தத்துவமும் நடைமுறையும் - நாம் என்ன தத்துவத்தை நடைமுறை படுத்திக் கொண்டுள்ளோம்?

 தத்துவமும் நடைமுறையும் இணைந்ததே மார்க்சியம்

பிற தத்துவங்களிருந்து மார்க்சியத்தை அடிப்படையில் வேறுபடுத்துவது – மார்க்சியத்தில் தத்துவமும் நடைமுறையும் பின்னிப் பிணைந்தவை என்பதாகும். ஃபாயர்பாக் என்ற ஜெர்மானிய மெய்யியலாளர் தொடர்பான தனது கருத்துருக்களில் மார்க்ஸ் முன்வைத்த ஒரு மிக முக்கியமான கருத்துரு, “இதுவரை மெய்யியலாளர்கள் உலகை வியாக்கியானம் செய்வதில் தான் முனைந்தனர். ஆனால், விஷயம் என்னவெனில், உலகை மாற்றவேண்டும் என்பது தான்” என்பதாகும். இந்த அடிப்படையில் தனது தத்துவ நிலைபாட்டில் இருந்து சமூகத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் களம் இறங்கி செயல்படுவதும், அச்செயல்பாட்டின் வாயிலாக படிப்பினைகளைப் பெறுவதும், பெற்ற படிப்பினைகளை மார்க்சிய தத்துவத்தை வலுப்படுத்தவும் செழுமைப் படுத்தவும் பயன்படுத்துவதும் மார்க்சிய அணுகுமுறையின் இன்றியமையாத அம்சங்கள் ஆகும். நடைமுறைக்கு வழிகாட்டியாக தத்துவம் இருப்பதும், நடைமுறை மூலம் தத்துவம் மேன்மேலும் செழுமை அடைவதும் இணைந்தது தான் மார்க்சியமாகும்.

ரசியாவில் மார்க்சிய தத்துவத்தை நடைமுறை படுத்தியவர் லெனின். மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் போல்ஷ்விக் கட்சியை கட்டி மார்க்சிய தத்துவத்தினை நடைமுறையாக்கி புரட்சியை சாதித்தார் லெனின்.

சீனாவில் மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் வழிகாட்டிய தத்துவத்தின் அடிப்படையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறையில்தான் நாட்டின் புரட்சியின் ஊடாக செஞ்சீனமாக்கினார் மாவோ.

ஆக அங்கே மார்க்சிய தத்துவத்தை நடைமுறையில் அவர்கள் புரட்சியை சாதித்தனர். ஆனால் இங்கு மார்க்சிய லெனினிய தத்துவத்தை நடைமுறையில் இருக்கிறதா? ஆளும் வர்க்க செயலுக்கு வால் பிடிக்கும் நோக்கம் என்ன?

இங்கே தத்துவம் இல்லாத எந்த நடைமுறையும் இல்லை அப்படியெனும் பொழுது பல போக்கில் ஏன் உள்ளனர் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அப்படியெனும் பொழுது இங்கு நடைமுறையில் உள்ள தத்துவங்களும் இங்குள்ள கருத்துகளும் ஆளும் வர்க்கத்து தத்துவங்களே அது மக்களுக்கான விடுதலைக்கானவை அல்ல. மேலும் இவை இங்குள்ள அமைப்பு முறையை கட்டி காப்பதற்கான வழிமுறையே...

லெனின் தனது நாட்டில் புரட்சிகர கம்யூனிஸ்ட்கட்சி உருவாக்கும் பொழுது இருந்த பல தடைகளான மார்க்சிய விரோதமான போக்குகளை அம்பலப்படுத்தி அவைகளை அப்புறப்படுத்தினார். மார்க்சிய தத்துவத்தை நடைமுறையாக்கும் கட்சி கட்டினர்....

தத்துவமும், நடைமுறையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படக் கூடாதவை. நடைமுறையில் பிரயோகிப்பதற்காகவே நாம் தத்துவத்தைப் படிக்கின்றோம். மாவோ சொன்னது போல, “மார்க்சிய-லெனினியம் என்பது அம்பு போன்றது. ஆனால், அது ஒவ்வொரு நாட்டினதும் ஸ்தூலமான புரட்சிகர நடைமுறை என்ற இலக்கை நோக்கி எய்யப்பட வேண்டும். நாம் இலக்கின்றிச் சும்மா எய்தால், அம்பு சும்மா பறக்குமேயன்றி இலக்கை அடையாது. அதே வேளையில், அம்பு இல்லாமல், இலக்கையும் தாக்க முடியாது”. ஆகவே, தத்துவத்தையும் நடைமுறையையும் இயந்திரம் போல பிரித்து வைக்கக் கூடாது.

லெனின் ஒரு தத்துவ நிபுணர் மாத்திரமல்ல. அவர் ஒரு செயல் வீரரும் கூட, மார்க்சியக் களஞ்சியத்துக்கு அவர் வழங்கிய மிகப் பெரும் சாதனைகளில் ஒன்று யாதெனில் புதியரகக் கட்சி யொன்றை அமைப்பது பற்றிய அவருடைய தத்துவமாகும். இதன் அடிப்படையில் அவர் உருவாக்கிய போல்ஷ்விக் கட்சி, அக்டோபர் புரட்சியை நடத்தும் ஆயுதமாகச் சேவை செய்தது, இது உருக்குப் போன்ற கட்டுப்பாடுடைய, புரட்சிகர மார்க்சிய உண்மைகளால் ஆயுதபாணியாகிய, சந்தர்ப்பவாதத்திலிருந்து விடுதலை பெற்ற, ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகளால் வழி நடத்தப்படுகின்ற, சுயவிமர்சனத்தை ஆயுதமாகக் கொண்ட பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை உடைய ஒரு புரட்சிகரக் கட்சியாகும்.

முதலாளித்துவ சமுத்திரத்தால் சூழப்பட்ட ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி, பாதுகாப்பது சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார். இருந்தும் முன்நிகழ்ச்சி ஒன்றும் இல்லாத முதல் முயற்சியின் போக்கில் எழுந்த பல பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர் போதிய காலம் வாழவில்லை. இருந்தும், அவர் மார்ச்சியத்தை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தி விட்டார். அது முதல், மார்க்சியம் என்பது மார்க்சிய-லெனினியம் என அழைக்கப்படுகிறது.

உலகின் முதல் சோசலிசக் குடியரசை அமைத்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன, இருந்தும் நாம் லெனினிடம் கற்க நிறையவே உள்ளது. லெனின் வழிகாட்டுதலில் சரியான அடிப்படை மார்க்சிய புரிதலுக்கு வந்தடைய வேண்டும் என்பதே நமது இலக்கு.

ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிந்ததோடு முதலாளித்துவ சுரண்டலையும் துடைத் தெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவினார் தோழர் லெனின் இதன் மூலம் உலகிற்கு கலங்கரை விளக்காக வழிகாட்டினார்.

மார்க்சிய சித்தாந்தத்தை ரஷ்ய நிலைமைகளுக்கு ஏற்றவாறு பருண்மையாகப் பிரயோகித்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாது, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இயங்கியல் பூர்வமாக அன்றைய நிலைமைகளை யொட்டி வரையறுத்தவர் தோழர் லெனின்.

1905, ஜூன் - ஜூலை மாதங்களில் “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயக வாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்” என்ற அறிக்கையை லெனின் எழுதினார். இதில் அவர் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் கொள்கையைக் கடைப் பிடித்த மென்ஷெவிக்குகளின் செயல் தந்திரத்துக்கு எதிராக, எதேச்சாதிகாரத்தை எதிர்த்துத் திட்டமான, விட்டுக் கொடுக்காத போராட்டத்தை நடத்து மாறும், அவசிய மேற்பட்டால் ஆயுத மேந்தியும் போரிடுமாறும், அறைகூவி அழைத்த போல்ஷ்விக்குகளின் செயல் தந்திரத்தை முன் வைத்தார்.

“மனிதகுலத்தின் அறிவு அனைத்தையும் பெற வேண்டும். இவ்வாறு பெறும்போது பொதுவுடைமை முறையை ஏதோ குருட்டுப் பாடமெனக் கற்கக் கூடாது; மாறாக அது நீங்களாகவே யோசித்த ஒன்றாக இருக்க வேண்டும்; நிகழ்காலக் கல்வியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது தவிர்க்க முடியாதபடி பெறப்பட்ட முடிவுகளை உட்கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும். இத்தகைய திறமையைப் பெறுவது அவசியம்” என்று லெனின் கூறினார்.

மார்க்ஸ் எழுதியவற்றை மட்டும் லெனின் படிக்கவில்லை. முதலாளித்துவ முகாமிலுள்ள அவரது எதிரிகள் மார்க்ஸைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் எழுதியவற்றையும் படித்தார். அவர்களுடன் ஏற்பட்ட தர்க்கத்தில் மார்க்சியத்தின் அடிப்படைகளை விளக்குகிறார்.

ஆக நாம் நமது நாட்டின் நிலைமையோடு மார்க்சியத்தை பொறுத்தி புரிந்துக் கொள்ள வேண்டும்.

‘புரட்சிகரத் தத்துவம் இல்லாவிட்டால், புரட்சிகர இயக்கம் என்பது இருக்க முடியாது’ என்று லெனின் அவர்கள் நமக்குப் போதித்துள்ளார்.

லெனின் அவர்கள் உலகின் முதலாவது தொழிலாளர் வர்க்கப் புரட்சியை வெற்றி கரமாக வழி நடத்தி, உலகின் முதலாவது சோசலிச அரசை நிறுவினார். அது அடக்கி ஒடுக்கப்பட்ட உலக மக்கள் அனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது. இப்படிச் செய்ததன் மூலம் லெனின் தத்துவத்தை நடைமுறையாக்கினர்; கனவை நனவாக்கினர் எனலாம்.

தத்துவம் என்பது வரட்டு வேதாந்தம் அல்ல. அது செயலுக்கு ஒரு வழிகாட்டி, "இது வரையில் தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் மாத்திரம் செய்துள்ளனர். நமது கடமை அதை மாற்றுவதாகும்" என்று மார்க்ஸ் அவர்கள் கூறினார்.

ஒருபுறம் சொத்துடைய கூட்டம் இன்னொறுபுறம் வாழ்வா சாவா தினம் தினம் வாழ்க்கை வாழ போராடிக் கொண்டிருக்கும் கூட்டம். இவை ஏன்? இதனை மாற்ற முடியாதா? மாற்றுவதற்கான வழிவகை என்ன? இதனை பற்றி நமது ஆசான்கள் கூறியுள்ள தத்துவதிற்கும் நடைமுறைக்கு மான தொடர்பும் மற்றும் இங்கு கடைப்பிடிக்கப் படும் நடைமுறையில் உள்ள கோளாறு களையும் முடிந்தவரை விமர்சன ரீதியாக முன் வைத்துள்ளோம்.

இன்று நாம் புரட்சிக்கு ஏங்குகிறோம் புரட்சிகான கட்சிகள் எவையும் திடமாக (பலமாக) இல்லாததை காண்கிறோம். அதனை களைந்தெறிய நமது ஆசான்கள் கூறியவற்றை சற்று பார்ப்போம்.

லெனின் அவர்கள் தமது காலத் திரிபுவாதிபதினெட்டாம் நூற்றாண்டில் ஃபிரான்சில் நடந்ததைப் போன்றே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனியிலும் ஒரு தத்துவப் புரட்சி அரசியல் வீழ்ச்சிக்கு வித்திட்டது. ஆனாலும் இந்த இரண்டுக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு! ஃபிரஞ்சுத் தத்துவவாதிகள் அதிகார பூர்வமான அனைத்து விஞ்ஞானத்தையும், கிறிஸ்துவத் திருச்சபையையும், பலநேரங்களில் அரசையும்கூட வெளிப்படையாய் எதிர்த்துப் போரிட்டனர். பாஸ்டிலில் (Bastille) அவர்கள் சிறைபிடிக்கப்படும் ஆபத்து எப்போதும் நிலவிவந்தபோது, அவர்களது எழுத்துகள் நாட்டுக்கு வெளியே ஹாலந்து அல்லது இங்கிலாந்தில் அச்சிடப்பட்டன. மறுபுறம் ஜெர்மானியத் தத்துவவாதிகளோ பேராசிரியர்களாவும், இளைஞர்களுக் கான, அரசால் நியமிக்கப்பட்ட போதனையாளர்களாகவும் இருந்தனர். அவர்களது நூல்கள் அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களாக இருந்தன.(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்).

தத்துவம் பற்றி பல்வேறு விதமான கருத்துகளும் பல்வேறு விதமான எழுத்துகளும் உள்ளது ஆனால் இதுவரை உள்ள எல்லா தத்துவங்களும் உள்ள சமூக அமைப்பை விமர்சிக்க செய்வதற்கு மட்டுமே பயன்பட்டது அதிலிருந்து வேறுபட்டது தான் மார்க்சியம், அவை சொல்வது உள்ள பிரச்சினைக்கு காரணமான இந்த சமூக அமைப்பை மாற்றி அமைத்தால் தான் இதற்கு தீர்வு என்றது.

தத்துவமும் நடைமுறையும் என்ற இடத்தில் தத்துவத்தை நடைமுறையோடு உரசி பார்க்க வேண்டும் என்பதே நமது மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல்.

இங்கே தத்துவம் இல்லாத எந்த நடைமுறையும் இல்லை அப்படியெனும் பொழுது பல போக்கில் ஏன் உள்ளனர் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

அப்படியெனும் பொழுது இங்கு நடைமுறையில் உள்ள தத்துவங்களும் இங்குள்ள கருத்துகளும் ஆளும்வர்க்கத்து தத்துவங்களே அது மக்களுக் கான விடுதலைக்கானவை அல்ல. மேலும் இவை இங்குள்ள அமைப்பு முறையை கட்டி காப்பதற்கான வழிமுறையை போதிப்பதோடு சுரண்டப்படும் மக்களை ஒடுக்கவும் அடக்கவும் சில நேரங்களில் சில சலுகைகள் மூலம் மக்கள் கொந்தளிப்பை மட்டுபடுத்தவும் செய்யும் சீர்திருத்தவாத சில சட்டங்கள் என்ற பெயரில் காட்டும் கரிசனம்தான்.

இவை மக்களுக்கு விடுதலை தவிர்த்து மற்ற எல்லாம் ஆன்மீகவாதிகளை போல போதனை தருகிறது. இங்குள்ள அனைத்து அடக்குமுறை களையும் சுரண்டல்முறைகளையும் ஏற்று அவர்கள் இந்த சமூக அமைப்பை மீறாமல் அவர்கள் கொடுக்கும் சன்மானம் பெற்றுக் கொண்டு அடங்கி வாழ போதிக்கிறது. இதனைதான் வர்க்க சமரசத்தை போதிக்கும் நமது தோழர்கள் மேன்மையானது என்கின்றனர் அவைதான் அவர்களின் நடைமுறையாகவும் உள்ளது.

இந்த இடத்தில் மார்க்சியம் இந்த எல்லா ஒடுக்குமுறை சுரண்டல்முறைக்கு காரணமான சமூகத்தை மாற்றி அமைக்க சொல்கிறது. அதற்கு தேவை புரட்சி. புரட்சிக்கு தேவை புரட்சிகான கட்சி; புரட்சிக்கான திட்டமும் அதை நடைமுறைப்படுத்த மார்க்சிய லெனினிய போதனை அளிக்கப்பட்ட கட்சியும் அதன் உறுப்பினர்களும். இங்கு என்னவாக உள்ளது சற்று பார்ப்போம்.

அப்படியென்றால் இங்கு கட்சி இல்லையா என்பீர்?

இருக்கிறது அதன் செயல்பாடுகள் மார்க்சிய வகைபட்ட புரட்சியை நோக்கியதாக செயலில் உள்ளதா என்பதுதான் கேள்வியாக உள்ளது!.

அவர்கள் எந்த தத்துவத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ளார்கள் அப்படி என்னும் பொழுது இதற்கான மூலத்தை அறிய வேண்டும் அல்லவா?

அன்று அன்னிய ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்த போராட்டம் தொடங்கி அன்றைய நிலவுடமை சமூக கொடுமைகளுக்கு ஆங்காங்கே நடந்தேறிய வீரிய மிக்க போராட்டங்கள் ஆட்சி அதிகாரதிற்கான போராட்டமாக இல்லாமல் அந்தந்த பிரச்சினையை எதிர்த்த வீரிய மிக்க போராட்டமாக இருந்தது. அவை அரசையும் மக்களையும் போராட்டத்தின் ஊடே பல படிப்பினை கொடுத்தது. அரசு கற்று தேர்ந்து சில சலுகைகள் சீர்திருத்தங்கள் மூலம் மக்களை ஒட்ட சுரண்ட முயல்கிறது மக்களை ஒன்றுபடுத்தி இந்த சுரண்டலை முடிவு கட்ட வேண்டியவர்கள் மக்களை அணி திரட்டிபோதமளிப்பதை கைவிட்டு விட்டு ஆளுக்கொரு வழியில் சாதி பிரச்சினையை சிலரும், தேசிய இனப்பிரச்சினை சிலரும், பெண்ணிய பிரசினையை வேறு சிலரும் இவ்வாறு ஆளுக்கொரு பிரச்சினையை கையில் எடுத்து ஆளுக்கொரு கட்சியாகவும் ஆளுக்கொரு நடைமுறையாகவும் ஆளும் வர்க்க சேவையில் உள்ளனர் ஆன்னால் இவை மார்க்சியம் போதிக்கும் புரட்சிக்கான வழிமுறை அல்ல.

அடுத்து நக்சல்பாரி போராட்டத்தை எடுத்துக் கொள்வோம்.

அன்றைய நிலஉடமை சமூகத்தில் பண்ணையார்களின் மேலாதிக்கம் கூலி விவசாயிகளுக்கு எதிரான கொடூரங்களை எதிர்த்து பண்ணையார்களை அழித்தொழிக்க தொடங்கிய அவர்கள் போராட்டமானது மக்கள் மத்தியில் வீறு கொண்டு எழுந்தது, அவை மக்களை ஒன்றினைக்க செய்தது. இருந்தும் அது குறிப்பிட்ட கட்டத்தில் செயலற்று போனது ஏன் என்ற தேடல் பின்னர் வைக்கிறேன். அப்படியெனும் பொழுது நடைமுறையில் ஏற்பட்ட சாதக பாதங்களை கணக்கில் கொள்ள வேண்டும். ஒடுக்குமுறைக்கு எதிரான வீரமிக்க போர் மார்க்சிய வகைபட்ட புரட்சிக்கு பதில் தத்துவ போதாமையின் காரணமாக அவை எதிரியை நிலைகுலைய செய்வதை விடுத்து தன்னை தானே அழித்துக் கொண்டது. அதற்கான படிப்பினைகள் விரிவாக பின்னர் பார்ப்போம்.

நாம் காணும் நடைமுறைகள் சமூக மாற்றதிற்கானவையா? அல்லது சீர்திருத்தவாத வகையில் உள்ள அமைப்புமுறைகுள்ளே சில சலுகைகள் பெற்று அடிமையாக வாழ்வதா?

இங்கேதான் நமது தத்துவத்தையும் நடைமுறையும் உரசி பார்க்க வேண்டிய இடம். நாம் வாழும் இந்த சமூகத்தில் எப்படியாவது சொத்து சேர்த்து நாமும் சுகபோகமாக வாழ்ந்து விடலாம் என்று எல்லோரும் ஓடிக் கொண்டுதான் உள்ளார்கள். அதுதான் இந்த சமூகத்தின் தத்துவமாக உள்ளது. ஆனால் எல்லோரும் முன்னேறி விடுகிறார்களா? ஏன் இல்லை? என்பதை நீங்களே தேடிக் கொள்ளுங்கள்!ஆக பெரும்பான்மை யான மக்களை ஏமாற்றி சிறுபான்மை யினர் சொத்து சேர்பதற்கு உழைக்கும் மக்களை ஏய்பதற்காக உருவானது தான் இந்த தத்துவம். நாம் வாழும் சமூகத்தின் ஆளும் சுரண்டும் வர்க்கத்தின் தத்துவம். ஏதோ ஒரு வகையில் இதற்குள்ளே சுழன்று சுழன்று அடிமையாக வாழ வைப்பது தான் இந்த தத்துவத்தின் மகிமை.

இங்கு சிலர் கூறுவது போல் நாங்கள் நடைமுறையில் உள்ளோம் என்பவர்கள் எந்த வகையான தத்துவத்தை நடைமுறை படுத்திக் கொண்டுள்ளார்கள் என்பதே கேள்வி?

சாதாரண மக்கள் கூட பேசுகிறார்கள் "சான் ஏறினால் முலம் சறுக்குகிறோம்" என்பர். அவர்கள் வாழ நினைக்கும் வாழ்க்கையை பற்றி சலித்துக் கொள்கிறார்கள். உண்மையிலே அவர்களுடைய நோக்கம் தனி உடைமையை பாதுகாக்கும் அவர்களின் போராட்டம் இன்னும் சொத்து சேர்க்கதானே? அப்படியெனும் பொழுது அவர்களுடைய நோக்கம், இந்த தனி உடைமை சமூகத்தில் தானும் ஒரு இடம் தேடுவது தானே? சமூகத்தில் உள்ள இந்த போக்கானது கண்ணோட்டமானது பெரும்பானமியினர் மத்தியிலும் ஏதோ ஒரு வகையில் பீடித்து உள்ளதுதானே? இங்கே நம்மிடையே உள்ளவர்களின் மார்க்சிய தத்துவப்புரிதலில் உள்ள கோளாறு தான் இந்த செயல்பாடுகளை சீரழிக்கிறது என்பேன்.

ஒட்டுமொத்த சமூகதில் உழைக்கும் மக்கள் சுரண்டப்பட்டும் சூறையாடப்பட்டும் ஒடுக்கப்பட்டும் அடக்கப்பட்டும் கிடக்கும் பொழுது இதற்குள்ளே சிலரின் அல்லது சில முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவது எவ்வகையான சமூக மாற்றத்திற்கு பயன்படும். ஆகவே மார்க்சிய தத்துவம் ஒட்டுமொத்த சமூகத்தில் உள்ள சீர்கேடுகளை அம்பலப்படுத்தி அதற்கு விடுதலைக்கான பாத்திரத்தை புரட்சிகர கட்சிக்கு வழங்குகிறது. அந்த புரட்சிகர கட்சி ஆனது தனது செயல்பாட்டை மார்க்சியத்தின் துணை கொண்டு செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அப்பொழுதுதான் மார்க்சிய தத்துவமானது நடைமுறையில் செயல்பட முடியும். ஆகவே தத்துவம் நடைமுறை என்பது மார்க்சிய தத்துவத்தை தான் கூறுகின்றோம்,மார்க்சியமல்லாத பல்வேறு தத்துவங்களை பிடித்துக் கொண்டு அவை நடைமுறை ஆக்குவதால் உண்மையாலுமே சுரண்டப்பட்டும் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருக்கும் மக்களுக்கு எவ்வித விடுதலைகளையும் தராது.

மார்க்சியத்தின் உயிராதரமான தத்துவத்தை புரிந்து கொள்வதில் லெனில் மிகத் தெளிவாக செயல்பட்டார். மார்க்சியத்தை நிலை நாட்டுவதில்ஒரு புரட்சிகர கட்சியின் அவசியத்தையும் அந்தப் புரட்சிகர கட்சியின் செயலையும் அதே நேரத்தில் புரட்சிக்கு விரோதமானநிலையில் உள்ளவற்றையும் உள்ளவர்களையும் அம்பலப்படுத்தினார்.அதே நேரத்தில் பறந்து கிடந்த தன் நாட்டில் பல்வேறு வகையான வர்க்கங்களை வர்க்க சக்திகளை இனம் கண்டு புரட்சிக்கானவர்களை ஒருங்கிணைத்தார் புரட்சிக்கு எதிரானவர்களை அம்பலப்படுத்தினார்.

அவ்வகையில் மக்கள் மத்தியில் தனது கட்சி ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியத்தை பறைசாற்றினார். அந்த நடைமுறையை தான் புரட்சி சாதித்தது. இதேபோன்று பின் தங்கிய நாடான சீனத்தில் தனது நாட்டின் நிலைமைக்கு ஒப்ப ஒன்றுபட்ட கட்சியின் அவசியமும் பகுதி வாரியான செயல்பாடுகளையும் ஒரு கட்சி செய்ய வேண்டிய பணியையும் மிகத் தீவிரமாக மாவோ ஆராய்ந்தார் அதன் அடிப்படையில் ரஷ்ய புரட்சியில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தனது நாட்டில் புரட்சியை நடத்துவதற்கான மார்க்சியத்தை உள்வாங்கி அந்த தத்துவத்தை நடைமுறை ஆக்கும் பணியை கட்சிக்கு விதித்தார். அவை தான் அந்த சீனாவில் இருந்த பிற்போக்குத்தனங்களை உடைத்தெறிந்து ஒரு புரட்சிகர சமூகத்தை படைத்தது. அதில் தான் மார்க்சிய தத்துவமும் நடைமுறையும் அடங்கி உள்ளது.

இந்தியாவில் இப்பொழுது தமிழகத்தில் உள்ள போக்குகளான அம்பேத்கர் பெரியார் பின்னால் அணி திரள்வோரும் தமிழ் தேசியம் பேசுவோரும் என்ன நடைமுறை தத்துவத்தை கடைப்பிடிக்கின்றனர்.

அம்பேத்கர் பெரியார் ஆகியோரின் பணிகள் அன்றைய சமுகத்தில் பெரும் வரவேற்பு பெற்றது. ஏனென்றால் அன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ஒரு குறிப்பிட்ட அளவில் சீர்திருத்த வகையில் சமூக மாற்றத்திற்கு பணி செய்தது. ஆனால் அதன் நோக்கம் சமூகம் மாற்றத்தை தடைபோட, போராட்டங்களை நிறுத்தி வைக்க தான். மக்கள் விடுதலைப் போராட்டத்தில் இருந்து திசைத்திருப்ப இதை பயன்படுத்தினார்கள். ஆம் அம்பேத்கர் பெரியார் முன்வைத்த கோரிக்கைகள் ஒரு சிலர் பயன்பட்டு இன்று மேல் நிலையில் உள்ளார்கள். இருந்தும் இன்றும் பெரும்பான்மையான அவர்கள் பேசும் மக்கள் மிகக் கொடூரமான முறையில் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டும் கிடக்கிறார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாத இந்த மேல்நிலைக்கு வந்தகூட்டம் தங்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த அம்பேத்கரையும் பெரியாரையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அதேபோல் தமிழ் தேச விடுதலை பேசும் பெரும்பாலான இயக்கங்கள் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளவையே. இவர்கள் எல்லோரும் பேச்சில் மார்க்சியவாதியாக இருந்துக் கொண்டே செயலில் மார்க்சியத்தை மறுக்கும் ஏகாதிபத்திய காவலர்களாக உள்ளனர். ஆளும் வர்க்க காவலர்களாக வலம் வருகிறார்கள்.

‘’சீர்திருத்தங்கள் என்றால் ஆளும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரத்தை அழிக்காமலேயே உழைக்கும் மக்களின் நிலைமைகளில் மேம்பாட்டையச் செய்வதாகும். அதாவது மூலதனத்தின் ஆதிக்கம் இருக்கும்வரை, தனிப்பட்ட மேம்பாடுகள் ஏற்பட்டாலும், எப்போதும் கூலி அடிமைகளாகவே இருந்து வருவோரான தொழிலாளர்களை முதலாளித்துவ வழியில் ஏமாற்றுவதுதான் சீர்திருத்தவாதம் ஆகும்’’ என்றார் லெனின்.

"மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தார் ஒரு கையால் சீர்திருத்தங்களை வழங்கி விட்டு மறுகையால் எப்போதும் அவற்றை திருப்பி எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்" என்றார் லெனின்.

முதலாளிகள் உழைக்கும் மக்களுக்கு குறைந்த கூலி கொடுத்து சுரண்டி அவர்களின் மூலதனத்தை குவித்துக் கொள்வார்கள். ஆகவே முதலாளிகளும் அவர்களது அரசும் எப்போதும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க விரும்பமாட்டார்கள். ஆட்சியாளர்களும், முதலாளிகளும் கொடுக்கும் சலுகைகளே போதுமானது என்ற சுயதிருப்தி மனப்பான்மையை மக்களிடம் ஏற்படுத்தினார்கள். இந்தகைய மன நிலையிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட மக்கள்! இப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை ஆட்சியாளர்கள் பறிக்கும் போது உழைக்கும் மக்கள் கையறு நிலையிலேயே நிற்கிறார்கள். இந்த அநீதிகளை எதிர்த்துப் போராடுவதற்கான நிறுவனங்கள் அதாவது கட்சிகள் இன்றி மக்கள் தனிமைப்பட்டுள்ளார்கள். ஆகவே இந்திய வரலாற்றில் உழைக்கும் மக்கள் இந்த சீர்திருத்தவாதிகளை நம்பி அவர்கள் பின்னால் சென்றதன் விளைவாக உழைக்கும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளார்கள், உழைக்கும் மக்கள் சீரழிந்துள்ளார்கள் என்ற நடைமுறை உண்மையை அன்றே லெனின் பல நாடுகளின் அனுபவங்களிலிருந்து வழிகாட்டியதை நாம் பின்பற்றத் தவறியதன் பலனை இப்போது நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.

"அற்ப சலுகைகளின் மூலம் சீர்திருத்தவாதிகள் தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் ஏமாற்றவும் முயல்கிறார்கள். அவர்களை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசைதிருப்பிவிட முயலுகிறார்கள்"என்றார் லெனின். அதனை நாம் இங்கு எதார்த்ததில் நம் சமூகத்தில் காண்கிறோம்.

சமூக முன்னேற்றத்திற்கு இயங்கு சக்தியாக இருப்பது வர்க்கங்களுக்கு இடையான ஒத்துழைப்பு என்பது முதலாளித்துவ தத்துவம் இதற்கு எதிரானது தான் லெனின் கூறிய வர்க்க போராட்டம் பற்றிய மார்க்சியத்தின் வரையறை ...

வரலாற்றில் மெய்யான இயங்கு சக்தி புரட்சிகரமான வர்க்கப் போராட்டமே... ஆனால் சீர்திருத்த முதலாளித்துவ தத்துவமானது சமூகத்தில் உள்ள சில குறைபாடுகளை உணர்வதும் ஒற்றுமையாக அதனை சரி படுத்துவதும் என்று கூறுகிறது. வந்த போராட்டத்தின் வடிவங்கள் வர்க்க ஸ்தாபனங்களின் வடிவங்களுடன் தொடர்புடையவை பாட்டாளிகளின் வர்க்க போராட்டத்தில் வெகுதெளிவாக தெரிய வருகிறது பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்துக்கு எதிரான தனது போராட்டத்தை மூன்று பிரதான வடிவங்களில்-பொருளாதாரம், அரசியல், சித்தாந்தத் துறையில் நடத்துகிறது. (இந்தப் பகுதி மார்க்சிய லெனினிய தத்துவ ஞானத்தின் அடிப்படைகள் நூலிலிருந்து)

இறுதியாக:-

தத்துவம் என்றால் என்ன? எவற்றையெல்லாம் நடைமுறையில் மெய்ப்பித்து சாதிக்க விரும்புகிறோமா அவற்றைப் பற்றி நாம் பெற்றிருக்கும் அறிவுதான் தத்துவம் ஆகும். எவ்விதமான அறிவு எதுவும் இல்லாமலே ஒருவன் காரியம் பார்க்கலாம், ஆனால் அவன் செய்யும் காரியம், ஏற்கனவே செய்து பழகிப்போன போக்கிலே திரும்பத் திரும்பசெய்து கொண்டிருக் கிற காரியம்தான் (உதாரணமாக அரசியல் கட்சிகள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கின்ற காரியமான, பிரசுரம் விநியோகிப்பது, போஸ்டர் ஒட்டுவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற காரியங்களை சொல்லலாம்) அதற்கு மேல் போகாமல், போகமுடியாமல் அவன் நின்றுவிட வேண்டியதுதான். அதே மாதிரி, இன்னொருவன் சும்மா தத்துவம் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அப்படி பேசிக்கொண்டே இருப்பவனின் சிந்தனைகளும் திட்டங்களும் யதார்த்தத்தில் சித்திபெற சக்தியில்லாமல் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காயாகவே நின்று விடுகின்றன. ஆகவே தத்துவமும் நடைமுறையும் இணைந்திருக்க வேண்டும். நமக்கு வேண்டியது என்ன தத்துவம், அது நடைமுறையுடன் எப்படி இணைந்திருக்க வேண்டும் என்பதுதான் நம்முன்னுள்ள பிரச்சனையாகும். ஒரு செயல்துணிவுள்ள ஊழியனோ, தொழிலாளியோ தவறு செய்யாமல் புரட்சிக்குரிய காரியங்களை செய்து கொண்டு போகவேண்டுமானால், அவருக்கு ஒன்று தேவைப்படுகிறது. விஷயங்களைச் சரியாக ஆய்வு செய்து, புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் விவாதங்கள் நடத்தி முடிவிற்கு வருவதற்கு ஒரு சரியான ஆய்வுமுறை அவருக்கு இருக்க வேண்டும். சர்வரோக நிவாரணி மாதிரி எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் தயாராக தீர்வை வழங்கக்கூடிய ஒரு வறட்டுத் தத்துவமும், குருட்டுச் சூத்திரமும் அவருக்குத் தேவையில்லை.

இதன் பொருள் நடைமுறையுடன் தத்துவம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.

இந்திய கம்யூனிச கட்சியிலிருந்து நேற்று தோன்றிய சிறு குழுவரை நாங்கள் நடைமுறையில்தான் உள்ளோம் நீங்கள் கற்பனைவாதிகள் மக்கள் மத்தியில் வேலை செய்யாமல் பூட்டிய ரூமில் இருந்துக் கொண்டு தத்துவம் பேசுகின்றீர்கள் இன்னும் இத்தியாதி....

அதனை பற்றி நெடிய விவாதம் செய்ய நினைத்தாலும் அவை காது கொடுத்து கேட்க யாரும் தயார் இல்லை ஆனால் ஆளுக்கொரு வகையில் மக்கள் மத்தியில் களமாடிக் கொண்டுதான் உள்ளனர் கம்யூனிசம் பேசுபவர்கள் தொடங்கி கம்யூனிசத்தை மறுப்பவர்கள் வரை.

உழைக்கும் மக்களின் விடுதலைக்காக பேசும் இடதுசாரிகள் மக்கள் மத்தியில் இருந்து விலகிக் கொண்டே உள்ளார்கள்.

உண்மையில் பார்க்கப் போனால் மக்களுக்கான விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம் மட்டும் தான் ஆனால் மக்கள் ஏன் அதை கிரகிக்கவில்லை? அங்கே தான் நடைமுறையில் சிக்கல் உள்ளது.

மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் அதாவது அரசு இயந்திரத்தை தலையாய அங்கமாய் கொண்டு இருக்கிற அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது. அதுபோலவே உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே அதாவது பாட்டாளி வர்க்க கட்சியை தலையாய அங்கமாய் கொண்டுள்ள அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது. மார்க்சிய தத்துவம் இதர தத்துவங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுகிறது மற்ற மார்க்சியமல்லாத தத்துவங்கள் எல்லாம் அரசியல் அதிகாரத்தில் உள்ள அறிவாளிகளுடன் ஒன்று கூடியுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய மேட்டுக்குடி அறிவாளிகளோடு மட்டுமே சுருங்கிக் கொண்டுள்ளது. இவர்கள் தங்களது வர்க்க நலனை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளும் பொருட்டு நாட்டு மக்கள் மீது தமது தத்துவங்களை திணிப்பார்கள். ஆனால் மார்க்சிய தத்துவம் பரந்துபட்ட மக்களுடையது, உண்மையில் இந்த தத்துவமானது பெரும்பான்மையான உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களினுடைய தத்துவ கண்ணோட்டம் ஆகும்.

பாட்டாளி வர்க்க சித்தாந்தம் மக்கள் திரளை ஒன்றிணைப்பதும் இந்த தத்துவத்தின் பால் அவர்களை கிரகித்து அவர்களை புரிய வைத்தலும், உழைக்கும் மக்கள் தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகித்துக் கொண்டு அதன்படி நடக்கத் துணியும் போது தமது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சுக்கிருமிகளையும் மாபெரும் புயலான சீறி எழுந்து ஒரே அடியாகத் துடைத்தொழிப்பர் உழைக்கும் மக்கள். அந்த உழைக்கும் மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகிக்க முடியாது. உழைக்கும் மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலனை பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பு ரீதியான திரட்டுவதுமான இந்த இமாலய பணியை மக்களுக்கு இடையேயான பணி என்கின்றோம். (இவையைதானே நடைமுறை பணி என்று நமது ஆசான்கள் போதித்தனர் ஆனால் இங்குள்ள இடதுசாரிகள் என்னவகை நடைமுறை கையாள்கிறார்கள் தோழர்களே நீங்களே புரிந்துக் கொள்ள).

மக்களிடையேலான பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டல்தான் நடைமுறை பிரச்சனை. இக்கடமையை ஒரு பொதுவுடைமைகட்சி நேர்மையான முறையில் கடமையாற்ற வேண்டியுள்ளது. அந்தக் கட்சியின் ஊழியர்களுடைய பணிதான் நடைமுறை.

மக்களைப் பயிற்றுவிப்பதிலும் அமைப்பு ரீதியாக திரட்டுவதில் என்ன முறைகளை கையாள வேண்டும். எனும் மக்கள் இடையிலான பணியில் தான் நடைமுறை.மக்களிடையேலான பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டல்தான் நடைமுறை பிரச்சனை. இக்கடமையை ஒரு பொதுவுடைமை கட்சி நேர்மையான முறையில் கடமை ஆற்ற வேண்டியுள்ளது. அந்தக் கட்சியின் ஊழியர்களுடைய பணிதான் நடைமுறை. ஆக மார்க்சியவாதி கள் இயக்கவியல் பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் தங்களது அணிகளுக்கு மட்டுமின்றி பரந்த பட்ட திரளான மக்களுக்கு பிரசாரம் செய்ய வேண்டும் உழைக்கின்ற மக்கள் பெருந்திரளாக இந்த கண்ணோட்டத்தை கிரகித்து முதலாளித்துவ கண்ணோட்ட நிராகரிக்காத வரையில் எதிரியை தோற்கடிப்பது என்பது அசாத்தியமாகும். அதாவது மக்களிடையே நடைமுறை பிரச்சனை என்பது ... மக்கள் என்பவர் யார்? மக்களிடையே கம்யூனிஸ்டுகள் கடைப்பிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்க வேண்டும். மக்கள்தான் உண்மையான இரும்பு கோட்டை இதை உலகில் எந்த சக்தியாலும் தகர்ப்பது சாத்தியமாகாது என்ற மாவோ கூற்றை புரிந்துகொண்டு இந்த இரும்பு கோட்டை உருவாக்கும் இரும்பு கற்கள் தனித்தனியாக ஒன்று சேர்க்கப்பட்டு பூசப்படாமல் உள்ளது. இந்த இரும்பு கற்களை அடுக்கி பூசி உலகில் உள்ள எந்த சக்தியாலும் நொறுக்கப்பட முடியாத அளவிற்கு ஒரு சக்தியாக வாய்ந்த இரும்புக்கோட்டையாக நிறுவவேண்டும். இவைதான் கம்யூனிஸ்டுகள் நடைமுறையில் செய்ய வேண்டிய பணியின் முக்கியமானதாகும்.

இங்கே நடைமுறை பணியாக எவ்வகையில் உள்ளது? இங்கு நடைமுறையில் உள்ளவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.

1).பாராளுமன்றத்தை ஏற்றுசெயல்படுபவர்கள்

2). புரட்சி பேசும் குழுக்கள்

3). ஆயுதம் ஏந்தி உள்ள போராளி குழுக்களான மாவோயிஸ்டுகள்.

முதலில் பாராளுமன்றத்தை ஏற்று செயல்படும் சட்டவாத அமைப்புகள் தங்களுக்கான பல்வேறு விதமான தொழிற்சங்கம், மாணவர் சங்கம், விவசாய சங்கம் மற்றும் பல வெகுஜன அமைப்புகள் கட்டி செயல்படுகிறார்கள். இவர்களின் ஒவ்வொரு கோரிக்கையும் இறுதியாக சட்டவாதமாக பாராளுமன்றத்திற்குள்ளே முடங்கிப் போவதும் அவர்களின் போராட்டங்கள் கோரிக்கைகள் முதலாளித்துவம் அவர்களின் விரோதமாக இருப்பதாக நிராகறிப்பதும் இறுதியில் தோல்வி காண்கிறார்கள். இதில் தோல்வி காண்பவர்கள் ஆளும் கட்சிகளிடம் புகழிடம் தேடுகிறார்கள். இந்தப் பாராளுமன்ற கட்சிகள் இறுதியாக ஆளும் வர்க்க கட்சிகளுடன் பேரம் பேசி தங்களையும் தங்களின் கட்சியையும் அடகு வைத்து விடுகிறார்கள். மக்களுக்கு இவர்கள் மீது இருக்கும் மரியாதைகளும் மதிப்பும் அதனால் இழந்து போகிறது.

இரண்டாவது வகை குறுங்குழுக்கள் எவ்வகையான அரசியல் பேசினாலும் மக்கள் இடையிடையில் செல்வாக்கிழந்துள்ளனர். இவர்கள் அணிகளுக்கு தத்துவ அரசியல் போதிப்பதுமில்லை, மக்களிடம் தங்களின் அரசியல் பணியை போதிப்பதைவிட தன் அணியை மேலும் மேலும் எப்படியாவது தக்க வைக்க, விரிவாக்க செயல்தந்திர முழக்கங்கள் வைக்கின்றனர். அதன் மூலம் மக்களை உணர்ச்சி படுத்த நினைக்கிறார்கள் அந்த முழகங்கள் இவர்களின் செயலுக்கு உட்பட்டது அல்ல என்று அவர்களுக்கு தெரியும். அண்மையில் சில முழக்கங்கள் மோடியை தூக்கி எறிவோம், ட்ரம்பை தூக்கி எறிவோம். இந்த முழக்கம் வைத்துள்ள குழு இதன் சாத்தியபாட்டை விளக்குமா? ஆகையால் இவர்களின் செயல் வீணடிக்கப் பட்டுக் கொண்டுள்ளது.சில நபர்கள் செய்யும் பணியா? என்று அவர்கள் பரிசீலிக்க வேண்டும்!.

மூன்றாவது பிரிவு. சில வெகுஜன ஸ்தாபனம் கட்டியிருந்தாலும் அவர்கள் மக்களை ஒன்றிணைப்பதில் தோல்வி கண்டுள்ளார்கள். தங்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் உண்மையாலும் மக்களை ஈர்க்கும் என்று பணி செய்துக்கொண்டிகிறார்கள். இருந்தும் அரசின் கொடூரமான செயல் முன் இவர்கள் மக்களை அரசியல் படுத்தவும் எதிரிக்கு எதிரான போரில் வெகுஜன போராட்டதிற்கு போதிக்க ஸ்தாபனப்படுத்தவும் மறுத்துவிட்டு தாங்கள் மட்டுமே செயல்படுவதனால் மக்களுக்கான பணியில் முன்னேற வேண்டியவர்கள் பின்தங்கி நிற்கிறார்கள் என்பதனை அவர்கள் புரிந்துக் கொள்வது அவசியம்.

ஆகவே நடைமுறைப் பணி என்பது நாட்டின் பெருவாரியான உழைக்கும் மக்களை ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டு கிடக்கும் மக்களை ஒன்றிணைத்து எதிரிக்கு எதிரான போரில் தங்களின் விடுதலைக்கு தமது பலத்தை பிரயோகித்து எதிரியை வீழ்த்துவதுதான் மூலம் தமக்கான விடுதலை பெறுவதுதான்!அவை தான் நடைமுறைக்கான வழிமுறை. விரிவாக பின்னர் பார்ப்போம் தோழர்களே. இதனை விரிவான தளத்தில் பேச வேண்டியுள்ளது தோழர்களே அவசியம் பேசுவோம் தோழர்களே.

தொடரும் வரும் இதழில்

இலக்கு இணைய இதழ் 76 முழுமையாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்