செப்டம்பர் 12 தியாகிகளின் நினைவை போற்றுவோம்

 தியாகிகளுக்கு சிரம் தாழ்த்தி அவர்களின் உயரிய தியகத்தை போற்றுவோம்,  மார்க்சிய லெனினிய அரசியல் தத்துவ வழியில் அவர்கள் விட்டு சென்ற பணியினை முடிக்க ஒன்றிணைவோம் தோழர்களே.

அன்றிலிருந்து இன்றுவரையிலான இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறானது பல்லாயிரக்கணக்கான தோழர்கள், கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்களின் அளப்பரிய தியாகமும் அவர்கள் சிந்திய செங்குருதியும் நிறைந்ததாகும்.

அன்றைக்கு, கம்யூனிசக் கொள்கையின் ஈர்ப்பினால் உந்தப்பட்ட தோழர்கள் தலைமையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கெதிராகவும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் ஏராளம். வங்காளத்தில் தெபாகா விவசாயிகள் எழுச்சி; மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் வார்லி பழங்குடி மக்களின் எழுச்சி; கேரளத்தில் வயலாறு-புன்னப்புரா தொழிலாளர் போராட்டம்; தமிழ்நாட்டில் கீழத்தஞ்சை கூலி விவசாயிகளின் செங்கொடி இயக்கம்; தபால் தந்தி ஊழியர் போராட்டம்; மும்பை துறைமுகத் தொழிலாளர் போராட்டம்; மும்பை கப்பற்படை எழுச்சி என்று எண்ணற்ற மக்கள் போராட்டங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பங்காற்றின. கம்யூனிஸ்டுகள் தலைமையில் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்துப் போராடுவதைக் கண்டு அஞ்சிய ஆர்.எஸ்.எஸ்-இன் மூதாதையர்கள், இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தினர்; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்தனர். காங்கிரசு கட்சியோ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை ‘அகிம்சை வழிப் போராட்டம்’ என்ற பெயரில் மழுங்கடித்தது. எனினும், இவற்றையெல்லாம் மீறி கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் 1942-இல் மூண்டெழுந்த கப்பற்படை எழுச்சி, 1946-இல் முன்னேறிய தெலுங்கானா விவசாயிகளின் போராட்டம் போன்ற போராட்டங்கள் மக்கள் மத்தியில் போராட்டங்கள் வளர்வதைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், அதன் கொள்ளைக்குத் துணை போன இந்திய தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் கூட்டுச் சதியின் விளைவாக, 1947-இல் ஆட்சி அதிகாரத்தை அவர்களின் அடிமைகளிடம் ஒப்படைத்ததோடு மத அடிப்படையில் நாட்டை துண்டாடி வெளியேறினர். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று, தெலுங்கானாவில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் மிகச் சிறப்பான முறையில் அரசை நடுநடுங்க செய்த போராட்டமாகும். இதனை அடுத்து பல்வேறு சதி வழக்குகளையும் கொடூரமான அடக்குமுறையையும் கம்யூனிஸ்டுகள் மீது நடத்தியது இந்திய ஆளும் வர்க்கம். அதன் பின்னணியில் அரசின் அராஜகத்திற்கு அடிப்பணித்து கட்சியானது புரட்சிக்கான வழிமுறையை கைவிட்டு தங்களின் இருப்புக்கான வழிமுறையை கையிலெடுத்து, உள்ள அமைப்பில் தனக்கான இடம் தேடி பாராளுமன்றம் மட்டுமே தனக்கான இடமாக சுருக்கிக் கொண்டது. என்பதுதான் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் சுருக்கமான வரலாறாகும். ஆரம்பகால இந்திய கம்யூனிஸ்டுகளின் வரலாறு தியாக வரலாறாகும். தெலுங்கான புரட்சிப் பாதையை கைவிட்டபின்புள்ள வரலாறு துரோக வரலாறாகும். இந்த வரலாற்றை நாம் படித்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது, இன்றைய நிலைகளை புரிந்துக் கொள்ள.

இதன் தொடர்ச்சியாக தோன்றிய கட்சி நக்சல்பாரியின் தொடர்ச்சி அதன் தியாகம் இன்றைய நிலையை அறிந்து தியாகிகளின் உன்னத பணியும்...

1980ஆம் ஆண்டுகளில் அன்றைக்கிருந்த மக்கள் திரள் அமைப்பு(RYL) என்று அழைக்கப்பட்ட நக்சல்பாரி கட்சியின் தலைமறைவு அமைப்பால் வழிநடத்தப்பட்ட வீரமிகு போராட்டங்கள் மோதல்கள் என்ற பெயரால் பல்வேறு முன்னணி தோழர்கள் கொன்றொழிக்க பட்டார்கள். அன்றைய தமிழக ஆட்சியாளர்களால் இருண்ட பகுதி என வர்ணிக்கப்படும் தர்மபுரி பகுதியில் ஏழை எளிய விவசாய மக்கள் நிலபிரபுத்துவ கொடுங்கோலர்கள் கந்துவட்டி கட்டப்பஞ்சாயத்து போன்ற கொடுமைகளால் கஷ்டப்பட்டார்கள் நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மைக்கு எதிராக தோழர் பாலன் தலைமையிலான வாலிபர் சங்கம் மக்களை திரட்டி எவ்வாறு போராடியது. மக்கள் திரள் போராட்டங்களால் விழிபிதுங்கி நின்ற ஆட்சியாளர்கள் பாலன் மற்றும் முன்னணி தோழர்களை கொன்றுவிட்டால் புரட்சியை நசுக்கி விடலாம் என்று எண்ணி பல்வேறு சூழ்ச்சிகளில் முன்னணி தோழர்களை கொன்றனர்.

அன்று அங்கு ஆண்டாண்டு காலமாய் கட்டிக் காக்கப்பட்டு வரும் சாதியம் தகர்க்கப்பட்டது .ஒரு புரட்சிகர இயக்கம் மக்கள் பாதை நடைமுறைப்படுத்தி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது மக்கள் ஜாதியை கடந்து ஒன்றுபடுகிறார்கள் என்பது அன்றைய களநிலவரம். அன்றைய தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் என்றும் சாட்சிகளாக உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமைக்கு எதிராகவும் தனிக்குவளை வைப்பதற்கு எதிராகவும் புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுத்த போராட்டங்கள் வர்க்க ஒற்றுமையை அனைத்து சாதியினருக்கும் இடையில் ஏற்படுத்தியது. ஆனால் அன்று கொடிகட்ட பறந்த புரட்சிகர காலத்தோடு ஒப்பிடும் போது இன்றைய நாசகார கொடூரமான காலத்தை எவ்வாறு சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நம்முன் உள்ள கேள்வியாக இருக்கிறது.

பாலனை அடித்துக் கொலை செய்து சரியாக 45 ஆண்டுகள் கடந்துவிட்டன. பாலனால் இன்னுயிர் ஈர்ந்து கட்டியெழுப்பப்பட்ட மாபெரும் இயக்கம் இன்று பிளவுண்டு செயலற்று நிற்கிறது.

தமிழகத்தில் இன்று அடையாள அரசியலுக்குள் புரட்சிகர கட்சிகளே அடைபட்டுகிடக்கும் பொழுது. அன்று சாதியெனும் கட்டமைப்புக்கு சம்மட்டி அடி கொடுத்தவர் பாலன். உன்னதமான தனது வர்க்க அரசியல் மூலம் சாதிகடந்து உழைக்கும் மக்களை ஓரணியில் இணைத்துக் காட்டியவர் பாலன். நச்சல்பாரியின் விதைநெல்லாய் விளங்கும் தோழர் அப்பு பாலன் அவர்களின் படிப்பினை பெறத்தக்க வாழ்வானது இன்றைக்கும் புரட்சிகர இளம் தலைமுறைக்கு படிப்பினை தரத்தக்கதாகும்.

செப்டம்பர் 12 வழக்கம் போலவே ஆண்டுக்கு ஒருமுறை அப்பு, பாலன் சிலைக்கு வண்ணம்பூசி, சடங்கு செய்து கொண்டிருக்கிறோம். அவர்களின் போராட்டத்தை அவர்களின் போராட்ட வரலாற்றின் படிப்பினைகள் என்ன? அதன் சாதக பாதக அம்சங்களோடு ஏன் பின்னடைவு பிளவு பற்றி எப்பொழுதாவது சிந்தததுண்டா?  

அவர்களின் பெயரை மட்டும் முதலாளித்துவ வாதிகள் பயன்படுத்தும் பிராண்ட் போல பயன்படுத்திக் கொண்டிருக்கிறவர்கள் சிந்திப்பார்களா?. 

மோடியை தூக்கி எறிவோம், ட்ரம்பை தூக்கி எறிவோம் என்ற கோஷமிடுவதனால் யாரையும் தூக்கி எறிந்து விடமுடியாது! அதற்கான பணியில் இறங்காமல்! இதுபோன்ற கோஷங்கள் வெற்று வாய்சொல் வீரர்களாக காலம் கடத்துவதை உதவுமே தவிர வேறொன்றுமில்லை.

நான் கேட்பதனால் இவர்கள் சுயவிமர்சனமாக வந்துவிடப்போவதில்லை இருந்தும் உழைக்கும் மக்கள் மத்தியில் இவர்களின் உண்மை முகத்தை காண்பிக்கவேதான்.

விதவிதமான பிரச்சினைகளை கையிலெடுத்து இவர்கள் பேசாத வார்த்தைகளா? ஏகாதிபத்தியமென்றும், புதிய ஜனநாயகப் புரட்சி என்றும் ஆண்டாண்டாய் போஸ்டர் மட்டுமே ஒட்டிக்கொண்டிருப்போரே? கடந்தகால படிப்பினைகளை ஆக்கப்பூர்வமான வரலாற்று தொகுப்பை மக்கள் திரள் போராட்டத்தின் உண்மையான வலுவையும் விமர்சன ரீதியாக வெளியிட்டுள்ளீகளா?

இதே செப்டம்பரில் வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆளும் வர்க்கத்தால் கொல்லப்பட்ட நக்சல்பாரி தியாகிகள் தோழர் அப்பு, தமிழரசன், சந்திரகுமார் சந்திரசேகர், மாடக்கோட்டை சுப்பு என நீளும் பட்டியல்... தோழர்பாலன் அரசின் அராஜக செயல்பாடுகளால் அடித்துக் கொல்லப்பட்டு இன்றோடு 45 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 15 நக்சல்பாரி புரட்சியாளர்கள் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். ஏழைகளின் பங்காளன் என நீட்டி முழங்கிக் கொண்டிருந்த எம்ஜிஆரின் பாசிச மறுப்பக்கம் அது. தமிழகமெங்கும் நக்சல்பாரி களின் உதிரம் உறையாத காவல் நிலையங்களே இல்லை என்ற கொடூரமான காலகட்டம் அது.

அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் மக்களின் விடுதலைக்காக தீரமுடன் போராடிய முற்போக்கு இயக்கங்களில் தமிழக வரலாற்றில் நக்சல்பாரி களுக்கு என்றைக்கும் முன்வரிசையில் இடம் உண்டு. படுகொலை செய்யப்பட்டவர்கள் ஒருபுறம் என்றால் அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள், சித்திரவதை செய்யப்பட்டவர்கள், ஆயுள் தண்டனைகளுக்கு ஆளாகி சிறைகளிலிலேயே தனது இளமைக் காலங்களைத் தொலைத்தவர்கள் என தனக்குள்ளே ஒரு மாபெரும் தியாக வரலாற்றை கொண்டிருக்கிறது இந்த நக்சல்பாரி இயக்கம்.

‘சிறைக்குள் யாரும் நீண்ட நாளைக்கு தைரியசாலிகளாக நடிக்க முடியாது என்று.’ அது போலத் தான் நடைமுறையில் இயங்குகின்ற புரட்சிகர இயக்கங்களிலும். அங்கு மக்கள் மீதுபற்று கொண்டவர்களுக்கும் எஃகு போன்ற மனதிடம் கொண்டவர்களுக்கும், தான் கொண்ட லட்சியத்தில் உறுதியானபிடிப்பு உள்ளவர்களுக்கு மட்டும்தான் வேலை. 

ஆனால் தலைமையில் இருந்தவர்களின் அகவயவாதப் போக்கினாலும், புரட்சிக்கு எதிரான மனோபாவங்களாலும், துரோகத்தனத்தினாலும் எண்ணற்ற தோழர்களின் தியாகங்கள் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகிப் போய்விட்டன. அடக்குமுறை காலங்களில் பேசுகின்ற மேடைகளில் இருந்து ஓடி ஒளிந்துவீட்டில் பதுங்கி இருந்துவிட்டு ஓய்வுபெற்று ‘பாதுகாப்பாக’வீதிக்கு வந்திட்ட பின்னால் வீராவேசம் பேசுபவர்களும், நான்கு வரிகளை எழுதிவிட்டு நானும் புரட்சியாளன் என்று காலரை தூக்கிக்கொண்டு திரிபவர்களும், அடுத்தவர் களின் மீது முத்திரை குத்துவதற்கு என்று ரப்பர் ஸ்டாம்புகளை தயாரித்துக் கொண்டு அலைந்து கொண்டிருப்பவர்களும், கைது நடவடிக்கைகள் இல்லை என்றால் மட்டுமே கூட்டத்துக்கு ஏற்பாடு செய்பவர்களும், போஸ்டர் போட்டு அதைமட்டுமே புரட்சிகரபணி என்று சிலாகிப்பவர்களும் இன்றைக்கு நக்சல்பாரிகள் என்று அறிவித்துக் கொண்டு இருக்கின்ற வினோதங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 

எது எப்படி ஆனாலும் ஒன்றுமட்டும் நிச்சயம். என்ன நோக்கத்திற்காக அன்றைக்கு இந்திய வானில் நக்சல்பாரி இயக்கம் வசந்தத்தின் இடிமுழக்கமாக எழுந்ததோ அந்த நோக்கம் இன்றைக்கும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது. முன்பைவிட கூர்மையாகவும், ஆழமாகவும். தேவைகலைதான் புறநிலை எதார்த்தம் கோருகிறது அதற்கான இயக்கங்கள்தான் காணோம்!

வரலாற்று இயக்கங்களை எப்போதும் தீர்மானிக்கின்றன சக்திகள் உழைக்கும் மக்கள்தான். தனது எல்லா தடைகளையும் கடந்து நக்சல்பாரி இயக்கம் மக்களை ஒளிமிகுந்த ஓர் வருங்காலத்திற்கு அது அழைத்துச் சென்றதா என்றால் அவர்களின் உயரிய அர்பணிப்பும் தியாகமும் சரியான மார்க்சிய லெனினிய புரிதல் இன்மையால் இடதுசாரி சாகசவாதத்தால் எதிரிக்கு ஏற்படத்த வேண்டிய பேரிழப்பிற்க்கு பதில் தன்னையே அழித்துக்கொண்டது.

தியாகிகளுக்கு சிரம் தாழ்த்தி அவர்களின் உயரிய தியகத்தை போற்றுவோம், சரியான மார்க்சிய லெனினிய வழியில் அவர்கள் விட்டு சென்ற பணியினை முடிக்க ஒன்றிணைவோம்.

கம்யூனிஸ்டுகள் இறப்பதுண்டு பிறப்பதில்லை. தோழர்களுக்கு செங்கொடியின் வீரவணக்கம்....

முழுமையாக வாசிக்க கீழ்காணும் இணைப்பில் செல்க

இலக்கு 79 இணைய இதழை இந்த இணைப்பை அழுத்தி பிடி எப் வடிவில் பெற்றுக் கொள்ளுங்கள்



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்