அரசு பற்றி லெனின் பாகம் 3- இலக்கு 76 கட்டுரை

 சமுதாயம் இவ்வாறு வர்க்கங்களாகப் பிரிந்ததை வரலாற்றின் ஓர் அடிப்படை உண்மையாக எப்போதும் தெளிவாக மனதில் இருத்துதல் வேண்டும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக விதிவிலக்கில்லாமல் எல்லா நாடுகளிலும் எல்லா மனித சமுதாயங்களின் வளர்ச்சியும் ஒரு பொது விதிக்கு உட்பட்டு, முறையாகவும், ஒத்தியைந்த வழியிலும் நடந்திருக்கும் என்பதை காட்டுகிறது. அவ்வகையில், முதற்கண் சமுதாயம்வர்க்கங்கள் இன்றி இருந்தது. தொடக்கக் காலத்திய தந்தை வழிக் குடும்பம்,ஆதிகாலத்துக்குரிய சமுதாயம் அதில் உயர்குடி மக்கள் என்பவர்இருந்ததில்லை. பிறகு அடிமை முறையில் அமைந்த சமுதாயத்தை,ஆண்டை அடிமை சமுதாயத்தை நாம் காண்கிறோம். நாகரிகம் படைத்தஇன்றைய ஐரோப்பா முழுவதும் இந்தக் கட்டத்தை கடந்துதான்வந்திருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அடிமை முறை இங்குஆதிக்கம் செலுத்தியது. உலகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள மிகவும்பெரும்பாலான மக்களினங்கள் இந்தக் கட்டத்தை கடந்து வந்திருக்கின்றன.

குறைந்த வளர்ச்சி பெற்ற மக்களினங்கள் இடையே இன்றளவும் அடிமை முறையின் அடையாளங்கள் நீடித்திருக்கின்றன. இன்றைக்கும்எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்காவில், அடிமை முறை ஏற்பாடுகளைக் காணலாம்.

ஆண்டைகளும் - அடிமைகளும் முதன்முதல் ஏற்பட்ட முக்கிய வர்க்கப் பிரிவுகள் ஆவர். முதலில் கூறப்பட்ட பிரிவினர் (ஆண்டை) நிலமும்கருவிகளும் - அக்கருவிகள் அக்காலத்தில் எவ்வளவுதான் பண்படாத நிலையில் இருந்தாலும் - உற்பத்திச் சாதனங்கள் அனைத்தையும் மட்டுமல்ல, மக்களையும்கூடத் தம் உடைமையாக்கிக் கொண்டார்கள்.

இந்தப் பிரிவினர் ஆண்டைகள் எனப்பட்டனர். மற்றவருக்காக உழைத்துஉழைப்பை வழங்கியவர்களோ அடிமைகள் எனப்பட்டனர்.

வரலாற்றில் இந்த வடிவத்தைத் தொடர்ந்து இன்னொரு வடிவம் பண்ணையடிமை முறை தோன்றியது. மிகவும் பெரும்பாலான நாடுகளில்,அடிமை முறை தன் வளர்ச்சிப் போக்கில் பண்ணையடிமை முறையாகஆயிற்று. அப்பொழுது சமுதாயத்தின் அடிப்படைப் பிரிவினை

நிலப்பிரபுக்களும், பண்ணையடிமைகளுமாக அமைந்தது. மக்களுக்கிடையேநிலவிய உறவுகளின் வடிவம் மாறலாயிற்று. ஆண்டைகள் அடிமைகளைத்தங்கள் உடமையாக வைத்திருந்தனர். சட்டம் இந்தக் கருத்தைஉறுதிப்படுத்தியதோடு, அடிமையை முழுக்கவும் ஆண்டைக்கேஉரிமைப்பட்ட ஒரு பொருளாகக் கருதியது. பண்ணை அடிமைக்குடியானவர்களைப் பொறுத்தமட்டில், வர்க்க ஒடுக்குமுறையும், சார்புநிலையும் தொடர்ந்து இருந்து வந்தன. ஆயினும் குடியானவன் நிலப்பிரபுவின் உடைமையில் உள்ள பொருளாகக் கருதப்படவில்லை.

குடியானவனுடைய உழைப்புக்கும், சில குறிப்பான ஊழியங்களைப் புரியும்படி அவனைக் கட்டாயப்படுத்தப்படவுவும் மட்டும் நிலப்பிரபு உரிமைகொண்டிருந்தார். ஆனால் நடைமுறையில், குறிப்பாக பண்ணை அடிமைமுறை எல்லா நாடுகளையும் விட நீண்ட காலமாக நிலவி, மிகவும் கொடுமையான வடிவங்களையும் கொண்டிருந்த ரஷ்யாவில், இது அடிமைமுறையினின்று எவ்வகையிலும் வேறுபட்டது இல்லை என்று உங்களுக்குத் தெரியும். (அரசு லெனின், பக்கம் - 11, 12)

விளக்கம்:- சமுதாயம் ஒரு கட்டத்தில் வர்க்கங்களாகப் பிளவுபட்டது என்பதை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. வரலாற்றில் எல்லா நாடுகளிலும் உள்ள மனித சமுதாயங்களின் வளர்ச்சி ஒரு பொது விதிக்கு உட்பட்டு அதற்கு இசைந்தது போல் உள்ள வழியில் தான் நடந்திருக்கின்றது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் உலகில் எல்லா நாடுகளிலும் மனித சமுதாயம் வர்க்கங்களற்ற சமுதாயமாகவே மிக நீண்ட காலத்துக்கு முன்பு இருந்தது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தான் ஒவ்வொரு பகுதிகளிலும் வர்க்க சமுதாயம் தோன்றியது ஆதிகால வர்க்கங்களற்ற பொதுவுடமை சமுதாயத்தில் சிலர் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர் என்றும் சிலர் கீழ்மட்டப் பிரிவினர் என்றும் ஏற்றத்தாழ்வுகள் இருந்ததில்லை. மனிதசமூகத்தில் வர்க்கங்கள் தோன்றிய பிறகுதான் பொதுவுடமை சமூகமானது ஆண்டான் அடிமை சமூகமாக மாறியது. இதுதான் உலகில் முதன்முதலாகத் தோன்றிய வர்க்க சமூகமாகும்.

உலகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுவுடமை சமுதாயம், பிறகு ஆண்டான் அடிமைச் சமூகம் போன்றவற்றை கடந்துதான் இன்றைய சமூகமாக மாறியிருக்கிறது. குறைந்த வளர்ச்சிபெற்ற பகுதிகளில் இப்போதும் ஆதிகால பொதுவுடமைசமூக அமைப்பையும் ஆண்டான் அடிமை சமூக அமைப்பையும் அதன்எச்சங்களையும் இப்போதும் சிறிதளவுக்கு நாம் காணலாம்.ஆண்டான் அடிமைச் சமூகத்தில் வழ்ந்த ஆண்டைகள் நிலத்தையும்அங்கிருந்த கருவிகளுக்கும் சொந்தக்காரர்களாக இருந்தனர். கூடுதலாகஅவர்களிடம் வேலைசெய்து வந்தவர்களையும் ஆண்டைகளது உடமைப்பொருளாகவே வைத்திருந்தனர். ஆண்டைகளுக்கு சொந்தமாகஇருந்தவர்கள் அடிமைகளாகவே இருந்தனர்.

வரலாற்றில் இந்த வடிவத்தைத் தொடர்ந்து பண்ணையடிமை முறை தோன்றியது. இந்த முறையில் சமூகத்தில் முக்கியமான பிரிவினராக ஒருபக்கம் நிலப்பிரபுக்களும் மறுபக்கம் பண்ணையடிமைகளும் இருந்தார்கள்.

ஆண்டான் அடிமை முறையில் அடிமைகள் ஆண்டாண்களுடைய உடமைப்பொருளாக இருந்தார்கள். ஆனால் நிலப்பிரபுத்துவ பண்ணையடிமைமுறையில், பண்ணையடிமைகள் நிலப்பிரபுக்களின் உடமைப்பொருளாகஇல்லை. அந்தவகையில் பண்ணையடிமைகள் அடிமைகளைக் காட்டிலும்சுதந்திரம் பெற்றிருந்தனர்.

ரஷ்யாவில் நிலப்பிரபுத்துவ பண்ணையடிமை முறை நீண்டகாலம் நிலவியது. மேலும் அங்கு பண்ணையடிமைக்கும் அடிமைக்கும் இடையிலான வேறுபாடில்லாமல் பண்ணையடிமைகளும் முற்றிலும் அடிமைகளாகவே இருந்தார்கள். இதன்பின், பண்ணை அடிமைச் சமுதாயத்தில் வாணிபம் வளர்ச்சியுற்றுஉலகச் சந்தை தோன்றி, பணப்புழக்கம் வளர்ச்சியுற்றதோடு கூடவே, ஒரு புதிய வர்க்கம் தோன்றிற்று அதுதான் முதலாளி வர்க்கம். பண்டத்திலிருந்து,பண்ட மாற்றத்திலிருந்து, பணத்தின் ஆதிக்கம் தோன்றியதிலிருந்துஎழுந்தது மூலதனத்தின் ஆதிக்கம். பதினெட்டாம் நூற்றாண்டில், அல்லதுதிட்டவட்டமாக கூறினால் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டிலும் உலகெங்கும் புரட்சிகள் நிகழ்ந்தன. மேற்கு ஐரோப்பியநாடுகள் எல்லாவற்றிலும் இருந்தும் பண்ணை அடிமை முறைஅகற்றப்பட்டது. ரஷ்யாவில் எல்லாவற்றுக்கும் கடைசியாக இது நிகழ்ந்தது.

கிபி 1861 இல் ரஷ்யாவிலும் ஒரு தீவிர மாற்றம் உண்டாயிற்று. இதன்விளைவாக, சமுதாயத்தின் ஒரு வடிவத்துக்குப் பதிலாக அதனிடத்தில்மற்றொரு வடிவம் ஏற்பட்டது. அதாவது பண்ணை அடிமை முறையைஅகற்றிவிட்டு, முதலாளித்துவம் வந்தது. இதன் கீழ் வர்க்கப் பிரிவினை தொடர்ந்து இருந்து வந்தது. மேலும் பண்ணை அடிமையின் பல்வேறு அடையாளங்களும், மிச்ச சொச்சங்களும் தொடர்ந்து இருந்து வந்தன என்றாலும், வர்க்கப் பிரிவினை அடிப்படையில் ஒரு புதிய வடிவத்தை மேற்கொள்ளாயிற்று.

எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள மூலதனத்திற்கு உடமையாளர்,நிலத்திற்கு உடமையாளர், ஆலைகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும்உடமையாளர் ஆகியோர் மக்கள் தொகையில் மிக மிகச்சிறுபான்மையினராகவே இருந்தார்கள்; இன்னும் இருக்கிறார்கள். ஆனால்மக்கள் எல்லோருடைய உழைப்பும் முழுக்க முழுக்க இவர்கள் வசத்தில்இருக்கிறது. இதன் நேர்விளைவாக, உழைப்பாளி மக்கள் அனைவரின் மீதும்இவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், அவர்களை ஒடுக்குகிறார்கள்,சுரண்டுகிறார்கள். உழைப்பாளி மக்களில் பெரும்பான்மையினர்பாட்டாளிகளாய், கூலித் தொழிலாளர்களாய் வாழ்பவர்கள்; அதாவதுஉற்பத்தி முறையில் தங்களுக்கே உரிய உழைக்கும் கரங்களை, தங்கள்உழைப்புச் சக்தியை விற்க நிர்பந்திக்கப்படுவதால் மட்டும் பிழைப்புக்குவேண்டியதைப் பெறுகிறவர்கள், குடியானவர்கள் பண்ணையடிமைகாலத்திலேயே ஒற்றுமை கெட்டு நசுக்கப்பட்டு இருந்தார்கள். பண்ணைஅடிமை முறை போய் முதலாளித்துவம் நிலைபெறத் தொடங்கிய பொழுதுஇவர்களில் ஒரு பகுதியினர் (பெரும்பான்மையினர்) பாட்டாளிகளாகமாற்றப்பட்டனர். மற்றொரு பகுதியினர் (சிறுபான்மையினர்) செல்வம்படைத்த குடியானவர்களாக அதாவது தாங்களே தொழிலாளரைக் கூலிக்குஅமர்த்திக்கொள்பவராய், நாட்டுப்புறத்தைச் சேர்ந்த முதலாளித்துவவர்க்கத்தினராய் மாற்றமடைந்தனர். (லெனினது நூல் அரசு, பக்கம் - 12, 13)

விளக்கம்:- நிலப்பிரபுத்துவ பண்ணையடிமைச் சமூகம் நீடித்துக்கொண்டுஇருக்கும் பொழுதே இயந்திரங்களைப் பயன்படுத்தி தொழில்துறை உற்பத்தி,வணிகம் வளர்ந்து உலகச் சந்தையும் பணப்புழக்கமும் வளர்ந்தது. அதன்காரணமாக பண்ணையடிமைச் சமுதாயத்தில் ஒரு புதிய வர்க்கமாகமுதலாளி வர்க்கம் தோன்றியது. முதலாளித்துவ வர்க்கம் சரக்குஉற்பத்தியை வளர்த்தது. சரக்கு விற்பனையை தொடர்ந்து பணப்புழக்கம்வளர்ச்சியடைந்து பணத்தின் ஆதிக்கம் தோன்றி, பணமானதுமுதலாளிகளின் மூலதனத்தை வளர்த்தது. மூலதனமானதுதொழிலாளர்களை கூலியடிமை ஆக்கியது. இவ்வாறு சமூகத்தில்மூலதனமானது வளர்ந்து மூலதன ஆதிக்கம் உருவானது. இவ்வாறு மேற்குஐரோப்பிய நாடுகளில் பண்ணையடிமைமுறை ஒழிக்கப்பட்டு மூலதனஆதிக்கத்தை அடிப்படையாகக்கொண்ட முதலாளித்துவ சமூகமாக சமூகம்மாறியது.

பண்ணையடிமை சமூகம் முதலாளித்துவ சமூகமாக சமூகம் மாறினாலும்சமூகத்தில் வர்க்கப் பிரிவினை ஒழியவில்லை. பண்ணையார்களின்சுரண்டல் மறைந்து முதலாளிகளின் சுரண்டல் உருவானது. மேலும்பண்ணையடிமையின் மிச்சசொச்சங்களும் சமூகத்தில் நீடித்தன. எனினும்பண்ணையடிமை முறையைக்காட்டிலும் வளர்ச்சியடைந்த சமூகமாகவேமுதலாளித்துவ சமூகம் வளர்ச்சியடைந்திருந்தது. இந்த முதலாளித்துவசமூகத்தில் தொழிலாளர்களுக்கு பேச்சுரிமை, சங்கம் அமைக்கும் உரிமை,போராடும் உரிமை, மக்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமைபோன்ற ஜனநாயக உரிமைகள் கிடைத்தது. ஆனாலும் நடைமுறையில்ஜனநாயகம் என்பது முதலாளிகளின் சர்வாதிகாரமாகவே இருந்தது.

அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் நிலங்கள், தொழிற்சாலைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான பணக்காரர்களுக்குத்தான் சொந்தமாக இருந்தது. சமூகத்தில் மிகப்பெருவாரியானவர்கள் எவ்விதமானஉடமையும் இல்லாத ஏழைகளாகவே இன்றும் இருப்பதை நாம் காணலாம்.

மிகச் சிறுபான்மையினரான இந்தியப் பெருமுதலாளிகள் தான் மிகப்பெருவாரியான உழைப்பாளர்களை சுரண்டி ஆதிக்கம் செய்கிறார்கள்.பண்ணையடிமைமுறை ஒழிந்து முதலாளித்துவ சமூகம் தோன்றியதன்விளைவாக ஒருசிலர் மட்டும் மூலதனத்துக்குச் சொந்தக்காரர்களாகஅதாவது முதலாளிகளாக வளமான வாழ்க்கையைப் பெற்றவர்களாகவும் மிகப்பெருவாரியான மக்கள் கூலி உழைப்பாளர்களாக செல்வம் இல்லாதவறுமையில் வாடுபவர்களாக மாறினார்கள். முதலாளித்துவ சமூகமாற்றமானது ஏழைகளின் வறுமையை ஒழிக்கவில்லை.

பிச்சைக்காரர்களை ஒழிக்கவில்லை. ஆனால் சிறுபான்மை செல்வந்தர்களைகுறிப்பாக கார்ப்பரேட் முதலாளிகளை பல கோடிக்கு சொந்தக்காரர்களாகவளர்த்துள்ளது. இந்த நிலையைத்தான் தனிவுடமை கொடுமை என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பாடினார்கள். ஆகவே உழைக்கும் மக்களின் கடமை தனிவுடமை கொடுமையை ஒழிப்பதுதான்.

அதற்கு முதலில் டாட்டா, பிர்லா, அம்பானி, அதானி, பில்கேட்ஸ் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் மூலதனத்தை பறிமுதல்செய்து அதனை பொதுவுடமையாக மாற்றவேண்டும்.

இந்த அடிப்படை உண்மையை -அதாவது சமுதாயம் அடிமை முறையின் ஆதிகால வடிவங்களில் இருந்து பண்ணை அடிமை நிலைக்கும், பிறகு இறுதியாக முதலாளித்துவத்திற்கு மாறியதை -எப்பொழுதும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த அடிப்படை உண்மையை நினைவில் கொள்வதால் மட்டும்தான், எல்லா அரசியல் போதனைகளையும் இந்த அடிப்படைத் திட்டத்தில் வைத்துப் பரிசீலிப்பதால் மட்டும்தான், இந்தப் போதனைகளைச் சரியான வகையில் மதிப்பிட்டு அறியவும், அவைகுறிப்பது என்ன? என்பதைப் புரிந்து கொள்ளவும் முடியும்.

மனித இனத்தின் வரலாற்றில், அடிமை முறையும், பண்ணை அடிமை முறையும், முதலாளித்துவமான இந்தப் பெருங்காலப் பகுதிகளில் ஒவ்வொன்றும் பத்துக்கணக்கான, நூற்றுக்கணக்கான, நூற்றாண்டுகளைக்கொண்டது. மற்றும் ஏராளமான பல அரசியல் வடிவங்களை, வெவ்வேறானஅரசியல் போதனைகளை, கருத்தோட்டங்களை, புரட்சிகளையெல்லாம்தோன்றச் செய்துள்ளது. முதலாளித்துவ அறிஞர்கள், அரசியல்வாதிகள் ஆகியவர்களின் அரசியல், தத்துவஞானம் இன்னும் பிற போதனைகளுடன்சிறப்பாகத் தொடர்புள்ள இந்தப் பெரும் வேறுபாட்டையும், அளப்பரியவகைப்பாட்டையும் விளங்கிக்கொள்ள ஒரே ஒரு வழி தான் உண்டு.

அதாவது, சமுதாயத்தின் இந்த வர்க்கப் பிரிவினை, வர்க்க ஆதிக்கத்தின் வடிவங்களில் ஏற்பட்ட மாறுதல் ஆகியவற்றை வழிகாட்டும் சாதனமாகக் கொண்டு பொருளாதாரம், அரசியல், ஆன்மீகம், சமயம் முதலானவை பற்றிய எல்லாச் சமுதாயப் பிரச்சனைகளையும் ஆராய்வதே அந்த வழியாகும்.இந்த அடிப்படை வர்க்கப் பிரிவினை பற்றிய பார்வை நிலையில் இருந்துநீங்கள் அரசு என்பதை ஆராய்வீர்களானால், நான் முன்பே சொல்லியபடி,சமுதாயம் வர்க்கங்களாகப் பிரிவதற்கு முன்பு, அரசே இருந்ததில்லைஎன்பதைக் காண்பீர்கள். ஆயினும் சமுதாயத்தில் வர்க்கப் பிரிவினைஉண்டாகி, உறுதியாக வேரூன்றிவிட்ட பொழுது, வர்க்கச் சமுதாயம்தோன்றிவிட்ட பொழுது, அரசு என்பதும் கூடவே தோன்றி, உறுதியாகவும்வேரூன்றி விட்டது. (லெனின் நூல், அரசு, பக்கம் - 13, 14)

 விளக்கம்:- மனிதசமுதாயமானது ஆதிகாலத்தில் வர்க்கங்களற்ற புராதனபொதுவுடமை சமுதாயமாக இருந்தது. அதற்குப் பின்பு அடிமைச் சமுதாயமாக மாறி, பின்பு பண்ணையடிமைச் சமுதாயமாக மாறி, பின்பு முதலாளித்துவ சமுதாயமாக மாறியது. இத்தகைய மாற்றங்கள் சமுதாயத்தில் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான அடிப்படை விஞ்ஞான கண்ணோட்டத்தை நாம் புரிந்துகொள்வது மிகமிக அவசியமாகும் என்றார்லெனின். இந்த விஞ்ஞான கண்ணோட்டத்தை நாம் வளர்த்துக்கொள்வதன்மூலமே தற்போது நிலவும் அரசியலை நம்மால் பரிசீலித்து புரிந்துகொள்ளமுடியும். அதாவது அரசியலில் நம்மை ஏமாற்றுபவர்களைப் புரிந்துகொண்டுபோராடமுடியும்.

மனிதகுல வரலாற்றில் அடிமைச் சமூக அமைப்பு பல காலம் நீடித்தது. அதுபோலவே பண்ணையடிமைச் சமூகமும் பல நூற்றாண்டுகள் நீடித்தது.அதேபோலவே முதலாளித்துவ சமூகமும் சில நூறு ஆண்டுகள் நீடித்து தற்போதும் நீடித்துக்கொண்டு இருக்கிறது. நீடித்துக் கொண்டிருக்கும் இந்தசமூக அமைப்புக்குள் வெவ்வேறான அரசியல் அல்லது அரசு வடிவங்களும்,அரசியல் கருத்துக்களும், அரசியல் போராட்டங்களும் நடந்துள்ளன. இந்த பல்வேறுவிதமான மாற்றங்கள் மற்றும் வேறுபாடுகளைப் பற்றி முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் சொல்வதற்கும் பாட்டாளிவர்க்க சிந்தனையாளர்கள் சொல்வதற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனை சரியாகப் புரிந்துகொள்ள நாம் என்ன செய்யவேண்டும்? சமுதாயத்தில் நிலவும் வர்க்கங்களுக்கிடையே நிலவும் வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும். வர்க்க ஆதிக்கத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாறுதல்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

இதனை அடிப்படையாகக்கொண்டு, சமூகப் பொருளாதாரம், அரசியல்ஆன்மீகம், சமயம் முதலானவை பற்றிய எல்லாச் சமுதாயப் பிரச்சனைகளையும் ஆராயவேண்டும். இதற்கு மாறாக தனிநபர்களின் மீது நம்பிக்கைகொண்டு தனிமனிதர்கள் எதனையும் சாதித்துவிடுவார்கள் என்ற தனிநபர் வழிபாட்டின் மூலம் இதனை புரிந்துகொள்ளவோ மாற்றியமைக்கவோ முடியாது. ஒரு கம்யூனிச அமைப்பு மார்க்சிய கண்ணோட்டத்திலிருந்து வர்க்கங்களை எந்தளவுக்கு ஆய்வுசெய்து முடிவெடுத்து செயல்படுகிறதோ அந்தளவுக்கு அது வெற்றிபெறும்.

இந்த வர்க்கப்பிரிவின் அடிப்படையில், அதாவது வர்க்கப் பார்வையிலிருந்து அரசு என்றால் என்ன? என்பதையும் நிலவுகின்ற அரசானது எந்த வர்க்கங்களின் நலனுக்கானது என்பதை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் அரசியலில் ஏமாற்றப்பட்டுக் கொண்டேதான் இருப்போம்.

ஆகவே வரலாற்றில் வர்க்கங்கள் இல்லாத சமூகம் நிலவியது. அந்தக்காலத்தில் அரசு என்பது உலகில் எங்கும் இருந்ததே இல்லை. சமூகத்தில் வர்க்கங்கள் தோன்றி உறுதியான பின்பு அதன்கூடவே அரசு தோன்றியது என்ற வரலாற்று உண்மையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்என்றார் லெனின்.

அடிமைமுறை, பண்ணையடிமைமுறை, முதலாளித்துவமுறை ஆகிய கட்டங்களை கடந்து சென்ற, இன்னும் சென்றுகொண்டிருக்கின்ற நூற்றுக்கணக்கான நாடுகளை மனித இனத்தின் வரலாறு கண்டிருக்கிறது.

எத்தனையோ அரசியல் திடீர் மாற்றங்களும் எத்தனையோ புரட்சிகளும் ஏற்பட்டிருந்தாலும் கூட, அரசின் தோற்றத்தை நீங்கள் எப்பொழுதும் காண்பீர்கள். இவற்றில் ஒவ்வொரு நாட்டிலும், மாபெரும் வரலாற்று மாறுதல்கள் ஏற்பட்டிருப்பினும் கூட, மனித இனத்தின் வளர்ச்சியோடுஅடிமைநிலையிலிருந்து பண்ணையடிமை முறையின் வழியாக முதலாளித்துவத்திற்கும், முதலாளித்துவத்தை எதிர்த்து உலகெங்கும் பரவிய இன்றைய போராட்டத்துக்கும் சமுதாயம் மாறிச்சென்றிருக்கும் நிகழ்ச்சியுடன் தொடர்புகொண்ட சமுதாயத்தினின்றும் தனித்துப் பிரிந்த ஒரு குறிப்பான இயந்திரமாக அது எப்பொழுதும் இருந்துவந்திருக்கிறது; பகுதியாகவோ அல்லது பெரும்பாலும் முழுக்கவோ ஆளுகை செய்வதில் ஈடுபட்டவரான மக்கள் குழுவினையே அது கொண்டிருந்து வந்திருக்கிறது.

மக்கள், ஆளப்படுவோராகவும் ஆள்வதில் தேர்ந்தவராகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். கடைசியில் கூறப்பட்டவர்கள் சமுதாயத்திற்கு மேல் உயர்ந்து ஆளுவோர், அரசின் பிரதிநிதிகள் என அழைக்கப்படுபவராய் இருக்கின்றனர். இந்த இயந்திரம், மற்றவரை ஆளுகின்ற இந்தக் குழு, கட்டாயப்படுத்துவதற்கான பொருளாதாயப் பலம் கொண்ட ஒரு குறிப்பிட்ட கருவியை எப்பொழுதும் தன்னிடம் கொண்டிருக்கிறது. ஆதிகால குண்டாந்தடி மூலமோ, அல்லது அடிமை முறையின் காலகட்டத்தில் இன்னும் அதிகம் மேம்பட்ட ஆயுத வகைகள் மூலமோ, அல்லது கடைசியாக இருபதாம் நூற்றாண்டில் தொழில் நுணுக்கத்தின் அதிசயங்களாக உள்ள இன்றைய தொழில்நுட்பக் கலையின் மிகப் புதிய சாதனங்களை ஆதாரமாகக் கொண்ட நவீன கருவிகள் மூலமோ, இந்த வன்முறை மக்கள் மீது செலுத்தப்படுகின்றது. வன்முறைக்குரிய வழிமுறைகள் மாறின ஆனால் அரசு நிலவியபொழுதெல்லாம், ஒவ்வொரு சமுதாயத்திலும் மக்களின் ஒரு பகுதியினர் ஆள்வோராய், ஏவல் கொள்வோராய், ஆதிக்கம் புரிவோராய், தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டி பொருளாதாய நிர்பந்தத்திற்கான ஓர் இயந்திரத்தை வன்முறைக்குரிய இயந்திரத்தை அந்தக் காலத்தின் தொழில் நுணுக்கத் தரத்திற்கு ஒத்த ஆயுதங்களைப் பெற்றிருந்தனர். (லெனினது அரசு என்ற நூல், பக்கம் - 14, 15)

விளக்கம்:- மனித சமுதாயத்தில் வர்க்கங்கள் தோன்றிய பிறகுசமுதாயமானது அடிமை சமுதாயமாக அடுத்து பண்ணையடிமைச் சமுதாயமாக அதற்குப் பிறகு முதலாளித்துவ சமுதாயமாக மாறிக்கொண்டிருப்பதை வரலாறு நமக்கு எடுத்துச் சொல்கிறது. இந்த மூன்று வகையான சமுதாய அமைப்புகளும் பொதுவாக அடிமை முறைகளை கொண்ட சமுதாயமாகவே இருக்கிறது, இப்பொழுதும் இத்தகைய அடிமை அடிமை முறையே முதலாளித்துவ சமூகம் என்ற வகையிலும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. வரலாற்றில் எத்தனையோ புரட்சிகளும் திடீர் மாற்றங்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் அவை அனைத்திலும் அரசு என்ற ஒரு ஏற்பாடு இருப்பதை, வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு வரலாறு அடிமை முறை அதைத் தொடர்ந்து பண்ணையடிமை முறை இறுதியாக முதலாளித்துவ முறை தற்போது உருவாகி நடைமுறையில் இருந்த போதும் இந்த அடிமை முறையை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அடிமையாக ஆக்கப்பட்டவர்கள் தங்களை அடிமைப்படுத்தி ஆள்பவர்களை எதிர்த்து போராடிக் கொண்டே இருப்பது தான் வரலாறாகும். எங்கெங்கு அடிமைத்தனம் இருக்கிறதோ எங்கெங்கு ஆதிக்கம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஆதிக்கத்தை எதிர்த்து அடிமைப்பட்ட வாக்கங்கள் போராடுவதை நாம் காணலாம். இப்பொழுதும் இந்த முதலாளித்துவ முறையிலான அடிமைத்தனத்தை எதிர்த்தும், அதன் ஆதிக்கத்தை எதிர்த்தும் உலகெங்கும் போராட்டங்கள் நடப்பதை நாம் காணலாம். இத்தகைய போராட்டங்களை ஒடுக்குவதற்காக இந்த சமுதாய அமைப்பு முறைக்குள் இந்த சமுதாயத்திற்கு மேலே சிறப்பு அதிகாரம் பெற்ற ஒரு ஆதிக்க பிரிவினர்களை உருவாக்கிருப்பதை நாம் எப்பொழுதும் காண்கிறோம் அத்தகைய பிரிவினரைத்தான் அரசு என்கிறோம்.சமுதாயத்தில் பணம் படைத்தவன் என்று ஒரு பிரிவினரும், பணமில்லாத ஏழை என்ற ஒரு பிரிவினரும் உருவான பின்பு சமுதாயத்தில் பிற மனிதர்களை ஆதிக்கம் செய்யும் ஒரு பிரிவினரும் இவர்களது ஆதிக்கத்திற்கு உட்பட்டு அடிமைப்பட்டு இருக்கும் ஒரு பிரிவினரும் உருவாகிவிட்டனர். இத்தகைய ஆதிக்க சக்திகளை ஒழித்துக் கட்டும் வரை ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டம் சமுதாயத்தில் தவிர்க்கமுடியாது.

சமுதாயத்தில் மக்களில் ஒரு பிரிவினர் ஆளப்படுபவராகவும் மற்றொரு பிரிவினர் இவர்களை ஆள்வதில் திறமைபடைத்த கைதேர்ந்தவர்களாகவும் பிரிக்கப்பட்டு இருப்பதை நாம் காணலாம். இவ்வாறு ஆளுகின்றவர்கள் சமுதாயத்திற்கு மேலானவர்களாகவும் உயர்ந்தவர்களாகவும் சமுதாயத்தால் மதிக்கப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். மற்றவர்களை ஆளுகின்ற இந்தப் பிரிவினர் பொருளாதார பலம் கொண்டும் ஆயுத பலம் கொண்டும் ஒரு இயந்திரமாக உருவாக்கப்பட்டுள்ளனர். சமுதாயத்தில் ஆள்பவர்களாக உயர்ந்து உள்ளவர்கள் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட அந்தக் காலத்தின் சூழலுக்கு ஏற்ப ஆயுதங்களைப் பெற்ற பிரிவினர்களாக இருக்கிறார்கள்.

ஆதிகாலத்தில் அதாவது அடிமை சமுதாயத்தில் குண்டாந்தடிகளை கொண்டு இவர்கள் இருந்தார்கள், அதற்குப் பிறகு உருவான பண்ணையடிமை சமுதாயத்தில் இந்த பிரிவினர் ஒரு வளர்ச்சி அடைந்த ஆயுதத்தைக் கொண்டிருந்தார்கள், தற்கால முதலாளித்துவ சமுதாயத்தில் ஆதிக்கம் செய்யும் இந்த பிரிவினர் நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட நவீன ஆயுதங்களைக் கொண்ட அமைப்பாக, அதாவது அரசாக இருக்கின்றார்கள். இவ்வாறு வன்முறைக்கு பயன்படுத்துகின்ற ஆயுதங்கள் மற்றும் வன்முறை வடிவங்கள் மாறினாலும் அரசு என்ற அடிப்படையில் ஒரு அடக்குமுறைக்கான நிறுவனமாகவே ஆயுதம் தாங்கிய நிறுவனமாகவே இந்த அரசு இருப்பதை நாம் காணலாம்.

சமுதாயத்தில் பணக்காரர்கள் ஒரு பக்கமும் ஏழைகள் ஒரு பக்கமும் இருக்கின்ற நிலை மாற வேண்டும் என்றால் ஆதிக்கம் செய்பவர்கள் ஒரு பக்கமும் அந்த ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்ட அடிமைகள் ஒரு பக்கமும் இருக்கின்ற இந்த நிலை முதலில் ஒழிக்கப்பட வேண்டும் இந்த ஆதிக்கத்தை ஒழிக்காமல் ஏழை பணக்காரன்களுக்கிடையில் உள்ள வேறுபாட்டை நாம் ஒழிக்க முடியாது.

இந்தப் பொது நிகழ்ச்சிகளை ஆராய்வதன் மூலம், வர்க்கங்களே இருந்திராத காலத்தில், சுரண்டுவோரும், சுரண்டப்படுவோரும் இருந்திராத காலத்தில் அரசு என்பது இருந்ததில்லையே ஏன்? என்பதையும், வர்க்கங்கள் தோன்றிய பொழுது அதுவும் தோன்றியது ஏன்? என்பதையும் நம்மை நாமே கேட்டுக்கொள்வதன் மூலம் மட்டும்தான், அரசின் சாரம் என்ன? அதன் பாத்திரம் என்ன? என்பது போன்ற கேள்விக்கான ஒரு திட்டவட்டமான விடையை நாம் பெறுவோம்.

அரசு என்பது ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரம். சமுதாயத்தில் வர்க்கங்களே இல்லாதபோது, அடிமை முறையின் காலக்கட்டத்திற்கு முன்பு மக்கள் அதிக சமத்துவமுடைய ஆதிகால நிலையிலேயே உழைத்த நாளில், உழைப்பின் உற்பத்தித்திறன் மிக மிகக் கீழ்ப்படியில் இன்னும் இருந்து வந்த சூழ்நிலையில், முற்றிலும் பண்படாத மிக மிக எளிய வாழ்வுக்கான சாதனங்களைப் பெறுவதே ஆதிகால மனிதனுக்கு அரிதாக இருந்த அந்நாளில், மக்களின் தனித்த ஒரு பிரிவு சமுதாயத்தின் மற்ற பகுதியின் மேல் ஆளுகையும், ஆதிக்கமும் புரிய வேண்டித் தனியாக ஒதுங்கிப் பிரிந்த ஒன்று தோன்றவில்லை; தோன்றியிருக்கவும் முடியாது.

சமுதாயம் வர்க்கங்களாகப் பிரிவதன் முதல் வடிவம் தோன்றிய பொழுதுதான், அடிமை முறை தோன்றிய பொழுதுதான், மக்களின் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் உழவுத் தொழிலில் சற்றும் பண்படாத முறைகளில் முனைந்து ஈடுபட்டு, அதன் மூலம் தேவைக்கு மேல் ஓரளவு உபரிப் பொருளை உற்பத்தி செய்ய முடிந்தபொழுதுதான், இந்த உபரிப்பொருள் அடிமையின் மிகவும் பிச்சைக்காரத்தனமான வாழ்வுக்கு இன்றியமையாததாக இல்லாமல், அது ஆண்டையின் கைகளில் சேரத்தொடங்கியது. இவ்வாறாக ஆண்டைகள் என்ற இவ்வர்க்கத்தின் நிலை உறுதியான பொழுது - அது மேலும் உறுதியாக வேண்டி, அரசு தோன்ற வேண்டியது அவசியமாயிற்று. (லெனினது நூல் அரசு, பக்கம் - 15, 16)

விளக்கம்:- பொதுவாக மனிதகுல வரலாற்றை நாம் ஆய்வு செய்யும் பொழுது, வர்க்கங்களே அல்லது மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு இல்லாத பொழுது அரசு என்பது இருந்ததே இல்லை அதற்கு என்ன காரணம்? என்பது பற்றியும், மனித சமுதாயம் சுரண்டும்வர்க்கம் என்றும் சுரண்டப்படும் வர்க்கம் என்று வர்க்கங்களாக பிளவு பட்டப்பொழுது அரசு என்பது தோன்றியது அதற்கு என்ன காரணம்? என்பது பற்றி நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொண்டு ஆராய்வது மூலமே அரசு என்றால் என்ன?

அரசின் சாரம் என்ன? அது சமூகத்தில் வகிக்கும் பாத்திரம் என்ன? என்ற திட்டவட்டமான உண்மைகளை நாம் கண்டுபிடிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும் என்றார் லெனின்.

அரசு என்பது ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட எந்திரமே, அதாவது நிறுவனமே என்பதை நாம் எப்பொழுதும் மறந்து விடக்கூடாது. இந்த உண்மையைத்தான் மக்களின் நண்பர்களாக நடித்துக் கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் துரோக அரசியல்வாதிகள் மக்களிடமிருந்து மறைக்கிறார்கள் அல்லது பூசி மொழுகுகிறார்கள். ஆதிகாலத்தில் மக்கள் மிக எளிமையான முறையில் உற்பத்தி செய்து அவர்களுடைய தேவையைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் அவர்களுடைய உற்பத்தி திறன் மிக மிக கீழ் நிலையில் இருந்த போது, மக்களிடையே ஒரு பிரிவினர் செல்வாக்காவும் அதாவது பணக்காரராகவும், பிறப்பிரிவினர் ஏழைகளாகவும் இல்லாத சூழலில், ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை அடக்கி ஒடுக்கி ஆள்வதற்கான அவசியம் இல்லாது இருந்த நிலையில் பெருவாரியான மக்களிடம் இருந்து பிரிந்து ஒரு தனிப்பட்ட மக்கள் பிரிவு அதாவது ஆதிக்கம் செய்ய வேண்டிய பிரிவு தோன்றுவதற்கு அவசியம் இல்லாத இருந்த நிலையில், ஆதிக்கம் செய்வதற்காக ஒரு பிரிவு தோன்றவில்லை, தோன்றியிருக்கவும் முடியாது என்றார் லெனின்.

சமுதாயம் வர்க்கங்களாக பிரிந்த முதல் வடிவம், ஒரு பிரிவினர் ஆதிக்கம்செய்யும் ஆண்டைகளாகவும் பிற பிரிவினர் இவர்களது ஆதிக்கத்துக்குகட்டுப்பட்ட அடிமைகள் ஆகவும் உருவானபோதுதான் அதாவது மிகப் பெருவரியான உழைக்கும் மக்கள் பிச்சைக்காரத்தனமான முறையில் வாழ்ந்து வருவதும் சமூகத்தில் ஒரு சில பிரிவினர் இந்த உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட அனைத்து செல்வங்களையும் தன் வசப்படுத்திக் கொண்டு செல்வந்தர்களாக மாறியபொழுது, அந்த நிலை மேலும் மேலும் வளர்ந்து உறுதியான பொழுது, அவர்களுடைய செல்வங்களை அதாவது உழைக்கும் மக்களிடம் இருந்து பறிமுதல் செய்த செல்வங்களை அவர்கள் பாதுகாப்பதற்கான அவசியம் ஏற்பட்ட பொழுது அரசு என்ற ஒரு அமைப்பு, உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான அவசியத்தில் இருந்து தோன்றியது. ஆகவே அரசை உருவாக்கியது சமூகத்தில் உருவான சுரண்டும் வர்க்கங்கள், அவர்களின் செல்வங்களை பாதுகாத்து வளர்ப்பதற்காக, அவர்களால் தான் உருவாக்கப்பட்டது என்பதை நாம் எப்பொழுதும் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு சுரண்டும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்டு சுரண்டும் வர்க்கங்களின் நலனுக்காக செயல்படும் அரசு நீடிக்கும் வரை, உழைத்து வாழும் ஏழை எளிய மக்களுக்கு அவர்களுடைய உழைப்பின் பலன் முழுமையாக கிடைக்காது, மேலும் அவர்கள் கொத்தடிமைகளாக வாழ்வதைத் தவிர வேறு வகையான வாழ்க்கை அதாவது சுதந்திரமான வாழ்க்கை கிடைக்காது என்றார் லெனின்.

அது தோன்றியே விட்டது அதாவது ஆண்டைகளின் அரசு ஆண்டைகளுக்கு அதிகாரம் தந்து அடிமைகள் எல்லோர் மீதும் ஆட்சி புரியும் திறனுடையவராக அவர்களை ஆக்கிய ஓர் இயந்திரம் தோன்றியே விட்டது.

சமுதாயம் அரசு இரண்டுமே இன்று இருப்பதைவிட அன்று மிக மிகசிறியனவாக இருந்தன. இன்றைய நிலையுடன் ஒப்பிடவே முடியாத அளவுவலுக்குறைவான, தொடர்பு நிலவுவதற்கான சாதனங்களையே அவைகொண்டிருந்தன. தற்காலத்து போக்குவரத்து சாதனங்கள், அன்று இருந்தது இல்லை, மலைகளும் ஆறுகளும் கடல்களும் இன்று இருப்பதைவிட அளந்தறிய முடியாதவாறு மாபெரும் தடைகளாக இருந்தன.

அரசு உருவாவது தற்காலத்துடன் ஒப்பிடும் பொழுது மிகக் குறுகியபூகோள எல்லைகளுக்கு உட்பட்டிருந்தது. நிர்வாக முறைகளில் வலுக்குறைந்த அரசாங்க இயந்திரம் ஒப்புநோக்கில் குறுகளான எல்லைகள்,குறுகலான செயல்வட்டம் ஆகியவற்றுள் அடங்கிக் கிடந்த அரசுக்குப்பணியாற்றியது. ஆயினும் அடிமைகள் தொடர்ந்து அடிமைகளாகஇருக்குமாறு கட்டாயப்படுத்திய, சமுதாயத்தின் ஒரு பகுதிமற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டு, அதனால் ஒடுக்கப்பட்டு இருக்குமாறு செய்த ஓர் இயந்திரம் இருக்கத்தான் செய்தது. வன்முறைக்குரிய நிலைத்த இயந்திரம் இல்லாமல் சமுதாயத்தின் பெரும்பாலான பகுதியைச் சமுதாயத்தின் மற்றப் பகுதிக்காக முறையாக உழைக்கும்படிக் கட்டாயப்படுத்துவது முடியாத காரியம்.

வர்க்கங்கள் இல்லாமலே இருந்த வரையில், இந்த இயந்திரமும் இருந்ததேஇல்லை. வர்க்கங்கள் தோன்றிய பொழுது, எங்கும், எப்பொழுதும் இந்தப்பிரிவினை வளர்ச்சி பெற்று வலுவடைந்ததோடு கூட தனித்த ஓர் ஏற்பாடு - அதாவது அரசு தோன்றிற்று. அரசின் வடிவங்கள் அளவிறந்துவேறுபட்டவை. அடிமை முறையின் காலப்பகுதியிலேயே இந்தக்காலத்துக்கு ஏற்ப மிக மிக முன்னேற்றமும், பண்பாடும் நாகரீகமும் பெற்ற நாடுகளில் - எடுத்துக்காட்டாக, முற்றிலும் அடிமை முறையின்அடிப்படையில் நிலை பெற்றிருந்த பண்டைய கிரேக்க, ரோம தேசங்களில் - அரசின் பல்வேறு வடிவங்கள் இருந்ததை நாம் காண்கிறோம். (லெனினது அரசு நூல், பக்கம் - 16, 17)

விளக்கம் - ஆண்டைகளுக்கான அரசு தோன்றி விட்டது, அந்த அரசில்ஆண்டைகளுக்கு அதிகாரம் தரப்பட்டது, பிற மக்களை அதாவதுஅடிமைகளை அடக்கி ஒடுக்கி ஆளும் திறமை படைத்தவர்கள் நிறைந்தஒரு நிறுவனம் அதாவது அரசு தோன்றி விட்டது. அன்றைய சமுதாயமும்அன்றைய அரசும் இன்றைய சமுதாயம் மற்றும் இன்றைய அரசோடுஒப்பிடும் பொழுது மிக மிக சிறியவையாக அந்த அரசு இயந்திரம்இருந்தது. வலுக்குறைவானதாகவே இருந்தது. இன்றைய காலத்தில்உள்ளது போல் போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாதநிலையிலேயே இருந்தது. மலைகள் ஆறுகள் கடல்கள் போன்றவற்றைகடந்து செல்வதற்கு தேவையான ஆற்றல் மக்களிடம் மிகவும்குறைவாகவே காணப்பட்டது.

இன்றைய கால அரசின் ஆட்சி அதிகார எல்லைகள் மிக விரிவாகஇருப்பதை நாம் காண்கிறோம். இதுபோன்று விரிவான எல்லைகளைக்கொண்ட அரசுகளாக அன்றைய அரசுகள் இருந்ததில்லை. குறுகலானஎல்லைகளும் குறுகலான செயல்பாடுகளும் தான் அப்பொழுது இருந்தது.

ஆனாலும் ஒரு பிரிவு மக்களை வேறொரு பிரிவு மனிதர்கள் அடக்கிஒடுக்குவதற்கான ஒரு இயந்திரமான வன்முறை கருவிகளை கையில்ஏந்திய நிறுவனங்கள் எப்போதும் நிலவி வந்தது. இத்தகைய வன்முறைகருவியான அரசு இயந்திரம் இல்லாமல் பெரும்பாலான உழைக்கும்மக்களை சிறுபான்மையான சுரண்டுகின்ற மக்களால் கட்டுப்படுத்திஅவர்களுக்காக உழைக்கும் படி கட்டாயப்படுத்த முடியவே முடியாது.

இப்பொழுதும் இங்குள்ள அரசுகள் அது பெருமுதலாளிகளின்சுரண்டலுக்காக அல்லது அவர்களுக்காக உழைக்கும் படி உழைக்கும்வர்க்கத்தை கட்டாயப்படுத்தும் தன்மை கொண்டதாகவே இந்த அரசுஇருப்பதை நாம் காணலாம். இத்தகைய அரசு இல்லாமல் இந்தியாவில்உள்ள பெருமுதலாளிகளால் ஒருபோதும் தங்களது சுரண்டலை நடத்தமுடியாது, உழைக்கும் மக்களின் மீது ஆதிக்கத்தை செலுத்த முடியாதுஎன்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகில் வர்க்கங்கள் இல்லாமல் இருந்த வரை, இது போன்ற அரசு என்றவன்முறை இயந்திரம் இருந்ததே இல்லை. எப்போது வர்க்கங்கள்தோன்றியதோ, அந்த வர்க்கப் பிரிவினையானது மேலும் மேலும்வலுவடைந்த பொழுது கூடவே அரசு என்ற ஒரு ஏற்பாடு அல்லதுநிறுவனம் ஏற்பட்டது. இத்தகைய அரசுகள் அனைத்தும் ஒரே வடிவத்தில்உலகத்தில் அமைந்தது இல்லை. உலகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும்இந்த அரசின் வடிவம் வெவ்வேறாக இருந்தது, இப்பொழுதும் இருப்பதைநாம் காணலாம். பிரிட்டிஷ் அரசு வடிவத்திற்கும் அமெரிக்க அரசுவடிவத்திற்கும் ஒற்றுமையும் உண்டு வேற்றுமையும் உண்டு. ஆனாலும்இந்த வேற்றுமைகள் எவ்வளவுதான் பெரிதாக இருந்தாலும் இதற்கு ஒருஅடிப்படை உண்டு, அது என்ன? சுரண்டும் வர்க்கங்கள் அவர்களின்நலனுக்காக பாடுபடுவதும் அவர்களது நலனுக்காக உழைக்கும் மக்களைஒடுக்குவதும் தான் இந்த அரசுகளின் பொதுவான தன்மையாக இருப்பதைநாம் காணலாம். ஆகவே அரசு என்பது ஒரு வன்முறை கருவி, வன்முறைகருவிகளை கையில் ஏந்தி உள்ள ஆயுதப் படைகளைக் கொண்டநிறுவனம்தான் அரசின் முதன்மையான நிறுவனம் ஆகும். இந்தஉண்மையை நாம் எப்போதும் மறந்து விடக் கூடாது. தேன்மொழி.

இலக்கு 76 pdf வடிவில் இந்த இணைப்பில்

+++++++++++++++++++++

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்