கே. டானியலுக்கு இலக்கிய வரலாற்றில்

 கே.டானியல் அரசியல் களம் ஓர் தேடல்

++++++++++++++++++++++++++++++++++++++++++

கே. டானியலுக்கு இலக்கிய வரலாற்றில் தனியான ஓரிடம் உண்டு.அவரின் பணியானது அன்றை சமுக அவலங்களை பேசியதோடு ஒரு கம்யூனிச கட்சியின் பங்களிப்பையும் அவர்களின் எழுதின் ஊடாக நமக்கு கையளித்து சென்றுள்ளார். இன்று சாதியம் இலங்கை இந்தியாவில் கோலோச்சும் பொழுது நமது முன்னோடிகள் காட்டிய பாதை பயணளிக்கும் என்றே இந்தப்பகுதி.

1926ல் யாழ்ப்பாணத்தில் பிறந்த கே. டானியல் வளர்ந்ததும் வாழ்ந்ததும் பொருளாதார வசதி படைத்திராத ஒரு குடும்பத்திலேதான். பொருளாதார வசதியின்மையோடு சாதீய அடக்கு முறைக்கு உட்பட்ட குடும்பமாக அது இருந்ததாலும், அவரது இளமைக்கால்ம் மிகுந்த துன்பகரமானதாக இருந்தது. அந்த வாழ்க்கை அனுபவமே அவரை ஒரு "போராளி"யாக்கியது.

சமுதாயப் பிரச்சினைகளை தன் கருடப்பார்வையினின்றும் தப்ப விடாமல் எழுத்தில் சிறைப்பிடித்து சில அமர காவியங்களின் கர்த்தாவாக விளங்கும் இவர், தமது வாழ்க்கையின் பிற்காலத்தில் நீரிழிவு நோய்வாய்ப்பட்டு தமது பார்வையும் பாதிக்கப்பட்ட நிலையில் 23-3-86ல் காலமானார்.

"டானியல் சிறுகதைகள்" என்ற முதலாவது நூலின்மூலம் எழுத்துலகில் பிரபலமடைந்த இவர், மொத்தத்தில் எட்டுநாவல்களும், சுமார்முந்நூற்றைம்பது சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது "பஞ்சமர்" நாவல் சலங்கை' இதழில் பலத்த வாதப்பிரதி வாதங்களைத் தோற்றுவித்தது. சரஸ்வதி, தாமரை போன்ற பத்திரிகைகளும் இவரது எழுத்துக்களைத் தாங்கி வெளிவந்தன.

ஈழத்தில்சாதீயப்பேயை கொன்றொழிக்கம் திட்டத்துடன் தொடங்கப்பட்ட தீண்டாமை ஒழிப்புவெகுஜனஇயக்கத்தின்நிறுவனர்களில் ஒருவராக இருந்ததோடு, இயக்கத்தை வழிநடத்திய, போர்க்களங்களைக் கண்ட பெருமையும் இவருக்கு உண்டு.

"பஞ்சமர்நாவலுக்காகவும், "உலகங்கள் வெல்லப்படுகின்றனசிறுகதைத்தொகுப்பிற்காகவும் பூணூரீலங்கா சாஹித்ய பண்டல பரிசுகளையும்பெற்றிருக்கிறார்.கே.டானியலின் இலக்கிய முக்கியத்துவம் பலராலும் இன்று உணரப்படுகிறது.

டானியலின் குறுநாவல்கள்

"பஞ்சமர்என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகத்தில் ஓரளவுக்குத் தெரிய வந்திருப்பவர் கே. டானியல்.

இலங்கை யாழ்ப்பாணப் பகுதியில் உயர் சாதி வேளாளர்களுக்கும் தாழ்த்தப்பட்ட வர்களான பஞ்சமர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டங்களை சித்திரிக்கும் நாவல் "பஞ்சமர்'.

பஞ்சமர் நாவல் வரிசையில் பஞ்சகோணங்கள்" என ஒன்றையும், மற்றும் சில நாவல்களையும் டானியல் எழுதியிருக்கிறார். யாழ்ப்பாணப் பகுதியில் உயர்சாதி வேளாளர்கள் நடந்து கொள்கிற முறைகளையும், தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தப்படுகிற விதங்களையும், பஞ்சமர்கள் அவற்தை எதிர்த்து உரிமைகளுக்காக நடத்தும் போராட்டங்களையும் பதிவு செய்யும் படைப்புகள் அவை.

தீண்டாமையை ஒழித்துக்கட்டி மனித உரிமைகளைப் பெறுவதற்குதாழ்த்தப்பட்ட மக்கள் போராட்டங்கள் நடத்தாமல் தீராது. அப்படிப் போராடுகிறபோதே நில உரிமைக்காகவும் அவர்கள் போராடியாக வேண்டும்.அத்துடன்ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்துப் போரிட வேண்டும் என்று டானியல் கருதினார். இதை அவருடைய நாவல்கள் புலப்படுத்தும்.

கே. டானியல் சிறுகதைகளும் எழுதினார். மனித வாழ்க்கை சமூக அமைப்பு முறைகளைப்பிரதிபலிக்கும்குறுநாவல்களையும் அவர் படைத்திருக்கிறார். மனிதர்களிடையேநிலவும்சீர்கேடுகளையம் சின்னத்தனங்களையும் சுட்டிக் காட்டவும், பலவகையான மனித இயல்புகளை எழுத்தில் பதிவு செய்யவும் அவர் குறுநாவல் வடிவத்தை நன்கு பயன்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம்.

"சமூக அமைப்பு முறையில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படும் வரை சீர்கேடுகள், சின்னத்தனங்கள் மனித இனத்தை சூழ்ந்து கொண்டே நிற்கும். அந்த அடிப்படை மாற்றத்தைத் தோற்றுவிக்க தனித்து எழுத்தாளனால் மட்டும் முடியாதென்பது உலக வியாபகமாகி விட்ட உண்மையாகும். இந்த உண்மையை ஏற்று எனது பேனா மூலம் எனது சிறுபங்கை மட்டும் செய்ய முற்படுகிறேன்" என்றுடானியல் தனது எழுத்து முயற்சிகளைப் பற்றி குறிப்பிட்டிருப்பது நினைவு கூரத்தக்கது.

டானியலின்குறுநாவல்களை படிக்கிறவர்கள் இலங்கைத் தமிழரின் சமூக அமைப்பு,தொழில், அரசியல், இன மோதல் சம்பந்தமான பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். அத்துடன் விதம் விதமான மனிதர்களின் விந்தையான போக்குகளையும்வேடிக்கைஇயல்புகளையும் புரிந்து கொள்ளவும் அவை உதவக் கூடும்.

முக்கியமாக, முருங்கையிலைக் கஞ்சி, மையக்குறி என்ற இரண்டு குறுநாவல்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

முருங்கையிலைக்கஞ்சியில்ஆறுமுகத்தாரின் வாழ்க்கையை விரிவாகச் சித்திரிக்கும்முறையில் புகையிலையைப் பயிரிடும் விவரங்கள். அதில் எதிர்ப்படும் சிரமங்கள், அவற்றை விவசாயி சமாளிக்கும் திறமைகள் முதலியன சுவையோடு கூறப்பட்டுள்ளன.

ஆறுமுகத்தார் தன் மகன் மூத்தவனை மிக அதிகமான அன்பு காட்டி வளர்க்கிறார். ஒவ்வொருவிஷயத்திலும் அவருடைய பாசம் எப்படி வெளிப்படுகிறது என்பதை கதை நிகழ்ச்சிகள் ரசனையா விவரிக்கின்றன.

அவனைப் படிக்கவைத்து, நகரத்தில் வேலை வாங்கிக்கொடுத்து, அவன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து காரியங்கள் ஆற்றி வருகிற ஆறுமுகத்தாருக்கு, முதலாவது அதிர்ச்சி மகனின் திருமண விஷயததில் ற்படுகிறது.

அவன் தன்னோடு பணிபுரிகிற சிங்களப்பெண் ஒருத்தியை மணந்து கொள்ளத் தீர்மானிக்கிறான். இதை ஆறுமுகத்தாரும் அவர் மனைவியும் ஏற்றுக்கொள்ள சித்தமாகவில்லை.

ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன. நகரத்தில் வெடித்த சிங்களவர் வெறியாட்டத்தில், அந்தப் பெண் மூத்தவனைப் பாதுகாப்பதற்காகத் தன் உயிரையே இழந்து விடுகிறாள். மூத்தவன் தப்பிப் பிழைத்து பெற்றோரின் கிராமம் வந்து சேர்கிறான். சிங்களப் பெண்ணின் தீரமும் தியாகமும் தமிழ்ப் பெற்றோர்களின் உள்ளத்தைத் தொடுகின்றன. அந்த வீட்டில் அவள் ஒரு தெய்வம் போல் மதிக்கப் படுகிறாள். அவளுடைய படத்துக்கு எப்பவும் தகுந்த மரியாதைகள் செய்யப்படுகின்றன.

நீத்தார் நினைவில் செய்யப்படுகிற சடங்குகள் சம்பிரதாயங்கள் குறுநாவலில் உரியமுறையில்எடுத்துச்சொல்லப்பட்டிருக்கின்றன.

மூத்தவன் வேறொரு இடத்தில் வேறு ஒரு வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் பிடிப்பற்றவன் போல், கடமையாற்றி வருகிறான். திடீரென ஒருநாள் அவன் வீட்டுக்கு வரவில்லை. தொடர்ந்து சில நாட்கள் அவன் காணாமல் போகிறான்.

 

ஆறுமுகத்தாரின் வயலில் வேலை செய்கிற தாழ்த்தப்பட்ட இனத்தவன் என்று கருதப்படுகிற ஒருவன் மூலம் ஒரு தகவல் கிடைக்கிறது. அந்த ஆளின் சொந்தக்காரப் பெண் ஒருத்தியை ஆறுமுகத்தான் மகன் கூட்டிப்போய் திருமணம் செய்து கொண்டான் என்ற செய்தி அவருக்கு பேரதிர்ச்சியாக விழுகிறது.

அவர் வயலுக்குக் கிளம்பிய போது, அவருடைய மனைவி வேறொருத்தி மூலம் தகவல் அறிய நேரிட்டது. மூத்தவன் அவனுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்பது செய்தி. அதைக் கேட்ட அம்மா ஆத்திரம் அடைகிறாள். ஆனால், தந்தையோ, வாழ்க்கையில் பிடிப்பற்று தனக்குத் திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த மகன் இவ்வளவுக்கு மனம்மாறி ஒரு பெண்ணுடன்உறவுகொண்டு அலைகிறானே, அதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும் என்கிறார்.

அதே தந்தை வயலிலிருந்து வீட்டுக்கு உடனடியாகத் திரும்பி வந்து, வெளி முற்றத்தில் மூன்று கல் வைத்து. அடுப்பு மூட்டி, கஞ்சி வைக்கும்படி உத்தரவிட்டு, அப்படி கஞ்சி கொதிக்கிறபோது முருங்கை இலைகளை உருவி அதில் போடுகிறார். மூத்தவனின் உரிமைக் கஞ்சி குடியுங்கோ என்று அறிவிக்கிறார்.

காலையில் தனக்குத் தேறுதல் கூறியவர் ஏன் இப்போது இப்படி *உரிமைக் கஞ்சி' குடிக்க முனைகிறார் என்பது அந்தத் தாய்க்கு விளங்கவில்லை.

*உரிமைக் கஞ்சி' குடிப்பது' 'அன்றிலிருந்து அந்த மகன் அந்த வீட்டின் சாவுக்கும் இல்லாமல் வாழ்வுக்குமில்லாமல் போய் விடுவதை உணர்த்தும் செயலாகும்,

வயல் வேலை செய்கிறவன் சொன்ன செய்தி ஆறுமுகத்தாரின் மனைவிக்குத் தெரியாது. அவளும் இதர பிள்ளைகளும் அழுகிறார்கள், ஆறுமுகத்தார் கலக்கம் எதுவுமில்லாது காணப்படுகிறார்.

மகன் சிங்களப் பெண்ணை மணம் புரியத் துணிந்ததை ஏற்றுக் கொண்ட உயர்சாதித் தந்தை, அவன் தாழ்த்தப்பட்ட இனம் என்று கருதப்படும் ஒரு சமூகத்தின் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டதை சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. சாதிவெறி அவ்வளவுக்கு மனித உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை இக்குறுநாவல் உணர்த்துகிறது.

செல்வமும் செல்வாக்கும் பெற்ற உயர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தந்தையின், மற்றும் அவர் மகனின் வாழ்க்கைப் போக்குகளைசுவாரஸ்யமாகவிவரிக்கிறது "மையக்குறி. தந்தைக்கு சளைக்காமல் மகன்செய்யும் ஆணவச் செயல்களையும் அட்டூழியங்களையும் அது சுவையாகக் கூறுகிறது. சோமசுந்தாத்தார் என்று பெயர்பெற்று எப்படி எப்படியோ வாழ்ந்துவிட்ட மகனின் கடைசி ஆசை விசித்திரமானது, காலத்துடன் ஒட்டாதது.

ஆயினும், தந்தைக்கு ஊழியனாய், ரிக்ஷா இழுப்பவனாய், நம்பிக்கைக்கு உரியவனாய் இருந்து, மகனுக்கும் வேலைக்காரனாய், தோழனாய், ஆலோசகனாய், அவரது விருப்பங்களை எல்லாம் நிறை வேற்றும் நண்பனாய் வாழ்கிற ரிக்ஷா இழுக்கும் பண்டாரி, சோமசுந்தரத்தாரின் இறுதி ஆசையையும் நிறைவேற்றி வைக்கிறான்.

இப்படி அறுபது வருடங்களுக்கும் மேலாகவே அந்தக் குடும்பத்துக்கு உழைத்துக் கொண்டிருக்கும் அந்த உண்மை உழைப்பாளி எப்பவும் வெளியே உள்ள ஒரு மரக்குத்தியில்(இருக்கை) குந்தியிருந்து, அவனுக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு குவலையில்தான் காப்பியோ தேநீரோ குடிக்க வேண்டியிருந்தது. காலமும் நாகரிகமும் வளர்ந்து எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அந்தப் பெரிய வீட்டில் அவனுக்கு உரிய இடமும், அவன் குடிக்க உபயோகப்படும் குவலையும் எந்தவிதமாறுதலும் பெற்றிருக்கவில்லை. இந்த சமூக அநீதிநயமாக உணர்த்தப் பட்டுள்ளது இந்தக் குறுநாவலில்.

கே.டானியலின்குறுநாவல்கள் கலைநயம் குன்றாத படைப்புகள், வாழ்க்கை உண்மைகளைஉணர்த்தும்சமூகசித்திரங்கள் ஆகும்.

புனைகதைஇலக்கியத்தின்இன்றியமையாத பண்பு அதன் சமூக மெய்மையாகும். இதுவே புனைகதையின் "சார்புநிலை' என்றும் பேசப்படுகின்றது. ஈழத்தின் தமிழ்ப் புனைகதை வரலாற்றில் சமூக மெய்மையை அதன் "இரத்தமும் சதையும் புலப்படும் வண்ணம் வெளிப்படுத்திய படைப்பாளிகளுள் முதன்மைக் கணிப்புக்குரிய ஒரு வராகச் சொல்லப்படுபவர் காலஞ்சென்ற கே. டானியல் அவர்கள், ஈழத்துந் தமிழர் சமூகத்தின்-குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேச சமூகத்தின்-உள்ளார்ந்த முரண்பாடுகளை இயற்பண்புடன் இலக்கிய உலகில் அழுத்தமாகப் பதிவு செய்தவர் என்ற வகையில் தனிக்கவனத் திற்குரிய படைப்பாளியாக இவர் திகழ்கின்றார். உரிமைகள் மறுக்கப் பட்ட அடிநிலைமக்களின்உணர்வோட்டங்களின் ஊடாக யாழ்ப்பாணப் பிரதேச சமூக வரலாற்றை இனங்காட்டும் நோக்கில் எழுதுகோல் ஏந்தியவர் இவர். இதில் இவர் புலப்படுத்தி நின்ற தீவிர நிலை இவரை ஒரு "ஆவேச மனிதாயதவாதி' என்ற கணிப்புக்கு உட்படுத்தி யது (கார்த்திகேசு சிவத்தம்பி, மல்லிகை, 1983 டிசம்பர், பக் 5-7). இவ்வாறு வீறார்ந்த நிலையில் படைப்பிலக்கியப் பணிபுரிந்த இவர்ஈழத்தின்நவீனதமிழ்ப்படைப்பிலக்கிய வரலாற்றில் பதித்துள்ள "தடம்", படைப்பிலக்கியவாதிகள் வரிசையில் இவருக்கு வழங்கக்கூடிய "இடம்" என்பது தொடர்பான சில சிந்தனைகள் இங்கே முன்வைக்கப் படுகின்றன.

சாதி ஏற்றத்தாழ்வுப் பிரச்சினையைப் படைப்பிலக்கியத்திற்குப் பொருளாகக் கொள்ளும் நோக்கு ஈழத்தில் இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே தோற்றம்பெற்றுவிட்டது. இடைக்காடாரின் நீலகண்டன் ஒரு சாதி வேளாளன்’ (1925) எச். நெல்லையரின் காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமனி" (1937) முதலிய நாவல்களிலும், பாவலர் துரையப்பாபிள்ளையின் சில கவிதைகளிலும் இப்பண்பை அவதானிக்க முடியும்.

மேற்சுட்டிய இந்த நூற்றாண்டின் முற்பகுதிப் படைப்புக்கள் சாதி ஏற்றத்தாழ்வின் புறநிலையின் சில கூறுகளை மட்டும் அவதானித்தவையாகும். ஏற்றத்தாழ்வு மனப்பாங்கு, தீண்டாமை ஆகிய கூறுகளைக் கொண்ட ஒரு சமூகக் குறைபாடு என்ற கருத்தே அக்காலப்படைப்புக்களில்உணர்த்தப்பட்டது. பொதுவான அறிவு வளர்ச்சியாலும் சீர்திருத்தச்சிந்தனையாலும்இக்குறைபாடு தவிர்க்கப்படக் கூடியது என்ற நம்பிக்கையே அக்காலப் பகுதிப் பார்வையின் ஊடாகப் புலப்படும் தீர்வு ஆகும். சமகால இத்திய விடுதலைப் போரை வழிநடத்திய காந்தீய சிந்தனைகள் பொதுவான அறிவு வளர்ச்சி என்பன இவ்வாறான பார்வைகட்கு உந்து சக்தியாக அமைந்தன என்பதை உய்த்துணர முடிகிறது. சாதி முறையின் கோரமான யதார்த்தங்கள் அக்காலப் பகுதியில் தரிசனத்திற்கு வரவில்லை என்பது இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

1950-60 களில் முற்போக்கு இலக்கியச் சிந்தனை முனைப்புறத் தொடங்கிய காலகட்டத்தில் சாதிப் பிரச்சினையின் கொடுரமானயதார்த்தங்கள்இலக்கியப்பதிவுகள் ஆயின. சராசரி மனிதனிடம் உறங்கிக்கிடக்கும் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புவதும் பொதுவுடமை அரசியல் நோக்கில் சமுதாய மாற்றத்தை அறைகூவி அழைப்பதும் இக்காலப் பகுதியின் முனைப்புற்ற நோக்கு நிலைகளாக அமைந்தன. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் ஆகிய பல்வகைப் படைப்புக்களிலும் இவை வெளிப்படலாயின.

 அடக்குமுறைக் கொடுமைகளை நாவல் களில் விரித்துரைக்க முற்பட்ட முதல்வர் என்ற சிறப்பு இளங்கீரன் அவர்களுக்கு உளது. அவரது "தென்றலும் புயலும்’ (1955) நாவல் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் உயர் சாதியினர் எனத் தம்மைக் கருதிக்கொள்வோரில் சிலர் பொருளியல் நிலை தாழ்ந்தபோதிலும் கூட சாதி உணர்வினை விட்டகலாத நிலையை இது சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் "சாதிமீறிய நிலையிலான காதலை நிறைவு செய்வதான" கதையம்சத்தின் மூலம் சமூக மாற்றத்திற்கான சாத்தியத்தையும் இந்நாவல் உணர்த்தியமைகின்றது.

மேற்சுட்டிய ஏனைய நாலவாசிரியர்களுட் பலரும் கல்வி வளர்ச்சி, கலப்புத் திருமணம், தொழில்முறை மாற்றங்கள், மனித நேய-சமத்துவ சிந்தனைகள், சட்டம் முதலியவற்றின் மூலம் சாதி ஏற்றத்தாழ்வுணர்வுக்கும் அது சார்ந்த கொடுமைகளுக்கும் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையைத் தம் படைப்புக்களில் புலப்படுத்தி நின்றனர்.

த்தகையோரினின்றுகுறிப்பிடத்தக்க அளவு வேறுபட்டு நின்று இப்பிரச்சினையை அணுகியவர் என்ற வகையில்செ.கணேசலிங்கன்தனிக்கவனத்திற்கு உரியவர். இவர் சாதி முறைமையை, பல்வேறுவகைப் பட்ட சுரண்டல்களுக்கும் காரணமானதும் வர்க்க சார்புடையதுமான ஒரு பிரச்சினையாக நோக்கும் நிலையில் ஆழமான பார்வையைப் புலப்படுத்தினவர், இளங்கிரன்,செ.யோகநாதன்முதலியவர்களும் இவ்வாறான நோக்குக் கொண்டிருந்த போதும் அவர்களின் ஆக்கங்களில் அப்பார்வை ஆழமாகத் தொழிற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 செ.கணேசலிங்கனின் ஆழமான பார்வையின் வெளிப்பாடுகள் என்ற வகையிலே நீண்டபயணம், சடங்கு, போர்க்கோலம் என்பன குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவமுடையன. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் சாதிப் பிரச்சினையால் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருந்த மக்கள் வர்க்கரீதியாக இணைந்து முச்சிபெற முற்பட்ட 1960-70 காலகட்ட சமூக வரலாற்றுப் போக்கைத தமது மேற்படி படைப்புகளில் செ. கணேசலிங்கன் பதிவு செய்துள்ளார். தாழ்த்தப்பட்டோர் தமது தாழ்வுச் சிக்கலினின்று விடுபட்டு எழுச்சிபெற்று வரும் நிலையை உணர்த்துவனவும், உயர் சாதியினரெனப்படுவோரின்உள்முரண்பாடுகளை இனங்காட்டுவனவுமாக இவரது மேற்படி படைப்புக்கள் அமைந்தன.

இவ்வாறு கணெசலிங்கனின் நாவல்கள் புலப்படுத்திநின்றஆழமானபார்வையையும் சமுதாய விமரிசனத்தையும் மேலும் ஆழப்படுத்தி மற்றொரு பரிமாணத்துக்கு இட்டுச் சென்றன என்ற வகையிலேயே டானியலின்* பஞ்சமர் வரிசை நாவல்கள்" வரலாற்று முக்கியத்துவமுடைய படைப்புக்களாகத் திகழ்கின்றன. டானியலும் சாதிப் பிரச்சினையை பல்வகை ஒடுக்குமுறைகளுக்கும் அடிப்படைக் காரணியானவர்க்கசார்பானபிரச்சினையாகவே கண்டார். ஆனால் அவ்வாறு காணும் வகையில்குறிப்பிடத்தக்கதனித்தன்மையுடன்திகழ்ந்தார்.கணேசலிங்கன்தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவில் பள்ளர்-பறையர் ஆகியஇருவகையினரையேமுதன்மைப்படுத்தி நோக்கினார். ஆனால் டானியல் இவர்களுடன் நளவர், வண்ணார், அம்பட்டர் ஆகிய மூவகையின் ரையும் இணைத்து நோக்கியதோடு இவர்களோடு ஒத்த வாழ்க்கைத் தரமுள்ள வேறுபல சாதியினரையும் உட்படுத்தி நோக்கினார். இவர் வழங்கிய "பஞ்சமர்" என்ற சொல்லாட்சி மேற்சுட்டிய பள்ளர் முதலிய ஐவகையினரையும் பொதுவாகக் குறிக்கத்தக்கதாகும். அதேவேளை பஞ்சப்பட்ட அனைத்து மக்களையும் குறித்து நிற்கும் வகையில் பொருள் விரியத்தக்கதுமாகும். இவர்கள் அனைவரையும் இணைந்த எழுச்சியே பஞ்சமர் வரிசை நாவல்களில் புலப்படுத்தப்பட்ட தொனிப் பொருள் ஆகும்.

கணேசலிங்கனின் நாவல்கள் 50-70 காலகட்ட சமுதாய வரலாற்றுப் போக்கைச் சித்திரிப்பன. பஞ்சமர் வரிசை நாவல்ள் மேற்படி காலப்பகுதியை உள்ளடக்கி அதற்கும் முன்னாக ஏறத்தாழ இந்த நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முற்பட்டகாலப்பகுதி தொட்டு அமையும் சமுதாய வரலாற்றுப் போக்கையும் எடுத்துக் காட்டும் வகையில் பார்வை வீச்சுக் கொண்டு திகழ்வனவாகும். குறிப்பாக அடிமைகள் நாவல் 1890-1956 காலகட்ட வரலாறாக அமைந்தது. 'கானல்", "தண்ணீர்" ஆகிய நாவல்களின் கதை நிகழ்ச்சிகள் இந்த நூற்றாண்டு தொடக்கப் பகுதியிலிருந்து தொடர்கின்றன. மூன்று நான்கு தலைமுறைகளின் வரலாறுகள் இவற்றில் விரிகின்றன.

கணேசலிங்கனின் படைப்புக்களிலிருந்து டானியலின் பஞ்சமர்வரிசை நாவல்களை வேறுபடுத்தி நிற்கும் மற்றொரு முக்கியக்கூறு இவரது சமூக அனுபவ நிலைகளாகும். கணேசலிங்கனுக்கு அடக்குமுறைக் கொடுமை என்பது வாழ்வியல் அனுபவம் அல்ல. அது அவரதுபொதுவுடைமைப் பார்வை யினூடாகப் புலப்படும் ஒரு காட்சி மட்டுமே. கருத்துநிலைப் படுத்தி கதை அமைத்து அவர் நாவல் புனைந்தார். ஆனால் டானியலுக்கு பஞ்சமர் பிரச்சினை என்பது வாழ்க்கையின் அனுபவ தரிசனமாகும். தான் பிறந்த சமூக நிலையாலும் யாழ்ப்பாணப பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களின் அடிநிலை மாந்தரின் வாழ்க்கை நிலைகளோடும் கொண்ட நேரடித் தொடர்புகளாலும் தீண்டாமை ஒழிப்புக்கான வெகுஜனப் போராட்டத்தில் பங்கு கொண்டமையாலும் அவர் பெற்றிருந்த அனுபவத் தெளிவு அது.

பஞ்சமர் வரிசை நாவல்களுக்குத் தனியானகனபரிமாணத்தைத் தந்துள்ள மையை உய்த்துணர முடிகின்றது, இந்நாவல்களின் சம்பவங்களில் இருந்து கதையம்சத்தை உருவாக்குவதில் திட்டப்பாங்கான அமைப்புக்கு அதிக இடம் இல்லை. ஆசிரியரின் கற்பனைத் தொழிற்பாட்டிற்கு அதிக அவசியம் இருக்கவில்லை. சமூக வரலாற்றுப் போக்கில் பல்வேறு ட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்களைப் பொருத்தமுற இணைப்பதன் மூலம் - அவற்றினூடாகப் புலப்படும் சமூக அசைவு இயக்கத்தை உணர்த்துவதன் மூலம்-இந்நாவல் களுக்கான கதையம்சத்தை டானியல் அவர்களால் புலப்படுத்திவிட முடிகின்றது. யாழ்ப்பாணப் பிரதேசித்தில் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நிஜமான சமூகமாந்தரைப் பெயர் மாற்றங்களுடன் நடமாட வைப்பதன் மூலமும் பல்வேறு கிராமப்புறங்களின் நடைமுறைவாழ்க்கை பழக்கவழக்கம் உணவுமுறை, பொழுது போக்கு,சடங்கு-சம்பிரதாயங்கள் முதலிய வற்றை இயற்பண்புடன் சிததிரிப்பதன் மூலமும் ஒரு உயிரோட்டமான-நிஜமான-சமூக வரலாற்றை டானியல் அவர்களால் காட்சிப்படுத்தி விட முடிகின்றது. வாழ்க்கையிலிருந்து உருவாகின்றது என்ற நிலைக்குப் புறம்பாக வாழ்க்கையே கலையாகிவிடும் நிலையை பஞ்சமர் வரிசை நாவல்களில் தரிசிக்க முடிகின்றது.

"வாழ்க்கை-கலை இவற்றின் எல்லைக் கோடுகள் அழிந்து இரண்டும் இரண்டறக் கலந்து மெய்மையாக நூலை நிறைத்துள்ளன' எனப் பேராசிரியர் க. கைலாசபதி பஞ்சமர்" முதற்பாகம் தொடர்பாக முன்வைத்துள்ள கணிப்பு  பஞ்சர் வரிசை நாவல்கள் அனைத்திற்குமே பொருந்தக் கூடிய கணிப்பாகும்.

பஞ்சமர்வரிசைநாவல்கள்அனைத்தினதும் பொதுவான கதையம்சத்தைப் பின்வகும் இரு கூறுகளுக்குள் அடக்கிவிடலாம்.

().உயர்சாதியினர் எனப்படுவோர் தாழ்த்தப்பட்டோர் மீதுநிகழ்த்தி வந்துள்ள பல்வேறு நிலைக்கொடுமைகளின் விவரணம்.

)அவற்றுக்குஎதிராகத்தாழ்த்தப்பட்டோரும் மனிதநேயம் கொண்ட உயர்சாதியினர் எனப்படுவோரும்இணைந்துமேற்கொள்ளும் எழுச்சி சார்ந்த நடவடிக்கைகளின் விவரணம், முதல் நாவலான பஞ்சமரில் இந்த இரு கூறுகளும் நேரடியாகவே கதையம்சமாக விரிகின்றன. உயர் சாதியினர் எனப்படுவோரில் சாதித்திமிர், அதனால் அவர்கள்புரியும் அட்டுழியங்கள் என்ப தொடர்பான பல கதைகள், செய்திகள் என்பவற்றையும் தாழ்த்தப் பட்டோரின்வர்க்கரீதியான எழுச்சியையும் இந்நாவல் கட்டம் கட்டமாக விவரித்துச் செல்கிறது.

"கோவிந்தன்நாவலிலே சாதித்திமிர் பிடித்த ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி சித்திரிக்கப்படுகின்றது. பஞ்சமரின் எழுச்சிக்கு முன் சாதித் திமிர் நிலை தளர்ந்து போவதாகக் காட்டுவது இந்நாவலின் அகநிலையான கதையம்சம், ஆனால் புறநிலையிலே 'சாதி மீறிய காதல் - பாலியல் உறவு" என்ற அம்சத்தை முதன்மைப்படுத்தியதாக இந் நாவல் அமைந்துள்ளது.

"அடிமைகள்நாவலும் கோவிந்தனைப் போலவே வேளாளகுலக் குடும்பம் ஒன்றின் வீழ்ச்சியைப் பேசுவது. நிலம், புலம், சொத்து, அதிகாரம், அடிமை-குடிமை என்பவற்றுடன் ராசவாழ்வு நடத்திய அக்குடும்பம் கேளிகைக்கள், ஆடம்பரங்கள், சண்டித்தனங்கள் முதலிய வற்றால் சீரழிந்து செல்வதை நான்கு தலைமுறை வரலாற்றினூடாக இந்நாவல் காட்டியமைகின்றது.

'கானல்நாவலின் கதையம்சம் மேற்கூறியவற்றினின்று சற்று வேறுபட்டது. தமிழர் மத்தியில் பரவிய கிறிஸ்தவ மதம் சாதிபிரச்சினைக்குத் தீர்வு காட்டும் ஒன்றாக அமைந்ததா? என்ற வினா எழுப்பி விடைகாணும் நோக்கில்-விமர்சிக்கும் நோக்கில்-இது அமைகின்றது.

சாதி ஏற்றத்தாழ்வுப் பிரச்சினையில், குடிதண்ணீர்பெறுவதில் தாழ்த்தப்பட்டோர் எய்தும் அவலங்களை மையப்படுத்திக் கதைப்பொருள் கொண்டமைந்தது தண்ணீர் நாவல்.

தாழ்த்தப்பட்டோரின் சமத்துவம் நோக்கிய எழுச்சி வரலாற்றுடன் தமிழரின் இனவிடுதலைக்கான இயக்கங்களின் உருவாக்க சூழலை இணைத்துப் புனையப்பட்ட நாவல் பஞ்சகோணங்கள். தாழ்த்தப்பட்டோரின் எழுச்சி மேற்படி சூழலில் எத்தகு பாதிப்புக்களை எய்திற்று என்பதை இந்நாவல் மூலம் டானியல் உணர்த்த விழைகின்றமை புரிகின்றது.

மேற்குறித்த பஞ்சமர் வரிசை நாவல்களின் கதைகள் நிகழ்களங்கள் என்ற வகையில் யாழ்ப்பாணப் பிரதேசத்தின்பல்வேறு கிராமப்புறங்களும் டானியலின் பார்வைப் பரப்புக்குள் வந்துள்ளன. குறிப்பாக பஞ்சமர் நாவலின் கதை நந்தாவில், வட்டுக்கோட்டை முதலிய கிராமங்களில் நிகழ்ந்தது. "கோவிந்தன்நாவலின் முக்கிய களம் சுதுமலை. "அடிமைகள்' நாவல் மந்துவில், புத்தூர், சுட்டிபுரம் ஆகிய கிராமங்களில் நிகழ்கின்றது. 'கானல் தாவடி, சின்னக்கலட்டி, திருநெல்வேலி ஆகிய கிராமங்களைக் களமாகக் கொண்டது. "தண்ணிர் வடமராட்சிப் பகுதியை குறிப்பாகக் கரவெட்டியை மையப்படுத்தியது. "பஞ்சகோணங்களின்" கதை நிகழ்களங்களாக புன்னா லைக்கட்டுவன், கட்டுவன், உரும் பிராய், சுன்னாகம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

இந்நாவல்களின் கதை நிகழ்களங்களைப் போலவே கதை நிகழ்கால எல்லைகளும் விரிவானவையாகும். பஞ்சமர் நாவல் நிகழ்வுகள் 1956-69 காலப்பகுதிக்குரியன. இக்காலப்பகுதியை அடுத்து தமிழின விடுதலைப் போராட்ட இயக்கங்கள் உருவானகாலம் வரையான ஆண்டுகளில் -ஏறத்தாழ 1970-80 களில் பஞ்சகோணங்கள் கதை நிககின்றது என்பது அந்நாவலின் முன்னுரையால் உய்த்துணரப்படுவது. ஏனைய நான்கும் இந்த நூற்றாண்டின் முற்பகுதி சார்ந் தனவாகும். குறிப்பாக கோவிந்தன் 1919-65 காலப்பகுதியையும் அடிமைகள் 1890 1956 காலப்பகுதியையும் கதை நிகழ்காலமாகக் கொண்டவையாகும், இவை எல்லாவற்றையும் தொகுத்து நோக்கும்போது சாதிப் பிரச்சினையை உள்ளடக்கமாகக்கொண்ட படைப்புக்களின் வரலாற்றில் கதையம்சப் பரப்பு, பிரதேசப் பரப்பு, காலப்பரப்பு ஆகியவற்றில் பஞ்சமர் வரிசை நாவல்கள் முன்னைய ஆக்கங்களை விடமிக விரிவானவையாக -தனிக்கவனத்திற்குரிய கனபரிமாணங்கள் கொண்டவையாக - திகழ்கின்றமை தெளவாகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் மன்றம் 23-3-94 அன்று நிகழ்த்திய எழுத்தாளர் கே. டானியல் நினைவு அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரையின் தொகுப்பு.(நன்றி இலக்கு இணைய பகுதிக்கு மூலம் நூலகம் இலக்கு 1995.08). இந்தப் பகுதியை எழுதியதன் நோக்கம் எதற்கெடுத்தாலும் வரலாற்று தெளிவற்று பேசும் பலர் மறந்தே போன பக்கத்தை தேடியே. சாதியும் தீண்டாமை நிலவுவதற்கு காரணம் உற்பத்தி முறைதான். பார்ப்பனியம் இந்து மதம் மட்டுமே காரணமல்ல அவை கோட்பாட்டு ரீதியாக சாதி இருத்தலுக்கு பணியாற்றியது இன்றும் நிலைத்து நிற்பதற்கு இங்குள்ள ஆட்சியாளர்களின் தேவையே என்பேன். இந்தியாவில் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை தோற்றம் பெறாத வடகிழக்கு மாநிலமான மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, அசாம்போன்ற மாநிலங்களில் சாதியம் தீண்டாமைநிலவவில்லை. இலங்கையில் பார்ப்பனியம் இல்லை. ஆனால் அங்கு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை உண்டு. அதனால் சாதியும் தீண்டாமை உண்டு. பார்ப்பனியம் இல்லாத ஆப்பிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் கூட சாதியம் இருந்தது சில இருக்கிறது. ஆகவே சாதியும் தீண்டாமை நிலவுவதற்கு காரணம் உற்பத்தி முறை தான். அவை தகர்க்க வேண்டிய வேலையைசெய்யாமல் மௌனம் காக்கும் ஆட்சியாளர்களே இச்சமூக இருப்பை பேணி பாதுக்காக்கின்றனர் தங்களின் அதிகார தேவைக்காக.. +++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்