அரசும் புரட்சியும்
1871 ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூனது அனுபவம்,மார்க்சின் பகுத்தாய்வு - பாகம் 1.
1. கம்யூனார்களைத் தீர முயற்சியில் இறங்கச் செய்தது எது?
1870 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில், கம்யூனுக்குச் சில மாதங்கள் முன்பு, மார்க்ஸ் பாரிஸ் தொழிலாளர்களை எச்சரித்தது தெரிந்ததே. அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான எந்த முயற்சியும் நம்பிக்கை இழந்தோரின் அசட்டுத் துணிச்சலே ஆகுமென்று எச்சரித்தார். (இங்கே குறிப்பிடப்படுவது லண்டனில் 1870 செப்டம்பர் 6 க்கும் 9 க்கும் இடையில் காரல் மார்க்ஸ் எழுதிய பிரெஞ்சு - பிரஷ்ய யுத்தம் குறித்து சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுச் சபையின் இரண்டாவது அறிக்கை.ஐரோப்பாவிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலுமுள்ள சர்வதேச தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு)ஆயினும் 1871மார்ச்சில் தொழிலாளர்கள் தீர்மானகரமான போரில் இறங்கும்படியான நிர்பந்தம் ஏற்பட்டு, அவர்களும் இதை ஏற்றுக்கொண்டுவிட்டபோது, எழுச்சி எதார்த்த உண்மையாகிவிட்டபோது, பாதக அறிகுறிகள் தென்பட்டுங்கூட, மார்க்ஸ் அளவிலா ஆர்வத்தோடு பாட்டாளி வர்க்கப் புரட்சியை வரவேற்றார். மார்க்சியத்தை விட்டோடி அவக்கேடுற்ற ரஷ்ய ஓடுகாலி பிளஹானவ் 1905 நவம்பரில் தொழிலாளர், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து எழுதிவிட்டு, ஆனால் 1905 டிசம்பருக்குப் பிற்பாடு மிதவாதியின் பாணியில் “அவர்கள் போர் தொடங்கியிருக்கக் கூடாது” என்று ஓலமிட்டது போல,பகட்டுப் புலமையோடு நெறிமுறை பேசிக் “காலத்துக்கு முன்னதாகவே துவங்கப்பட்ட” இயக்கமென்று மார்க்ஸ் கண்டனம் கூறிக்கொண்டு இருக்கவில்லை.
“விண்ணைச் சாடியவர்கள்” என்று கம்யூனார்களை மார்க்ஸ் போற்றினார். ஆனால் அவர்கம்யூனார்களின் வீரத்தை ஆர்வமோடுபாராட்டியதுடன் நின்றுவிட வில்லை. வெகுஜனப்புரட்சி இயக்கம் அதன் குறிக்கோளை அடையவில்லை என்றாலுங்கூட, அது அளவு கடந்த முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று அனுபவமாகுமென, உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் குறிப்பிட்டதொரு முன்னேற்றமாகுமென, நூற்றுக்கணக்கான வேலைத்திட்டங்களையும் வாதங்களையும் காட்டிலும் முக்கியமான நடைமுறைச் செயலாகுமெனக் கருதினார். மார்க்ஸ் இந்தப் புரட்சி இயக்கத்தின் அனுபவத்தைப் பகுத்தாராயவும், அதனிடமிருந்து போர்த்தந்திரப் படிப்பினைகள் பெறவும், இந்த அனுபவத்தின் அடிப்படையிலே தமது தத்துவத்தை மறுபரிசீலனை செய்து பார்க்கவும் முற்பட்டார். கம்யூனிஸ்டு அறிக்கைக்கு. மார்க்ஸ் தேவையெனக் கருதிய ஒரேயொரு “திருத்தம்” பாரிஸ் கம்யூனார்களின் புரட்சிகரஅனுபவத்தின் அடிப்படையிலேயே அவர் செய்ததாகும்.
கம்யூனிஸ்டு அறிக்கையின் புதிய ஜெர்மன் பதிப்புக்கு அதன் இரு ஆசிரியர்களும் கையொப்பமிட்டு எழுதிய கடைசி முன்னுரை 1872 ஜூன் 24 ஆம் தேதியிடப்பட்டதாகும்.
இந்த முன்னுரையில் அதன் ஆசிரியர்களான காரல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் கம்யூனிஸ்டு அறிக்கையின் வேலைத்திட்டம் “சில விவகாரங்களில் காலங் கடந்ததாக ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டுவிட்டு, மேலும் கூறுவதாவது:”கம்யூனானது முக்கியமாய் ஒரு விவரத்தை, அதாவது”“ஏற்கனவே உள்ள அரசுப்பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டுவிட முடியாது” என்பதை, நிருபித்துக் காட்டிற்று…”
இந்த வாசகத்தில் ஒன்றை மேற்கோள் குறிப்பிட்டுக் காட்டப்படும் சொற்களை ஆசிரியர்கள்,மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலிலிருந்து அப்படியே எடுத்துக்கையாளுகின்றனர்.இவ்வாறாக,பாரிஸ் கம்யூனின் தலைமையானதும் அடிப்படையானதுமான ஒரு படிப்பினையை,கம்யூனிஸ்டு அறிக்கையில் ஒரு முக்கிய திருத்தமாய்ப் புகுத்தும்படி அவ்வளவு பிரமாண்டமான முக்கியத்துவமுடையதாய் மார்க்சும் எங்கெல்சும் கருதினர்.
இந்த முக்கிய திருத்தம் சந்தர்ப்பவாதி களால் திரித்துப் புரட்டப் பெற்றிருப்பது மிகவும்குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்டு அறிக்கையின் வாசகர்களில் பத்தில் ஒன்பது பேருக்கு, ஏன்நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்குங்கூட, இந்தப் புரட்டலைப் பிற்பாடு புரட்டலுக் கென்றே ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தனி அத்தியாயத்தில், நாம் பரிசீலிப்போம்.மேலேதரப்பட்ட மார்க்சின் புகழ்மிக்க வாக்கியத்துக்குத் தற்போது சகஜமாய் அளிக்கப்படும் கொச்சையான “வியாக்கி யானத்தை”மட்டும் இங்கு குறிப்பிடப்படு வதுடன் நிறுத்திக்கொள்கிறோம். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுதலுக்கு மாறாய்ப் பையப் பைய வளர்ச்சி காணும் கருத்தினை மார்க்ஸ் இங்கு வலியுறுத்து கிறார் என்பதாய் ‘வியாக்கியானம்” அளிக்கப்படுகிறது.
ஆனால் இதற்கு நேர் எதிரானதே உண்மை.“ஏற்கனவே உள்ள அரசுப் பொறியமைவை”தொழிலாளி வர்க்கம் கைப்பற்றுவதோடு மட்டும் நிற்காமல்,அதை அழித்தொழித் திடவும் நொறுக்கவும் வேண்டுமென்பதே மார்க்ஸ் கூறும் கருத்து.
1871 ஏப்ரல் 12 ல், அதாவது கம்யூன் நடைபெற்ற அதே காலத்தில், குகல்மனுக்கு மார்க்ஸ் எழுதினார். “.... புருமேர் பதினெட்டின் கடைசி அத்தியாயத்தைப் பார்த்தால், பிரெஞ்சுப் புரட்சியின் அடுத்த முயற்சி இனி முன்பு போல அதிகாரவர்க்க -இராணுவப் பொறியமைவை ஒருவர் கையிலிருந்து இன்னொருவர் கைக்கு மாற்றுவதாய் இருக்காது. அதை நொறுக்கிடுவதாகவே இருக்குமென நான் கூறுவதைக் காண்பீர்கள்” (அழுத்தம் மார்க்சினுடையது மூலத்தில் இருப்பது), “ஐரோப்பியக் கண்டத்து நாடுகளில் மெய்யான மக்கள் புரட்சி ஒவ்வொன்றுக்கும் இது முன்னிபந்தனை யாகும்:வீரமிக்க நமது கட்சித் தோழர்கள் பாரிசில் இதைத்தான் செய்ய முயன்று வருகிறார்கள்" (NeueZeit,மலர் 20, இதழ் 1, 1901 -02,பக்கம்709(குகல்மனுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதங்கள் இரண்டுக்குக் குறையாத பதிப்புகளில் ரஷ்யாவில் வெளிவந்திருக்கின்றன; இவற்றில் ஒன்று நான் பதிப்பித்து முன்னுரைஎழுதியதாகும்.)
“அதிகாரவர்க்க-இராணுவப் பொறியமை வை நொறுக்கிடுவது” இச்சொற்கள்-புரட்சியின்போது பாட்டாளி வர்க்கம் அரசு சம்பந்தமாய்ச் செய்ய வேண்டிய பணிகள் குறித்துமார்க்சியம் கூறும் பிரதான படிப்பினையைச் சுருக்கமாய் எடுத்துரைக் கின்றன. இந்தப் படிப்பினையைத்தான் தற்போது ஆதிக்கத்திலுள்ள காவுத்ஸ்கி வாதம் மார்க்சியத்துக்கு அளிக்கும் “வியாக்கியானம்” அடியோடு புறக்கணிப் பதோடு, அப்பட்டமாய்த் திரித்துப் புரட்டியுள்ளது! மார்க்ஸ் குறிப்பிடும் புருமேர் பதினெட்டில் இது பற்றிய முழுவாசகத்தையும் ஏற்கனவே நாம் மேலே மேற்கோளாய்க் கொடுத்திருக் கிறோம்.மேற்கூறிய மார்க்சின் வாதத்தில் குறிப்பாய் இரு விவரங்கள் கருத்துக் குரியனவாகும்.
முதலாவதாக, அவர் தமது முடிவைக் கண்டத்து நாடுகளுக்கு மட்டும் பொருந்துவதாய் வரம்பிட்டுக் கொள்கிறார். 1871 ல் இது புரிந்துகொள்ளக் கூடியதே. அப்பொழுது பிரிட்டன் இராணுவவாதக் கும்பலும், பெருமளவுக்கு அதிகார வர்க்கமும் இல்லாத கலப்பற்ற முதலாளித்துவ நாட்டுக்குரிய எடுத்துக் காட்டாகவே இருந்து வந்தது. ஆகவே பிரிட்டனை மார்க்ஸ் விலக்கிக் கொண்டார். “ஏற்கனவே உள்ள அரசுப் பொறியமைவை” அழித்தொழிக்கவேண்டும் என்ற முன் நிபந்தனை இல்லாமலேயே அன்று பிரிட்டனில் புரட்சி, மக்கள் புரட்சியுங்கூட, நடைபெறுவது சாத்தியமாய்த் தோன்றியது, உண்மையில் சாத்தியமாகவும் இருந்தது.
இன்று, 1917 ல், முதலாவது ஏகாதிபத்திய யுத்தம் நடைபெறும் காலத்தில், மார்க்ஸ் முன்பு வரம்பிடப்பட்டது பொருத்தம் இல்லாததாக ஆகிவிட்டது. பிரிட்டன்,அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும்,இராணுவவாதக் கும்பலும் அதிகார வர்க்கமும் இல்லாதவை என்கிற பொருளில் அனைத்து உலகிலும் ஆங்கிலோ - சாக்சன் “சுதந்திரத்துக்கு” மிகப்பெரிய கடைசிப் பிரதிநிதிகளாய் விளங்கியஇவ்விருநாடுகளும், யாவற்றை யும் தமக்குக் கீழ்ப்படுத்தி யாவற்றையும் நசுக்கும் அதிகாரவர்க்க இராணுவ அமைப்புகளான இரத்தக் கரைபடிந்த படு மோசமான அனைத்து ஐரோப்பியச் சகதியில்மூழ்கிவிட்டன. இன்று பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் கூட “ஏற்கனவே உள்ள அரசுப் பொறியமைவை” (1914 - 17ஆம் ஆண்டுகளில் இது இந்தநாடுகளில் ஐரோப்பிய”பொதுவான ஏகாதிபத்தியப் பூரண நிலையை எய்திவிட்டது)நொறுக்குவதும்,அழித்தொழிப்பதும் “மெய்யான மக்கள் புரட்சி ஒவ்வொன்றுக்கும் முன்நிபந்தனை யாகும்”இரண்டாவதாக,அதிகாரவர்க்க இராணுவ அரசுப் பொறியமைவை அழித்தொழிப்பது“மெய்யான மக்கள் புரட்சி ஒவ்வொன்றுக்கும்முன்நிபந்தனையாகும்”என்று மார்க்ஸ் கூறும் ஆழ்ந்த கருத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.“மக்கள்”புரட்சி என்னும் கருத்து மார்க்சிடமிருந்து வருவது விந்தையாய்த் தோன்றுகிறது.ஆகவே தாம் மார்க்சியவாதிகளாய்க் கருதப்பட வேண்டுமென விரும்பும் ஸ்துரூவேயைப் பின்பற்றுவோராகிய ரஷ்யப் பிளெஹானவ்வாதிகளும் மென்ஷ்விக்கு களும் இந்தத் தொடர் மார்க்ஸ் “கைதவறி” எழுதியதெனக் கூறுமளவுக்குச் சென்றாலும் செல்லலாம். இவர்கள், முதலாளித்துவப் புரட்சி,பாட்டாளிவர்க்கப் புரட்சி ஆகிய இரண்டு மட்டும்தான் ஒன்றுக்கொன்று எதிராய் இருக்க முடியும் என்னும் அளவுக்கு மார்க்சியத்தைக் கேவலமான மிதவாத முறையில் திரித்துவிடுகிறார்கள்;மேலும் இந்த எதிர்நிலையும் கூட கிஞ்சித்தும் உயிரில்லாத முறையில் தான் புரிந்து கொள்கிறார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகளை உதாரணங்களாய் எடுத்துக்கொண்டால், போர்த்துகல், துருக்கிப் புரட்சிகள் இரண்டும் முதலாளித்துவப் புரட்சிகளே என்பதை நாம் ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆனால் இவை இரண்டில் எதுவும் “மக்கள்” புரட்சி அல்ல; ஏனெனில் எதிலும் மக்களில் பெரும்திரளானோர்,மிகப்பெருவாரியானோர் குறிப்பிடத்தக்கஅளவுக்குத் தமது சொந்தப் பொருளாதார, அரசியல் கோரிக்கைகளை எழுப்பிச்செயலூக்கத்துடன் சுயேச்சையாய் முன்வரவில்லை. இதற்கு மாறாக 1905 - 07 ஆம்ஆண்டுகளின் ரஷ்ய முதலாளித்துவப் புரட்சி, போர்த்துகல், துருக்கி புரட்சிகளுக்குச் சில நேரங்களில் கிடைத்தது போன்ற “பிரமாதமான” வெற்றிகள் பெறவில்லை என்றாலுங் கூட,இது மெய்யான “மக்கள்” புரட்சி என்பதில் ஐயமில்லை; ஏனெனில் பெருந்திரளான மக்கள்,அவர்களில் பொரும்பான்மையினர்,ஒடுக்குமுறையாலும் சுரண்டலாலும் நசுக்கப்பட்ட மிகவும் “அடிநிலை”சமுதாயத் தொகுதியோர் சுயேச்சையாய் கிளர்ந்தெழுந்து தமது சொந்தக் கோரிக்கைகளின் முத்திரையை,ஒழிக்கப் பட்டு வந்த பழைய சமுதாயத்துக்குப் பதிலாய் ஒருபுதிய சமுதாயத்தைத் தமது சொந்த வழியில் கட்டியமைப்பதற்கான தமது முயற்சிகளின் முத்திரையை இப்புரட்சியின் போக்கு அனைத்திலும் பதித்தனர்.
ஐரோப்பாவில்1871ல் கண்டத்து நாடு எதிலும் பாட்டாளி வர்க்கம் மக்களின் பெரும்பான்மையாய் இருக்கவில்லை.“மக்கள்”புரட்சியானது,பெரும்பான்மை யோரைமெய்யாகவே தன் போக்கிலே இழுத்துச் செல்லும் புரட்சியானது பாட்டாளி வர்க்கம்,விவசாயிகள் ஆகிய இரு பகுதியோரையும் தன்னுள் கொண்டதாய் இருந்தால்தான் இவ்வாறு “மக்கள்”புரட்சியாய் இருந்திருக்க முடியும்.இவ்விரு வர்க்கங்களும்தான் அன்று “மக்கள்”என்போர். “அதிகாரவர்க்க இராணுவ அரசுப் பொறியமைவு” இவ்விரு வர்க்கங்களையும்ஒடுக்கியும் நசுக்கியும் சுரண்டியும் வருகிறது என்பதால் இவ்விரண்டும்ஒன்றிணைக்கப்படுகின்றன. இந்தப் பொறியமைவை நொறுக்குவது, இதை அழித்தொழிப்பது மெய்யாகவே “மக்களுக்கு” அவர்களில் பெரும்பான்மை யோருக்கு, தொழிலாளர்களுக்கும் பெரும் பகுதி விவசாயிகளுக்கும் நலம் பயக்கிறது என்பதுதான், ஏழை விவசாயிகள், பாட்டாளிகளின் சுதந்திரமான கூட்டணிக்கு “முன்நிபந்தனை ஆகும்” இது போன்ற கூட்டணி இல்லாதவரை ஜனநாயகம் நிலையற்றதாகவே இருக்கும்; சோசலிச மாற்றம் ஏற்படுவதுசாத்தியமல்ல.
பாரிஸ் கம்யூன் கூட்டணியை நோக்கி மெய்யாகவே நடைபோட்டது என்பது பிரசித்தமானது.ஆனால் பல உள்நாட்டு,வெளிநாட்டுக் காரணங்களால் அது தனது குறிக்கோளை வந்தடையமுடியாமல் போய்விட்டது.
ஆகவே மார்க்ஸ் “மெய்யான மக்கள் புரட்சி” குறித்துப்பேசுகையில் குட்டிமுதலாளித் துவப் பகுதியோரின் தனி இயல்புகளைச் சிறிதும் உதாசீனம் செய்யாமல் (இவர்களைப் பற்றி அவர் நிறையவும் அடிக்கடியும் பேசினார்). ஐரோப்பாவில் 1871 ல் கண்டத்து நாடுகள் மிகப் பெருவாரியானவற்றில் வர்க்கங்களுடைய பலத்தின் ஒப்பு நிலையைத் துல்லியமாய்க்கணக்கில்எடுத்துக்கொண்டார்.மறுபுறத்தில் அவர் அரசுப் பொறியமைவை “நொறுக்குவது”தொழிலாளர்கள்,விவசாயிகள் ஆகிய இருசாராரின் நலன்களுக்கும் அவசியமென்று,இவர்களை இது ஒன்றுபடுத்துகிறதென்று,“புல்லுருவியை”அகற்றிவிட்டு அதனிடத்தில் புதியஒன்றை அமைத்திடும் பொதுவான பணியை இது இந்த இருசாரார் முன்னும் வைக்கின்றது என்று கூறினார்.
அமைந்திட வேண்டிய இந்தப் புதிய ஒன்று எது?தகர்க்கப்படும் அரசுப் பொறியமைவுக்குப் பதிலாய் அமையப் போவது எது?
1847 ல் கம்யூனிஸ்டு அறிக்கையில் மார்க்ஸ் இந்தக் கேள்விக்கு அளித்த பதில் முற்றிலும்கருத்தியலானதாகவே இருந்தது. இன்னும் கறாராய்க் கூறுவதெனில், அந்தப் பதில் செய்யவேண்டிய பணிகளைச் சுட்டிக்காட்டியதே தவிர இவற்றைச் செய்து முடிப்பதற்கான வழிகளைச் சொல்ல வில்லை.இந்தப் பொறியமைவுக்குப் பதிலாய் “ஆளும் வர்க்கமாய்ப்பாட்டாளி வர்க்கம் ஒழுங்கமைய”வேண்டும்.“ஜனநாயகத்துக்கானப் போரில்வெற்றிபெற”வேண்டும் என்பதே கம்யூஸ்டு அறிக்கையில் தரப்படும் பதில்.
மார்க்ஸ் கற்பனைகளில் ஈடுபடவில்லை,பாட்டாளிவர்க்கம் ஆளும் வர்க்கமாய் நிறுவன வழியில்ஒழுங்கமைவது திட்டவட்டமான எந்த வடிவங்களில் நடந்தேறும், இந்த ஒழுங்கமைப்பு “ஜனநாயகத்துக்கானப் போரில்”முழுநிறைவான, முடிவான “வெற்றி பெறுவதுடன்”இணைக்கப்படுவதற்குரிய திட்டவட்டமான முறை என்ன என்ற கேள்விக்கு வெகுஜன இயக்கத்தின் அனுபவம் பதிலளிக்கும் என்று அவர் எதிர்பார்த்தார்.
கம்யூனுடைய அனுபவம் சொற்பமாகவே இருந்தது என்றாலும், மார்க்ஸ் இந்த அனுபவத்தை பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலில் மிகவும் உன்னிப்பாய்ப் பகுத்தாய்ந்தார். இந்த நூலின் மிக முக்கிய வாசகங்களை மேற்கோளாய்த் தருகிறோம்.
“நிரந்தரச்சேனை,போலீஸ், அதிகாரவர்க்கம், சமயக்குருமார் அமைப்பு, நீதிமன்றம் ஆகிய சர்வ வியாபகச் செயலுறுப்புகளைக் கொண்ட மத்தியத்துவ அரசு அதிகாரம், மத்திய காலத்தில் உதித்து, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓங்கி வளர்ந்தது. மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே வர்க்கப் பகைமைகள் வளர்ச்சியுற்றதைத் தொடர்ந்து “மேலும்”மேலும் அரசு அதிகாரமானது உழைப்பை அடக்குவதற் கான பொது சக்தியின் தன்மையை,வர்க்கஆதிக்கத்துக்குரிய பொறியமைவின் தன்மையைப் பெற்றது.வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கும் ஒவ்வொரு புரட்சியையும் அடுத்து, அரசு அதிகாரத்தின் அப்பட்டமான பலவந்த தன்மை மேலும் மேலும் கண்கூடாய்ப் புலப்படுகிறது. ”1848 - 49 ஆம் ஆண்டுகளின் புரட்சிக்குப் பிற்பாடு அரசு அதிகாரம்”.… உழைப்புக்கு எதிரான மூலதனத்தின் தேசியப் போர்க்கருவி” ஆகிவிட்டது. இரண்டாவது சாம்ராஜ்யம் இதை உறுதியாக்கிற்று.
“சாம்ராஜ்யத்துக்கு நேர்மாறான எதிர்நிலையே கம்யூன்”. வர்க்க ஆதிக்கத்தின் முடியாட்சி வடிவத்தை மட்டுமின்றி,வர்க்க ஆதிக்கத்தையே அகற்றிடுவதற்கான ஒரு குடியரசுக்குஉரிய குறிப்பிட்ட வடிவமே கம்யூன்..…”பாட்டாளி வர்க்க, சோசலிசக் குடியரசுக்கு “;உரிய” இந்த வடிவம் என்ன? அது தோற்றுவிக்கத் தொடங்கிய அரசு எது?“....நிரந்தரச் சேனையை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாய் ஆயுதமேந்திய மக்களைத் தோற்றுவிப்பதே கம்யூனுடைய முதலாவது அரசாணையாகும்.…” இப்பொழுது இந்தக் கோரிக்கை,தன்னை சோசலிஸ்டு என்பதாய்க் கூறிக் கொள்ளும் ஒவ்வொரு கட்சியின் வேலைத்திட்டத்திலும் இருப்பதைக் காண்கிறோம்.ஆனால் இந்தக்கட்சிகளுடைய வேலைத்திட்டங்கள் உண்மையில் எந்தளவுக்கு மதிக்கத் தக்கவை என்பது எங்களுடைய சோசலிஸ்டுப் புரட்சியாளர்களும் மென்ஷ்விக்குகளும் நடந்துகொண்ட முறையிலிருந்து வெட்டவெளிச்சமாய்த் தெரிகிறது.பிப்ரவரி 27ஆம் நாள் புரட்சியை அடுத்து இவர்கள் இந்தக் கோரிக்கையைநிறைவேற்றத் தீர்மானமாய் மறுத்துவிட்டனர்.
“....அனைத்து மக்களது வாக்குரிமையின் அடிப்படையில் பாரிஸ் நகரின் பல்வேறு தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு, கம்யூன் நிறுவப்பட்டது.இந்த உறுப்பினர்கள் பொறுப்புள்ளவர்களாகவும் எந்த நேரத்திலும் நீக்கப்படக் கூடியவர்களுமாய் இருந்தனர்,இயற்கையாகவே அதன் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் தொழிலாளர்களா கவோ,தொழிலாளி வர்க்கத்தின் முழு ஆதரவுக்கு உரிய பிரதிநிதிகளாகவோ தான் இருந்தனர்.…“...இதுகாறும்அரசாங்கத்தின் கைக்கருவியாய் இருந்து வந்த போலீஸ் இப்பொழுது திடுதிப்பென அதன் அரசியல் செயற்பாடுகள் யாவும்பறிக்கப்பட்டு பொறுப்புள்ள, எக்காலத்திலும் நீக்கப்படக் கூடிய கம்யூன் கைக்கருவியாய் மாற்றப்பட்டது... நிர்வாகத்தின் ஏனைய எல்லாத் துறைகளையும் சேர்ந்த அதிகாரிகளும்இதேபோல மாற்றப்பட்டனர்...
கம்யூன் உறுப்பினர்கள் முதலாய் எல்லோரும் தொழிலாளருக்குரிய சம்பளங்கள் பெற்றுப் பொதுச் சேவை புரிய வேண்டியதாயிற்று.அரசின் உயர் பதவியாளர்கள் மறைந்ததோடு உயர் பதவியாளர்களது தனியுரிமைகளும் சலுகைகளும் பிரதிநித்துவ மான்யத் தொகைகளும் மறைந்துவிட்டன.... பழைய அரசாங்கத்தின் பௌதிகப் பலாத்காரக் கருவிகளான நிரந்தரச் சேனையையும் போலீசையும் ஒழித்துக்கட்டியதும் கம்யூனானது உடனே ஆன்மீக அடக்குமுறைக் கருவியையும், அதாவது குருமார்களுடைய அதிகாரத்தையும் தகர்க்க முற்பட்டது. நீதிமன்றத்தினர் போலியான சார்பற்ற நிலையை இழந்து விட்டனர்... இனி அவர்கள் தேர்ந்தெடுக் கப்பட வேண்டியோரும், பொறுப்புடை யோரும், நீக்கப்படக் கூடியோரும் ஆயினர்…”
ஆக,கம்யூனானது நொறுக்கப்பட்ட அரசுப் பொறியமைவுக்குப் பதிலாய் நிறைவான ஜனநாயகத்தை நிறுவியதாய் “மட்டும்தான்” தோன்றும். அதாவது, நிரந்தரச் சேனையைஒழித்தது: எல்லா அதிகாரிகளையும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களாக்கி, திருப்பி அழைக்கப்படக் கூடியவர்களாக் கியது. ஆனால் உண்மையில் இந்த “மட்டும்தான்” என்பது ஒருவகை நிறுவனங்களை அகற்றி அவற்றினிடத்தில் அடிப்படையிலேயே வேறொரு தன்மையதான பிற நிறுவனங்களைத் தோற்றுவிக்கும் பிரமாண்ட மாறுதலைக் குறிப்பதாகும். “அளவு பண்பாய் மாறுவதன்” எடுத்துக்காட்டு இது. அதாவது முடியுமான அளவுக்கு முழுமையாகவும் முரணின்றியும் செயல்படுத்தப்பட்ட ஜனநாயகமானது முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகமாய் மாற்ற மடைந்துவிடுகிறது; அதாவது அரசு (குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை அடக்குவதற் கான தனிவகை சக்தி) இனி மெய்யான அரசு அல்லாத ஒன்றாய் மாற்றமடைந்து விடுகிறது.
முதலாளித்துவவர்க்கத்தாரை அடக்குவதும் அவர்களுடைய எதிர்ப்பை நசுக்குவதும் இனியும் அவசியமாகவே இருக்கிறது. கம்யூனுக்கு இது மிக மிக அவசியமாக இருந்தது.
கம்யூன் இப்பணியைப் போதிய உறுதியோடு செய்யாதது அதன் தோல்விக் குரியகாரணங்களில் ஒன்றாகும்.ஆனால் அடக்குவதற்கான செயலுறுப்பு இங்கு மக்களின் பெரும்பான்மைப் பகுதியே அன்றி,அடிமையுடைமைச் சமுதாயம்,பண்ணையடிமைச்சமுதாயம்,கூலியடிமைச் சமுதாயம் ஆகிய இவை யாவற்றிலும் இருந்தது போலச் சிறுபான்மைப் பகுதியல்ல.பெரும்பான்மை மக்கள்,தாமே தமது ஒடுக்குமுறையாளர்களை அடக்குவதால், அடக்குவதற்கான “தனிவகையான சக்தி” ஒன்று இனி தேவையில்லை! இந்த அர்த்தத்தில் அரசு உலர்ந்து உதிரத் தொடங்குகிறது. தனிச் சலுகை படைத்த சிறுபான்மையோரது தனி வகை நிறுவனங்களுக்குப் பதிலாய் (தனிச் சலுகை பெற்ற அதிகாரவர்க்கம், நிரந்தரச் சேனையின் தலைவர்கள்), பெரும்பான்மை மக்கள் நேரில் தாமே இந்தப் பணிகளை நிறைவேற்ற முடிகிறது. அரசு அதிகாரத்தின் பணிகள் மேலும் மேலும் கூடுதலாய்ப் பெருந்திரளான மக்களுக் குரியதாக ஆகும்போது, இந்த அதிகாரத்திற்கான அவசியம் மேலும் மேலும் குறைந்துவிடுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில்,மார்க்ஸ் வலியுறுத்திக் கூறிய கம்யூனின் பின்வரும் நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்கன வாகும்:அதிகாரிகளுக்கான எல்லாப் பிரதிநித்துவமான்யங்களையும் பண வகையிலான எல்லாத் தனிச் சலுகைகளையும் ஒழித்தல்,அரசின் எல்லா ஊழியர்களது ஊதியங்களையும் “தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களின்”நிலைக்குச் சமமாக்குதல்.முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கு,ஒடுக்குவோரின் ஜனநாயகத்திலிருந்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய ஜனநாயகத்துக்கு, குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான “தனிவகை சக்தியாய்” அமைந்த அரசிலிருந்து ஒடுக்குவோரை அடக்குவதற்கான பெரும்பான்மை மக்களது -அதாவது தொழிலாளர்கள், விவசாயிகளது -பொது சக்திக்கு ஏற்பட்ட மாற்றத்தை ஏனைய எவற்றையும்விட இந்த நடவடிக்கைகள் மிகத் தெளிவாய்ப் புலப்படுத்துகின்றன. மிகவும் எடுப்பான இந்த விவகாரத்தில்தான், அரசு சம்பந்தமான பிரச்சனையைப் பொறுத்த மட்டில் மிகவும் முக்கியமானதெனக் கொள்ளத்தக்க இந்த விவகாரத்தில்தான், மார்க்சின் கருத்துக்கள் அறவே புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன! ஜனரஞ்சகமான விளக்க உரைகளில் - இவை எண்ணில் அடங்காதவை - இக் கருத்துக்கள் குறிப்பிடப்படுவதே இல்லை.
கிறிஸ்தவர்கள்,அவர்களுடைய மதம் அரசின் மதமானதும் ஜனநாயகப் புரட்சிகர மனப்பான்மை கொண்ட புராதனக் கிறிஸ்துவத்தின் “சூதறியாப் பேதமையை”“மறந்துவிட்டது”போல,இதுவும் காலத்துக்கு ஒவ்வாத பழம் பாணியிலான “சூதறியாப்பேதமையின்” வகைப்பட்டதாய்க் கொள்ளப்பட்டு,இதைப் பற்றிக் குறிப்பிடாமலே மௌனமாயிருப்பதே “உசிதம் என்றாகிவிட்டது”அரசின் உயர் அதிகாரிகளுடைய சம்பளம் குறைக்கப்பட வேண்டுமென்பது சூதறியாப் பேதமை கொண்ட புராதன ஜனநாயகத்தின் கோரிக்கையாக“மட்டுமே” தோன்றுகிறதாம்.
நவீன சந்தர்ப்பவாதத்தின் “மூலவர்களில்” ஒருவரான முன்னால் சமூக - ஜனநாயகவாதிஎடுவார்டு பெர்ன்ஷ்டைன் “புராதன”ஜனநாயகம் குறித்து கூறப்படும் கொச்சையான முதலாளித்துவக் கேலியையும் கிண்டலையும் பன்முறை தாமும் திருப்பிக் கூறியிருக்கிறார். எல்லாச் சந்தர்ப்பவாதிகளையும்,இன்றைய காவுத்ஸ்கிவாதிகளையும் போலவே அவரும்நிலைமையைப் புரிந்துகொள்ளவே இல்லை.முதலாவதாக “புராதன”ஜனநாயகத்துக்கு ஓரளவு “பின்னடைந்து செல்லாமல்”(வேறு எப்படித்தான் பெரும்பான்மையோரும்,பிறகு விதிவிலக்கின்றி மக்கள் அனைவரும் அரசுப் பணிகளை ஏற்று நிறைவேற்ற முற்படுவதாம்)முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கு மாறிச் செல்வது சாத்தியமன்று என்பதையும்:இரண்டாவதாக,முதலாளித்துவம்,முதலாளித்துவக் கலாச்சாரம் இவற்றின் அடிப்படையில் அமைந்த “புராதன ஜனநாயகமானது”வரலாற்றுக்கு முற்பட்ட,அல்லது முதலாளித்துவத்துக்கு முற்பட்ட காலங்களைச் சேர்ந்த புராதன ஜனநாயகத்தைப் போன்றதல்ல என்பதையும் புரிந்துகொள்ளவே இல்லை.முதலாளித்துவக் கலாச்சாரம் பெருவீதப் பொருளுற்பத்தியையும், ஆலைகளையும் ரயில்பாதைகளையும், அஞ்சல் துறையையும், தொலைபேசிகளையும், இன்ன பிறவற்றையும் தோற்று வித்திருக்கிறது. இவற்றின் அடிப்படையில் பழைய “அரசு அதிகாரத்தின்” பணிகளில் மிகப்பெருவாரியானவை மிகவும் சுலபமாகிவிட்டதால், எழுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் எளிதில் செய்துவிடக் கூடிய மிகச் சுலபமான பதிவு செய்தல், தொகுத்து வைத்தல், சரிபார்த்தல் ஆகியவைகளாய் இவற்றைக் குறுக்கிக் கொண்டுவிட முடியும். சாதாரண “தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களைப் பெற்று இந்த வேலைகளை எளிதில் செய்துவிடலாம். தனிச் சலுகைகள், “அதிகார ஆடம்பரங்கள்” இவற்றில் இம்மியும் விட்டு வைக்காமல் இந்தப் பணிகளிலிருந்து அறவே களைந்துவிட முடியும்(களைந்துவிடவும் வேண்டும்) விதிவிலக்கின்றி எல்லா அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்படுதல், எந்தநேரத்திலும் பதவியிலிருந்து திருப்பியழைக்கப்படக் கூடியவர்களாய் இருத்தல், அவர்களுடையசம்பளங்களைச் சாதாரணத் “தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களின்” நிலைக்குச் சமமாக்குதல் -“கூறாமலே விளங்கும்”இந்த சர்வசாதாரண ஜனநாயக நடவடிக்கைகள்,தொழிலாளர்களுடைய நலன்களையும் விவசாயிகளில் மிகப் பெருவாரியானோரின் நலன்களையும் முழு அளவுக்கு ஒன்றுபடச் செய்வதோடு,அதேபோது முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கு இட்டுச் செல்லும் பாலமாகவும் அமைகின்றன.
அரசின் புனரமைப்பு சம்பந்தமான,முற்றிலும் அரசியல் வழியிலான சமுதாயப் புனரமைப்பு சம்பந்தமான நடவடிக்கைகளே இவை.“உடமை பறிப்போர் உடமை பறிக்கப்படுதல்”நடைபெறுவதுடனோ,அதற்கான தயாரிப்புகளுடனோ இணைக்படும்போது மட்டும்தான்,அதாவது உற்பத்திச் சாதனங்களில் முதலாளித்துவ தனிவுடமை சமுதாய உடமையாய் மாற்றப்படுவதுடன் இணைக்கப்படும்போது மட்டுமே,இந்த நடவடிக்கைகள் அவற்றின் முழுப் பொருளையும் முக்கியத்துவத்தையும் பெறுகின்றன என்பதைக் கூறத் தேவையில்லை.
“எல்லா முதலாளித்துவப் புரட்சிகளும் எழுப்பிய அந்தக் கவர்ச்சிக் கோஷமாகிய மலிவான அரசாங்கத்தை,கம்யூனானது செலவீனங்களுக்கு இரு பெரும் ஆதாரங்களாய் அமைந்த சேனையையும் அதிகார வர்க்கத்தையும் ஒழித்ததன் மூலம் நடைமுறை உண்மையாக்கிற்று” என்று மார்க்ஸ் எழுதினார்.
ஏனைய குட்டிமுதலாளித்துவப் பகுதியின ரில் எப்படியோ அது போலவே, விவசாயி களிடமிருந்தும் மிகச் சொற்பமானோர் மட்டுமே முதலாளித்துவ அர்த்தத்தில் “மேல் நிலைக்கு உயர்கிறார்கள்” வாழ்க்கையில் முன்னேறிச் சுகமாய் வாழ்கிறார்கள்” அதாவது செல்வமுடை யோராகவோ முதலாளிகளாகவோ அல்லது வசதிபடைத்த தனிச் சலுகையுள்ள அதிகாரிகளாகவோஆகின்றனர்.விவசாயிகள் இருந்துவரும் முதலாளித்துவ நாடு ஒவ்வொன்றிலும் (மிகப் பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் விவசாயிகள் இருக்கிறார்கள்), மிகப்பெரும் பகுதி விவசாயிகள் அரசாங்கத்தால் ஒடுக்கப்படுகிறார்கள்: அரசாங்கம் வீழ்த்தப்பட வேண்டுமென, “மலிவான” அரசாங்கம் வேண்டுமென ஏங்குகிறார்கள். பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே இதனைச் சித்திப்பெறச் செய்ய முடியும்.
இதைச் சித்திப்பெறச் செய்வதன் மூலம் பாட்டாளி வர்க்கம் அதேபோதில் அரசை சோசலிச வழியில் புனரமைத்திடுவதை நோக்கி முன்னேறிச் செல்கிறது.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது
1.பாரிஸ் கம்யூன் புரட்சி நடப்பதற்கு முன்பு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சரியான தருணம் இதுவல்ல என்று புரட்சியாளர்களை காரல்மார்க்ஸ் எச்சரித்தார். எனினும் மக்களின் போராட்டங்கள் துவங்கி விட்டவுடன் அந்த மக்களின் போராட்டத்தை மார்க்ஸ் ஆதரித்தார். இதுதான் மார்க்சின் வழிமுறையாகும். இதன் மூலம் நாம் மக்களின் முன்முயற்சியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று மார்க்ஸ் நமக்கு வழிகாட்டுகிறார்.
2.இங்கே உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டுப் போராட முடியாது என்றும் அதற்கு சாதி மதம்தான் தடையாக இருக்கிறது என்று புலம்பிக்கொண்டு சிலர் திரிவதைப் பார்க்கிறோம். இந்த நபர்களுக்கு மக்களின் மேல் நம்பிக்கை இல்லை, இவர்கள் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்குத் தயாரில்லை என்பதை நாம் காணலாம். இத்தகைய நபர்களுக்கு மாறானவர்தான் காரல் மார்க்ஸ், அல்லது காரல் மார்க்சின் கண்ணோட்டத்திற்கு எதிரானவர்கள்தான் இந்த அவநம்பிக்கைவாதிகள்.
3.பாரிஸ் கம்யூன் புரட்சி வெற்றி பெறவில்லை என்றாலும் அதனைகுறை சொல்லிக் கொண்டே மார்க்ஸ் இருக்கவில்லை. மாறாக அந்தப் புரட்சியை நடத்தியவர்களை மார்க்ஸ் புகழ்ந்தார். அந்தப் புரட்சி தோல்வியடைந்தாலும் உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு பல படிப்பினைகளை வழங்கியுள்ளது என்றும் அந்தப் புரட்சியின்அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நாம் முன்னேற வேண்டும் என்றே காரல் மார்க்ஸ் கருதினார். ஆனால் ரஷ்யாவில் 1905 ஆம் ஆண்டு நடந்த புரட்சி தோல்வியடைந்த போது பிளஹானவ் அந்தப் புரட்சியை நடத்தியது தவறு என்றேபுலம்பிக்கொண்டு இருந்தார்.இவ்வாறு புலம்புவது தவறு என்று வரலாற்றில் லெனின் தலைமை யிலான போல்ஷ்விக்குகள் நிருபித் துள்ளனர்
4.இந்த வரலாற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? சோவியத்து ரஷ்யாவில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத்து கம்யூனிஸ்டுக் கட்சியும் ரஷ்ய சோவியத்து மக்களும் போராடி ஒரு நவீன ரஷ்யாவை உருவாக்கியது மிகவும் பாராட்டுக்குரியது.எனினும் சோவியத்து வீழ்த்தப்பட்டாலும் சோவியத்து ரஷ்ய மக்கள் மற்றும் சோவியத்து கம்யூனிஸ்டுகள் பிரெஞ்சு மக்களைப் போன்றே நமக்கு ஏராளமான சாதக பாதக அனுபவங்களை விட்டுச்சென்றுள்ளனர். இந்த அனுபவங் களை காரல்மார்க்ஸ் பகுத்தாராய்ந்தது போல பகுத்தாராய்ந்து கம்யூனிஸ்டுகள் ஒரு விஞ்ஞானப்பூர்வமான கொள்கை வகுத்து செயல்படுவதுதான் சரியானதாகும். இதற்கு மாறாக சோவியத்து ரஷ்யாவில் நடந்ததெல்லாம் தவறுகள்தான் என்று பிரச்சாரம் செய்யும் ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் நவீன டிராட்ஸ்கியவாதிகளை நம்பி நாம் சோர்ந்துவிடக் கூடாது.பாரிஸ் கம்யூனைப் போலவே சோவியத்து ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகளும் மக்களும் சரியாகவும் நடந்துள்ளார்கள்,தவறு களையும் செய்துள்ளார்கள்.ஆகவே இதனை ஆழமாக பரிசீலித்து நாம் புதிய வழிமுறையை மார்க்சிய ஆசான்களது கண்ணோட்டத்திலிருந்து காணவேண்டும்.
5. ஏற்கனவே உள்ள அரசுப் பொறியமைவான போலீஸ், இராணுவம், நீதிமன்றம், நிதித்துறை, நிர்வாகத்துறை, மருத்துவத்துறை, பொறியியல்துறை, வேளாண்மைத்துறை போன்ற அரசுத்துறை நிறுவனங்களையும், அதில் செயல்படும் அரசு அதிகாரிகளையும் பாராளுமன்றத் திலோ சட்டமன்றத்திலோ பெரும்பான்மை பெற்று இந்த அதிகாரிகளைக் கொண்டு உழைக்கும் வர்க்கமானது தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்பதே பாரிஸ் கம்யூனின் அனுபவமாகும். ஆகவே உழைக்கும் வர்க்கமானது தனக்கான சொந்த அதிகார அமைப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் ஏற்கனவே உள்ள அரசுப் பொறியமைவை முற்றிலும் தகர்த்துவிட்டு அதனை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று மார்க்ஸ் போதித்தார்,
6.ஆனால் பெர்ன்ஸ்டைன்,காவுத்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் மார்க்சின் போதனைகளை மறுத்துவிட்டு ஏற்கனவே உள்ள அரசுப்பொறியமைவை கைப்பற்றி அதனை உழைக்கும் மக்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்று மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டினார்கள்.அதன் பயனாகவே அவர்கள் தோல்வியடைந்து வரலாற்றிலிருந்து தூக்கியெறியப்பட்டனர்.இவர்களுக்கு மாறாக லெனின் மார்க்சின் போதனையை முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டு ரஷ்யாவில் சாதனை படைத்தார்.
7. இந்த மார்க்சின் போதனையை மறுத்து இந்தியாவிலுள்ள திருத்தல்வாத கம்யூனிஸ்டுகள் பாராளுமன்றத் தேர்தலில் பங்குபெற்று சட்டமன்றத்தைக் கைப்பற்றி உழைக்கும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று சொல்லி தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கையில் மூழ்கி கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியது என்ற பழமொழிக்கு ஏற்ப மக்களின் செல்வாக்கை இழந்து மூன்று நான்கு எம்எல்ஏ சீட்டுக்காக முதலாளித்துவ கட்சிகளிடம் கையேந்தும் நிலையை அடைந்துள்ளார்கள்.
8.ஆகவே நமக்கு கிடைக்கும் சாதக பாதக அனுபவங்களிலிருந்து நமது தவறுகளை களைந்து முற்போக்கான வழிமுறைகளை கண்டு முன்னேற வேண்டும். அதற்கு மாறாக நமது அனுபவங்களிலிருந்து பிற்போக்கான பாதையை வகுத்துக் கொண்டு செயல்பட்டால் நாம் வளர முடியாது, நமது அழிவுக்குத்தான் பயன்படும். மேலும் மேலும் தொடர்ந்து இந்திய திருத்தல்வாதிகள் தமது திருத்தல்வாதப் பாதையை கைவிடாமல் தொடருவார்களானால் அவர்களது அழிவு நிச்சயம்.
9. “அதிகாரவர்க்க - இராணுவப் பொறியமைவை நொறுக்கிடுவது” என்ற முழக்கம்தான்மார்க்சால் முன்வைக்கப்பட்ட புரட்சிகரமான முழக்கமாகும். இந்த முழக்கத்தை திருத்தல்வாதிகள் திரிக்கிறார்கள்.அதாவது பாராளுமன்றத் தேர்தல்களின் மூலம் ஆட்சிக்கு வந்து இந்த “அதிகார வர்க்க இராணுவப் பொறியமைவை”நொறுக்காமலேயே பாதுகாத்துக்கொண்டே அதனைக்கொண்டே ஆட்சியை நடத்தி மக்களுக்குச் சேவை செய்ய முடியும் என்கிறார்கள்.இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே அவர்கள் தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுகிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த தேர்தல் பாதை மார்க்சின் போதனைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.
10.இன்று உலகம் முழுவதிலும் இந்த “அதிகாரவர்க்கஇராணுவப்பொறியமைவைக்”கொண்டுதான் ஏகாதிபத்திய முதலாளி களும்,ஏகாதிபத்திய சார்பு முதலாளிகளும் உழைக்கும் மக்களை அடக்கிஒடுக்கி ஆளுகிறார்கள். ஆகவே இந்த “அதிகார வர்க்கஇராணுவப் பொறியமைவை” அடித்து நொறுக்காமல் உலகிலுள்ள உழைக்கும் வர்க்கத்தை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க முடியாது என்பதே காரல் மார்க்சின் முதன்மையான போதனையாகும்.
11.அதிகாரவர்க்க இராணுவப் பொறிய மைவை அழித்தொழிப்பதுதான் “மெய்யான மக்கள் புரட்சி ஒவ்வொன்றுக்கும் முன்நிபந்தனையாகும்” என்ற கருத்து மார்க்சியப் போதனைகளில் ஒன்றாகும். இந்த முன்நிபந்தனையை நிறை வேற்றாமல் ஏற்படுத்தப்படும் எந்தவகை யான மாற்றமும் உழைக்கும் மக்களுக்கு விடுதலையையோ அல்லது வளமான வாழ்வையோ கொடுக்காது.
12.இருபதாம் நூற்றாண்டில் நடந்த போர்த்துகல்,மற்றும் துருக்கி புரட்சிகளில்பெருவாரியான மக்கள் கலந்து கொள்ளவில்லை.ஆகவே அந்தப் புரட்சிகள் எல்லாம் மக்கள் புரட்சிகள் அல்ல என்றார் காரல் மார்க்ஸ்.இதன் மூலம் மார்க்ஸ் பெருவாரியானமக்களின் ஆதரவோடும் அவர்களின் பங்களிப்போடும் நடத்தப்படும் போராட்டங்களையே கம்யூனிஸ்டுகள் நடத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்கிறார்.அதற்கு பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பிரிவு மக்களையும்ஓர்அணியில் திரட்டுவதற்கான திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று காரல் மார்க்ஸ் நமக்குப் போதிக்கிறார்.
13.நிலவுகின்ற அரசுப் பொறியமைவைத் தகர்த்துவிட்டு அதனிடத்தில் எதனை நிறுவவேண்டும் என்ற கேள்விக்கு “ஆளும் வர்க்கமாய்ப் பாட்டாளி வர்க்கம் ஒழுங்கமைய” வேண்டும் என்றும் “ஜனநாயகத்துக்கானப் போரில் வெற்றிபெற”வேண்டும் என்பதே மார்க்சின் போதனையாகும்.அதாவது உழைக்கும் வர்க்கமானது ஆளும் வர்க்கமாக தன்னை ஒழுங்கமைத்துக்கொள்ளும் நடவடிக்கை யில் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும்.மேலும்ஜனநாயகத்திற்கானப் போராட்டத் தில் உழைக்கும் வர்க்கம் வெற்றிபெற வேண்டும்.இந்த ஜனநாயகம் என்பதே பின்பு பாட்டாளிவர்க்க ஜனநாயகம் என்று தெளிவுபடுத்தப்பட்டது.
14.உழைக்கும் வர்க்கமானது ஆளும் வர்க்கமாகத் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான நடைமுறை என்பது பரந்துபட்ட மக்கள் திரளின் போராட்டத்தின் மூலமே சாத்தியம் என்றார் மார்க்ஸ்.ஆகவே பரந்துபட்ட மக்களின் தத்துவ,பொருளாதார,மற்றும் அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள கருத்தியல்ரீதியான போராட்டமும் நடைமுறைரீதியான போராட்டங்களிலும் மக்களை ஈடுபடுத்து வதன் மூலமே இதனை சாதிக்க முடியும்.
15.1848,1849ஆம் ஆண்டுகளின் புரட்சிக்குப் பின்பு அரசு அதிகாரமானது உழைப்புக்கு எதிராய் மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு ஆதரவாய் மிகப்பெரிய போர்க் கருவியாகவளர்ந்துவிட்டது என்றார் மார்க்ஸ்.மார்க்சின் காலத்திலேயே அரசுப் பொறியமைவு வளர்ந்துவிட்ட நிலையில் இன்றைய காலத்தில் இந்த அரசுப் பொறியமைவானது மிகப் பிரமாண்டமாக வளர்ந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.மேலும் இந்த அரசுப் பொறியமைவானது மிகக் கடுமையாகவும் வெளிப்படையாகவும் உழைக்கும் மக்களை அச்சுறுத்தி அடிமைப்படுத்தும் பிரமாண்டமான சாதனமாக முதலாளிகளின்கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
16.கம்யூனுடைய சாதனை என்னநிரந்தர சேனையை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாய் ஆயுதமேந்திய மக்களைத் தோற்றுவித்ததே அதன் சாதனை ஆகும்.அந்த வகையில்உழைக்கும் மக்களின் கடமையானது நிலவுகின்ற ஆயுதம் ஏந்திய நிரந்தர சேனையைகலைத்துவிட்டு உழைக்கும் மக்கள் அனைவருக்கும் ஆயுதம் ஏந்தும் உரிமை வழங்கிஅனைத்து மக்களையும் போர் வீரர்களாக மாற்றிட வேண்டும்.
17.உருவாக்கப்படும் மக்கள் படைக்கு அதாவது ஆயுதம் ஏந்தும் உரிமை படைத்த மக்கள்நாட்டின் தொழில் மற்றும் வேளாண் தொழில்களில் ஈடுபடுவதும் பொதுவாக நாட்டின்பொருளாதாரத்தை வளர்க்கும் பணியிலேயே ஈடுபடுவதும் அந்நியர்கள் நம்மை தாக்கவந்தால் நாட்டு மக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தி போராடினால் எந்த அந்நியர்களாலும்நமது நாட்டை அடிமைப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.ஆகவே குறிப்பிட்ட அரசுப்படையினருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள ஆயுதம் ஏந்தும் உரிமைக்குப் பதிலாக அனைத்து மக்களுக்கும் ஆயுதம் ஏந்தும் உரிமை வழங்கப்பட வேண்டும்.
18. மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாது அரசின் தீர்மானங்களை நிரைவேற்றும் அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப் படவும், திருப்பியழைக்கப்படவும் மக்களுக்கு உரிமையும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்.
19.மக்களின் பிரதிநிதிகள் பெரும்பாலும் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர் களாகவோ அல்லது விவசாயிகளாகவோ இருக்க வேண்டும்.
20. அரசின் திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரிகளுக்கு தனிச் சலுகைகள் கொடுக்கக்கூடாது. மேலும் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் தொழிலாளர் களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கக் கூடாது.
21.அரசின் கொள்கைகளை நடைமுறைப் படுத்தும்அதிகாரிகளுக்குள்ளதிறமைகளை யும்அறிவையும் தொழிலாளி வர்க்கம் முயற்சி செய்து கற்றுக்கொண்டு அந்த அதிகாரிகளுக்கு மாற்றாய் அந்தப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
22.அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளை உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து கண்காணித்து அவர்கள் தவறு செய்தால் உடனுக்குடன் தண்டிக்க வேண்டும்.அந்த வகையில் இந்த அதிகாரிகளை உழைக்கும் வர்க்கம் தனது கட்டுப்பாட்டுக் குள் வைத்திருக்க வேண்டும்.
23.உழைக்கும் வர்க்கமானது ஆட்சியைக் கைப்பற்றினாலும் முதலாளி வர்க்கம் இந்தஆட்சியை ஒழிப்பதற்கு முயற்சி செய்துகொண்டேதான் இருக்கும்.ஆகவே உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சியில் உழைக்கும் வர்க்கத்துக்கு சர்வாதிகாரம் தேவைப்படுகிறது.இந்த சர்வாதிகாரமானது முதலாளிகளுக்கும்மக்களின் எதிரிகளுக்கு எதிராகசெயல்படுத்தப்படும்சர்வாதிகாரமாக இருக்க வேண்டும்.அதே வேளையில் உழைக்கும்மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். .தேன்மொழி
No comments:
Post a Comment