மார்க்சிய ஆசான் லெனின் நினைவு நாளில் அவரின் எழுத்துகள்-3

 வரலாற்றில் கார்ல் மார்க்ஸ் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்

சோஷலிசச் சமுதாயத்தின் சிற்பியாய்ப் பாட்டாளி வர்க்கம் ஆற்றும் வரலாற்றுப் பணியை மார்க்சின் தத்துவம் தெளிவுப்படுத்துகிறது. இதுவே இத்தத்துவத்தின் முதன்மையான சிறப்பு. மார்க்ஸ் இந்தத் தத்துவத்தை விரித்துரைத்த பின் உலகெங்கணும் நடைபெற்றுள்ள நிகழ்ச்சிகளின் போக்கு இத்தத்துவத்தை மெய்ப்பித்திருக்கிறதா?

1844-ல் மார்க்ஸ் இதை முதன் முதல் எடுத்துரைத்தார். 1848ல் வெளியான மார்க்ஸ், எங்கெல்சின் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை இந்தத் தத்துவத்தை முழுமையாகவும் முறையாகவும் விரித்துரைத்தது. இது நாள் வரை இதுவே தலை சிறந்த விரிவுரையாய் இருந்து வருகிறது. அதன்பின் உலக வரலாறு மூன்று பிரதான காலக்கூறுகளாய்த் தெளிவாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறது: 1) 1848-ம் ஆண்டுப் புரட்சியிலிருந்து பாரிஸ் கம்யூன் (1871) வரை; 2) பாரிஸ் கம்யூனிலிருந்து ருஷ்யப் புரட்சி (1905) வரை; 3) ருஷ்யப் புரட்சிக்குப் பின்,

இந்தக் காலக்கூறுகள் ஒவ்வொன்றிலும் மார்க்சின் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட எதிர்காலம் என்னவென்பதைக் காண்போம்.

முதலாவது காலக்கூறின் துவக்கத்தில் மார்க்சின் தத்துவம் எவ்வகையிலும் கோலோச்சும் நிலையில் இருக்கவில்லை. சோஷலிசத்தின் எண்ணிறந்த குழுக்கள் அல்லது போக்குகளில் ஒன்ருகவே இருந்தது. உண்மையில் கோலோச்சிக் கொண்டிருந்த சோஷலிச வடிவங்கள் பிரதானமாய் நமது நரோதிசத்தை ஒத்தவை: வரலாற்று இயக்கத்தின் பொருள் முதல்வாத அடித்தளத்தைப் புரிந்து கொள்ளாமை, முதலாளித்துவச் சமுதாயத்தில் ஒவ்வொரு வர்க்கத்துக்குமுள்ள பாத்திரத்தையும் முக்கியத்துவத்தையும் தனித்துப் பிரிக்கும் திறனின்மை, ஜனநாயகச் சீர்திருத்தங்களின் முதலாளித்துவத் தன்மையை மக்கள், ‘நீதி’, ‘உரிமை’ இத்தியாதி குறித்த பல்வேறுபட்ட, அரை – சோஷலிசத் தொடர்களைக் கொண்டு மூடிமறைத்தல் முதலான பலவற்றிலும் இவை நமது நரோதிசத்தை ஒத்தவை.

மார்க்சியத்துக்கு முற்பட்ட சோஷலிசத்தின் இந்தக் கதம்பத்திரளான ஆடம்பர வாய்வீச்சு வடிவங்கள் யாவற்றுக்கும் 1848-ஆம் ஆண்டுப் புரட்சி மரண அடி கொடுத்தது. எல்லா நாடுகளிலும் இப்புரட்சி சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களையும் செயலில் வெளிப்படச் செய்து புலப்படுத்திக் காட்டிற்று. குடியரசுவாத முதலாளித்துவ வர்க்கம் பாரிசில் 188 ஜூன் நாட்களில் தொழிலாளர்களைச் சுட்டு வீழ்த்தியதானது, பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் இயற்கையாகவே சோஷலிசத் தன்மையது என்பதை முடிவாய்ப் புலப்படுத்திக் காட்டிற்று. மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தினர் எந்த வகையான பிற்போக்கையும் விட பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சையைக் கண்டுதான் நூறு மடங்கு கூடுதலாய் அஞ்சி நடுங்கினர். கோழைகளாய் அண்டிப் பிழைக்கும் மிதவாதிகள் பிற்போக்கிற்கு அடிபணிந்து தண்டமிட்டனர். விவசாயி மக்கள் பிரபுத்துவத்தின் மீதமிச்சங்கள் ஒழிக்கப்பட்டதுடன் திருப்தியடைந்து ஒழுங்கின் ஆதரவாளர்களோடு சேர்ந்து கொண்டனர், எப்பொழுதாவது அரிதாய்த்தான் தொழிலாளர் ஜனநாயகத்துக்கும் முதலாளித்துவ மிதவாதத்துக்கும் இடையே ஊசலாடினர். வர்க்கமல்லாத சோஷலிசம், வர்க்கமல்லாத அரசியல் இவை குறித்த எல்லாத் தத்துவங்களும் அப்பட்டமான அபத்தமே என்பது நிரூபணமாயிற்று.

பாரிஸ் கம்யூன் ஆஃப் 1871 | கண்ணோட்டம் …

முதலாளித்துவ மாற்றங்களுக்குரிய இந்த வளர்ச்சியைப் பாரிஸ் கம்யூன் (1871) நிறைவுறச் செய்தது; வர்க்க உறவுகள் அவற்றின் மிகப் பெருமளவுக்கு ஒளிவுமறைவற்ற உருவில் காட்சி தரும் அரசியலமைப்பு வடிவமான குடியரசு உறுதி பெற பாட்டாளி வர்க்கத்தின் வீரதீரம் மட்டுமே தான் காரணம்.

ஏனைய எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் மேலும் சிக்கலான. நிறைகுறையான வளர்ச்சி இதே விளைவுக்கு இட்டுச் சென்றது முதலாளித்துவச் சமுதாயம் திட்டவட்டமான உருப் பெற்றுவிட்டது. முதலாவது காலக்கூறின் (1848-7I) கடைப் பகுதியில், புயல்களும் புரட்சிகளுமாயிருந்த இப்பகுதியில், மார்க்சியத்துக்கு முற்பட்ட சோஷலிசமானது இறந்துபட்டது. சுயேச்சையான பாட்டாளி வர்க்கக் கட்சிகள் உதித்தெழுந்தன: முதலாவது அகிலம் (1864-72), மற்றும் ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சி.

இரண்டாவது காலக்கூறு (1872-1904) துவக்கத்திலிருந்தே அதன் ‘சமாதானத்’ தன்மையால், புரட்சிகள் இல்லாத நிலையால் வேறுபடுத்திக் காட்டப் பெற்றது. மேற்குலகு முதலாளித்துவப் புரட்சிகளை நடத்தி முடித்து விட்டது. கிழக்குலகு இன்னும் அவற்றுக்குரிய மட்டத்துக்கு உயர்ந்தாகவில்லை.

வரவிருந்த மாற்றங்களுக்காகச் ‘சமாதான வழியில்’ தயாரிப்புகள் செய்துகொள்ளும் கட்டத்தினுள் மேற்குலகு அடியெடுத்து வைத்தது. அடிப்படையில் பாட்டாளி வர்க்கத் தன்மையதான சோஷலிசக் கட்சிகள் எங்கும் அமைக்கப்பட்டன. இவை முதலாளித்துவப் பாராளுமன்ற முறையை உபயோகித்துக்கொள்ளவும் தமது சொந்த நாளேடுகளை, தமது கல்வி போதனை நிலையங்களை, தமது தொழிற் சங்கங்களை, தமது கூட்டுறவுக் கழகங்களை நிறுவிக்கொள்ளவும் கற்றுக் கொண்டன. மார்க்சின் தத்துவம் முழுநிறை வெற்றி பெற்றுப் பரவத் தொடங்கிற்று. பாட்டாளி வர்க்கத்தினுடைய சக்திகளின் தேர்வாய்வும் அணிதிரட்டலும், வரவிருந்த போராட்டங்களுக்கான அதன் தயாரிப்பும், மெதுவாகத்தான் என்றாலும், இடையறாது முன்னேறின.

மார்க்சியத்தின் தத்துவார்த்த வெற்றியால் நிர்ப்பந்திக்கப்பட்ட அதன் பகைவர்கள், மார்க்சியவாதிகளாய்த் தமக்கு வேஷமிட்டுக் கொண்டனர். -வரலாற்றின் இயக்கவியல் போக்கு அத்தகையதாய் இருந்தது. உள்ளுக்குள் உளுத்துப் போய்விட்ட மிதவாதமானது சோஷலிச சந்தர்ப்பவாதத்தின் வடிவில் தனக்குப் புத்துயிர் அளித்துக் கொள்ள முயன்றது. மாபெரும் போர்களுக்காகச் சக்திகளை ஆயத்தமாக்கிக் கொள்வதற்குரிய இந்தக் காலக்கூறு, இந்தப் போர்கள் கைவிடப் படுதலைக் குறிப்பதாய் அவர்கள் வியாக்கியானம் செய்தனர். கூலி அடிமைமுறையை எதிர்த்துப் போராடுவதற்கு அடிமைகளின் நிலைமைகளில் ஏற்பட்ட மேம்பாடு, இந்த அடிமைகள் சுதந்திரத்துக்கான தமது உரிமையை அற்பக்காசுக்காக விற்றதைக் குறித்ததாய் அவர்கள் கொண்டனர். கோழைத் தனமாய் அவர்கள் ‘சமூக அமைதி’ (அதாவது அடிமை யுடைமையாளர்களுடன் அமைதி), வர்க்கப் போராட்டத்தைக் கைவிடுதல் முதலானவற்றை உபதேசித்தனர். பாராளுமன்றத்தில் சோஷலிச உறுப்பினர்களிடையிலும், தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பல்வேறு அதிகாரிகளிடையிலும், “அனுதாபங் கொண்ட” அறிவுத்துறையினரிடையிலும் அவர்கள் மிகப் பல ஆதரவாளர்களைப் பெற்றிருந்தனர்.

ஆனால் சந்தர்ப்பவாதிகள் ‘சமூக அமைதி’ குறித்தும் ‘ஜனநாயகத்தில்’ புயல் அவசியமற்றதாகிவிட்டது குறித்தும் வாழ்த்துரைத்துத் தம்மைத் தாமே போற்றிக் கொண்ட மறுகணமே, மாபெரும் உலகப் புயல்களுக்கான ஒரு புதிய ஆதாரம் ஆசியாவிலே உதித்தெழுந்தது. ருஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து துருக்கியிலும் பாரசீகத்திலும் சீனுவிலும் புரட்சிகள் மூண்டன. புயல்களுக்கும் ஐரோப்பாவில் அவற்றின் “எதிரொலிகளுக்கும்” உரிய ஒரு சகாப்தத்தில் தான் இப்பொழுது நாம் வாழ்ந்து வருகிறோம். மாபெரும் சீனக் குடியரசுக்கு ‘நாகரிகமடைந்த’ பல்வேறு கழுதைப்புலிகளும் இன்று பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டு இக்குடியரசை எதிர்த்துக் கிளம்புகின்றன ஏற்படும் கதி எதுவாயினும், உலகில் எந்தச் சக்தியாலும் ஆசியாவில் பழைய பண்ணையடிமை நிலையைத் திரும்பவும் நாட்டவோ, ஆசிய நிலை, அரை-ஆசிய நிலை நாடுகளில் பெருந்திரளான மக்களின் வீரம் செறிந்த ஜனநாயகத்தை அழித்தொழிக்கவோ முடியப் போவதில்லை.

வெகுஜனப் போராட்டத்துக்குத் தயார் செய்வதற்கும் அதை வளர்த்துச் செல்வதற்குமான நிலைமைகளில் கவனம் செலுத்தாமலிருந்த சிலர், ஐரோப்பாவில் முதலாளித்துவத்துக்கு எதிரான தீர்மானகரமான போராட்டத்தில் ஏற்பட்ட நீண்டகாலத் தாமதங்களால் நம்பிக்கையற்ற நிலைக்கும் அராஜக வாதத்துக்கும் இழுத்துச் செல்லப்பட்டு விட்டனர். இந்த அராஜகவாத நம்பிக்கையற்ற நிலை எவ்வளவு கிட்டப்பார்வை கொண்டது, நெஞ்சு உரமில்லாதது என்பதை இப்பொழுது நாம் காண முடியும்.

எண்பது கோடி மக்கள் தொகை கொண்ட ஆசியா, இதே ஐரோப்பிய இலட்சியங்களுக்கான போராட்டத்தினுள் ஈர்க்கப்பட்டிருக்கும் இவ்வுண்மை, நமக்கு நம்பிக்கையற்ற நிலையையல்ல, நன்னம்பிக்கையை ஊட்டி ஆர்வமளித்திட வேண்டும்.

ஆசிய நிலைப் புரட்சிகள் மிதவாதத்தின் திராணியின்மையையும் இழிநிலையையும், ஜனநாயக வெகுஜனங்களுடைய சுயேச்சையின் விசேஷ முக்கியத்துவத்தையும், பாட்டாளி வர்க்கத்தாருக்கும் எல்லா வகையான முதலாளித்துவ வர்க்கத்தாருக்கும் இடையிலுள்ள எடுப்பான பிரிவினைக் கோட்டையும் திரும்பவும் நமக்குக் காட்டியுள்ளன. ஐரோப்பா, ஆசியா இரண்டின் அனுபவத்துக்குப் பிற்பாடு, வர்க்கமல்லாத அரசியல் குறித்தும் வர்க்கமல்லாத சோஷலிசம் குறித்தும் பேசுகிறவர் எவரும் கூண்டிலே வைத்து ஆஸ்திரேலியக் கங்காரு அல்லது அதையொத்த ஒன்றின் பக்கத்தில் கண்காட்சியில் காட்டப்பட வேண்டியவரே ஆவார்.

ஆசியாவை அடுத்து ஐரோப்பாவும்-ஆசியநிலை வழியில் இல்லாவிட்டாலுங்கூட-அதிரத் தொடங்கிவிட்டது. 1872-1904ம் ஆண்டுகளின் ‘சமாதானக்’ காலக்கூறு இனி ஒரு போதும் திரும்ப வழியின்றிக் கடந்து சென்றுவிட்டது. உயர்ந்துவிட்ட வாழ்க்கைச் செலவும் டிரஸ்டுகளின் கொடுங்கோன்மையும் என்றுமே கண்டிராத அளவுக்குப் பொருளாதாரப் போராட்டத்தைக் கூர்மையாக்கி வருகின்றன. இந்த நிலைமை, மிதவாதத்தால் மிக அதிகமாய்ச் சீரழிக்கப்பட்டிருக்கும் பிரிட்டிஷ் தொழிலாளர்களையுங்கூட இயக்கத்தில் செயல்பட வைத்திருக்கிறது. ‘வைரம் பாய்ந்த’ பிற்போக்குவாத முதலாளித்துவ-ஜங்கர் நாடான ஜெர்மனியிலுங்கூட அரசியல் நெருக்கடி சூடேறி வருவதைக் காண்கிறோம். ஜன்னிவேகங் கொண்ட படைக்கலப் பெருக்கமும், ஏகாதிபத்தியக் கொள்கையும் தற்கால ஐரோப்பாவை வெடிமருந்துப் பீப்பாயையே அதிகம் ஒத்த ‘சமூக அமைதியாக’ மாற்றி வருகின்றன. இவற்றுக்கிடையில் எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் அழுகிக் கெடும் நிகழ்ச்சிப் போக்கும் பாட்டாளி வர்க்கத்தின் முதிர்ச்சியும் ஓயாத முன்னேற்றம் கண்டு வருகின்றன.

மார்க்சியம் தோன்றியது முதல் உலக வரலாற்றின் மூன்று பெரும் காலக்கூறுகளில் ஒவ்வொன்றும் மார்க்சியத்துக்குப் புதிய உறுதிப்பாடும் புதிய வெற்றிகளும் கிட்டச் செய்திருக்கிறது. ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் தத்துவம் என்ற முறையில் மார்க்சியத்துக்கு, வரலாற்றின் வருகிற காலக் கூறினில் இன்னும் பெரிய வெற்றி கிட்டப் போகிறது.

பிராவ்தா , இதழ் 50,  நூல் திரட்டு,

1913 மார்ச் 1        தொகுதி 23,

ஒப்பம். வி. இ.லெனின்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்