ஜாதி ஒழிப்பு பற்றி நமது முன்னோடிகளும் நமக்கான வழிமுறைகளும்

 நாம் நமது படிபினைகளை சரியாக கொண்டு செல்ல கடந்த கால வரலாற்றின் சரி தவறுகளை மார்க்சியத்தின் துணைக் கொண்டு ஆராய்ந்து சரியானவற்றை மார்க்சிய வழியில் முன்வைப்பதே உண்மையான ஒரு கம்யூனிஸ்டின் பணியாக இருக்கும் என்று நினைக்கிறேன் தோழர்களே.

நமது சில மார்க்சிய புத்திஜீவிகளின் எழுத்தை உள்வாங்கி நான் இந்தப் பகுதியை எழுதுகிறேன். இதில் மார்க்சிய புரிதலில் வர்க்கத்தை அணுகுவதில் எனக்கு பிழை இருக்க வாய்பில்லை இருந்தும் தவறிருப்பின் அவசியம் சுட்டிக் காட்டுங்கள் தோழர்களே.

சாதிகள் ஆதியில்:-

தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்) இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல.ஆக, சாதியத்தின் மையமான கூறுகளென நாம் வரையறுத்தலை முழுமையாகச் செயற்பட்ட காலமென்பது இந்திய வடிவிலான நிலப் பிரபுத்துவக் காலக்கட்டத்தில் மட்டுமே எனலாம். தமிழகத்தில் பல்லவர் காலந்தொட்டு வெள்ளையர் காலம் வரை இந்தக் கூறுகளை இறுக்க மாகக் காணலாம்.

எனினும் எல்லாக் காலக்கட்டங்களிலும் ஆதிக்க சக்திகள் சமூகத்தை வகைப்படுத்தி, பெயரிட்டு அதிகாரம் செலுத்தும் நடைமுறைக்கு, சாதி பயன்பட்டு வந்துள்ளது.

முதலாளியக் காலக்கட்டத்தில் மட்டுமே உபரியை உறிஞ்சுதல் என்பது முற்றிலும் பொருளாதார அடிப்படையில் செயல்படும் எனவும் முதலாளியத்திற்கு முற்பட்ட சமூக உருவாக்கங்களில், மதம் முதலிய பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டவற்புறுத்தல்கள் உபரி உறிஞ்சலில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் மார்க்சியம் பகரும்.

இந்திய நிலப்பிரபுத்துவத்தில் சாதியமும் அதற்கு தத்துவார்த்த சடங்குப் பாத்திரப் பின்புலத்தை வகுத்தளித்த (இந்தோ ஆரியப் பார்ப்பனிய) இந்து மதமும் (தமிழகத்தில் இதனை சைவபார்ப்பனிய இந்துமதம் எனலாம்) உபரி உறிஞ்சுதலைச் சாத்தியப்படுத்தியுள்ளன. 

பழந்தமிழகத்தில் களப்பிரர் காலம் வரை(கி.பி.550) குடிகள் மட்டுமே இருந்தன. குடி என்பதும் சாதி என்பதும் வேறு வேறு. குடி என்பது ஒரு தொழில் பிரிவு. அது பிறப்பால் வருவதல்ல. அதில் அகமணமுறை இருக்காது. குடிகளுக்கிடையே கலப்பு மணமும் கலந்து உண்ணுதலும் இருக்கும். சமூக சமத்துவம் இருக்கும். சமூகப்படிநிலை இருக்காது. ஆனால் வர்க்க வகுப்பு வேறுபாடுகள் இருக்கும். பழந்தமிழகத்தில் நடைபெற்ற களப்பிரர் படையெடுப்பு (கி.பி.250) பழந்தமிழகத்திற்கு(கேரளம் உட்பட) மிகப்பெரிய பேரழிவைத் தந்தது. களப்பிரர் காலத்தின் இறுதியில் பார்ப்பனர்களுக்கு முதல்முறையாக நிலதானங்களும் வழங்கப்பட்டன. இருந்த போதிலும் சாதியம் உருவாகவில்லை. குடிகள் மட்டுமே இருந்து வந்தன.(அண்மை வரவு கணியன் பாலன்ஈரோடு ஜாதியம் வளர்ச்சி நூலிலிருந்து).

சங்க காலத்தில் இருந்தே தமிழ்ச் சமூகத்தில் நான்கு வகுப்புகள் இருந்தன. தமிழ்க் குடிகளில் பெரும்பாலானவை நான்காம் வகுப்புக்குரியன. நான்காம் வகுப்புக் குடிகள் கீழ் மக்கள் என அழைக்கப்பட்டனர். முதல் மூன்று வகுப்புகளான அரசர், அந்தணர், வணிகர் & வேளாளர் ஆகியவற்றுக்குரிய குடிகள் மேல் வகுப்புகளாக இருந்தன. குடிகள் என்பன தொழில்பிரிவுகள் என்பதை இங்கு மனதில் கொள்ள வேண்டும். கீழ்மக்கள், மேல்மக்கள் ஆவதும், மேல்மக்கள் கீழ்மக்கள் ஆவதும் நடந்து வந்தன. அதாவது கீழ்க்குடிகள் மேல்குடிகள் ஆவதும் மேல்குடிகள் கீழ்க்குடிகள் ஆவதும் நடைபெற்று வந்தன. இவர்கள் அனைவருக்குமிடையே கலப்பு மணமும் கலந்து உண்ணுதலும் இருந்து வந்தன. அகமணமுறையோ சாதியோ இருக்கவில்லை. பழந்தமிழ்க் குடிகளுக்கிடையே வர்க்க வகுப்பு வேறுபாடுகள் மட்டுமே இருந்தன. அதனை இன்றைய மேற்குலகில் உள்ள வர்க்க வகுப்பு வேறுபாடுகள் போல எனலாம். ஆகவே தமிழகத்தில் இன்று இருக்கும் சாதிகளைப் பண்டையத் தமிழ்க்குடிகள் போலக் கருத முடியாது.

இன்றைய சாதிகளில் அகமணமுறை இருக்கிறது, படிநிலை இருக்கிறது, சாதிகளிடையே சமத்துவம் இல்லை. கலந்து உண்ணுதலும் கலப்பு மணமும் இருக்கவில்லை. உயர்வு, தாழ்வும், தீண்டாமையும் இருக்கிறது. ஆகவே பண்டைய தமிழ்க்குடிகள் வேறு, இன்றைய சாதிகள் வேறு. ஆனால் இன்றைய தமிழ்ச் சாதிகளை தமிழ்க்குடிகள் என அழைக்கும் பழக்கம் இன்று உருவாகியுள்ளது. ஆனால் இரண்டும் ஒன்றல்ல. இன்றைய தமிழ்ச்சாதிகள் பண்டைய தமிழ்க் குடிகள் போல மாற வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் அவை அப்படி அழைக்கப்படுகின்றன என நாம் கருதலாம். முதலில் சமூக நல்லிணக்கமும், சமத்துவமும் அவைகளுக்கிடையே உருவாக வேண்டும். படிநிலை என்பதும், உயர்வு தாழ்வும், தீண்டாமையும் ஒழிய வேண்டும். இறுதியாகக் கலந்து உண்ணுதலும், கலப்பு மணமும் உருவாக வேண்டும். அகமணமுறை ஒழிய வேண்டும். அவற்றின் மூலம் மட்டுமே இன்றைய தமிழ்க்குடிகள் பண்டைய தமிழ்க்குடிகள் போல ஆகமுடியும். முழுமையான தொழிற்துறை வளர்ச்சியும், தமிழ்த்தேசிய வளர்ச்சியும் அவற்றைச் செயல்படுத்தும் எனக்கருதலாம். (அண்மை வரவு கணியன் பாலன், ஈரோடு ஜாதியம் வளர்ச்சி நூலிலிருந்து).

சாதியும் வர்க்கமும்:

சமூக உற்பத்தியும் உற்பத்தி உறவுகளும் சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கிறது எனில் அதன்மேல் கட்டப்படும் அரசியல், கலை, பண்பாடு முதலியன அதன் மேற்கட்டுமானமாக இருக்கிறது. சமூகப் பொருளாதாரமும் அதன் உற்பத்தி உறவும் ஒரே நிலையில் இருக்கும் ஒரு தொழில்குழுவை ஒரு வர்க்கம் என வகைப்படுத்தலாம். வர்க்கம் என்பது சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கிறது. அப்படியானால் சாதி என்பது அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா? அகமண முறையைப் பின்பற்றுவதும், பிறப்பின் அடிப்படையில் இருப்பதும், சாதிகளுக்கிடையே படிநிலை இருப்பதும், உயர்வு-தாழ்வு தீண்டாமை முதலியன இருப்பதும் சாதியின் தனித்துவமான பண்புகள். சாதியின் இப்பண்புகள் சாதி என்பது சமூகத்தின் மேற்கட்டுமானமாக இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் சாதி என்பது முழுமையாக ஒரு குறிப்பிட்ட தொழில் குழுவாக, ஒரு குறிப்பிட்ட வகுப்பாக இருந்து வந்தது. அத்தொழில்குழு என்பது ஒரு வகுப்பாகவும், ஒரு வர்க்கமாகவும் இருந்தாக வேண்டும். ஆகவே சாதி என்பது ஒரு அடிக்கட்டுமானமாகவும் இருந்து வந்தது. ஆகவே சாதி என்பது சமூகத்தின் அடிக்கட்டுமானமாக, அதன் மேற்கட்டுமானமாக என இரண்டுமாகவும் இருந்து வந்தது என்பதுதான் உண்மை.

ஆனால் தொழில்துறை வளர்ச்சிக்குப் பிறகு ஒவ்வொரு சாதியும் ஒரு குறிப்பிட்ட தொழில் குழுவாக இருந்து வந்ததில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் இப்பொழுதும் ஒவ்வொரு சாதியும் பெரும்பான்மையாக ஒரு குறிப்பிட்ட தொழில் குழுவாகவே இருந்து வந்த போதிலும் ஒவ்வொரு சாதிக்குள்ளும் வேறுபல தொழில் செய்வோரும் தொழில்குழுக்களும் உருவாகி வருகின்றன. ஆகவே இன்று ஒவ்வொரு சாதியும் ஒரு குறிப்பிட்ட வர்க்கமாக இருக்கவில்லை. அதில் வேறு சில வர்க்கங்களும் இருக்கின்றன. அவை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகின்றன. சாதியம் குறித்தச் சிந்தனைப் போக்கிலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் சாதிகள் என்பன இன்றும் தமிழ்ச் சமூகத்தில் ஓரளவு வலிமையுடன்தான் இருந்து வருகின்றன. அதற்குப் பல்வேறு காரணிகள் காரணமாக உள்ளன.

சாதியப்பெருமை:

சாதியப்பெருமைகளைப் பரப்புவதும் அதனை வளர்த்தெடுப்பதும், சாதியச் சங்கங்கள் உருவாக ஊக்குவிப்பதும் அவற்றிற்கு ஆதரவு வழங்குவதும் அவற்றை வளர்த்தெடுப்பதும் தமிழகத்தில் மிகநீண்டகாலமாக நடந்து வருகிறது. நாளடைவில் இந்த சாதிய சங்கங்கள் கட்சிகளாக மாறுவதும் அந்த கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு சீட்டுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இவைபோக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், தேசியத் தலைவர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் சாதிய வர்ணங்கள் பூசப்பட்டு அவர்கள் அனைவரையும் சாதியத்தலைவர்களாகக் கொண்டாடும் மனநிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான அரசு விழாக்களில் இந்தச் சாதியத் தலைவர்கள் கலந்துகொண்டு இந்த தேசியத் தலைவர்கள் அனைவரையும் சாதியத் தலைவர்களாகக் கொண்டாடும் சூழ்நிலை இருந்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இவற்றை ஆதரிக்கின்றன.

இதுபோன்ற நிகழ்வுகள் சாதியப் பெருமிதங்களை வளர்த்தெடுப்பதற்கும் சாதியச் சங்கங்கள் வலிமைபெறுவதற்கும் காரணமாகி விடுகின்றன. இந்நடவடிக்கைகள் சாதியப் பெருமைகளை சாதியவெறிகளாக உருமாற்றி சாதிகளுக்கிடையே பகைமை வெறுப்பு போன்றவற்றை கொண்டு வருவதோடு அவற்றிற்கு இடையே சாதியத் தகராறுகளையும் சாதியச் சண்டைகளையும் கொண்டு வருகின்றன. ஆணவப் படுகொலைகளுக்கும் காரணமாகின்றன. இவற்றின் விளைவாக சாதிகளுக்கு இடையே இருக்க வேண்டிய நல்லிணக்கம் ஒற்றுமை சமத்துவம் பரசுபர நம்பிக்கை முதலியன இல்லாது போகின்றன. அவற்றின் காரணமாக கலந்து உண்ணுதல் கலப்புமணம் முதலியனவும் இல்லாது போகின்றன. தேசியக் குடும்பநல ஆய்வின் (National Family Health Survey - NFHS-III, 2005-2006) படி, இந்திய அளவில் சாதிகளுக்கிடையே நடக்கும் கலப்புமணம் என்பது 11 விழுக்காடாக இருக்கிறது. கேரளாவில் சுமார் 20 விழுக்காடும் பஞ்சாபில் சுமார் 20 விழுக்காடும் மராட்டியத்தில் 17 விழுக்காடும் சாதிகளுக்கிடையே கலப்புமணம் இருந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் சாதிகளுக்கு இடையேயான கலப்பு மணம் என்பது 3 விழுக்காடு மட்டுமே நடந்து வருகிறது

மேலே சொல்லப்பட்ட மூன்று மாநிலங்களைப்போலவே பலவகையிலும் வளர்ச்சியடைந்த மாநிலமாகவே தமிழ்நாடு இருக்கிறது. இருந்தபோதிலும் அந்த மூன்று மாநிலங்களைவிட மிகவும் குறைந்த அளவில் கலப்பு மணம் இருப்பதும் இந்திய சராசரியை விட மிகமிகக்குறைவாக இருப்பதும் பெருவியப்பைத் தருகிறது. இதற்கான காரணம் ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். இராசசுதானில் நடக்கும் கலப்பு மணம் 3 விழுக்காடு. அதன் நகர்மயம் என்பது 2011ல் சுமார் 25% தான். தமிழகத்தைவிட 2.6 மடங்கு பரப்பும் அதிக மக்கள் தொகையும் கொண்டது இராசசுதான். ஆனாலும் அதன் மொத்த உற்பத்தி(GDP) என்பது தமிழக உற்பத்தியில் பாதிதான் இருக்கிறது. இருந்த போதிலும் இராசசுதான் அளவுதான் கலப்புமணம் தமிழகத்தில் இருக்கிறது. மேலும் கலப்பு மணம் பீகாரில் 6.14%, மத்தியபிரதேசத்தில் 4.39%, உத்திரபிரதேசத்தில் 11.33% இருப்பதும் இவை அனைத்தைவிடவும், இந்திய சராசரி அளவை விடவும் தமிழ்நாட்டில் குறைவாக இருப்பதும் ஆய்வுக்குரியது. தமிழகத்தில்தான் மிக அதிக அளவு சாதி ஒழிப்பு நடந்துள்ளது போன்ற ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் அது மாயை என்பதை இந்தக் கலப்புமணம் குறித்தத் தரவுகள் உறுதி செய்கின்றன. சாதி ஒழிப்பு என்பது இங்கு சாதி வளர்ப்பு என்பதாகவே இருந்துள்ளதுபோல் தோன்றுகிறது.

சாதி ஒழிப்புப் போராளிகள் சாதிகளுக்கு இடையே நல்லுறவு நல்லிணக்கம் ஒற்றுமை சமத்துவம் பரசுபர நம்பிக்கை போன்றனவற்றை வளர்த்தெடுக்கவும் சாதிகளுக்கு இடையே ஏற்படும் பகைமை வெறுப்பு போன்றனவற்றை நீக்கவும் பாடுபடவேண்டும். அவற்றின் மூலம் மட்டுமே சாதிகளுக்கிடையே நல்லிணக்கம் சமத்துவம் பரசுபர நம்பிக்கை முதலியன ஏற்பட்டு, கலந்து உண்ணுதல் கலப்புமணம் முதலியன அதிகரிக்க வாய்ப்பு உருவாகும். சாதி ஒழிப்புப் போராளிகள் சாதிகளுக்கிடையே பகைமை வெறுப்பு முதலியன உருவாகாமல் தடுக்கப் பாடுபடவேண்டும்(அண்மை வரவு கணியன் பாலன்ஈரோடு ஜாதியம் வளர்ச்சி நூலிலிருந்து).

மேலே உள்ளவை ஒரு புரிதலுக்காக மட்டுமே இனி என்னுடைய தேடுதல்.

இலங்கை தமிழ் மக்களின் வாழ்வில் புதியதொரு காலகட்டம் பிறந்துள்ளது போலத் தோன்றுகிறது.

இலங்கை 1948 பெப்ருவரி 4 ஆம் திகதி பிரித்தானிய காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இலங்கைத் தமிழ் மக்கள் தமது தேசிய உரிமைகளை நிலைநாட்டுவதற்கு காலத்துக்குக் காலம் பல முயற்சிகளை எடுத்து வந்துள்ளனர்.

தமிழ்த் தலைமைகள் தமிழர்களின் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக முதலில் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை முன்வைத்தன. பின்னர் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தன. அதன் பின்னர் தனிநாடு கோரிக்கையை முன்வைத்தன. (இன்று இவைகள் எதையும் அடைய முடியாமல் போனது மட்டுமின்றி, கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் உதாசீனப்படுத்தி, இருந்ததையும் இழந்து நிற்கின்றனர்)

முதலில் 'அகிம்சை' வழியில் போராட்டங்களை முன்னெடுத்த தமிழ்த் தலைமைகள், தனிநாடு கோரிக்கையை முன்வைத்த பின்னர் அது வன்முறை வடிவத்தை எடுக்கத் தொடங்கியது. அதேநேரத்தில் தலைமையும் முதிய தலைமுறையினரின் கைகளில் இருந்து இளைஞர்களின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தது.

இளைஞர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பல இயக்கங்களை ஆரம்பித்து தமது சக்தியைச் சிதைத்தனர். இத்தகைய ஒரு நிலைமை இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் உரிய ஒன்றல்ல. விடுதலைப் போரில் ஈடுபட்ட உலக மக்கள் முன்னரே கண்ட அனுபவம்தான். ஏனெனில் வர்க்கங்களாகவும் சாதிகளாகவும் பிளவுபட்டுள்ள ஒரு சமூகத்தில் ஒவ்வொரு வர்க்கமும் சாதியும் தத்தமது நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தனித்தனி அமைப்புகளை உருவாக்குவது இயல்புதான்.

அத்தகைய ஒரு சூழ்நிலையில் ஒரு பொது இலட்சியத்தை அடைவதை முன்வைத்து பல்வேறு அமைப்புகள் தமது கருத்து முரண்பாடுகளை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணியாக இணைந்து செயல்படுவதே சரியானதும் வெற்றிக்கு உத்தரவாதமானதுமாகும். இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தோன்றிய இளைஞர் இயக்கங்கள் எல்லாவற்றினதும் ஒரே குறிக்கோள் இலங்கைத் தமிழர்களுக்கு என தனிநாடு ஒன்றை அமைப்பதுதான் என்றபடியால் இங்கு கருத்து முரண்பாடு எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் உலக வரலாற்றில் இல்லாதபடி இலங்கையில் மட்டும் தமிழ் இயக்கங்கள் மத்தியில் சகோதரச் சண்டைகள் உருவாகி வகைதொகையில்லாமல் கொலைகள் நடந்தன. இயக்கங்களுக்குள்ளும் உட்படுகொலைகள் நிகழ்ந்தன. இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களை அழித்து தமிழ் மக்களின் ஏகோபித்த தலைமையாக, பாசிச இயக்கமாக தனக்குத்தானே முடிசூடிக்கொண்டது.

இருந்தும் புலிகளின் தனிநாட்டுக்கான போராட்டமும் இறுதியில் அழிவில் முடிவுற்று அந்த இயக்கமும் அழிந்து போனது. அதற்கான காரணங்கள் பல. ஆனால் சுருக்கமாகக் கூறினால் போராட்டத் தலைமை முதிய தலைமுறையிடமிருந்து இளைஞர்களின் கைகளுக்கு மாறினாலும், அவர்களது பாதை மாறவில்லை. அதாவது, அவர்களது முதலாளித்துவ வர்க்கத் தன்மை மாறவில்லை.

இந்த விடயம் குறித்து மேலும் விளக்கமாகச் சொல்வதானால், அகிம்சை வழிப் போராட்டத்தை நடத்திய முதலாளித்துவ தமிழ்த் தலைமைகள் பின்பற்றிய ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாட்டையே ஆயுதப் போராட்டம் நடத்திய தலைமைகளும் பின்பற்றின. அது மட்டுமின்றி, முன்னைய தலைமைகள் பின்பற்றிய தமிழ் மேட்டுக்குழாமினரின் நலன் காக்கும் கொள்கையையே ஆயுதப் போராட்டம் நடத்திய தலைமைகளும் பின்பற்றின. தமிழ் சமூகத்தில் பிரதான பிரச்சினைகளாக இருந்த சாதிய ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறை, பெண்ணடிமைத்தனம் போன்ற பிரச்சினைகள் தமிழ் தேசியம் என்ற சாட்டைக்கு முன்னால் மௌனிக்க வைக்கப்பட்டன.

அதன் காரணமாகவே முன்னைய தலைமைகள் நடத்திய அகிம்சை வழிப் போராட்டங்கள் தோல்வி கண்டது போலவே, பின்னைய இளம் தலைமுறையினர் நடத்திய ஆயுத வழிப் போராட்டமும் தோல்வியில் முடிந்தது.

தமிழ் மக்களின் முதலாளித்துவத் தலைமைகளின் போராட்டங்கள் தோல்வியடைந்துவிட்டதன் காரணமாக தமிழ் மக்களின் தேசிய உரிமைகளுக்கான - நியாயமான உரிமைகளுக்கான கோரிக்கையும் அற்றுப் போய்விட்டதாகவோ அல்லது வழக்கொழிந்து போய்விட்டதாகவோ இதன் அர்த்தம் அல்ல. அந்தத் தேவை இன்னமும் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கான ஒரு சரியான தலைமையும், சரியான கொள்கைகளும் இல்லாதிருப்பதே இன்றைய பிரச்சினையாகும்.

இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் சில தனிநபர்கள் தமிழ் மக்களின், குறிப்பாக வட பகுதி தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் சாதியப் பிரச்சினை சம்பந்தமான, அதை இல்லாதொழிப்பதற்கான கருத்தியல் பிரச்சாரமொன்றை ஆரம்பித்திருக்கின்றனர். (இம்முறை அந்த இயக்கம் சாதிய ஒடுக்குமுறை தீவிரமடைந்ததன் காரணமாக எழுந்ததல்ல. மாறாக, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலுள்ள இளம் தலைமுறையினரின் விழிப்புணர்வு காரணமாகவும், அவர்கள் மத்தியில் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்தில் ஏற்பட்ட ஓரளவு உயர்ச்சி காரணமாகவும் ஏற்பட்டுள்ளது எனலாம்) அவர்கள் இந்தப் பிரச்சாரத்தை ஆரம்பித்ததில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் அவர்களது அணுகுமுறையில்தான் தவறுகள் இருக்கின்றன. அந்தத் தவறுகள் என்னவென்று பார்த்தால் - சாதியத்துக்கு எதிராக அவர்கள் தொடங்கியுள்ள பிரச்சாரம் ஒரு அமைப்பு ரீதியிலானதாக செயற்பாடாக இல்லாமல் தனிமனித ரீதியானதாக இருப்பது பலவீனமானது.

சிறுபான்மையினரான ஒரு தொகை சாதி வெறியர்களுக்கு எதிரான போராட்டமாக இல்லாமல், சனத்தொகையில் பெரும்பான்மையினரான முழு உயர் சமூகத்தினருக்கும் எதிரானதாக அவர்களது அணுகுமுறை உள்ளது. (தமிழகத்தில் உள்ள பிராமணர்களுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் உதாரணம் காட்டுகின்றனர். ஆனால் தமிழக சனத்தொகையில் பிராமணர்களின் தொகை சுமார் 2 வீதம்தான். ஆனால் இலங்கை வடபகுதித் தமிழர்களில் 60 வீதமானவர்கள் வெள்ளாளர் உட்பட உயர் சமூகத்தினர் என்பதைக் கணக்கில் எடுக்க வேண்டும். எனவே சாதி வெறியர்களின் தொகையைக் குறுக்கி அவர்களைப் பலவீனப்படுத்த வேண்டும்))

சாதியத்தை ஒழிப்பதற்கான ஒரு வழிமுறையாக பௌத்த மதத்தை ஆதரிப்பதை ஊக்குவிக்கின்றனர். அதற்கு இந்தியாவில் அம்பேத்கரை உதாரணமும் காட்டுகின்றனர். உண்மையில் சாதியப் பிரச்சினை என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுடன், வர்க்க சமுதாயத்துடன் வேர்கொண்டு கிடப்பதால் மதம் மாறுவதால் மட்டும் இப்பிரச்சினை தீர்ந்துவிடாது. உதாரணமாக சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்புவதற்காக கிறிஸ்தவத்தில் சேர்ந்தோரின் நிலை என்ன? அதுமட்டுமின்றி ஒரு லட்சம் மக்களுடன் பௌத்த மதத்தில் இணைந்த போதும் அம்பேத்கரால் இந்தியாவின் சாதியமைப்பை ஒரு அங்குலம் தன்னும் அசைக்க முடியவில்லை.

அது மட்டுமின்றி, சாதியத்துக்கு எதிரான போராட்டத்தைச் சிலர் தமிழ் தேசிய உரிமைக்கான போராட்டத்துக்கு எதிரான நிலையில் வைக்க முயல்கின்றனர். இதுவும் தவறான ஒரு நிலைப்பாடாகும்.

இடதுசாரிகளான நாம் கடந்த பல தசாப்தங்களாக வடக்கில் சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிராக பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம். அதற்காகப் பல தியாகங்களையும் செய்திருக்கிறோம். அதன் காரணமாக சில குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றிருக்கிறோம்.

சாதியத்துக்கு எதிரான போராட்டத்தில் கடந்த காலத்தில் மூன்று விதமான அணுகுமுறைகள் கையாளப்பட்டுள்ளன. அவையாவன:

சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை தனியே தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே நடத்துவது. தோழர் எம்.சி.சுப்பிரமணியம் தலைமையிலான சிறுபான்மைத் தமிழர் மகாசபை பெரும்பாலும் இதன் அடிப்படையிலேயே தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.

இன்னொன்று தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தை; தழுவுவதன் மூலம் சாதியத்தில் இருந்து விடுபடுவது. இதற்காக வைரமுத்து என்ற பெரியாரின் தலைமையில் தமிழ் பௌத்த காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு பல தாழ்த்தப்பட்ட மக்கள், குறிப்பாக இளைஞர்கள் பௌத்த மதத்திலும் இணைந்தார்கள். இந்த அமைப்பு வடக்கில் சில பௌத்த பாடசாலைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கென ஆரம்பித்ததைத் தவிர வேறு எதையும் சாதிக்க முடியவில்லை. இன்று அந்த அமைப்பு செயலிழந்து போய்விட்டது.

அடுத்ததாக புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியால் உருவாக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் 1960களில் முன்னெடுத்த தீண்டாமைக்கும் சாதியமைப்புக்கும் எதிரான போராட்டங்கள். இந்தப் போராட்டம் உயர்சாதி வெறியர் பிரயோகித்த பிற்போக்கு பலாத்காரச் செயல்களை புரட்சிகர பலாத்கார செயல்களால் எதிர்கொண்டது. அத்துடன், சாதிப் பிரச்சினை என்பது தனியே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினை அல்ல, அது ஒடுக்குமுறையும் சுரண்டலும் இணைந்த ஒரு வர்க்கப் பிரச்சினை என்றபடியால் முழுத் தமிழ் சமூகத்தினதும் பிரச்சினை என்பதை உணர்த்தி, அந்தப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் நீதியை விரும்பும் உயர் சமூக மக்களையும் ஈடுபட வைத்தது. அதுமட்டுமின்றி நாட்டின் ஏனைய பாகங்களில் வசிக்கும் முற்போக்கான சிங்கள முஸ்லீம் - மலையக மக்களையும் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக அணி திரட்டியது. அதன் காரணமாக அந்தப் போராட்டம் கணிசமானளவு ஒரு வெற்றியைப் பெற்றது.

உண்மையில் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தேசிய இனப் பிரச்சினை என்பது முதலாளித்துவத் தமிழ் தேசியவாதிகள் நினைப்பது போல வெறும் தேசியப் பிரச்சினை மட்டும் அல்ல. தமிழ் மக்களின் பிரச்சினை என்பது தேசிய ஜனநாயகப் பிரச்சினையாகும். அது ஒருபுறத்தில் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து தமிழ் மக்களின் தேசிய உரிமைகளைப் பெறப் போராட வேண்டியுள்ளது. மறுபக்கத்தில் தமிழினம் தனது சமூகத்தின் உள்ளே உள்ள சாதியமுறை, வர்க்கபேதமுறை போன்ற ஜனநாயக விரோதப் போக்குகளுக்கெதிராகவும் போராட வேண்டியுள்ளது. அதனால்தான் இடதுசாரிகளான நாம் தமிழ் மக்களின் பிரச்சினை என்பது ஒரு 'தேசிய ஜனநாயகப் பிரச்சினை' என முழுமையான அர்த்தத்தில் கூறுகின்றேம்.

ஆனால், யதார்த்தத்தில் இதுவரை காலமும் நடந்தது என்ன? முதலாளித்துவத் தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் சமூகத்தில் இருந்த சாதியத்தையும், வர்க்க பேதத்தையும் புறம்தள்ளிவிட்டு, வெறுமனே தேசியப் போராட்டம் மட்டும் நடத்தினர். அதனால் அது தோல்வி கண்டது.

இப்பொழுது தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள சிலர் தேசியத்தையும், வர்க்க பேதத்தையும் புறம்தள்ளிவிட்டு, வெறுமனே சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை மட்டும் நடத்த எத்தனிக்கின்றனர். எனவே இதுவும் முழுமையான ஒரு போராட்டம் இல்லை என்றபடியால் வெற்றி பெறும் சாத்தியம் இல்லை.

எனவே, முற்போக்கு சக்திகள் தமிழ் சமூகத்தின் உண்மையான நிலையைப் புரிந்து கொண்டு, முழுமையான முறையில் தமிழ் மக்களின் தேசிய ஜனநாயகப் போராட்டத்தை நடத்த முன்வர வேண்டும்.

இவை அவர்களின் படிப்பினை நமக்கு சொல்வது.

நமது படிப்பினைதான் என்ன?

ஜாதி ஒழிப்பு

இங்கு ஜாதி ஒழிப்பு என்பது அனைத்து உழைக்கின்ற மக்களின் பொருளாதார சுரண்டலிருந்து விடுதலை பெறுவதன்  பிரிக்க முடியாத ஒரு பகுதியாகவேசாதி ஒழிப்பை அணுக வேண்டும்.சாதி ஒழிப்பு போராட்டம் வர்க்கப் போராட்டத்திற்கு சேவை செய்வதாக அமைய வேண்டும்.இரண்டு வகைப்பட்ட போராட்டத்திற்கு இடையே உள்ள இத்தகைய உறவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஜாதி ஒழிப்பு போராட்ட திட்டமே உண்மையில் ஜாதி ஒழிப்புக்கு இட்டு செல்லும்.

பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் உள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே உருவான விவசாய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கின்ற வர்க்கங்களின் ஐக்கியமே  ஜாதி ஒழிப்பின் மைய விஷயம் ஆகும்.இதனையே நீண்ட கால செயல் தந்திரமாக கொண்டு ஜாதி ஒழிப்பதற்கான இதர செயல் தந்திரகளை செயல்படுத்த வேண்டும். எனவே பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் உள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளை வென்றெடுப்பது தாழ்த்தப்பட்ட மக்களிடையே உள்ள உழைக்கின்ற மக்களைஅமைப்பாக்குவது ஆகியவை ஜாதி ஒழிப்புக்கான செயல் தந்திரமாகும் இங்கு ஆதிக்க சாதிகளில் உள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளை வென்றெடுப்பது முன் நிபதனை ஆகிறது.

ஜாதி மோதல்களுக்கு ஆதிக்க ஜாதிகள் உள்ள பிற்போக்கு  சக்திகள் தான் எப்போதும் ஊக்குவிக்களாக இருக்கின்றனர்.ஆதிக்க சாதியில் உள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளை வென்றெடுத்து அவர்களை முன்னிறுத்தி ஜாதி ஒழிப்பு போராட்டத்தை நடத்துவதன் மூலம் மட்டுமே ஜாதி மோதல்களை தவிர்க்கவும் ஜாதி மோதல்களினால் ஏற்படும் மோசமான விளைவுகளையும் தடுக்க முடியும்.

முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு இன்று ஜாதி பிரச்சினையை முன்னுக்கு வந்ததுள்ளது. புத்தர் தொடங்கி அம்பேத்கர்,பெரியார்,பின்நவீனத்துவ வாதிகள்,அடையாள அரசியல்வாதிகள்  மற்றும் புரட்சிகர குழுக்கள் வரை ஜாதியின் ஒழிப்பிற்கு பல்வேறு வித கருத்தியல்கள் தீர்வுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. சாதி ஒழிப்பிற்கு தோன்றிய பெரியாரியம்  அம்பேத்கரியம் போன்றவை சமூகத்தின் உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி உறவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஜாதியத்தை அணுகியது என்பது மட்டுமே இருக்க முடியாது.  இன்று தலித் அமைப்புகளுக்கு தலைமை தாங்கும் அமைப்புகள் மற்றும் அவைக் கொண்டிருக்கும் கருத்தியல்கள் வரலாற்றை பின்னுக்கு இழுக்கின்றன. பெரியாரியம்  அம்பேத்கரியம் கண்ட சாதகமான விளைவுகளை கூட துடைத்தெறியும் பணியை தலித் ஒற்றுமை மற்றும் தலித் விடுதலை போன்ற முழக்கங்களை முன் வைத்துக் கொண்டிருக்கும் பின்நவீனத்துவ கருத்தியல்கள்பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் கணிசமான பிரிவினர் பணக்கார விவசாயிகளாக நடுத்தர விவசாயிகளும் மாறி உள்ளனர்.இன்னொரு புறம் பரந்து எண்ணிக்கையிலான விவசாய தொழிலாளிகளையும் உடைமையற்ற உழைக்கும் மக்களையும் உருவாக்கி உள்ளது.பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் உள்ள எதிரெதிர் வர்க்க முரண்களின் பொருளாதார நலன் வேறுபட்டுள்ளது போலவே ஜாதி ஒழிப்பு விஷயத்திலும் அடிப்படையிலே முரண்பட்ட தன்மைகளை கொண்டுள்ளனஇந்த இரு பிரிவுகளும் தம் தம் பொருளாதாரம் நலன்களை அடிப்படையாகக் கொண்டு ஜாதி ஒழிப்பு விசயத்தை அணுகுகின்றனர்.கடந்த கால இவர்களின் ஜாதிய உடைத்து போராட்டங்கள் முன்வைக்கப்பட்ட பார்ப்பன எதிர்ப்பு சமூகநீதி சமத்துவம் போன்றவை ஜனநாயக அம்சத்தை கொண்டிருந்தாலும் அவை பெரும்பாலும் இந்த சமூகத்தின் மேல் தட்டு வர்க்கத்தின் பொருளாதார நலனை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்டதாகும். இவர்களுக்கு எதிரணியில் இருக்கும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் உடைமையற்ற உழைக்கும் மக்கள் பொருளாதார சுரண்டில் இருந்து விடுபடுவது என்பதும் ஜாதியை ஒழிக்க முடியலஅதேபோன்று தாழ்த்தப்பட்ட சமூகத்துக்குள் தோன்றியுள்ள எதிரேதி முரண்களைக் கொண்டுள்ள இரு வர்க்கப் பிரிவினரின் ஜாதி ஒழிப்புக்கு அணுகுமுறை வேறுபட்டு இருக்கும் அதிகார  வர்க்கமாகவும் உடமை வர்க்கமாக மாறி உள்ள தாழ்த்தப்பட்ட பிரிவினர்  பொருளாதார நலன் எதிர் எதிராகஇருப்பதைகாணலாம். பரந்து விவசாய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கின்ற மக்களின் நலனிலிருந்து வேறுபட்டதாகும்.அதிகார வர்க்கமாகவும் உடமை வர்க்கமாகவும் மாறி விட்டா தாழ்த்தப்பட்ட பிரிவினர் பொருளாதார நலனும் இதர பரந்த விவசாயத் தொழிலாளர்உழைப்பாளர்கள்ஜாதி ஒழிப்புக்கான கண்ணோட்டம் மற்றும் அணுகுமுறை இரு பிரிவுகளின் நலனை அடிப்படையாகக் கொண்டு நிச்சயம் வேறுபட்டே இருக்கும்.

தலித்தியம் தலித் ஒற்றுமை தலித் விடுதலை போன்ற தாழ்த்தப்பட்டு மக்களிடையே தோன்றியுள்ள மேல் தட்டு பிரிவினரின் கண்ணோட்டத்தில் இருந்து வைக்கப்பட்ட அணுகுமுறையை அன்றி அடித்தட்டுமக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படவில்லைசிறு உடமை கொண்டு இருத்தலும் அப்ப பிரிவினரில் ஜாதி ஒழிப்பு அதற்கான ஒரு எல்லை இருக்கவே செய்யும் ஆனால் உடைமையற்ற உழைக்கும் வர்க்கத்தின் அணுகுமுறையோ ஜாதி ஒழிப்பை இறுதியாக்கும்.

ஆக ஜாதி ஒழிப்பு போராட்டம் வர்க்க போராட்டதின் ஊடேதான் உழைக்கும் மக்கள் ஒன்று திரட்டி போராடினால் மட்டுமே சரியான திசை வழியில் இந்த போராட்டம் பயனிக்கும் என்று நிறுத்துகிறேன்... அடுத்த பதிவில் தொடரும் தோழர்களே.....

 


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்