பூர்ஷுவா வர்க்கத்தின் நலவுரிமைகளுக்காகவே செய்யப்பட்டது. இருப்பினும் இதனால் மனித குலம் முழுவதற்கும் முற்போக்கான பலன் விளைவுகளை உண்டாக்கியது. ஆனால் அங்கு பூர்ஷுவா வர்க்கத்தின் நலவுரிமைகள் மற்றும் கீழ் மட்ட வர்க்கங்களின்  நலவுரிமைகளுக்குள்ளே ஒருமைத்தன்மை தற்காலிகமானதும் குறைவான வரையறை கொண்டதாகவும் இருந்திருக்கின்றன.

இதற்கு நேர்மாறாக பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க நலன்கள் "பூர்ஷுவா வர்க்கம் தன்னைத்தானும், அத்துடன் சமுதாயத்தையும் விடுவித்துக் கொள்வதற்கான சூழ்நிலைமைகளிலிருந்து பெருமளவில் மாறுபட்ட சூழ்நிலை வாய்ப்புகளுடன் தங்களை விடுதலை செய்து கொள்வதற்குள்ள" (>  1. K. Marx and F. Engels, The Holy Family, p. 110.) வெகுஜனங்களின் வர்க்க நலன்களுடன் முழுமையாக ஒன்றுபோல் இருக்கின்றன. சுரண்டும் அமைப்பு முறையிலிருந்து தன்னைத்தான் விடுதலை செய்து கொள்வதுடன் அது சமுதாயம் முழுவதையும் சேர்த்து விடுதலை செய்கிறது. வரலாற்றில் முதல் தடவையாக தலைமையாளான வர்க்கத்தின் நலவுரிமைகள் உழைக்கும் மக்களின் விரிவான ஜனப்பகுதியின் நலவுரிமைகளுடன் உண்மையிலேயே இசைவாக அமைகிறது. அதன் மூலம் மனித குலம் முழுவதின் நலவுரிமைகளாக அவைகள் ஆக்கப்படுகின்றன.

இத்தகைய காரண ஆராய்ச்சியில் மார்க்ஸினுடைய கருத்துரையின் முதல் தனிமங்கள் அடங்கியிருந்தன. இதை மார்க்ஸ் அடுத்தாற்போல பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தைப் பற்றி நவீன சமுதாயத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களைப் புரட்சிகரமாக விடுவிப்பதில் தலைமையாளான பங்கை ஆற்றுவதற்குரிய வர்க்கமாக கருத்துருவாக்கம் செய்தார்.

 மார்க்ஸும் ஏங்கல்ஸும் பாட்டாளி வர்க்கத்தை பொருளாயத மதிப்புகள் ஆன்மீக அருமைகள் ஆகிய இரண்டையும் உண்டாாக்குகிறது, அவைகளின் ஒருங்கு கர்த்தாவே பாட்டாளி வர்க்கம்தான் என்று கண்டனர். "விமர்ஸன விமர்ஸனம் எதையும் ஆக்கவில்லை, தொழிலாளி எல்லாவற்றையும் உண்டாக்குகிறான், அந்த மனிதையும் புறாலனுடைய ஆன்மீக சிருஷ்டிகள் விமர்ஸனம் அவர்கள் பாராட்டுடைய சொத்து என்றால் என்ன? என்பதை மேற்கோள் காட்டுகிறார்கள். அதை அவர்கள் இளம் ஹெகலியர்களின் விமர்ஸனத்திற்கெதிராக தற்காத்து நின்றார்கள். பெரிய முதலாளிகளுக்கு சொத்து மதிப்புகள் கொடுத்தார்கள். இருப்பினும் அவையுடைய குறுகிய வரையறைக்குட்பட்ட நிலையைப் பற்றி தெளிவாக உணர்ந்திருந்தார்கள். காரணம் அவர் தனி உடைமையின் கண்ணோட்டத்திலிருந்து இது பின்னர் மிகவும் அதிகத் தெளிவாக வெளிப்பட்டது.

லெனின் எழுதினார்: புனித குடும்பத்தில் அடங்கியுள்ளது "பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான பங்கைப் பற்றிய மார்க்ஸினுடைய கருத்தோட்டமாகும் - அது ஏற்கெனவே முழுமையாக வளர்ச்சியடைந்திருந்தது." (V. I. Lenin, Collected Works, Vol. 38, p. 26.)

இந்த நூலும், பொருளாதாரம் மற்றும் தத்துவஞான கையெழுத்துப் பிரதிகளில் இருந்த அளவைக் காட்டியும் குறைவாகவே இருந்த போதிலும் பியர்பாக்கின் செல்வாக்கு மார்க்ஸ் மீது இன்னும் கொஞ்சம் இருந்ததற்கு ஆதாரம் இருந்ததைக் காட்டியது.

1867 ஆம் ஆண்டு புனித குடும்பத்தைத் திரும்பவும் படித்தபோது மார்க்ஸ், ஏங்கல்ஸிற்குக் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "இந்த நூலில் பியர்பாக் வழிபாடு மிகவும் வேடிக்கையான ஒரு கருத்துப் பதிவை ஏற்படுத்துகிறது."( Marx, Engels, Werke, Bd., 31, S. 290.) "பியர்பாக் வழிபாடு" என்று மார்க்ஸ் அழைத்தது அவர்களுடைய கருத்தோட்டத்தின் குறிப்பிட்ட திட்டவட்டமாக அமைப் பெற்றதன் வெளிப்பாடாகும்: படிப்படியாக அவர்கள் மெதுவாக தங்களுடைய கண்ணோட்டத்தை வகுத்தபோது அவர்கள் மெதுவாக படிப்படியாகத்தான் தங்களுடைய கருத்து அடிப்படையிலேயே புதிய ஒன்று என்பதை உணரத் தொடங்கினார்கள். இந்தத் தெளிவு அவர்கள் தங்களுடைய கருத்தை உருவாக்கும் சரியான நிகழ்ச்சிப் போக்கிற்கு பின்னர்தான் வந்தது. வேறு விதத்தில் கூறவேண்டுமானால் புனித குடும்பத்தில் புறநிலையில் அவர்கள் பியர்பாக்கைக் காட்டிலும் வெகுதூரம் முன்னேறி விட்டார்கள். ஆனால் அகநிலையில் இன்னும் அவர்கள் தங்களை பியர்பாக்கின் சீடர்கள் என்றே கருதிக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் 1844 ஆகஸ்டு வரையிலும்கூட மார்க்ஸ் சோஷலிஸத்திற்கு ஒரு தத்துவஞான அடிப்படையைக் கொண்டிடிருந்தவர் பியர்பாக்தான் என்று நம்பிக் கொண்டிருந்தார்.

ஏற்கெனவே பொருள்முதல் வாதிகளாகவும் கம்யூனிஸ்டுகளாகவும் ஆகிவிட்ட மார்க்ஸும் ஏங்கல்ஸும் தங்களை "உண்மையான மனிதாபிமான வாதிகள்" என்று அழைத்துக் கொண்டார்கள். அது பியர்பாக்கின் பதமாகும். இருப்பினும் அதற்கு அவர்கள் புதிய உள்ளடக்கத்தைக் கொடுத்திருந்தார்கள். அந்தப் புதிய பொருள் பியர்பாக்கிற்குத் தெரியாது. அது அவருக்கு ஒப்புக்கொள்ளக் கூடியதுமல்ல.

பதப்பிரயோகங்களைப் பற்றி மார்க்ஸும் ஏங்கல்ஸும் இன்னும் பியர்பாக்கையே சார்ந்திருந்தார்கள். அத்துடன் அவர்கள் தங்களுடைய கொள்கைக் கோட்பாடுகள் பியர்பாக்கினுடையதிலிருந்து தனியாக வேறுபட்டது என்பதை இனிமேல்தான் ஸ்தாபிக்க வேண்டியதிருந்தது. காரணம் அவர்கள் தங்களுடைய வரலாற்றைப் பற்றிய பொருள் முதல்வாதக் கருத்தோட்டத்திற்கு இன்னும் முழுமையான இறுதிப் பூச்சு முடிக்கவில்லை. அதை அவர்களுடைய அடுத்த எழுத்துரைகளில் பூர்த்தி செய்தார்கள்.

புனித குடும்பத்தில் சமுதாய வளர்ச்சியின் ஒழுங்கு முறைகளைத் தொகுப்பாய்வதற்கு ஆரம்பப் புள்ளியாக அவர்கள் உடைமைநிலை மாற்றத்தையே இன்னும் பயன்படுத்தினார்கள். சொத்து, மூலதனம், தொழில், கூலி உழைப்பு ஆகியவை எல்லாம் "உடைமை நிலை மாற்றப்பட்ட மிக முக்கிய தனி அம்சங்கள்" என்றும் "தொழிலாளர்களின் சுய உடைமை நிலைமாற்றத்தின் திண்மையான உற்பத்திப் பொருள்கள்" என்றும் மார்க்ஸ் தொடர்ச்சியாகக் கூறினார். உண்மை, இந்த வகைப் பிரிவுகளைப் பற்றிய தொகுப்பாய்வு மிகவும் ஆழ்ந்த வரலாற்று பூர்வமானது. மற்றும் இளம் ஹெகலியர்கள் உடைமை நிலைமாற்றத்தை வழிபாட்டுருவமாகக் கொண்டாடுவதையும் "மனித இயல்பின் எல்லார் விதமான அடைமொழிகளும் வெளிப்பாடுகளும் விமர்சன பூர்வமாக அவைகளின் எதிரான அம்சங்களாகவும், மனஸ்தாபம் உண்டாக்குபவைகளாகவும் மாற்ற முடியும்"( K. Marx and F. Engels, The Holy Family, p. 32.) என்று அவர்கள் வலியுறுத்துவதையும் ஆசிரியர்கள் கடுமையாகக் கண்டித்தனர். அவர்கள் சமுதாய வடிவங்களையும் நிறுவனங்களையும் என்றென்றகுமேயானதாகவே, உடைமை நிலை மாற்றப்பட்ட மனித இன வரலாறுகளாகவே, அவர்களுடைய விஞ்ஞான விசாரணை வழியானது சமுதாய இயற்கை நிலைக்காட்சிக்கே இன்னும் அதிகமான திண்மையான வரலாற்று பூர்வமான அணுகு முறையை அனுசரிப் பதற்கு இட்டுச் சென்றது. உடைமை நிலைமாற்றத்தின் மிக அதிகமான அளவிலான அருவமான வகைப் பிரிவு, உண்மை நிலையில் இன்னும் முக்கியமான மிகவும் மதிப்பு மிக்கதாக இன்னும் தொடர்ந்து இருக்கும். அதே சமயத்தில், விஞ்ஞான விதிமுறைகளின் கண்ணோட்டத்திலிருந்து அது தள்ளிச்சொத்துடைமையை விமர்ஸனம் செய்தார். அதனான் அவையுடைய குறிப்பு பூர்ஷுவா புரட்சி நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் உறவுகளை உடைத்தெறிந்தது. அது பிரதானமாக பூர்ஷுவா வர்க்கத்தின் நலவுரிமைக்காகவே செய்யப்பட்டது. இருப்பினும் இதனால் மனித குலம் முழுவதற்கும் முற்போக்கான பலன் விளைவுகளை உண்டாக்கியது. ஆனால் அங்கு பூர்ஷுவா வர்க்கத்தின் நலவுரிமைகள் மற்றும் கீழ் மட்ட வர்க்கங்களின் நலவுரிமைகளுக்குள்ளே ஒருமைத்தன்மை தற்காலிகமானதும் குறைவான வரையறை கொண்டதாகவம் இருந்திருக்கின்றனர்.

மொத்தத்தில் புனித குடும்பம், பாட்டாளிவர்க்க சித்தாந்தத்தின் தத்துவார்த்த அடித்தளத்தை அமைத்துக் கொள்வதற்கும் வழியிலும், மார்க்ஸையும் ஏங்கல்ஸையும் அவர்களுடைய முன்னோடிகளிடமிருந்தும் சித்தாந்த எதிரிகளிடமிருந்தும் தெளிவாக மாறுபடுத்திக் காட்டும் வேறுபாடுகளை வரையறுத்து வகைப்படுத்தும் வழியிலும் ஒரு மைல்கல்லாகும். பொருளாதாரம் மற்றும் தத்துவ ஞான கையெழுத்துப் பிரதிகளால் திறக்கப்பட்டபடி நிலையில் ஒரு முன்னேற்றத்தை இது குறித்தது.

புனித குடும்பம் பற்றி ஜெர்மன் பத்திரிகைகளில் ஒரு நல்ல உயிர்த்துடிப்புள்ள பதிவரைக்கள் கிடைத்தன. 1845 மார்ச் 21 ஆம் தேதி பூர்ஷுவா பத்திரிகையான கோல்நிஷி ஜீட்டுங் இந்தப் புத்தகம் சோஷலிஸக் கருத்தோட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது என்பதையும் "நிகழ்கால சமுதாய வியாதிகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட எந்த அரைகுறை நடவடிக்கைகளின் போதாக் குறைக்களைப் பற்றி" அது விமர்ஸனம் செய்தது என்பதையும் ஒப்புக் கொண்டது. தீவிரவாதப் பத்திரிகையான மான் ஹீமர் அபெண்ட் ஜீட்டுங் 1845 மார்ச் 25 ஆம் தேதி ஒரு விமர்ஸனம் அச்சிட்டது. மார்க்ஸும் ஏங்கல்ஸும் அண்மையில் எழுதிய எந்த நூலைக் காட்டிலும் புனித குடும்பம் மிக அதிகமான ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டதாகவும் இருந்தது என்று அந்த விமர்சனம் கூறியது. எதிர்விடையாக பிற்போக்குப் பத்திரிகையான ரெயினிஷ்செர் பியோபாக்டர் என்னும் பத்திரிகையோ தனது 1845 ஏப்ரல் 28 ஆம் தேதி இதழில் புத்தகத்தின் சாராம்சத்தை அநேகமாக மிகவும் துல்லியமான முறையில் கிரகித்துக் கொண்டிருந்தது. தனிச்சொத்துரிமையைப் பற்றி புத்தகத்தின் விமர்சனத்தைக் கடுமையாகத் தாக்கியது. புத்தகத்தின் "புலனுணர்வு மற்றும் பௌதீகப் பொருள் ஆகியவற்றிற்கு அளித்துள்ள பெருமதிப்பு" இதர எல்லாமான சீவாதங்களையும் தத்துவ ஞானங்களையும் கேலி செய்து சிறுமைப்படுத்தியுள்ளதையும்", கிறிஸ்தவத் தன்மையும் ஜெர்மன் குணமும் உள்ள எல்லாவற்றையும் ஏளனம் செய்துள்ளதையும் கடுமையாகத் தாக்கியது. அல்ஜீமீன் ஜீட்டுங் என்னும் ஜெர்மனியின் பிரதான கன்சர்வேட்டிவ் (பழமைவாத) பத்திரிகை இன்னும் அதிகமான ஆத்திரத்துடன் கோபப்பட்டுப் பேசியது: 1845 ஏப்ரல் 8 ஆம் தேதி அது எழுதியது: "அப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியும் கலகத்தைக் கிளப்புகிறது.... அரசாங்கத்திற்கெதிராக, மாதாகோவிலுக்கு எதிராக, மற்றும் குடும்பம், சட்டம், மதம், சொத்து ஆகியவைகளுக்கு எதிராகக் கலகத்தைக் கிளப்புகிறது... சுருக்கமாகக் கூறவேண்டுமானால் அதில் ஆகத் தீவிரமான, ஆக நேர்மையுள்ள கம்யூனிஸம் அடங்கியுள்ளதற்குத் தெளிவான ஆதாரம் உள்ளது. இது மிகவும் அதிகமான ஆபத்தானது. காரணம் திரு. மார்க்ஸ் அவர்களுக்கு மிகவும் விரிவான ஞானம் இருப்பதையோ அல்லது "இரும்பு தர்க்கவாதம்" என்று பொதுவாக அழைக்கப்படும் ஹெகலின் தர்க்கவாதம் என்னும் வாக்குவாத ஆயுதச்சாலையைப் பயன்படுத்தியுள்ள அவருடைய ஆற்றலையும் அவர்கள் மறுக்கவில்லை.

புரூனோபாயர் ஒரு கட்டுரையின் மூலம் தனது கருத்தைப் பிரதிபலித்தார். அது பாசாங்கு நிறைந்ததாகவும் பலவீனமானதாகவும் இருந்தது. அவருடைய கருத்துக்களைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமலும், தவறாக எடுத்துக் கூறவும் பட்டுள்ளது என்றும் புகார் செய்தார். மார்க்ஸும் ஏங்கல்ஸும் இந்த எதிர் விமர்சனத்திற்கு மறுப்பு தெரிவித்து ஒரு சிறு பத்திரிகையில் 1846 ஜனவரியில் அச்சாகி ஷாப்ட் ஸ்பீகல் என்னும் பத்திரிகையில் வெளிவந்தது). அந்தக் கட்டுரை கீழ்க்கண்ட வார்த்தைகளுடன் முடிவுற்றது: "உண்மை விவரங்களைப் பற்றி ஏடாகோடமான ஏமாற்று வித்தைகளை செய்வதன்மூலம் மிகவும் பரிதாபகரமான முறையில் திரித்துக் கூறுவதன்மூலம் புரூனோபாயர், அவர் மீது புனித குடும்பத்தில் ஏங்கல்ஸும் மார்க்ஸும் கூறியுள்ள மரண தண்டனைத் தீர்ப்பை கடைசி முறையிட்டிலும் ஊர்ஜிதம் செய்கிறார் என்பதைத் தவிர வேறில்லை."

பாரிஸிலிருந்து வெளியேற்றப்பட்டார்

வோர் வார்ட்ஸ் மீது உலவிய மேகங்கள் 1844 இலை உதிர் காலத்தில் இருண்டன. அதில் வெளியிடப்படும் புரட்சிகர ஜனநாயகக் கொள்கை வழி உடனடியான அவசர அவசியமான சமுதாயப் பிரச்சனைகளை அது கிளப்பும் விவாதம், குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தின் நிலைமைகள் பற்றி அது கொண்டு வரும் விவாதங்கள், ஹீன் அவர்களுடைய தலைசிறந்த கிண்டல் நிறைந்த கவிதைகளைப் பிரசுரம் செய்தது ஆகியவைகளினால் பத்திரிகை ஜனநாயக உள்ளம் படைத்த வாசகர்களிடம் மிகவும் பிரபலமடைந்து வந்தது. அதற்கு 800 சந்தாதாரர்கள் இருந்தார்கள். அது அந்தக் காலத்தில் குடியேறியுள்ள வெளிநாட்டுக்காரர் பத்திரிகைக்கு மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.

அதை பிற்போக்குப் பத்திரிகைகள் முழு மூச்சுடன் தாக்கின. பாரிஸிலிருந்து வெளியாகும் லி குளோப் கீழ்க்கண்டவாறு எழுதியது: "இந்தப் பத்திரிகை, முதல் புரட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட பிரெஞ்சுப் பீடீரசுரத்தைக் காட்டிலும் மோசமானது." 1844 செப்டம்பர் 19 ஆம் தேதி எல்பர் பெல்டர் ஜீட்டுங் என்னும் பத்திரிகை கூக்குரலிட்டது: "ஜெர்மன் ராஜ்யங்களின் சர்க்கார்கள், பிரெஞ்சு சர்க்கார் ஆகியவை இந்தப் பத்திரிகை இருப்பதை சகித்துக் கொண்டிருக்குமா?" என்று எழுதிவிட்டு இந்த "ஆபத்தான பத்திரிகை" மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரி வந்தது. எனினும் வோர் வார்ட்ஸ் மீது பிரெஞ்சு ஆட்சியாளர்களும், பிரஷ்யன் ஆட்சியாளர்களும் ஒரு சகிப்பு மனப்பான்மை கொள்வார்கள் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஏன் என்றால் அதனுடைய குற்றம் சுமத்தும் குரலைக் கண்டு மிகவும் மோசமாக எரிச்சல் அடைந்திருந்தார்கள்.

1844 ஜூலை ஆரம்பத்திலேயே பாரிஸில் இருந்த பிரஷ்யன் தூதர் இந்தப் பத்திரிகை "அரசக் கொலையைத் தூண்டிக் கொண்டிருக்கிறது" (நான்காம் பிரிட்ச்-வில்ஹெல்ம் மன்னரைக் கொலை செய்வதற்கு நகரச் சட்ட முதல்வர் ஸ்ஸெக் என்பவர் செய்த முயற்சியைப் பற்றி இப் பத்திரிகையில் மதிப்புரை எழுதியது குறித்துக் குறிப்பிட்டு) என்று காரணம் காட்டி பத்திரிகையை மூடிவிடும்படி பிரெஞ்சு சர்க்காரை இணங்க வைக்க முயற்சி செய்தது. அந்தம்மில்லாத மடத்தனமான குற்றச்சாட்டாக அது இருந்ததால் பிரெஞ்சு சர்க்கார் அதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் வேலையில் துணிந்து இறங்க வில்லை. ஆனால் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் பெர்னேஸை சட்டபூர்வமான டிப்பாஸிட் (பிணையப் பணம்) கட்டுவதில் தவறிவிட்டார்கள் என்று காரணம் காட்டி கைது செய்து சிறையில் வைத்துவிட்டது. பின்னர் ஆசிரியர்குழு கூடி பத்திரிகையை மாத இதழ் ஆக்குவது என்று முடிவு செய்தார்கள். மாத இதழுக்கு டிப்பாஸிட் (பிணையப் பணம்) தேவையில்லை. பிரெஞ்சு ஆட்சியாளர்கள் பின்னர் இப்பத்திரிகையின் எழுத்தாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறு வெளியேற்றப் பட்டவர்களில் மார்க்ஸ், ஹீன், பர்கர்ஸ், பகுனின் முதலியோருமாவர். பிரஷ்ய சர்க்காரின் நிர்ப்பந்தத்தின் காரணமாய் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையைக் கண்டு பிரான்ஸிலும், ஜெர்மனியிலும் ஜனநாயக வட்டாரங்களில் பெருத்த கண்டன அலை கிளம்பியது. 1845 பிப்ரவரி 4 ஆம் தேதி ரிபார்ம் என்னும் ஒரு குட்டி பூர்ஷ்வா ஜனநாயக, மற்றும் சோஷலிஸ்ட் செய்தித்தாள் பிரெஞ்சு சர்க்காரின் கொடுங்கோன்மையான செயலைக் கண்டித்து எழுதி மற்ற பத்திரிகைகளையும் இதைக் கண்டிக்கும்படி வேண்டிக் கொண்டது. பிரட்டெர்னிட்டி டி 1845 என்னும் சஞ்சிகையின் மார்ச் இதழ் பிரஷ்ய மன்னனின் சூழ்ச்சியை பாரிஸிலிருந்து "ஜெர்மன் எழுத்தாளர்களை" வெளியேற்றுவதற்கு, அந்த எழுத்தாளர்களில் "கம்யூனிஸ்ட் தத்துவஞானி" டிரியரைச் சேர்ந்த ஹெர் காரல் மார்க்ஸ், அவர்களை வெளியேற்றுவதற்கு பிரஷ்ய மன்னன் செய்த சூழ்ச்சியை அம்பலப்படுத்தியது. இந்த சஞ்சிகை பாபவிஸ்டு தொழிலாளர்களால் வெளியிடப்பட்டு வந்தது. தீவிரவாதப் பத்திரிகையான டிரியர்ஷ்சி ஜீட்டுங் பிரெஞ்சு சர்க்காரின் நாடு கடத்தல் உத்தரவை பத்திரிகையில் பிரசுரம் செய்து வேற்று நாட்டார் மீது இத்தகைய கடுமையான நடவடிக்கை போன்றதை டைரக்டரி அதிகாரத்திற்கு வந்த பின்னர் இதுவரை எப்போதும் எடுத்ததில்லை என்று வலியுறுத்திக் கூறியது. (டைரக்டரி என்பது முதல் பிரெஞ்சுக் குடியரசில் செயலாண்மை அதிகாரம் பெற்றிருந்த ஐவர் குழுவாகும் - மொழிபெயர்ப்பாளர்.) பொதுஜனக் கிளர்ச்சியின் நிர்ப்பந்தத்தின் காரணமாய் பிரெஞ்சு சர்க்கார் நிர்ப்பந்திக்கப்பட்டு சில சலுகைகளை வழங்கியது. குறிப்பாக ஹீன் மீதிருந்த வெளியேற்ற உத்தரவை நீக்கியது. ஆயினும் மார்க்ஸ் மீதிருந்த தடை உத்தரவைத் தளர்த்தவில்லை.

1845 பிப்ரவரி 3 ஆம் தேதி மார்க்ஸ் பாரிஸை விட்டு பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்றார். அவர் சென்ற சில நாட்களில் அவருடைய மனைவியும் கைக்குழந்தையுடன் அவரிடம் வந்து சேர்ந்தார். ஜென்னி பிரஸ்ஸல்ஸ் போவதற்கு பிரயாணச் செலவுக்காக கால அவகாசமில்லாத நிலையில் மிகவும் சொற்பமான தொகைக்கு அவர்களுடைய தட்டுமுட்டுச் சாமான்களை விற்க வேண்டியதாயிற்று.

மார்க்ஸ் பாரிஸில் வாழ்ந்த காலத்தின் கடைசி நாட்கள் அது. அவர் ஒரு புதிய கண்ணோட்டத்திற்காகத் தடவித் தேடிக் கொண்டிருந்த காலத்தில் அங்கு சென்றார். அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில் அவர் எல்லாக் காலத்திற்குமாக நிரந்தரமாய் பொருள் முதல்வாதத்தையும் கம்யூனிஸத்தையும் முழுமையாகக் கட்டிச் சேர்த்து தழுவிக் கொண்டார். அவருக்கு முன்பாக ஒரு மிகத் தெளிவான லட்சியத்தோடு அவர் பாரிஸை விட்டுச் சென்றார். புதிய புரட்சிகரமான கொள்கைக் கோட்பாட்டை மேலும் செழுமைப்படுத்தி விரிவாக விளக்க வேண்டியதிருந்தது. அதைப் பரப்ப வேண்டிய வேலையும் அதைப் பாட்டாளிகளையும், ஜனநாயக வாதிகளையும் ஒப்புக் கொள்ளச் செய்ய வைக்க வேண்டிய வேலையும் இருந்தது.

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு பக்கம்  147- 165 வரை.


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்