பாசிசத்தின் வரலாற்று படிப்பினைகள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் புரிதலுக்கும்
பாசிசம் குறித்து நம் முன் பல்வேறு படிப்பினைகள் உள்ளன. அதனை நேரடி அனுபவ வாயிலாகவும் அன்றைய உழைக்கும் மக்களை பிளவு படுத்த செய்த சூழ்ச்சிகள் அதன் நடைமுறை தந்திரங்கள் இன்று RSS-ன் செயல்பாடுகள் கண்கூடாக தெரிந்தவைதானே?
இத்தாலியை மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியிலிலும் ஒரு பாசிச கட்சியைக் கட்டியமைப்பதற்கான வேலைகளை 1920-களிலேயே ஜெர்மானிய நிதிமூலதனக் கும்பலானது முற்பட்டது. 18ஆம் நூற்றாண்டு இறுதியில் காலனிய ஆதிக்கத்தை ஐரோப்பாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவும் நியாயப்படுத்த பிரிட்டனால் உருவாக்கப்பட்ட "ஆரிய மேலாண்மை” இனவியல் கோட்பாட்டைத்தான் ஹிட்லரின் நாஜி (பாசிச) இயக்கமானது சித்தாந்த அடிப்படையாகக் கொண்டது. “ஆரிய மேலாதிக்கம்” என்பதையே தனது கொள்கையாக அறிவித்தது. இந்த காலனிய (நிதிமூலதனகாலனியத்திற்கு முந்தைய) ஆதிக்கத்தை உலகம் முழுக்க நியாயப்படுத்த உருவாக்கியிருந்த இனவியல் கோட்பாட்டைத்தான் நிதிமூலதனக் காலக்கட்டத்தில் தனது பாசிச இயக்கத்திற்கான சித்ததாந்தமாக முன்வைத்தான் ஹிட்லா். அக் கொள்கையின்படி “ஆரிய இனமே உலகத்தில் உன்னதமான மற்றும் தூய்மையான இனம்”, ”உலகத்தை ஆளப்பிறந்த இனம்,” ”மற்ற இனங்கள் யாவும் அடிமையாக இருக்கத்தான் தகுதிபெற்ற இனம், “ஆரியர்களின் தாய்நாடு ஜெர்மனி”, “ஜெர்மனி, ஆரியருக்கு மட்டுமே சொந்தமானது”. ஏனைய இனங்களுடன் கலந்து வாழ்ந்ததன் விளைவாகத்தான் ஜொ்மனி முன்னேற முடியவில்லை. குறிப்பாக யூதர்கள் இந்த நாட்டில் குடியேறியதால்தான் நாடு சீர்குலைந்து போய்விட்டது. யூதர்கள் செய்த துரோகமே உலக யுத்தத்தில் ஜெர்மன் தோல்விக்கு காரணமாகும். ஆகையால் நம்நாட்டின் அத்தனை கேடுகளுக்கும் காரணமாண யூதர்களின் குடியுரிமையை பறிக்க வேண்டும். அவர்களை நாட்டைவிட்டுவிரட்ட வேண்டும் அல்லது கொன்றொழிக்க வேண்டும். இங்கே இன்றைய இந்திய ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளவர்கள் செய்யும் எல்லா செயலையும் அன்றைய பாசிஸ்டுகள் செய்தனர். அதனை சற்று பார்ப்போம்.
1935-ம் ஆண்டு சோவியத் ரசியாவில் உள்ள லெனின் பள்ளியின் இத்தாலியப் பிரிவில் பால்மிரோ டோக்ளியாட்டி ”எதிரிகள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் பிரதான பகுதியை “Lectures on Fascism” என்ற பெயரில் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி 1976-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்டது. நியூ யார்க்கைச் சேர்ந்த சர்வதேச வெளியீட்டகம் இந்நூலை வெளியிட்டது. கடந்த 1998-ம் ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 17-வது அகில இந்திய மாநாட்டுச் சிறப்பிதழாக இந்நூல் தமிழில் வெளியிடப்பட்டது. இதனை NCBH வெளியீட்டகம் வெளியிட்டது. இனி நூலுக்குள் செல்லலாம்.
இத்தாலியில் 12 வருடங்களாகப் பாசிசத்திற்கெதிராக நடைபெற்ற போராட்ட அனுபவங்களிலிருந்து இவற்றைக் கூறுகிறார். இந்தப் “பாடங்கள்” மேலும் விரிவாக இருப்பதற்குக் காரணம் இந்தப் போராட்டத்தில் அவருக்கு இருந்த நேரடி அனுபவத்தையும் அவர் இவற்றில் சேர்த்திருப்பதுதான். ஆனால், டோக்ளியாட்டி மற்றொரு பரந்துபட்ட அனுபவக் குவியலையும் பயன்படுத்தியிருக்கிறார். தொடர்ச்சியான விவாதங்களிலும், பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் உலக முழுமையிலிருந்து கிடைக்கும் அனுபவங்களை ஆராய்வதிலும் மிகுந்த செயலூக்கத்துடன் பங்கேற்றவர் அவர். இத்தகைய விவாதங்கள் கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்களில் தொடர்ந்து நடந்தன. கம்யூனிஸ்டு அகிலம் என்பது உலகின் ஒவ்வொரு மூலையிலுமிருந்து கிட்டும் அனுபவங்களும் ஒவ்வொரு நாட்டின் அனுபவங்களும் பொதுமைப்படுத்தப்படும் ஒரு மையமாகும். டோக்ளியாட்டி, அவருடைய சொற்பொழிவுகளை நிகழ்த்தும் நேரத்தில் இட்லரின் பாசிசம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்களாகி விட்டன. எனவே இட்லருடைய பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் ஜெர்மன் மக்களும், ஜெர்மன் கம்யூனிஸ்டுகளும் பெற்ற அனுபவங்களை அவர் விசேஷமாகப் பயன்படுத்திக் கொண்டது முற்றிலும் இயல்பானதே. கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்களில் உள்ளவர்கள் தொழிலாளி வர்க்க அரசியல் கட்சிகளிலிருந்து வந்தவர்கள். தம்முடைய செயல்பாட்டையும், நிர்ணயிப்புகளையும் மார்க்சியம் – லெனினியம் என்ற புரட்சிகர விஞ்ஞானத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டுள்ள கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். ஆகையால் கம்யூனிஸ்டு அகிலத்தின் குழுக்கள், அனைத்துப் பிரச்சினைகளையும் தொழிலாளி வர்க்க மற்றும் மார்க்சிய – லெனினிய கண்ணோட்டத்தில் அணுகின. இந்த அணுகுமுறையானது டோக்ளியாட்டியின் சொற்பொழிவுகள் முழுவதிலும் உருக்குக் கம்பியாக ஊடுருவிச் செல்லுகிறது.
நாம் முதன் முதலாகக் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினையானது முதலாளித்துவத்தின் உள் கட்டமைப்புதான் ஜனநாயக – விரோதப் போக்கிற்கு வழி பிறக்கச் செய்கிறது என்பதும், அந்தப் போக்குதான் பாசிசத்தை நோக்கிச் செல்லும் இயக்கங்களுக்குத் தீனி போடுகிறது என்பதுமாகும். முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் சரிவு காலகட்டத்தில் “பிற்போக்கான கொள்கைகளை நோக்கிச் செல்லும் போக்கு முதலாளித்துவத்தில்” தலைதூக்கும் என்று டோக்ளியாட்டி கூறுகிறார். ஏகபோக முதலாளித்துவம், அதனுடைய பொதுவான நெருக்கடி காலகட்டத்தில் மிக உச்சபட்ச தொழில் இலாபமடையும் கொள்கைகளை பின்பற்ற முடியாது. இத்தகைய கொள்கைகளுக்கெதிராக மக்கள் தலையிடும்படியான மிகக் குறைந்தபட்ச சாத்தியப்பாட்டை ஜனநாயக அமைப்புகள் ஏற்படுத்தினால்கூட ஏகபோக முதலாளித்துவம் அத்தகைய அமைப்புகளை ஒழித்துக்கட்டுவதில் இறங்கும். அது, ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாகப் பிற்போக்கான இராணுவ ஆட்சிகளைக் கொண்டு வருவதற்கு முற்படும். பாசிசம் என்பது இத்தகைய பெரும் தொழில் வர்த்தக சர்வாதிகாரங்களின் மிகவும் கொடூரமான, நாசகரமான, வளர்ச்சியடைந்த வடிவமேயாகும்.
தோழர் டோக்ளியாட்டியின் சொற்பொழிவுகள் வாட்டர்கேட் சம்பவம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிப் போக்குகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கின்றன. ஏனென்றால் நிக்சனுடைய நிர்வாகமும் வாட்டர்கேட் சம்பவமும் ஒரு பாசிச கட்டமைப்பு உருவாவதற்கு இட்டுச்செல்லக்கூடிய ஓர் அமைப்பைத் தோற்றுவிக்கத் திட்டமிட்ட சதி நடந்திருப்பதை அம்பலப்படுத்துகின்றன.
இந்த நிகழ்ச்சிப் போக்கானது நிக்சனிலிருந்து தொடங்கவில்லை. இதற்கு முன்பாகவே இந்த வடிவமைப்பானது மிகவும் நன்கு திட்டமிடப்பட்டிருந்தது. அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார சக்தியானது நிர்வாகப் பிரிவின் கரங்களில் படிப்படியாகக் குவிக்கப்பட்டு வந்தது. இந்த நிர்வாகப் பிரிவானது பெரு முதலாளித்துவ முதலைகள் தவிர வேறு எவராலும் அணுக முடியாதது. அமெரிக்க காங்கிரசும் ஜனாதிபதியினுடைய அமைச்சரவையும்கூட மெல்ல மெல்லப் புறக்கணிக்கப்படலாயின. எஃப்பிஐயும் சிஐஏயும் சர்வாதிகார ஆட்சியின் கருவிகளாயின; இவை ஜெர்மனி மற்றும் இத்தாலிய பாசிசத்தின் கையேடுகளில் கூறப்பட்டிருப்பவற்றை ஆதாரமாகக் கொண்டு செயல்படலாயின. பெருமுதலாளித்துவ பிற்போக்குக் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் அனைவரையும் பெரும் எண்ணிக்கையில் கைது செய்வதற்காக நிக்சன் நிர்வாகம் நிர்வாக உத்தரவுகளைத் தயாரித்திருந்தது. எந்தவொரு பிரச்சினையிலும் எதிர்த்து ஒரு வார்த்தை கூறினாலும் கூட இப்படி எதிர்ப்பவர்களின் பெயர்களும் அவர்களின் வாழ்க்கை விபரங்களும் மிகப் பெருமளவில் கணிப்பொறியில் பதிவு செய்யப்பட்டு நிக்சன் நிர்வாகத்திற்குக் கிடைத்திருப்பது போன்று இட்லருக்கும் முசோலினிக்கும் கூட கிடைத்திருக்கவில்லை எனலாம். இத்தகைய பெயர் பட்டியல்கள் இன்றும் போர்டு நிர்வாகத்திடம் இருப்பதைக் காணலாம். இத்தகைய “பிற்போக்கான பாதை” பாசிசத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
வாட்டர்கேட் சம்பவம் நிக்சனை அம்பலப்படுத்தி அவரை ராஜினாமா செய்யும்படி நிர்ப்பந்தித்ததானது இத்தகைய பிற்போக்கு சக்திகளுக்கு ஒரு பெரும் அடியாகும். ஆனாலும் அது ஏகபோக முதலாளித்துவத்தின் “உள்ளார்ந்த பிற்போக்குத்தனத்துக்கு” ஒரு முடிவு கட்டவில்லை. “இந்தப் பிற்போக்குத்தனம்” இன்னும் உயிரோடுதான் உள்ளது.
பாசிசமானது எப்பொழுதும் பொய்யான மற்றும் வாய்ச்சவடால் வடிவங்களிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியின் அப்பட்டமான சர்வாதிகாரம் என்பதை அது மூடிமறைக்கவே முயற்சிக்கிறது.
பின்னோக்கிக் காணும் பொழுது, பாசிசம் என்பதற்கான விளக்கம் குறித்து இதற்கு முன்னர் நடைபெற்ற எத்தனை எத்தனையோ விவாதங்களும், வாதப் பிரதிவாதங்களும் தற்பொழுது அருவமானதாகவே தோன்றுகின்றன.
அதற்குக் காரணம் பாசிசத்தின் அடிப்படை இயல்பு தற்பொழுது எல்லோருக்கும் நன்கு தெரிந்துவிட்டதேயாகும். கம்யூனிஸ்டு வட்டாரங்களில் நடத்தப்பட்ட விவாதமானது இதர இடதுசாரி – மிதவாதி வட்டாரங்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களைக் குறித்த விவாதமாகவே இருந்தது. இந்தக் கருத்துக்களில் பெரும்பாலானவை வார்த்தை ஜாலங்களின் தாக்கத்தைப் பிரதிபலித்தன என்பதுடன் பாசிசம் பரப்பிய பொய்ம்மையை மூடிமறைப்பதாகவும் இருந்தன.
பாசிசம் என்பது “ஒரு நடுத்தரவர்க்க குட்டி பூர்ஷ்வா இயக்கம்” என்ற தவறான கூற்றை அம்பலப்படுத்துவது அவசியமாகும். குட்டி பூர்ஷ்வா பகுதியானது பாசிசத்தின் வெகுஜன அடித்தளமாக இருந்தது, இருந்து வருகிறது என்ற அம்சத்தைக் கூறவேண்டியது அவசியம். ஆனால் பாசிசத்தின் அரசியல் சாராம்சம் என்பது அதுவல்ல.
டிராட்ஸ்கியவாதிகள் இந்தப் பிரச்சினைகளை குழப்புவதற்கு முயற்சிக்கிறார்கள்; “போனபார்ட்டிச இயக்கம்” என்று பாசிசத்தை அழைப்பதன் மூலம், பாசிசத்தின் வர்க்க வேர்களை மறைக்க எத்தனிக்கிறார்கள். வலதுசாரி சோசலிஸ்டுகளோ, பாசிசத்தில் சில சாதகமான அம்சங்களைக் கண்டுபிடித்து அவற்றைப் பரப்ப முயற்சிக்கிறார்கள். பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மேல்தட்டு வட்டாரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, மிகக் கொடூரமான சர்வாதிகாரம் என்று விளக்க வேண்டியது அவசியமாகும்: அவ்வாறு செய்தால்தான் உண்மையான பகைவனைத் திட்டவட்டமாக சுட்டிக்காட்டி அவனுக்கெதிரான போராட்டத்தை நடத்துவது சாத்தியமாகும். அதன்பிறகே பாசிசத்திற்கெதிராகப் பரந்துபட்ட இயக்கத்தை அணிதிரட்டுவது சாத்தியமாகும்.
டோக்ளியாட்டி சொற்பொழிவாற்றிய வருடங்களில் அமெரிக்காவிலிருந்த சோசலிஸ்டுக் கட்சி, அக்கட்சியினுள் ஊடுருவி, பெருமளவில் தலைமையைக் கைப்பற்றியிருந்த டிராட்ஸ்கியவாதிகளின் செல்வாக்கு காரணமாக, எவ்வகையான பாசிச – எதிர்ப்பு இயக்கத்திலும் பங்கேற்க மறுத்தது.
பாசிசம் என்பது “ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதிகளின் அப்பட்டமான சர்வாதிகாரம்” என்ற சரியான கம்யூனிஸ்டு நிர்ணயிப்பும் விளக்கமும் பாசிச – எதிர்ப்புக் கூட்டணி அமைப்பதற்கான அடித்தளத்தை அளித்தன. தொடர்ச்சியான ஆய்வுகள். பிறகு கூட்டு விவாதங்கள் போன்றவை ஒரு சுற்று முழுமையடைந்ததன் விளைவாக ஒரு விஞ்ஞானப்பூர்வமான சரியான நிர்ணயிப்பு தோன்றியது. 1935-ம் ஆண்டில் நடைபெற்ற கம்யூனிஸ்டு அகிலத்தின் ஏழாவது உலக காங்கிரசுக்கு அளித்த தன்னுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையில் ஜார்ஜ் டிமிட்ரோவ், பாசிசம் என்பது “நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்” என்று விளக்கம் அளித்தார்.
இங்குச் சில சிறிய பாசிச குழுக்கள் இருந்து வருவதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இதைவிட பாசிசத்திற்கு ஒரு வெகுஜன அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதற்காக அரசியல் மற்றும் தத்துவார்த்த தயாரிப்பு தற்போது நடைபெற்று வருவதைப் பற்றிதான் நாம் மிகவும் கவலைப்பட வேண்டும். இத்தாலி மற்றும் ஜெர்மனியின் படிப்பினைகளிலிருந்து தெளிவாகத் தெரிவது எதுவென்றால் அங்கெல்லாம் தத்துவார்த்த அரசியல் சூழ்நிலைமை என்பது முதலாளித்துவத்தின் பொதுவான தத்துவார்த்த சக்திகளால்தான் உருவாக்கப்படுகிறது என்பதாகும். “பிற்போக்குத்தனம் நோக்கிய போக்கு” பாசிசத்திற்கான இத்தகைய தத்துவார்த்த தயாரிப்புகளில் பிரதிபலிக்கின்றது.
“நடுத்தரவர்க்கத்தினராகிய நாம் பெரிய அரசாங்கத்தாலும் பெரும் தொழிலாளர்களாலும் மற்றும் பெரும் முதலாளிகளாலும் வரி விதிக்கப்பட்டு கசக்கிப் பிழியப்படுகின்றோம்.” இனவெறி கொண்ட அலபாமா ஆளுநர் ஜார்ஜ் வாலஸ், அதிதீவிர பிற்போக்குவாதியும் அலபாமாவின் முன்னாள் ஆளுநருமான ரோனால்ட் ரீகன் மற்றும் இதரர்களால் முழங்கப்படும் இத்தகைய கோஷங்கள் நடுத்தர வர்க்கத்தினரின் செவிகளில் தேனாகப் பாய்கின்றன. “பெரும் முதலாளிகள்” என்ற வார்த்தைகள் வெறும் ஒப்புக்காகச் சொல்லப்பட்டவை, தூண்டில் இரை. அவை, தொழிலாளி வர்க்கம் மற்றும் தொழிற் சங்கங்களுக்கெதிராக ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கான அவர்களுடைய முயற்சிகளுக்கு ஒரு மூடு திரை. “பெரிய அரசாங்கம்” என்று அவர்கள் குறிப்பிடுவது பொதுமக்கள் எந்தவொரு செல்வாக்கையும் பிரயோகிக்கக்கூடிய ஆட்சி அமைப்பையே ஆகும். இத்தாலியைப் போன்று அமெரிக்க பாசிசம் என்பதும் பெரும் முதலாளிகளின் அப்பட்டமான சர்வாதிகாரமாகத்தானிருக்கும்.
“பிரித்தாள்வது” என்பது ஒரு சிறுபான்மையினர், பெரும்பான்மையோரை அடக்கி ஆண்டு சுரண்டும் அதிகாரத்தின் மிகவும் அடிப்படையான அம்சமாகும். அது முதலாளித்துவ ஆட்சியின் துவக்கத்திலிருந்தே ஒரு அம்சமாக இருந்து வருகிறது. வரலாறு முழுவதிலும் திட்டவட்டமான சூழ்நிலைமைகளைப் பொருத்து அதனுடைய பயன்பாடும் வடிவங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. பெரும் முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிச எதிர்ப்பு, பேரரசு இனவாதம், வெள்ளை நிறத்தவர் மேலாதிக்கம் மற்றும் யூத-எதிர்ப்பு என்பவை “பிரித்தாளும்” பிரதான கருவிகளாக உள்ளன. அரசியல் மற்றும் சித்தாந்தத் துறைகளில் இந்தக் கருவியானது கம்யூனிஸ எதிர்ப்பு என்னும் வடிவத்தில் இருந்து வந்துள்ளது, இருந்தும் வருகின்றது.
பாசிசமானது, முதலாளித்துவத்தின் இத்தகைய தத்துவார்த்தக் கருவிகளை எடுத்துக்கொண்டு அவற்றைப் பெரும் ஆயுதங்களாக ஆக்கியுள்ளது. ஜெர்மனியில் இட்லரின் பாசிசம், கம்யூனிச எதிர்ப்பையும் யூத-எதிர்ப்பையும் தன்னுடைய பிரதான அரசியல், தத்துவார்த்தக் கருவிகளாக ஆக்கிக் கொண்டுள்ளது.
இத்தாலிய பாசிசமானது கம்யூனிச எதிர்ப்பையும் இனவெறியையும் அதனுடைய பிரதான கருவிகளாகப் பயன்படுத்தி வருகிறது. எத்தியோப்பிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் மீது இத்தாலிய விமானங்களின் மிருகத்தனமான குண்டு வீச்சுத் தாக்குதலோடு சேர்த்து மிகவும் வன்முறைப்பட்ட இழிவான இனவெறிப் பிரச்சாரமும் தொடர்ந்து வந்தது.
இன்று பெரும் முதலாளிகள் “பிரித்தாள்வதற்காக” இனவெறியைப் பயன்படுத்துவதால், அமெரிக்காவிலுள்ள நாம், அந்த இனவெறியைப் “பிரித்தாளும் தத்துவார்த்த விஷயமாகவே” காணவேண்டும். அதே சமயம் பாசிசம் தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய மிகவும் ஆபத்தான சாதனமாகவும் அதைக் காண வேண்டும். அமெரிக்காவில் பாசிசத்திற்கான பாதையைத் தடுப்பதில் நாம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், இனவெறியை ஒழித்துக்கட்ட போராட வேண்டும் என்ற அடிப்படையான படிப்பினையை நாம் பெற வேண்டும்.
தோழா் டிமிட்ரோவ் பாசிசம் நிகழ்ச்சி நிரலுக்கு வருவது குறித்து கூறும் போது "முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச்செல்லும் போக்கு முடிந்து போன, தவிர்க்கவியலாத ஒன்று எனக்கருதாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஏகாதிபத்தியத்திலிருந்து பாசிச சா்வாதிகாரம் அவசியம் தோன்றியே தீரும் என்று கிடையாது. இங்கு நாம் சில நடைமுறை உதாரணங்களை காண்போம். உதாரணத்திற்கு இங்கிலாந்து பெரும் ஏகாதிபத்திய நாடு. அங்கு ஜனநாயகவகைப்பட்ட நாடாளுமன்ற அரசாங்கம் (இதிலும் கூட பிற்போக்கு அம்சங்கள் இல்லை எனக் கூறிவிட முடியாது.) உள்ளது. பிரான்சையும் அமெரிக்கைாவையும் எடுத்துக் கொள்வோம். இந்நாடுகளில் பாசிச வடிவில் சமூகத்தை உருவாக்கும் போக்கு உள்ளதை நீங்கள் காண்பீா்கள். ஆனால் இங்கே நாடாளுமன்ற வடிவங்கள் இன்னும் உள்ளன.
பாசிச வடிவிலான அரசாங்கத்தை நோக்கி செல்லும் போக்கு அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது என்றாலும் பாசிசம் எல்லா இடங்களிலும் வந்தே தீரும் என்று இதற்குபொருள் ஆகாது.”
மேலும் டிமிட்ரோவ் கூறுகிறார்:
பாசிசம் எத்தகைய ஒரு முகமூடியை (இனம், மதம், தேசம், மொழி......) அணிந்திருந்தாலும் எந்த வடிவத்தில் தன்னை அது காட்டிக்கொண்டாலும் எந்த வழிகளில் அது அதிகாரத்திற்கு வந்தாலும்:
பாசிசம் என்பது முதலாளித்துவமானது (நிதிமூலதனம்) உழைக்கும் மக்கள்(தொழிலாளர்கள், விவசாயிகள்) மீது மிகவும் கொடூரமாக, கோரமாக நடத்தும்தாக்குதல் ஆகும்.
இத்தகைய பாசிச சா்வாதிகாரம்தான் அதன் மூலச்சிறப்பான வடிவத்தில் முதல் உலகயுத்தத்திற்கு பிறகு முதலில் இத்தாலியிலும் பின்னர் ஜொ்மனியிலும் அந்தந்த நாட்டுக்குரிய குறிப்பான வடிவங்களில் முதன்முதலாக கட்டியமைக்கப்பட்டன.
முதல் உலக யுத்தமும் பாசிசத்தின் தோற்றமும்:- முதல் உலகயுத்தம் 1914ல் துவங்கியது். அந்த யுத்தத்திற்கு முன்பே ஏகாதிபத்தியத்தின் பொருளியல் உறவுகளை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து லெனின், ஏகாதிபத்தியமானது “முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” என்றும் ஏகாதிபத்தியமானது தனது சந்தைகளுக்காக நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்வதை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம்” என்றும் ஏகாதிபத்தியங்களுக்கிடையே சந்தை களுக்கான போட்டியும் மற்றும் யுத்தமும் தவிர்க்க முடியாதது என்றார். உலக யுத்தத்தை ஏகாதிபத்தியங் களுக்கிடையேயான பொருளாதார நெருக்கடியிலிருந்து தோன்றுகின்ற யுத்தம் என்றார். மேலும் “ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பல்களுக்கிடையே 1900-க்குள்ளேயே ஆசிய, லத்தீன் அமெரிக்கா, மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள காலனிய நாடுகள் அனைத்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளால் பங்கு போடப்பட்டு விட்டன” என்று கூறினார். “மேலும் தற்போதைய யுத்தமானது ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டலுக்காகவும் சந்தைக்காகவும் இந்த உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கே” என்றார்.
எனவே இந்த யுத்தம் உலகமக்களுக்கு எதிரானது. இது அநீதியான யுத்தம் என்றார். இது உலகமக்களை முன்னிலும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும். இந்த நெருக்கடியான சூழலில் போரிடும் நாட்டிலுள்ள கம்யூனிஸ்டு கட்சிகளானது இந்த யுத்தத்தின் தீய நோக்கத்தை உழைக்கும் மக்கள்திரளிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்றார் லெனின்.
மேலும் இந்த யுத்தச் சூழலையும் பயன்படுத்தி தொழிலாளா் வா்க்கத்திற்கும் விவசாயவா்க்கத்திற்கும் புரட்சிகர உணா்வையூட்டி அவ்வா்க்கங்களை சோசலிச புரட்சியின் மூலம் தங்களது சொந்தநாட்டிலுள்ள முதலாளித்துவ ஆளும்வா்க்கத்தை தூக்கியெறிந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றச் செய்ய வேண்டும் என்றார். அதாவது “உலகயுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக (புரட்சியாக) மாற்றவேண்டும்” என்றார் .
ஆனால் இரண்டாம் கம்யூனிச அகிலத்தை சோ்ந்த காவுட்ஸ்கி போன்ற சந்தா்ப்பவாத தலைவா்கள் லெனினின் புரட்சிகர கோட்பாட்டை மறுத்தனா். ஏகாதிபத்தியத்தின் நிதிமூலதனக் கோட்பாட்டை மறுத்தனா். “அதீத ஏகாதிபத்தியம்” என்றனா். அதாவது ஏகாதிபத்தியம் காலனிகளில் பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்தும் என்றனா். மற்றும் காலனிகள் மீதான நிதிமூலதனக் கும்பலின் ஏகாதிபத்திய கொள்ளையையும் மறுத்தனா். ஏகாதிபத்திய சந்தையின் மறுபங்கீட்டுக்கான யுத்தத்தை “தேசபக்த யுத்தம்” எனவும், இந்த யுத்தத்தை நடத்தும் நாட்டின் ஆளும்வா்க்கத்தையும் அரசையும் உழைக்கும் வா்க்கமும் கம்யயூனிஸ்டு கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் எனவும், ”தாய்நாட்டை பாதுகாப்போம்” எனவும் “ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசபக்தி வேண்டும்” என்று பிரச்சாரம் செய்து உழைக்கும் வா்க்கத்திற்கும் மற்றும் புரட்சிக்கும் துரோகம் இழைத்தனா். ஏகாதிபத்திய யுத்தவெறியா்களுக்கு துணைபோயினா்.
அதே சமயத்தில் ரஷ்யாவில் லெனின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வந்த போல்ஸ்விக் கட்சியானது தொடா்ச்சியாக யுத்தத்திற்கெதிராக உழைக்கும் வா்க்கங் களிடையே ஏகாதிபத்தியவாதிகளின் யுத்தநோக்கத்தை ரஷ்ய தொழிலாளா் வா்க்கத்திடம் விவசாய வா்க்கத்திடம் அம்பலப்படுத்தி, ரஷ்ய ஜார் மன்னனின் ஏதேச்சதிகாரமானது ஏகாதிபத்தியங்களின் யுத்தவெறிக்கு துணைபோவதை சுட்டிகாட்டி அதற்கு எதிராக தொழிலாளா் மற்றும் விவசாய வா்க்கத்தை அதாவது உழைக்கும் வா்க்கத்தை திரட்டி 1917 பிப்ரவரியில் ஜாரின்எதேச்சாதிகாரத்தை தூக்கியெறிந்து
உலக யுத்தம் முடிந்தபிறகு லெனின் கூறியவாறே நிகழ்ந்தது. யுத்தத்தில் பங்கு கொண்ட அனைத்து ஏகாதிபத்தியங்களும் (அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை தவிர) மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டன. அதிலும் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த நாடுகள் இத்தாலியும் ஜொ்மனியும் ஆகும். இந்த நாடுகளில்தான் 1920-களிலும் 1930-களிலும் பாசிச மற்றும் நாஜிச (பாசிச) அரசுகள் நிறுவப்பட்டன.பாசிசத்தின் பிரத்யேக வடிவங்கள் பற்றி டிமிட்ரோவ் மேலும் கூறுவதாவது: ‘பாசிசத்தைப் பற்றி பொதுவாக குணாம்சபடுத்திக் கூறினால் போதாது. அது எவ்வளவு சரியாக இருந்தாலும் போதாது. பாசிசத்தின் வளர்ச்சி பற்றிய விசேஷ அம்சங்களை தனிப்பட்ட பல நாடுகளில் அதன் பல்வேறு கட்டங்களில் பாசிச சர்வாதிகாரம் எடுக்கும் பல்வேறு வடிவங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றை விவரமாக படித்தறிய வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தேசிய தனித்தன்மைகளை, பாசிசத்தின் குறிப்பிட்ட தேசிய அம்சங்களை ஆராய்ந்து படித்தறிந்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். அதற்குத்தக்கபடி பாசிசத்திற்கு எதிரான சரியான போராட்ட வடிவங்களையும், முறைகளையும் வகுத்துக்கொள்ள வேண்டும்.”
இத்தாலியானது யுத்தத்தில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் சோ்ந்து முதல் உலக யுத்தத்தில் ஈடுபட்டது. யுத்தத்தில் .இத்தாலி வெற்றி பெற்ற அணியில் இடம் பெற்றிருந்தாலும்லெனின் கூறியவாறு அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டது. யுத்தக் கடன், உணவுபற்றாக்குறை, மோசமான அறுவடை, பணவீக்கம், விலைவாசி உயா்வு போன்றவைகள் அந்தநாட்டை பொருளாதார ரீதியான திவால் தன்மைக்கு கொண்டு சென்றது. ஆறு லட்சம் இத்தாலிய படைவீரா்கள் யுத்ததத்தில் பலியாயினா். பத்து லட்சம் இத்தாலியா்கள் காயமடைந்தனா். 5 லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தனா். யுத்தத்தில் கிடைத்த ஆதாயத்தை விட யுத்தச்செலவுகள் மிக அதிகமானது. மேலும் யுத்தத்தின் கூட்டாளி நாடுகளால் உரிய ஆதாயத்தை முறையாக பங்கிட்டு கொடுக்காமல் துரோகம் இழைக்கப்பட்டது.. யுத்தத்தினால் ஏற்பட்ட சீரழிவுகளையும் கொடுமைகளையும் எதிர்த்து உழைக்கும் விவசாய வா்க்கத்தின் மற்றும்தொழிலாளா் வா்க்கத்தினுடைய போராட்டம் உக்கிரமாக நடந்தது. இந்நேரத்தில் சரியான வழிகாட்டும் சித்தாந்த பலம்பெற்ற கம்யுனிஸ்டு கட்சி இல்லாததன் விளைவாக அப்போராட்டங்களை தொழிலாளா் விவசாய வா்க்கம் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டமாக வளா்த்து செல்ல முடியவில்லை. ரஷ்யாவில் கம்யுனி்ஸ்டு கட்சி தலைமையில் சோசலிச அரசு அமைக்கப்பட்டதைகண்டு ஏகாதிபத்திய நிதமூலதனக் கும்பல் நடுங்கியது. இத்தாலிய நிதிமூலதனக்கும்பலின் நலனை பிரதிநித்துவப்படுத்திய முசோலினியின் பாசிஸ்டா கட்சியானது குட்டிமுதலாளிய வா்க்கத்தையும் வெகுஜனங்களையும் தங்களது வாய்ச்சவடால் பாசிசப் பிரச்சாரத்தினால் பொய்யையும் புரட்டையும் பிரச்சாரம் செய்தது. “அதாவது பழைய ரோமப் பேரரசு நிலவிய போது நம்மிடம் இருந்த மிகுதியான “கத்தோலிக்க மத உணா்ச்சியோடு கூடிய இத்தாலிய தேசபற்று” மற்றும் “இத்தாலிய தேசிய பெருமிதம்” இல்லை. அதனால்தான் நாம் யுத்தத்தினால் ஆதாயம் அடைய முடியவில்லை. நமக்கு இத்தாலிய தேசபக்தி இல்லாததன் விளைவாகத்தான் நாம் நமது ரோம சாம்ராஜ்யத்தை இழந்தோம்” என்ற முசோலினியின் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்ட வாய்ச் சவடால் பிரச்சாரத்தின் மூலம் அப்பாவி வெகுஜனங்கள் மற்றும் நடுத்தரவா்க்கம் ஏமாற்றப்பட்டனர். மேலும் தோ்தல் மூலமாக முசோலினியின் பாசிஸ்டா கட்சியானது அதிகாரத்திற்கு வந்தது. 1922-ல் முசோலினி இத்தாலியின் பிரதமரானான். 1925-ல் இத்தாலியின் சர்வாதிகாரி என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டான். தோ்தலில்தான் பெற்ற பெரும்பான்மையைக் கொண்டு கம்யூனி்ஸ்டு கட்சி, தொழிற்சங்கம் மற்றும் விவசாய சங்கம் உட்பட அனைத்து ஜனநாயக அமைப்புகள் கூடவே பாராளுமன்றத்தையும் எதேச்சதிகாரமாக கலைத்தான். ஜனநாயகமும் கம்யூனிசமும் தேசத்திற்கு ஆபத்து என்றான். அறிவும் அறிவியலும் சமுதாயத்திற்கு எதிரானது என்றான். தெய்வபக்திமிக்க மற்றும் கத்தோலிக்க தன்மை கொண்ட பழையரோமானியப் பேரரசை, அதாவது ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தைச்சேர்ந்த ஏறக்குறைய 40 நாடுகளில் இத்தாலிய பேரரசை நிறுவுவதே தனது பாசிஸ்டுகட்சியின் லட்சியம் என்று பகிரங்கமாக அறிவித்தான். தன்னை எதிர்த்து போராடியவா்களை வீதியில் தூக்கில் தொங்கவிட்டான்.முன்னாள் ராணுவத்தினர், 14 வயது நிரம்பிய இளைஞர்கள் வேலையற்றோர்,உதிரிகள், கிரிமினல்கள், இத்தாலிய ஆதிக்க வெறி கொண்ட பழமைவாதிகள் மற்றும்கிறித்தவ பாதிரியார்களைக் கொண்டு ரோம சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்றான். அதற்காக கத்தோலிக்க மத உணர்ச்சியோடு கூடிய இத்தாலிய மொழி--தேசியஇனவெறி ஊட்டப்பட்ட “கருப்புச் சட்டை” என்ற ஆயுதம் தாங்கிய பாசிசப்
படைப்பிரிவை அவன் உருவாக்கினான். அப்படைக்கு முறையான உடற்பயிற்சி பற்றிய போதனை, ”தேசபக்தி” ( முதல் உலக யுத்தக் காலககட்டத்தில் இரண்டாம் அகிலத்தில் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை மறுத்த காவுட்ஸ்கியினர் முன் வைத்த சமூகதேசியவெறி முழக்கம் ஆகும்.) என்ற பெயரில் இத்தாலியானது பிற தேசங்களை ஆக்கிரமிப்பது நியாயமானது என்ற போதனை, மற்றும் மிக முக்கியமாக ஒரு நபர்தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவது என்ற மத்தியத்துவக் கொள்கை இவற்றுக்கான பயிற்சி தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டது. பழைய ரோம சாம்ராஜ்யத்தில் அடிமைப்படுத்தி வைக்கப்பட்ட 40 தேசங்களை படையெடுப்பின் மூலமாக மீட்டு புதிய ரோம சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும்.
இவற்றிற்கு முன்னிபந்தனையாக முதலில் நாட்டிற்குள் ஜனநாயகவாதிகள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், பகுத்தறிவாளர்கள்,பெண்விடுதலைக்கு குரல்கொடுப்பவர்கள் ,முற்போக்கு நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இவைகளை ஒழிக்கவேண்டும் என்ற பாசிச போதனையும் கொடுக்கப்பட்டது.
மேலும் இத்தாலிய பாசிசஆட்சியானது, நிலபிரபுத்துவத்திற்கு எதிராகப் போராடி முதலாளித்துவப் புரட்சியின் மூலமாக பெறப்பட்ட ஜனநாயகச் சட்டங்களை அதாவது பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் கூட்டம் கூடும் உரிமை போன்ற இன்ன பிறவற்றை தூக்கி யெறிந்துவிட்டு எதேச்சதிகாரமான சர்வாதிகார கொடூரச் சட்டங்களை உருவாக்கியது. போராடுபவர் களையும் குறிப்பாக கம்யூனிஸ்டுகளையும் ஜனநாயகசக்திகளையும், ஜனநாயக நிறுவனங்களையும் தொழிற்சங்கங்களையும் மிகக்கடுமையாக ஒடுக்கியது. சட்டப்பூர்வமான முதலாளித்துவக் குடியரசுகள் நிலவிய ஐரோப்பியச் சூழலில் சட்டபூர்வமான குடியரசு முறையைத் தூக்கியெறிந்து விட்டு வரலாற்றில் அப்பட்டமான கொடூரமான பாசிச ஆட்சியை நிறுவினான்.
அதேபோல் ஜெர்மனியிலும் 1933 ம் ஆண்டு நடந்த ரைஸ்டாக் (பாராளுமன்றம்) தேர்தலில் நாஜிக்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆட்சியில் ஹிட்லர் அமர்ந்தவுடன் இத்தாலியின் முசோலினியைப் போலவே அனைத்து தொழிற்சங்கங்களையும் விவசாய சங்கங்களையும் கலைத்ததான். ஜனநாயகம் ஆபத்து என்றான். மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் கூட்டம் கூடும் உரிமை மறுக்கப்பட்டது. பகுத்தறிவாளா்களும், அறிவுவிஜீவிகளும் விஞ்ஞானிகளும் மிரட்டப்பட்டு நாட்டை விட்டு துரத்தப்பட்டனா். கம்யூனிஸ்டுகளும் கொடுமைகளை எதிர்த்து போராடும் ஜனநாயக சக்திகளும் படுகொலை செய்யப்பட்டனா். நாஜி அரசானது அரசு நிர்வாகம், இராணுவம், போலீஸ் போன்ற அனைத்து துறைகளிலும் யூதர்களை நீக்கியது. அனைத்து அரசு அமைப்புகளையும் நாஜிச மயமாக்கியது. யூதா்களுக்கு குடியுரிமையை மறுத்தது. அவா்களைஇரண்டாம்தரகுடிமக்களாக்கியது. யூதர்களுக்கு அடையாளமாக தனிச் சின்னத்தை அவர்களது உடையில் கட்டாயமாக அணியவைத்தது. அவர்களின் சொத்துக்களை பதிவு செய்யக் கூறியது. பிறகு அவற்றைக் நாஜிகட்சியினரை கொண்டே கொள்ளையடித்தது. அதில் ஒரு பகுதியை நாஜிக் கட்சியினருக்கு பங்கு போட்டுக் கொடுத்துவிட்டு மீதியை அரசு தனது கஜானாவுக்கு கொண்டு சென்றது. யூதர்களை ஜெட்டோ என்ற தனி வெளிச்சிறையில் (வதைமுகாம்களில்) அடைத்துவைத்தது.குறிப்பிட்ட நேரத்தில் வெளியே செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வரவேண்டும் என்று கட்டளையிட்டது.. அவர்களது வியாபார நிறுவனங்கள் தொழில் நிலையங்களை கைப்பற்றியது. அவர்களின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
ஹிட்லர் படையெடுத்த நாடுகளிலெல்லாம் இந்த நடைமுறையைக் கையாண்டான். பிரான்ஸ் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்கள் மற்றம் சிறுகுழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான யூதர்களையும் இன்னபிற தேசிய இனங்களையும் “ஆரிய இனத்தைத் தூய்மைப் படுத்துகிறோம்” என்று கூறி போலந்திலுள்ள ஆஷ்டுவிஸ்ச் பகுதியிலுள்ள வெகுஜன கொலைக்களத்திற்கு கொண்டுசென்று ”ஹோலகாஸ்ட்” என்றழைக்கப்படுகிற கூட்டுப் படுகொலையை நிகழ்த்தினான். (2002ல் குஜராத்தில் R.S.S இந்துத்துவா மதவெறி பாசிஸ்டுகள் முதியோர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1000க் கணக்கில் முஸ்லிம்களை கொன்று குவித்ததை நினைவில் கொள்வோம்.)
ஜெர்மனியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாசிசமும் இத்தாலியைப் போன்று தேசியவெறியையும் பிற தேசங்களை ஆக்கிரமித்து ஜெர்மனிக்கு கீழ்படுத்த வேண்டும் என்ற தேசிய ஆக்கிரமிப்பு கொள்கையை முன்வைத்தது. அத்துடன் கூடவே சொந்த தேசத்திலேயே பலநூறு ஆண்டுகள் இரண்டறக் கலந்து வாழ்ந்து வந்த யூதஇனத்தை ஜெர்மானியர்களுக்கு செயற்கையாக எதிரியாக சித்தரித்து யூதமொழி தேசியஇனஅழிப்பை செயல்படுத்தியதுதான் ஜெர்மானிய பாசித்தின் குறித்த பண்பாகும்.
ஜெர்மனியிலும் இத்தாலியிலும் பாசிசத்திற்கெதிரான போராட்ட படிப்பினைகளைப் படிக்கும்பொழுதும் அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் பிரச்சினைகள் சம்பந்தமாகத் தோன்றும் பல புதிய “தீர்வுகளின்” தொலைதூரத்திய தாத்பரியங்களைக் காண்பதும் அவசியமாகிறது. “திட்டமிடுதல்” என்பது ஒரு கோட்பாடு என்ற முறையில் தான்தோன்றித்தனமான தன்னிச்சைப் போக்கை தலைமுழுகிவிட்டது. இந்த நோக்கங்கள் யாவும் வர்க்கக் கூட்டு என்ற “திட்ட” அடிப்படையிலானதாகும். ”பொருளாதாரத் திட்டமிடுதல்” என்பது ஏகபோக மூலதனத்தின் சேவைக்காக உள்ளது. அது சுரண்டல் மற்றும் பெரும் ஆதாயங்களுக்கான “திட்டமிடல்” ஆகும். பாசிசமும் “திட்டமிடுதல்” குறித்துப் பெரிதாகப் பேசுகிறது என்பதுடன் பெரும் முதலாளிகளின் நலனுக்காக அது திட்டமிடுகிறது.(இவை அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையிலிருந்து).
இந்தியா மற்றும் இதர பல நாடுகளில் சமூக ஜனநாயகம் (அன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகள்) எதிர்மறையான பங்காற்றியுள்ள நிலைமையில் பாசிசம் தோன்றுவதற்கு முன்னரும் தோன்றியிருந்த சமயத்திலும் சோசலிஸ்டு கட்சியினுடைய தலைமை கடைபிடித்த கொள்கைகள் குறித்து அன்றைய விவாதமானது மிகுந்த முக்கியத்துவமுடையது. இத்தாலியிலும் அதைப் போன்றே ஜெர்மனியிலும் பாசிசத்தை அதிகாரத்தில் ஏற்றுவதற்கான தயாரிப்பில் சமூக ஜனநாயகம் ஒரு காரணமாக இருந்துள்ளது.
பாசிசமானது முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை வெற்றிகொள்ள முடியவில்லை. பல காலம் வரை அது அவற்றை மூடிமறைத்திருந்தது. ஆனால், ஏதாவதொரு வழியில் அவை தொடர்ந்து தலைதூக்க ஆரம்பித்தன. இவ்வாறு பாசிசத்திற்கெதிரான போராட்டங்களுக்குப் புதிய வாய்ப்புகள் தோன்றின. போராட்டத்திற்கான சாத்தியப்பாட்டை முரண்பாடுகள் திறந்துவிட்டன. ஆனால் பாசிசத்தின் தோல்வியானது அணி திரட்டப்பட்ட வெகுஜன போராட்டத்தின் விளைவாக மட்டுமே வரமுடியும்.
அதனால்,
“பாசிஸ்டுகளால் ஒழுங்கமைக்கப்பட்டு அணி திரட்டப்பட்டு அவர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட மக்கள் ஒருநாள் காலையில் தாங்களாகவே பாசிசத்திலிருந்து விலகி, பாட்டாளி வர்க்கப் புரட்சியில் கலந்து கொள்ள நம்மிடம் வந்துவிடுவார்கள் என்று யாரும் நினைக்கக் கூடாது. அந்த மக்கள் வெளியே வருவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். நமது பக்கம் அவர்கள் வந்து சேருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.”
பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பல அடிப்படையான கொள்கைகள் குறித்து நமது முன்னோடிகள் பல நிர்ணயிப்புகளை உருவாக்கியுள்ளனர். “கோட்பாடு குறித்த சரியான நிலைப்பாட்டிற்கும்” சக்திகளின் உறவு குறித்த ஒரு சரியான மதிப்பீட்டிற்கும், “நடைமுறைக் கொள்கைப் பிரச்சினைகளில் சரியான தீர்வுகளுக்கும்” மிகுந்த முக்கியத்துவம் உடையது. “நடைமுறைக் கொள்கைப் பிரச்சினை”களுக்கான சரியான தீர்வுகளுக்கு அடிப்படையாக “சரியான கோட்பாட்டு நிலைப்பாட்டை” மேற்கொள்ள வேண்டும் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளில் தவறி விழுவதற்கு எதிரான எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உலக அனுபவம் என்ற பெட்டகத்தில் இருந்து குவிக்கப்பட்டிருக்கும் ஏராளமான சான்றாதாரங்களின் அடிப்படையில் டோக்ளியாட்டி பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார் :
- பாசிசம் என்பது முதலாளித்துவ நாடுகளில் ஒரு அபாயமாக உள்ளது. ஆனால், அது தவிர்க்க முடியாததொரு வளர்ச்சிக் கட்டமல்ல.
- பாசிசமானது, முதலாளித்துவத்தின் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் அடிப்படையில் தீர்க்க முடியாது. இதனால் அடிப்படையான வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் தொடரும்.
- பாசிசம் அதிகாரத்திலிருக்கும் பொழுது, மிக மோசமான நிலைமைகளிலும் கூட ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி பாசிசத்தைத் தோற்கடிப்பதற்குப் போராடுவது சாத்தியமே.
பாசிசமானது தன்னுடைய சொந்த உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழுந்துவிடாது. ஆனால், அதை தோல்வியுறச் செய்ய அந்த முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். தொடரும் வரும் இதழில் (இலக்கு இணைய இதழ் 80 வெளியான கட்டுரையின் பகுதியே )
No comments:
Post a Comment