சோசலிசமும்‌ முதலாளிய மீட்சியும்‌(SOCIALISM AND CAPITALIST RESTORATION) -பகுதி 1

 இந்தப் பகுதி பல்வேறு நூல்களின் துணைக் கொண்டு எழுதுகிறேன் அதில் குறிப்பாக கோ.கேசவனின் நூலை மற்றும் SOC வெளியிட்ட நூலையும்.

1848 இல்‌ ஐரோப்பாவைப்‌ பொதுவுடைமைப்‌ பூதம்‌ பிடித்தாட்டுவதாகக்‌ காரல்மார்க்கும்‌ ஏங்கெல்சும்‌ குறிப்பிட்டனர்‌. 140 ஆண்டுகளுக்குப்‌ பின்னர்‌ பொதுவுடைமையை ஐரோப்பியப்‌ பூதம்‌ பிடித்தாட்டிக்‌ கொண்டிருப்பதாக முதலாளிய விமரிசகர்கள்‌ இன்று கேலிச்சித்திரம்‌ வரைகின்றனர்‌. இதுபோன்ற விமரிசனங்கள்‌, மார்க்சின்‌ காலத்திலும்‌ எழுந்ததுண்டு. சோசலிசக்‌ கருத்தமைப்பே ஒரு வரலாற்றுப்‌ பிழைஎன்றும்‌. அது சித்தப்பிரமையாளனின்‌ அதீதக்‌ கற்பனை என்றும்‌ குறிப்பிட்டனர்‌. இவற்றுக்கெல்லாம்‌ பதில்‌ கொடுத்து மார்க்சும்‌ ஏங்கெல்சும்‌ விஞ்ஞான சோசலிசம்‌ பொதுவுடைமையின்‌ முதல்‌ கட்டம்‌ என நிறுவினர்‌.இவை சோசலிச அமைப்பு எற்படுதலுக்கு முந்தைய கருத்துப்‌ போராட்டங்களாகும்‌.

முதல்‌ உலகப்‌ போரில்‌ ரசியாவிலும்‌ இரண்டாம்‌ உலகப்‌ போருக்குப்‌ பின்‌ சீனாவிலும்‌ கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும்‌ அதன்பின்‌ இந்தோசீன நாடுகளிலும்‌சோசலிசக்‌ கட்டமைப்பு உருவாயிற்று. எனினும்‌ இன்று உலகில்‌ எங்கும்‌ சோசலிச நாடுகள்‌ இல்லை என்பது கசப்பான அரசியல்‌ யதார்த்தம்‌. அதாவது நிறுவப்பட்ட சோசலிசத்‌ தளங்கள்‌ அனைத்தும்‌ தகர்ந்து விட்டன.

உலகில்‌ இப்பொழுது பொதுவுடைமைப்‌ புரட்சிகர இயக்கங்களும்‌ புரட்சிகர சிந்தனையாளர்களும்‌ மட்டுமே உள்ளனர்.

புதிய அனுபவங்களும்‌ நமக்கான படிப்பினைகளும்‌.

எந்தவொரு நாடும்‌ சோசலிசத்‌தளத்தை நிரந்தரப்‌ படுத்திக்‌ கொள்ளவில்லை, அவ்வாறு சோசலிசத்‌ தளங்கள்‌ இன்று இல்லை; வரலாற்றில்‌ பின்னடைவுக்கு உள்ளாயி உள்ளன. அப்படியென்றால்‌ வரலாற்றில்‌ பின்னடைவுக்கு உரிய அறிவியல் பூர்வமான காரணங்கள்‌ யாவை? இத்தகைய பின்னடைதல்‌ எல்லா சோசலிச நாடுகளிலும்‌ தவிர்க்க இயலாத்‌ நிகழ்வாக இருந்திருக்கத்தான்‌ வேண்டுமா? அதாவது உலகில்‌ சோசலிசத்‌ தளங்கள்‌ உருவாகி; பின்னடைவுக்கு, உள்ளாகியே தீரும்‌ என்பது பொதுவான கோட்‌பாடாகவே உருக்கொண்டுள்ளதா? சோசலிசத்‌ தளங்கள்‌ தகர்ந்தபின்‌ இனி உலகில்‌ புரட்சிக்கான இலக்கும்‌ திசைவழியும்‌ யாவை? என்பன போன்ற பலகேள்விகள்‌ எழுகின்றன.

ரசியா,சீனா,கிழக்கு ஐரோப்பிய நாடுகள்‌ ஆகியவற்றில்‌ ஏற்பட்ட மாற்‌றங்களைக்‌ கணக்கிலெடுத்துக்‌ கொண்டு அப்பொழுது அந்நாடுகளில்‌ சோசலிசத்‌ தளங்கள்‌ தகர்ந்து போயுள்ளன என சர்வதேச முதலாளியப்‌ பத்திரிகைகள்‌ குதூகலித்தன. ஆனால்‌ இத்ததைய மாற்றங்களுக்கான சூழ்நிலைகள்‌. பத்தாண்டுகளுக்கும்‌ முன்னரே தோன்றி, அந்நாடுகளின்‌ சோசலிசத்‌ தன்மையில்‌ ஒரு பண்பியல்‌ மாற்றமே நிகழ்ந்துவிட்டது என உலகம்‌ முழுவதும்‌ உள்ள புரட்சியாளர்கள்‌ கருதினர்‌. ஆகவே மேற்குறித்த கேள்விகள்‌ முற்றிலும்‌ புதியவை அன்று, எனினும்‌,இந்த மாற்றங்கள்‌ மேலும்‌ சில கேள்விகளை எழுப்பியுள்ளன. உலகப்‌ புரட்சிகர சக்திகள்‌ கணித்த மாற்றங்களுக்கும்‌ சோசலிசத்தை கைவிட்டுவிட்ட பிறகான மாற்றங்களுக்கும்‌ என்ன வேறுபாடு? என்ன தொடர்பு? வேறுபாடு எனில்‌, பண்பியலா? அளவியலா? என்று தேடுமிடத்து இவைதத்துவப்‌ பிரச்சனைகளே ஆகும்‌ என்பது திடம் என்று முனைவர்.கோ.கேசவன் குறிப்பிடுகிறார். மேலும் அவரின் நூலில் பேசப்பட்டுவையையே துணைக் கொண்டு மேலே செல்வோம்.

விஞ்ஞான சோசலிச சமூகத்தின்‌ அரசியல்‌, பொருளாதாரம்‌ ஆகியவை பற்றிய கோட்பாட்டு உருவாக்கத்தையும்‌ சோசலிசப்‌ புரட்சி நடைபெறவிருக்கும்‌ சாத்தியமுள்ள நாடுகள்‌ பற்றிய கருதுகோள்‌களையும்‌ மார்க்சும்‌ ஏங்கெல்சும்‌ விளக்கினர்‌. பல்வேறுவகைப்பட்ட சோசலிசங்கள்‌ பற்றிய, கருத்துகள்‌ நிலவிய-சூழலில்‌, பாட்டாளி வர்க்க சோசலிசம்‌ பற்றிய கருத்தை நிறுவி, சோசலிசம்‌ என்பது பொதுவுடைமைக்கு மாறிச்‌செல்லும்‌ இடைக்கட்டம்‌ என்றும்‌ பொதுவுடைமையின்‌ முதல்‌ கட்டம்‌ என்றும்‌ விளக்கியதே மார்க்சின்‌ பங்களிப்பில்‌ முதன்மை வாய்ந்ததாகும்‌. 1845 முதற்‌ கொண்டு வெளிவந்த மார்க்சியப்‌ படைப்புகளில்‌ காணக்‌கிடைக்கும்‌ குறிப்புகளை வைத்து பின்வருமாறு தொகுக்கலாம்‌.

சோசலிசக்‌ கோட்பாட்டு உருவாக்கம்‌

1. பொருளாதாரம்

அ) உற்பத்தி சாதனங்களின்‌ சமூகவுடைமை, இவற்‌றின்‌ மீதான தனியுடைமையை ஒழித்தல்‌. மூலதன இயல்பிலிருந்து இவற்றை விடுவித்தல்‌.

ஆ) முதலாளிய சமூகத்தின்‌ பொருளாதார விதிகள்‌ சில தொடர்ந்து செயல்படும்‌ (எ-டு. பண்டப்‌ பரி வர்த்தனை)

இ) திறமைக்கு ஏற்ப உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற ஊதியம்‌. இதனால்‌ சமத்துவமற்றநிலை தொடரும்‌.

ஈ) பெருந்தொழில்களும்‌ பெருநிலவுடைமையும்‌ பறித்தெடுக்கப்படும்‌.

௨) சிறு விவசாயிகள்‌ தனியுடைமை உற்பத்தியிலிருந்து கூட்டுடைமை உற்பத்திக்கு மாறுதல்‌.

இதில்‌ பலவந்தம்‌ கூடாது. எனினும்‌ அரசதிகாரம்‌ கைப்பற்றப்படும்‌ சூழலைப்‌ பொறுத்து இது அமையும்‌.

2. அரசியல்‌

அ) வர்க்கங்கள்‌ நீடிப்பதால்‌ அரசு தேவைப்‌படுகிறது. இதன்‌ வடிவம்‌ பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்‌.

ஆ) புரட்சிக்குப்பின்‌ அரசை ஒழிக்க வேண்டும்‌ என்பது அராஜக அபத்தம்‌. முதலாளி வர்க்க எதிரிகளை அமுக்கி வைக்க பாட்டாளி வர்க்க அரசு இல்லையெனில்‌ மொத்த வெற்றியுமே தோல்வியில்‌ போய்‌ முடியும்‌.

இ) கருதுகோள்‌ இத்தகைய சோசலிசப்புரட்சி, மிகவும் முன்னேறியநாடுகளில் “குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி,பிரான்சு ஆகியவற்றில்”ஏற்படும். முன்னேறிய தாடுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தாக்கப்படலாம். ஒருதனி நாட்டில் சோசலிசப்புரட்சி சாத்தியமில்லை என்ற மார்க்சியக் கோட்பாடு உருவாக்கமும் கருதுகோளும் உதித்த சூழல் முக்கியமானது, முதலாளிகட்குஇடையில் சுதந்திரமான போட்டி இருந்த காலம் அது.

“முதலாளியம் தம்மை ஏகபோகமாக வளர்த்தெடுக்காத இக்காலத்தில் முதலாளியநாடுகளில் உள்- முரண்பாடுகள் முற்றி சோசலிசப் பேரலைகள் ” எழும்பும் என மார்க்ஸ் கருதினார் .

முதலாளியம் வளர்ந்தது சுதந்திரமான போட்டிமுறையில் இருந்து வளர்ச்சியுற்று 19ம் நூற்றாண்டின் இறுதியில் தம்மை எகபோக முதலாளிமாக உருவெடுத்துக்கொண்டது. எகாதிபத்தியங்கள், குடியேற்றநாடுகள் ஆகியவை உருவாகியன. ஏகபோக டிரஸ்டுகள் குறித்தும் அவற்றின் (பொருளாதார அராஜகவாதம் குறித்தும் ஏங்கெல்சு எழுதியுள்ளார். (காவுட்ஸ்கிக்குக் கடிதம் 29--6_-1881) இந்தப் பொருளாதார வளர்ச்சியை ஆராய்ந்து, முதலாளியம் தன் உள் முரண்பாடுகள் முற்றி சோசலிசமாக உருவெடுக்கும் என்ற மார்க்ஸ் கருதுகோள் தவறானது என முதிலாளிய விமர்சகர்கள் கருதினர். 19ஆம் நூற்றாண்டு இறுதி முதல் உள்ள இந்த நிலைகளை ஆராய்ந்து இந்த சகாப்தத்திலும் சோசலிசப்புரட்சி சாத்தியம் என லெனின் கருதுகோளை உருவாக்கினார். போட்டி என்பது இப்போது முதலாளிகட்கு இடையில் இல்லாமல் ஏகபோகங்களுக்கு இடையிலானதாக மாறிவிட்டது என்றும் உலகநாடுகள் உலகப்பொருளாதாரச் சங்கிலியின் கண்ணிகளாக மாறி, சமனற்ற வளர்ச்சி நிலையில் உள்ளன என்றும் லெனின் முடிவுகண்டார். இந்தப் பொதுவான அரசியல்பொருளாதார சூழலில் சோசலிசப் புரட்சியின் சாத்தியம் குறித்து லெனின் தம் கருதுகோள்களை முன் வைத்தார் .

அவை:

1. முன்னேறிய முதலாளிய நாடுதளில்தான்‌ சோசலிசப்புரட்சி ஏற்படும்‌ என்பதில்லை, பின்னடைந்த நாடுகவிலும்‌ பலவீனமான கண்ணியைப்‌ பொறுத்து ஏற்படலாம்‌. உற்பத்திச்‌ சக்திகள்‌ வளர்ச்சி யடையாமல்‌ முதலாளி தொழிலாளி என்ற சமூதசக்திகள்‌ துல்லியமாக அமையாமல்‌ இருப்பினும்‌ புதிய வகைப்பட்ட முதலாளிய ஜனநாயகப்‌ புரட்சியின்‌ ஊடே சோசலிசப்‌ புரட்சி சாத்தியமாகும்‌.

2. வெவ்வேறு நாட்டிலும்‌ வெவ்வேறு காலங்களிலும்‌ சோசலிசப்புரட்சி சாத்தியம்‌. உலகில்‌ முழுமையும் அல்லது ஒரு சில நாடுகளில்‌ முழுமையும்‌-ஒரே நேரத்தில்‌ சோசலிசப்‌ புரட்சி நடந்தாக்‌ வேண்டிய தில்லை. தனி ஒரு நாட்டிலும்‌ சோசலிசப்‌ புரட்சி சாத்தியம்‌.

இந்த மார்க்சிய -லெனினியக் கருதுகோள்கள்,இதற்கு முந்தைய மார்க்சியக் கருதுகோள்களை நிராகரித்த இந்த நிராகரிப்பு, முன்னேறிய தன்மையுடையது. இந்த நிராகரிபின்றி வளர்ச்சி இல்லை. சோசலிசம் குறித்த மார்க்சியக் கோட்பாடுகளை நிராகரிக்க முயன்ற முதலாளிய அறிவாளிகள் முன்னிலையில், மார்க்சியக் கருதுகோள் ஒன்றை நிராகரித்து விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை லெனின் உயர்த்திப்பிடித்தார். இவை ஏகாதிபத்தியமும் உலக சோசலிசப் புரட்சிகளும் கொண்ட லெனினிய சகாப்தத்தின் கருதுகோள்களாகும்.

இந்த மார்க்சிய லெனினியக்‌ கருதுகோள்கள்‌ இருபதாம்‌ நூற்றாண்டில்‌ நிரூபிக்கப்பட்டு, அரசியல்‌ யதார்த்தமாயின.சோசலிசத்தை வரலாற்றுப்பிழை என நிரூபிக்க முயன்‌ற முதலாளிய அறிவாளிகள்‌, மீண்டும்‌ ஒருமுறை தோற்றுப்‌ போயினர்‌. ரசியா, சீனா, கிழக்கு. ஐரோப்பிய நாடுகள்‌ இந்த வரையறையின்படி சோசலிசநாடுகளாயின இன்றைக்கும்‌ உலகம்‌ லெனின வரையறையில்‌ ஏகாதிபத்திய சகாப்தத்தில்‌ இயங்குவதால்‌ உலகில்‌ சோசலிசப்‌ புரட்சிகள்‌ சாத்தியம்‌ என்பதைக்‌ கோட்பாட்டு அளவில்‌ மறுக்க இயலாது. எனினும்‌ இரண்டாம்‌ உலகப்‌ போருக்குப்‌ பிந்தைய அரசியல்‌ பொருளாதார நிகழ்வுகள்‌ லெனினிய வரையறையில்‌ பல அளவுச்‌ சேர்க்கைகளைச்‌ (quantitative additions) சேர்த்துள்ளன. அனையாவன :

1.இரண்டாம்‌ உலகப்‌ போருக்குப்‌ பின்‌ உலகளாவிய போர்‌ இல்லையெனினும்‌ மூன்றாம்‌ உலக நாடு களுக்கு ஏகாதிபத்தியங்கள்‌ ஏற்றுமதி செய்யும்‌ வட்டாரப்‌ போர்கள்‌ (Reginal Wars).

2.முதலாளிகளிடமிருந்து ஏகபோகங்கள்‌ உருவானது போல, ஏகாதிபத்தியங்களிடமிருந்து பெருவல்லரசு நாடுகள்‌ என்ற தனியினம்‌ உருவாதல்‌ .

3.மூன்‌றாம்‌ உலக நாடுகளைத்‌ தடையற்ற விதத்தில்‌ ஏகாதிபத்தியங்கள்‌ பயன்படுத்த இயலாதபடி மூன்றாம்‌ உலக நாடுகட்குக்‌ கிடைத்த அரசியல்‌ பேர ஆற்றல்‌.

4.1960கள்‌ முதற்கொண்டு உலக சோசலிசத்‌ தளங்கள்‌ தகர்ந்து போதலும்‌ அதனால்‌ ஏற்பட்ட கருத்தியல்‌ விளைவுகளும்‌.

இத்தகைய அளவுச்‌ சேர்க்கைகள்‌ லெனினிய வரையறையில்‌ பண்பியல்‌ மாற்றங்களைக்‌ கொணர்ந்து விடவில்லை. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்‌,சமனற்ற பொருளாதார வளர்ச்சி,உலகப்‌ பொருளாதார அமைப்பில்‌ பலவீனமான இணைப்பு ஆகியவை தொடர்ந்து தம்‌ கோர விளைவுகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும்‌ இன்றைய காலத்திலும்‌ உலக சோசலிசப்‌ புரட்சிகள்‌ சாத்தியமே. எனவே சோசலிசத்தை ஒரு வரலாற்றுப்பிழை என்பது பிழையான வரலாறாகும்‌.

எனினும்‌ இந்த அளவுச்‌ சேர்க்கைகள்‌ புரட்சிகர உணர்வின்‌ பேரூக்கத்தை கூடுதலாக வவியுறுத்திக்‌ கொண்டிருக்கின்‌றன. சோசலிசப்புரட்சிகளைத்‌ தள்ளிப்போடுவதும்‌ உருவான புரட்சியின்‌ விளைவுகளைச்‌ சீர்‌திருத்தவாதத்துக்கு ஆட்படுத்துவதும்‌ (Reforming the Revolution) உலக முதலாளியத்தின்‌ தந்திரங்களாக இருக்கும்‌ இன்றைய காலத்தில்‌. புரட்சிகர உணர்வின்‌ செயல்பாட்டின்‌ பேரூக்கம்‌--லெனின்‌ காலத்தைவிடபன்மடங்கு கூடுதலாகத்‌ தேவைப்படுவதையே இந்த அளவுச்‌ சேர்க்கைகள்‌ வலியுறுத்தி நிற்கின்றன.

இனிஉலக சோசலிசத்தளங்களின்‌ தகர்வையும்‌ அவற்றின்‌ படிப்பினைகளையும்‌ பற்றிய கோட்பாடுகளைத்‌ தொகுத்துக்கொள்வோம்‌.

முதலாளியப்‌ புரட்சிக்கும்‌ சோசலிசப்‌ புரட்சிக்கும்‌ இடையில்‌ ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. முதலாளியப்‌புரட்சி நடைபெறுவதற்கு முன்னரே அந்த நாட்டில் முதலாளியப்‌ பொருளாதாரக்‌ கூறுகள்‌ காணக்கிடைக்‌கும்‌. அவற்றைத்‌ தொகுத்து, விரிவாக்கம்‌ செய்தலும்அதற்குரிய அதிகார அமைப்பை நிறுவுதலும்‌ முதலாளிய புரட்சியின்‌ பணிகளாகும்‌. ஆனால்‌ சோசலிசப்‌ புரட்சியில்‌ அரசதிகாரமே முதலில்‌ புரட்சியாளர்களின்‌ கைக்கு வருகிறது. பின்னரே பொருளாதார நிர்மாணப்‌ பிரச்சினை எழுகிறது. லெனின்‌ சொல்வதுபோல முதல்வெற்றி அரசியல்‌, இராணுவ ரீதியிலாகும்‌, இரண்டாவதாகவே பொருளாதாரப்‌ பணி தொடங்குகிறது. இரண்டாவது பணி முழுமையடைவதைத்‌ தொடர்‌ந்தே அந்த சமூகம்‌ பொதுவுடைமைக்குச்‌ செல்லும்‌, - இதில்கூட லெனினியத்தின்‌ நுட்பமான பங்களிப்‌பைக்‌ காணஇயலும்‌, சோசலிசப்‌ புரிட்சிக்குரிய முன்னிபந்தனையாக முன்னேறிய நாடுகளின்‌ தொழில்‌ வளர்ச்சியை மார்க்ஸ் கண்டறிந்தார்‌. ஆனால்‌ ஏகாதிபத்திய சகாப்தத்தில்‌ பின்னடைந்த நாடுகளில்‌ கூட சோசலிச அரசியல்‌ புரட்சி சாத்தியம்‌ என்பதைக்‌ கண்டறிந்து அந்நாடுகள்‌ புதிய வகைப்பட்ட ஜன நாயகப்‌புரட்சியின்‌ ஊடாக சோசலிசப்‌ பொருளாதார நிர்மாண காலத்துக்கு சென்றடைய முடியும்‌ என லெனின்‌ கூறினார்‌.

1905இல்‌ லெனினியக்‌ கண்டுபிடிப்பு, 1940களில்‌ மாசேதுங்கின் புதிய ஜனநாயகக்‌ கோட்பாட்டுக்கான அடிப்படையாகும்‌. இங்கு லெனின்‌, மார்க்சிய நிலைபாட்டை வளர்த்‌தெடுக்கிறார்‌. பொதுவுடைமைக்கு மாறிச்‌ செல்வதற்கு உரிய இடைக்‌ கட்டம்‌ சோசலிசம்‌ என்ற மார்க்சிய நிலைபாட்டை,சோசலிசத்துக்கு மாறிச்‌ செல்வதற்குரிய ஓர்‌ இடைக்கட்டமும்‌ தேவை என்று லெனின்‌ வளர்க்‌கிறார்‌. சோசலிசம்‌ குறித்த கோட்பாட்டுப்‌ பங்களிப்புகளில்‌ முதன்மையான இதைத்‌ தொடர்ந்து, இன்னமும்‌ இரண்டு அம்சங்களில்‌ லெனினிய நிலைபாட்டைக்‌ காண்பது பொருத்தமாகும்‌.

1. ஒரு தனி நாட்டில்‌ " சோசலிச்ப்‌ புரட்சி சாத்தியமெனில்‌, அந்த நாட்டில்‌ சோசலிசப்‌ பொருளாதாரப்‌ புனர்‌நிர்மாணம்‌ முழுமையடைவது சாத்தியமா?

2. ஒரு சோசலிச சமூகம், “சமூக வரலாற்று” - விதிகளின் படி முன்னோக்கித்தான் செல்லுமா? இல்லை, பின்னடைவுக்கு உள்ளாகும் “சாத்தியம் ஏற்பட்டுவிடுமா?”, அதாவது “சோசலிசத்துக்கு அடுத்து பொதுவுடையமைக்குச் செல்லாமல்,முதலாாளிய மீட்சிநடைபெறுவது சாத்தியமா? அல்லது சோசலிசமும் அல்லாமலும் முதலாளியமும் அல்லாமலும் ஒருநிலையை உருவாக்குதல் சாத்தியமா?” இவை குறித்து, லெனின்,மாவோ ஆகியோர் கருத்துரைத்துள்ளனர். ரசிய போல்சிவிக் கட்சிக்குள் எழுந்த கருத்து மோதல்களின் பொழுது ஸ்டாலின்,டிராட்ஸ்கி ஆகியோர், இது குறித்துப் பங்காற்றி யுள்ளனர். குறித்த ஆய்வுகள் பல நாடுகளில் - பல அறிஞர்களால், நிகழ்த்தப்பட்டு வருகின்றன. புரட்சிக்குப் பிந்தைய ஆய்வு செய்த ஜார்ஜ் தாம்சன், ஐபால் எம். சுவீசி, சார்லஸ் பெத்தல்ஹீம், சுர்சாவோஷி ஆகியோர் இது குறித்துத் தம் ஆய்வுகளை வெளியிட்டுப் பங்களித்துள்ளனர். இவற்றைக் கண்போம்.

“ஒரு தனி நாட்டில் சோசலிசப் புரட்சி சாத்தியம் என்றும் அங்கு சோசலிசத்தைத் தொகுத்துக்கொள்வதும் பராமறிப்பதும் சாத்தியம் என்றும்” லெனின் குறிப்பிட்டார். (ஆயின் உலக “முதலாளிய அரசியல் பொருளாதார இராணுவச் சூழவில் பெரும்பாலான நாடுகள் சோசலிசக் கட்டமைப்புக்குள் வராதவரையில் ஒரு தனி நாட்டில் சோசலிசத்தின் இறுதி வெற்றி சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டார் ” லெனினுக்குப் பிறகு முதன்மை பெற்ற விவாதங்கள் இன்றளவும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

இரண்டாவது அம்சம் -- ஒரு சோசலிச நாட்டில்முதலாளிய மீட்சியின் சாத்தியம். இது முதல் அம்சத் தோடு தொடர்புடையதாகும் . பாட்டாளி வர்க்கம் தான் வென்றெடுத்த அதிகாரத்தைக் கொண்டு முதலாளி வர்க்க எதிரிகளை அமுக்கி வைக்கவில்லையெனில். மொத்த வெற்றியுமே தோல்வியில் முடியும் என ஏங்கெல்ஸ் (12-05-1883) கருதினார் . ரசியப் புரட்சிக்கு முன்னரே இத்தகைய முதலாளிய மீட்சி குறித்துலெனின் குறிப்பிட்டுள்ளார் (10: 280; 26: 172.) சிறுமுதலாளிய முறை, குலாக்குகளின் எழுச்சி, அதிகாரிகளாக உருவெடுத்த கம்யூனிஸ்டுகள், உலக முதலாளியஇராணுவ அபாயம் ஆகியவற்றால் பின்னடைவு முதலாளிய மீட்சி (இது லெனினின் சொல்) சாத்தியம் என்பதை லெனின் இறுதிவரை வலியுறுத்திக்கொண்டே.யிருந்தார் (27: 997-998; 98: 172: 91 : 498-905).இதைத் தடுத்து நிறுத்தக் கூடிய சாத்தியமான அம்சங்களெனக் கீழ்க்கண்டவற்றைத் தொகுத்தார் .

1. வர்க்க உணர்வுபெற்ற் தொழிலாளர் -விவசாயிகள்இணைவு. குலாக்குகளுக்கு எதிராக ஏழை விவசாயிகள் ஒருங்கிணைதல், அதிகார வர்க்கத்தவறுகளைச் சரிசெய்தல். தொழிலாளர் --விவசாயிகள் பண்பாட்டு அளவை உயர்த்தல் .

2. நேர்மையான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்:- சுருக்கமாகச் சொன்னால் ஒரு பட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின்கீழ் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர் விவசாயிகள் தொடர்ந்து நடத்தும்- வர்க்கப் போராட்டமே முதலாளிய மீட்பைத் தடுக்கும்;உருவான சோசலிச அமைப்பைப் பராமரிக்கும். இது தற்காப்புநிலை ஆகும் (Defensive). உலக முதலாளிய அமைப்புக்குள் சோசலிச அமைப்பு நடத்தும் ஊடுருவலையும் விரிவாக்கத்தையும் பொறுத்து இதுமாறிச் செல்லும். எனவே, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், வர்க்கப் போராட்டம் என்ற இரண்டு ஆயுதங்கள் இல்லையெனில் ---அல்லது அவற்றை அலட்சியப்படுத்தினால் --லெனின் குறிப்பிட்டது போல முதலாளிய மீட்சிக்குரிய நம்பிக்கை, முதலாளிய மீட்சிக்குரிய முயற்சிகளில்,போய்முடியும்: முயற்சி, உறுதியாகவும் தவிர்க்கவியலாத வகையிலும் தொழிலாளர் அதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிடும் (27:989; 28:25)இந்த நிபந்தனை களின்றி, வரலாற்றில் பின்னடைவு தவிர்க்க இயலாதது. சோசலிசம் குறித்த இத்தகைய லெனினியப் புரிதல்களோடு, சீனப் புரட்சிக்குப் பிந்தைய மாவோவின் ,அனுபவத்தைக் காண்போம்.

மாவோ இதில் லெனினியத்தைப், பின்பற்றி ரசியாமற்றும் யூகோஸ்லேவியா' ஆகியவற்றின் அனுபவறுகளைத் தொகுத்துக் கொண்டு சீன நடைமுறையைவிமரிசித்தார். லெனின் ஒருமுறை குறிப்பிட்டார் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், வர்க்கப் போராட்டம் முடிந்து விட்டது என்பதைக் குறிக்கவில்லை. ஆனால் அதைப் புதிய வடிவங்களில் , தொடர்ந்துநடத்துவதாகும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்என்பது பாட்டாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போராட்டமாகும், ஆனால் அழிந்துவிடாத முதலாளியத்தை இன்னும் மறையாத முதலாளியத்தை ஏதிர்ப்பை இன்னும் கைவிட்டுவிடாமல் மேலும், ஆழப்படுத்தியுள்ள முதலாளியத்தை எதிர்த்து, அரசதிகாரத்தைக் கையில் எடுத்துள்ள பாட்டாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போரட்டமாகும் (“விடுதலை மற்றும் சமத்துவம் ஆகிய முழக்கங்களை வைத்து" மக்களைஏமாற்றுதல் என்ற பேச்சுரையின் முன்னுரை).

புரட்சிக்குப் பிந்தைய சீனாவில் பிற்போக்கு வர்க்கள்களின் மிச்சசொச்சம் இருக்கின்றது என்றும் அவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றனர் , என்றும் மாவோ கட்சியினரை எச்சரித்தார் (30-01-1962). இந்தப் போக்கின் பிரநிதித்துவம் கட்சிக்குள்ளே உள்ளது என்பதையும் குறிப்பிட்டார். சோசலிசப் புரட்சியை நடத்தியுள்ளோமென்றும் முதலாளியம் எங்குள்ளது என்பதைக்கண்டறியவில்லை அவர்கள். “பொதுவுடைமைக் கட்சிக்குள்ளே முதலாளியப் பாதைக்கு இட்டுச்செல்லும்சிந்தனையாளர்களாக இருக்கின்றனர் எனவும்”குறிப்பிட்டார் (ஜனவரி. 1965). - இதன் சமூக் வேர்களையும்மாவோ-குறிப்பிட்டார் .

  • ஜனநாயகப் புரட்சி முடிந்த பின்னர் தொழிலாளர்களும் வறிய மற்றும் கீழ்நிலை நடுத்தர விவசாயிகளும் அத்தோடு நின்றுவிடாமல் புரட்சியைத் தொடர்ந்து நடத்தவிரும்பினர். அதிற்குமாறாக கட்சி உறுப்பினர்களில் பலர் முன்னேறிச்செல்ல விரும்பவில்லை; சிலர் பின்னோக்கியும் திரும்பத் தொடங்கி புரட்சியை எதிர்த்தனர் ஏன் ? அவர்கள் உயர் அதிகாரிகளாக மாறி, உயர் அதிகாரிகளின் நலன்களைப் பாதுகாக்க விரும்பினர், (மேற்கோள் ,Vanguard ஜீன் 1985)

“கட்சி, அரசாங்கம், இராணுவம் ஆகிய துறைகளிலும்பண்பாட்டுத்துறையின் பல,பிரிவுகளிலும் ஊடுருவியுள்ளஇவர்களை. முதலாளியப் பாதையாளர்கள் என்றும் எதிர்ப்புரட்சிகரவாதிகள்” என்றும்” மாவேர் வரையறை செய்தார். “நிலைமைகள் சாதகமாகக் கனிந்தவுடனே இவர்கள் அரசியல் அதிகாரத்தைக்கைப்பற்றி பர்ட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முதலாளியவர்க்க சர்வாதிகாரமாக மாற்றிவிடுவர் ” என்றும் மாலோ முன்னுணர்த்துகூறினார்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டதிதைத் தொடர்ந்து நடத்துமாறு அறைகூவல் விடுத்த மாவோ, பிற்போக்கு வர்க்கங்களின் மீது சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தும் பொழுது கட்சியையும் மக்கள்திரளையும் சார்ந்திருக்கவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினார் (30-1-1962).பாட்டாளிகள் தம் தலைமையைப் பொதுவுடைமைக் கட்சியின் வழியாகச் செலுத்த முடியும் எனக் குறிப்பிட்ட மாவோ, கட்சித் தலைமையில் உள்ள சிலர் தவறானபாதையைப் பின்பற்றும் பொழுது அவர்களைத்திருத்தும் வழிமுறைகளை பற்றியும் குறிப்பிடுகின்றார். கட்சிக்கும் மக்கள் திரளுக்கும் இடையிலான உறவுமுறையில், கட்சியின் தவறுகளை விமர்சிக்கவும் திருத்தவும் ஆன உரிமைகளை மக்கள்திரள் பெற்றிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். தவறு செய்யும் கட்சித் தலைமையினர், விமரிசனம் செய்யும் மக்களைக் கண்டு அஞ்சக்கூடாதென்றும் மக்களை வெளிப்படையாகப் பேச அனுமதிக்கவேண்டுமென்றும் மாவோ விரும்பினார் (ஜனதகாயக மத்தியத்துவம் குறித்து, 30—1—62).

கட்சிக்குள்ளும் - கட்சிக்கு வெளியிலும் நடைபெற்றாகவேண்டிய வர்க்கப் போராட்டத்தில் மக்கள் திரளின் முன் முயற்சியைக் கட்டவிழ்த்துவிட்டு மக்களை ஈடுபடுத்தும் இத்தகைய போராட்ட வடிவம், சோசவிசத்தைத்தொகுத்துக் கொள்வதற்கும் முதலாளியப் பாதையைஎதிர்ப்பதற்கும் உரியதாகும். இது மாவோ சிந்தனையின் பங்களிப்பு. இந்தப் போக்கு பிரதானப்படுத்தப்படாமல் போனால் முதலாளிய மீட்சி சாத்தியம் என்பதைக் குறிப்பிட்ட மாவோ, அதுவே நிரந்தரமாகிவிடும் எனக் குறிப்பிடவில்லை. புரட்சியை நேசிக்கும் மக்களால் முதலாளியம் மீண்டும் தூக்கியெறியப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • நமது அடுத்த பரம்பரை திருத்தல்வாதத்தில் மூழ்கி இப்போதைய நிலைக்கு எதிர்மறையாகத் திரும்பினால் -அதாவது அவர்கள் பெயரளவில் சோசலிசத்தையும் வாய்மையில் முதலாளியத் தையும் கொண்டிருப்பினும் அதற்கு அடுத்த பரம்பரையினரான3ம் பேரக் குழந்தைகள் அதில் நிறைவுறாமல் புரட்சியில் உறுதியாக எழுந்து நின்று தம் தந்தையரைத் தூக்கி எறிவர் .(எட்டாம் மத்தியக்குழுவின் பத்தாம் பிளீனம் , 24—9—62).

நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்ற இயங்கியல் கோட்பாட்டின் அடிப்படையில் வரலாற்று நிகழ்வுகளை விளங்கிக்கொண்ட மாவோ முதலாளிய மீட்சியின் தோற்றத்தை மட்டுமின்றி அது அழியும் சாத்தியத்தையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மாவோவின் கருத்தே சீனத்தின் ஆளுகை பெற்ற கருத்தாக, எப்போதும் இருந்ததில்லை. டெங் சியோபிங் காலத்தில் (1978தொடங்கி) ஏற்பட்டு வரும் பல மாற்றங்களினால்முதலாளிய மீட்சி குறித்த இந்தக் கருத்தும்கூட மாற்றப்பட்டுவிட்டதைக் காண்கிறோம் . பெய்ஜிங் நகரில் உள்ளசமூக விஞ்ஞானக் கழகத்தின் மார்க்சிய லெனினியமாசேதுங் சிந்தனை நிறுவன இயக்குநர் சுதோவா;அவர்களின் பேட்டியொன்றில் முதலாளிய மீட்சி குறித்த பல கருத்துகள் மாவோவின் கருத்துகளோடு முரண்பட்டுள்ளன( Monthly Review, Vol. 38, Sept. 1986).சோசலிச சமூகத்தில் முதலாளிய மீட்சிக்குரிய அபாயம்குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கிறார்.சோசலிச சமூகத்தில் முதலாளிய மீட்சிக்கான அபாயம் உள்ளதென்பது தவறு என தாங்கள்கருதுகிறோம் . நாம் நமது கொள்கையைக் கவனமாகப் பரிசீலித்து தனிப்பட்டதொழில் முனைவர்கள் மேலும் முதலாளிமயமாவதை அனுமதிக்கக் கூடாது. சில இலட்சாதிபதிகள் தோன்றினாலும் அவர்களால் முதலாளிய அமைப்பை மீளக்கொண்டு வரமுடியாது.

இதற்கு முன்பு சோவியத் ஒன்றியத்தில் முதலாளியமீட்சி நடந்தது எனச்சொன்னோம். ஆனால் அவ்வாறு சொன்னது தவறு என நாங்கள் கருதுகிறோம். அது இடதுசாரிக் கருத்தின் செல்வாக்காகும் (பக் . 22).

இன்றைய நவீன சீனா,சோசலிச சமூகத்தில் முதலாளியமீட்சி சாத்தியம் இல்லை எனக் குறிப்பிடுகிறது.மாசேதுங்கின் சிந்தனை 1957க்குப் பின் பெரும்பாலும்தவறானவை என்றும் குறிப்பாக சோசலிச சமூகத்தில்வர்க்கப் போராட்டமும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் தொடர் புரட்சியும் என்ற அவரது கருத்துகள்முழுமைக்கும் தவறானவை எனக் கருதப்படுகிறது(மேற்படி பேட்டி, பக் . 24). லெனின் , மாசேதுங்ஆகியோரது கருத்துகள் நவீன சீனத்தில் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன. இது குறித்துப் பின்னர்காண்போம் .

லெனின், மாவோ ஆகியோரின் சிந்தனைகளையொட்டிசோசலிசத்தில் முதலாளியமீட்சி குறித்த கருத்துக்களைக் கோட்பாட்டு அளவில் தொகுத்தளித்தவரில்முதன்மையாளராக சார்லஸ் பெத்தலஹீம் அவர்களைக்குறிப்பிடலாம். சோசலிசப் புரட்சி நடந்து முடிந்த பின்உற்பத்தி சாதனங்களில் தனியுடைமையை ஒழித்தால் முதலாளி வர்க்கம் மறைந்துவிடும் என எண்ணுவது தவறு என்றும் அரசுடைமை என்னும் திரைக்குள் சுரண்டல் உறவுகள் ரசியாவில் பேணப்பட்டு வருகின்றன என்றும் கண்டறிந்து அரசுடைமைப் பொருளாதாரத் துறைகளில் முதலானிய உறவுகளே பேணப்பட்டன என்றும் இந்நிலையில் கட்சியிலும் ஆட்சியிலும் உள்ள அதிகாரத்துவப் பிரிவினர் ஒரு புதிய முதலாளிய வர்க்கமாக உருவெடுக்கின்றனர் என வரையறை செய்கிறார். சோவியத் நாட்டில் வர்க்கப் போராட்டங்கள் என்ற நூலில் பெத்தலஹீம் விரிவுபடுத்திய இந்தக்கருத்துகளை மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை -- புரட்சிகர இயங்கியல பற்றி ஓர் ஆய்வு என்ற தன் படைப்பில் ஜார்ஜ்தாம்சன் மேலும் பல விளக்கக் குறிப்புகளுடன்எழுதியுள்ளார். (தமிழ் மொழிபெயர்ப்பு : எஸ் . வி.ராஜதுரை மற்றும் இன்குலாப் . பக் . 172—180; 198—202). சார்லஸ் பெத்தலஹிீம் மற்றும் ஜார்ஜ்தாம்சன் ஆகிய இருவரும் லெனினிய மாசேதுங் வழியில் முதலாளிய மீட்சிக்குரிய சாத்தியம் பற்றிய கோட்பாட்டை ஒத்துக்கொண்டவர்கள் . பால் . எம் . சுவீசி, மாவோவின் முதன்மைப் பங்களிப்புகளை ஏற்றுக் கொண்டவர். “குறிப்பாக சோசலிச சமூகத்தில் வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் தொடர்புரட்சி என்ற மாவோவின் கருத்துகளை, இருபதாம்நூற்றாண்டின் யதார்த்தத்துக்குப் பொருந்தும் விதத்தில் மார்க்சியத்தை நடத்திச் செல்லும் மிக முதன்மையானபங்களிப்பு” என சுவீசி வரையறை செய்துள்ளார் .(Monthly Review, Sept. 1986. p. 27).

ஆக பகுத்து பார்ப்போமேயானால்

உலகில் மிகக்குறைவாக இரத்தம் சிந்தி நடத்தபட்ட ரசிய சோசலிசப்புரட்சி, அரசியல் இராணுவ ரீதிகளில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நான்குஆண்டுகள்ஆயின. அதன்பின் அது பொருளாதார நிலைநிறுத்தலுக்குப் போராடியது. இந்தப் பத்தாண்டுக் காலத்தை (1917--1921) சோசலிசத்துக்குச் செல்வதற்கான இடைக்கட்டம் எனலாம். இது சோசலிசக் கட்டமல்ல. சோசலிசத் தைக் கட்டுவதற்கான சில பொருளாதார முன்னிபந்தனைகளைஉருவாக்குவதற்கான காலம் ஆகும் .

1928 இல் மாபெரும் தொழில்மயமாக்கலைத்தொடர்ந்து சோசலிசப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்கும் பணிகள் தொடங்கின. ஒரு நாட்டில்சோசலிசத்தின் இறுதி வெற்றி சாத்தியம் என்றும் அதற்கான தேவைகள் ஏற்கனவே ரசியாவில் உருவாகிவிட்டன என்றும் கருத்துடைய ஸ்டாலின் தலைமையில் இந்தப் பணி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

அதாவது உலகளாவிய ஏகாதிபத்திய வேலைப் பிரிவினையும் வர்க்கங்கள் மற்றும் வர்க்க: முரண்பாடுகள்ஆகியவையும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஒரு நாட்டில் மீட்கப்பட்டு விடலாம் என்ற கருத்தியலோடு இந்தப்பணி தொடங்கப்பட்டது: மேலும் கிராமப்புற முதலாளி கட்கும் தொழிலாளி: வர்க்கத்துக்கும் : இடையில்இணக்கம் காணஇயலா பகை முரண்கள் இருக்கின்றன என்ற புரிதலோடும் (ஸ்டாலின் தொகுப்பு நூல் 12:82)இதன் தொடக்கத்தைக் காணவேண்டும் .

ஸ்டாலின் தலைமையிலான போக்கின் இந்தக்கோட்பாட்டு அம்சங்கள் முதன்மையானவை. ரசியா ஒரு சோசலிச நாடாக மலர்வதற்குத் தேவையான மூலதனத்தை உள்நாட்டிலே திரட்டியாக வேண்டும். விவசாயிகள், நகர்ப்பொருள்களுக்கு அதிக விலைகள் கொடுத்தும் தம் பொருள்களைக் குறைவான விலைக்கு விற்றும் மூலதனம் திரட்டப்பட்டது. இந்த மூலதனத் திரட்டல் தொழில்மயத்துக்குறிய மூலதனமாயிற்று.நகரங்களில் ஆலைகளும் தொழிலாளர்களும் பெருமளவில் வளர்ந்துகொண்டு போயினர் . இன்னும் பின்னர் தொடரும்...

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்