இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை
1). மனித சமுதாயம். ராகுல் சாங்கிருத்யாயன். பாகம்-1பதிப்பாசிரியரின் குறிப்பு
2). வரலாற்றுபொருள்முதல்வாதம்.மாரிஸ் கான் ஃபோர்த். பாகம்- 1.
3). சாதி அன்றும் இன்றும் நூல் அறிமுகம்
1937 இல் ராகுல்ஜி கடைசியாகத் திபெத்திய பயணத்தை முடித்துக்கொண்டு கல்கத்தா வந்தபோது நான் அவரை முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அவர் பீகாரில் இருந்து கொண்டு கட்சிப் பணியாற்றவும் அப்பொழுதுதான் முடிவு செய்யப்பட்டது. 1944இல் ராகுல்ஜி தனது மனைவியையும் குழந்தைகளையும் பார்க்க சோவியத் நாட்டிற்கு சென்றிருந்தபோது நான்தான் “தத்துவ வழிகாட்டி” யிலிருந்த எத்தனையோ குறைகளை திருத்தினேன். மனித சமுதாயத்தின் (நூல்) வங்கப்பதிப்பையும் நானே பதிப்பித்தேன். இதே போல் வால்காவிலிருந்து கங்கை வரையையும் (நூல்) சரிபார்த்தேன்.
இந்த மனித சமுதாயம் நூலில் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய வரையிலான விஷயங்கள் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நான் ஒரு தனி நூலாக எழுத விரும்புகிறேன்.
“மனித சமுதாயம்” (நூல்) இந்தி மொழியில் ஒரு தனிச்சிறப்பு படைத்த நூலாகும். இந்தி, வங்க மொழி வாசகர்களுக்கு இது மிகவும் பயனுடையதாக இருந்தது. நேப்பாளத்தில் கூட இதற்கு நல்ல வரவேற்புஇருந்தது.
ஏஷியாடிக் சொசைட்டி, மகாதேவ ஸாஹா.
கல்கத்தா - 16,24, நவம்பர், 1976.
வரலாற்று பொருள்முதல்வாதம்.மாரிஸ் கான் ஃபோர்த். பகுதியிலிருந்து.
மனிதர்களின் வாழ்வு வளம்பெற எப்படி விஞ்ஞானக் கல்வி அவசியமோ அதேபோலவே மனிதர்களுக்கு இடையிலுள்ள ஏற்றத்தாழ்வு நீங்கி மனிதர்கள் சமத்துவமாக வாழ்வதற்கு சமூக விஞ்ஞானமான மார்க்சியக் கல்வி அவசியம். நமது நாட்டை ஆளுகின்றவர்கள் அவர்களின் வளர்ச்சிக்காக மக்களுக்கு விஞ்ஞான கல்வியை வழங்குகிறார்களே, அதேபோலவே கம்யூனிஸ்டுகள் சமத்துவ சமுதாயத்தை படைப்பதற்காக மக்களுக்கு மார்க்சிய கல்வியை வழங்க வேண்டும். அஞ்ஞானம் மனிதனை விடுதலை செய்யாது, விஞ்ஞானமே மனிதனை விடுதலை செய்யும். அதுபோலவே உழைக்கும் வர்க்கத்தை மார்க்சிய சமூக விஞ்ஞானம்தான் விடுதலை செய்யும். மார்க்சிய விஞ்ஞானத்தை கற்றுக்கொள்ளாதவர்கள் அடிமையாகவே வாழ்ந்து விதிவந்தால் சாகலாம்.
உற்பத்திச் சாதனங்கள் சமூக உடமையாக இருப்பதும், அவற்றின் பயன்பாடு சமூகம் முழுமைக்குமான பொருளியல் மற்றும் கலாச்சார தேவைகளை நிறைவு செய்வதாக இருப்பதும் தான் சோசலிசம் ஆகும். சமூகத்தின் பொருளாதார அடிப்படையை இவ்வாறு தீவிரமாக மாற்றி அமைப்பது மட்டும்தான் முதலாளித்துவத்தின் விளைவாக ஏற்படும் தீமைகளை அகற்றி தள்ள முடியும்; என்பதுடன் புதிய ஆற்றல் வாய்ந்த தொழில் நுட்பங்களை முழுமையாக பயன்படுத்த முடியும் என்பதால் சோசலிசம் தேவை. (இயக்கவியல், வரலாற்று பொருள்முதல்வாதம், மாரிஸ் கான் ஃபோர்த், பக்கம் - 211).
பாட்டாளி வர்க்கத்தின் போராட்டம் மற்றும் பெருந்திரள் பாட்டாளி வர்க்கஇயக்கம் அறிவியல் பூர்வமான சோசலிசத் தத்துவ ஆயுதத்தை கைக்கொள்வது எனும் நிபந்தனையின் மூலமாகத்தான் சோசலிசத்தை அடைய முடியும். மார்க்சும் எங்கெல்சும் இந்த தத்துவத்தின் அடித்தளங்களை நிறுவினார்கள். சமூக வளர்ச்சி விதிகள், பாட்டாளி வர்க்க போராட்ட விதிகள் குறித்த அவர்களுடைய கண்டுபிடிப்புகள் அவர்களின் போதனைக்கு அடித்தளமாக அமைந்துள்ளன. (பொருள்முதல்வாதம் பற்றிய மாரிஸ் கான் போர்த்தின் நூல் பக்கம் - 211).
சாதி நூலிலிருந்து
ஆர்.எஸ்.சர்மாவின் இந்திய நிலமானியம் குறித்த குறிப்பான ஆய்வுகள் இந்திய வரலாறு பற்றிய ஆய்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. குறிப்பாக “இந்திய நிலமானிய முறை” மற்றும் “மத்திய காலங்களின் தொடக்கத்தில் இந்திய சமூகம் - நிலப்பிரபுத்துவ உருவாக்கம் பற்றிய ஒர் ஆய்வு” (Early Medieval Indian Society - A Study in Feudalisation) என்ற நூல்கள் இது குறித்த மிக விரிவான, ஆழமான ஆய்வுகளாகும்.
இது போன்றே தமிழக வரலாற்றிலும் 7ஆம் நூற்றாண்டுகளில் சோழர் ஆட்சிக் காலத்தில் பரவலாக புகுத்தப்பட்ட நிலமானிய முறை இங்கு முதன்முதலாக சாதி அமைப்பை உருவாக்கி திடப்படுத்தியது. மேற்கண்ட பொருளியல் அடித்தளத்தின் மாற்றமும், வளர்ச்சியும் அதற்கான மேற்கட்டுமானத்தை உருவாக்கியது என்பதை பார்க்க முடியும்.இந்த வரலாற்று ஆய்வுகள் சமூக வடிவத்தை, சாதியைப் பற்றிய சரியான ஆய்வுகளை வைக்க உதவியது. அதாவது “பரம்பரைத் தொழில் பிரிவினை அடிப்படையில் சாதி முறை தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. சாதி மற்றும் தீண்டாமையின் சமூக வேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிறஅம்சங்களான அகமணமுறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவ பண்பாடே காரணம்.
நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஆன்மீக வகைப்படாத நிலப்பிரபுக்களுக்கு இணையாக ஆன்மீக நிலப்பிரபுக்களையும் சேர்த்தே பார்க்க வேண்டும். ஆன்மீக நிலப்பிரபுக்களின் (கோயில்கள், மடங்கள்) ஆதிக்கம் தென்னிந்தியாவில் மிக வலுவானதாகும். அதிலும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை நிலை நிறுத்தியதில் முக்கிய பங்காற்றியது பார்ப்பன மடங்கள், கோயில்கள் மட்டுமல்ல அதைவிட வலுவான பார்ப்பனர் அல்லாத கோயில்களும் மடங்களும்தான். சோழர் காலத்தில் வழங்கப்பட்ட பிரம்மதேயம், பள்ளிச்சந்தம், தேவதானம் ஆகியவை நிலப்பிரபுத்துவ உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியதை அறியமுடியும். தமிழகத்தில் மட்டும் 36,355 கோயில்கள் மற்றும் மடங்கள் 4,79,021 ஏக்கர் நிலத்தினை வைத்துள்ளதாக 2002-03ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை கூறுகிறது.
நிலவுடமைக்கும் மதநிறுவனங்களுக்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்ள எங்கல்ஸ் கூற்றினை புரிந்துகொள்ளவேண்டும். “மத்திய காலத்தின் உலகக் கண்ணோட்டம் பெரும்பான்மையாக இறையியல் கண்ணோட்டம்தான். ஒரு பொது எதிரியான சராசன்களுக்கு (முஸ்லீம்) மாற்றாக ஐரோப்பிய நாடுகளை கிருத்துவம் ஒருமைப்படுத்தியது. கத்தோலிக்கம் இதைச் செய்தது. கருத்தளவில் மட்டும் இந்த இணைப்பு நின்றுவிடவில்லை. உண்மையிலேயே இந்த இணைப்பு இருந்தது. போப்பாண்டவரை மையமாகக் கொண்டு நிலப்பிரபுத்துவ ரீதியில் அமைக்கப்பட்டிருந்த தேவாலய அமைப்பில் அது காணப்பட்டது. நில உடமையாளர் என்ற முறையில் உள்ள தேவாலயம் பல்வேறு நாடுகளுக்கிடையிலான இணைப்பாக விளங்கியது.
இலக்கு 65 இணைய இதழ் PDF வடிவில் இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே
No comments:
Post a Comment