தோழமைகளுடன் ஓர் விமர்சன பூர்வமான விவாதம்-4

 தோழர்களே கடந்த 28 ஜீலை தோழர் சாரூவின் நினைவுநாள் ஒட்டி நான் எழுதியது மற்றும் வேறொரு தோழர் சாரூ மீது வைத்த விமர்சனம் என்ற பெயரில் குற்றசாட்டுகள் அதற்கு நான் அளித்த விளக்கம் கேள்விக்கு பதிலளிக்காமல் எழுதியவர் கடந்து சென்றது ஆகியவையுடன் சாரூவை குறைத்து மதிபிடும் இவர்களின் தேவை என்ன? என்பதனையும் பேசுவதே சிறப்பாக இருக்கும்.

நம்மிடம் குறைபாடுகள் உள்ளதெனில் அவற்றை சுட்டிக் காட்டவும் விமர்சிக்கவும் பயப்படக்கூடாது. ஏனெனில் நாம் மக்களுக்கு சேவை செய்கிறோம்.
எவரும், அவர் யார் என்பதை முக்கியமல்ல, நமது குறைபாடுகளை சுட்டிக் காட்டலாம். அவர் குறிப்பிடுவது சரியாக இருக்குமாயின் அவற்றை சரி செய்து கொள்வோம். அவர் எடுத்துச் சொல்வது எதுவும் மக்களுக்கு பயனளிக்குமா என்பதன்படி செயல்படுவோம்.
ஒரு பொதுவான புரட்சிகர நோக்கத்திற்காக நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளில் இருந்தும் வந்து ஒன்றாக இணைந்து விட்டோம் இந்த நோக்கத்திற்கான பாதையில் நம்முடன் பயணிக்க பெரும்பான்மையான மக்கள் நமக்கு தேவைப்படுகிறார்கள். இவை போதுமானதாக இல்லை.தேசம் முழுவதையும் விடுவிப்பதற்கு ஏராளமானோர் தேவைப்படுகிறார்கள்.- மாவோ.
(செப்டம்பர் 6- 1944, மாவோ தேர்ந்தெடுத்த படைப்புகள் தொகுப்பு 3, பக்கம் 233 ).

எதிர்கால தவறுகளைத் தவிர்ப்பதற்காகக் கடந்த காலத் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தைத் தெரிந்துக் கொள்வதற்காக மட்டுமே நாம் கடந்த காலத்தைப் பற்றிய அக்கறை கொண்டிருக்கவில்லை. கடந்த காலத்தில் இருந்து கற்றுக் கொண்டு, அது தற்போதைய காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்பதையே விரும்புகிறோம்.
தனி நபர்களுடன் நாம் கடப்பாடு கொண்டிருக்கவில்லை: மாறாக இந்திய மக்களின் விடுதலை என்ற இலட்சியத்துடன் தான் நாம் கடப்பாடு கொண்டுள்ளோம்.
எனவே, நமது தலைவர்கள் மீது நாம் வைத்துள்ள மதிப்பு விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டதல்ல.
கட்சியின் கொள்கையில் நிலவிய எதிர்மறைக் கூறுகளை ஆய்வதில் நமது உணர்வுகள் நம்மை தடுத்திட இயலாது.
அவர்களுடைய கொள்கைகள், மற்றும் நடவடிக்கைகள், அவர்களுடைய குறைப்பாடுகள் மற்றும் எல்லைகள் ஆகியவற்றை நாம் மூடி மறைக்கப் போவதில்லை.
அதற்க்கு மாறாக, யாருடைய உணர்வும் புண்பட்டு விடக் கூடாது எனக் கருதாமல், அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவோம்.
நாம், " எதிர்கால தவறுகளைத் தவிர்ப்பதற்காகக் கடந்த காலத் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்" நமது தலைவர்கள் பின்பற்றிய தவறான கொள்கைகளை விமர்சிப்பதன் மூலம் நாம் நமது சொந்த சுய விமர்சனம் மேற்கொள்கிறோம்.
மாவோ கூறியது போல,"கடந்த காலத்தில் மக்களுக்கு இருந்த அனுபவமின்மை காரணாமாக"இடது" விலகல் பிரச்சினை எழுந்தது. அனுபவம் இல்லையெனில் தவறுகளைத் தவிர்ப்பது கடினமாகும். அனுபவமின்மையிலிருந்து அனுபவம் பெறுவது என்ற நிகழ்ச்சி போக்கின் ஊடாகத் தான் ஒருவர் பயணிக்க வேண்டும்.
நக்சல்பரி மக்களிடையே நம்பிக்கையை விதைத்தது, நமது மக்களை ஒடுக்குமுறையிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் காப்பாற்றுவது பற்றிய நம்பிக்கை, அந்த நம்பிக்கை இன்னமும் நனவாகாமல் உள்ளது.
இதனை பற்றி இலக்கு இணைய இதழ் 8 மற்றும் 9 ல் தொடர் கட்டுரை உள்ளது உண்மையில் வாசித்து வாருங்கள் விவாதிக்க தாங்கள் பேசுவது மட்டுமே சரி என்ற கண்ணோட்டத்தை விட்டொழியுங்கள்.
சரி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியானது அன்றைய காலத் தேவைக்காக உருவாக்கப்பட்டது மற்றும் கட்டப்பட்டதும் சரியானதாக தெரிந்தாலும் உண்மையான நாட்டின் சமூக பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கட்சி கட்டப்படவில்லை. சீனாவில் போல இந்திய நிலைகளையும் அனுமானித்து அவற்றை பெயர்த்தெடுத்து இங்கே பொருத்தியது தவறானதாக காலத்தால் புரிய வைத்துள்ளது. இன்று நமது புரட்சிகர அமைப்புகள் இடையே உள்ள சில போக்குகளை சுருக்கமாக காண்போம் இவை எனது தேடுதலான நேர்காணலில் தோழர்களிடம் நான் பெற்றவைதான்.

அகில இந்திய காங்கிரஸ்க்கு 1969ல் கூடிய பிறகு மத்தியகுழு ஒருமுறை கூட கூட்டவே இல்லை. கட்சியின் அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள் வேலை முறை ஆகியவை அனைத்தும் தோழர் சாரு அவர்களால் தன்னிச்சையாக வகுக்கப்பட்டு லிபரேஷன் ஏட்டில் மூலமாக நேரடியாக வழி காட்டப்பட்டது. மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை போன்று சாருவின் சிந்தனையும் புரட்சிகரமான கருத்தாக தோழர்கள் கருதினர். இந்த சிந்தனை முறையில் இருந்து அதிகாரவர்க்க போக்கு தோன்றியது. சமூக வளர்ச்சி விதி பற்றிய இயக்கம் மறுப்பில் கண்ணோட்டமே கட்சியில் அன்று மேலோங்கியது. இந்தக் கண்ணோட்டத்தின் விளைவாக அமைப்பு துறையின் கீழ் கண்ட தவறுகள் நேர்ந்தன.

1). அதிகாரவர்க்க போக்கு காரணமாக கட்சியின் தலைமை கமிட்டிகள் ஜனநாயகம் மத்தியதுவம் நிராகரிக்கப்பட்டது கட்சியின் மீது தனிப்பட்டவரின் அதிகாரத்தை திணிப்பதற்கு கொண்டு சென்றது.

2). விமர்சனம் சுயவிமர்சனம் செய்யும் முறை கடைப்பிடிக்கப்படவில்லை.

3). அனுபவங்களிலிருந்து படிப்பினை தொகுக்கப்படும் முறையும் புறக்கணிக்கப்பட்டது.

4). தகவல்கள் இருந்து உண்மைகளை அறியும் பொருள்முதல்வாத முறையும் சூழ்நிலைகள் மாறும் தன்மையில் பார்க்கும் இயங்கியல் முறையும் புற நிலைமைகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கு கடைப்பிடிக்கப்படவில்லை அதற்கு மாறாக மனம் போன போக்கில் நிலைமைகளை கணிக்கும் முறை ஆதிக்கம் செலுத்தியது.

5). கட்சி கமிட்டிகள் செயல்படும் முறை அற்றுப்போய்விட்டது.

6). கட்சிக்குள் அரசியல் ஸ்தாபன பிரச்சினைகளில் தோன்றிய முரண்பாடுகள் தீர்ப்பதற்கான உட்கட்சி போராட்டத்திற்கு இருவழி போராட்டத்திற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

ஆந்திரா அறிக்கை தோழர் சாரு மீதான விமர்சனம் கீழ்வருவன.

1). சர்வதேச சூழ்நிலை பற்றிய இந்த சகாப்தத்தின் தன்மை பற்றி மதிப்பீடு தவறு மூன்றாம் உலக யுத்தம் தொடங்கிவிட்டது என்ற கருத்து தவறு.

2). அகநிலை அம்சத்தை அதாவது மக்களின் தயார் நிலை அமைப்பு வலிமை இவற்றைப் புறக்கணித்து இடது தீவிரவாத வழியை

கடைபிடித்தால் முதிர்ச்சியடையாத அறை கூவல்கள் முழக்கங்கள் வைத்தல் .

3).இந்தியாவின் சமச்சீரற்ற வளர்ச்சி பார்க்காதிருத்தல் நகர்புறங்களில் கொரில்லா போராட்டங்களை தொடுத்தல் .

4). அழித்து ஒழிப்பும் ஒரு போராட்ட வடிவம் என்பதற்கு மாறாக அதனை மட்டுமே ஒரே போராட்ட வடிவமாக கருதுதல் வெகுஜன போராட்டங்களையும் வெகுஜன அமைப்புகளின் புறக்கணித்தல்.

5). தள பிரதேசங்களை உருவாக்கிய பின்னே ஐக்கிய முன்னணி என்ற கருத்து.

6). அமைப்பு வழியில் அராஜகம்.

இந்த அறிக்கைதான் செழுமைப்படுத்தபட்டு பின் மக்கள் யுத்தப் பிரிவின் 10 ஆண்டுகால அனுபவம் தொகுப்பாக உருப்பெற்றது.

நாம் சீனாவின் அனுபவத்தை கூட சரியாக புரிந்து கொள்ளவில்லை ஏனெனில் அங்கு ஆயுதப்போராட்டம் துவக்கத்திலிருந்து போராட்டமாக விளங்கியதேயொழிய அது மட்டுமே ஒரே போராட்ட வடிவமாக இருக்கவில்லை. இங்கு நாம் ஆயுதம் தாங்கிய நடவடிக்கை மட்டுமே வர்க்கப் போராட்டமாக கருதிக் கொண்டு இவை மட்டுமின்றி மக்கள் படை சிறு குழுவிலிருந்து வளர்கிறது என்பதை காண மறுத்து; மக்கள் படையையும் கொரிலா குழுவையும் ஒன்றாக கருதி மக்கள் யுத்தத்தையும் கொரிலா போராட்டத்தையும் ஒன்றாக கருதி செயல்பட்டோம். கட்சியும் படையும் ஒன்றுதான் என்று கருதப்பட்டது ஒரு கொரில்லா நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அதனுடைய தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கட்சி உறுப்பினர்களாக கருதப்பட்டனர். உட்கட்சி முரண்பாடுகள் பகையாக கையாளப்பட்டன .(சீன க.க.யுத்த வரலாறு ஹோகான்சி) உண்மையை உணர்ந்துக் கொள்ளவில்லை.

நான் எழுதிய முகநூல் பதிவு 28 ஜீலை
//51 ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசால் கோழைத்தனமாக சாரூவை கொன்ற நாள் இன்று.
அவர் மீதான விமர்சனங்கள் இருகட்டும், அவரின் பங்களிப்பு இந்திய புரட்சியில் ஒரு மையில் கல்லாக அவரின் சரி தவறுகள் வழிகாட்டியாக இருக்கும். அவற்றை அறிந்து செயல்பட சரியான மார்க்சிய லெனினிய கல்வி அவசியம். அவரை ஒதுக்கிக் தள்ளுவதோ அல்லது தூக்கிப் பிடிப்பதோ அவரின் அரசியல் நிலைப்பட்டையும் அன்று மாவோவின் வழிகாட்டுதலையும் வாசித்தால் சிறப்பாக இருக்கும் நேரம் உள்ள தோழர்கள் அதற்கான நூல்களை வாசியுங்கள்.
தோழர் சாரூவின் புகழ் இந்த வர்க்க சமுகத்தில் என்றென்றும் இருக்கும் அவரின் வீர செயல்கள் இந்திய மக்கள் மனதில் என்றென்ருமிருக்கும்...
தோழருக்கு செவ்வணக்கம்.//
தா. சிவகுமார் அவர்கள் தன் முகநூல்பகுதியில் எழுதியதே ஜீலை 28, 2023 அன்று கீழே
ஜுலை 28
சாரு மஜும்தாரின் நினைவு தினத்தை ஒட்டி, முகநூல் எங்கும் அவரது தியாகத்தை நினைவு கூர்ந்து பல பதிவுகளை காண முடிகிறது நாமும் அவரது அப்பழுக்கற்ற தியாகத்தை நினைவு கூர்வோம்
அதே சமயத்தில் மார்க்சியம் லெனினியத்தின் அடிப்படை புரிதல் இன்றி லெனியத்துக்கு விரோதமாக சாரு மஜும்தார் இழைத்த தவறுகளால் அதிக துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகி சொல்லொணா இழப்புகளையும் உயிர் தியாகங்களையும் செய்த கணக்கில்லாத முகம் தெரியாத தியாகிகளையும் இன்று நினைவுகூர்வதும் பொருத்தமானது தான்.
சாரு மஜூம்தார் சொன்னதுதான் மார்க்சியம் -லெனினியம் என்று நம்பி உயிரை இழந்த, வாழ்க்கையை தொலைத்த எண்ணற்ற தியாகிகள் சார்பாக அவருடைய இந்த மாபெரும் தவறுகளை ஆய்வு செய்வது ஒன்றே மாலெ தியாகிகளின் தியாகத்திற்கு உரிய மதிப்பளிப்பதாக இருக்கும்.
இந்திய சமூகம் பற்றியோ அதன் அரசியல் பொருளாதார வளர்ச்சி நிலை பற்றியோ எந்த ஆய்வும் செய்யாமல் ஆயுதப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தது.
சாரு மஜூம்தார் எழுதிய அந்த 8 ஆவணங்களைப் படித்துப் பார்த்ததில் அவர் அப்போது இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படை நிலைப்பாட்டைத் தாண்டி எந்த ஆய்வுக்கும் முடிவுக்கும் அவர் வரவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.
"உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்பது ஒரு ஜனநாயக கோரிக்கை. இந்த ஜனநாயகக் கோரிக்கைக்காக நக்சல்பாரி சிபிஎம் கட்சிக் கமிட்டி நடத்திய ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் உள்ளூர் சிபிஎம் கட்சிக் கமிட்டியால் உழுபவருக்கு பிரித்து அளிக்கப்பட்ட நிலத்தையும் அறுவடையையும் அதன் முந்தைய உரிமையாளர்களிடமும் அவர்களுக்கு ஆதரவாக வந்த மாநில காவல்துறையிடமும் இருந்து பாதுகாப்பதற்காக நக்சல்பாரி கிராமப் பகுதியில் நடந்த விவசாயிகளின் (வில்-அம்பு) #ஆயுதம்_தாங்கிய_ஜனநாயகப்_போராட்டத்தை
"ஆயுதப் புரட்சி" என்று மதி மயங்கி, அதையே பல்வேறு ஏற்றத்தாழ்வான சமூக சூழல்கள் உள்ள இந்தியா முழுமைக்கும் ஒரே தீர்வாக விவசாயிகளின் தலைமையிலான ஆயுதப் புரட்சி என்று அறிவித்த கற்பனாவாதச் செயல் திட்டம்.
ஆளும் வர்க்கம் எது என்பது பற்றிய புரிதலும் ஆய்வும் இல்லாமல்,
நடத்தப் போகும் புரட்சி என்ன வகையான புரட்சி என்று முடிவும் செய்யாமல்,
ஒரு ஆயுதப் புரட்சியை துவக்கியது சாரு மஜும்தாரின் மாபெரும் தவறுகளில் ஒன்று.
பின்னாளில்
அது "புதிய ஜனநாயக புரட்சி" என்றும்
ஆளும் வர்க்கம் "தரகு முதலாளி வர்க்கம்" என்றும் எந்தவித ஆய்வும் இன்றி ஆவணங்களில் எழுதப்பட்டாலும் அந்தப் புரட்சியை அவர் துவக்கும்போது அந்த முடிவுக்கு அவர்கள் வரவில்லை என்பதுதான் மிகவும் வேதனையான உண்மையாகும். புரட்சி என்பது அவர்களுக்கு எவ்வளவு தூரம் ஒரு குட்டி முதலாளித்துவ சாகசவாத பொருளாக இருந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
சாரு மஜூம்தார்,
1965 முதல் 1966 வரை எழுதிய அவரது "எட்டு ஆவணங்கள்" என்று அழைக்கப்படும் ஆவணங்களிலும்...
நக்சல்பாரி எழுச்சி துவங்கிய 1967 மே - ஜூன் காலத்திற்கு பிறகு 1972 ஜுலை 28இல் அவர் இறக்கும்வரை அவர் எழுதிய ஆவணங்களிலும் ...
1970இல் சிபிஐ எம் எல் கட்சியின் முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கட்சி திட்டத்திலும்...
...தரகு முதலாளி என்பதற்கான வரையறை எங்குமே சொல்லப்படவில்லை.
1965 முதல் 1966 வரை சாரு மஜூம்தார் எழுதிய அவரது "எட்டு ஆவணங்கள்" என்று அழைக்கப்படும் ஆவணங்களில்
அவர் எந்த இடத்திலும் இந்திய முதலாளிகளை தரகு முதலாளிகள் என்று வரையறுக்கவில்லை.
மாறாக அவர் இந்திய முதலாளிகளை #ஏகபோக_முதலாளிகள் (Monopoly Capitalists) என்றே வரையறுக்கிறார்.
இன்னும் ஒருபடி மேலே போய் இந்திய ஆளும் வர்க்கம் தனது நெருக்கடியை ஏகாதிபத்திய செயல் தந்திர வழிமுறைகளின் மூலம் தீர்க்க முயல்கிறது. அதற்காகவே இந்தியா-பாகிஸ்தான் போரை துவக்கி உள்ளது. இந்த ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறார்.
முத்தாய்ப்பாக இந்திய அரசு ஏகாதிபத்தியம் நிலப்பிரபுத்துவம் மற்றும் #பெரும்_ஏகபோகங்கள் இன் அரசு என்று வரையறுக்கிறார்.
அதுமட்டுமின்றி நக்சல்பாரி எழுச்சி துவங்கிய 1967 மே - ஜூன் முதல் 1972இல் அவர் இறக்கும்வரை அவர் எழுதிய எந்த ஆவணங்களிலும் இந்திய சமூகத்தைப் பற்றிய ஆய்வையோ தரகு முதலாளி என்பதற்கான வரையறையையோ அவர் முன்வைக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் நக்சல்பாரி எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் துவங்கப்பட்டு ஓராண்டுக்கு பின்னர்தான் புதிய ஜனநாயகப் புரட்சி என்ற வார்த்தையையே சாரு மஜூம்தார் பயன்படுத்துகிறார். அதற்கு முந்தைய ஆவணங்கள் அனைத்திலும் மக்கள் ஜனநாயக புரட்சி பற்றியே பேசுகிறார்.
1968 ஜூன் மாதம் எழுதிய இரண்டு ஆவணங்களில் ஒன்றில் புதிய ஜனநாயகப் புரட்சி என்றால் என்ன என்பதை வரையறுக்கிறார். அதிலும்கூட ஆளும் வர்க்கத்தை தரகு முதலாளி வர்க்கம் என்று அவர் சொல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அவர் "அயல்நாட்டு மற்றும் உள்நாட்டுப் பிற்போக்காளர்களுக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் பரந்துபட்ட விவசாய மக்களின் கூட்டணியுடன் ஆயுதப்போராட்டம் மூலம் வென்றெடுக்கப்படும் புரட்சியே புதிய ஜனநாயகப் புரட்சி என்று புதிய ஜனநாயகப் புரட்சியை வரையறுக்கிறார்.
புதிய ஜனநாயகப் புரட்சிக்கான வரையறையில் ஆளும் வர்க்கத்தை அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு பிற்போக்காளர்கள் என்றுதான் வரையறுக்கிறார். தரகு முதலாளித்துவ வர்க்கம் என்று அவர் சொல்லவில்லை.
ஆனால் அதே மாதத்தில் (1968 ஜூன்) அவர் எழுதிய இன்னொரு ஆவணத்தில்
"மத்திய காங்கிரஸ் அரசாங்கம் அதிகார வர்க்கம் மற்றும் தரகு முதலாளி வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறது" என்று சொல்கிறார்.
1968 இல் எழுதப்பட்ட ஆவணங்களில் இந்த ஒரு ஆவணத்தில் மட்டும் தான் தரகு முதலாளி என்ற வார்த்தையே இருக்கிறது. இந்த ஒரு இடத்தில் தவிர சாரு மஜூம்தார் இறக்கும் வரையில் எழுதிய எந்த ஆவணத்திலும் தரகு முதலாளி என்ற வார்த்தையையே அவர் பயன்படுத்தவில்லை.
இந்த ஆவணத்தில் கூட போகிறபோக்கில் தரகு முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக மத்திய காங்கிரஸ் அரசு இருக்கிறது என்று சொல்கிறாரே தவிர தரகு முதலாளி என்பதற்கான வரையறை எதையும் சொல்லவில்லை.
நானறிந்தவரை 1985 ஆம் ஆண்டு சுனிதி குமார் கோஷ் இந்திய பெரு முதலாளி வர்க்கம் பற்றிய நூல் எழுதும் வரை மாலெமா இயக்கத்தில் இந்தியாவில் தரகு முதலாளித்துவம் பற்றிய விரிவான ஆய்வுகள் இல்லை என்றே கூறலாம். சுனிதி குமாரும் கூட இந்திய சமூகத்தை பற்றிய எந்த ஆய்வும் செய்யாமல் மாவோவின் சீன சமூகம் பற்றிய ஆய்வை காப்பியடித்து மாலெமா இயக்கம் வெகு தூரம் சென்று பல பின்னடைவுகளை சந்தித்த பிறகு அன்று ஆய்வின் இன்றி எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை நிலைநாட்டுவதற்காக மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கே விரோதமான தர்க்க முறைகளை பயன்படுத்தி அதை நிறுவ முயன்றிருக்கிறார். அதன் மூலம் அவர் சாரு மஜூம்தார் செய்த நடைமுறை தவறை சாசுவதமானதாக ஆக்கி அந்த இயக்கம் என்றுமே அதிலிருந்து மீள முடியாத அளவிற்கு அந்த தவறை நிரந்தரப் படுத்திவிட்டார்.
சோவியத் ரஷ்ய புரட்சிக்கு முன்பாகவே லெனினால் மார்க்சியத்திற்கு விரோதமான போக்கு என லெனினால் போராடி முறியடிக்கப்பட்ட நரோதிசம் எனும் வர்க்க எதிரிகளின் தனிநபர் படுகொலைகளை, லெனினியத்துக்கு விரோதமாக புரட்சி என்ற பெயரில் வர்க்க எதிரிகளின் அழித்தொழிப்பை அந்த கற்பனையான விவசாயிகள் புரட்சியின் வர்க்கப் போராட்ட வடிவமாக முன் வைத்தது.
லெனின் தனது மார்க்சியமும் திருத்தல் வாதமும் என்ற நூலில் "அரசியல் அரங்கில் திருத்தல் வாதம் மார்க்சியத்தின் அடிப்படையான வர்க்கப் போராட்டம் பற்றிய கோட்பாட்டை திருத்த முயல்கிறது" என்று சொல்கிறார்.
சாருமஜூம்தாரும் மாலெமா முன்னோடிகளும் மிகச்சரியாக இதையே செய்தனர்.
இவர்கள் 1970இல் முன்வைத்த சிபிஐ எம்எல் கட்சித் திட்டத்தில் " வர்க்கப் போராட்டம் என்றால் வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பது. வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் வர்க்கப் போராட்டமே நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தரும்" என்று வர்க்கப் போராட்டத்தின் இலக்கணத்தையே மாற்றி அமைத்து நாடு முழுவதும் இருந்த தொண்டர்களை இதுதான் வர்க்கப் போராட்டம் என்று நம்ப வைத்து தவறான பாதையில் இறக்கிவிட்டு உன்னதமான பல உயிர்களை பலி கொடுத்தார்கள். காரணம் இவர்கள் ஏற்கனவே அழித்தொழிப்பு செயல் திட்டத்தில் இறங்கிய பிறகுதான் கட்சித் திட்டமே வகுக்கிறார்கள். அப்போது ஏற்கனவே செயல்படும் திட்டத்தையே கட்சியின் திட்டமாக அறிவிக்கிறார்கள்.
சாரு மஜும்தாரின் இந்த பார்வை வர்க்கப் போராட்டம் பற்றிய மார்க்சிய லெனினிய அடிப்படை புரிதல் இல்லாத பார்வை என்பதை இன்றைய நடைமுறை தெளிவாக நிரூபித்து விட்ட பின்னர் அது தவறு என்று பலராலும் உணர்ந்து பின்வாங்கப் பட்டுள்ளது.
இன்று லெனின் சொன்னவாறு வர்க்கப்போராட்டத்தின் வரையறையையே திருத்தி எழுதிய சாரு மஜூம்தாரை திருத்தல்வாதத்திற்கு எதிராக போராடிய முதல் புரட்சியாளர் என்று வேறு கொண்டாடுகிறார்கள். அதுதான் எப்படி என்பதே புரியவில்லை.
லெனினியத்தின் அடிப்படைக்கே விரோதமாக சாரு மஜும்தார் கம்யூனிஸ்ட் கட்சியே இல்லாமல் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார்.
சாரு மஜும்தாரின் மாபெரும் தவறுகளில் இதுவும் ஒன்று.
லெனினியம் மார்க்சியத்திற்கு வழங்கிய வழங்கல்களில் முக்கியமான வழங்கல்,
தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படையாகிய கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய கண்ணோட்டம்.
லெனின் ஒரு புரட்சியை சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு முன்நிபந்தனையாக புரட்சிகரமான வர்க்கம் ஒரு புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் அணிதிரட்டப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
ஆனால் சாரு மஜும்தார் புரட்சியை அறிவிக்கும் போது அவரிடம் கம்யூனிஸ்ட் கட்சியும் இல்லை; அந்தக் கட்சியின் கீழ் புரட்சிகர வர்க்கமான தொழிலாளிகளும் அணிதிரட்டப்பட்டிருக்க வில்லை. குறைந்தபட்சம் அவர் விவசாய புரட்சி என்று சொன்ன அவரது விவசாயி வர்க்கமும் அவரின் கீழ் அணி திரட்டப்பட்டிருக்கவில்லை.
ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை என்பது லெனினியம் என்ற அடிப்படை புரிதல் அன்று சாரு மஜூம்தாருக்கு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. இருந்திருந்தால் இத்தனை ஆயிரம் உன்னதமான உயிர்களைப் பலி கொடுத்த ஒரு புரட்சிக்கு கட்சியே இல்லாமல் - தயாரிப்புகள் இல்லாமல் அறைகூவல் விடுத்திருக்க மாட்டார்.
ஆனால் லெனினியத்தின் இந்த அடிப்படைக்கே விரோதமாக சாரு மஜும்தார் கம்யூனிஸ்ட் கட்சியே இல்லாமல்தான் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார்.
நக்சல்பாரி ஆயுத எழுச்சி துவங்கி அதுவே புரட்சி என சாரு மஜும்தார் விடுத்த அறைகூவல் விடுத்தது 1967 ஜூன் மாதம்.
அந்த புரட்சிக்குத் தலைமை தாங்குவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) உருவாக்கப்பட்டது 1969 ஏப்ரல் மாதம்; அக்கட்சிக்கு திட்டம் வகுத்தது 1970 ஏப்ரல் மாதம்.
இந்த இடைப்பட்ட இரண்டு ஆண்டுகள் புரட்சியைத் தலைமை தாங்கி வழிநடத்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமலேயே புரட்சி அறிவிக்கப்பட்டு, ஒரு கட்சியின் தலைமை இல்லாமல் தன்னெழுச்சியாக நடந்து கொண்டிருந்தது என்பதே வரலாற்று உண்மை.
1967 ஜூன் மாதம் நக்சல்பாரி ஆயுத எழுச்சி துவங்கி அதுவே புரட்சி என சாரு மஜும்தார் விடுத்த அறைகூவலை நம்பி மார்க்சிஸ்ட் கட்சிக்குள் நடந்த உள்கட்சிப் போராட்டத்தை பாதியில் விட்டு விட்டு இந்தியாவின் பல பகுதிகளுக்கு தன்னெழுச்சியாக அது ஆயுதப் புரட்சியாக பரவிய பிறகு,
பல பகுதிகளில் அகில இந்திய அளவிலான கட்சியின் தலைமையோ கட்சித் திட்டமோ இன்றி அங்கங்கே தோன்றிய விதத்தில் நடந்து கொண்டிருந்த புரட்சியை ஒருங்கிணைப்பதற்காக முதலில் பல்வேறு பகுதிகளின் குழுக்களையும் ஒன்றிணைத்து ஒரு அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு,
அந்த ஒருங்கிணைப்புக் குழுவே 1970இல் சிபிஎம் எம் எல் கட்சியாக மாற்றப்பட்டது.
உலகில் எந்த ஒரு நாட்டிலும் புரட்சிக்கான வர்க்க சக்திகளை ஒருங்கிணைக்காமல், அப்படி அதை ஒருங்கிணைப்பதற்கான ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவ பலத்துடன் இருக்கும் அரசு இயந்திரத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டம் மூலமான புரட்சியை துவக்கிய முன்னுதாரணத்தை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் காட்ட முடியாது.
தொழிலாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தையும் அதன் முன்னணிப் படை ஆகிய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியத்தையும் புரிந்து கொள்ளாத அல்லது நடைமுறையில் அதை மறுத்து தன் உயிரை விடவும் தயாராக உள்ள வெகுசில குட்டி முதலாளித்துவ அறிவுஜுவி இளைஞர்களை மட்டுமே வைத்து ஆயுதப் புரட்சியை நடத்திவிட முடியும் என்றும் அந்த புரட்சியை நடத்திக் கொண்டே தேவைக்கு ஏற்ற விதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிக் கொள்ளலாம் என்று குதிரைக்கு முன்னால் வண்டியை நிறுத்திவிட்னர் சாரு மஜூம்தாரும் மாலெமா இயக்க முன்னோடிகளும்.
மாலெமா கட்சி உருவாக்கத்தில் ஏற்பட்ட இந்த முதல் கோணல் முற்றும் கோணல் ஆகி இன்று அது எண்ணிலடங்காத குழுக்களாக தொடர்ந்து சிதறிக் கொண்டே இருப்பதற்கும் மூல காரணம் சாரு மஜூம்தாரும் மாலெமா இயக்க முன்னோடிகளும் கட்சி கட்டும் நடைமுறையில் செய்த இந்த அடிப்படை தவறுகளே என்றால் மிகையில்லை.
சாரு மஜூம்தாரும் மாலெமா இயக்க முன்னோடிகளும் செய்த தன்னலமற்ற தியாகங்களால் இத்தவறுகளை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
ஏனெனில் அந்தத் தவறுகளால் இந்திய புரட்சிகர இயக்கத்திலும் புரட்சியின் எதிர்காலத்திலும் ஏற்பட்ட பாதிப்பு இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.//
இதற்கு என் பதில் #சாருமஜூம்தாரின்_தவறு_1,2,3,4,&5 இவைகள் ஒன்றுமேயில்லை மிகத் தெளிவாக நக்சல்பாரி முன்பும் பின்பும் நூலில் அன்று சாரூவுடன் பயணித்த தோழர் விமர்சன பூர்வமாக எழுதியுள்ளார் இவற்றோடு மட்டுமின்றி மாவோவின் வழிகாட்டுதலும் அதில் எங்கே சாரூவின் சுயவிமர்சனமற்ற போக்கு உள்ளது மற்றும் இன்று குழுக்களாக பிரிந்துக் கிடபதற்கு காரணமும் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியிருப்பார் தோழர். அவை தேவை பட்டவர்களே படிக்காத பொழுது மற்றவர்களை குற்றம்சாட்டி ஒன்றும் ஆவதற்கு இல்லை. மேலும் "தரகுமுதலாளி, பெருமுதலாளி" இந்த சொல்லாடல் பற்றிய உங்களின் நீண்ட் 2020 ல் எழுதிய நூல் பொதியாகி போனதே தவிர இந்திய சமூகத்தை எந்த அளவில் ஆய்வுசெய்துள்ளது எனக்கு புரியவில்லை தோழர். நான் சாரூவை பூஜிக்க சொல்லவில்லை அவர் இந்திய ஒன்றியத்தை ஒரே குடையின் கீழ் புரட்சிக்கு திரட்டினார் அவை எப்படி அவை ஏன் இதுவரை யாராலும் சாதிக்க முடியவில்லை அவர் மீதான எல்லா விமர்சனங்களையும் உங்களை விட ஆழமாக நானே "இலக்கு" இணைய இதழில் தொடராக எழுதியுள்ளேன் தோழர். இன்று சாரூவை தூற்றுவதனால் என்ன செய்ய போகிறீர் உங்களின் நோக்கம் என்ன தோழர் அதை சொல்லுங்கள்!// என் கேள்விக்கு தோழர் பதிலளிப்பது கடமையாக நினைக்கவேயில்லை.

தெய்வ சுந்தரம் நயினார் ஜீலை 25, 2020 எழுதியதே இவை

 
மார்க்சியம் பொய்த்துவிட்டதா? பொதுவுடமை தோற்றுவிட்டதா?
--------------------------------------------------------------------------
'' ரசியாவில் கம்யூனிசம் தோல்வி'' , ''சீனாவில் கம்யூனிசம் தோல்வி'' ''இன்று உலகில் எங்குமே கம்யூனிச நாடுகள் கிடையாது'' ..... காரல் மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் முன்வைத்த சோசலிச, கம்யூனிச சமுதாயம் என்பது நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்று '' என்ற குரல் பல முனைகளில் ''ஒலிக்கப்பட்டு வருகிறது''! இந்தக் குரலை எழுப்புவர்கள் யார்? அதற்கான பின்னணி என்ன?
இலட்சக்கணக்கான உயிர்த்தியாகங்களால் உருவாக்கப்பட்ட சோசலிச சமுதாயங்கள் பாதிப்புக்கு உட்பட்டு இருக்கிறதே என்று வருத்தப்படுபவர்களா? அல்லது ''அப்பாடி , இனி நமக்கு ஆபத்து இல்லை என்று பெருமூச்சு விடும் '' சக்திகளா?
ஒரு நாடு தன்னுடைய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பின்னடைவைச் சந்தித்தால் ... அது ஏவிய ஒரு விண்கலம் செயல்படாவிட்டால் ... யார் மகிழ்வடைவார்கள்? அந்த நாட்டு மக்களா அல்லது அந்த நாட்டின் எதிரி நாடுகளா? நிச்சயமாக எதிரி நாடுகள்தான்! பின்னடைவுக்கு உட்பட்ட நாட்டின் மக்கள் என்ன சொல்வார்கள் ? '' இது ஒரு தற்காலிகப் பின்னடைவுதான். ஏதோ சில தொழில்நுட்பப் பிரச்சனைகளால் ஏற்பட்ட ஒரு பின்னடைவு. தோல்வி இல்லை. மீண்டும் தவறுகளைக் களைந்து வெற்றிபெறுவோம். அறிவியல் , தொழில்நுட்பம் பொய் ஆகாது'' ! ஆனால் எதிரி நாடுகளோ, '' பின்னடைவு இல்லை. தோல்வி'' என்று கூறும்!
இலட்சக்கணக்கான மக்களின் உயிர்த்தியாகங்களால் கட்டப்பட்ட சோவியத் ரஷியா .. இரண்டாம் உலகப் போரிலே இட்லர், முசோலினி பாசிசக் கூட்டணியை முறியடித்து... தன்னைமட்டும் மட்டுமல்ல , அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளையும் காப்பாற்றிய சோவியத் ரஷியா ... ஸ்டாலின் மறைவுக்குப்பின்னர் ... 1956-இல் குருசேவ் தொடங்கிவைத்த ''சோசலிசத்திற்கு எதிரான எதிர்ப்புரட்சி தொடர்ந்து , '' 1990 வாக்கில் கோர்பச்சோவால் ''சோசலிசத்திற்கு எதிரான எதிர்ப்புரட்சியின் வெற்றிக்கொடி நாட்டப்பட்டது''. இதை நாம் மறுக்கவில்லை. 100 விழுக்காடு உண்மைதான். சோசலிசத் தளம் பின்னடைவுக்கு உட்பட்டுவிட்டது !
1917 -இல் தோற்றுவிக்கப்பட்ட ரஷிய சோவியத் தற்காலிகமாக உடைக்கப்பட்டுவிட்டது. சரி. இது சோசலிசத்திற்கு நிரந்தரத் தோல்வியா? அல்லது ஒரு தற்காலிகப் பின்னடைவா? பின்னடைவு என்றால் அதற்குக் காரணங்கள் என்ன? நிச்சயமாக இதற்கு விடை காண்பது முற்போக்குச் சக்திகளின் பாட்டாளிவர்க்கக் கடமை!
உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்.... நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்கு எதிரான முதலாளித்துவப் புரட்சி .... ஒரு சில ஆண்டுகளில் வெற்றிபெற்றுவிடவில்லை. முதலாளித்துவ சமுதாயம் தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்க ஒரு சில நூற்றாண்டுகள் ஆகியது. பழைய சமுதாயத்தின் அனைத்து வேர்களையும் அறுத்தெறிந்து .. முதலாளித்துவ சமுதாயம் முன்னேற ... சில நூற்றாண்டுகள் ஆகியது. இது சமூக வரலாற்று வளர்ச்சியில் தெளிவாகத் தெரிகின்ற ஒரு உண்மை. அடிமைச் சமுதாயத்தை எதிர்த்து வெற்றிபெற்ற நிலப்புரபுத்துவ சமுதாயத்திற்கும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பல நூற்றாண்டுகள் ஆகியது வரலாற்று உண்மை. இடைப்பட்ட காலங்களில் பின்னடைவுகள் !
சோவியத் ரஷியாவில் பாட்டாளிவர்க்கமானது லெனின் தலைமையில் 1917-இன் இறுதியில்தான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்தக் காலகட்டத்தில் ரசியாவின் வளர்ச்சியானது சோசலிசத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட உற்பத்தி வளர்ச்சி நிலையில்தான் சோசலிசக் கட்டுமானத்தை நிர்மாணிக்கமுடியும். அப்போது ஜெர்மனியின் தொழில் வளர்ச்சி அத்தகைய ஒரு வளர்ச்சியைப் பெற்றிருந்தது. ஆனால் அதைப் பயன்படுத்தி, சோசலிசக் கட்டுமானத்தை நிர்மாணிக்கும் பணிக்குத் தேவையான அளவுக்கு .... பாட்டாளிவர்க்க இயக்கம் வளர்ச்சியடைவில்லை. ஆனால் ரசியாவிலோ... பாட்டாளிவர்க்கம் தயாராக இருந்தது. ஆனால் தொழில் வளர்ச்சி அதற்குத் தயார் இல்லாத ஒரு நிலை.
இந்த ஒரு இக்கட்டான சூழலில் ... லெனின் தலைமையிலான பாட்டாளிவர்க்கக் கட்சி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்ததால்... லெனின் தளராமல் ஒரு தெளிவான பொருளாதாரத் திட்டத்தை வகுத்தார். உடனடியாகச் சோசலிசப் பொருளாதாரத்தை முன்வைக்கமுடியாததால்... ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை (New Economic Policy - NEP) வகுத்தார். அங்கு நீடித்த ... வளர்ந்திருந்த முதலாளித்துவ சக்திகளுக்குப் பல சலுகைகளை அறிவித்தார். அதுவே ரசியாவின் தொழில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்ற முடிவுக்கு வந்தார். பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரம் இருந்ததால், முதலாளித்துவச் சக்திகளின் ''எதிர்ப்புரட்சியை'' முறியடிக்கமுடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
அன்றைய நிலையில், ரசியாவின் பாட்டாளிவர்க்க அரசியல் அதிகாரத்தை உள்ளிருந்தே உடைக்க முயற்சிக்கும் முதலாளித்துவ சக்திகள் ஒருபுறம்... மறுபுறம் உலகிலேயே முதன்முதலாக நிறுவப்பட்ட பாட்டாளிவர்க்க அரசைச் சீர்குலைக்கப் பகீரத முயற்சிகள் எடுத்துவந்த ஏகாதிபத்திய நாடுகள்.... அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ! ஏகாதிபத்திய பெருங்கடலின் நடுவே ஒரு சிறு தீவுபோல்தான் சோவியத் ரசியா... ஆனால் உலக அளவிலான சோசலிசப் புரட்சிக்கான ஒரு போர்த்தளமாக அது நீடித்தது. உலகப் பாட்டாளிவர்க்கத்திற்கு வழிகாட்டும் கலங்கரைவிளக்கமாக நீடித்தது.
இங்கு மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு உண்மை.. பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான தொடர்ந்த வர்க்கப் போராட்டத்தின்மூலம் 1917 - அக்டோபர் புரட்சியை வெற்றி அடையச்செய்தவுடன் ... பாட்டாளிவர்க்கமானது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன்.... ரசியாவில் வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற முடிவுக்கு வரமுடியாது என்பதில் லெனின் மிகத் தெளிவாக இருந்தார். அக்டோபர் புரட்சிக்குப் பிறகும் வர்க்கப்போராட்டம் .... பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ சக்திகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் நீடிக்கும்... நீடித்துத்தான் தீரும் . ஏனென்றால், புரட்சிக்கு முன்பு ஆளும் வர்க்கமாக நீடித்த பிற்போக்கு வர்க்கங்கள் ,அழிந்துவிடவில்லை. புரட்சிக்குப் பின்பு ஆளப்படும் வர்க்கமாக மாறியுள்ளது. அவ்வளவுதான். அது தொடர்ந்து நீடிக்கிறது அதனுடைய அத்தனை வேர்களும் அழிக்கப்படும்வரை வர்க்கப் போராட்டம் நீடிக்கும். நீடிக்கவேண்டும் .
அக்டோபர் புரட்சிக்கு முந்தைய வர்க்கப் போராட்டத்திற்கும் அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய வர்க்கப் போராட்டத்திற்கும் ஒரு அடிப்படை வேறுபாடு... முன்னர் அரசியல் அதிகாரம் பிற்போக்குச் சக்திகளின் கைகளில் இருந்தது.. இப்போது பாட்டாளிவர்க்கத்தின் கைகளில் இருக்கிறது. அவ்வளவுதான். இந்த அரசியல் அதிகாரத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு.... பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான அரசு, தொடர்ந்து வர்க்கப் போராட்டதைக் கொண்டுசெல்லவேண்டும் என்ற தெளிவு லெனினுக்கு இருந்தது. அவருக்குத் துணையாக ஸ்டாலினும் செயல்பட்டார். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே - 1924 ஜனவரியிலேயே - லெனின் மறைந்துவிட்டார். அவருடைய திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளிவர்க்கத் தலைமை ... கம்யூனிஸ்ட் கட்சி .... மிக உறுதியாக இருந்தது. அப்போதைய மத்தியக் குழுவின் முழுமையான ஒப்புதடலுடன்தான் ஸ்டாலின் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்தார். ஆனால் லெனின் முன்வைத்த புதிய பொருளாதாத் திட்டத்தால் பயனடைந்த முதலாளித்துவ வர்க்கம், ஸ்டாலினுக்கும் பாட்டாளிவர்க்க அரசுக்கும் பல நெருக்கடிகளை ..... வெளியில் இருந்த அமெரிக்கா உட்பட பல ஏகாதிபத்திய நாடுகளின் மறைமுக உதவிகளுடன்... கொடுத்தது.
பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான வர்க்கப் போராட்டம் தொடர்ந்தது. தோல்வியடைந்த பிற்போக்கு வர்க்கச் சக்திகள் , நேரடியாகவும், மறைமுகமாகக் பொதுவுடமைக் கட்சிக்கு உள்ளும் , அரசுக்கு உள்ளும் இருந்துகொண்டு, பாட்டாளிவர்க்க அரசைச் சீர்குலைக்கப் பலவழிகளில் போராடின. இதற்கிடையில் இரண்டாவது உலகப் போர். உலக வரலாற்றிலேயே பாசிச சக்திகளை ஒழித்துக்கட்டுவதில் லட்சக்கணக்கான மக்களைத் தியாகம் செய்த ரசியப் பாட்டாளிவர்க்கத்திற்குத் தலைமைதாங்கிய ஸ்டாலின் 1953 ஆண்டு மறைந்தார். அதுவரை மறைந்திருந்த பிற்போக்குச் சக்திகள் குருசேவ் தலைமையில் ஒன்று திரண்டு, பாட்டாளிவர்க்க அரசைப் பலவீனப்படுத்தின. இது வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே. பாட்டாளி வர்க்கக் கட்சியானது திருத்தல்வாதிகளின் கைகளில் சிக்கியது. அதன் விளைவு.... பாட்டாளி வர்க்க அரசு பலவீனம் அடைந்தது. அதன் உச்சக் கட்டம்... 1990 வாக்கில் கார்போச்சோவின் பெரஸ்ட்ரோக்கியா ( Perestrokia) ''தத்துவம்'' ரசியாவில் பாட்டாளி வர்க்க அரசுக்கு முடிவு கட்டியது. ''அதற்காக '' அவருக்கு 1990-இல் நோபல் பரிசே கொடுக்கப்பட்டது. அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய வர்க்கப் போராட்டம் ... அடுத்த நிலைக்கு ..வேதனைக்குரிய நிலைக்கு ... வந்தது. அது நீடிக்கிறது. தற்காலிகமான ஒரு பின்னடைவு பாட்டாளி வர்க்கத்திற்கு. ஆனால் வரலாற்றுச் சக்கரத்தை ... முன்நோக்கிச் செல்லும் சோசலிசத்திற்கான வர்க்கப் போராட்டத்தை.... பிற்போக்கு சக்திகளால் தொடர்ந்து தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக மீண்டும் பாட்டாளி வர்க்க அரசு அமையும். சோசலிச நிர்மாணப் பணி நிறைவேறும்.
இந்தத் தற்காலிகப் பின்னடைவைக் கண்டு மகிழ்வடைகிற '' சக்திகள்'' தான் ... இப்போது '' கம்யூனிசம் தோற்றுவிட்டது, மார்க்சியம் பொய்த்துவிட்டது'' என்று ''ஆனந்தக் குரல் '' எழுப்புகிறது. அவர்களது ''ஆனந்தம் '' நீடிக்காது. ஏனென்றால் மார்க்சின் சோசலிசம் ஒரு கற்பனாவாத சோசலிசம் இல்லை. அறிவியல்பூர்வமான சோசலிசம். புறவயமான ஒரு உண்மை. இந்த உண்மைபற்றி அடுத்த தொடரில் மேலும் விளக்குகிறேன்.

2 comments:

  1. நாம் எதிர்ப்பார்த்தவரின் பின்னூட்டம் இருக்குமென்றுதேடினேன் தோழர் காணவில்லை.ஒருவேளை டேக் செய்தால் வருவாரோ

    ReplyDelete
  2. அவர் பதிலே எழுதவில்லை தோழர் அவருக்கு நான் இது போலவே 2021 ல் கேள்வி வைத்த பொழுதும் அவரின் நோக்கம் சாரூவை சாடுவதன் பெயரில் அன்றைய புரட்சியை கேவலபடுத்துவதாகவே இருந்தது தொடர்ந்து அவருடனான விவதாம் நான் புரிந்துக் கொண்டவை தோழர். விமர்சனம் என்பது வேறு அன்றைய சாரூவின் நிலைப்பாட்டை அவரின் செயலை இந்திய மக்களை அணி சேர்த்ததை

    ReplyDelete

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்