தோழர் அப்பு பாலன் எனும் அணையா நெருப்பு

 செப்டம்பர் 12 வழக்கம் போலவே ஆண்டுக்கு ஒருமுறை அப்பு, பாலன் சிலைக்கு வண்ணம்பூசி, சடங்கு செய்துகொண்டிருக்கிறோம். அவர்களின் போராட்டத்தை அவர்களின் வரலாற்றை எழுத மட்டும் நமக்கு நேரமில்லை. அவர்களின் பெயரை மட்டும் முதலாளித்துவ வாதிகள் பயன்படுத்தும் பிராண்ட் போல பயன்படுத்திக் கொண்டிருக்கிற வர்கள் சிந்திப்பார்களா?. ஏகாதிபத்திய மென்றும், புதிய ஜனநாயகப் புரட்சி என்றும் இத்துனை ஆண்டுகளாய் போஸ்டர் மட்டுமே ஒட்டிக் கொண்டிருப்போர் இவர்களின் ஆக்கப் பூர்வமான வரலாற்றுப் பதிவையும் மக்கள்திரள் போராட்டத்தின் உண்மையான வலுவையும் விமர்சன ரீதியாக வெளியிடலாமே. அவை ஏன் இன்றுவரை கொண்டுவரவில்லை?

பகத்சிங்கைகூட எதிரிகள் இந்த அளவுக்கு சித்ரவதை செய்யவில்லை. இதே செப்டம்பரில் வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆளும் வர்க்கத்தால் கொல்லப்பட்ட நக்சல்பாரி தியாகிகள் தோழர் அப்பு, தமிழரசன், சந்திரகுமார் சந்திரசேகர், மாடக்கோட்டை சுப்பு என நீளும் பட்டியல்... தோழர் பாலன் அரசின் அராஜக செயல்பாடுகளால் அடித்துக் கொல்லப்பட்டு இன்றோடு 43 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 15 நக்சல்பாரி புரட்சியாளர்கள் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். ஏழைகளின்பங்காளன் என நீட்டி முழங்கிக் கொண்டிருந்த எம்ஜிஆரின் பாசிச மறுப்பக்கம் அது. தமிழகமெங்கும் நக்சல்பாரிகளின் உதிரம் உறையாத காவல் நிலையங்களே இல்லை என்ற கொடூரமான காலகட்டம் அது.

அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் மக்களின் விடுதலைக்காக தீரமுடன் போராடிய முற்போக்கு இயக்கங்களில் தமிழக வரலாற்றில் நக்சல்பாரிகளுக்கு என்றைக்கும் முன்வரிசையில் இடம் உண்டு. படுகொலை செய்யப்பட்டவர்கள் ஒருபுறம் என்றால் அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள், சித்திரவதை செய்யப் பட்டவர்கள், ஆயுள்தண்டனைகளுக்கு ஆளாகி சிறைகளிலிலேயே தனது இளமைக்காலங்களைத் தொலைத்த வர்கள் என தனக்குள்ளே ஒரு மாபெரும் தியாக வரலாற்றை கொண்டிருக்கிறது இந்த நக்சல்பாரி இயக்கம். பல இளைஞர்கள் வழக்குகளை முடித்து பிணையில் வெளிவருவதற்கு முன்பாக வே சிறைவாசலில் மற்றொரு வழக்குக்காக கைது செய்யப்படுவதும், புரட்சிப் பணிகளில் ஈடுபட்ட ஆண்கள் ஜெயிலில் இருக்கும் சமயங்களில் பொதுவுடமைன்னா தன்னோடு படுக்கிறது கூடவா என பெண்களிடம் சீண்டுவதுமாக ஈன செயலில் ஈடுபட்டது கேடுகெட்ட தமிழக காவல்துறை. தனது சிறைஅனுபவம் பற்றிய குறிப்புகளில் தியாகுசொல்வார். ‘சிறைக்குள் யாரும் நீண்ட நாளைக்கு தைரியசாலிகளாக நடிக்க முடியாது என்று.’ அது போலத் தான் நடைமுறையில் இயங்குகின்ற புரட்சிகர இயக்கங்களிலும். அங்கு மக்கள் மீது பற்று கொண்டவர்களுக்கும் எஃகு போன்ற மனதிடம் கொண்டவர்களுக்கும், தான் கொண்ட லட்சியத்தில் உறுதியான பிடிப்பு உள்ளவர்களுக்கு மட்டும்தான் வேலை. தலைமையில் இருந்தவர்களின் அகவயவாதப் போக்கினாலும், புரட்சிக்கு எதிரான மனோபாவங்களாலும், துரோகத் தனத்தினாலும் எண்ணற்ற தோழர்களின் தியாகங்கள் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகிப் போய் கொண்டுள்ளது. 

அடக்குமுறை காலங்களில் பேசுகின்ற மேடைகளில் இருந்து ஓடி ஒளிந்து வீட்டில் பதுங்கி இருந்து விட்டு ஓய்வுபெற்று பாதுகாப்பாகவீதிக்கு வந்திட்ட பின்னால் வீராவேசம் பேசுபவர்களும், நான்கு வரிகளை எழுதிவிட்டு நானும் புரட்சியாளன் என்று காலரை தூக்கிக்கொண்டு, திரிபவர்களும், அடுத்தவர்களின் மீது முத்திரை குத்துவதற்கு என்று ரப்பர் ஸ்டாம்புகளை தயாரித்துக் கொண்டு அலைந்து கொண்டிருப்பவர்களும், கைது நடவடிக்கைகள் இல்லை என்றால் மட்டுமே கூட்டத்துக்கு ஏற்பாடு செய்பவர்களும், போஸ்டர் போட்டு அதை மட்டுமே புரட்சிகர பணி என்று சிலாகிப்பவர்களும் இன்றைக்கு நக்சல்பாரிகள் என்று அறிவித்துக் கொண்டு இருக்கின்ற வினோதங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. எது எப்படி ஆனாலும் ஒன்று மட்டும் நிச்சயம். என்ன நோக்கத்திற்காக அன்றைக்கு இந்திய வானில் நக்சல்பாரி இயக்கம் வசந்தத்தின் இடிமுழக்கமாக எழுந்ததோ அந்த நோக்கம் இன்றைக்கும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது. முன்பைவிட கூர்மையாகவும், ஆழமாகவும். தேவைகள்தான் வரலாற்று இயக்கங்களைஎப்போதும் தீர்மானிக் கின்றன.

தனது எல்லா தடைகளையும் கடந்து நக்சல்பாரி இயக்கம் மக்களை ஒளிமிகுந்த ஓர் வருங்காலத்திற்கு அது அழைத்துச்சென்றதாஎன்றால் அவர்களின் உயரிய அர்பணிப்பும் தியாகமும் சரியான மார்க்சிய லெனினிய புரிதல் இன்மையால்இடதுசாரி சாகசவாதத்தால் எதிரிக்கு ஏற்படத்த வேண்டிய பேரிழப்பிற்க்கு பதில் தன்னையே அழித்துக்கொண்டது.

மார்க்சியத்தின் புரட்சிகர ஆன்மாவை நக்சல்பாரி இயக்கமானது நிகழ்ச்சி நிரலில் வைத்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புரட்சிகர கட்சியின் தலைமையளிக்க முன்னெடுத்த இயக்கம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்திப்பிடித்து, புரட்சியின் மூலம் சுரண்டும் வர்க்க அரசைத்தகர்ப்பது, சோசலித்துக்கான அமைதிவழி மாற்றத்தை நிராகரித்து, புரட்சிகர பலாத்காரத்தை ஏற்றல், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக கம்யூனிஸ்ட் கட்சியை மாற்றி யமைத்தல், புதியஜனநாயகப் புரட்சி, தொழிலாளி, விவசாயிகள் கூட்டணி அமைத்தல் போன்ற அரசியல் நிலைப்பாடுகளை அங்கீகரித்தது. ஆனால் வலது திருத்தல்வாத போக்குகளுக்கு சித்தாந்த ரீதியில் பலத்த அடி கொடுக்காமலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்குவதற்க்கான நெறிமுறைகள் மூன்றாம் அகிலத்தினால் உருவாக்கப்பட்டத்தை கவனத்தில் கொள்ளாமலும் கட்சி தொடங்கிய காலத்தில்குருச்சேவ் திருத்தல்வாதத்தை எதிர்த்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவப் போராட்டமான மாபெரும் விவாதத்தின் நிலைப்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமலும் கட்சி கட்டப்பட்டது. கொரிலாப் போரைத் தவிர மற்ற எல்லா போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் நிராகரிக் கப்பட்டன. இடது குறுங்குழுவாதத்தை புரட்சி வழியாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. இன்று ஒரு கட்சிக்கு பதிலாக பல குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.இந்த சூழ்நிலை யானது பாட்டாளிவர்க்கப் போராட்டம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும்.

இந்த சூழ்நிலைகளை மாற்ற வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.அனுபவத்தின்வாயிலாகவும், அரைகுறையாக கோட்பாடுகளை கிரகித்துக் கொண்டதன் மூலம் இன்று அறியப்படும் நிலைப்பாடுகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் நடைமுறைகள், மற்றும் ரசிய புரட்சியிக்கு முன்னும் பின்னும் எழுந்த திருத்தல்வாதத்தையும் சந்தர்ப்ப வாதத்தையும் எதிர்த்து லெனின் அவர்கள் கடுமையாக போராடிய அனுபவத்தை கிரகிக்காதநிலை, அதாவது கட்சிக்கு  உள்ளேயும் வெளியேயும் எழுந்த ஒவ்வொரு போக்கையும் எவ்வாறு லெனின் முறியடித்தார் என்பதை பார்க்காத தன்மை ஆகியவற்றை தொகுப்பாக பார்க்கும் பொழுது முதலில் புரட்சியைவிட ஒரு புரட்சிகர தத்துவத்தைநிலை நாட்டுவதுதான் முக்கியமானது என்பதை லெனின்யமும் இந்திய கம்யூனிஸ்டு களின் அனுபவமும் நமக்கு சுட்டிகாட்டுகிறது. ஆகவே நமது தோழர்களின் உயரிய தியாகத்தை போற்றும் நாம், அதற்கு ஒரு ஒன்றுபட்ட புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி வேண்டும் என்பதனை உணரவேண்டும். அதற்காக நாம் மார்க்சிய தத்துவத்தை பயில வேண்டும். அதன் அடிப்படையில் இந்தியப் புரட்சிக்கான குறிப்பான பொதுத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதை உணர்ந்து நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தோழர் பாலன் இறந்துவிட்டார். வர்க்கமெனும் வலிய தத்துவம் கொண்டு சாதிய அரக்கனுக்கு சாவுமணி அடிக்க முடியுமென்ற எண்ணத்தை ஊட்டி வளர்த்த தோழர் பாலன் இறந்துவிட்டார். அவர் எந்த அரக்கனை எதிர்த்து தன்னுயிர் ஈந்தாரோ அவர் எந்த ஒற்றுமைக்காக உயிருள்ளவரை பாடுபட்டாரோ அந்த ஒற்றுமை இன்று கானல் நீராக நிற்கிறது. அவரின் பாதம் பட்டுப் பெருமைபெற்ற மண் இன்று சாதியச் சகதியில் மூழ்கித் திளைக்கிறது. வழக்கம் போலவே ஆண்டுக்கு ஒருமுறை அப்பு, பாலன் சிலைக்கு வண்ணம்பூசி, சடங்கு செய்து கொண்டிருக்கிறோம் நாம்.

உள்ளபடி பாலனின் மகத்துவமான போராட்டத்தை பொருளாதாரப் போராட்டமென சிறுமைப்படுத்திவிட்டு, பாலனின் பெயரை மட்டும் "வாணிக நற்பெயராக"பயன்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் சிலர். கம்யூனிஸ்டுகள் பல்வேறு கவர்ச்சியான பெயர்களில் சிதறி சின்னாபின்னமாகியிருக்கின்ற சூழலில் சாதியவாதசக்திகள் அந்த இடத்தை கச்சிதமாக ஆக்கிரமித்திருக் கின்றன. சாதியத்தின் இருப்பு சாதிய சங்கங்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படை என்பதற்கு ஏற்ப சுயநலக் கூட்டமான பாமகவின் விஷப் பிரச்சாரங்களுக்கு பின்னால் இன்று பாலன் வீழ்த்தப்பட்டுநிற்கின்றார். இதில் தலித்தியம் பேசுகின்ற விசி கட்சியனரும் ஒன்றும் விதிவிலக்கில்லை. வர்க்க ஒற்றுமைகளை கூறுபோட்டு விட்டதான ஆத்மதிருப்தி அவர்களின் எழுத்துக்களில்/செயல்களில்மிளிர்கின்றன. இன்றைக்கு ஒவ்வொரு ஆதிக்க சாதி இளைஞனுக்கும் தலித் எதிரியாக்கப்பட்டி ருக்கலாம். இருதரப்பினரின் வாழ்வியல் நெருக்கடி யாவற்றுக்கும் இன்னொரு தரப்பே காரணம் என்ற கற்பிதம் பெரும் தலைவர்களால்போதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மானுடம் நிலைக்க வேண்டுமானால், மக்களின் அன்றாடத் தேவைகள் பூர்த்தியாக வேண்டுமானால், அவர்களின் வறிய வாழ்நிலையிலிருந்து மீண்டு எழ வேண்டுமானால் நிச்சயம் நாம் பாலனிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். அவரின் அணையாத தீபத்திலிருந்துதான் எழுகின்ற சிவப்புச் சூரியனுக்கு ஒளிவார்க்க வேண்டும்.

வாழ்க செப்டம்பர் தியாகிகளின் வீர நினைவுகள். 

இந்தப் பகுதி எழுத சிலர் தோழர்களுடன் உறையாடல் மற்றும் 88 சிறப்பு கூட்ட அறிக்கை, சுந்தரய்யா சிந்தனைகள், தோழர் பாலன் புரட்சிகர மக்கள் எழுச்சியின் நாயகன் ஆகிய நூல்கள் இன்னும் பல தோழர்களின் பங்களிப்பு தோழர் தியாகு, தோழர் பாரதிநாதன் மற்றும் தோழர் பாவேல் இன்பன் அவர்களின் எழுத்துகளிலிருந்து எடுத்தவை மற்றும் எமது தேடுதல்களும் அடங்கும்.

நான் செப்படம்பர் 12 தியாகத் தோழர்களின் நினைவு நாளில் ஒரு நேர்காணல் கொணர நினைத்து பல தோழர்களைநேரடியாகவும்தொலைப்பேசி மூலமும் தொடர்ப்பு கொண்டு ஓரு பெரிய பகுதியை எழுதினேன். அதில் சில தோழர்களின் நிலைப்பாடு மற்றும் இன்றைய நிலை சற்று விமர்சனத்திற்க்கு உரியதாக இருக்கவே ஆசிரியர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் அந்த நேர்காணலை வெளியிடாமல் அதில் திரட்டிய செய்திகளை அடிப்படையாக தொகுத்து வெளியிடலாம் என்ற அடிப்படையில் இந்தப் பகுதி தயாரித்தேன். இதில் விமர்சனம் இருப்பின் நான் பொறுப்பை ஏற்கிறேன்.. மீண்டும் தத்துவ ஆய்வு/போராட்டம் தொடர்கிறது. இத்துடன் முடித்துக் கொள்கிறேன் தோழர்களே இந்த பகுதியை. தேவைபடின் தொடருவேன்......

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்