மார்க்சின் போதனை
மார்க்சின் கருத்துகள், போதனைகள் அடங்கிய முழுத் தொகுப்பே மார்க்சியம். 19ம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவை மனித குலத்தின் மிகவும் முன்னேற்றமடைந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம், மூலச்சிறப்புள்ள ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பொதுவாக பிரெஞ்சுப் புரட்சிப் போதனைகளுடன் இணைந்த பிரெஞ்சு சோஷலிசம் என்பனவாம். இந்த மூன்று தத்துவப் போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றிற்கு முழுநிறைவு அளித்த மேதைதான் மார்க்ஸ். மார்க்சின் கருத்துகள் குறிப்பிடத்தக்க முறையில் முரணற்ற தன்மையும் முழுமையும் பெற்றிருப்பவை. அவரது எதிரிகள் கூட இதை ஒப்புக் கொள்கின்றனர். இந்தக் கருத்துகள் முழுவதுமாகச் சேர்ந்துதான் நவீன காலத்திய பொருள்முதல்வாதமாகவும் நவீன காலத்திய விஞ்ஞான சோஷலிசமாகவும் அமைந்துள்ளன. இவ்விரண்டும் உலகிலுள்ள நாகரிக நாடுகளிலெல்லாம் தொழிலாளர் இயக்கத்தின் தத்துவமாகவும் வேலைத்திட்டமாகவும் திகழ்கின்றன. எனவே, மார்க்சியத்தின் முதன்மையான உள்ளடக்கமாகிய மார்க்சின் பொருளாதாரப் போதனையை விரித்துரைக்கு முன்னர், அவரது உலகக் கண்ணோட்டத்தைப் பற்றி பொதுப்படையான கட்டுரையைத் தீட்ட வேண்டிய கடமை நமக்கு ஏற்பட்டுள்ளது.
தத்துவஞானப் பொருள்முதல்வாதம்
1844-45 ஆண்டுக் காலத்தில் மார்க்சின் கருத்துகள் உருவம் பெற்றன. அக்காலம் முதல் அவர் ஒரு பொருள்முதல்வாதி; அவர் குறிப்பாயும் லுட்விக் ஃபாயர்பாஹ் என்பவரைப் பின்பற்றினார். ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதம் போதுமான அளவுக்கு முரண்பாடின்றியும் முழுமை எய்தியும் இருக்கவில்லை என்பது மட்டுமே ஃபாயர்பாஹின் பலவீனமாகுமென்று பிற்காலத்திலுங்கூட மார்க்ஸ் கருதினர். ஹெகலின் கருத்து முதல்வாதத்திலிருந்து மனத்திண்மையுடன் தொடர்பை அறுத்துக் கொண்டு பொருள்முதல் வாதத்தை ஃபாயர்பாஹ் பிரகடனம் செய்தார். இந்தப் பொருள்முதல்வாதம் ஏற்கெனவே பதினெட்டாம் நூற்றாண்டில், குறிப்பாக பிரான்சில், அன்று இருந்து வந்த அரசியல் நிறுவனங்களையும். மதத்தையும் இறையியலையும் மட்டும் எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருக்கவில்லை; மேலும். எல்லா இயக்க மறுப்பு இயலையும்’ (‘நிதானப் புத்தியுள்ள தத்துவஞானம்’ என்பதிலிருந்து திட்டமாக வேறுபட்டிருக்கும்படியான ‘போதையேறிய தத்துவ விசாரம்’ என்ற அர்த்தத்தைத்தான் இது இங்கே குறிக்கிறது) எதிர்த்து அது போர் புரிந்து கொண்டிருந்தது’ (Literarischen Nachlass (‘இலக்கியப் படைப்புகள்’) என்ற சஞ்சிகையில் புனிதக் குடும்பத்தைப் பார்க்க.) அதில் தான் ஃபாயர்பாஹின் வரலாற்றுச் சிறப்புள்ள சகாப்தகரமான முக்கியத்துவம் காணக்கிடக்கிறது என்று மார்க்ஸ் கருதினார். ஹெகலுக்கு சிந்தனையின் இயக்கப் போக்கு என்பது – அதற்கு ‘கருத்து’ என்று பெயர் சூட்டி அதை ஒரு சுயேச்சையான பொருளாக உருமாற்றி விடும் அளவுக்கு ஹெகல் சென்றுவிடுகிறார் – அக்கருத்தே எதார்த்த உலகின் படைப்பாளி மற்றும் இயற்றுவோனாக இருக்கிறது. என்னைப் பொருத்த வரை அதற்கு மாறாக, கருத்து என்பது மனித மனத்தில் பிரதிபலித்துச் சிந்தனையின் வடிவங்களாக உருவம் பெறும் பொருளாயத உலகமே தவிர வேறு எதுவுமல்ல’ என்று மார்க்ஸ் எழுதினர். (மூலதனம், தொகுதி 1, இரண்டாம் பதிப்பின் முன்னுரை.) மார்க்சின் இந்தப் பொருள்முதல்வாதத் தத்துவஞானத்தை முற்றாகப் பின்பற்றி எங்கெல்ஸ் விளக்குகையில், டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் இந்நூலின் கையெழுத்துப் பிரதியை மார்க்ஸ் வாசித்துப் பார்த்திருக்கிறார் பின்வருமாறு எழுதினார்: உலகின் ஒற்றுமை என்பது அதன் வாழ்நிலையில் அடங்கியிருக்கவில்லை. உலகின் உண்மையான ஒற்றுமை அதன் பொருளாயதத் தன்மையில் அடங்கியிருக்கிறது.
![Video] Dialectics: from Hegel to Marx](https://www.marxist.com/images/cache/c070594fdec8687e97a3c0cdd6ba2df8_w1000_h800.jpg)
தத்துவஞானம், இயற்கை விஞ்ஞானம் ஆகியவற்றின் நீண்ட நெடிய வளர்ச்சி இதை நிரூபிக்கிறது. இயக்கம் என்பது பருப் பொருளின் நிலைநிற்புப் பாங்காகும். இயக்கம் இல்லாமல் பருப்பொருள் எங்கும் என்றைக்கும் இருந்ததில்லை. அதேபோல் பருப்பொருளின்றி இயக்கம் எங்கும் என்றைக்கும் இருந்ததில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது. ஆனல். சிந்தனை, உணர்வு என்பவை உண்மையில் என்ன, அவை எங்கிருந்து தோன்றுகின்றன என்று கேள்வி கேட்டுக் கொள்வோமேயானல், அவை மனித மூளையின் விளைவுகளே என்பதும், மனிதன் இயற்கையின் அதன் சூழலின் உள்ளும் உடனும் வளர்ந்து வந்திருக்கிற ஒரு விளைவே என்பதும் தெளிவாகத் தெரிந்து விடுகிறது. இதிலிருந்து இன்னொன்றும் வெளிப்படையாகிறது; அதாவது, இறுதியாகப் பகுத்தாராயும் போது, மனித மூளையின் விளைவுகள் இயற்கையின் விளைவுகளாகவே இருப்பதினால் அவை இயற்கையின் மற்றெல்லா பரஸ்பரத் தொடர்புகளோடும் முரண்பட்டிருக்கவில்லை; அதற்கு மாறாக அவற்றுக்குப் பொருத்தமாகவே அமைந்துள்ளன. ஹெகல் கருத்து முதல்வாதி. அதாவது, அவரது மனத்திற்குள் இருக்கும் எண்ணங்கள் யதார்த்தமான பொருட்களின், இயக்கப் போக்குகளின் ஓரளவு சூட்சும பிம்பங்கள் (Abbilder) என்றால் உரு நிழல்கள், (சில சமயம் எங்கெல்ஸ் பதிவுகள் என்றும் சொல்கிறார்) அல்ல என்பது அவர் கருத்து; அதற்கு மாறாக, உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே எங்கோ ஓர் இடத்தில் நிலவி வந்திருக்கிற கருத்து யதார்த்த வடிவம் பெற்றதின் உருவங்கள்தான் பொருட்களும் அவற்றின் வளர்ச்சியும் என்று அவர் கருதினார்.’ லுட்விக் ஃபாயர்பாஹ் என்ற தமது நூலில் எங்கெல்ஸ் ஃபாயர்பாஹின் தத்துவஞானத்தைப் பற்றித் தாமும் மார்க்கம் கொண்டுள்ள கருத்துகளை விளக்கி விவரித்துள்ளார். ஹெகல், ஃபாயர்பாஹைப் பற்றியும் மற்றும் வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம் குறித்தும் 1844-கல் மார்க்சும் தாமும் சேர்ந்து எழுதியிருந்த பழைய கையெழுத்துப் பிரதியைத் திரும்பவும் படித்த பிறகுதான் எங்கெல்ஸ் இந்நூலை அச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இந்நூலில் பிரெடெரிக் எங்கெல்ஸ் பின்வருமாறு எழுதுகிறர்: “எல்லாத் தத்துவஞானத்துக்கும், குறிப்பாக மிக அண்மைக்காலத்திய தத்துவஞானத்திற்கெல்லாம், அடிப்படையான மாபெரும் கேள்வியாக இருப்பது சிந்தனைக்கும் வாழ்நிலைக்குமிடையேயுள்ள உறவு சம்பந்தப்பட்ட விஷயமே, ஆன்மாவுக்கும் இயற்கைக்குமிடையேயுள்ள உறவு சம்பந்தப்பட்ட விஷயமே. இவ்விரண்டில் ஆன்மா முதலில் இருந்ததா, இயற்கை முதலில் இருந்ததா என்ற விஷயமேயாகும். இந்தக் கேள்விக்குத் தத்துவஞானிகள் தந்த விடைகள் அவர்களை இரண்டு மாபெரும் முகாம்களாகப் பிரித்துவிட்டன. ஆன்மாதான் இயற்கைக்கு முன் இருந்து வந்தது என்று அடித்துப் பேசி, அதன் காரணமாக, முடிவில், உலகம் ஏதாவது ஒரு வடிவத்தில் படைக்கப்பட்டது என்று அனுமானம் செய்து கொண்ட நபர்கள் எல்லோரும் கருத்து முதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். இயற்கைதான் முதலில் இருந்து வந்தது என்று கருதிய மற்றவர்கள் பொருள் முதல்வாதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களாயினர்.” (தத்துவஞான ரீதியான) கருத்து முதல் வாதம், பொருள்முதல் வாதம் என்ற கருத்து வடிவங்களை வேறு எந்த விதத்தில் உபயோகித்தாலும் குழப்பம்தான் உண்டாகும்.
ஏதாவது ஒரு வழியில் மதத்தோடு எப்போதும் சம்பந்தப்பட்டிருக்கும்படியான கருத்து முதல் வாதத்தை மார்க்ஸ் தீர்மானமாகத் தள்ளிவிட்டார் என்பது மட்டுமல்ல; குறிப்பாக நம் காலத்தில் பரவலாகக் காணக்கிடக்கும் ஹியூம், கான்ட் என்போரின் கருத்துகளையும் பல்வேறு வடிவங்களிலுள்ள அறியொணாவாதத்தையும் விமர்சனவாதத்தையும் நேர்காட்சி வாதத்தையும் அவர் தீர்மானமாகத் தள்ளிவிட்டார். இந்த விதத் தத்துவஞானம் எல்லாம் கருத்துமுதல்வாதத்துக்கு விட்டுக் கொடுக்கும் ஒரு ‘பிற்போக்கான’ சலுகையேயாகும் என்று மார்க்ஸ் கருதினர்; அதிக பட்சம், இது பொருள் முதல்வாதத்தைப் பகிரங்கமாக மறுத்துவிட்டு இரகசியமாய் அதை ஏற்றுக்கொள்ளும் ‘வெட்ககரமான போக்காகும்’ என்று மார்க்ஸ் கருதினார். இந்தப் பிரச்சனை சம்பந்தமாக மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் மேலே சொன்ன நூல்களோடு கூடவே 1866 டிசம்பர் 12 என்று தேதியிட்டு மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய ஒரு கடிதத்தைப் பார்க்க. அந்தக் கடிதத்தில் மார்க்ஸ் ‘தாமஸ் ஹக்ஸ்லி’ என்ற பிரபலமான இயற்கை விஞ்ஞானி ஆற்றிய, வழக்கத்தை விட அதிக அளவு பொருள்முதல்வாதப் போக்கு கொண்ட உரையைக் குறிப்பிட்டு, அத்துடன் ‘உண்மையில் நாம் கவனித்துக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருக்கும் வரை பொருள்முதல்வாதத்திலிருந்து விலகிச் செல்வது சாத்தியமல்ல’ என்பதை அவர் ஏற்றுக்கொள்வதையும் சுட்டிக் காட்டி, ஹக்ஸ்லி அறியொணாவாதத்துக்கும் ஹியூம் வாதத்துக்கும் ‘தப்பிக்கும் வழி’ ஒன்றை விட்டுவைத்ததற்காக அவரை மார்க்ஸ் கடிந்து கொள்கிறார். சுதந்திரத்துக்கும் அவசியத்துக்கும் இடையேயுள்ள உறவு பற்றி மார்க்ஸ் கொண்டிருந்த கருத்தைக் குறிப்பிடுவது சிறப்பான முக்கியத்துவமுள்ளதாகும்.
‘அவசியத்தை அறிந்தேற்றுக் கொள்வதுதான் சுதந்திரம் என்பது. அவசியம் என்பது நாம் புரிந்துகொள்ளாத வரையில் மட்டுமே கண் மூடித்தனமானதாக இருக்கும்’ (எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு). இதற்கு அர்த்தம், இயற்கையிலுள்ள புறநிலை வகைப்பட்ட நியதிகளின் விதியை ஏற்றுக் கொள்வது, அவசியம் என்பது இயக்கவியல் ரீதியிலே சுதந்திரமாக மாற்றம் பெறுவதை ஏற்றுக்கொள்வது என்பதுதான் அறியப்படாததாயிருந்தும், அறியப்படக் கூடிய தான ‘தன்னிலைப் பொருள்’ (athing initself) என்பது ‘தன் வயப் பொருளாக’ (a thing for us) எப்படி மாற்றம் அடைகிறதோ, ‘பொருட்களின் சாராம்சம்’ எனப்படுவது ‘புலப்பாடுகளாக’ எப்படி மாற்றம் அடைகிறதோ, அதுபோலத்தான்). ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதத்தை (அதைவிட அதிக அளவில் புஹ்னர், ஃபோக்ட், மொலிஷோட் என்போர்களின் விஞ்ஞானக்கேடான பொருள்முதல்வாதத்தை) உள்ளிட்ட ‘பழைய’ பொருள்முதல்வாதத்தின் அடிப்படையான குறைபாடு பின்வருமாறு என்று மார்க்சும் எங்கெல்சும் கருதினர்: 1) இந்தப் பொருள்முதல்வாதம் ‘பெருமளவுக்கு இயாந்திரீகத் தன்மையது’ இரசாயனவியல் துறையிலும், உயிரியல் துறையிலும் (நம் காலத்திற்கு வரும்போது, பொருளைப் பற்றிய மின் தத்துவத்திலும் என்று சேர்த்துக்கொள்வது அவசியமாகும்) ஏற்பட்டிருக்கிற மிக மிக நவீனமான முன்னேற்றங்களை அது கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறுகிறது; 2) பழைய பொருள்முதல்வாதம் வரலாற்றுக்குப் புறம்பானது, இயக்க இயலுக்குப் புறம்பானது (இயக்க இயலுக்கு விரோதமானது என்ற அர்த்தத்தில் இயக்க மறுப்பு இயல் வகைப்பட்டது); வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தை அது முரணின்றியும் முழுமையாகவும் பின்பற்றவில்லை; 3) ‘மானுட சாரம்’ என்கிற விஷயத்தைச் சூட்சுமமாகப் பார்த்ததேயொழிய, (வரலாற்று வகையில் ஸ்தூலமாக வரையறுக்கப் பெற்ற ‘சமுதாய உறவுகளின்’ ஒரு ‘தொகுதியே’ இந்த ‘மானுட சாரம்’ என்று அது கருதவில்லை; ஆகவே உலகத்தை “மாற்றியமைப்பதே” முதன்மையான வேலையாயிருக்கையில், அது உலகத்தைப் பற்றி இவ்வாறு வியாக்கியானம் செய்வதோடு நின்றுவிட்டது. அதாவது, புரட்சிகரமான நடைமுறைச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை அது புரிந்துகொள்ளவில்லை.
இயக்கவியல்
ஹெகலின் இயக்கவியல், வளர்ச்சியைக் குறித்த மிகவும் முழுமையான, உள்ளடக்கத்தில் மிகமிக வளம் நிறைந்த, மிகுந்த ஆழமுள்ள போதனை என்ற முறையிலே மூலச் சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் மிகப் பெரிய சாதனையாகும் என்று மார்க்கம் எங்கெல்சும் கருதினர். வளர்ச்சி, பரிணாமம் சம்பந்தமான கோட்பாட்டைப் பற்றிய மற்ற வரையறுப்பு முறைகள் எல்லாம் ஒருதலைப்பட்சமானவை, உள்ளடக்கத்தில் வளக்குறைவுள்ளவை, இயற்கையிலும் சமுதாயத்திலும் உள்ள (அடிக்கடி திடீர்ப் பாய்ச்சல்கள் மூலமாக, பெருவிபத்துகள் மூலமாக, புரட்சிகள் மூலமாக முன்னே போகும்படியான வளர்ச்சியின் உண்மையான போக்கைத் திரித்துக் காட்டுபவை, உருக்குலைப்பவை என்று அவர்கள் கருதினார்கள். (ஹெகல் வாதம் அடங்கலான கருத்து முதல்வாதத்தால் அழிக்கப்படுவதிலிருந்து) “உணர்வு பூர்வமான இயக்க இயலைக் காப்பாற்றி அதனை இயற்கை பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்திலே நடை முறைக்குக் கொண்டுவந்தவர்கள் அநேகமாக மார்க்சும் நானும் மட்டும்தான்.” “இயக்கவியலுக்கு நிரூபணம் இயற்கைதான். அந்தச் சோதனைக்கு மிகவும் வளம் பொருந்திய விஷயாதாரங்களை, தினசரி பெருகிக் கொண்டே போகும் விஷயாதாரங்களை, நவீன கால இயற்கை விஞ்ஞானம் தந்து கொண்டேயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்” (ரேடியம், மின்னணுக்கள், தனிமங்கள் ஒன்று மற்றொன்றாக மாற்றப்படுவது, முதலானவை கண்டுபிடிக்கப்பட்ட காலத்துக்கு முன்பே எழுதப்பட்டது இது); “அப்படி விஷயாதாரங்களைத் தந்து, முடிவில் இயற்கையின் இயக்கப் போக்கு இயக்க இயல் வகைப்பட்டதே தவிர இயக்க மறுப்பு இயல் வகைப்பட்டதல்ல என்று நவீன கால இயற்கை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.”

எங்கெல்ஸ் எழுதுகிறார். ‘அப்படியப்படியே தயார் நிலையில் உள்ள பொருட்களின் தொகுதியாக உலகத்தைப் புரிந்துகொள்ளக் கூடாது. இயக்கப் போக்குகளின் ஒரு தொகுதியாகத்தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்; இந்த இயக்கப் போக்குகளின் தொகுதியிலே மாற்றம் அடையாதவை போல் வெளிக்குத் தோன்றுகிற பொருட்களும், அதேபோல் அவைபற்றி மூளைக்குள்ளே நிழலாடுகிற சிந்தனை பிம்பங்களும், அதாவது கருத்துருவங்களும், தோன்றியபடியும் மறைந்தபடியும் இருக்கும்படியான இடையறாத மாறுதலுக்கு உட்படுகின்றன – இது மகத்தான அடிப்படைக் கருத்தாகும். குறிப்பாக ஹெகல் காலத்திற்குப் பிறகு இந்த மகத்தான அடிப்படைக் கருத்து மனிதர்களின் பொது உணர்வில் முற்றாகப் பரவிப் பதிந்து விட்டிருக்கிறபடியால் பொதுவான ரீதியிலே இதை யாரும் அநேகமாக மறுப்பதேயில்லை. ஆனால் இந்த அடிப்படைக் கருத்தைச் சொல்லளவிலே ஏற்றுக்கொள்வது ஒன்று, அதை ஒவ்வோர் ஆராய்ச்சித் துறையிலும் யதார்த்தத்தில் செயற்படுத்துவது வேறொன்று. இயக்க இயல் வகைத் தத்துவஞானத்துக்கு இறுதியானதோ, பரமமானதோ, புனிதமானதோ எதுவுமே கிடையாது. எல்லாவற்றின் தாற்காலிகத் தன்மையையும் அது வெளிப்படுத்துகிறது. உருவாகிக் கொண்டும் மறைந்து கொண்டும் இருக்கிற, கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு முடிவில்லாமல் ஏறிச் சென்ற படியேயிருக்கிற, இடையறாத இயக்கப் போக்கு ஒன்றைத் தவிர வேறு எதுவும் அதன் முன் நிலைத்து நிற்க முடியாது. மேலும் இயக்க இயல் வகைத் தத்துவஞானம் என்பதே சிந்திக்கும் மூளையில் தோன்றுகிற இந்த இயக்கப் போக்கின் பிரதிபலிப்பே தவிர வேறில்லை.’ எனவே, மார்க்சின் கருத்துப்படி, இயக்க இயல் என்பது ‘புற உலகு, மனித சிந்தனை என்ற இரண்டினதுமான இயக்கத்தின் பொதுவான விதிகளைப் பற்றிய விஞ்ஞானம்’ ஆகும்.
ஹெகல் தத்துவஞானத்தின் இந்தப் புரட்சிகரமான அம்சத்தை மார்க்ஸ் ஏற்றுக்கொண்டு அதை வளர்த்தார். இயக்க இயல் பொருள்முதல்வாதத்துக்கு ‘இதர விஞ்ஞானங்களுக்கு மேலே நின்று கொண்டிருக்கும்படியான தத்துவஞானம் ஒன்றும் இனிமேல் தேவையில்லை’. முந்திய கால தத்துவஞானத்தில் மிச்சமுள்ளது ‘சிந்தனை, அதன் விதிகள் பற்றிய விஞ்ஞானம் – அதாவது, விதிமுறைத் தர்க்க இயலும் இயக்கவியலும்தான்.’ மேலும் மார்க்சின் கருத்துப்படியும், ஹெகலுக்குப் பொருத்தமான விதத்திலும் இயக்க இயலில் இப்பொழுது அறிவுத் தத்துவம் அல்லது ‘எபிஸ்டமாலஜி’ என்று சொல்லப்படுவதும் அடங்கும். அறிவு பற்றிய இந்தத் தத்துவமுங்கூடத் தானெடுத்துக் கொள்ளும் ஆராய்ச்சி விஷயத்தை வரலாற்றுரீதியாகத்தான் கவனித்துத் தீர வேண்டும்; அறிவின் தோற்றுவாய், வளர்ச்சி, அறிவு இல்லாத நிலையிலிருந்து அறிவு நிலைக்கு மாறி வருவது ஆகியவற்றை அது பரிசீலித்துப் பயின்று பொதுமைப்படுத்த வேண்டும்.
இப்போதெல்லாம் வளர்ச்சி பற்றிய, பரிணாமம் பற்றிய கருத்து அநேகமாக சமுதாய உணர்வு முழுவதிலும் உள்நுழைந்து விட்டிருக்கிறது; ஆனால் ஹெகல் தத்துவஞானத்தின் வழியாக அல்ல; வேறான வழிகளில். எனினும் ஹெகலின் அடிப்படையில் மார்க்சும் எங்கெல்சும் வரையறுத்தப்படி அமைந்துள்ள இந்தக் கருத்து இன்று வழக்கிலுள்ள பரிணாமக் கருத்தை விட எவ்வளவோ முழுமையானது, உள்ளடக்கத்தில் எவ்வளவோ வளம் பொருந்தியது. ஏற்கெனவே தாண்டிவிட்ட கட்டங்களே திரும்ப வந்து கொண்டிருப்பது போலத் தோன்றினாலும் அந்தக் கட்டங்கள் வேறுவகையில், முந்தியதைவிட உயர்ந்த அடிப்படையில் திரும்ப வந்து கொண்டிருப்பதான வளர்ச்சி (‘நிலைமறுப்பின் நிலை மறுப்பு’); ஒரு வகையில் சொல்லப்போனால் நேர்கோடாக இல்லாமல் சுழன்று சுழன்று மேலேறும் வளர்ச்சி; -திடீர்ப் பாய்ச்சல்கள், பெருவிபத்துக்கள், புரட்சிகள் மூலம் ஏற்படும் வளர்ச்சி; “தொடர்ச்சியில் முறிவுகள்”; அளவு பண்பாக உருமாறுதல்; –குறிப்பிட்ட பொருளின் மீதோ, குறிப்பிட்ட புலப்பாட்டுக்குள்ளோ, குறிப்பிட்ட சமுதாயத்துக்குள்ளோ செயல்படுகிற பல்வேறு சக்திகள், போக்குகள் ஆகியவற்றின் முரண்பாட்டினாலும் மோதலினாலும் ஏற்படுகிற வளர்ச்சிக்கான உள்துண்டுதல்கள்;- (வரலாறு புதிய புதிய அம்சங்களை என்றென்றும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கையிலேயே) எந்தவொரு புலப்பாட்டின் எல்லா அம்சங்களும் ஒன்றையொன்று சார்ந்துநின்று ஒன்றோடொன்று மிகவும் நெருக்கமான, பிரிக்க முடியாத தொடர்பு கொண்டிருப்பது, இந்தத் தொடர்பு நியதிக்குட்பட்ட, சர்வப் பொதுவான இயக்கத்தின் நிகழ்ச்சிப் போக்கை ஏற்படுத்தித் தருகிறது இவையெல்லாம் வளர்ச்சியைப் பற்றிய (வழக்கமானவற்றைக் காட்டிலும்) அதிக வளம் பொருந்திய தத்துவமான இயக்க இயலின் இயல்புகளில் சிலவாகும். (1868 ஜனவரி 8ம் தேதி மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தைப் பார்க்க; அதில் அவர் ஷ்டைன் என்பவரின் ‘இறுகிப் போன முப்பிரிவுகள்’ பற்றிக் கேலி செய்கிறார்; அவற்றைப் பொருள்முதல்வாத இயக்க இயலுடன் போட்டுக் குழப்புவது அபத்தமாகும்).
No comments:
Post a Comment