புதிய காலனிய இந்தியாவில் உள்ள இந்துத்துவா பாசிசத்தை அறிந்து கொள்ள, புரிந்துகொள்ள அதை வரலாற்றுப் பூர்வமாக ஆய்வு செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும். ஆகையால் கம்யூனிஸ்டுகளாகிய நாம் நமக்கான சமூக அறிவை பெற்றிருந்தால் மட்டுமே, உழைக்கும் மக்களின் பிணங்களின் மீது அரசியல் செய்யும் அயோக்கியதனங்களை தோலுறித்துக் காட்ட முடியும். கரூர் போன்ற துயர சம்பங்களை புரிந்துக் கொள்ளும் திறன் நமக்கு கிடைக்கும்.
நீண்ட நெடிய இந்த இதழ் ஓரளவு பாசிசம் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளோம் வாசித்து கருத்திட அழைக்கிறோம் தோழர்களே.
கம்யூனிஸ்டுகள், தொழிலாளி வர்க்கத்தின் லட்சியங்களுக்கும் எந்தவிதசம்பந்தமும் இல்லையென்று கருதினால், மக்களுடைய கடந்த காலத்தைப் பற்றிய வரலாற்றுப்பூர்வமாக மிகச் சரியாக, மார்க்சிய - லெனினிய வழியில் தெளிவுபடுத்தி மக்களை ஒளிபெறச் செய்யவில்லையானால், இன்றைய போராட்டங்களை மக்களுடைய கடந்தகால புரட்சிகரமான பாரம்பரியங்களுடன் இணைப்பதற்கு ஏதும் செய்யாமலிருந்தால் நாமே பாசிச பொய்யர்களிடம் நாட்டின் கடந்தகால வரலாற்றுச் சிறப்புகள் அனைத்தையும் எடுத்துக்கொடுத்து அவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு வழி செய்து கொடுத்தவர்கள் ஆவோம். நாம் வர்க்க வரலாற்றை பேசாவிட்டால் இவர்கள் மன்னர் கடவுளர்களின் புகழ்பாடி உழைக்கும் மக்களை ஏய்க்கவே செய்வர்!
ஆக தோழர் டிமிட்ரோவ் பாசிசத்தின் பொதுப்பண்புகளையும் அதன் பொதுவர்க்க இயல்புகளையும், ஒவ்வொரு நாட்டின் அதன் குறித்த பண்புகளையும் அதன் குறித்த வர்க்க ஆய்வுசெய்து புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் மற்றும் பாசிச இயக்கமானது தனதுவாய்ச்சவடால் மூலமும், பொய் பித்தலாட்டம் மூலமும், வரலாற்றை இட்டுக்கட்டியும் திரித்தும்புரட்டியும் தனது வர்க்க நலனை மறைத்து உழைக்கும் மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதை அம்பலப்படுத்தி மக்களுக்கு புரிய வைக்கிற ஒரு தொடர்ச்சியான சித்தாந்த போராட்டத்தை நடத்தாமல் பாசிசத்தை வெற்றி கொள்ள முடியாது என்கிறார்.
புதிய காலனிய இந்தியாவில் உள்ள இந்துத்துவா பாசிசத்தை அறிந்து கொள்ள, புரிந்துகொள்ள அதை வரலாற்றுப் பூர்வமாக ஆய்வு செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும். அதே சமயத்தில் இந்தியா ஒரு நாடாக, ஒரு இந்திய தேசமாக கட்டியமைக்கப்பட்ட வரலாற்றோடு, இந்து, இந்துமதம், இந்து தேசியம் மற்றும் இந்திய தேசியம் என்று பலதரப்பட்ட கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வரலாறோடும், இணக்கமாக ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக வாழ்ந்த இந்து முஸ்லீம்மக்களை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் பிளவுபடுத்தி இருதரப்பையும் மோதவைத்து லட்சக்கணக்கில் கொலை செய்த வரலாற்றோடும் இங்குள்ள தேசியஇன மக்களின் (தமிழர், தெலுங்கர்,கன்னடர் மற்றும் மலையாளி......இன்னபிற) தேசியஇன மொழிவாரி அடிப்படையிலான தேசியத்தை புறக்கணித்துவிட்டு பாசிசம் உருவாவதற்கு அடிப்படையான செயற்கையான, ஆரிய இனம்-திராவிட இனம் என்ற பிரிட்டீஷ் காலனிய ஆதிக்கவாதிகளின் காலனிய இனவியல் மற்றும் மதரீதியான பிளவுவாத கோட்பாடுகள் உருவாக்கப்பட்ட வரலாறோடும் தொடர்புபடுத்தியும் பார்க்க வேண்டும்.
இங்கு 200 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த முகலாயர்கள் மற்றும் 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்குள் நுழையும்போது இந்தியா ஒரு திட்டவட்டமான ஒருங்கிணைந்த நாடாகவோ ஒருங்கிணைந்த தேசமாகவோ ஒருங்கிணைந்த சட்டத்தைக்கொண்டு ஆளப்பட்டு இருந்ததில்லை என்பது ஒரு வரலாற்றுப் பூர்வமான உண்மை. அப்படி உருவாவதற்கான எந்த அடிப்படைத் தேவையும் இங்கு ஏற்பட்டு இருக்கவில்லை. முகலாயர்கள் உட்பட பலதரப்பட்ட அந்நிய பேரரசுகள் மற்றும் பிரிட்டீஷ் உட்பட டச்சு, போர்த்துகீசியர் மற்றும் பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்தியங்கள் வாணிபம் செய்யவந்து பின்னர் சூழ்ச்சியாக இங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அவைகளின் நோக்கமானது ஐரோப்பா கண்டத்து அளவிலான இந்த பரந்து விரிந்து கிடந்த பிரதேசத்தை கொள்கையடிப்பதற்கே ஆகும்.
ஆனால் அதில் ஒரு வித்தியாசம் மொகலாயர்கள் படையெடுத்து அதிகாரத்தை கைப்பற்றி இங்கேயே வாழ்ந்து வந்தனர். அவர்களது சொத்துக்கள் இங்கேயே இருந்தது. இங்கேயே செலவழித்தனர். இங்கேயுள்ள கலாச்சாரத்தோடு இயைந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் இங்கு கொள்ளையடித்து வந்த பிற காலனிய போட்டியாளர்களை வென்று இறுதியில் ஆட்சியில் அமர்ந்த பிரிட்டீஷாரோ தொடர்ந்து கொள்ளையடித்து இந்த நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் தனது சொந்த நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அவர்கள் நம்மோடு கலந்துவாழவில்லை. நம்மை தீண்டத்தகாதவர் களாகவும், அடிமைகளாகவும் நடத்தினர். பிரிட்டீஷார் அதற்காக மட்டுமே சட்டதிட்டங்களை வகுத்து இங்குள்ள மக்களைக் கொண்டே ஒருபடையைக்கட்டி ஒரு கொடூர சர்வாதிகார ஆட்சியை நடத்தினர். இந்த பரந்த நாட்டில் அவர்களது கொள்ளைகளையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்து மக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை போராட்டம் நடத்தினர். அவர்கள் ஆட்சியை எதிர்த்து ஒன்றுபட்டு போராடிய அனைத்துதரப்பினரையும் சதித்தனமாக பிளவுபடுத்தி மேலும் சாதி மற்றும் மதக்கலவரத்தின் மூலமும் கொடூர ஒடுக்குமுறையின் மூலமும் லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர். பிரிட்டீஷாரின் காலனியத்தை கட்டிகாப்பாற்றுவதற்கான காலனிய இனவியல் கோட்பாடு.......
பிரிட்டீஷ் இந்த நாட்டில் காலனிய ஆட்சியை மேற்கொண்டபோது இங்கு நூற்றுக்கணக்கான மொழிகள் பேசக்கூடிய மக்களினங்களும், ஆயிரக்கணக்கான சாதிய பிரிவுகளும், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், புத்தமதத்தை சார்ந்தவர்கள், சைவர்கள், வைணவர்கள், சமணர்கள், ஆயிரக்கணக்கான குலதெய்வ மற்றும் சிறுதெய்வ, பெருதெய்வ வழிபாட்டு பிரிவினர்கள் போன்ற பல்வேறுபட்ட இறைவழிபாட்டு பிரிவினரே இங்கு இருந்தனர் பழக்க வழக்கங்களிலும் பண்பாட்டிலும் ஒருவரொக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவர்களாக வேறுபட்டவர்களாக இருந்தனர். இந்து என்ற சொல்லோ இந்து மதமோ இங்கு இருக்கவில்லை. வேதங்களிலோ மற்றும் இந்துமத சாஸ்திர நூல்கள் என்று கூறப்படும் பழைய நூல்களிலும் கூட இந்து என்ற சொல் கிடையாது. இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், புத்தமதத்தை போன்று திட்டவட்டமான ஒரு பொது இறைவழிபாட்டு முறை என்பது இந்துக்கள் அல்லது இந்து மதத்திற்கென்று இன்றுவரை கிடையாது. ''இந்து'' என்ற சொல்லுக்கு விளக்கமானது ''யார் கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி, புத்தமத பிரிவினர் மற்றும் இஸ்லாமியர் பிரிவுகளை சார்ந்தவராக இல்லையோ அவரே ''இந்து'' என்று பிரிட்டீஷார் வகைப்படுத்தினர்.
இதற்கு ஒப்புதல் சாட்சியாக காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியாரின் கூற்றொன்றை இங்கு கூறுவது சரியாக இருக்கும்.
அவர் கூறுவதாவது: "நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாக சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக்காப்பாற்றியது. அவன் மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருகபக்தர், பிள்ளையார் உபாசகர், ஐப்பன் பக்தர், எல்லையம்மனை கும்பிடுகிறவர் என்று நம்மை பிரித்துக்கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக்கொண்டிருப்போம். இப்போது “இந்து சமூகம்'' என்று பொதுப்பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழு, எட்டாக தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால் அதற்கப்புறம் ஒவ்வொரு ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போன்ற மதத்தவர்கள்தான் அதிக தொகையாக இருப்பார்கள். அதாவது இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாக்கிஸ்தான் முளைத்திருப்பது போல் இல்லாமல் நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகி இருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான் எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர் திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன்தான் தன்னையும் அறியாமல் நமக்கு இந்து என்று பொதுப்பெயரைத் தந்து இன்று இந்திய தேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகாபெரிய நன்மையை செய்திருக்கான்" சந்திரசேகரேந்திரசரஸ்வதி (காஞ்சி பரமாச்சாரியார்) தெய்வத்தின் குரல், பாகம் ஒன்று, ஏழாம் பதிப்பு, 1988, வானதி பதிப்பகம், சென்னை, பக்கம் 305 – 306.
ஆக நாம் பிரிட்டீஷாரை புரிந்துகொள்வது என்றால் அவர்களின் காலனி ஆதிக்கத்தின் வரலாறை புரிந்துகொள்வதுதான். முதலில் உலகம் முழுக்க ஐரோப்பியர்களுக்கு காலனிகள் இருந்தன. ஐரோப்பியகாலனி ஆதிக்கவாதிகளான பிரிட்டன், ஹாலந்து, போர்த்துகீஸ், பிரான்ஸ், இத்தாலி, மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் தாங்கள் காலனி ஆதிக்கம் செலுத்துவதற்கான தகுதியான இனம் என்று தங்களது நாட்டிலும் தாங்கள் ஆளுகின்ற காலனிய நாட்டிலும் நியாயப்படுத்தவும் காலனிய நாடுகளில் இனபாகுபாடுகள் மதபாகுபாடுகள் மற்றும் சாதியபாகுபாடுகள் (இந்தியாவில்) இவைகளை இட்டுகட்டி கட்டியமைத்து காலனிய மக்கள் தங்களை எதிர்த்து போராடாதவாறும் அவர்கள் மத்தியிலேயே பகை முரண்பாட்டை உருவாக்கி மோதவைக்கவும், தொடர்ந்து காலனியாதிக்கம் செலுத்தவும் காலனிய இனவியல் கொள்கையை 18 ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டு முற்பாதியிலும் உருவாக்கினர். இவற்றில் தீவிர ஆர்வமும் அக்கறையும் எடுத்துக்கொண்டது பிரிட்டீஷ்தான். காரணம் உலகத்தில் பிரிட்டனுக்குத்தான் மிகப்பரந்து விரிந்து பரந்த செல்வ வளமிக்க இந்தியா உட்பட காலனிகள் ஆதிக்கம். அவர்களுக்கு அத்தகைய இனபேத ஆய்வு தேவைப்பட்டது. அந்த ஆய்வுகளில் முதன்மையாக பங்கெடுத்தவர்கள் வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் முல்லர் மற்றும் ஹெர்பர்ட்ரிஸ்லே இன்னும் பலர் ஆவர். அந்த ஆய்வின் மூலமாக ஆதியில் மத்திய ஆசியாவில் பேசப்பட்ட ஒரு தெய்வீக மூலமொழியிலிருந்து சமஸ்கிருதம், பார்சி, லத்தீன், கிரேக்கம், கோதிக் மற்றும் கெல்டிக் மொழிகள் தோன்றின. அதிலிருந்து அதன் கிளை மொழிகள் தோன்றின. இதன்மூலம் ஆரிய மேலான்மை கோட்பாடும் ஐரோப்பிய வெள்ளைத்தோல் மேலான்மை கோட்பாடும் நிறுவப்பட்டது. மஞ்சல் நிறம், பழுப்பு நிறமு மற்றும் கருப்பு நிறம் தாழ்ந்த இனமாக காட்டப்பட்டது. மேலே குறிப்பிட்ட மொழிகளிலிருந்து தோன்றிய மொழிகளான ஈரானிய மொழிகள், பிரெஞ்சு, ஸ்பானிஸ், இத்தாலி, கிரேக்கம் மற்றும் ஹெலனிய மொழிகள் ஆங்கிலம், டச்சு மற்றும் ஜெர்மானிய மொழிகள், ஐரிஸ் மற்றும் வேல்ஸ் மொழிகள் இவைகளை தவிர ஏனைய மொழிகள் அனைத்தும் தாழ்ந்த மொழிகளாக காட்டப்பட்டது. இறுதியிலே இங்குள்ள பிராமணர்களும் ஐரோப்பிய ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்துவந்து இங்கிருந்த தாழ்ந்த குலங்களை வென்று அடிமைப்படுத்தி ஆரிய நாகரீகத்தை உருவாக்கினார்கள். ஐரோப்பிய ஆரியர்களாலும் இந்திய ஆரியர்களாலும் பொதுவாகப் பேசப்பட்ட மொழி சமஸ்கிருதமாகும் இந்தியாவிலுள்ள ஏனையஅனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து உருவானவையாகும். இந்த ஆய்வுகள் எல்லாம் விவிலியத்தை ஆய்விற்கு எடுத்துக்கொண்டு செய்யப்பட்ட முடிவுகளாகும். இவைகள் வரலாற்றையும் விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டு புறவயநிலைமைகளை ஆய்வு செய்து வந்தடைந்த முடிவுகள் அல்ல. அவைகள் கற்பனையான உண்மைக்கு புறம்பான கருத்துமுதல்வாத முடிவுகளே.
மனுதர்ம அடிப்படையில் சாதிய பாகுபாடுகளை உருவாக்கி திடப்படுத்திய பிரிட்டீசாரின் பிராமணிய சட்டத்தொகுதி மேலும் 18 ஆம் நூற்றாண்டு இறுதியில் இந்திய மக்கள் மத்தியில் தோன்றும் சர்ச்சைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சட்ட விதிகளின் தொகுதி ஒன்றை உருவாக்க அன்றைய கவர்னர் ஜெனரல் வாரன்ஹேஸ்டிங்ஸ் ஜென்டூ சட்டத்தொகுதி அல்லது பண்டிதர்களின் புனித ஆணைகள் என அழைக்கப்பட்ட விதிமுறைகளை உருவாக்க - 11 சமஸ்கிருத பண்டிதர்களை நியமித்தார். இங்குள்ள சமஸ்கிருத ஏடுகளை பிரிட்டீஷாரால் படிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியவில்லை எனவே அவர்கள் இந்தியாவின் மதநூல்கள் மற்றும் சமூக பழக்கவழக்கங்களில் பண்டிதர்களுக்கு இருந்த புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டத் தொகுப்பு ஒன்றை உருவாக்கும்படி அவர்களை கேட்டுக்கொண்டனர். அதன் விளைவாக ஆங்கிலோ-பிராமணிய சட்ட நூல் ஒன்று உருவானது. அது வர்ணாஸ்ரம தர்மத்தை (மனுஸ்மிருதி) அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டது. அது முற்றிலுமாக வார்த்தை அளவிலும், உணர்வுகள் அளவிலும் உண்மையான நடைமுறைகளை மீறியதாக இருந்தது. ஏனென்றால் வார்த்தைகளைப் பொறுத்தவரை மூலங்களுடன் ஒப்பிடுகையில் அது துல்லியமற்று இருந்தது. உணர்வுகளைப் பொறுத்தவரை தங்களுக்கு அளிக்கப்பட்ட பணியை தங்கள் சாதிக்கு ஏற்றவாறு திரிக்கும் உரிமைகளாக எடுத்துக் கொண்டிருந்தனர். உண்மையில் அதற்கு எவ்வித இலக்கிய ஆதாரங்களும் இல்லாமல் இருந்தது. நாட்டில் சாதிய வேறுபாட்டு பிரச்சனைகளை ஏற்றத்தாழ்வு, அல்லது உயர்வு தாழ்வு பிரச்சனைகளாக இன்னும் பெரிதாக்கவே அது உதவியது.
நல்லாதரவை நன்கு அனுபவித்தனர். அத்துடன், பிராமண பண்டிதர்களின் எண்ணங்களால் உந்தப்பட்டு, தாழ்ந்த சாதி என எண்ணிய மற்ற இனங்களை விட தாங்கள் மேலானவர்கள் என்றும் பிராமணர்கள் நினைக்கத் தொடங்கினர். அதன் விளைவாக, பிரிட்டீஷ் அரசாங்கத்தின் மிக முக்கிய பதவிகளில் எல்லாம் பிராமணர்கள் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினர். இத்தனைக்கும் மொத்த மக்கள் தொகையில் அவர்களுடைய எண்ணிக்கை 10 சதவீதம் மட்டுமே. ஆனால் அன்றைய இந்திய அரசுப் பணிகளில் அவர்கள் 90 சதவீத இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். அதே வேளையில் மிகக் கீழ்நிலை பணிகளில் மட்டும் அவர்கள் இல்லை. இந்தியர்களுக்கு வாய்ப்பு இருந்த உயர் தொழில்களில், குறிப்பாக சட்டம், மருத்துவம் மற்றும் நிர்வாகத் துறைகளில் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர். பின்னர் அவர்கள் பத்திரிக்கை மற்றும் கல்வித்துறைகளில் நுழைந்தனர். எனவே, அதிலும் அவர்களின் குரல்தான் ஓங்கி ஒலித்தது. அதுவே இந்திய வெகுஜன கருத்தாகவும் மாறியது. பிராமணர்களுக்கு இத்தகைய ஆதிக்க அந்தஸ்த்தை வழங்கிய பிரிட்டீஷாரின் வருகைக்கு முன்னர் இந்தியா தகுதி மற்றும் திறமை அடிப்படையிலான மேலான சமுதாயமாகத்தான் இருந்தது. பொய்யும் புரட்டையும் கொண்ட ஆங்கிலேயர் கட்டியமைத்த வரலாறே இன்று பாசிச ஆட்சிக்கு பயன் உள்ளதாக உள்ளது. அதேபோன்று இத்தகைய சமூகச் சூழல் நிலவுகையில்தான், 19 ஆம் நூற்றாண்டின் இனம் சார்ந்த கருத்துக்களும் (ஆரிய, திராவிட, மங்கோலிய, நீக்ரோ துராணியர், செமைட்டியர்.....இன்னும் இதுபோன்ற) வந்து சேர்ந்து கொண்டன. அமெரிக்க அறிஞர் தாமஸ் மெட்காஃப் இந்த சகாப்தத்தில் கடைபிடிக்கப்பட்ட வெள்ளைத்தோல் பெருமித இன உணர்வு எவ்வாறு ஐரோப்பிய நாகரீகத்தை உச்சத்தை எட்ட வைத்தது, அதே நேரத்தில், கறுப்பு நிற மக்களைக் கற்கால மனிதர்களாகவும், பலவீனமானவர்களாகவும், முன்னேற்றம் அடைவதற்கு ஐரோப்பிய அரவணைப்பை வேண்டி நிற்பவர்களாகவும் சித்தரித்தது என்பதை எடுத்துக் காட்டினார். வெள்ளையரின் இரண்டு நூற்றாண்டுகால ஆதிக்கத்தில் இருக்க நேர்ந்த இந்த நாட்டில் வாழ்ந்த மக்களும் இத்தகைய கருத்துக்கள் பலவற்றை தமதாக்கும் நிலைக்கு தவிர்க் இயலாமல் உள்ளாகி பிரிட்டீஷாரின் ஆதிக்கத்தின் கீழ் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டனர். இன்று அதன் மேலாத்திகம் ஆட்சியாளர்களின் தேவைக்கு பணியாற்றுகிறது.
மார்க்சியம், வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் சமூகத்தை ஆய்வு செய்ய சொல்கிறது. அன்று நிலவிய உற்பத்தி முறை என்னவோ அதன் அடிப்படையில் அம்மக்களின் வளர்ச்சியை வர்க்க அடிப்படையில் புரிந்துக் கொள்ள முடியும் என்கிறது, ஆனால் இந்திய வரலாற்றெழுதிகளோ இதனை கண்டுக் கொள்ளவே இல்லை. இங்கு எழுதப்பட்டுள்ள எல்லா வரலாற்று நூல்களும் வேதகாலத்தை மையமாக வைத்தே ஆய்வு செய்து எழுதியுள்ளனர். உண்மையில் வேத காலம் மற்றும் வேதஇலக்கியங்களை அடிப்படையாக ஆராய்ச்சிகள் கொண்டுள்ளதால் பலவீனம், நிறைகுறைகள், அறிவுக்கு ஒவ்வாத மனம்போன போக்கிலான புனைவுகளே அவர்களின் தேடல்கள். மௌரியர் காலத்திலும் முகலாயர் காலத்திலும் அரசியல் அடிப்படையில் இந்திய துணைக்கண்டம் ஓரளவு ஒன்றிணைந்த நாடாக உருவாகும் நிலையில் இருந்தது. இருந்தாலும் 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்தான் ஒன்றுபட்ட வலிமையான மத்திய ஆட்சி ஒன்றிணைப்பு முழுமையாக நிறைவேறியது. அப்படி இருக்கும் பொழுது இந்தியாவைப் பற்றிய காலனி ஆட்சியாளர்களின் பொய்யான புரட்டுகளையே இந்திய வரலாறாக திணிப்பதும் அதனை ஏற்றுக் கொள்வதும், இல்லாத ஒன்றை இங்கே பேசிக் கொண்டிருப்பது தவறானதாகும். பாசிசத்தை கற்பதும் அதை இல்லாதொழிக்கவே.
நூல் ஆதாரங்கள்:-
1). பாசிசம் குறித்து டோக்ளியாட்டி
2). பாசிசம் பற்றி இலக்கு இணைய இதழ் கட்டுரைகள்- தோழர் பிரேம சந்திரன்
3). (இனங்களும் இனக் கொள்கைகளும் டாக்டர் மிஹயீல் நைஸ் தூர்ஹ் மீர் பதிப்பகம் மாஸ்கோ சோவியத்து நாடு 1974).
4). சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில்.
ஆரியர் என்ற இனமோ திராவிடர் என்ற இனமோ இந்திய துணைக் கண்டத்தில் இல்லை. அன்றைய வர்க்கமாக திரளுவதை மடைமாற்ற ஆங்கிலேயர் கையில் எடுத்த ஆயுதமே ஆரியர்-திராவிடர் மோதல்.
இலக்கு 81 இணைய இதழ் பி.டி.எப் வடிவில் இந்த இணையத்தில் அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்
No comments:
Post a Comment