“பாட்டாளி வர்க்கக் கட்சி”
“பாட்டாளி வர்க்கக் கட்சி” என்ற தலைப்பில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை மார்க்சிய ஆசான்களின் நூலில் இருந்து எப்படி கற்றுக் கொள்வது என்பதை ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியின் முக்கியத்துவம் மற்றும் தன்மைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ்,லெனின்,ஸ்டாலின் உள்ளிட்ட மார்க்சிய ஆசான்களின் நூல்களில் இருந்து தேடுவோம்.
மார்க்சும், எங்கெல்சும் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தோன்றியகாலத்தில் எழுதி வந்தவர்கள். அவர்களது பார்வை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பின்வருமாறு தொகுக்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் பிற பாட்டாளி வர்க்கக் கட்சிகளுக்கெதிராக ஒரு கட்சியைக் கட்டவில்லை. மாறாக, அவர்கள் ஒரு பொது அரசியல் திட்டத்தின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்திற்காக முனைகிறார்கள்.
மார்க்சும் எங்கெல்சும் கட்சிக்குள் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கருத்துக்கள், கோட்பாடுகளை கடத்தி வர முனைவதை அதை ஒரு வர்க்க சமரசப் போக்கிற்கு உட்படுத்துவதை விடாப்பிடியாக எதிர்த்தனர். கட்சியைப் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிறுவவும், அவற்றிற்கு தொழிலாளி வர்க்க நிறுவனங்களை வென்றெடுக்கவும் முயன்றனர். இதுதான் அவர்களின் அரசியல் செயற்பாடாக இருந்தது. மேலும் அவர்கள் பாட்டாளி வர்க்கம் எவ்வகைப் போக்கை பிற வர்க்கங்களின் மீது கடைப்பிடிக்க வேண்டும் என்பதை குறிப்பாக விவசாயி வர்க்கத்தை, பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கியத் துணைவர்களாகக் கருதி வரையறுப்பதில் கவனம் செலுத்தினர்.
லெனின் போல்சுவிக் கட்சியை ஏகாதிபத்திய சகாப்தத் தொடக்கத்தில் கட்டினார். மேற்கத்திய நாடுகளின் சோசலிசக் கட்சிகளின் “அமைதியான” வளர்ச்சி கொண்ட பல பத்தாண்டுகளின் முடிவில் சந்தர்ப்பவாதப் போக்குகள் தலைவிரித்தாடின. அகிலத்தின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் பரிசோதித்துச் சரி செய்வதும் சந்தர்ப்பவாதத்தை முற்றாக நிராகரிப்பதும் மிகமுக்கியத் தேவையானது. போல்சுவிக் கட்சியை அவர் புதிய வகையானதாக முதலாளித்துவத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைத்துத் தலைமை தாங்குவதாகக் கட்டியமைத்தார். இக்கட்சி ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை, சுயஒழுங்கை உள்ளடக்கி, புரட்சிகர மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையிலானதாய் அக்கோட்பாடுகளைப் பயன்படுத்தி, முன்னெடுத்துச் செல்லக்கூடியதாய் இருந்தது.
அப்படிப்பட்ட கட்சி புரட்சிகர தத்துவ அடிப்படையிலமைந்து பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைப்பிரிவாய் அதிகாரத்தை வெல்ல, சோசலிசத்தைக் கட்டியமைக்க, தொழிலாளி வர்க்க இயக்கங்களை ஈர்த்து, வழி நடத்தி, தலைமை தாங்கிச் செல்வதால், பாட்டாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த அமைப்பு வடிவமாக இருக்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான ஒரு கருவியாக உள்ளது. ஒற்றுமையை, ஒழுங்கைக் காப்பதாக, எந்த குழுப்போக்கும் அதன் ஒற்றுமையைக் சிதைந்துவிடாது இருக்கும்படி காக்கிறது. தானே சந்தர்ப்பவாதிகளை வெளித்தள்ளி தூய்மை அடைகிறது. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது கொள்கையை எந்த எதிரிக்கு மரண அடி கொடுப்பது என்பதை நிர்ணயிப்பதாக தாக்குதல் திசைவழியை அமைத்துக் கொள்கிறது. அனைத்து கூட்டாளி வர்க்கங்களையும் இந்த எதிரிக்கு எதிரான போராட்டத்தில் சாத்தியமான எல்லா நட்பு சக்திகளையும் ஒன்றிணைக்கிறது.
போல்சுவிக் கட்சி பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்திற்கெதிரான புரட்சிகர மார்க்சியத்தின் போராட்டத்தில் பிறந்தது. அதன் திட்டங்களும், அமைப்புக் கோட்பாடுகளும், தொழிலாளிகள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு போராட வேண்டும் என்னும் “பொருளாதாரவாதத்”திற்கெதிரானதாக அமைந்தது. அவர்களோடு கட்சியில் வர்க்கக் கூட்டிணைப்புக் கோட்பாடுகளைப் புகுத்தி அமைப்பைப் பலவீனப்படுத்தி ஒற்றுமையைக் குலைக்க முயன்ற மென்ஷ்விக்குகளுக்கு எதிரானதாக, கட்சியை மக்களிடமிருந்தே பிரித்து, நட்புச் சக்திகளை நிராகரித்து, போராட்டத்தின் வளர்ச்சிக்கட்ட அடிப்படையிலான கோட்பாட்டுக்குப் பதிலாக “வெற்றுப் புரட்சிகர” வாய்வீச்சில் இறங்கிய “இடதுசாரி”களுக்கெதிரானதாக இருந்தது.
- முதலாளித்துவத்தை முழுமையாகத் தோற்கடிக்க அரசியல் போராட்டத்தால் மட்டுமே முடியும். தொழிலாளிகள் “வெற்றியின் ஒரு கூறான பெருந்திரளான எண்ணிக்கையைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை ஒன்றுபட்டதாக அறிவால் தலைமை தாங்கப்படுவதாக இருந்தால் மட்டும் வெற்றியடைய முடியும்” என்று மார்க்சு கூறுகிறார்.
ஒவ்வொரு தேசத்திலும், ஒட்டுமொத்த உலகிலும் பாட்டாளி ஒன்றுபட வேண்டும், அப்பொழுதுதான் உழைப்பின் விடுதலை சாத்தியம். அவர்களின் வலிமை முழுதும் முதலாளித்துவ அரசுகளின் கொள்ளையிடுகிற அந்நியக் கொள்கைகளுக்கும் போர்வெறிக்கும் எதிராகச் செலுத்தப்பட வேண்டும்.சர்வதேச உழைப்பாளிகள் கழகத்திற்காக மார்க்சு வகுத்த பொது விதிகளில் தொழிலாளி வர்க்கக் கட்சி விதிகள் உள்ளடக்கி உள்ளன.(i) தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலை அதன் வேலையாகவே இருக்க வேண்டும்.(ii) முதலாளித்துவத்திடமிருந்து பாட்டாளிகளை விடுவிப்பதை மட்டுமே அனைத்து அரசியல் இயக்கங்களும் தங்களது இறுதி முடிவாகக் கொள்ள வேண்டும்.
இதைச் சாதிக்க உலகப் பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட வேண்டும்.
பாட்டாளி வர்க்கம் தானொரு வர்க்கமாகச் செயல்பட பழைய கட்சிகளுக்கெதிராக ஒரு தனித்தன்மையுடைய அரசியல் கட்சியைக் கட்டியமைத்தால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட கட்சி சோசலிச புரட்சிக்கும், அனைத்து வர்க்கங்களையும் ஒழிக்கவும் இன்றியமையாத தேவையான கருவி ஆகும் என்பதனை மார்க்சிய ஆசான்கள் மிகத்தெளிவாக நிருவியுள்ளனர். அந்த படிப்பினைகளை பெற்று ஒரு சரியான பாட்டாளி வர்க்க கட்சியாக செயல்பட வேண்டியது எல்லா நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான வழிகாட்டுதல்.
”என்ன செய்ய வேண்டும்?” பாட்டாளி வர்க்கக் கட்சியின் கடமைகள் பற்றிய மார்க்சிய அடிப்படையிலான புரிதலுக்கான மிக முக்கிய நூல். எந்தச் சூழ்நிலையில் அந்த நூல் எழுதப்பட்டது என்பதை அறியவும், அதன் முக்கியக் கருத்துக்களைப் புரிந்து கொள்ளவும் மார்க்சிய மாணவர் போல்ஷ்விக் கட்சி வரலாற்றில் முதல் அத்தியாயத்தில் 5-ஆம் பிரிவு, இரண்டாம் அத்தியாயத்தில் 2-ஆம் பிரிவு முதலியவற்றைப் படிக்க வேண்டும்.
“என்ன செய்ய வேண்டும்” ருஷ்யப் பாட்டாளி வர்க்கக் கட்சி தொடங்கிய பின் தொழிலாளிகளின் பொருளாதாரப் போராட்டங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும், அரசியல் பிரச்சினைகளை விடவும் வயிற்றுப் பிரச்சினைக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கற்பிக்க முயன்றவர் களுக்கெதிராக எழுதப்பட்ட நூல். இந்தவகைப் போக்கில் சந்தர்ப்பவாதத்தின் உட்கரு உள்ளது என்பதையும், வர்க்க சமரசத்தை கட்சிக்குள் கொண்டுவரும் என்பதையும் லெனின் கண்டுகொண்டார்.
“பொருளாதாரவாதிகள்” என அழைக்கப்பட்டவர்கள் கட்சிக்குள் “விமரிசன சுதந்திரத்தை”க் கோரியும், லெனினுடையவை “குறுகிய அரசியல் பார்வை” எனத் தாக்கியும், தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். லெனின், அவர்கள் கோருகின்ற “விமரிசன சுதந்திரம்” உண்மையில் மார்க்சியத்திற்கு பதில் முதலாளித்துவக் கருத்துக்களைத் தழுவுவதற்கு வேண்டும் சுதந்திரம் என்பதையும், முதலாளித்துவவாதிகளுடன் சமரசத்திற்கான பாதையைத் திறந்துவிடும் என்பதையும் காட்டுகிறார். “சரிதான், பொருளாதாரவாதிகளுக்கு வர்க்க சமரசப் பாதையைத் தழுவும் சுதந்திரம் உண்டு, ஆனால் கட்சியையும் சேர்த்து இழுக்காதீர்கள்” என்று கேலியாகச் சொல்கிறார் லெனின்.
தொழிலாளி வர்க்க இயக்கத்தை பொருளாதாரப் போராட்டத்திற்கு மட்டும் சுருக்குவது என்பது அரசியல் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு, தொழிலாளர்களை என்றென்றைக்கும் கூலி அடிமை முறையோடு பிணைப்பது என்று பொருளாகிறது என்கிறார் லெனின். பொருளாதாரவாதிகள் மோசமான நிலைகளுக்கெதிராக தொழிலாளிகள் தன்னெழுச்சியாகத் திரண்டெழுவதைச் சார்ந்து இருந்தனர். இப்போக்கை, லெனின், தலைமை தாங்குவதற்குப் பதில் மக்களின் பின்னே செல்லும் வால்வாதம் (குவோஸ்திசம்) என்றழைக்கிறார். பாட்டாளி வர்க்க இயக்கத்தில் தன்னெழுச்சியான பொருளாதாரப் போராட்டங்களினால் மட்டும் தன்னெழுச்சியாக அரசியல் அறிவு வந்து விடாது என்கிறார் லெனின். அரசியல் அறிவு, புரட்சிகரத் தத்துவம் பாட்டாளி வர்க்க இயக்கத்தினுட் புகுத்தப்பட வேண்டும். பொருளாதாரவாதிகள் தத்துவத்தின் பங்கைச் சிறிதாக்கினர். ஆனால் “புரட்சிகரத் தத்துவம் இல்லையேல் நிச்சயம் புரட்சிகர இயக்கமும் இல்லை.”பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதக் கருத்துக்களின், திட்டங்களின் வேர், தத்துவத்தின் பங்கைச் சுருக்கி, தன்னெழுச்சியான இயக்கத்தைச் சார்ந்திருப்பதில் இருக்கிறது என லெனின் காட்டுகிறார்.
“என்ன செய்ய வேண்டும்” எவ்வாறு பொருளாதாரப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் இணைக்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. பாட்டாளி வர்க்க அரசியல் போராட்டங்கள் “தொழிற்சங்க அரசியலை” விடவும் விரிவானவை. வர்க்க தொழிலாளிகள் “பல்வேறு வர்க்கங்களின் இடையிலான உறவுகள்” குறித்து அக்கறை கொள்ள வேண்டும். எதிர்ப்புரட்சியின் எல்லா வெளிப்பாடுகளையும் எதிர்த்துப் போராட வேண்டும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட வேண்டும். பொருளாதாரப் போராட்டத்தை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதன் மூலம் பொருளாதாரவாதிகள் சீர்திருத்தவாதம், சந்தர்ப்பவாதத்தினுள் ஆழ்கிறார்கள். சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களும் விடுதலைக்கான சோசலிசத்திற்கான போராட்டங்களாக மாற்றப்பட வேண்டும்.
1904-இல் ருஷ்ய சமூக ஜனநாயகவாதத் தொழிலாளர் கட்சியின் இரண்டாம் காங்கிரசைத் தொடர்ந்து எழுதப்பட்டது. இந்தக் காங்கிரசில்தான் போல்ஷ்விக் – மென்ஷ்விக் பிளவு வெளிப்படையாகக் கட்சிக்குள் தெரிந்தது.
இந்நூலைப் புரிந்து கொள்ளவும் இதன் பின்னணியைப் புரிந்து கொள்ளவும் போல்ஷ்விக் கட்சி வரலாற்றின் இரண்டாம் அத்தியாயத்தின் 3, 4 பிரிவுகளைப் படிக்க வேண்டும். 1903-இல் ருஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் இரண்டாம் காங்கிரசில் இருவகைப் போக்குகளாக, புரட்சிகரப் போக்கும், சந்தர்ப்பவாதமும் வெளிப்படையாக உணரப்பட்டது. காங்கிரசில் கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அதன் விதிகளை ஏற்பதில் பிரச்சினை ஏற்பட்டது. லெனினும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் உறுப்பினராக மூன்று தகுதிகளை முன் வைத்தனர்.
அவை:
(i) கட்சித் திட்டத்தை ஏற்பது
(ii) கட்சிக்குச் செலுத்த வேண்டிய தொகையைத் தருவது.
(iii) கட்சி உறுப்பொன்றில் இருப்பது. அவரது எதிர்ப்பாளர்கள் 3-ஆம் விதி கூடாது என்றனர். இக்காங்கிரசின் முடிவில் லெனினின் ஆதரவாளர்கள் கட்சி மத்தியக் கமிட்டியிலும், கட்சி இதழான ‘இஸ்க்ரா’ ஆசிரியர் குழுவிலும் பெரும்பான்மை பெற்றனர். எனவேதான் அவர்கள் பெரும்பான்மை எனப் பொருள்படும் போல்சவிக்குகள் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். சிறுபான்மை எனப் பொருள்படும் மென்ஷ்விக் என்ற பெயர் லெனினின் எதிர்ப்பாளர்களுக்கானது. ஆனால் பின்பு மென்ஷ்விக்குகள் இஸ்க்ராவைக் கைப்பற்றினர். கட்சிக்கு எதிரே அது மிகவும் “இறுகிப்” போய் உள்ளது எனத் தாக்கத் தொடங்கினர். கட்சியின் முடிவுகளை தனிநபர் மீறும் “சுதந்திரத்தை” அவர்கள் கோரினர். சந்தர்ப்பவாதிகள் கட்சி விதிகளின் மீதான தாக்குதலை இப்படித் தொடங்கினர்.லெனின், கட்சி அமைப்பைப் பலவீனப்படுத்தும் இம்முயற்சி பெரிய அரசியல் விஷயங்களில் சந்தர்ப்பவாதத் திட்டங்களைத் திணிக்கும் முன்முயற்சி என்று கண்டுகொண்டார். “ஓரடி முன்னே ஈரடிகள் பின்னே” நூலில் 2-ஆம் காங்கிரசின் அனைத்து நடைமுறைகளையும், ஓட்டுக்களையும் ஆய்ந்து கட்சியில் இரு பிரிவுகள் உள்ளதைக் காட்டினார். புரட்சிகரப் பிரிவு, சந்தர்ப்பவாதப் பிரிவு என்ற இரண்டுமே அவை. இந்த நூலில் மத்தியப்படுத்தப்பட்ட ஒழுங்கமைந்த கட்சி பாட்டாளி வர்க்கத்தின் தேவை9 என்பதை லெனின் தெளிவாகக் காட்டுகிறார்.
இடதுசாரிக் கம்யூனிசம் ஒரு இளம்பருவக் கோளாறு, கம்யூனிஸ்ட் கட்சியின் யுத்த தந்திரம், போர்த்தந்திரம், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மக்கள் கட்சியைக் கட்டுவது பற்றிய ஒரு கையேடு எனலாம். 1920-இல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் 2-வது காங்கிரசின்போது பல நாட்டு கம்யூனிஸ்டுகள் இணைந்து “இடது” தவறுகளைத் திருத்த எழுதப்பட்டது.
லெனின் ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் போல்ஷ்விக்குகளின் அனுபவங்களை உலகக் கம்யூனிச இயக்கத்திற்கு வழிகாட்டுவதற்குத் தொகுத்தார்.
போல்ஷ்விக் கட்சி சந்தர்ப்பவாதத்தை மட்டுமே எதிர்த்து உறுதியும் வலிமையும் பெறவில்லை; மாறாக கட்சியில் நிலவிய, குட்டி முதலாளித்துவ இடதுசாரிப் போக்கையும் எதிர்த்துப் போராடியே எஃகுறுதி போன்ற வலிமை பெற்றது.
தலைவர்கள், கட்சி, வர்க்கம், மக்கள் இடையிலான சரியான உறவுகளைப் பராமரிக்க மத்தியப் படுத்தப்பட்ட ஒழுங்குமிக்க கட்சியின் அவசியத்தை கட்சித் தலைமையின் அவசியத்தை அவர் உணர்த்துகிறார். தலைவர்களுக்கெதிராக மக்கள் இருப்பதை எதிர்ப்பதாக பேசும் உறுதிமிக்க “இடதுசாரி”களின் அபாயத்தைக் குறிப்பிடுகிறார். அத்தகைய இடதுசாரிப் பேச்சு கட்சியை, கட்சிக் கட்டுப்பாட்டை நிராகரிக்கும் போக்குக்கு இட்டுச் செல்கிறது. மேலும் அது பாட்டாளி வர்க்கத்தை முதலாளிகளுக்காக நிராயுதபாணியாக்கும் செயல் என லெனின் காட்டுகிறார். இத்தகைய போக்கு பாட்டாளி வர்க்கத்தினின்று எழுவதில்லை. ஏனெனில் கட்சியின் அவசியத்தை அது உணர்ந்துள்ளது; மாறாகக் குட்டி முதலாளிகளிடமிருந்து எழுகிறது என்கிறார்.நமது பணி பெரும் முதலாளிகளை வீழ்த்துவது மட்டுமல்ல கூடவே, (அதைவிடக் கடினமான) சிறு உற்பத்தியாளர்களை மறு ஒழுங்கமைப்பதும், மறு கல்வியளிப்பதும் என்கிறார். இதற்கு நெடிய, கடின போராட்டம், பழைய அமைப்பின் மரபுகள், சக்திகளுக்கெதிரே நடத்தப்பட வேண்டும். அதைச் செய்ய மத்தியப்படுத்தப்பட்ட கட்டுப்பாடான கட்சியாலேயே முடியும்.மேலும் லெனின் எவ்வாறு இடதுசாரிப் போக்குகள் “தூண்டி விடுகிற ஏஜெண்டுகள்” கையில் போய் செயல்படுகிறது என்பதையும் காட்டுகிறார்.
லெனின் ஒரு “வெகுஜனக் கட்சியின்” அவசியத்தைக் காட்டுகிறார். கட்சியை மட்டுமல்ல மக்களையும் தலைமை தாங்குவதே நமது பணி என்கிறார். பல்லாயிரக்கணக்கான மக்களை செயலுக்கு இட்டுச் செல்வது என்பதே அதன் பொருள். கட்சி எங்கெல்லாம் வெகுஜனங்கள் உண்டோ அங்கெல்லாம் பணிபுரிவது கட்சிக்கு அவசியம், எங்கும் ஊடுருவுவது, மக்களை எழுச்சியூட்டிப் போராட்டத்திற்கு இழுப்பது அவசியமானது என்கிறார் லெனின்.இதன் தொடர்பாக தொழிற்சங்கங்களில் வேலை எவ்வளவு அவசியமானது என்பதை வலியுறுத்துகிறார். தொழிற்சங்கங்கள் “எதிர் புரட்சிகரமானவை” என்ற பெயரில் அவற்றில் வேலை செய்யாது இருப்பது பெருந்திரளான மக்களை ஒருசில எதிர்ப்புரட்சித் தலைவர்கள் கையில் விட்டுவிடுவது என்று பொருள். எங்கெல்லாம் பெருந்திரளான மக்கள் உண்டோ அங்கெல்லாம் அவர்களின் வளர்ச்சி நிலைக்கேற்ப பணிபுரிய வேண்டும். செயற்கையான “இடதுசாரி” முழக்கங்களை முன்வைத்து விட்டு நம்மை வேலியிட்டுக் கொள்ளக் கூடாது என்கிறார்.
கட்சி எல்லா தொழிலாளர் போராட்டங்களின் எல்லா வடிவங்களையும் கற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சட்டவிரோத நிலைமைகள் நிலவுமேயானால் சட்டபூர்வ – சட்டவிரோத வடிவங்களை இணைக்கக் கற்க வேண்டும். குறிப்பாக, பாராளுமன்றப் போராட்டங்களை நடத்தி மக்களுக்குக் கற்பிக்க, எழுச்சியூட்ட, தெளிவேற்படுத்தத் தேர்ச்சி பெற வேண்டும். தேர்தல்களில் பங்கேற்பது, பூர்ஷ்வா பாராளுமன்றத்தில் போராடுவதன் மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.கட்சி ஒரு போராட்ட வடிவத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். தனது தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், சுய விமர்சனத்திற்கும் பழக வேண்டும்.அப்படி இல்லையென்றால், அது வெகுஜனக் கட்சியன்று; ஒருசில அறிவு ஜீவிகளின் கட்சிதான் என்கிறார்.பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு சரியான பாதையை, சரியான அணுகுமுறை வடிவத்தை ஒவ்வொரு நாட்டுக் கம்யூனிஸ்டுகளும் கண்டுபிடிக்க வேண்டும் என்று காட்டுகிறார். நாம் அனைத்துக்கும் பொதுவான விதி என்று எதையும் முன் வைக்க முடியாது. அதேவேளையில் கம்யூனிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் தேசிய, தேசிய அரசு வேறுபாடுகளுக்கேற்ப சரியாகப் பொருத்துவது அவசியம்.இதன் பொருள் மக்களை புரட்சிகரப் போராட்டப் பாதைக்கு ஈர்க்கும் சரியான பாதையைக் கண்டுபிடிப்பது ஆகும்.இதன் தொடர்பாக எவ்வாறு சோசலிசப் புரட்சியை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வது என்பதை லெனின் விளக்கிச் செல்கிறார்.
மார்க்சியமும் திருத்தல்வாதமும் (1908) என்ற நூலில் திருத்தல்வாதத்தை லெனின் ஆய்கிறார். தங்களை மார்க்சியவாதிகள் என்றழைத்துக் கொண்டே மார்க்சிய அடிப்படைகளைத் திருத்துகின்ற சந்தர்ப்பவாதிகளின் தத்துவமே திருத்தல்வாதம். திருத்தல்வாதிகள் இயக்கஇயல் பொருள் முதல்வாதத்துக்குப் பதிலாக முதலாளித்துவ தத்துவத்தின் “மிகப் புதிய விஷயங்களை” சார்ந்திருப்பதைக் காட்டினார். குறிப்பாக முதலாளித்துவ அரசியல் பொருளாதாரவாதிகளின் நவீன தத்துவங்களைக் கையிலெடுத்துக் கொண்டு மார்க்சியத்தைத் “திருத்த” குறிப்பாக மார்க்சின் “மதிப்பு” பற்றிய கோட்பாட்டை, முதலாளித்துவ நெருக்கடிகளின் தவிர்க்க இயலாத தன்மையைத் திருத்தமுயன்றனர். ஜனநாயகமும் பொதுமக்கள் வாக்குரிமையும் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படைகளை அகற்றி விட்டன என்று அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள். தொடரும்....
No comments:
Post a Comment