திறந்த நிலை மார்க்சியம் யாருக்கானது?-2

 தொடரும் விவாதம்.....

19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்,20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ஐரோப்பாவில் எர்னஸ்ட் மாக் பெயரால் மாக்கிம் எனவும், அனுபவவாத விமர்சனம்என்றும் அழைக்கப்பட்ட தத்துவம் பரவியிருந்தது. எர்னஸ்ட் மாக், அவேனரியஸ் உள்ளிட்ட இந்த தத்துவவாதிகள் தாங்களது தத்துவமே ஒரே அறிவியல் தத்துவம் என்று சொல்லிக் கொண்டனர்.இதற்கு அவர்கள் பல வாதங்களை முன்வைத்தனர்.

தத்துவம்,கருத்துமுதல்வாதம்,பொருள்முதல்வாதம் என்ற இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளது. இரண்டும் வெவ்வேறு பக்கமாக சாய்ந்திருக்கும் பிரிந்திருக்கும் நிலையை தாங்கள் சரிசெய்து செழுமையாக்கி,அனுபவவாதவிமர்சனம்தத்துவத்தைப் படைத்திருப்பதாக பெரிதாக ஆரவாரம்செய்துநூல்களைவெளியிட்டனர்.

அன்றைய சமுக ஜனநாயக இயக்கத்தில் இருந்தமார்க்சியர்ள்பலரும் ,”அனுபவவாத விமர்சனம்என்பது அறிவியல் உலகின் ஒரு புதிய சிந்தனையாக பார்க்க முற்பட்டனர்.சிலர் மார்க்சிய தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கு மாற்றான தத்துவம் என்று நினைக்கும் அளவிற்கு கூட சென்றனர். இந்த கூட்டத்தோடு  சில முக்கியமான அறிவியலாளர்களும் சேர்ந்து கொண்டனர்.

அன்று சோசலிஸ்ட் கட்சிகளைக் கொண்ட சர்வதேச அகிலம் இயங்கி வந்தது.அது பிரெடரிக் எங்கெல்சின் அரும்பெரும்பணியால்உருவானது.ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு சந்தர்ப்பவாதிகள் நிறைந்த அமைப்பாக மாறிப் போனது.அகிலத்தின் தலைவராக இருந்த கார்ல் காவுத்ஸ்கி ஜெர்மானிய சமுக ஜனநாயகத்தின் செல்வாக்கான தலைவராகவும் விளங்கியவர்.தத்துவ உலகில் மார்க்சியத்தை பின்னுக்குத் தள்ளுகிறவகையில்பரவிக்கொண்டிருக்கும் மாக்கிசத்திற்கு பதிலடி கொடுக்க சர்வதேச அகிலம் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் காவுத்ஸ்கி மார்க்சிய தத்துவம், எர்னஸ்ட்மாக்கின் தத்துவத்தோடு எந்த வகையிலும் முரண்படவில்லை என்று அறிவித்தார். இது மேலும் பல ஐரோப்பிய சோஷலிச கட்சிகளிடையே அனுபவாத விமர்சனத் தத்துவம் பரவிட வழிவகுத்தது.

ஐரோப்பாவில் இந்த சூழல் நிலவியபோது ரஷ்யாவிலும்கருத்தியல்போராட்டத்திற்கான தேவை அதிகரித்தது.1905-07-ஆம் ஆண்டுகளில் ஜாராட்சிக்கு எதிராக எழுந்த புரட்சிகடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டது. புரட்சி தோல்வியில் முடிந்ததையொட்டி ஜார் அரசாங்கம் புரட்சியாளர்களை வேட்டையாடியது.பல்லாயிரக்கணக்கானோர் தூக்கிலடப்பட்டனர்.

ரஷ்ய அறிவுஜீவிகள் மத்தியில் மார்க்சியம்மீதும்,இயக்கவியல்,வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் மீதும் நம்பிக்கை குறையத் தொடங்கியது.சமூகப் பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடவுளை நாடும் போக்கு அதிகரிக்கத் துவங்கியது.”கடவுள்நாடுவோர்எனும்பெயரில் கடவுள் பிரசாரம் செய்யப்பட்டு கிறித்துவத்தின் மீது புதிய ஆர்வம் தூண்டப்பட்டது.எல்லாவற்றுக்கும் மேலாக, ரஷ்யகம்யுனிஸ்ட்கட்சியான போல்ஷ்விக் கட்சியில் இருந்த சிலர் இந்தக் கருத்துக்களுக்கு இரையானதுதான் பெரும் ஆபத்தாக உருவெடுத்தது. போக்தானாவ், பசாராவ், லூனாசார்ஸ்கி போன்றோர் மார்க்சியத்தையும் எர்னஸ்ட் மாக்கின் தத்துவத்தையும் இணைத்துப் பேச முற்பட்டனர்.மார்க்சியத்தைவளர்க்கிறோம் என்ற பெயரில் இது நடந்தது.

ஆக, புரட்சிகர கட்சியின் தத்துவ அடித்தளத்தை வேரோடு சாய்த்திடும் வேலை நடந்து வந்தது.இந்த நிலையை லெனின் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பாரா?மார்க்சியத்தின் மீதான தாக்குதல்களை முறியடித்து, மார்க்சியத்தை பாதுகாத்திடும் கருத்துப் போரில் இறங்கினார். அதன் விளைவாகவே பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்நூல் பிறப்பெடுத்தது.

பொருளே முதன்மையானதுபொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற தலைப்பிலேயே தனது முக்கிய குறிக்கோளைலெனின்வெளிப்படுத்துகிறார்.  ஆழ்ந்து நோக்கினால் இது புலப்படும்.

தத்துவத்தில்பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என இரண்டு பிரிவுகள்தான் உண்டு.எந்த பெயர்களில் எந்த தத்துவம் எழுந்தாலும் இந்த இரண்டுக்குள் தான் அடக்கம். எனவே ஒருபுறம் பொருள்முதல்வாதம் எனில்மற்றொருபுறம் அனுபவவாத விமர்சனம்என்ற பெயர் கொண்டாலும் அது கருத்துமுதல் வாதம்தான்.ஆனால்,அனுபவவாதவிமர்சன தத்துவ ஆசிரியர்கள் தங்களை கருத்து முதல்வாதிகள்என்றுஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், அவர்களுடைய வாதங்கள் அனைத்தும் பழைய கருத்துமுதல்வாதமே என்று லெனின் நூலில் ஆணித்தரமாக நிறுவுகிறார்.புலனறிவு,பொருளின் இருப்பு, அறிவு போன்ற அடிப்படை தத்துவார்த்த பிரச்னைகளில்மார்க்சியத்தின்பார்வையையும் மாக்கியவதிகள் விமர்சித்துள்ளனர். ஒவ்வொரு கருத்தையும் அலசி ஆராய்ந்து தகர்க்கின்றார் லெனின்.

அனுபவவாதவிமர்சனதத்துவ ஆசிரியர்கள் தத்துவத்தின் இரு பிரிவுகளில் உள்ள குறைகளை நீக்கி ஒரு புதிய தத்துவ முறையைபடைப்பதாக கூறிக்கொண்டனர். இந்தக் கூற்றினைத் தகர்த்து அவர்களின் புதிய முறை என்பது  பழைய  17௦௦-ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் பெர்க்லியின் கருத்துமுதல்வாதம்தான் என்று லெனின் நிறுவுகிறார்.பெர்க்லியின் வாதங்களும், முந்தைய கருத்துமுதல்வாதிகளின் கருத்துக்களும் மாக், அவனேரியஸ் போன்றோர்களின் கருத்துக்களோடு எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை லெனின் அம்பலப்படுத்துகிறார்.(இங்கேயும் அதையைதான் திறந்தநிலை மார்க்சியம் பேசுவோர் செய்த்துள்ளனர் என்று தெளிவாக கூறமுடியும்).

தத்துவத்தில் இரண்டு வேறுபட்ட நிலைகளான பொருளா,கருத்தா என்ற முகாம்களில் நான் எதிலும் சாராதவர் என்று சொல்லி வருகின்றார், அனுபவாத விமர்சகர்,வித்தியாசமானநிலைஎன்னுடையது என்று உள்ளே புகுந்து வாதிடுகிறார். புலன் உணர்வுகளின் தொகுதியே பொருள் என்று பேசுகின்றார் அவர். புதிய பார்வை என்ற பெயரால் மாக் புகுத்துகிற கருத்தை அம்பலப்படுத்துகிறார்லெனின் .கருத்துதான்அடிப்படை பொருளின் இருப்பை கருத்தே நிர்ணயிக்கிறது எனும்பழைய தத்துவத்தைத்தான்  “புலன் உணர்வுகளின் தொகுதிஎன்று மாக் புது பெயர் சூட்டி அழைகின்றார்.(இங்கேயும்அதேநிலைதான் கோட்பாட்டை உடைகிறார்களாம் எதற்கு என்பது தெரிந்தே செய்கின்றனர்)

பொருள் மனிதனின் புலன் உணர்வில் பிரதிபலிக்கிறது. பிறகு அது மனித மூளையால் பெறப்பட்டு    பொருள்  பற்றிய அறிவு உருவாகிறது.உதாரணமாக,பச்சை நிறம் கொண்ட திராட்சையை பார்க்கும் ஒருவர் அதன் நிறத்தை தனது புலன் உறுப்பினால் (கண்பார்வை) புலன் உணர்வு பெறுகின்றார்..அந்த புலன் உணர்வு மூளைக்கு அனுப்பப்பட்டு அந்தப் பொருள் பச்சை நிறம் கொண்ட திராட்சை என்று அறிதலுக்கு வருகின்றார்.

பொருளின் கூறுகள் மனிதரின் புலன் உணர்வுகளோடு கலந்து வினையாற்றும் போதுதான் புலனறிவு ஏற்பட்டு அறிவு பெறும் நிகழ்வு நடப்பதை லெனின் விளக்குகிறார். பச்சை நிறம் கொண்ட திராட்சையின்நிறம்எப்படி உணரப்படுகிறது? ஒளி அலைகள் கண்ணின் கருவிழிகளில் பட்டு, அந்த உணர்வுகள் மூளையில் பதிகின்றன.அதன் விளைவாக பச்சை நிறம் என்ற புலன் அறிவும்,பிறகு பொருளின் (பச்சை நிறம் கொண்ட திராட்சை) முழுத்தன்மை சார்ந்த அறிவும் தோன்றுகிறது.இதில் பொருள் மட்டுமல்ல, ஒளி அலைகளும் பொருளாகவே லெனின் காண்கின்றார்.நம்மைச் சுற்றியுள்ள, வெளியுலகம்அனைத்துமே பொருட்களால் ஆனது: அனுபவவாத விமர்சகர்கள் பொருள் அல்லாதவைகளின் இருப்பு பற்றி பேசுவதைலெனின் நிராகரிக்கிறார்.இதனை புலனுணர்ச்சிகளின் தொகுதி என்பது போன்ற எந்தப் பெயர்களை அவர்கள் கொடுத்தாலும் அது உண்மையல்ல. எனவே பொருள், அதன் தன்மைகள் அனைத்தும் மனிதமனதிற்கு அப்பாற்பட்டு சுயேச்சையான இருப்பு கொண்டவை. இதுவேமார்க்சியஇயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் அடிப்படை என்கிறார் லெனின். இதுவே உலகை சரியாக அறிந்து   கொள்ளவும்,புரிந்து கொள்ளவும் உதவிடும்.

வண்டியை குதிரைக்கு முன்னால் நிறுத்தி

அனுபவவாத விமர்சகர்கள் பொருளை அருவமானஅடையாளம்என்றுவரையறுக்கின்றனர். இந்த சொல்லாடலைப் பயன்படுத்தி குழப்புவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.“அருவமானஅடையாளம் என்றால் நிலையான புலன் உணர்வுகளின் தொகுதிதான் உண்மையாக இருக்கிறது; பொருள் அல்ல என்பது அவர்களது வாதம்.இது அவர்களை எங்கு கொண்டு சேர்க்கிறது? பொருள் என்பதே மனித உணர்வில் தோன்றி உருவாகும் கருத்தாக்கம்என்பதுதான்அனுபவவாதிகளின் உண்மையானநிலை என்று வெளிப்படுத்திய லெனின், அதனால் அவர்கள் கருத்துமுதல்வாதத்தில்தான் கரைந்து போகிறார்கள் என்று எடுத்துரைக்கின்றார்.பொருள், புலனுணர்வு, அறிவு ஆகியவற்றில் புலன் உணர்வுகளை முதன்மையாக அடிப்படையாக பார்ப்பது கருத்துமுதல் வாதம்.புலன் உணர்வுகளிருந்துபெறப்படும் எண்ணங்கள் மேலும் செழுமைப் படுத்தப்பட்டு அறிவு உண்டாகிறது என்பது கருத்துமுதல்வாதத்தின்நிலை. ஆனால், புலன் உணர்வுக்கும் அதையொட்டி ஏற்படும் அறிவுக்கும் அடிப்படை பொருள்தான்என்பது பொருள்முதல்வாதம்.தொடரும் நாளை


இந்த நூலை கொணர்ந்தவர் முன்வைத்து பகுதி கீழே அப்படியே உள்ளது

நியூ செஞ்சுரி

வெளியீடாக

தமிழில்

சமகால

மார்க்சிய

அரசியல்

நூல்கள்

நூல் முன்னோட்டம்

பொதுவாக, அரசுகளால் பயங்கரவாதம் என்று அடையாளப்படுத்தப்படும் தாக்குதல்களைவிடபலமடங்கு கொடூரமாக, பல மடங்கு உயிர்ப்பலிகளை ஏற்படுத்தும் போர்களை, தாக்குதல்களை மேற்கத்தியமுதலாளித்துவ அரசுகளும் ஏகாதிபத்தியங்களும் நடத்தி வருகின்றன. அதற்கு மேற்கத்திய பயங்கர வாதம்

என்று பொருத்தமான பெயரிட்டுள்ளனர் இந்நூலாசிரியர்கள் நோம் சோம்ஸ்கியும் ஆண்ட்ரே வில்செக்கும்.

தொகுத்தவர் : மா.சிவகுமார்

மேற்கத்திய பயங்கரவாதம் குறித்துஹிரோஷிமாவிலிருந்து ஆளில்லா விமானத் தாக்குதல் வரை - (சர்வதேசஅரசியல்) பொதுவாக, அரசுகளால் பயங்கரவாதம் என்று அடையாளப்படுத்தப்படும் தாக்குதல்களைவிட பல மடங்கு கொடூரமாக, பல மடங்கு உயிர்ப்பலிகளை ஏற்படுத்தும் போர்களை, தாக்குதல்களை மேற்கத்திய முதலாளித்துவ அரசுகளும் ஏகாதிபத்தியங்களும் நடத்தி வருகின்றன.அதற்கு மேற்கத்திய பயங்கர வாதம் என்று பொருத்தமான பெயரிட்டுள்ளனர் இந்நூலாசிரியர்கள் நோம் சோம்ஸ்கியும் ஆண்ட்ரே வில்செக்கும்.

மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களால்,இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகுநேரிடையாக,5.5கோடி பேர் கொல்லப்பட்டனர்என்று இந்நூலின் முன்னுரை தெரிவிக்கிறது.20ஆம்நூற்றாண்டில் போர்கள்,போர்களை அடிப்படைகளாகக்கொண்ட ஆக்கிரமிப்புகள்,படையெடுப்புகள்,தாக்குதல்கள், ஊடுருவல்கள்,போர் ஆதரவுநடவடிக்கைகள் ஆகியன போர்களுக்கு முன்னும்பின்னும் இடையூடாக மேற்கொள்ளப்படுவதுஇந்நூல் முழுவதும் நூலாசிரியர்கள் இருவரின்உரையாடல்களாக வழங்கப்பட்டுள்ளன.

கடந்த100,200ஆண்டுகளில் உலகின் பலபகுதிகளிலும் மிகக் கொடுமையான போர்கள்நடந்து வந்திருக்கின்றனஒரு முழு இனத்தையும் அழித்தொழிக்கக்கூடிய போர்கள் பெருகி வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையிலும் பிற சர்வதேச அரங்கங்களிலும் இன அழிப்புகள் கண்டிக்கப்படுகின்றன.

ஆயுதங்களை ஏந்தாத மக்கள் பகுதியினரும் அடியோடு அழித்தொழிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களிலும் மக்கள் அமைதியாகத் தூங்கும் வேளைகளிலும் வான் வழியாகக் குண்டு வீச்சுகள் மூலமும் ஆயுதம் ஏந்தாத மக்கள் குண்டு வீசிக் கொல்லப்படுகின்றனர்.ஹிரோஷிமா நாகசாகிதொடங்கி ஆளில்லா விமானத் தாக்குதல் வரை என்று இந்த நூலுக்கு மிகச் சரியான துணைத் தலைப்பு தரப்பட்டுள்ளது.

 

தெருச்சண்டை ஆண்டுகள் - அறுபதாம்

ஆண்டுகளின் தன்வரலாறு - (சர்வதேச அரசியல்)

தெற்காசியாவில் பிறந்து 1960-களில் இங்கிலாந்தில் மேற்படிப்புக்குப் போன பலநேர்மையான மனசாட்சியுள்ள இளைஞர்கள் அந்தக் காலகட்டத்தின் கொந்தளிப்பான உலக அரசியல்நிகழ்வுகளுக்கு ஐரோப்பிய மக்கள் ஆற்றியஎதிர்வினையில் தீவிரமாக பங்கேற்றனர்.ஐரோப்பிய நகரங்களில் தெருப் போராட்டங்களில் ஈடுபட்டனர்,பத்திரிகைகள் நடத்தினர்,கொடூரமான ஏகாதிபத்திய போர் முனைகளுக்கும் சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடுகளுக்கும் நேரில் சென்று பாதிக்கப்பட்டோருக்கும் போராடும் மக்களுக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

அத்தகையவர்களில் ஒருவர் பாகிஸ்தானில் பிறந்த தாரிக் அலி. அவர் தனது 20ம் வயதில் 1963-ம் ஆண்டில் இங்கிலாந்து வந்தார். அவர் படித்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமே இடதுசாரி அரசியல் செயல்பாடு தொடர்ந்து நடந்த ஒரு மையமாக விளங்கியது. பிரிட்டனிலும் ஃபிரான்ஸிலும்பல ஐரோப்பிய நாடுகளிலும் போர் மற்றும் அணு ஆயுத எதிர்ப்பு இயக்கங்கள் பரந்துபட்ட மக்கள் பங்கேற்புடன் நடந்து வந்தன. வியட்நாம் போருக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்காவிலேயே கொழுந்துவிட்டு எரிந்தன. இது தவிர 1968-ம் ஆண்டு பாரிசில் நடந்த மாணவர் புரட்சி’.இந்தக் கால கட்டத்தில் நடந்த எல்லா மக்கள்திரள் இயக்கங்களிலும் தாரிக் அலி மிகுந்த முனைப்புடன் பணியாற்றியுள்ளார். களத்தில் மக்கள்திரளோடு நின்று போராடுவது, போராட்டங்களை ஒருங்கிணைப்பது,அதற்கான இடைவிடாத பிரச்சாரங்களை செய்வது,போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவது எனச்செயல்பட்டு போலீஸ்,இராணுவம்,குண்டர்படைகள் என பல்வேறு தரப்பின் வன்முறைக்கும்இலக்காக இருந்துள்ளார்.

பிரிட்டனின் மைய நீரோட்ட இதழ்களில் ஆகச்சிறந்ததாகவும் சிலரால் நியூயார்க் டைம்ஸ்,பிரான்ஸின் லெ மாண்டே போன்ற உலகின் சிறந்த இதழ்களில் ஒன்றாகவும்கருதப்படும் கார்டியன் இதழின் பத்தி எழுத்தாளராக, பல ஆண்டுகாலமாக லண்டனில் இருந்து வெளிவரும் சிறந்த இடதுசாரி இதழான நியூ லெஃப்ட் ரிவ்யூவின் ஆசிரியர் குழு உறுப்பினராக, வெர்ஸோ பதிப்பகத்தின் முக்கியமான எழுத்தாளராக, இன்னும் அதிகம் தெரியாத பல இடதுசாரி இதழ்களில் பத்தி எழுத்தாளராக, பத்திரிகையாளராகப் பணியாற்றியுள்ளார்.செயற்கைக்கோள் தொலைக்காட்சி பிரபல்யம் அடைந்தபோது நிகழ்ந்த அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திற்கும் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திற்கும் வியட்நாம் போர் குறித்து நடந்த விவாதம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. இஸ்ரேல் ஆக்கிரமித்த பாலஸ்தீனிய பகுதிகளில் பணியாற்றும் இஸ்ரேலிய இராணுவ வீரர்களுடன் அவர் நடத்திய உரையாடலும் குறிப்பிடத்தக்கது.

 

இந்தப் பணிகளின் ஒரு பகுதியாக நடந்த அவரது பயணங்கள் முக்கியமானவை.வியட்நாமில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அங்கு சென்றதூதுக்குழுவில்இருந்துபணியாற்றியது,சேகுவேரா பொலிவியக் காட்டில் சிஐஏவால் சுட்டுகொல்லப்படவிருந்த நேரத்தில் அங்கு கைது செய்யப்பட்ட இடதுசாரி மாணவர் தலைவரும் பத்திரிகையாளருமான ரெஜிஸ் தெப்ரே விடுதலைக்காக,சேயைச் சுடுவதற்கு துப்பாக்கிகள் சூழ்ந்திருந்த காலத்திலேயேபொலிவியாவுக்கு பயணம் செய்தது, பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியை எதிர்த்து நடந்த மாணவர் போராட்டங்களின் மத்தியில் அப்போதைய மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் சென்றது என பலவற்றைக் கூறலாம். பொலிவியாவில் இராணுவக் கும்பல்களின் காட்டாட்சி நடந்த பிரேதசத்தில் கிட்டத்தட்ட கொல்லப்படும் நிலையை எதிர்கொண்டு தப்பித்து வந்த அனுபவத்தையும் விவரிக்கிறார்.

 

ஃபாசிசமும் சர்வாதிகாரமும் -(மார்க்சியக்கோட்பாடு)

இளமையும் ஆற்றலும் கொண்ட பிரெஞ்சுமார்க்சிய சிந்தனையாளர் நிக்கோஸ் புலண்ட்ஸஸ்1970களில் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் அறியப்பட்டஅல்தூசரிய அமைப்பியல் மார்க்சியராக இருந்தவர்.

பின்னாட்களில் ஜனநாயக சோசலிசவாதியாகப்பாராட்டப்பட்டார். சட்டவியல் ஆய்வாளராகப் பயின்று,அரசு குறித்த சிந்தனையில் புதிய எல்லைகளை எட்டினார்.குறிப்பாக,பாசிச அரசு குறித்த அவரது ஆய்வுகள் பாசிச சமூக அமைப்பினுள் வர்க்கங்களில் தொழில்பாடு, தெற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், கிரீஸ் ஆகியநாடுகளில் பாசிசம் பற்றிய ஆய்வு ஆகியவற்றில் கவனம் கொண்டவை.

அரசு பற்றிய பாசிசக் கொள்கையை நிக்கோஸ் புலண்ட்ஸஸ் மிக விரிவான ஆய்வுக்கு உட்படுத்து கிறார்.பாசிசமும் சர்வாதிகாரமும் என்ற இந்நூல் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இப்போது தமிழில் என்சிபிஎச் சிறப்புப் பதிப்பாக வெளியாகிறது.

பாசிசம் குறித்த மார்க்சியக் கோட்பாட்டுப் பகுப்பாய்வை வழங்கியவர் என்றஒருமனதான பாராட்டினை புலண்ட்ஸஸ் பெறுகிறார். பாசிசம் பற்றிய இன்றைய புரிதலுக்கு அவரது ஆய்வு மிகஅவசியமாகிறது.

ஐரோப்பியப் பாசிசத்தின் இப்போக்கின் அனுபவ-அறிவின் அடிப்படையில் அண்மைக்கால முன்னேற்றங்களை இந்நூல் முழுமையாகக் கணக்கில் கொண்டுள்ளது. இப்போதைய தரப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் மற்றும் சமூக வர்க்கங்கள் வகுத்துள்ள பல கருத்தாக்கங்களைப் பயன்படுத்தி ஒரு தனிவகை முதலாளித்துவ அரசாக கறாரான தேற்றத்தை வளர்த்தெடுக்க இது முயன்றுள்ளது.

புலண்ட்ஸஸின் இந்த நூல் அதிகாரத்தைக் கைப்பற்று வதற்கு முன் பாசிசம் ஒரு மக்கள் இயக்கமாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் சர்வாதிகாரத்தின் வலிமையான எந்திரமாகவும் ஆனதை கவனமாகப் பிரித்துக் காட்டியுள்ளது. ஜெர்மனியிலும் இத்தாலியிலும் முறையே நாசிசத்தாலும் பாசிசத்தாலும் அணிதிரட்டப் பட்ட எதிர்ப்புரட்சி முகாம்களின் தனித்துவமான வர்க்கக் கூறுகளை இது ஒப்பிடுகிறது.அதன்மூலம் பாசிசத்தின் வெவ்வேறு வகை சாத்தியப்பாடுகளை தொட்டுக் காட்டுகிறது.பாசிசத்தின் உருவாக்கத்தில் குட்டி முதலாளித்துவத்திற்கும் பெருமூலதனத்திற்கும் இடையிலான மாறும் உறவுகளை இது ஆய்வு செய்கிறது.

மூலதனத்தைக் காப்பதற்கான அவசர ஆட்சியாகஉருவான அரசுக்குள்ளேயே இருந்த உட்புறக் கட்டமைப்புகளைப் பற்றி விவாதிப்பதோடு, வெர்சைல்ஸ் ஒப்பந்தத்திற்குப் பிந்தைய விதிவயமானஆண்டுகளில் மூன்றாம் அகிலத்தில் பாசிசத்தை நோக்கி மேற்கோள்ளப்பட்ட அதிகாரபூர்வ கொள்கைகளும் அணுகுமுறைகளும் பற்றி ஒரு விரிவான விமர்சனத்தை இந்நூல் தருகிறது.மேலும் மார்க்சியக் கோட்பாட்டு விவாதங்களில் பொதுவாக அரிதாக உள்ள உண்மையான ஆதாரங்கள் மற்றும் கருத்தாக்கங்களின் ஒரு சவாலான தொகுப்பாக்கத்தை பாசிசமும் சர்வாதிகாரமும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இன்றைய இந்தியாவின் உழைப்பாளி மக்களும் ஜனநாயக சக்திகளும் மத, இன,மொழி,தேசியினச் சிறுபான்மையினரும் எதிர்கொள்ளும் ஒரு பேராபத்தின் உள்ளார்ந்த இயக்கத்தை கசடறக் கற்பதற்கு உதவும் ஒரு நூல் காலப்பொருத்தத்துடன் தமிழ் வாசகர்களுக்குவந்து சேர்கிறது.

 

விளிம்புநிலை சமூகங்கள் பற்றி மார்க்ஸ் -தேசியம், இனவியல், மேற்குலகுசாராச் சமூகங்கள்- (மார்க்சியக் கோட்பாடு)

இந்தியா, இந்தோனேசியா, அல்ஜீரியா, சீனா,ரசியா, போலந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளின் சமூகஅமைப்புகள்,அந்நாடுகளில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து எழுந்த காலனிய எதிர்ப்பு இயக்கங்கள், தேசிய, இன விடுதலை எழுச்சிகள் ஆகியவற்றைப் பற்றிய மார்க்ஸ்-எங்கெல்சின் எழுத்துக்கள் இந்நூலில் பேசப்படுகின்றன. 1860-களில் தொடங்கிய அமெரிக்க உள்நாட்டுப் போர் மற்றும் கருப்பின மக்களின் விடுதலைப் போராட்டங்கள் பற்றிய மார்க்சின் மதிப்பீடுகளும் இந்நூலில் பேசப்படுகின்றன

இவ்வாறாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டிருந்த முதலாளிய சமூகம் பற்றிய மார்க்சின் முதன்மையான அரசியல் பொருளாதார எழுத்துக்களுக்கு வெளியே,ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் அமெரிக்க நாட்டிலும் வேர் கொண்டிருந்த காலனிய எதிர்ப்பு, தேசிய எழுச்சிகள், கருப்பர்கள் போராட்டம் ஆகியவை குறித்த மார்க்சின் எழுத்துக்கள் இந்நூலில் கவனம் பெறுகின்றன.இப்பிரச்சினைகள்தாம் இந்நூலுக்கு விளிம்புநிலை மார்க்சியம் என்ற பெயரைவழங்குகின்றன.

அதாவது,அரசியல் பொருளாதாரம் மீதான விமர்சன பகுப்பாய்வுக்கு ஒரு பங்களிப்பு நூலுக்கு விமர்சன பகுப்பாய்வுக்கு ஒரு பங்களிப்பு முன்னுரை, மூலதனம் போன்ற நூல்களின் வழியாகஅறியப்பட்ட மார்க்சியத்திலிருந்து சற்று மாறுபட்ட ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளின் சூழல்களுக்குப் பொருந்தக்கூடிய சில கருத்துருக்கள் மார்க்சிடம் அவரது காலத்திலேயே தோன்றியிருக் கின்றன என்பதை முன்வைத்து இந்நூல் எழுதப் பட்டுள்ளது. இந்திய சமூகத்தின் தனித்த பண்புகள்,வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்,பொருளாதார அரசியலும் பண்பாட்டு அரசியலும், வர்க்கமும் சாதியும் இவற்றை ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளடக்குவதா, தொகுத்திணைப்பதா? எதற்கு முன்னிலை கொடுப்பது? என்றெல்லாம் விவாதங்கள் நடந்துவரும் காலத்தைச் சேர்ந்த நம் போன்றோருக்கு இந்நூலும் இந்நூல் சுட்டிக்காட்டும் மார்க்சின் எழுத்துக்களும் மிக முக்கியமானவை. இந்நூலைப் படிக்கும்போது, மார்க்ஸ் என்ற புரட்சியாளரின் மேதைமை, மார்க்சியத்தின் செழுமை ஆகியவை குறித்த மலைப்பு மீண்டும் ஒருமுறை மேலிடுகிறது.

உலகமயமாக்கம்,பின்னைக் காலனியம் ஆகிய சூழல்களில் உலக முதலாளியத்தின் தலைவிதி இனி ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் முடிவாகும் என்ற கருதுகோள் கெவின் ஆண்டர்சனின் நூலில் இடம் பெற்றிருப்பதாகக் கூறலாம்

உலகின் எல்லாச் சூழல்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடிய ஒற்றை மாதிரியை மார்க்ஸ் முன்வைத்தார் என்ற கருத்தை இந்நூல் மறுக்கிறது.

மறுபுறம்,உலக மூலதனத்திற்கு எதிரான போராட்டங்களில் பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளிகளைப் பற்றிய தேடல் மார்க்சிடம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது என்று இந்நூல்வாதிடுகிறது. முதலாளியம், காலனியம் ஆகியவற்றின் ஊடுருவலால் ரசியா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பழஞ்சமூக அமைப்புகள் சிதைவுறும் போது, அச்சிதைவுகளின் ஊடாகப் புரட்சிகர அரசியலுக்கான புதிய வாசல்கள் திறந்துகொள்ளும் என்பதை மார்க்சால் கண்டறிய முடிந்தது. ரசியா,இந்தியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் கிராமப்புற விவசாயிகளின் கூட்டு அடையாள வடிவங்கள் முதலாளிய எதிர்ப்பின் வேராக முடியும் என்று மார்க்ஸ் கருதியிருக்கிறார். நீக்ரோ மக்களின் நிறவெறி எதிர்ப்பியக்கங்களும் உலக முதலாளியத்தை மிகஅடிப்படையாக அச்சுறுத்தும் என மார்க்ஸ் கணக்கிட்டுள்ளார். இதுபோன்ற கருத்துக்களுக்காகவே இந்நூல் நமக்கு முக்கியப்படுகிறது. இந்நூலாசிரியர்முன்வைக்கும் கருத்துக்கள் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாவிட்டால்கூட,இந்நூலின் கருத்துக்கள் நம் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.மார்க்சின் மூலநூல்களை மீண்டும் வாசிக்கத் தூண்டுகின்றன.

மார்க்சியம் என்பது எந்த வகையிலும் முடிந்தபோன கதையல்ல. சார்த்தர் சொன்னதுபோல மார்க்சியத்தை உருவாக்கிய வரலாற்றுச் சூழல்கள்(முதலாளியம்)இன்னும் கடக்கப்படாமல் இருக்கும்வரை மார்க்சியத்தைக் கடந்து போவதும் சாத்தியமல்ல.

நமது காலத்தில் உருவாகியுள்ள பின்னை நவீனத்துவம்,பின்னைக் காலனியம்,பெண்ணியம்,தலித்தியம் போன்ற சிந்தனைப் போக்குகள் மார்க்சியத்தின் உள்ளுறை ஆற்றல்களை மேலும் பளிச்செனத்தெளிவாக்குகின்றனவே அன்றி அவற்றை மங்கச்செய்வன அல்லமகத்தான சக்தியுடன் கூடவே மகத்தான பொறுப்பும் வந்து சேர்கிறது என்பது புகழ்பெற்றஒரு கூற்று. மார்க்சியம் என்ற மகத்தான ஆயுதம் 1917-ம் ஆண்டில் ரசியாவில் சோவியத் சோசலிசப் புரட்சிக்கு இட்டுச் சென்றது. உலகிலேயே முதல்முறையாக உழைக்கும் கரங்கள், இந்த உலகை உருவாக்கும் கைகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின.

கை விரல்களில் அழுக்குப் படாமல், அரண்மனைகளில் வளர்ந்த மேட்டுக்குடி அரச குலத்தவரும் பிரபுக்குலத்தவரும் பண்டிதர்களும் மட்டுமே ஆட்சி புரிய தகுதியும் திறமையும் படைத்தவர்கள் என்பதை உடைத்து இந்த உலகைப் படைக்கும் உழைக்கும் வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி செலுத்த முடியும் எனபதை நிரூபித்தது சோவியத் ஒன்றியத்தின் தொழிலாளி வர்க்கம்.

அதற்கான ஆயுதமாக பயன்பட்டது மார்க்சியம் இந்த நூலின் ஆசிரியரான கெவின் ஆண்டர்சன் சமகாலச் சிந்தனைப் போக்குகளோடு அடிப்படையான மார்க்சியப் புலமையும் பெற்றவர். தொட்டனைத்தூறும் மணற்கேணி போல மார்க்சியத்தை அணுகியுள்ளார்.

கீழைச் சமூகங்களின் கடுமையான வர்க்க, சாதி, இன வகைப்பட்ட சிக்கல்களின் ஊடாக, சமூக மாற்றம் குறித்த பார்வையோடு, மார்க்சை மறுவாசிப்புக்கு உட்படுத்தும்போது நமக்கான ஆயுதங்களை அவரில் கண்டுகொள்ள முடியும் என்பதை கெவின் ஆண்டர்சன் இந்நூலில் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

மார்க்சும் எங்கெல்சும் 19-ம் நூற்றாண்டில் உருவாக்கிய அந்த ஆயுதத்தை, 20- நூற்றாண்டின் ரசியாவில் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப தகவமைத்து ரசிய தொழிலாளி வர்க்கத்துக்கு புரட்சிகர வலுவை அளித்த மகத்தான சேவையைச்செய்தவர் தோழர் லெனின்.

21- நூற்றாண்டில் இந்தியாவில் நாம்மார்க்சியத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம்?

மார்க்சியம் என்ற அந்தச் சக்தி வாய்ந்த ஆயுதத்தைஇடத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப வளர்த்தெடுக்கிறோமா? மார்க்சியம் பற்றிய ஆரம்பப் பாடங்களும், மாணவர்களுக்கான சூத்திரங்களும் புரட்சிகரப்பணிக்குப் போதுமானவையா?

மார்க்சின் மூலதனம் நூலும் மார்க்சின் இதர மார்க்சின் மூலதனம் படைப்புகளும் முதலாளித்துவ பல்கலைக்கழக பேராசிரியர்களும் பல கோடி ஊதியம் பெறும் அறிவுஜீவிகளும் கற்றுக் கொடுக்க முடியாத, கற்றுக் கொடுக்க விரும்பாத சமூகம் பற்றிய உண்மைகளையும் அவர்களிடம் இல்லாத தத்துவார்த்த ஆய்வு முறையையும் உழைக்கும் வர்க்கத்துக்கு வழங்குகின்றன.

நடைமுறையில் இருக்கும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் மூலதனம் நூல் உள்ளிட்ட மார்க்சின் மூலதனம்படைப்புகளை கற்க வேண்டும். அவற்றை 21-ம்நூற்றாண்டின் நடைமுறையுடன் பொருத்தி கற்பதற்கு தத்துவார்த்த அணுகுமுறையும்அவசியம்.

அந்தவகையில் மார்க்சியம் பற்றிய ஆரம்பக் கல்வி தந்தசட்டகங்களை தாண்டி, வறட்டுச் சூத்தரங்களைஉடைத்து, இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகு முறையை கற்பதற்கான முக்கியமான நூல்களாகவெளிவருகின்றன திறந்தநிலை மார்க்சியத்தின் ((Open Marxism) நான்கு தொகுதிகள்.

Open Marxism 1 - Dialectics and History (1992), Open Marxism 2 - Theory and Practice (1992), Open Marxism 3 - Emancipating Marx (1995), Open Marxism 4 - Against a Closing World (2020) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியான 4 தொகுதிகளும் திறந்தநிலை மார்க்சியம் 1 - திறந்தநிலை மார்க்சியம் 1 இயக்கவியலும் வரலாறும், திறந்தநிலை மார்க்சியம் 2 - கோட்பாடும் செயல்பாடும், திறந்தநிலை மார்க்சியம் 3 - திறந்தநிலை மார்க்சியம் 3 மார்க்சின் விடுவிப்பு, திறந்தநிலை மார்க்சியம் 4 -

மூடப்படும் உலகத்துக்கு எதிராக என தமிழில் மொழிபெயர்த்து என்.சி.பி.எச் வெளியிடுகிறது.

கடந்தகாலத்தில்,பிற நாடுகளில் மார்க்சிய வழியில் வளர்த்தெடுக்கப்பட்ட கோட்பாடுகளையும் முடிவுகளையும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும்,மாறிக்கொண்டிருக்கும் புறநிலையோடு ஒப்பிட்டு விமர்சனபூர்வமாக பகுத்தாராய வேண்டும் என்பது திறந்தநிலை மார்க்சியத்தின் மையமான வாதம்.

திறந்தநிலை மார்க்சியம் தன்னையே விமர்சிக்கும் கட்டுரைகளையும் இந்தத் தொகுதிகளில் சேர்த்துள்ளதன் மூலம் விமர்சனபூர்வமான அணுகுமுறையைஒவ்வொருவரும் தம்மை நோக்கியே திருப்பிக் கொள்வதற்கு முன்மாதிரியாக உள்ளது.

திறந்தநிலை மார்க்சியம் தொகுதிகளில் அடங்கிய சுமார் 30 கட்டுரைகள், கோட்பாட்டை புறநிலையுடன் பொருத்தி விமர்சனக் கண்ணோட்டத்தோடு விவாதிக்கவும்,21- நூற்றாண்டில் இந்தியாவில் மார்க்சியத்தை புரட்சிகர ஆயுதமாக ஏந்துவதற்கான பாதையின் தத்துவார்த்த அடித்தளத்தை வலுப்படுத்தவும்,இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஆதரித்து புரட்சிகரப் பாதையில்பயணிக்கவும்,கோட்பாட்டில் தேக்கத்தை உடைத்து புரட்சிகர நடைமுறையை உயிரோட்டமானதாக்கவும், பின்நவீனத்துவத்தையும், வரலாற்றின் முடிவு என்ற முனைவையும் மார்க்சியத்தின் மீதான முதலாளித்துவ கொச்சை விமர்சனத்தையும் மார்க்சிய தத்துவரீதியாக எதிர்கொள்ளவும், மார்க்சியத்தை அறிவியலாகப் பயிலவும், பின்னை மார்க்சியம், ஃபிராங்க்ஃபர்ட் பள்ளி போன்ற மார்க்சிய பள்ளிகளை விமர்சன பூர்வமாக அணுகவும்வாசகர்களுக்கு வழிகாட்டுவதாக உள்ளன.



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்