இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு - லெனின். பகுதி – 4
ஜெர்மனியில் “இடதுசாரி” கம்யூனிசம் தலைவர்கள், கட்சி, வர்க்கம், வெகுஜனங்கள்.இப்பொழுது நாம் குறிப்பிடப் போகும் ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் தம்மை “இடதுசாரிகள்”என அழைத்துக் கொள்வதில்லை;இதற்குப் பதில்,எனக்குத் தெரிந்தவரை,”கோட்பாடு வழிப்பட்ட எதிர்ப்பாளர்கள்” என்பதாகத் தம்மை அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் “இடதுசாரிவாதத்தின் இளம் பருவக் கோளாறுக்குரிய” எல்லா அறிகுறிகளையும் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்என்பது பின்வருவதிலி ருந்து புலனாகும்.
ஜெர்மன் கம்யூனிஸ்டுக் கட்சியில் (ஸ்பார்த்தக்கஸ் கழகத்தில்) பிளவு என்ற தலைப்பில், இந்த எதிர்த்தரப்பாளர்களது கருத்தோட்டத்தை எடுத்துரைத்து “;மாயின் கரையிலுள்ள ஃபிராங்ஃபுர்ட்டின் உள்ளூர்க் குழு” வெளியிட்டிருக்கும் பிரசுரம்,இந்த எதிர்ப்பாளர்களுடைய கருத்துக்களை மிகவும் எடுப்பாகவும், தெட்டத்தெளி வாகவும், சுருக்கமாகவும் சித்திரம் போல் எடுத்துரைக்கிறது. இதன் சாரம்சத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய ஒரு சில மேற்கோள்கள் போதும். “கம்யூனிஸ்டு கட்சியானது மிகவும் வைராக்கியமான வர்க்கப் போராட்டத்தின் கட்சியாகும்…”
“....அரசியல் வழியில்,இந்த இடைக்காலக் கட்டமானது” (முதலாளித்துவத்துக்கும் சோசலிசத்துக்கும் இடைப்பட்டது) “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கட்டமாகும்.…””..... ஒரு கேள்வி எழுகிறது; இந்த சர்வாதிகாரத்தைச் செலுத்த வேண்டியது எது? கம்யூனிஸ்டு கட்சியா, அல்லது பாட்டாளி வர்க்கமா?...கோட்பாடு அடிப்படையில் நாம் பாடுபட வேண்டியது கம்யூனிஸ்டு கட்சியின் சர்வாதிகாரத்துக்கா, அல்லது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கா?....(அழுத்தங்கள் யாவும் மூலத்தில் இருப்பவை.) மேலும் இந்தப் பிரசுரத்தின் ஆசிரியர் ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் “மத்தியக் கமிட்டி” மீது குற்றம் சாட்ட முற்படுகிறார். அது ஜெர்மன் சுயேச்சை சமூக ஜனநாயகக் கட்சியுடன்கூட்டணி ஏற்படுத்துவதற்கான வழிகளைத் தேடுகிறது என்றும், சுயேச்சையாளர்களுடன்கூட்டணி நிறுவிக் கொள்வதற்கான மெய்யான, பிரதானமான தனது முயற்சிகளைமூடிமறைக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் நாடாளுமன்றவாதம் அடங்கலாய்ப் போராட்டத்துக்குரிய “எல்லா அரசியல் வழிகளையும் கோட்பாடு அடிப்படையில் ஏற்றுக் கொள்ளும் பிரச்சனையை” எழுப்புகிறது என்றும் இவ்வாசிரியர் அதன் மீது குற்றம் சாட்டுகிறார்.இந்தப் பிரசுரம் மேலும் கூறுவதாவது ”எதிர்ப்பாளர்கள் வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளனர்.கம்யூனிஸ்டு கட்சியின் ஆதிக்கத்தையும் கட்சியின் சர்வாதிகாரத் தையும் பற்றிய பிரச்சனை வெறும் போர்த்தந்திரப் பிரச்சனையே ஆகுமென்று அவர்கள் கருதுகிறார்கள்.எப்படியும்,கம்யூனிஸ்டு கட்சியின் ஆதிக்கம்தான் எவ்வகையான கட்சி ஆதிக்கத்திற்குமுரிய இறுதி வடிவமாகும். கோட்பாடு அடிப்படையில் நாம் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்காகப் பாடுபட வேண்டும்.ஆகவே,கட்சியின் எல்லா நடவடிக்கைகளும் அதன் நிறுவனங்களும்போராட்டமுறைகளும் ஆதார நெறியும் போர்த்தந்திரமும் இதனையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். எனவே, பிற கட்சிகளுடனான எல்லா வித சமரசத்தையும், வரலாற்று வழியிலும் அரசியல் வழியிலும் காலாவதியாகிவிட்ட நாடாளுமன்றப்போராட்ட வடிவங்களுக்குச் சரிந்து செல்லும் எவ்வகையான பின்னடைவையும்,வளைந்து கொடுப்பதற் கும் இணக்கத்துக்குமுரிய எந்தக் கொள்கையையும் தீர்மானமாய் நிராகரித்தே ஆக வேண்டும்” “பாட்டாளி வர்க்கத்துக்குரிய தனிவகையான புரட்சிகரப் போராட்ட முறைகளை வன்மையாக வலியுறுத்தவேண்டும்.கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையில்,புரட்சிகரப் போராட்டத்தில் மிகவும் பரவலான பாட்டாளி வர்க்க வட்டாரங்களும் பகுதிகளும் பங்கு கொள்ளும்படி அணி திரளும் பொருட்டு, புதிய நிறுவன வடிவங்களை மிக விரிவான அடிப்படையிலும் மிக விரிவான வீச்சிலும் தோற்றுவித்தாக வேண்டும்.ஆலை நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டதொழிலாளர் சங்கம் எல்லாப் புரட்சிகர சக்திகளையும் ஒன்றுதிரட்டும் மையமாக வேண்டும்.
“தொழிற்சங்கங்களிலிருந்து வெளியேறுங் கள்” என்னும் கோஷத்தைப் பின்பற்றும் எல்லாத் தொழிலாளர்களையும் இது ஐக்கியப்படுத்த வேண்டும்.போரிடும் பாட்டாளி வர்க்கம் இங்குதான் தனது விரிவான அணிகளைப் போருக்கு ஒன்றுதிரட்டுகிறது. வர்க்கப் போராட்டம், சோவியத் அமைப்பு, சர்வாதிகாரம் இவற்றை ஏற்றுக்கொள்வதே உறுப்பினராய்ச் சேர்க்கப்படுவதற்குப் போதுமானதாய் இருக்க வேண்டும். போராடும் வெகுஜனங்கள் மேற்கொண்டு அரசியல் கல்விஞானம் பெற்று, போராட்டத்தில் அரசியல் திசைவழி காண்பது தொழிலாளர் சங்கத்துக்கு வெளியிலுள்ள கம்யூனிஸ்டுக் கட்சிக்குரிய பணியாகும்.....… “..... இதன் விளைவாக, இப்பொழுது இரு கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிராக அணி வகுத்து நிற்கின்றன ” ஒன்று தலைவர்களுடைய கட்சி,இது புரட்சிப் போராட்டத்தை ஒழுங்கமைத்து மேலிருந்து அதனை நடத்திச் செல்வதில் முனைந்துள்ளது;சர்வாதிகாரம் செலுத்தும் கூட்டணி அரசாங்கத்தில் தான் சேர்ந்துகொள்வதற்கு வகை செய்யும் நிலைமைகளைத் தோற்றுவிக்கும்பொருட்டு,சமரசங்களையும் நாடாளுமன்றவாதத்தையும் ஏற்றுக் கொள்கிறது.”“மற்றொன்று வெகுஜனங் களுடைய கட்சி, இது அடியிலிருந்து புரட்சிப் போராட்டம் எழுச்சியுறுமென எதிர்பார்க்கிறது. இந்தப் போராட்டத்தில் அதற்கு தெரிந்ததும், அது அனுசரிப்பதும் ஒரேஒரு போராட்ட முறைதான் --- தெளிவாகக் குறிக்கோளுக்கு இட்டுச் செல்லும் போராட்ட முறைதான். நாடாளுமன்ற, சந்தர்ப்பவாத முறைகள் யாவற்றையும் அது நிராகரிக்கிறது. நிபந்தனையின்றி முதலாளித்துவ வர்க்கத்தை கவிழ்த்து,அதன் பின் சோசலிசத்தை அடைவதற்காகப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுவதென்ற ஒரேயொரு போராட்ட முறைதான் அது…” “.... அங்கே --- தலைவர்களது சர்வாதிகாரம்; இங வெகுஜனங்களது சர்வாதிகாரம்! இதுவே நமது கோஷம்”
ஜெர்மன் கம்யூனிஸ்டுக் கட்சியிலுள்ள எதிர்த்தரப்பின் கருத்துக்களது பிரதான கூறுகள் இவையே.
1903முதலாய் போல்ஷ்விசத்தின் வளர்ச்சியில் உணர்வு பூர்வமாய்ப் பங்குகொண்டுள்ள, அல்லது நெருங்கி நின்று அந்த வளர்ச்சியைக் கவனித்து வந்துள்ள எந்த போல்ஷ்விக்கும், இந்த வாதங்களைப் படித்ததும், “இது நாம் நன்கு அறிந்த அதே பழங் குப்பைதான்! அதே “இடதுசாரிச்” சிறுபிள்ளைத் தனம்தான்!” என்று உடனே கூறி விடுவார். எனினும், இந்த வாதங்களை இன்னும் சற்று நெருங்கிச் சென்று பரிசீலித்துப் பார்க்கலாம்.
“கட்சியின் சர்வாதிகாரமா,அல்லது வர்க்கத்தின்சர்வாதிகாரமாதலைவர்களின் சர்வாதிகாரமா (கட்சியா)அல்லது வெகுஜனங்களின் சர்வாதிகாரமா (கட்சியா)?”என்று இந்தக் கேள்வி எழுப்பப்படும் விதமே நம்பமுடியாத,படுமோசமான சிந்தனைக் குழப்பத்திற்குச் சான்றாகி விடுகிறது.ஏதோ மிகவும் நூதனமான ஒன்றை இவர்கள் கண்டுபிடித்துக் கூற விரும்பி, சாமர்த்தியசாலிகளாய் இருக்க முயற்சித்து,தம்மைக் கேலிக்கு உரியவர்களாக்கிக் கொள்கிறார்கள்.வெகுஜனங்கள் வர்க்கங்களாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்;பொதுவாக மிகப் பெருவாரியானோரை,சமுதாயப் பொருளுற்பத்தி அமைப்பில் வகிக்கும் நிலைக்கு ஏற்றவாறு அவர்கள் பிரிக்கப்பட்டிருப்பதை கருதாமலே,சமுதாயப் பொருளுற்பத்தி அமைப்பில் குறிப்பிட்ட நிலையினை வகிக்கும் வகையினங்களுடன் ஒப்பிட்டு வேறுபடுத்து வதன் மூலமே வெகுஜனங்களை வர்க்கங்களுடன் ஒப்பிட்டு வேறுபடுத்த முடியும்; பொதுவாகவும் மிகப் பெருவாரியான சந்தர்ப்பங்களிலும், எப்படியும் இன்றைய நாகரிக நாடுகளில்;வர்க்கங்கள் அரசியல் கட்சிகளால் தலைமை தாங்கப் பெற்று வழிகாட்டப்படுகின்றன;பொதுவாக அரசியல் கட்சிகள் பொறுப்பு மிக்கப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவர்கள் என்றழைக்கப்படும் அதிகாரமும் செல்வாக்கும் படைத்த, அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களாகிய ஓரளவு நிலையான குழுக்களால் நிர்வகிக்கப்படுகின்றன --- இவை எல்லோர்க்கும் தெரிந்தவையே.இவை யாவும் சர்வசாதாரணமானவை.இவையாவும் தெளிவானவை. எளிமையானவை.இவற்றை ஒதுக்கிவிட்டு,இவற்றுக்குப் பதிலாய் பொருளற்ற பேச்சை, வோலாபுக்* போன்ற புதிய செயற்கை மொழியைச் சிருஷ்டிப்பானேன்? ஒரு புறத்தில், கட்சியானது திடுதிப்பென்று சட்டப்பூர்வமான நிலையிலிருந்து சட்டவிரோதமான நிலைக்கு மாற்றப்பட்டு அதனால் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் வர்க்கங்களுக்குமுள்ள வழக்கமான, முறையான,எளிய உறவுகள் குலைக்கப்பட்டுவிட்ட சூழ்நிலைக்குத்தாம் வந்துவிட்டதைக் கண்டதும், இவர்கள் குழம்பி விட்டதாகத் தெரிகிறது.
---------------- *வோலாபுக் --- 1880-ல் யோகன் ஷிலேயாரால் தயாரிக்கப்பட்ட செயற்கை மொழி. -- (ப-ர்) ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஜெர்மனியிலும் சட்டப்பூர்வமான நிலைக்கு மக்கள்தம்மை மட்டுமீறி பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர்.முறைப்படி நடைபெறும் கட்சிக் காங்கிரசுகளில் ”தலைவர்கள்” தங்கு தடையின்றி ஒழுங்கான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும்,நாடாளுமன்றத் தேர்தல்கள்,பொதுக் கூட்டங்கள், பத்திரிக்கைகள்,தொழிற்சங்கங்கள் மூலமாகவும்,பிற நிறுவனங்கள் மூலமாகவும் வெளிப்படும் உணர்ச்சிகள் வாயிலாகக் கட்சிகளின் வர்க்க இயைபைச் சோதித்துப் பார்க்கும் வசதியான முறைக்கும்,இன்ன பிறவற்றுக்கும் மட்டுமீறி மக்கள் தம்மை பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர்.இவர்களது இந்த வழக்கமான செயல் முறைக்குப் பதிலாய், புரட்சிப் புயலின் வளர்ச்சி காரணமாகவும், உள்நாட்டுப் போரின் வளர்ச்சி காரணமாகவும் சட்டப்பூர்வமான நிலையிலிருந்து சட்டவிரோதமான நிலைக்கு விரைவாய் மாறிச் சென்று, இரண்டையும் ஒன்றிணைத்துக் கொண்டு, “தலைவர்களது குழுக்களைத்” தேர்வு செய்ய வேண்டிய அல்லது அமைக்க வேண்டிய அல்லது பாதுகாத்துக் கொள்ள வேண்டிய “வசதியற்ற” “ஜனநாயகமல்லாத” முறைகளைக் கையாள வேண்டி வந்ததும் --- இவர்கள் நிலை தடுமாறி, கலப்பற்ற அபத்தக் கற்பனையில் இறங்கத் தலைப்பட்டு விட்டனர். ஹாலந்துக் கம்யூனிஸ்டுக்கட்சியின் சில உறுப்பினர்கள் மிகுந்த சலுகைக்கும் மிகவும் நிலையான சட்டப்பூர்வ அந்தஸ்துக்குமுரிய மரபு களையும் நிலைமைகளையும் கொண்ட ஒரு சிறு நாட்டில் பிறக்க வேண்டிய துரதிருஷ்டத்துக்கு உள்ளாகி,சட்டப்பூர்வ நிலையிலிருந்து சட்டவிரோத நிலைக்கான மாற்றத்தை என்றும் காணாதவர்களாய் இருந்துவிட்டதால், குழப்பத்துக்கு இரையாகி, சித்தப் பிரமை அடைந்து இந்த அபத்தக் கண்டுபிடிப்புகளைத் தோற்றுவிக்க உதவியதாகத் தெரிகிறது. மறுபுறத்தில் தற்போது “நவநாகரிக” வழக்குக்குரிய சொற்களாகிவிட்ட “வெகுஜனங்கள்” “தலைவர்கள்” ஆகிய இரண்டும் சிந்தனையின்றியும் தாறுமாறாகவும் கையாளப்படுவதையே காண்கிறோம். “தலைவர்கள்” மீது தொடுக்கப்படும் மிகப் பல தாக்குதல்களிலும் தலைவர்கள் “வெகுஜனங்களுக்கு” எதிராக வைத்துப் பேசப்படுவதை இவர்கள் கேட்டு மனப்பாடம் செய்து கொண்டு விட்டனர். ஆனால் இவ்விவகாரங்கள் குறித்துச் சிந்தனை செய்யவும், இவற்றின் பொருளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் தாம் திறனற்றவர்கள் என்பதை நிருபித்துக் கொண்டு விட்டனர்.
“தலைவர்களுக்கும்”வெகுஜனங்களுக்கு”இடையிலான வேற்றுமை ஏகாதிபத்தியப் போரின்முடிவிலும்,அதற்குப் பிற்பாடும் எல்லா நாடுகளிலும் குறிப்பிடத்தக்க தெளிவுடனும் கூர்மையுடனும் வெளிப்பட்டது. இதற்குரிய தலைமையான காரணத்தை மார்க்சும் எங்கெல்சும் 1852 க்கும் 1892 க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் பிரிட்டனின் உதாரணத்தைக் கொண்டு பன்முறை விளக்கிக் கூறினர். இன் நாட்டின் ஏகபோக நிலை காரணமாய், “வெகுஜனங்களிலிருந்து” அரைவாசிக் குட்டிமுதலாளித்துவ,சந்தர்ப்பவாதத் “தொழிலாளர்பிரபுகுலத்தார்” பிரிவு ஒன்று தோன்றலாயிற்று, இந்தத் தொழிலாளர் பிரபுகுலத்தாரின் தலைவர்கள், முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கத்துக்கு ஓடி,நிலையாக அதனுடன் ஒட்டிக் கொண்டு நேரடியாகவோ, மறைமுகமா கவோ அதனிடம் கூலி பெற்று அதற்குச் சேவகம்புரிந்தனர். இந்தக் கழிசடைப் பிறவிகளுக்குப் பகிரங்கமாய் துரோகி களென நாமம் சூட்டி இவர்களுடைய வெறுப்புக்குப் பாத்திரமாகும் சிறப்பை மார்க்ஸ் பெற்றுக் கொண்டார். நவீன (இருபதாம் நூற்றாண்டின்)ஏகாதிபத்தியம் வளர்ச்சி பெற்ற ஒரு சில நாடுகளுக்குத் தனிச்சலுகைக்குரிய விசேஷ நிலையை அளித்துள்ளது.இதனால் இரண்டாவது அகிலத்தினுள் எல்லா இடங்களிலும் துரோகத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் சமூக தேசியவெறிக்கும் பெயர்பெற்ற தலைவர்களது ஒரு ரகம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.இவர்கள்,தமது குலத்தொழிலின் நலன்களுக்காகவும், தொழிலாளர் பிரபுகுலத்தாரில் தமது சொந்தப் பிரிவின்நலன்களுக்காகவும் பாடுபடுகிறவர்கள். சந்தர்ப்பவாதக் கட்சிகள் “வெகுஜனங்களிடமிருந்து”அதாவது உழைப்பாளி மக்களின் மிகவும் விரிவான பகுதிகளிடமிருந்து, உழைப்பாளி மக்களின் பெரும்பான்மையோரிடமிருந்து, மிகக் குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டன. இந்தச் சீர்கேட்டை எதிர்த்துப் போராடினாலொழிய,சந்தர்ப்பவாத சமூக துரோகத் தலைவர்களை அம்பலப்படுத்தி, இழிவுபடுத்தி வெளியேற்றினாலொழிய,புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் வெற்றி பெற முடியாது.இந்தக் கொள்கையைத்தான் மூன்றாவது அகிலம் மேற்க்கொண்டிருக் கிறது. இது சம்பந்தமாய், பொத்தாம் பொதுவில் வெகுஜனங்களது சர்வாதிகாரமா, தலைவர்களது சர்வாதிகாரமா என்று இவற்றை ஒன்றுக் ஒன்று எதிராய் வைக்கும் அளவுக்குச் செல்வதானது நகைக்கத் தக்க அபத்தமும் மடமையுமே ஆகும். இதில் மிகப் பெரும் வேடிக்கை என்னவெனில், எளிய பிரச்சனைகள் குறித்துப் பொதுவாக ஏற்கப்பட்டுள்ள கருத்துக்களைக் கொண்ட தலைவர்களுக்குப் பதிலாய், அர்த்தமற்ற சுத்த அபத்தம் பேசும் புதிய தலைவர்கள் “தலைவர்கள்ஒழிக”(என்னும் முழக்கத்தால் மூடி மறைக்கப்பட்டு) நடைமுறையில் முன்னுக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். ஜெர்மனியில் லௌபென்பெர்கும், வொல்ப்ஹெயிமும், ஹோர்னெரும், கார்ல் ஷ்ரேடரும், பிரெடெரிக் வெண்டெலும், கார்ல் எர்லெரும்* இத்தகையவர்கள்தான். இப்பிரச்சனையில் “ஆழ்ந்த புலமை” வெளிப்படுத்திப் பொதுவாகவே அரசியல் கட்சிகள் தேவையற்றவை, “முதலாளித்துவத் தன்மை வாய்ந்தவை” என்பதாக முடிவுகட்டுவதற்கு எர்லெர் மேற்கொள்ளும் முயற்சிகள் அடிமுட்டாள் தனமாயிருப்பதால்,எள்ளி நகையாடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. சிறு பிழையானாலும் தொடர்ந்து அனுசரிக்கப்படுமானால், அதற்கு நியாயம் கற்பிப்பதற்காக ஆழ்ந்த வாதங்களைத் தேடிப்பிடிக்க முயற்சி செய்யப்படுமானால், தர்க்க வழியிலான அதன் “இறுதி நிலைக்கு” அது எடுத்துச் செல்லப்படுமானால், பூதாகாரஅளவுக்கு அது பெரிதாகிவிடும் என்ற உண்மையையே இவையாவும் வலியுறுத்துகின்றன.
---------------------
* கார்ல் எர்லெர், கட்சியின் கலைப்பு, “கம்யூனிஸ்டுத் தொழிலாளர் பத்திரிக்கை”ஹாம்பர்க், 1920, பிப்ரவரி 7, இதழ் 32: “முதலாளித்துவ ஜனநாயகத்தை அழிக்காமல், தொழிலாளி வர்க்கத்தால் முதலாளித்துவ அரசை அழித்துவிட முடியாது: கட்சிகளை அழிக்காமல், அதனால் முதலாளித்துவ ஜனநாயகத்தை அழித்துவிட முடியாது.” தம்மை மார்க்சியவாதிகளாகக் கூறிக் கொள்ளும் நிதானமான ஜெர்மனியர்களுக்கும் (மேற்கூரிய பத்திரிக்கையில் கா.எர்லெரும் கா.ஹோர்னெரும் தமது கட்டுரைகளின் மூலம், தம்மை நிதானமான மார்க்சியவாதிகளாகவே கருதிக் கொள்கிறார்கள் என்பதையும், ஆனால் தாம் குறிப்பாயும் நகைக்கத்தக்க அபத்தமே பேசுகிறவர்கள், மார்க்சியத்தின் அரிச்சுவடி யைக்கூடப் புரிந்து கொள்ளாதவர்கள் என்பதையும் பட்டவர்த்தனமாய்க் காட்டிக் கொண்டு விடுகிறார்கள்), முற்றிலும் மடத்தனமான முடிவுகளை எடுத்துரைக்கும் அளவுக்குச் செல்வது குறித்து லத்தீன் நாடுகளைச் சேர்ந்த சிண்டிக்கலிஸ்டு களிலும் அராஜகவாதிகளிலும் அதிகப்படியாய்ச் சிந்தனைக் குழப்ப முற்றோர் “மனநிறைவு” கொள்ளலாம். மார்க்சியத்தை ஏற்றுக் கொள்வதால் மட்டும் தவறுகளிலிருந்து தப்பிவிட முடியாது. ரஷ்யர்களாகிய நாங்கள் இதனை மிக நன்றாய் அறிவோம், ஏனெனில் பல சந்தர்ப்பங்களில் எங்கள் நாட்டில் மார்க்சியம் “மோஸ்தராய்” இருந்துள்ளது
--------------------------
கட்சிக் கோட்பாட்டையும் கட்சிக் கட்டுப்பாட்டையும் நிராகரித்தல் --- எதிர்தரப்பார்வந்தடைந்துள்ள நிலையாகும்.முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக் காகப் பாட்டாளி வர்க்கத்தை முற்றிலும் நிராயுதபாணியாக்குவதற்கே இது ஒப்பானது.இவை எல்லாம் சேர்ந்துதான் அந்தக் குட்டிமுதலாளித்துவச் சிதறலும் நிலையின்மையும்,விடாமுயற்சி, ஒற்றுமை,ஒழுங்கமைந்த செயல் ஆகிய இவற்றுக்கான திராணியின்மையும்,இவ்வியல்புகள் ஊக்குவிக்கப்பட்டால்,தவிர்க்க முடியாத வகையில் இவை எந்தப் பாட்டாளி வர்க்கப் புரட்சி இயக்கத்தையும் அழித்தே தீரும். கட்சிக் கோட்பாட்டை நிராகரிப்பதானது, கம்யூனிசத்தின் கண்ணோட்டத்தில், முதலாளித்துவத்தின் வீழ்ச்சியின் தறுவாயிலிருந்து (ஜெர்மனியில்) கம்யூனிசத்தின் கீழ்க் கட்டத்துக்கோ இடைநிலைக் கட்டத்துக்கோ அல்ல, நேரே உயர் கட்டத்துக்கே பாய்வதற்கான முயற்சியைத்தான் குறிக்கிறது. ரஷ்யாவிலுள்ள நாங்கள் (முதலாளித்துவ வர்க்கத்தைக் கவிழ்த்ததற்கு பிற்பாடான இந்த மூன்றாம் ஆண்டில்) முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கு, அதாவது கம்யூனிசத்தின் கீழ்நிலைக் கட்டத்துக்கு, மாறிச் செல்வதற்கான துவக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். வர்க்கங்கள் இன்னமும் இருந்து வருகின்றன; பாட்டாளி வர்க்கம் ஆட்சியதி காரம் வென்று கொண்ட பிற்பாடும் பல ஆண்டுகளுக்கு எங்கும் இருக்கவே செய்யும். விவசாயிகள் இல்லாத (ஆனால் சிறு உடமையாளர் இருந்து வரும்) பிரிட்டனில் வேண்டுமானால் ஒருவேளை இந்தக் காலம் குறுகியதாய் இருக்கலாம். வர்க்கங்களை ஒழிப்பதென்பதன் பொருள் நிலப்பிரபுக்களையும் முதலாளிகளையும் அகற்றுவதென்பது மட்டுமல்ல -- இதனை நாங்கள் ஒப்பளவில் சுலபமாய் செய்துவிட்டோம்; சிறுவீதப் பண்ட உற்பத்தியாளர்களை ஒழித்திடுவதென்பதும் இதன் பொருளாகும். இவர்களை அகற்றிவிட முடியாது, நசுக்கிவிடவும் முடியாது; நாம் இவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும். நீடித்த, மெதுவான, எச்சரிக்கையான ஒழுங்கமைப்புப் பணியின் மூலமாக மட்டுமே இவர்களை மாற்றவும், போதனை அளித்துத் திருத்தவும் முடியும் (அவ்வாறே செய்யவும் வேண்டும்). பாட்டாளி வர்க்கத்தை இவர்கள் எல்லாப் பக்கங்களிலும் குட்டிமுதலாளித்துவச் சூழ்நிலையால் சுற்றி வளைத்துள்ளனர்.இச்சூழ்நிலை பாட்டாளி வர்க்கத்தினுள் குட்டிமுதலாளித்துவ உறுதியின்மையையும், ஒற்றுமையின்மையையும், தனிநபர் மனப்பான்மையையும், மாறிமாறி மனவெழுச்சியையும் மனச்சோர்வையும் ஓயாது மீண்டும் மீண்டும் தலை தூக்கச் செய்கிறது. இதனை எதிர்த்துச் சமாளிக்கும் பொருட்டு, பாட்டாளி வர்க்கத்தின் ஒழுங்கமைப்புப் பாத்திரம் (அதுவே அதன் தலைமையான பாத்திரம்) பிழையின்றியும் பயனுள்ள முறையிலும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றப்படும் பொருட்டு, பாட்டாளி வர்க்க அரசியல் கட்சியினுள் மிகவும் கண்டிப்பான மத்தியத்துவமும் கட்டுப்பாடும் அவசியமாகும்.பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்றால் பழைய சமுதாயத்தின்சக்திகளுக்கும் மரபுகளுக்கும் எதிரான இடையறாத போராட்டம் என்று அர்த்தம், இரத்தக் களறியானதும் இரத்தமற்றதுமான, வன்முறையானதும் அமைதியானதுமான, ராணுவவழிப்பட்டதும் பொருளாதார வழிப்பட்டதுமான, போதனைத் துறையிலானதும் நிர்வாகத்துறையிலானதுமான போராட்டம் என்று அர்த்தம். லட்சபோப லட்சக் கணக்கானோரிடையிலும்,கோடானு கோடியானோர் இடையிலும் நிலவும் பழக்கத்தின் சக்தி அபாரமானதொரு சக்தியாகும்.போராட்டத்தில் புடம் போடப்பட்டு உருக்கு உறுதி கொண்ட ஒரு கட்சி இல்லையேல்,குறிப்பிட்ட அந்த வர்க்கத்திலுள்ள நேர்மையானோர் அனைவரின்நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு கட்சி இல்லையேல்,வெகுஜனங்களது மனப்பாங்கைக்கவனித்து வருவதற்கும் வயப்படுத்துவதற்குமான திறன் கொண்ட ஒரு கட்சி இல்லையேல்,இத்தகைய ஒரு போராட்டத்தை வெற்றிகரமாய் நடத்த முடியாது.கோடானு கோடியாகவுள்ள சிறு உடமையாளர்களைத் “தோற்கடிப்பதை” விட மத்தியத்துவமடைந்த பெரு முதலாளிகளைத் தோற்கடிப்பது ஆயிரம் மடங்கு சுலபமானது. இந்தச் சிறு உடமையாளர்கள் தமது சாதாரணமான, அன்றாட, கண்ணுக்குப் புலப்படாத,பிடிகொடுக்காத,சீர்கேடு உண்டாக்கும் நடவடிக்கைகள் மூலம் முதலாளித்துவ வர்க்கத்துக்குத் தேவையான அதே பலன்களைத்தான்,முதலாளித்துவ வர்க்கத்தைப் புத்துயிர் பெற்றெழச் செய்யும் அதே பலன்களைத்தான் உண்டாக்குகிறார்கள். பாட்டாளி வர்க்கக் கட்சியின் உருக்குக் கட்டுப்பாட்டை (முக்கியமாய் அதன் சர்வாதிகாரத்தின் போது) இம்மியளவு பலவீனமாக்குகிற வருங்கூட, பாட்டாளி வர்க்கத்துக்கு விரோதமாய் முதலாளித்துவ வர்க்கத்துக்கு உதவுகிறவரே ஆவார்.
தலைவர்கள் --- கட்சி -- வர்க்கம் --- வெகுஜனங்கள் பற்றிய பிரச்சனைக்கு இணைவாகவே”பிற்போக்குத்” தொழிற் சங்கங்கள் பற்றியபிரச்சனையையும் நாம் எழுப்பியாக வேண்டும்.ஆனால் முதலில்,எங்கள் கட்சியினுடைய அனுபவத்தின் அடிப்படையில் சில முடிவுகளைக் கூற விரும்புகிறேன்.நமது கட்சியில் “தலைவர்களதுசர்வாதிகாரம்” குறித்து தாக்குதல்கள் எப்பொழுதுமே நடத்தப்பட்டு வந்துள்ளன.இத்தகைய தாக்குதல்களைப் பற்றி 1895-ல் நான் முதன் முதலாய்க் கேட்டது நினைவுக்கு வருகிறது.
அப்பொழுது அதிகாரப்பூர்வமாய் கட்சி எதுவும் இருக்கவில்லை. ஆனால் செயின்ட்பீட்டர்ஸ்கர்கில் வட்டாரக் குழுக்களுக்குத் தலைமை ஏற்பதற்குரிய ஒரு மையக் குழு உருவாகத் தொடங்கியது19எங்களுடைய கட்சியின் ஒன்பதாவது காங்கிரசில் (ஏப்ரல் 1920)இருந்த ஒரு சிறு எதிர்தரப்பும் இதேபோல “தலைவர்களின் சர்வாதிகாரம்” “சிலராட்சி” என்றெல்லாம் குறிப்பிட்டு எதிர்த்துப் பேசிற்று,20ஆகவே ஜெர்மானியர்களிடை யிலான “இடதுசாரிகம்யூனிசம்” என்னும் இந்த “இளம் பருவக் கோளாற்றில்” வியப்புக்குரியதோ,புதியதோ, பயங்கரமான தோ எதுவும் இல்லை. இந்த வியாதி ஆபத்தானதல்ல; இது வந்துசென்றதும் உடலமைப்பு முன்னிலும் அதிக வலுவானதாகி விடுகிறது. மறுபுறத்தில், எங்களுடைய விவகாரத்தில், தலைமையகத்தையே -- தலைவர்களையே -- “மூடிமறைத்துப்” பரம இரகசியமாய் வைத்துக் கொள்வது அவசியமாகி விடும்படி சட்டப்பூர்வமான வேலைகளும் சட்டவிரோதமான வேலைகளும் வேகமாய் மாறிமாறி வந்ததால், சிலநேரங்களில் மிகவும் அபாயகரமான விளைவுகள் ஏற்பட்டன.இவ்விளைவுகளில் மிகவும்மோசமானது1912ல் போலீஸ் கையாள் மலினோவ்ஸ்கி போல்ஷ்விக்கு களின் மத்தியகமிட்டியில் புகுந்து கொண்டதுதான்.மிகச் சிறந்த,பற்றுறுதி மிக்க எத்தனையோ பலதோழர்களைக் காட்டிக் கொடுத்தது,அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை கிடைக்கச் செய்து, பலரும் விரைவிலேயே மரணமடைய அவன் காரணமாயிருந்தான்.இன்னும் அவன் அதிக அளவில் தீங்கிழைக்க முடியாமற்போயிற்று என்றால்,சட்டப் பூர்வமான வேலைகளுக்கும் சட்டவிரோத வேலைகளுக்கும் இடையில் இருந்த சரியான இணைவுதான் அதற்குக் காரணம்.கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்ற முறையிலும்,டூமா பிரதிநிதி என்ற முறையிலும் மலினோவ்ஸ்கி எங்கள் நம்பிக்கைக்கு உரியவனாகும் பொருட்டு,சட்டப்பூர்வமான தினசரிப்பத்திரிக்கைகளை நிறுவ எங்களுக்கு உதவும்படி நிர்பந்திக்கப்பட்டான்.ஜாரிச ஆட்சியிலுங்கூட,இந்தப் பத்திரிக்கை களால்மென்ஷ்விக்குகளின் சந்தர்ப்பவாதத் தை எதிர்த்துப் போராட்டம் நடத்தவும்,தக்கபடி மறைத்து போல்ஷ்விசத்தின் அடிப்படைக்கூறுகளைப் பரப்பவும் முடிந்தது.மலினோவ்ஸ்கி ஒருபுறம் மிகச் சிறந்த போல்ஷ்விக்குகள் பலரையும் கடுங்காவல் தண்டனைக்கும் மரணத்துக்கும் உள்ளாக்கிய அதே நேரத்தில்,மறுபுறம் பத்தாயிரக்கணக்கான புதிய போல்ஷ்விக்குகள் சட்டப்பூர்வமான பத்திரிக்கையின் வாயிலாய் அரசியல் போதம் பெறத் துணைபுரிய வேண்டியதாயிற்று.பிற்போக்கான தொழிற்சங்கங்களில் புரட்சிகர வேலைகளை நடத்திச் செல்வதற்குக் கற்றுக் கொள்வது சம்பந்தமான பணிகளை எதிர்நோக்கும் ஜெர்மன் (அதே போல பிரிட்டீஷ், அமெரிக்க, பிரெஞ்சு, இத்தாலிய) தோழர்கள் இவ்வுண்மை குறித்து ஆழ்ந்த ஆலோசனை செய்வது நல்லது.*
மிகவும் முன்னேறிய நாடுகள் அடங்கலாய்ப் பல நாடுகளில்,முதலாளித்துவ வர்க்கம்,கம்யூனிஸ்டு கட்சிகளுக்குள் தனது உளவாளிகளை அனுப்பி வருகிறது என்பதில் ஐயமில்லை.
இனியும் அது அவ்வாறே அனுப்பிவரும்.இந்த அபாயத்தை எதிர்த்துப் போராடுவதற்கானமுறைகளில் ஒன்று,சட்டவிரோதமான பணிகளையும்,சட்டப்பூர் வமான பணிகளையும் சாமர்த்தியமாய் இணைத்துச் செல்வதாகும்.
-----------------------
* மலினோவ்ஸ்கி ஜெர்மனியில் போர்க் கைதியாக இருந்தான். போல்ஷ்விக்குகள்
ஆட்சியதிகாரத்தில் இருக்கையில் ரஷ்யாவுக்குத் திரும்பிய உடனே, அவன் நீதி விசாரணை செய்யப்பட்டு எங்களது தொழிலாளர்களால் சுட்டுக் கொல்லப் பட்டான். நமது தவறுக்காக - அதாவது,போலீஸ் கையாள் ஒருவன் நமது கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினனாகி விட்டதற்காக -- மென்ஷ்விக்குகள் நம்மை மிகக் கடுமையாகத் தாக்கினார்கள். ஆனால் கெரென்ஸ்கியின் கீழ்,டூமாவின் தலைவர் ரத்ஸியான்கோவுக்கு மலினோவ்ஸ்கி ஒரு போலீஸ் கையாள் என்பது போருக்கு முன்பே தெரிந்திருந்தும் டூமாவில் துருதொவிக்குகளுக்கோ21 தொழிலாளர்களுக்கோ அவர் தகவல் தெரிவிக்காமல் இருந்ததால், அவரைக் கைது செய்து நீதி விசாரணை செய்ய வேண்டுமென நாங்கள் கோரியபோது, கொரென்ஸ்கி அரசாங்கத்திலிருந்த மென்ஷ்விக்குகளோ சோசலிஸ்டு - புரட்சியாளர்களோ எங்கள் கோரிக்கையை ஆதரிக்கவில்லை. ரத்ஸியான்கோ சுதந்திரமாகத்தான் இருந்து வந்தார். சுதந்திரமாய் ஓடிச் சென்று தெனீக்கினுடன் அவர் சேர்ந்து கொண்டார்.
-------------------------
குறிப்புகள் குறிப்பு 17. கோட்பாடு வழிப்பட்ட எதிர்த்தரப்பாளர்கள் என்பது அராஜக - சிண்டிகல்வாதக் கருத்துக்களை ஆதரித்த ஜெர்மன் “இடது” கம்யூனிஸ்டுகளின் ஒரு பிரிவு ஆகும். 1919ல் ஹெய்டல்பர்க்கில் நடைபெற்ற ஜெர்மன் கம்யூனிஸ்டுக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் இந்த எதிர்பணி உறுப்பினர்களை வெளியேற்றி யது. இவர்கள் ஜெர்மனியின் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி என்பதாக ஒன்றை 1920 ஏப்ரலில் நிறுவினர்.ஜெர்மனியின் கம்யூனிஸ்டுசக்திகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்படுவதை எளிதாக்கவும்,ஜெர்மன் தொழிலாளர்கம்யூனிஸ்டுக் கட்சியின் அருமையான பாட்டாளி வர்க்க சக்திகளின் நலன்களை நிறைவுசெய்யவும் வேண்டி இந்த எதிர்ப்பணி நபர்கள் அனுதாப உறுப்பினர் என்ற உரிமையுடன்1920 நவம்பரில் கம்யூனிஸ்டு அகிலத்தில் தற்காலிகமாக சேர அனுமதிக்கப்பட்டார்கள்.
எனினும் கம்யூனிஸ்டு அகிலத்தின் நிர்வாக கமிட்டி ஜெர்மன் ஒற்றுமை (யுனைட்டட்)கம்யூனிஸ்டுக் கட்சியே கம்யூனிஸ்டு அகிலத்தின் அதிகாரப்பூர்வமான பிரிவு என்று கருதியது. ஒற்றுமை கம்யூனிஸ்டு கட்சியில் ஒன்றிணைந்துவிட வேண்டும், அதன் செயல்கள்அனைத்தையும் ஆதரிக்க வேண்டும். என்ற நிபந்தனையின் பேரில் ஜெ.தொ.க.க. பிரதிநிதிகள்அகிலத்தினுள் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் ஜெ.தொ.க.க. தலைவர்கள் இந்த நிபந்தனைகளைக் கடைபிடிக்கத் தவறிவிட்டனர். கம்யூனிஸ்டு அகிலத்தின் மூன்றாவது காங்கிரஸ் (1921 ல் ஜூன் - ஜூலை) இன்னும் ஜெ.தொ.க.க. தலைவர்களைப் பின்பற்றி வந்த தொழிலாளர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் நோக்கத்துடன் ஒரு காங்கிரசை கூட்டி இணைப்புப்பற்றிய பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு வேண்டி அக்கட்சிக்கு இரண்டு மாத கால அவகாசம்அளித்தது. மூன்றாவது காங்கிரசின் தீர்மானத்தை ஜெ.தொ.க.க. தலைவர்கள் ஏற்கவில்லை.
இதன் மூலம் அவர்கள் தம்மைத் தாமே கம்யூனிஸ்டு அகிலத்திலிருந்து வெளியில் இருத்திக் கொண்டார்கள். பின்னால் இந்தக் கட்சி ஒரு சிறிய செக்டேரியன் குழுவாகி தொழிலாளி வர்க்க ஆதரவை இழந்துசிதைவுற்றது. குறிப்பு 18, Kammunistische Ambeiter - zeitung “கம்யூனிஸ்ட் தொழிலாளர் பத்திரிக்கை “-- ஜெர்மன் “இடது” கம்யூனிஸ்டுகளின் அராஜகவாத - சிண்டிகல்வாத ஏடு. 1919 முதல் 1927வரை ஹாம்பர்க்கில் வெளியிடப்பட்டது.
லெனின் குறிப்பிடும் கார்ல் எர்லெர், ஹென்ரிஹ் லௌபென்பர்க்கின் புனைப்பெயராகும். குறிப்பு 19. இங்கு குறிப்பிடப்படுவது 1895 முன்பனிக் காலத்தில் லெனினால் ஒழுங்கமைக் கப்பட்ட தொழிலாளி வர்க்க விடுதலைப் போராட்ட கழகம் ஆகும்.செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த சுமார் இருபது மார்க்சிய வட்டங்களை இணைத்த இந்த சங்கத்துக்குத் தலைமை தாங்கிய மத்தியக் குழுவில் வி.இ.லெனின், அ.அ.வனேயெவ், பி.க.ஜபரோஷெத்ஸ்,கி.ம.கிரிழிழனோவ்ஸ்கி, ந.க.குரூப்ஸ்கயா, எல்.மார்த்தவ், மி.அ.சில்வின், வி.வி.ஸ்தார்கவ் ஆகியோர் இருந்தார்கள். லெனின் தலைமையில் இருந்த ஐந்து உறுப்பினர்கள் இந்தச் சங்கத்தின் செயல்களை நெறியாண்மை செய்தார்கள். இந்த அமைப்பு மாவட்டக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முற்போக்கான அதிக வர்க்க உணர்வுடைய தொழிலாளர்கள் (இ.வ.பாபுஷ்கின், வ.அ.ஷெல்குனோவ் மற்றும் பிறர்) இந்தக் குழுக்களை ஆலைகளுடன் இணைத்தார்கள்.
“தொழிலாளி வர்க்க விடுதலைச் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போராட்டக் கழகம்”லெனின் சொற்களில் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அடிப்படையில் பாட்டாளி களின் வர்க்கப் போராட்டத்துக்குத் தலைமைதாங்கும் ஒரு புரட்சிகர கட்சியின் கருவாக விளங்கியது. குறிப்பு 20, இங்கு குறிப்பிடப்படுவது கட்சி எதிர்ப்பு “ஜனநாயக மத்தியத்துவ” பிரிவு ஆகும். ர.க.க.(போ.) இன் ஒன்பதாவது காங்கிரசில் இந்த “ஜ.ம.பிரிவு”பொருளாதார கட்டமைப்பு பிரச்சனைகள் மற்றும்நிறுவன ஒழுங்கமைப்புப் பிரச்சனைகள் மீது தமது தனி அறிக்கைகளைச் செய்தனர். ஜனநாயக மத்தியத்துவம் எனும் தொடரின் திரைமறைவில் உள்ளபடியே இந்தக் கோட்பாட்டைத் தவறாக வியாக்யானம் செய்த இவர்கள் உற்பத்தித் துறையில் ஒரு மனித நிர்வாகப் பொறுப்பு அவசியம் என்பதை நிராகரித்தனர். கறாரான கட்சி மற்றும் அரசுக் கட்டுப்பாட்டை எதிர்த்தனர்; சோவியத்துகளிலும் தொழிற்சங்கங் களிலுமான கட்சியின் தலைமைப் பாத்திரத்தை மறுத்தனர்; கோஷ்டிகள், பிரிவுகளின் சுதந்திரத்தைக்கோரினர். 1923 ல் இந்தப் பிரிவினர் தகர்ந்து போயினர். இதன் தலைவர்கள்டிராட்ஸ்கியவாதிகளின் எதிர்ப்பணியில் சேர்ந்தனர்.
குறிப்பு 21, துருதொவிக்குகள் (“உழைப்பாளர் கோஷ்டி”) -- அரசாங்க டூமாக்களில் இருந்தவிவசாயிகள் மற்றும் நரோத்தினிக் மனப்பான்மையுடைய அறிவுஜீவிகளைக் கொண்ட குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளின் பிரிவு.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை.
1. இன்றைய நவீன உலகில் ஏகாதிபத்தியங்கள் தோன்றி அதன் ஆதிக்கம் நிலவுகின்ற போது,தொழிலாளி வர்க்கங்களில் சிலர் சலுகைபெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், அந்ததொழிலாளி வர்க்கப் பிரிவினர் அரைவாசிக் குட்டிமுதலாளித்துவ வாதிகளாகவும், சந்தர்ப்பவாத தொழிலாளர் பிரபு குலத்தோராகவும் மாறியதன் காரணமாக, இந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தைப் பிரதிநித்துவப் படுத்தும் தலைவர்கள் தொழிலாளர் வர்க்க அமைப்புகளில் தலைவர்களாக தோன்றி வலம் வந்தார்கள்.
2. இத்தகைய சந்தர்ப்பவாதத் தலைவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கத்திற்கு ஓடிச் சென்றார்கள். இவர்கள் முதலாளி வர்க்கத்தோடு ஒட்டிக்கொண்டு நேரடியாகவோ மறைமுகமாகவோ முதலாளிகளிடம் கூலி பெற்றுக்கொண்டு,தொழிலாளர்களின் அமைப்பின் தலைவர்களாக இருந்துகொண்டே முதலாளி வர்க்கத்திற்கு,சேவைசெய்யும் கருங்காலிகளாக மாறினார்கள்.இரண்டாம் அகிலத்தின் தலைவர்களான காவுத்ஸ்கி போன்ற தலைவர்கள் இவ்வகையான தலைவர்கள் ஆவார்கள்.
3. தற்போதும் தன்னை கம்யூனிஸ்டு என்றும்,தொழிலாளர்களுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொண்டு ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களிடம் நிதி உதவி பெற்றுக்கொண்டே இங்கு நடைபெறும் வர்க்கப் போராட்டத்திற்குத் துரோகம் செய்துகொண்டு கருங்காலி களாக செயல்படும் தலைவர்களை இங்கு பார்க்கிறோம். அவர்களை அடையாளம் காண்பது எப்படி?
4. இத்தகைய கருங்காலித் தலைவர்களை மார்க்ஸ் அம்பலப்படுத்தியதால் இந்த கருங்காலித் தலைவர்களின் வெறுப்புக்கு மார்க்ஸ் ஆளானார்.இருந்த போதும் மார்க்ஸ் அதுபற்றி கவலைப்படாமல் குட்டிமுதலாளித்துவ சந்தர்ப்பவாத தொழிலாளர் வர்க்கப் பிரபு குலத்தோரை தொடர்ந்து மார்க்ஸ் அம்பலப்படுத்தி வந்தார்.ஆகவே மார்க்சைப் போலவே நாமும் இங்குள்ள சந்தர்ப்பவாத தலைவர்களின் மார்க்சிய விரோத மற்றும் மக்களுக்கு எதிரான கொள்கைகளை நயவஞ்சகமாகப் பிரச்சாரம் செய்து உழைக்கும் மக்களை ஏமாற்றுபவர்களை தொடர்ந்து மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.
5. தற்காலத்தில் தொழிலாளர் வர்க்க அமைப்பிற்குள்இருந்துகொண்டு தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்துவரும் குட்டிமுதலாளித்துவ சந்தர்ப்பவாதத் தலைவர்களையும் அவர்களிடமுள்ள மக்களுக்கு எதிரான மார்க்சிய விரோத கருத்துக்களை மக்களிடம் அம்பலப்படுத்தி அவர்களை தொழிலாளி வர்க்க இயக்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். அவ்வாறு வெளியேற்றவில்லை என்றால் இங்கே நாம் புரட்சிகரமான உழைக்கும் வர்க்கத்திற்கான கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டவும் முடியாது.கம்யூனிஸ்டுக் கட்சியை கட்ட முடியவில்லை என்றால் நம்மால் எப்படி புரட்சி செய்ய முடியும்?
6. நவீன ஏகாதிபத்தியம் வளர்ச்சிபெற்ற ஒருசில நாடுகளுக்குத் தனிச்சலுகைக் குரிய விஷேச நிலையை அளித்துள்ளது.இதனால் இரண்டாவது அகிலத்திலுள்ள சில தலைவர்கள் துரோகிகளாகவும்,சந்தர்ப்பவாதிகளாகவும் தேசிய வெறியர்களாகவும் மாறினார்கள் என்றும் இவர்கள் தங்களது சொந்த நலன்களுக்காகவும் தொழிலாளி வர்க்கத்திற்குள் இருக்கும் சலுகை பெற்ற பிரபுகுலத்தவர்களின் நலன்களுக்காகவும் பாடுபட்டார்கள்.அதாவது இவர்கள் மொத்தத்தில் முதலாளிகளிடமும் அதன் ஆட்சியாளர்களிடமும்,முதலாளிகளின் நலன் காக்கும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் சரணடைந்து தொழிலாளி வர்க்கத்தைக் காட்டிக்கொடுக்கும் கயவர்களாக மாறினார்கள். இத்தகைய சந்தர்ப்பவாத துரோகத் தலைவர்களாகவே இரண்டாம் அகிலத்தின் தலைவர்கள் மாறினார்கள் என்பதை லெனின்விளக்கினார்.
7. இந்தியாவிலும் கீன்சியத்தை அடிப்படையாகக் கொண்ட கலப்புப் பொருளாதாரத்தை நேரு தலைமையிலான முதலாளித்துவ காங்கிரஸ் அரசாங்கம் செயல்படுத்தி இங்குள்ள தொழிலாளர்களுக்கு சில சலுகைகள் கொடுத்ததன் காரணமாக இந்திய தொழிலாளி வர்க்கத்தின் தலைவர்களில் சிலர் முன்னால் காவுத்ஸ்கி போன்று தொழிலாளி வர்க்கத்திலுள்ள சலுகை பெற்ற தொழிலாளி வர்க்க பிரபு குலத்தோருக்காகப் பாடுபடும் சந்தர்ப்பவாதத் தலைவர்களாக மாறி முதலாளி வர்க்கங்கள் முகம்கோணாத வழிமுறைகளைப் பயன்படுத்திதொழிலாளி வர்க்கத்தை வழிநடத்தி தொழிலாளி வர்க்கங்களிடமிருந்த போர்க்குணத்தை மழுங்கடித்து தொழிலாளி வர்க்கத்தை முதலாளி வர்க்கங்களுக்கு கொத்தடிமைகளாக மாற்றிவிட்டனர்.இத்தகைய சந்தர்ப்பவாதத் தலைவர் களையும் அவர்களின் சந்தர்ப்பவாதக் கொள்கைகளையும் அம்பலப்படுத்தி அவர்களை அரசியல் அரங்கிலிருந்து விரட்டியடிக்காமல் இங்கே தொழிலாளி வர்க்க இயக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
8.தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்குள் இருக்கும் இத்தகைய சந்தர்ப்பாதத் தலைவர்களும் அவர்களின் கட்சியும் செய்துவரும் துரோகத்தைப் புரிந்துகொண்ட உழைக்கும் மக்கள் இவர்களைப் புறக்கணித்தனர். அதன் காரணமாக இந்த சந்தர்ப்பவாதத் தலைவர்கள் உழைக்கும் மக்களிடமிருந்து பிரிந்துவிட்டனர் என்கிறார் லெனின்.லெனின் சொன்னது போலவே இங்கே கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு செயல்படும் தலைவர்களின் துரோகத்தைப் புரிந்துகொண்ட மக்கள் அவர்களைப் புறக்கணித்துவிட்டார்கள்.இத்தகைய சந்தர்ப்பவாதத் தலைவர்களும் அவர்களின் தலைமையிலான கட்சியும் உழைக்கும் மக்களின் செல்வாக்கை சிறிது சிறிதாக இழந்துகொண்டிருப்பதை நாம் காணலாம். எனினும் இந்தசந்தர்ப்பவாதத் தலைவர்கள் எப்படியெல்லாம் மார்க்சியத்தை கைவிட்டுவிட்டு முதலாளித்துவ சீர்திருத்தவாத மற்றும் திருத்தல்வாத சித்தாந்தங்களின் அடிப்படையில் செயல்படுகிறார்கள் என்பதை நாம் விரிவான முறையில் ஆய்வு செய்து மக்களிடம் அம்பலப்படுத்துவதன் மூலமே இத்தகைய சந்தர்ப்பவாதத் தலைவர்களை மக்களின் செல்வாக்கிலிருந்து விரட்டியடித்து மார்க்சியத்தின் செல்வாக்கின் கீழ் மக்களைக் கொண்டுவர முடியும்.
9. இவ்வாறு கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களிடம் சந்தர்ப்பவாதத் தவறு இருக்கிறது என்பதை காரணம் காட்டி கம்யூனிஸ்டுக் கட்சியே தவறான கட்சி என்றும் கம்யூனிஸ்டுக்கட்சித் தலைவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள் என்ற பிரச்சாரம் செய்து கம்யூனிஸ்டுக்கட்சியே தேவையில்லை என்ற கருத்தைப் பிரச்சாரம் செய்தவர்களை லெனின் கண்டித்துஇத்தகைய கருத்து முட்டாள்தனமான கருத்து என்று லெனின் விளக்கினார்.
10. லெனின் காலத்தைப் போலவே தற்காலத்திலும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிகளை சிலர் விமர்சனம் செய்து தந்திரமாக கம்யூனிசக் கொள்கைகளையே தவறானதாகச் சித்தரித்து தொழிலாளி வர்க்கத்தை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
11. இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத் தலைவர்களையும் அவர்களின் கொள்கை களையும் மார்க்சிய லெனினியக் கண்ணோட்டத்திலிருந்து லெனின் எப்படி அம்பலப்படுத்தி கம்யூனிசக் கொள்கைகளையும் அதன் கட்சியையும் லெனின் காப்பாற்றியதைப் போலவே நாம் தற்போது கம்யூனிச இயக்கத்திற்குள் இருக்கும் திருத்தல்வாதம்,கலைப்புவாதம்,சீர்திருத்தவாதம்,அடையாள அரசியல்,டிராட்ஸ்கியவாதம், சாதிவாதம்,மண்ணுக் கேத்த மார்க்சியவாதம் போன்ற மார்க்சியத்திலிருந்து விலகி எதிராகச் செல்லும் சித்தாந்தங்களை அம்பலப்படுத்தி முறியடித்து கம்யூனிச இயக்கத்தை சந்தர்ப்பாதத் தலைவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.மேலும் கம்யூனிஸ்டுக் கட்சியே தவறானது என்று வாதிடுபவர்களை நாம் புரிந்து கொண்டு அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.
12. சிறு தவறு என்றாலும் அதனைத் தொடர்ந்து செய்வோம் என்றாலும், அந்தத் தவறை புரிந்துகொள்ளத் தவறி,அந்தத் தவறையே சரியானது என்று கருதி செய்யும் தவறையே தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டே இருப்போ மானால்,தர்க்க அடிப்படையில் அதன் இறுதி நிலையான தீய விளைவுகள் வரை நாம் அதனை பின்பற்றுவோமானால்,அதனால்ஏற்படும் தீய விளைவுகள் நம்மை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும்.ஆகவே நாம் சிறிய தவறு செய்தாலும் அதனை தக்க நேரத்தில் புரிந்துகொண்டு அந்தத் தவறை களைவதும் அதற்கு மாற்றாக சரியான வழியைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்த வேண்டும் என்று லெனின் நமக்கு இங்கு வழிகாட்டுகிறார்.இந்த வழிகாட்டுதலை தொடர்ந்து நமது கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பின்பற்றத் தவறுகிறார்கள்.அவர்கள் செய்யும் தவறுகளையே சரியானது என்று கருதி தொடர்ந்து தவறான வழியிலேயே பயணிக்கிறார்கள்.அதன் விளைவுதான் உழைக்கும் மக்கள் தொடர்ந்து கூலி அடிமைகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் இழிவான நிலையாகும்.நமது தலைவர்கள் செய்யும் தவறினால்தான் உழைக்கும் மக்களின் அடிமைத்தனம் ஒழியாததற்குக் காரணம் ஆகும்.
13.கம்யூனிஸ்டுக் கட்சிக்கு கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பதும்,கட்சிக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதும் மிகவும் அவசியமாகும்.ஆனால்குட்டிமுதலாளித்துவ பண்பு கொண்டவர்கள்இதனை பின்பற்ற மாட்டார்கள் என்றார் லெனின்.
14.குட்டிமுதலாளித்துவ சிந்தனையாளர்கள் எதிலும் உறுதியற்று நிலையில்லாமல் தள்ளாடுவார்கள், அவர்களிடம் விடாமுயற்சி இருக்காது, அவர்கள் ஒற்றுமைக்காகப் பாடுபடமாட்டார்கள், ஒழுங்கமைந்து செயல்படுவதற்கான திராணி அவர்களிடம் இருக்காது, இத்தகைய தன்மை படைத்தவர்கள் ஒரு தொழிலாளிவர்க்க இயக்கத்தின் தலைமையில் இருந்தால் அந்த இயக்கம் பிளவுபடும் இறுதில் அழிந்துபோகும் என்கிறார் லெனின்.
இன்றைய கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கும் அது அழிந்துகொண்டு இருப்பதற்கும் கம்யூனிச அமைப்பிற்குள் இருக்கும் இத்தகைய சந்தர்ப்பவாத குட்டிமுதலாளித்துவ தலைமையே காரணம் ஆகும்.ஆகவே குட்டிமுதலாளித்துவ சந்தர்ப்பவாத குறுங்குழுவாத பிற்போக்குத் தலைமை யையும் அதன் கொள்கைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்றே நமக்கு லெனின் போதிக்கிறார்.
15.வர்க்கங்களை ஒழிப்பதன் பொருள் நிலப்பிரபுக்களையும் முதலாளிகளையும் ஒழிப்பது என்பது மட்டுமல்ல, சிறுவீதப் பண்ட உற்பத்தியாளர்களையும் ஒழித்திடு வதும் ஆகும் என்றார் லெனின். ஆகவே உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றியவுடன் இதனை சாதிக்க முடியாது. அதற்கு நீண்டகாலம் தேவைப்படும் என்றே லெனின் சொன்னார்.
16.சிறுவீத உற்பத்தியில் ஈடுபடும் குட்டிமுதலாளி வர்க்கப் பிரிவினர் உழைக்கும் மக்களோடு தொடர்ந்து வாழ்ந்து வருவார்கள்.இவர்களின் மீது அதிகாரத்தைச் செலுத்தி இவர்களை மாற்றிவிட முடியாது,மேலும் அவ்வாறு நாம் செய்யக் கூடாது.இவர்களுக்கு பொறுமையாக போதனை செய்தே மாற்ற வேண்டும் என்றார் லெனின்.
17.குட்டிமுதலாளித்துவ சக்திகள் பாட்டாளி வர்க்கத்தைச் சூழ்ந்து இருந்து அவர்களிடமுள்ள உறுதியின்மை,ஒற்றுமையின்மை,தனிநபர் மனப்பான்மை,மனவெழுச்சி,மனச்சோர்வு போன்ற தீய பண்புகளை பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குள் கொண்டுவந்து பாட்டாளி வர்க்க இயக்கத்தை மாசுபடுத்துகிறது என்றார் லெனின்.ஆகவே இத்தகைய குட்டிமுதலாளித்துவ பண்புகளை நாம் பட்டியலிட்டு அத்தகைய பண்புகள் உழைக்கும் வர்க்க இயக்கத்தைச் சேர்ந்த அணிகளிடம் பரவிவிடாமல் அணிகளை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதே லெனினது வழிகாட்டுதல் ஆகும்.
18.பாட்டாளிவர்க்க அமைப்பிற்குள் உள்ள உறுப்பினர்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்றால், கட்சிக்குள் கண்டிப்பானமத்தியத்துவமும் கட்டுப்பாடும் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்.
19.பழைய சமுதாயத்தின் பிற்போக்கு சக்திகளுக்கும் அதன் மரபுகளுக்கும் எதிரானஇடையறாத போராட்டமே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகும்.
20.மனிதர்கள் தொடர்ந்து பழகிவரும் பழக்கவழக்கங்களை உடனடியாக மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.அத்தகைய பிற்போக்கான பழக்கவழக்கங்களை மக்கள் கைவிட்டுவிட்டு முற்போக்கான பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதற்கு மக்களுக்கு,புரட்சிகரமான போராட்டங் களில் புடம்போட்டு வளர்க்கப்பட்டு,நேர்மையான கட்சி அணிகளைக் கொண்டுள்ள,மக்களின் மனங்களை நன்கு கவனித்து மக்களை தன்வயப்படுத்தும் சக்திகள் கொண்ட உறுப்பினர்களைப் பெற்றுள்ள கம்யூனிஸ்டுக் கட்சி மிகமிக அவசியமாகும்.
21.உழைக்கும் மக்களின் எதிரிகளான பெருமுதலாளிகளை நாம் ஒப்பீட்டளவில் எளிதாகப் போராடி வெற்றிகொள்ள முடியும்.ஆனால் குட்டிமுதலாளித்துவ சக்திகளுக்கு எதிராகப்போராடி நாம் வெற்றிகொள்வது அவ்வளவு எளிதான செயல் இல்லை என்கிறார் லெனின்.
இது உண்மை என்பதை பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குள்இருக்கும் குட்டிமுதலாளித் துவ சக்திகளை குறிப்பாக தலைவர்களை யும் அவர்களின் கருத்துக்களையும் எதிர்த்துப் போராடி வெற்றிபெறுவது அவ்வளவு எளிதானது இல்லை என்பதை நடைமுறையில் நாம் பார்க்கலாம்.
ஏனென்றால் குட்டிமுதலாளித்துவ சக்திகளோடு நாம் இணைந்தே செயல்பட வேண்டியுள்ளது,
அதே வேளையில் அவர்களின் சித்தாந்த அரசியலை எதிர்த்து நாம் விடாப்பிடியாகப் போராடவேண்டியுள்ளது. அது மிகமிக கடினமான பணியாக நம்முன் உள்ளது.
22. கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் கம்யூனிசத்திற்கு எதிரானவர்களும், அரசு உளவுத்துறையினரும் கூட ஊடுருவலாம்.அதனை எல்லாம் சமாளித்துத்தான் கம்யூனிச இயக்கம் முன்னேற வேண்டும்.அத்தகைய முன்னேற்றத்தை நாம் சாதிக்க வேண்டுமானால் நாம் மார்க்சிய லெனினிய தத்துவ அரசியலை பிழையின்றி கற்றுத்தேற வேண்டும்.தொடர்ந்து கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினரிலிருந்து அதன் தலைவர்களை வரை கண்காணிக்க வேண்டும். விமர்சனம் சுயவிமர்சனம் என்ற ஜனநாயக ஆயுதத்தை நாம் முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
தேன்மொழி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment