ஆசிரியர் பகுதியிலிருந்து
இலக்கு 76 இணைய இதழை பெற இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே
தோழர்களுக்கு வணக்கம்,
இலக்கு இணைய இதழ் நான்காம் ஆண்டில் தொடர்ந்து கொண்டுள்ளது. எங்களின் எழுத்துகள் மார்க்சிய ஆசான்களின் போதனைகளின் அடிப்படைகளையும், மார்க்சியம் கற்றலின் அவசியத்தையும் மக்களுக்கு உணர்த்தியும் எழுதிக்கொண்டு இருக்கிறோம்.
சில நேரங்களில் இங்குள்ள சிலரிடம் காணப்படும் மார்க்சியம் அல்லாத போக்குகளையும், அவர்கள் மார்க்சியத்திலிருந்து விலகிச் செல்வதையும் சுட்டிக்காட்டியும் எழுதிக்கொண்டிருக்கிறோம். எங்களது நோக்கம், மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை வளர்தெடுக்க செய்யும் முயற்சிதான். நாங்கள் இதுவரை தனிநபர்களையோ கட்சிகளையோ குழுக்களையோ எவ்விதமான விரோதம் கொண்டு தாக்கி எங்கள் இதழ்களில் எழுதவில்லை. அவர்களது மார்க்சிய விரோதப் போக்கை சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதனை அவர்கள் பரிசீலித்து அவர்களது தவறுகளை சரிசெய்தால் அவர்களுக்கும் மக்களுக்கும் நல்லது. ஆனால் ஜீன் மாதம் ம.ஜ.இ.க என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு நூலில் இலக்கு இணையதள இதழ் மீது வன்மம் கொண்டு எழுதியுள்ளது. எங்கள் எழுத்தின் மீது ஏதோ காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது தெளிவு. அவர்களின் காழ்ப்புணர்ச்சி எவ்வகையிலும் மார்க்சிய வளர்சிக்குப் பயனுள்ளவை அல்ல. அவர்களை உயர்வாக காட்டிக் கொள்ள, மற்றவர்களை தாழ்வாகவும் தீயவர்களாகவும் காட்டும் பண்பு என்பது சாதரண மக்களிடையே உள்ள பண்புதான். இத்தகைய தவறான பண்புகளை கம்யூனிஸ்டுகள் சரிசெய்தால் மட்டுமே அவர்கள் உண்மையான கம்யூனிஸ்டுகளாக வளரமுடியும் என்ற மார்க்சிய ஆசான்களது போதனைகளை மஜஇக தலைமையானது பின்பற்ற தவறுகிறது. எவ்வித ஆதாரமும் இல்லாமல், எந்த அடிப்படையில் எங்கள் மீது NGO முத்திரை இவர்களால் குத்தப்பட்டுள்ளது?. அதை அவர்களே நிரூபிக்க கடமை பட்டவர்கள். எங்களின் எழுத்துகளில் அதுபோல் NGO களின் கருத்துக்கள் இருந்தால் ஆதாரபூர்வமாக முன்வைத்து விமர்சிக்கலாம். அதுபோன்ற விமர்சனங்களை இவர்கள் செய்ததே இல்லை. மாறாக ஆதாரமில்லாமல் முத்திரை குத்துவதையே இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் இன்று செய்யும் தவறுகளுக்கான அடிப்படையை இவர்களின் குருநாதர் AMK யின் கடந்த கால அமைப்பின் செயல்பாடுகளிலிருந்து தேடினால் விடைகிடைக்கும். AMKஇன் அரசியல் மற்றும் அவரின் ஒவ்வொரு செயல்களையும் ஆதாரபூர்வமாக அவர்களின் ஆவணம் கொண்டே ஆய்வு செய்து புரிந்து கொள்ள வேண்டும். இவர்களை போன்று தலைமையை கடவுளாக பூசிக்கும் ஒரு அமைப்பு இன்று அதன் செயல்பாடு என்னவாக உள்ளது? என்பதையும், ஒரு புரட்சிக்கான அமைப்பு எப்படியெல்லாம் இருக்க கூடாது என்ற படிப்பினைகளை இவர்களின் வரலாற்று அனுபவத்தின் மூலம் நாம் கற்க வேண்டும். அதாவது AMK ஒரு எதிர்மறை ஆசானாவார். அதே வேளையில் இங்குள்ள ஒவ்வொரு குழுவைப் பற்றியும் அதன் அரசியல் வரலாறு மற்றும் செயல்பாடுகள் குறித்தும்; அதேபோல் இடதுசாரிகள் இங்கு என்ன செய்து கொண்டுள்ளனர்? என்பதையும், அவர்கள் செய்ய மறந்தவற்றையும், கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய பணியைப் பற்றியும் புரிந்துகொள்ள முயலுவோம். இப்பணியில் எங்களின் எழுத்துகளில் உள்ள நிறைகுறைகளை நீங்கள் விமர்சன பூர்வமாக சுட்டிக்காட்ட அழைக்கிறோம் தோழர்களே.
இந்திய வரலாற்றில் விடுதலைக்கான போராட்டத்தில் ஆரம்பகால கம்யூனிஸ்டுகளின் தன்னலம் கருதாத போராட்டம் தியாகம் மற்றவர்களின் எல்லாப் போராட்டங்களை விட மேலானது, உயர்வானதாகும். அதிலும் குறிப்பாகப் புரட்சிக்காகப் போரிட்ட நக்சல்பாரி தியாகிகளின் போராட்டம் புரட்சி தீயில் தன்னைப் புடம் போட்டது மிகவும் மதிக்கத்தக்கதாகும்;இந்திய வரலாற்று பக்கங்களில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டியவை. அவை, அவர்களின் உயர்வான பணிதியாகம் மற்றும் செயல் பற்றி பேசும் அதே நேரத்தில் அவர்களின் புரியாமல் செய்த தவறான பக்கங்களையும் விரிவாக ஆராயவேண்டிய அவசியம் உள்ளது.
கடந்த காலத்தை வெறுமனே தெரிந்து கொள்வதற்காக மட்டுமே நாம் கடந்த காலத்தை பற்றி அக்கறை கொண்டிருக்கவில்லை, கடந்த காலத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு தற்போதைய காலத்திலும், எதிர்காலத்திலும் நாம் முன்பு செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் தவிர்ப்பதற்கும் நாம் முன்புசெய்த சரியான விசயங்களை மேலும் செழுமைப்படுத்தி செயல்பட வேண்டும், அதற்காகவே கடந்தகால வரலாற்றை நாம் படிக்கவேண்டும். இந்திய மக்களின் விடுதலை என்ற லட்சியத்துடன் நாம் கடமைப்பட்டுள்ள பொழுது தனிநபர் பாத்திரத்தை மட்டும் நாம் முதன்மைபடுத்தக் கூடாது. எனவே நமது தலைவர்கள் மீது நாம் வைத்துள்ள மதிப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. கட்சியின் கொள்கைகளில் நிலவும் எதிர்மறை தவறுகளை ஆய்வதில் தயக்கம் காட்டக்கூடாது. தலைவர்களுடைய கொள்கைகள், நடவடிக்கைகள் அவர்களுடைய குறைபாடுகள் மற்றும் எல்லைகள் ஆகியவற்றை நாம் மூடி மறைக்கக்கூடாது. அதே நேரத்தில் அவற்றை வெளிப்படுத்தும் பொழுது தலைவர்களுடைய மனம் புண்பட்டு விடும் என்று கருதாமல் வெளிப்படையாகவும் அச்சமில்லாமலும் வெளிப்படுத்த வேண்டும். “எதிர்கால தவறுகளை தவிர்ப்பதற்காக கடந்த கால தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” நமது தலைவர்கள் பின்பற்றிய தவறான கொள்கைகளை விமர்சிப்பதன் மூலமாக நாம் நமது சுய விமர்சனத்தை மேற்கொள்கிறோம். மாவோ கூறியது போல்,”கடந்த காலத்தில் மக்களுக்கு இருந்த அனுபவமின்மையின் காரணமாக இடது விலகல் பிரச்சினை இருந்தது. அனுபவம் இல்லையேல் தவறுகள் தவிர்ப்பது கடினமாகும். நிகழ்ச்சி போக்கின் ஊடாகதான் ஒருவர் பயணிக்க வேண்டும்”.
நம்மிடம் உள்ள சில ஆவணங்கள் அடிப்படையில் தான் இதனை தேடுகிறோம் இது முழுமையானது இல்லை என்றாலும் இங்குள்ள அமைப்பு சார்ந்த வெளியீடுகள் தான் நமக்கு ஆதாரமாக உள்ளது.
நக்சல்பாரி இயக்கம் நமக்கு நம்பிக்கையை விதைத்தது, நமது மக்களை ஒடுக்குமுறையில் இருந்தும் சுரண்டலிருந்தும் காப்பாற்றுவது பற்றி நம்பிக்கை அந்த நம்பிக்கை இன்னும் நனவாகாமல் உள்ளது. எவ்வளவுதான் நீண்டகாலம் ஆனாலும் இடர்பாடுகள் மிக்க பாதையாக இருந்தாலும் எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டாலும் புரட்சியானது வெற்றி பெற்றே தீரும் நமது நம்பிக்கையும் நனவாகும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
இதுவரை வரலாற்றில் தோன்றிய சமூகங்களில் சொத்துடமை, அரசியல் அதிகாரம், அதன் அடிப்படையிலான சமூக ஏற்றதாழ்வு ஆகியவற்றை ஆய்வு செய்து மூன்றுவகையான வர்க்க சமுதாயம் பற்றி நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். இந்த மூன்றுவகையான வர்க்க சமுதாயத்திலும் உழைக்காமல் மற்றவர்களின் உழைப்பில் வாழ்பவர்களின் கைகளிலேயே அரசியல் அதிகாரம் இருப்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள்தான் சமூக அரசியல் கொள்கை கோட்பாடுகளை வகுத்து அவர்களின் அரசின் மூலம் பெரும்பான்மையினரின் உழைப்பை சுரண்டி அவர்களை அடக்கி ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். இதிலிருந்து மாறுபட்டதுதான் சோசலிச ஆட்சிமுறையாகும். பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராடி உருவாக்கப்பட்டதுதான் இந்த சோசலிச ஆட்சிமுறையாகும். பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் தேவைக்களை பூர்த்தி செய்வதற்கான அரசாக சோசலிச அரசு அமைக்கப்பட்டு செயல்பட்டது. இந்த முறையில் பெரும்பான்மைக்காக சிறுபான்மையர் கட்டுப்படுத்தப்பட்டனர். சுரண்டல் இல்லா சமூகத்திற்காக சுண்டலை ஒழித்து சொத்து (உற்பத்திச் சாதனங்கள்) பொதுவுடமை ஆக்கப்பட்டது. அங்கேதான் பல்வேறு விதமான அடக்குமுறை, ஒடுக்குமுறை, சமூக ஏற்றத்தாழ்வு, தேசிய இன ஒடுக்குமுறை, பெண்ணடிமைத்தனம், உயர்வு தாழ்வு கற்பிப்பது, மற்றும் பல்வேறு விதமானஒடுக்குமுறைக்கான தேவைகள் ஒழிக்கப்பட்டு, சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான செயல்பாடுகள் நடந்தேறியதை வரலாற்றுப் பக்கங்களில் நாம் காண்கிறோம்.
ஆகவே புரட்சி என்பது என்ன என்று தெளிவு பெற்றுக் கொண்டு, பொதுவுடமையை நோக்கிய சோசலிச புரட்சியின் அனுபவங்களும் மற்ற புரட்சியின் அனுபவங்களும் நமக்கு தரும் பாடங்களிலிருந்து தற்போதைய கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் செயல்பாட்டை நாம் பரிசீலிக்க வேண்டும். அன்றைய செயலில் புரட்சிக்காக அர்பணிப்புடன் செயல்பட்ட கட்சியின் பின் உழைக்கும் மக்களும் பல்வேறு பிரிவினரும் அணி திரண்டனர். பலர் தியாகியாகவும் தயங்கவில்லை, தன்னுடைய உயிரை துச்சமாக மதித்து நேர்மையாக செயல்பட்டார்கள். அவர்களின் செயல்பாட்டால் மக்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் மதிக்கப்பட்டனர். அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களின் சொத்துகளை கைவிட்டு உழைக்கும் மக்களின் விடுதலைக்காக களத்தில் இறங்கி போராடி அவர்களின் உற்ற துணைவர்களாக வாழ்ந்து காட்டினர். இன்றோ கட்சியில் பொறுப்பு பெறுவது, தன் குடும்பம், தனது சொத்து சேர்க்க என்றாகி சிலர் ஆட்சி அதிகாரதிற்கு வந்து முதலாளிகளாக துடிக்கும் பொழுது அன்றைய கம்யூனிஸ்டுகளும் இன்றைய கம்யூனிஸ்டுகளும் ஒன்றல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோல் அன்று புரட்சிக்காக உயிர் நீத்த தியாகிகளின் பெயரில் வாழும் குழுக்களும் இன்று
தங்களின் மூதாதையரின் பெயரை உச்சரித்து உயிர்வாழ துடிக்கின்றனர். ஆனால் தியாகத் தலைவர்களின் கொள்கை கோட்பாடுகளுக்கு உண்மையாக இல்லை என்பதே நம் முன் உள்ள உண்மையாகும். இன்றைய நிலையை நாம் புரிந்துக் கொள்ள, மார்க்சிய ஆசான் லெனினிடம் செல்வோம், “முதலாளி வர்க்கத்தின் ஒன்று படுத்தப்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட சக்திக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட மற்றும் மையப்படுத்தப்பட்டதொரு சக்தியாக மாற்றாக மக்கள் நிறுத்தப்பட வேண்டும்” - என்று மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் வழிகாட்டியது. ஆனால் அதுபோன்ற ஒரு நிலை இங்கில்லை. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் குருசேவின் வழிகாட்டுதலை ஏற்றுள்ள எல்லா கம்யூனிஸ்ட் கட்சிகளும் முதலாளித்துவ கட்சிகளிடம் சமாதானமுறையில் இணக்கமாக செயல்பட்டு தொழிலாளி உழைக்கும் வர்க்கதிற்கு துரோகம் செய்கிறது. அதேபணியைதான் புரட்சி பேசுபவர்களும் ஏமாற்றுகின்றனர். இங்குள்ள எல்லா குழுக்களும் மார்க்சியம் கூறியுள்ள சமூக மாற்றத்தில், வெகுசனங்களின் பங்களிப்பை புறக்கணித்துவிட்டு ஒருசிலர் மட்டும் ஒன்று கூடி என்ன சாதித்தனர்? ஆக ரசியா மற்றும் சீனப் படிப்பினைகளின் அடிப்படையில் புரட்சிக்கான பணியினை செய்யாத இவர்களை எதிர்புரட்சியாளர்கள் என்பதில் தவறில்லைதானே?
இந்தியாவை கொள்ளை அடிக்க துடிக்கும் ஏகாதிபத்திய கொள்ளையர்கள்முதல், இன்நாட்டு சுரண்டல் பேர்வழிகள் வரை - இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக ஏராளமான இயற்கை வளங்களை கொண்ட நாடாக பெரிய சந்தையாக இருப்பதால் இங்குள்ள மக்களை மற்றும் செல்வங்களை இவர்களது மூலதனம் மூலம் சுரண்டுவதும், அதேவேளையில் நாட்டின் இயற்கை வளங்களை தங்களின் தேவைகேற்ப கொள்ளையடிப்பதும், தொடர்கதையாக உள்ளது. இங்கு ஒன்றுபட்ட போராட்டங்களை கட்டியமைக்க வேண்டிய ஒரு புரட்சிகர பொதுவுடைமை கட்சி இல்லை. அதேபோல் நாட்டின் பெரும்பாலன உழைப்பு சக்திகள் (உழைப்பாளர்கள்) அவர்களின் மீதான சுரண்டல் ஒடுக்குமுறைக்கான காரணம் பற்றியும் சுரண்டலாளர்களை பற்றியும் அவர்களுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பையும் அறியாத நிலையிலேயே உள்ளனர். அது பற்றிய உண்மைகளை அவர்களுக்கு போதித்து எதிரிக்கு எதிரான போருக்கு மக்களை கம்யூனிஸ்டுகள் இங்கு வளர்த்தெடுக்கவில்லை. ஆனால், எதிரிகள் மக்களை பிரித்து வைத்துள்ளான். அதன் அடிப்படையிலேயே மக்களின் எதிரிகள் மக்களை அடிமைப்படுத்தி ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். மக்களை இந்து மத ரீதியாகஒன்றிணைக்க நினைக்கும் மதவாத கட்சி ஆட்சியில் இருக்கிறது, சாதி ரீதியாகவும், இனரீதியாகவும் இன்னும் சில வழிகளில் மக்களை பிரிவினை செய்து அவர்களுக்கான முக்கிய பிரச்சினையின் அடிப்படையில் திரள்வதை தடுக்க, மதமாக, சாதியாக, மொழியாக, இனமாக இன்னும் சில பிரச்சினைகளின் அடிப்படையில் பிரிந்து ஒருவருக்கெதிராக இன்னொருவரை நிறுத்தி அவர்களுக்குள் மோதிக்கொள்ள தேவையற்ற முரண்பாட்டை தொடர்ந்து வளர்க்க ஆளும் வர்க்கமும் அதன் எடுபிடிகளும் முயல்கிறார்கள்.
அதே சமயம் நாட்டில் பொதுவுடமையை நேசிக்கும் மற்றும் அதனை படைக்க விரும்பும் சக்திகள் பிரிந்து நிற்கின்றன. ஒரே குடையின் கீழ் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு நின்றால் யொழிய நாட்டில் சோசலிசம் சாத்தியம் இல்லை. நாட்டில் புரட்சியை நேசிக்கும் சக்திகள் ஒன்றுபட்டு நின்றால் யொழிய சாதகமான புறநிலை இருந்தாலும் அதை பயன்படுத்த முடியாத கையறுநிலை ஏற்படும், அந்த நிலையில்தான் இந்திய உழைக்கும் மக்கள் சமூகம் உள்ளது.
இன்று கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அமைப்புகள் என்ன நிலையில் உள்ளது? தலைமை கூறுவதை கேட்டு நடக்கும் நடைமுறை, இதில் விமர்சனதிற்கு இடமே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை கேள்வி கேட்பதா என்ற நிலை உள்ளதென்றால் புரட்சி பேசும் குழுக்களும் விதிவிலக்கல்ல! தங்களைக் கேள்வி கேட்பவர்களை தேவையற்றவர்களாக தூர எறிவது தானே தொடர்கதையாக உள்ளது. இந்த இரண்டு போக்கிலும் இங்கு சித்தாந்த போராட்டம் நடைபெறுவதற்கு எந்த சாத்தியப்பாடும் இல்லை. விமர்சனம், சுயவிமர்சனம் என்பதே இவர்களுக்கு வேப்பங்காயாக உள்ளது. ஆக இவர்கள் கம்யூனிசத்தின் அடிப்படைகளை மறுத்து விட்டு தங்களை கம்யூனிஸ்டுகள் என்றும் புரட்சிக்கான அடிப்படைகளை புறக்கணித்துவிட்ட இவர்கள் புரட்சியாளர்கள் என்றும் நடை போடுகிறார்கள். வெட்ககேடு இவர்களின் ஒவ்வொரு செயலும். இவர்களுக்கு இடையில் உள்ள புரட்சியை நேசிக்கும் சக்திகள் உழைக்கும் மக்களை நேசிக்கும் சக்திகள் விழிப்படைந்து ஒரு சரியான மார்க்சிய லெனினிய வழிமுறையை கற்று தேர்ந்து இந்த உழைக்கும் மக்கள் விரோத கட்சிகளையும் போலி புரட்சியாளர்களையும் புறக்கணித்து உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கட்சி அவசியம் என்று உணர்ந்து செயல்பட தொடங்கினால் இந்த போலிகள் இல்லாது ஒழிவார்கள்.
எல்லாப் புரட்சிகர வர்க்கங்களையும் -பிரிவினரையும்- மக்கள் திரளினரையும் அணிதிரட்டி இந்தப் பெரும் சிறப்பு வாய்ந்த போராட்டத்தில் இந்தியப் பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை கொடுக்க வேண்டியது கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுக் கடமையாகும். அதற்கான அடிப்படைகளை தத்துவ அரசியல் வழிமுறைகளை கண்டு விவாதித்து மக்களை அந்த உயர்வான சமூகம் படைக்க அணி திரட்ட மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிதளங்களை கற்று தேர்வதன் அவசியம் உணர்வோம் செயல்படுவோம் தோழர்களே.
தோழமையுடன் இலக்கு ஆசிரியர் குழு.
இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்
1). ஆசிரியர் பகுதி
2). அரசு பற்றி லெனின் பாகம் 3
3). இந்திய தேசிய இன சிக்கல் குறித்த மா-லெ கண்ணோட்டம்
4). உட்கட்சி போராட்டம் பற்றி - லியூ ஷோசி - பாகம் 1
5). தத்துவமும் நடைமுறையும்
No comments:
Post a Comment