தோழர்களுக்கு வணக்கம்,
இந்த இதழில் நாம் செய்ய வேண்டியதை மார்க்சிய ஆசான்கள் செய்தவையில்
இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை
1).ஆசிரியர் பகுதி
2)முதலாளியப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் இடையிலான உறவு குறித்து. பாகம் 1
3).மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை. ஜார்ஜ் தாம்ஸன். பாகம் - 3
2. வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துதல்.
மார்க்சியம் வெல்வதற்கரிய ஓர் உலகத் தத்துவம். அவை மானுட சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை ஆழ்ந்து ஆராய்ந்து விளக்கி சுரண்டலில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறையை நம் முன் வைத்துள்ளது. அதற்கான கண்ணோட்டமும் தத்துவமும் மார்க்சியம்தான் அல்லவா?. மார்க்சியம் உழைக்கும் மக்கள் எல்லோருக்குமான வழிகாட்டும் தத்துவமென்றால் இங்கு கம்யூனிஸ்டுகள் பல்வேறு கட்சிகளாவும், அமைப்புகளாகவும், குழுக்களாகவும் மற்றும் தனிநபர்களாகவும் பிளவுபட்டுள்ளோம். ஏன்? இந்த அவலம் ஏன்? என்று கேள்வி எழுப்புவதோடு மார்க்சிய ஆசான்கள் சொன்னவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் எப்படி மார்க்சியவாதியாக கம்யூனிஸ்டாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அதனைப் பற்றி தேடுவதோடு இங்கே உள்ள பல போக்குகளை ஆராய்வது அவசியம் ஆகும்.
அன்றைய சோசலிச நாடுகளின் சாதனைகள் சில கீழ்கண்டவாறு.....
1). இலவச கல்வி, இலவச மருத்துவம் அனைத்து மக்களுக்கும் கிடைத்தது.
2). வயது வந்தோர் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது.
3). பொது சமையல் கூடம், குழந்தை பராமறிப்பு முதியோர் பராமறிப்பு பெண்கள் வீட்டு சமையல் கூடத்திலிருந்து வெளியேறி சமூக உற்பத்தியில் ஈடுபடல். போன்றவற்றின் மூலம் பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தது.
4). கூட்டுபண்ணையும், பொதுத் தொழிற் கூடம், மூலம் தனிசொத்துடமை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
5). பெருமுதலாளிகளுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் உடமையாக்கப்பட்டது.
இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் இத்தகைய சாதனையை உலகில் எந்த நாட்டிலும், எந்த ஆட்சியாளர்களும் இதனை இன்றுவரை சாதித்ததில்லை. ஆனால் உலகம் முழுவதிலுமுள்ள பிற்போக்கு அரசியல்வாதிகள் சோசலிசத்தை தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு கொடுமை என்னவென்றால் தன்னை கம்யூனிஸ்டு என்று சொல்லிக்கொள்பவர்கள் சோசலிச கொள்கையையும் அதன் பலன்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்வதே இல்லை. ஒருசில அமைப்புகள் சோசலிசத்தைப் பேசினாலும் சோசலிசத்தை அடைவதற்கான மார்க்சிய வழிமுறையைப் பின்பற்றுவதில்லை. மாறாக தொழிற்சங்கவாத முறையையே பின்பற்றுகிறார்கள். சோசலிசப் புரட்சிக்காக மக்களுக்கு உணர்வூட்டி திரட்டுவதில்லை.
கம்யூனிஸ்டுகள் செய்யும் தவறுகளை மக்களிடம் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டும் என்றார் லெனின். ஆனால் இங்கேயுள்ள தலைவர்கள் அதிகமாக தவறுகள்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளை ஒத்துக்கொள்வதே இல்லை, மாறாக தொடர்ந்து மூடிமறைக்கிறார்கள் மேலும் தனது தவறை மறைக்க பிறர்மீது குற்றம் சாட்டுகிறார்கள்.இவர்கள்போராடுவதற்கு தயாரில்லாத உண்மையை மறைத்து விட்டு மக்கள் போராடத்தயாரில்லை என்று மக்களின் மீதே குற்றம் சாட்டுகிறார்கள். அன்றைய லெனினிஸ்டுகள் தங்களது குற்றங்களை ஒத்துக்கொண்டதோடு அவர்களது குறைகளை சரிசெய்வதற்கு விருப்பு வெறுப்பின்றி பரிசீலனை செய்து குறைகளை களைந்தார்கள். அதன் பயனாகவே அவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மக்களைத் திரட்டி வெற்றிகொள்ள முடிந்தது. ஆனால் இங்குள்ள கம்யூனிஸ்டுகள் செய்யும் தவறுகளை புரிந்துகொள்வதும் இல்லை, பிறர் குறைகளை சுட்டிக்காட்டினாலும் அதனை பரிசீலிப்பதில்லை மாறாக குறைகளை சுட்டிக் காட்டுபவர்கள் மீது அவதூறு செய்வது, குறைகளை களைவதற்கு எவ்விதமான முயற்சியும் எடுக்காமல் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
வர்க்கப் போராட்டத்தை நாம் எப்படி நடத்துவது என்பதை குறிப்பாக வர்க்க ஆய்வுகளின் அடிப்படையிலேயேதான் நாம் நடத்த வேண்டும். வர்க்கப் போராட்டம் என்றால் பொருளாதாரப் போராட்டம், அரசியல் போராட்டம், சித்தாந்தப் போராட்டம் என்ற மூன்றையும் உள்ளடக்கியப் போராட்டம் ஆகும். ஆகவே நாம் வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கு நடைமுறையிலுள்ள பொருளாதார உற்பத்தியைப் பற்றி ஆய்வு செய்து மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான பொருளாதாரத்தை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். அத்தகைய பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக மக்களை திரட்ட வேண்டும். அந்தக் கட்டத்தில் நிலவுகின்ற புரட்சிகரமான வர்க்கங்களைப் பற்றி ஆய்வு செய்து புரிந்துகொண்டு அந்த புரட்சிகரமான வர்க்கங்களைக் கொண்ட அரசை நாம் உருவாக்க வேண்டும். இப்பிரச்சனைகள் தொடர்பான பல்வேறுவிதமான கருத்துக்களுக்கு இடையில் விவாதங்கள் நடத்தி, மார்க்சிய கண்ணோட்டத்தி லிருந்து சரியான கொள்கைகள், நடைமுறைகளை முடிவு செய்து மக்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். இந்த முறையில்தான் நாம் வர்க்கங்களை ஒழிக்கும்வரை வர்க்கப் போராட்டத்தை தொடர வேண்டும். ஆனால் திருத்தல்வாதிகளும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களும் வர்க்கங்கள்இருக்கும்வரை வர்க்கப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற மார்க்சிய கொள்கையின் முக்கியத்துவத்தை மூடிமறைத்துவிட்டு சாதிப் போராட்டம், மதப் போராட்டம் பெண்ணடிமைக்கான போராட்டம் தேசிய இன விடுதலைப் போராட்டம் என்று தனித்தனியான போராட்டம் பற்றி பேசி வர்க்கப் போராட்டத்தின் அவசியத்திலிருந்து மக்களை திசைதிருப்புகிறார்கள். இவர்கள் சொல்லும் ஒவ்வொரு போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்துக் குள்ளேயே அடங்கியிருக்கிறது என்பதை இவர்கள் பார்க்க மறுக்கிறார்கள், அல்லது மூடிமறைக்கிறார்கள். இவர்கள் சொல்லும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்குப் பின்னால் சுரண்டல் நோக்கமே உள்ளது. சுரண்டும் நோக்கத்தின் அடிப்படையிலேயே இங்கு சாதி, மத, இன, பெண் மற்றும் தேசிய இனங்களின் அடிமைத்தனமும் ஒடுக்குமுறையும் இங்கு நிலவுகிறது. இந்த சுரண்டல்முறையை ஒழிக்காமல் சாதி மதம் இனம் பெண் தேசிய இனம் போன்ற பிரச்சனைகள் தீராது. சுரண்டலை ஒழிப்பதன் மூலமே அனைத்துவகையான பிரச்சனைகளும் தீரும் என்பது ஒரு சமூக விஞ்ஞானக் கோட்பாடாகும். ஆனால் இந்த சுரண்டல்முறையானது ஒரேஅடியில் தீர்ந்துவிடாது இடைவிடாத தொடர்ந்த போராட்டம் அதற்கு அவசியமாகும். அதற்கு வர்க்கங்களைப் பற்றியும் வர்க்கப் போராட்டங்களைப் பற்றியும் தொடர்ந்து ஆய்வு செய்து அவ்வப்போது முடிவுசெய்து செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
முழு இதழ் வாசிக்க கீழ் காணும் இணைப்பில் செல்க தோழர்களே.
இலக்கு இணைய இதழ் 77 PDF வடிவில்