நக்சல்பாரி எழுச்சியும் படிப்பினைகளும்- இலக்கு 79 இதழ்

 இந்திய வரலாற்றில் விடுதலைக்கான போராட்டத்தில் ஆரம்பகால கம்யூனிஸ்டுகளின் தன்னலம் கருதாத போராட்டம் தியாகம் மற்றவர்களின் எல்லாப் போராட்டங்களை விட மேலானது, உயர்வானதாகும். அதிலும் குறிப்பாகப் புரட்சிக்காகப் போரிட்ட நக்சல்பாரி தியாகிகளின் போராட்டம் புரட்சி தீயில் தன்னைப் புடம் போட்டது மிகவும் மதிக்கத்தக்கதாகும்;இந்திய வரலாற்று பக்கங்களில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டியவை. அவை, அவர்களின் உயர்வான பணி தியாகம் மற்றும் செயல் பற்றி பேசும் அதே நேரத்தில் அவர்களின் புரியாமல் செய்த தவறான பக்கங்களையும் விரிவாக ஆராயவேண்டிய அவசியம் உள்ளது.

கடந்த காலத்தை வெறுமனே தெரிந்து கொள்வதற்காக மட்டுமே நாம் கடந்த காலத்தை பற்றி அக்கறை கொண்டிருக்கவில்லை, கடந்த காலத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு தற்போதைய காலத்திலும், எதிர்காலத்திலும் நாம் முன்பு செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் தவிர்ப்பதற்கும் நாம் முன்புசெய்த சரியான விசயங்களை மேலும் செழுமைப்படுத்தி செயல்பட வேண்டும், அதற்காகவே கற்க வேண்டியுள்ளது.

சாருவை சாடுவோர் நக்சல்பாரி இருந்துதான் எல்லாம் தொடங்கியதாக பேசுவோர் உண்மையில் நக்சல்பாரியும் அதன் தொடர்ச்சியும் ஒரே இரவில் நடந்து விடவில்லை.

அதன் அடிப்படைகள் இந்தியாவின் விவசாய இயக்கத்தின் போர்க்குணம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் இது தெளிவான ஆழமான வேர்களைக் கொண்டிருந்தது. பிரிக்கப்படாத வங்காளத்தின் உழைக்கும் விவசாயிகளின் நிலம் மற்றும் அடிப்படை உரிமைகளை மையமாகக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தெபாகா இயக்கத்தின் முன்னணி அமைப்பாளர்களுள் ஒருவரான சாரு மஜூம்தார், 1948 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது அந்தக் காலத்தின் பல கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் அவரும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, வடக்கு வங்காள மாவட்டங்களான டார்ஜிலிங், ஜல்பைகுரியில் நடந்த தெபாகா போராட்டத்திற்கு அவர் திரும்பினார். தெபாகா நாட்களில் இருந்து தொடர்ந்த போர்க்குணமிக்க விவசாயிகள் இயக்கத்துடனான இந்த ஆழமான நீடித்த தொடர்புதான் நக்சல்பாரியில் விவசாயிகளின் எழுச்சியும் அதனை பரந்த விவசாயப் புரட்சியை நோக்கி வழிநடத்த சாரு மஜூம்தாருக்கு வழிகாட்டியக அமைந்தது.

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நடந்த மாபெரும் விவாதத்தில் ஏதாவது ஒரு தரப்பை ஆதரிப்பது பற்றிய கேள்வி அவருக்கு முக்கியமானதாக இருக்கவில்லை; மாறாக மிக முக்கியமாக, இந்தியாவிற்கான வர்க்கப் போராட்ட அரங்கில் பெரும் புரட்சிகர ஆற்றலைக் கட்டவிழ்த்து விடுவது பற்றியதாக இருந்தது. அங்கேதான் தத்துவத்தை போதித்து நடைமுறையாக்குவதில் அவருக்கான போதாமை எனலாம்.

நக்சல்பாரியின் விவசாயிகளின் எழுச்சி மாணவர்களிடையே மாபெரும் புரட்சிகர விழிப்புணர்வை ஏற்படுத்தியபோது, சாரு மஜும்தார் மாணவர்களை உடனடியாக கிராமங்களுக்குச் சென்று நிலமற்ற ஏழைகளுடன் ஒன்றிணையும்படி அழைப்பு விடுத்தார். உண்மையில் அவர் தனது இளமைக் காலத்தில் கடந்து வந்த பாதையிலேயே மறுபடியும் பயணித்தார். இளைஞர்கள், இந்தியாவின் உழைப்பாளிகள் மற்றும் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான்.

நக்சல்பாரிக்குப் பிறகு, இந்தியா முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்து புதிய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதை உணர்ந்தனர். இந்தப் புதிய கட்சியைத் தொடங்கும் போது, சாரு மஜும்தார் அதன் புரட்சிகர மரபு குறித்து வலியுறுத்தினார். அவர், புதிய கட்சியை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புரட்சிகர நீரோட்டமாகக் கண்டார்; இது கேரளாவின் கையூர் மற்றும் புன்னப்புரா வயலார் எழுச்சிகள், ஆந்திராவின் மாபெரும் தெலுங்கானா இயக்கம் மற்றும் பிரிக்கப்படாத வங்காளத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெபாகா விழிப்புணர்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனக் கருதினார்.

அன்றும் இன்றும் அவர் கண்ட கனவு நனவாகமல் உள்ளது அதற்கு தேவை ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அவைதான் இல்லை. அவை இன்று பலபெயர்களில் புரட்சியைவிட நிலவும் அமைப்புமுறையில் தங்களை உயர்த்திக் கொள்ள தாங்கள் வாழ போரிட்டுக் கொண்டுள்ளது ஆனால் அவை சாரூவின் பெயரை தேவைப்படும் பொழுது பயன் படுத்திக் கொள்ள தவறுவதில்லை.

1972 சாரு கொல்லப்பட்டதற்கு பிறகு பல பெயர்களில் கட்சி உருவாகி இன்று குழுக்களாக குறுங்குழுக்களாக இயங்கும் நிலை அவை தேவைக்கு புரட்சியாளர்களின் பெயர்களை உச்சரிக்கின்றது உண்மையில் அவர்களின் செயலோ ஆளும் வர்க்க சேவையில் ஏதோ ஒருவகையில் தொடர்கிறது.

இதோ அப்பு தொடங்கி அதன் வாரிசுகளாக பேசும் பலர் அவர்களின் தியாகம் அர்பணிப்பை பங்கு போட்டுக் கொள்ள நினைக்கும் அர்ப்பர் கூட்டம் அவர்களின் செயல்பாடுகளை விமர்சன பூர்வமாக சரியான வழியில் கொண்டு செல்ல யார் உள்ளனர்?

அடையாள அரசியலில் ஒருபக்கம் சிக்குண்டுள்ள குழுக்களும் தங்களை நகசல்பாரி எனும் பொழுது இவர்களின் செயலோ ஆளும் வர்க்க சீர்திருத்தவாதிகளை ஆரத்தழுவி வாழும் அவலம். (இதில் அம்பேத்கர் பெரியாரை தூக்கி பிடிக்கும் குழு கட்சி எல்லாவற்றிக்கும் பொருந்தும்).

நாங்கள் மட்டுமே உண்மையானவர்கள் புரட்சிக்கானவர்கள் என்று 50 ஆண்டுகளுக்கு மேல் வாழும் குழுக்களின் சாதனை என்ன? அடுதடுத்த உடைவுதானே? ஏன் இவை அவரகள் சிந்தித்துண்டா? தனிநபர் துதிபாடல் அல்ல இவை புரட்சிக்கான பணி.

அதற்கு சாரூ போன்ற உண்மையான அர்பணிப்பும் தியாக உணர்வும் கொண்டவர்களால் மட்டுமே முடியும். தியாக தோழர்கள் அப்பு பாலன் போன்ற தியாகிகளை அமைப்புதான் வளர்த்தது அவர்களை தனிநபராக பார்க்காதீர் அவர்கள் சார்ந்த அமைப்பின் செயலை பாருங்கள் என்றார் அண்மையில் சந்தித்த தோழர் ஒருவர். அவரிடம் நான் வைத்த கேள்வி சீராளனை, வேலு-ஜெய தம்பதியினர் தியாகத்தை அவர்களின் உண்மையான பணியை நீங்கள் ஏன் மக்கள் மத்தியில் பேச கூட முடியவில்லை? அவர்கள் தாங்கள் இறுதிவரை உண்மையாக வாழ்ந்து தியாகி ஆனார்கள். இந்த தலைவர்களுக்கு அந்த தோழர்களின் அர்பணிப்பிற்கு பிறகு தங்களின் பெயர் பலகையை தொங்கவிட நினைக்கின்றனர் ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த கூட தயங்கும் அர்பர்களே உங்களின் இன்றைய பெயருக்கு உழைத்தவர்கள் அவர்கள்தான் அவர்களை நினைக்க கூட உங்களுக்கு நா கூசுகிறதோ? கடந்தகால படிப்பினைகள் இன்றைய செயலுக்கும் ஏதாவது பொருத்தபாடு உள்ளதா இவர்களே பதிலளிக்க கடமைபட்டவர்கள்.

தியாகம் அர்பணிப்பு எல்லோரிடமும் உள்ளவை அல்ல! தலைமை தாங்குபவர்கள் எல்லோரும் தலைமைக்கான தகுதி படைதவர்கள்தான என்பது கடந்தகால படிப்பினைகளும் அவர்களின் நடைமுறை நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கிறது.

ஆக உண்மையான புரட்சியை நேசிப்போர் இடம் மட்டுமே உள்ளவைதான் தியாகம் அர்பணிப்பு. அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் அதற்கு மா-லெ வரலாற்று அனுபங்களினை கற்று தேர்வதும் அவசியம்.

தியாக தோழர்களை குறைகூற அல்ல! அவர்களின் வாழ்க்கையின் பாடங்களை கற்று ஒரு புரட்சிக்கான தாயரிப்பில் கவனம் கொள்ள வேண்டும் என்பதே.நக்சல்பாரி எழுச்சியும் அதன் தொடர்ச்சியுமாய் உதித்தெழுந்த இந்தியா தழுவி புரட்சிக்கான கட்சியாய் உருவான கட்சியை பேசும் பலரும் கடந்தகால படிப்பினைகள் இன்றைய நிலையில் அவர்களின் செயல்பாடு கவனத்தில் கொண்டு பேசுவதில்லை. பலர் மறந்தே போன சில நிகழ்வுகள். அவர்களை புரிந்துக் கொள்ள.

மே 25, 1967 அன்று, வங்காளத்தின் தெராய் பிராந்தியத்தில் நக்சல்பாரி கிராமத்தில் எட்டு பழங்குடிப் பெண்களையும் மூன்று பழங்குடி ஆண்களையும் ஒரு போலீஸ் குழு சுட்டுக் கொன்றபோது, சாரு மஜும்தார் இது ஒரு புரட்சியின் தொடக்கம் என்று அறிவித்தார்.

அத்தகைய அறிவிப்புக்கு ஆதரவாக கனு சன்யால் மற்றும் உள்ளூர் பழங்குடித் தலைவரான ஜங்கல் சந்தால் ஆகியோர் அவருடன் இருந்தனர். அன்றிலிருந்து இந்திய அரசியலுக்கு ஒரு புதிய வார்த்தையைக் கிடைத்தது அதுதான் நக்சலைட் - இது தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதங்களை எடுக்கும் பழங்குடி விவசாயிகளைக் குறிக்கிறது.

முழுமையாக வாசிக்க இந்த இணைப்பை பார்க்க

50 years of Naxalite movement: What happened at Naxalbari on May 25, 1967?

நக்சல்பாரி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அந்த விவசாயிகளின் நெஞ்சில் கனலை மீட்டியது. பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி, நிலப்பிரபுவால் வெறியேற்றப்பட்டார். வழக்குமன்ற உத்திரவு பிகுல் கிஷனுக்கு சாதகமாக இருந்த போதிலும் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை அடித்து விரட்டினர். வழக்கு மன்றமோ, அரசாங்கமோ தங்களைப் பாதுகாக்காது என்பதை இச்சம்பவம் விவசாயிகளுக்குப் புரியவைத்தது. சிலிகுரி வட்ட விவசாயிகள் மாநாட்டு அழைப்பை உடனடியாக அமலாக்குவதே சரியானது என்று அவர்கள் முடிவு செய்தனர்.

ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. 15,000 முதல் 20,000 விவசாயிகள் தங்களை முழுநேர ஊழியர்களாகப் பதிவு செய்து கொண்டனர். எல்லா கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய செங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தெழுவதை தோழர்கள் அவதானித்திருப்பீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் இவற்றை வளர்த்தெடுப்பதும், தலைமை தாங்கி வழி நடத்துவதும் நம் கடமை. நாட்டின் பல்வேறு மூலைகளில், தனித்தனியே, மக்கள் போராட்டங்களின் பல்வேறு அரங்குகளில் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்) உள்ளேயும் வெளியேயும் செயலாற்றி வரும் சக்திகளெல்லாம் ஒன்று படவேண்டும். மார்க்சியம்-லெனினியம் – மா சே துங் சிந்தனையின் ஒளியில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும்".

தனது முதல் பிரகடனத்தில் ஒருங்கிணைப்புக் கமிட்டி நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்திருந்த விவசாயிகளின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சார்பில் ‘லிபரேஷன்’ என்ற ஆங்கில பத்திரிகை கொண்டு வரப்பட்டது. இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு; இந்தியப் புரட்சியின் இலக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்; இந்தியப் புரட்சி, விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி; புரட்சிக்கான பாதை நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே; தேர்தலை புரட்சிக் காலம் முழுவதும் புறக்கணிப்பது போன்ற அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவித்தது. மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையே சித்தாந்த வழிகாட்டி எனவும் பிரகடனம் செய்தது.

நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது.

ஆளும் வர்க்கங்கள் இன்றும் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி – இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – ஏப்ரல் 22, 1969 அன்று பிறப்பெடுத்தது.

நக்சல்பாரி பகுதியைப் பொருத்தவரை, அங்கு எழுந்த அந்தப் பேரெழுச்சியை திருத்தல்வாதிகளின் தலைமையிலான ஜக்கிய முன்னணி ஏவிய போலீசுத் தாக்குதலால் அப்போதைக்கு ஒடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய நாடு பழைய இந்திய நாடாக ஒருபோதும் நீடிக்க முடியவில்லை.

அதைத் தொடர்ந்து வந்த சங்கிலித் தொடரான விளைவுகளும் எதிர்விளைவுகளும் அடங்கிய நிகழ்வுகள் அரசியல்களத்தை மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் சமூக, பண்பாட்டு சூழலையே குலுக்கி எடுத்துவிட்டது. ஆண்டாண்டு காலமாய் அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும் இலக்காகி இருக்கும் கூலி ஏழை உழவர்களின் உலகை – அதாவது இந்திய நாட்டின் இருள் சூழ்ந்த மூலைமுடுக்குகளுக்கெல்லாம் வெவ்வேறு பகுதிகளில் நாட்டுப்புற ஏழை எளிய மக்கள் நடத்திய அடுத்தடுத்த ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் ஒளிபெறச் செய்தன.

சிறீகாகுளம், தெலுங்கானா, பஞ்சாப், உ.பி., பீகார், கேரளா, தமிழ்நாடு,அசாம், காசுமீர் என்று குறுக்கு நெடுக்காக நாடெங்கிலும் விவசாயிகளின் வர்க்கப் போர் காட்டுத் தீயாய்ப் பற்றிப் படர்ந்தது.

‘வேலை நிறுத்தம் என்றால் கதவடைப்பு’ என்று மிரட்டிய ஆலை முதலாளிகளை முற்றுகையிடும் தொழிலாளர்களைக் கண்டு நிர்வாகம் அஞ்சி நடுநடுங்கியது. நக்சல்பாரித் தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க “கெரோ” போராட்டங்கள் பரவின.

நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.

1970-களின் துவக்கத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் _ லெனினிஸ்ட்), மற்றும் சிறு குழுக்களின் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் உச்சநிலையை எட்டியது. ஆந்திராவின் 15 மாவட்டங்களில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்ட உழவர்கள், குறிப்பாக ஆதிவாசிகிரிஜனங்கள் 300-க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்களை அழித்தொழித்தனர் அல்லது கிராமங்களை விட்டுத் துரத்தியடித்தனர். அதன்மூலம் கிராம்ப் புறங்களில் மாற்று அரசியல் அதிகாரமாகத் தங்களை நிறுவிக் கொள்ளமுயன்றனர். இதே முறையில் இரகசிய கொரில்லா குழுக்களைக் கட்டி நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளில் பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப், ஒரிசா, தமிழ்நாடு, கேரளாவில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர். இதைகண்டு எழுச்சியுற்ற வங்காள இளைஞர்கள் கல்கத்தா நகரில் கல்வி நிறுவனங்களையும், பிற்போக்குப் பண்பாட்டு சின்னங்களாக கருதி சீர்திருத்தவாதிகளின் சிலைகளையும் தாக்கினர். போலீசு நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதும், சிறைகளைத் தகர்த்துக் கொண்டு வெளியேறுவதும்கூட நிகழ்ந்தன.

ஆனால் போதிய ஆயுதங்களும், பயிற்சியும் இல்லாத உழவர் படைக் குழுக்களுக்கு எதிராக துணை இராணுவமும் போலீசுப் படையும் ஏவி விடப்பட்டபோது, அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டபோது, நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. தலைமையின் செயல்முறை தவறுகளும் இதற்கு இன்னொரு காரணமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான நக்சல்பாரிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் போலீசின் சந்தேகத்துக்கு இலக்கான அப்பாவி இளைஞர்களும் “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திராவின் காடு-வயல்வெளிகளிலும், கல்கத்தா நகரத் தெருக்களிலும் குண்டுதுளைத்த நக்சல்பாரிகளின் பிணங்களை விசிறியடித்து பயபீதி திட்டமிட்டு பரப்பப்பட்டது.

1973-க்குள் 32,000 நக்சல்பாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர்மீது கொலை,கொள்ளை மற்றும் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைச்சாலைக்குள் போலீசு சித்திரவதைகளும், துப்பாக்கிச் சூடுகளும் ஒருவழக்கமாகி விட்டன. 1970-72 ஆகிய மூன்றாண்டுக்குள் குறைந்தது பல்வேறு துப்பாக்கிச் சூடுகள் நடத்தி பல நூறுபேரை ஆங்காங்கே நக்சல்பாரிகள் பெயரில் கொல்லப்பட்டனர். 1975-76 அவசர நிலை ஆட்சிக் காலத்திலும் இதே நிலை நீடித்தது. நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கென்றே ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புப் போலீசுப் படையும் சித்தரவதைக் கூடங்களும் உருவாக்கப்பட்டன. நாடெங்கும் நரவேட்டை அரங்கேறியது. அதில் தலைமை குழுவும் தப்பவில்லை. பலர் தலைமறைவும் சிறைவாசமும் சாரூ கொல்லப்பட்டும் கட்சியின் அடிதளத்தை ஆளும் வர்க்க ஒழித்துக் கட்டியதோடு கட்சியின் தலைமை தன் தியாகத்தை செயலையும் அளப்பறிய செய்தளவு மார்க்சிய லெனினிய சிந்தாந்த வலிமை கொண்டிக்கவில்லை அதனால் தான் எதிர்த்து அழிக்க வேண்டிய எதிரியை விட தன்னைதானே அழித்துக் கொண்டது. அன்றைய நக்சல்பாரியின் வீச்சை கண்டஞ்சிய அரசு, மக்களை பல்வேறு பிற்போக்கு கலாச்சாரங்கள் மூலமும் உண்மையான மக்களின் நண்பர்களாக மாறிய ஓட்டரசியல் கட்சிகளும், புரட்சி வேசம் போட்டு மக்களை மயக்கிய பல நிகழ்வுகள் இன்றும் நாம் காணலாம்.

  • நாடாளுமன்ற போலி ஜனநாயகமே அழுகி நாறுகிறது. இன்று கொடிகளும் சின்னங்களும் மட்டுமே வேறுவேறு. “தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” என்கிற கொள்கையில் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளிடையே எந்த வேறுபாடும் கிடையாது. சாதி – மத வெறியைத் தூண்டி அரசியல் ஆதாயத்துக்காக மக்களைப் பலியிடுவது அதிகரித்துவிட்டது. சிற்றூர் – பேரூர்களில் எல்லாம் கிரிமினல் குற்றக் கும்பல்கள் தோன்றி அரசியல் கிரிமினல் மயமாகி விட்டது. நாட்டின் சொத்தை கொள்ளையடிக்க பல கட்சிகள்.

அதேசமயம் அவர்களுள் யார், யார், எந்தப் பிரிவினர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு ஆதாயமடைவது என்பதில் நாய்ச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இலஞ்ச – ஊழல் அதிகார முறைகேடுகளாலும், சமூக விரோத கிரிமினல் குற்றங்களாலும் அரசியல் அமைப்பு முழுவதும் புழுத்து நாறுகிறது.

இதனையெல்லாம் கணக்கில் கொண்டு உதித்த நக்சல்பாரியின் தமிழக பிரிவுகளை பார்ப்போம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

செப்டம்பர் 12 தோழர் அப்பு பாலன் மற்றும் தமிழக நக்சல்பாரி

தியாகத் தோழர்களின் நினைவுநாள்

======================================================================================================

நக்சல்பாரி இயக்கத்தில் தோழர் L. அப்பு

தமிழகத்தின் நக்சல்பாரி இயக்கத்தின் முன்னோடியும் மக்கள் மத்தியில் போராட்ட குணத்தை விதைத்த இரு தோழர்களின் நினைவை போற்றுவதற்கே இந்தப் பகுதி.

நக்சல்பாரி இயக்கத்தின் தமிழ்நாட்டுத் தலைவர் தோழர் எல். அப்புவின் மரணத்தைப்போலவே அவரின் புரட்சிகர தியாக வரலாறும், மகத்துவம் மிகுந்த அவரின் தியாக வாழ்வும் மறைக்கப் பட்டுவிட்டது. ஏனெனில் இன்றைய தலைவர் களுக்கு அவரின் தியாகம் மட்டுமே வேண்டும் அவரின் வரலாறு வேண்டாம். அவரின் சிபிஐ கட்சி வரலாற்றை பேச ஆள் இல்லை ஏனெனில் அவர்களுக்கு தேவை முதலாளிதுவ சேவை அரசியல் மற்றோரு கட்சியான அவர் தொடங்கிய பத்திரிக்கையை இன்றும் நடத்தும் கட்சியான சிபிஎம் என்றோ முதலாளித்துவ சரணாகதி பாதையில் சென்று உழைக்கும் மக்கள் விரோத நிலை எடுத்து விட்டது அவர்கள் பேசப்போவதில்லை அப்படியெனும் பொழுது அவரின் வழிவந்தவர்களுக்கு இவரை பேசினால் அவர்களின் அயோக்கியதனம் அம்பலமாகிவிடும் என்ற பயம். என்ன செய்ய தியாகிகளின் வரலாறு வருங்கால சந்ததியினருக்கு உணர்வூட்ட அவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள அவர்களின் வரலாற்று படிப்பினைகள் அவசியமான ஒன்று. கோவையை பூர்வீகமாகக் கொண்டவரான தோழர் அப்புவுக்கு அற்புதசாமி என்பதே இயற்பெயர்.அற்புதசாமி பிறகு அப்புவாக மாறினார். தந்தையார் பெயர் லியோ என்பதாகும். கோவைகோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த அவர் இளமைப் பருவந் தொட்டே பெதுவுடைமை இயக்க சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டவர். 1958 வாக்கில் கோட்டை மேட்டில் கிருத்துவர் வாழும் பகுதியில் இக்பால் மன்றம், இஸ்லாமியர் வாழும் பகுதியில், மக்கள் மன்றம், என இரண்டு மன்றங்கள் இருந்தன. அங்கு பல இளைஞர்களுடன் உலக நடப்புகளையும் சமகால அரசியலையும் பற்றி அப்பு போதித்தும், விவாதித்தும் வந்தார்.

தொழிற்சங்களில்:- தோழர் அப்பு முனிசிபல் தொழிலாளர் சங்கம், மோட்டார் தொழிலாளர் சங்கம், ஓட்டல் பணியாளர் சங்கம், மில் தொழிலாளர் சங்கம் என பல்வேறு தொழிற்சங்கங்களில் பங்கெடுத்து அவற்றுக்கு முன்னணி பொறுப்பாளரானார். தோழரின் மனதிடம் காரணமாகவும், விசாலமான அரசியல் பார்வை காரணமாகவும் இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே தொழிற்சங்கம் தொடர்பான இயக்கப் பணிகளில் தேர்ச்சிபெற்றார். நிலமீட்சிப் போராட்டம், பஞ்சாலைப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கி சிறை சென்றார். அவர் மாநில அளவில் முன்னோடியான தொழிற்சங்க செயல் பாட்டாளராக வளர்ச்சியடைந்தார். அவரின் நினைவு கூறத்தக்க முக்கியப் போராட்டம் என்பது 1961ம் ஆண்டில் தோழர் சீனிவாசராவ் தலைமையில் நிலச் சீர்திருத்தம் கோரி கோவையில் இருந்து சென்னைவரை நடைபெற்ற நடை பயணத்தில் அப்பு தனது 20 தோழர்களுடன் முக்கிய பொறுப்பாளராக கலந்து கொண்டார் என்பதே. இது குறித்து அவருடன் இருந்த பல தோழர்கள் இதுற்றி சிலாகித்து பேசி இருக்கிறா்கள்.

கட்சி மீது அதிருப்தி,இந்நிலையில் சி.பி.ஐ. கட்சியின் மையக் குழுவால் முன்வைக்கப்பட்ட திருத்தல்வாதக் கோட்பாட்டுகளினால் கட்சியில் உள்ள புரட்சிகரமான சக்திகள் தொடர்ந்து அதிருப்தி அடையத் தொடங்கினர். அணிகளின் எந்தவித கருத்துக்களுக்கும் காது கொடுக்காமல் மதுரை மாநாடு, அமிதசரஸ் பேராயம், விஜயவாடா பேராயம் என; கட்சியின் தியாகத்தையும் லட்சிய உணர்வையும் மெல்ல மெல்ல டாங்கே, அஜய்கோஷ் உள்ளிட்ட திரிபுவாத குப்பல்கள் பலி கொடுக்கத் தொடங்கினர். அப்பு உள்ளிட்ட கட்சியில் உள்ள பெரும் பகுதியான தோழர்கள் கட்சியின் கீழ்கண்ட நிலை பாட்டில் அதிருப்தி அடைந்திருந்தனர்.

1. இந்தியாவின் சுதந்திரம் போலியானது என்ற தோழர். இராஜேஸ்வரராவ் கால 1950-ம் ஆண்டின் பழைய வரையரைகளை காற்றில் பறக்கவிடப்பட்டு 1955-ம் ஆண்டுக் குள்ளாக சி.பி.ஐ. இந்தியாவை முழு சுதந்திரம் படைத்த இறையாண்மை யுடன் கூடிய நாடு என ஏற்றுக் கொண்டது.

2. எந்த வரையரையும் இல்லாமல் ஒட்டு மொத்த இந்திய உள்நாட்டு முதலாளிகளை யும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என வகைபடுத்தியது.

3. மக்கள் ஜனநாயகத்தை அடையவும், பிறகு சோசலிசத்தை எட்டவும்பராளுமன்ற தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்தது. கட்சியின் இப்போக்கினால் மெல்ல மெல்ல புகையத் தொடங்கிய உட்கட்சிப் பூசல்1962ம் ஆண்டுவாக்கில் வெடிக்கத் தொடங்கியது. 101 உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பேரவை உறுப்பினர்களில் ஒருவராக அப்பு அப்போது இருந்தார். அப்பு, கட்சியின் திரிபுவாதத்திற்கு எதிரான போக்கை கட்சி அணிகள் மத்தியில் கொண்டு போவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

1962 ம் ஆண்டு பாலக்காடு சென்று ஏ.கே. கோபாலனைச் சந்தித்து அதிருப்தி யாளர்கள் சார்பாக ஓர் பத்திரிக்கையை கொண்டுவர விரும்புவதாக தெரிவித்தார். அப்புவுடன் (பின்னாளில் என்.சி.பி.எச்.ன் மேலாளராக பொறுப்புவகித்த) தோழர். கீதானந்தனும்உடனிருந்தார்).ஏ.கே.கோபாலன் சாத்தியமிருந்தால் பத்திரிக்கை நடத்துங்கள் என ஆலோசனை வழங்கினார். கோவை திரும்பிய தோழர். அப்பு; ராமுண்ணி, கண்ணாக்குட்டி, பூபதி, உள்ளிட்ட தோழர்களின் உதவியோடு பத்திரிக்கைக்காக நிதிதிரட்டலில் ஈடுபட்டார். பத்திரிக்கை தொடங்கு வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில்தான் நேருதலைமையிலான இந்திய அரசு இந்திய- சீனப்போரில் தேசதுரோகம் இழைத்து விட்டதாகக் கூறி கம்யூனிஸ்டுகளை கைது செய்யத் துவங்கியது. நாடு முழுவதும் சுமார் 1000 த்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 80 தோழர்கள் கைது செய்யப்பட்டு கடலூர்சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் தோழர் அப்புவும் ஒருவர். சுமார் ஓர் ஆண்டுகாலம்வரை சிறையில் இருந்த தோழர் அப்பு,வெளிவந்த பிறகு கோவை தொழிலாளர்களிடம் நிதிதிரட்டினார். அவரின் முன்முயற்சியால் கோவைத் தொழிலாளர் வர்க்கம் கொடுத்த நிதியைக் கொண்டு,

  • செந்தீக்கதிரை உயர்த்திப் பிடித்திடுவோம் எனும் வாசகத்தோடு தீக்கதிர் வார இதழ் 1963-ம் ஆண்டு ஜுன் 29-ம்தேதியன்று அப்புவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. கட்சியானது அமைப்பு ரீதியாக பலமுறை பத்திரிக்கையை நிறுத்தக் கோரியும் அதை ஏற்காது அப்பு தொடர்ந்து நடத்தி வந்தார்.

சி.பி.எம். கட்சிதோன்றுதல்:- கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி போக்கானது மெல்ல மெல்ல வளர்ந்து கட்சியே பிளவுபடும் சூழலுக்கு இட்டுச் சென்றது. ஏற்கனவே தெனாலியில் கூட்டப்பட்ட அதிருப்தியாளர்களின் மாநாட்டில் அறிவித்தற்கு ஒப்ப, கலகத்தாவில் 1964-ம் ஆண்டு ஆக்டோபர் 31 முதல் 7 நாட்களுக்கு நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பேராயம் கட்சி இரண்டாக பிளவு பட்டதை உணர்த்தியது. ஒப்பற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக நாடகமாடிய நேருவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தோடு தொடங்கியது பேராயம் சி.பி.ஐ யின் வெளிப்படையான துரோகத்தை எதிர்த்து, புதியதாக அழைப்பு விடுத்திருக்கும் தலைவர்களின் உணர்ச்சி மயமான உரைகளும் ஆக்கபூர்வமாக செயல்பட்ட தோழர்கள் பலரையும் அதில் இணைத்தது. ஏறத்தாழ சுமார் ஒரு வருடகாலமாக புதியதாக உருவாக்கப்பட்ட கட்சிக்கென தோழர்கள் உழைத்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் புதிய கட்சியின் (தொடக்கத்தில் இரு கட்சிகளுக்குமே சி.பி.ஐ எனத்தான் பெயர் இருந்தது. சின்னங்கள் ஒதுக்கீடுதொடர்பாக எழுந்த சிக்கலில் தேர்தல் கமிஷனின் ஆலோசனைப்படியே புதிய கட்சி சி.பி.ஐ.(எம்) என ஆனது.) சி.பி.ஐ(எம்) கட்சியின் தலைமைக் குழுவானது 1967-ம் ஆண்டு தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறும், காங்கிரஸ் அமைச்சரவையை தூக்கியெறியுமாறும் அணிகளுக்கும், மக்களுக்கும் அரைகூவல் விடுத்தது.மேலும் எதிர் கூட்டணி உருவாக்க பிற கட்சிகளோடு பேச்சுவார்த்தை தொடங்கியது. இதன்மூலம் தெலுங்கானா பாணியிலான ஆயுதம்தாங்கிய வர்க்கப் போராட்டம் என்பதை நடைமுயைில் அது கைவிட்டது. சி.பி.ஐ.யோடு ஆழமாக கருத்து வேறுபாடுகளோடு வெளிவந்த அப்பு போன்ற தோழர்களுக்கு புதிய கட்சியின் இந்த அழைப்புபெரும் அதிர்ச்சியைத் தந்தது. தேர்தலை சந்தித்த கட்சி எட்டு மாநிலங்களில் காங்கிரஸை தோற்கடித்தது. கம்யூனிஸ்டுகளின் கூட்டணி மூலம் தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்குவந்தது.

கட்சியின் அப்போதைய செயலாளர் சுந்தரையா மத்திய அமைச்சர் குல்சாரிலால் நந்தாவுக்கு சரணாகதி கடிதம் எழுதியது, இ.எம்.எஸ் பாகிஸ்தானுக்கு எதிராக போர் செய்த ஜவான்களுக்கு மக்களை இரத்த தானம்செய்யக் கோரியது என படிப்படியாக சி.பி.எம்--மின் செயல்பாடுகளின் மீது தோழர் அப்புவுக்கும் இதர புரட்சிகரத் தோழர்களுக்கும் அதிருப்தி தோன்றியது. சாரம்சத்தில் சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய இரண்டு திரிபுவாதிகளுக்கும் இடையே கோட்பாட்டு ரீதியில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை சி.பி.எம்மின் நடைமுறை உணர்த்தியது. தங்களின் புரட்சிகர நோக்கமானது நவீன திரிபுவாதிகளால் பாழாவது கண்டு மெய்யான புரட்சியாளர்கள் பதைபதைத்தனர். தோழர் அப்புவின் தலைமையில் உட்கட்சியில் நவீன திரிபுவாதம் குறித்தும் அதை அம்பலப்படுத்தியும், புரட்சிகரத் தோழர்கள் போராடினர். அகில இந்திய அளவில் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் தோன்றிய சாரூவின் தலைமையிலான நக்சல்பாரி இயக்கம் புரட்சியை முன்னெடுக்கும் முயற்சியில் களம் கண்டது. அதில் அப்புவின் பாத்திரம் தேடுவோம்.புரட்சி வேட்கையோடு தோழர் அப்பு அதன்பால் ஈர்க்கப்பட்டார். இது தொடர்பாக சி.பி.எம்-முடன் நடைபெற்ற விவாதத்தின்போது எவ்வித ஜனநாயக மத்தியத்துவமும் அற்று அப்பு உள்ளிட்ட பலதோழர்கள் கட்சியில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். கோவை மாவட்டத்தில் மட்டும் கட்சியில் இருந்த மாவட்டக் குழு உறுப்பினர்களில் 21 பேரில் 14 பேர் நீக்கப்பட்டனர். பல கட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டன. இந்நிலையில்தான் தோழர் அப்பு கல்கத்தா சென்று நக்சல்பாரியின் முக்கியக் தலைவரான தோழர் சாருமஜூம் தாரைச் சந்தித்தார். நவம்பர் 11, 1967ல் கல்கத்தாவில் உள்ள ஷாஹித்மினார் மைதானத்தில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் அப்பு நக்சல்பாரிப் பாதையின் உன்னதம் குறித்து உரையாற்றினார். அதைத் தொடர்ந்த நாட்களில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவிலும் பங்கெடுத்தார். மேலும் சாரு மஜூம்தாரைப் பொதுச் செயலாளராகக் கொண்ட சி.பி.ஐ.(மா.லெ)மையக் குழுவிலும் தமிழகத்திலிருந்து அப்பு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ் மாநில ஒருங்கிணைப்புக் குழு:- கல்கத்தாவிலிருந்து அவர் வந்தவுடன் பழைய கட்சியின் மீது அதிருப்தி அடைந்திருந்த, கட்சியின் அராஜகப் போக்கினால் நீக்கப்பட்ட தோழர்களை ஒருங்கிணைக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் முயற்சியால் 1968 மார்ச் மாத வாக்கில் 16 தோழர்களைக் கொண்ட தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கினார். ஏறத்தாழ ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட மற்றும் கிளை அமைப்புகள் உருவாக்கப்பட்டன தோழர் சாருமஜும்தார் தமிழகத்துக்கு வந்து ஒருங்கிணைப்பு தொடர்பான பணிகளைச் செய்ததை இன்றைக்கும் மூத்தநக்சல்பாரி தோழர்கள் நினைவு கூர்கிறார்கள்.

தமிழ் மாநில ஒருங்கிணைப்புக் குழு சார்பாக வெளியிட்ட அறிக்கையில் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்குப் பயன்படும் அரசு எந்திரத்தை உடைத்தெறியாமல் முதலாளித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்று எண்ணுவதைக் காட்டிலும் வேறெந்த மாயையும் இருக்க முடியாது. வர்க்க ஆட்சியின் கருவிகளை உடைத்தெறிவதற்கான குறுக்குவழி வேறெதுவும் இல்லை. மாசேதுங் சிந்தனையால் வழிநடத்தப் படுகின்ற நக்சல்பாரிப் பாதைதான் இந்தியப் புரட்சியின் பொதுப் பாதையாக விளங்குகிறது. இந்தியப் புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்று வதற்கான பாதையும் அதுவே என அறிவித்தது. தமிழ்நாடு ஒருங்கிணைப்புக் குழுவானது புரட்சிக்கனல் எனும் பத்திரிக்கையை நடத்தியதாக தகவல்கள் இருக்கின்றன.

நக்சல்பாரிப் பாதையை ஏற்று தமிழக ஒருங்கிணைப்புக் குழுவும் பல்வேறு மக்கள் விரோத சக்திகளை களையெடுக்கும் வேலையைக் கையாண்டததோடு பல இடர்களுக்கு மத்தியிலும் ஒருவலிமையான புரட்சிகர கட்சியினை கட்டியமைக்கும் மாபெரும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. தோழர் அப்பு 1970 ஆண்டு அக்டோபர் மாதம் பீகாரில் நடக்க விருந்த மையக்குழுவின் அரசியல் தலைமைக் குழுகூட்டத்தில் பங்கெடுக்கும் பொருட்டு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். இது தொடர்பாக அவர் செயல்பட்டுக் கொண்டிருந்த போது வேலூரில் ஓர் தனியார் விடுதியில் தங்கியிருந்த போது காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பிறகு எவ்வித தடயமும் இல்லாமல் கொலைசெய்யப்பட்டு விட்டார். தோழர்அப்புவின் படுகொலையை வெளிப் படையாக அறிவித்தால் மக்களிடம் கொந்தளிப்பு எதிர்ப்பு நேரிடும் என்று கருதிய காவல்துறை அதை மூடி மறைத்துவிட்டது. இன்றளவும் காவல் துறை ஆவணங்களில் காணாமல் போனதாகவே பதிவு உள்ளது. நச்சல்பாரியின் விதைநெல்லாய் விளங்கும் தோழர் அப்புவின் படிப்பினை பெறத்தக்க வாழ்வானது இன்றைக்கும் புரட்சிகர இளம் தலைமுறைக்கு படிப்பினை தரத்தக்கதாகும் .கம்யூனிஸ்டுகளுக்கு சுயசரித்திரம் ஒன்றும் பெரிதில்லைதான் என்றாலும் ஓர் இயக்கத்தின் முதுகெலும்பாய் வீற்றிருக்கும் அப்புவின் வாழ்வினை விரிவாக பதிவு செய்யவேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் நக்சல்பாரியின் நியாயம் குறித்தும் அதன் சாத்தியப்பாடு குறித்தும் அவரின் வாழ்கை பேசும் புரட்சிகர இயக்கங்களில் பங்கெடுக்கும் பல தோழர்களும் இதுநாள்வரையிலும் அப்பணியை செய்யாது இருப்பது வேதனை மிக்க ஒன்றாகும்.இந்திய வரலாற்றில் விடுதலைக்கான போராட்டத்தில் ஆரம்பகால கம்யூனிஸ்டுகளின் தன்னலம் கருதாத போராட்டம் தியாகம் மற்றவர்களின் எல்லாப் போராட்டங்களை விட மேலானது, உயர்வானதாகும். அதிலும் குறிப்பாகப் புரட்சிக்காகப் போரிட்ட நக்சல்பாரி தியாகிகளின் போராட்டம் புரட்சி தீயில் தன்னைப் புடம் போட்டது மிகவும் மதிக்கத்தக்கதாகும்; இந்திய வரலாற்று பக்கங்களில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டியவை. அவை, அவர்களின் உயர்வான பணி தியாகம் மற்றும் செயல் பற்றி பேசும் அதே நேரத்தில் அவர்களின் புரியாமல் செய்த தவறான பக்கங்களையும் விரிவாக ஆராயவேண்டிய அவசியம் உள்ளது.

கடந்த காலத்தை வெறுமனே தெரிந்து கொள்வதற்காக மட்டுமே நாம் கடந்த காலத்தை பற்றி அக்கறை கொண்டிருக்கவில்லை, கடந்த காலத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு தற்போதைய காலத்திலும், எதிர்காலத்திலும் நாம் முன்பு செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் தவிர்ப்பதற்கும் நாம் முன்புசெய்த சரியான விசயங்களை மேலும் செழுமைப்படுத்தி செயல்பட வேண்டும்.

  • செப்டம்பர் 12 வழக்கம் போலவே ஆண்டுக்கு ஒருமுறை அப்பு, பாலன் சிலைக்கு வண்ணம்பூசி, சடங்கு செய்து கொண்டிருக்கிறோம். அவர்களின் போராட்ட வரலாற்றை அதன் மீதான படிப்பினைகளை எழுத மட்டும் நமக்கு நேரமில்லை. அவர்களின் பெயரை மட்டும் முதலாளித்துவவாதிகள் பயன்படுத்தும் பிராண்ட் போல பயன்படுத்திக் கொண்டிருக்கிறவர்கள் சிந்திப்பார்களா?. ஏகாதிபத்திய எதிர்ப்பு, செயல்தந்திர முழக்கம், புதியஜனநாயகப் புரட்சி இவ்வாறு எத்தனையோ போஸ்டர் மட்டும் ஆண்டாண்டுகளாய் ஒட்டிக்கொண்டிருப்போர் இவர்களின் ஆக்கப்பூர்வமான வரலாற்றுப் பதிவையும் மக்கள் திரள் போராட்டத்தின் உண்மையான வலுவையும் விமர்சன ரீதியாக வெளியிடலாமே. அவை ஏன் இன்றுவரை கொண்டுவரவில்லை? அதனை பற்றி அவர்கள் பேசலாம் எழுத்தில் ஏன் இல்லை? இறுதி பகுதியில் இதனை விரிவாக ஆய்வு செய்துள்ளோம். விரைவில் நூல் வடிவில் உங்கள் கைகளில் இந்த ஆண்டு முடிவில் கிடைக்க முயற்சிக்கிறோம்.

தோழர் அப்பு மறைவிற்கு பிறகான தமிழ் மாநில கமிட்டி அதன் போக்கில் உருவான மக்கள் திரள் அமைப்பு அதன் செயல்பாட்டின் அடிப்படையில் செயல்பட்ட தோழர் பாலன் பற்றி அடுத்த பார்ப்போம்.

==========================================================

தொடரும்....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்