முதலாளித்துவ வர்க்கத்தாரும், அமைதிவாதிகளும், ஜெனரல்களும், குட்டி முதலாளித்துவ பகுதியோரும், முதலாளிகளும், அற்பவாத சிறு மதியினரும், பக்தி ஆர்வம் கொண்ட கிறிஸ்தவர்களும், இரண்டாவது, இரண்டரையாவது அகிலங்களின் சூரர்களும் இந்தப் புரட்சியின் மீது தமது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துக் கொள்ளட்டும். அடிமையுடமையாளர்களுக்கு இடையிலான யுத்தத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலுமான ஆண்டுகளில் முதன் முதலாய் அடிமைகள், "அடிமையுடையாளர்கள் தமது கொள்ளையைப் பாகப்பிரிவினை செய்துகொள்வதற்காக நடத்தும் இந்த யுத்தத்தை எல்லா தேசங்களையும் சேர்ந்த அடிமையுடமையாளர்களை எதிர்த்து எல்லா தேசங்களையும் சேர்ந்த அடிமைகளும் நடத்தும் யுத்தமாய் மாற்றுக" என்னும் கோஷத்தைப் பகிரங்கமாகவே பறைசாற்றிப் பதிலளித்தனர் என்ற உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்மையை எவ்வளவுதான் வசையையும் அவதூறுகளையும் பொய்களையும் பொழிந்த போதிலும் அவர்களால் மறைத்துவிட முடியாது.
முதலாவது உலக யுத்தம் நடந்தபோது அகிலமானது உலக யுத்தத்துக்கு எதிராகப் போராடவேண்டும் என்று சர்வதேச உழைக்கும் மக்களை அறைகூவி அழைத்தது. உலக யுத்தத்தை முதலாளிகள் துவங்கிவிட்டால் ஒவ்வொரு நாட்டிலுள்ள உழைக்கும் மக்கள் உலக யுத்தத்தில் ஈடுபடும் சொந்த நாட்டு முதலாளிவர்க்கத்தின் அரசை எதிர்த்த யுத்தமாக அதனை மாற்றி சொந்த நாட்டு முதலாளிவர்க்க அரசை வீழ்த்தவேண்டும் என்று சர்வதேச கம்யூனிஸ்டுகள் முழங்கினார்கள். வரலாற்றில் இதற்கு முன்பு சமூகத்தில் அடிமைகளாக இருந்தவர்களின் தெளிவில்லாத நிலை மாற்றப்பட்டு, ஒரு தெளிவான வேலைத்திட்டத்தை சர்வதேச கம்யூனிஸ்டுகள் வகுத்துக்கொடுத்தார்கள். அதன் பயனாக ரஷ்யாவில் போல்ஷ்விக் தலைமையில் புரட்சி நடத்தி வெற்றி கண்டார்கள். இந்த சரியான கொள்கையின் அடிப்படையிலேயே சர்வதேச அளவில் உழைக்கும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் கம்யூனிஸ்டுகள் வெற்றி கண்டார்கள். தற்போது காஸாவில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், அதன் அடியாளான இஸ்ரேலும் கொடூரமான போர் நடத்தி மக்களை படுகொலை செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்த கொடுமையை எதிர்த்து பல்வேறு நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களும், ஜனநாயகவாதிகளும் தன்னியல்பாகப் போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் முதல் உலக யுத்த காலத்தில் சர்வதேச கம்யூனிஸ்டுகள் நடத்தியது போல் சொந்த நாடு அதாவது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாட்டின் அரசை எதிர்த்தப் போராட்டங்களையும் இந்த கொடுமைகளை ஆதரிக்கும் நாடுகளின் அரசை எதிர்த்த போராட்டங்களை எந்த நாட்டு கம்யூனிஸ்டுகளும் நடத்தவில்லையே ஏன்? இவர்கள் எல்லாம் அன்றைய காவுத்ஸ்கிவாதிகளைப் போலவே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆகவே உலகில் எங்கெல்லாம் லெனினை பின்பற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உருவாகி மக்கள் திரட்டப்படுகிறார்களோ அங்கெல்லாம் சர்வதே சுரண்டலாளர்களான ஏகாதிபத்திய முதலாளிகளையும் அவர்களுக்கு துணைபோகும் ஏகாதிபத்திய தாசர்களையும் எதிர்த்த போராட்டங்கள் போர்க்குணத்தோடு நடைபெறும். ஆகவே நமக்குத்தேவை லெனினைப் பின்பற்றும் புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியாகும். லெனினை மறுக்கும் அல்லது எதிர்க்கும் காவுத்ஸ்கி போன்ற துரோகிகளைப் பின்பற்றும் திருத்தல்வாதிகள் நமக்குத் தேவையில்லை.
முதல் உலக யுத்த காலத்தில் சர்வதேச உழைக்கும் மக்களுக்கு குறிப்பாக ரஷ்ய பாட்டாளி வர்க்கத்துக்கும், ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கும் கிடைத்த வெற்றியை முதலாவது வெற்றி என்று லெனின் குறிப்பிட்டார். இறுதி வெற்றியடைய மேலும் நாம் அதிகமாகப் பாடுபடவேண்டும் என்றார் லெனின். இந்த முதலாவது வெற்றியை அடைவதற்கு உழைக்கும் மக்கள் பல இன்னல்களின் ஊடே பல துண்பங்களை எதிர்கொண்டே இந்த வெற்றியை சாதித்தார்கள் என்று போராடிய மக்களை லெனின் போற்றிப் புகழ்ந்தார். ஆனால் இங்குள்ள தலைவர்கள் ஒரு சாதாண வெற்றிக்கும் இந்த தலைவர்கள்தான் காரணம் என்று சொல்லி தற்புகழ்ச்சியில் ஈடுபட்டு தன்னை பிரபலப்படுத்திக்கொள்வவதைப் பார்க்கிறோம். லெனின் காலத்தில் பல வெற்றிகள் கிடைத்தாலும் லெனினும் அவரது கட்சியும் பல தவறுகள் செய்ததாக லெனின் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தார். ஒரு பின்தங்கி நாட்டில் இத்தகைய தவறுகளும் பின்னடைவுகளும் ஏற்படுவது இயல்பானதே என்றார் லெனின். லெனின் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதற்கு அஞ்ஞவில்லை என்றார் லெனின். அதாவது கம்யூனிஸ்டுகள் செய்யும் தவறுகளை மக்களிடம் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவேண்டும் என்றார் லெனின். ஆனால் இங்கேயுள்ள தலைவர்கள் அதிகமாக தவறுகள்தான் செய்துகொண்டு இருக்கிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளை ஒத்துக்கொள்வதே இல்லை, மாறாக தொடர்ந்து மூடிமறைக்கிறார்கள் மேலும் தனது தவறை மறைக்க பிறர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். இவர்கள் போராடுவதற்கு தயாரில்லாத உண்மையை மறைத்துவிட்டு மக்கள் போராடத்தயாரில்லை என்று மக்களின் மீதே குற்றம் சாட்டுகிறார்கள். அன்றைய லெனினிஸ்டுகள் தங்களது குற்றங்களை ஒத்துக்கொண்டதோடு அவர்களது குறைகளை சரிசெய்வதற்கு விருப்பு வெறுப்பின்றி பரிசீலனை செய்து குறைகளை களைந்தார்கள். அதன் பயனாகவே அவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மக்களைத் திரட்டி வெற்றிகொள்ள முடிந்தது. ஆனால் இங்குள்ள கம்யூனிஸ்டுகள் செய்யும் தவறுகளை புரிந்துகொள்வதும் இல்லை, பிறர் குறைகளை சுட்டிக்காட்டினாலும் அதனை பரிசீலிப்பதில்லை மாறாக குறைகளை சுட்டிக் காட்டுபவர்கள் மீது அவதூறு செய்வது, குறைகளை களைவதற்கு எவ்விதமான முயற்சியும் எடுக்காமல் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே லெனினை பின்பற்றி ஒரு புரட்சிகரமான கட்சியை கட்டுவதற்கு தடையாக உள்ள நமது குறைகளை வெளிப்படையாக மக்கள் முன்வைத்து சுயவிமர்சனம் செய்துகொண்டு நமது குறைகளை களைந்திடுவோம். எப்போதும் நாம் தவறு செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் முக்கியமாக உணர்ந்துகொண்டு நாம் தவறு செய்தால் அதனை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு தவறுகளை களைய வேண்டும் எனற உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.
No comments:
Post a Comment