ஆம்ஸ்ட்ராங் வளர்ந்த பின்னணி- தினமல்ர் செய்தியே தகவலுக்காக

எந்த குற்றமும் சமூக சூழலை கணக்கில் கொள்ளப்பட வேண்டும். 

நாம் புரிந்துக் கொள்ள சமூக அறிவு இருந்தாலே புரிந்துக் கொள்ள முடியும். 

இனி செய்திதாளில் வந்தவைதான் அப்படியே... 

சென்னை:சென்னையில் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வளர்ந்து, சரிந்து விழுந்தது பற்றி, ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு மற்றும் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு


போலீசார் கூறியதாவது:



சென்னை பெரம்பூரை பூர்வீகமாக கொண்டவர் கிருஷ்ணன். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த அவர், தி.க., ஆதரவாளர். அவரது மகன் தான் ஆம்ஸ்ட்ராங். கடந்த, 1990களில் குத்துச் சண்டை பயிற்சி எடுத்து வந்த அவர், ஆதிதிராவிடர்களுக்கு எதிராக செயல்படுவோர் மீது சிறிய அளவிலான அடிதடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார்.


ரவுடிகள் தொடர்பு



சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான பூவை மூர்த்தி, அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பை துவங்கினார். அதில், ஆம்ஸ்ட்ராங் முக்கிய நிர்வாகியாக இருந்தார். 2002ல் பூவை மூர்த்தி மறைந்தார். அக்கட்சியின் தலைவர் பதவியை ஏற்க ஆம்ஸ்ட்ராங் விரும்பினார்; அது முடியாமல் போனதால், அக்கட்சியில் இருந்து விலகினார்.

கடந்த, 2006ல், டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை துவங்கினார். அவருக்கு வட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரனின் அறிமுகம் கிடைத்தது. ரவுடிகளுடனான தொடர்பும் விரிவடைந்தது. அவரை சுற்றி எப்போதும் இளைஞர் பட்டாளம் இருக்கும்.

அவர்களுக்கு எது நடந்தாலும், ஆம்ஸ்ட்ராங் முன்னின்று செயல்படுவார். இதனால், கும்பல் தலைவனாக உருவெடுத்தார். இதனால், போலீசாரின் பார்வை அவர் மீது பாய்ந்தது. அவர் மீது, மொத்தம் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த 2008ல், ஜாதி ரீதியாக சென்னை சட்டக் கல்லுாரி மாணவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில், ஆம்ஸ்ட்ராங் தான் பின்னணியில் இருந்தார் என பேசப்பட்டது. காவல் துறையின், 'பி' பிரிவு ரவுடி பட்டியலில் இருந்தார். கைது செய்து சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

அனைத்து வழக்குகளிலும் தன்னை நிரபராதி என, நிரூபித்ததால் விடுதலை செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 2012ல், ரவுடி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், 99வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு, கவுன்சிலராக வெற்றி பெற்றார்.

பின், 2007ல், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை சென்னைக்கு அழைத்து வந்து பெரிய பேரணி நடத்தினார்.

எனினும் அவருக்கு ரவுடிகளுடனான தொடர்பு நீடித்தது. சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி 'பாம்' சரவணனும், ஆம்ஸ்ட்ராங்கும் நகமும் சதையும் போல நட்புடன் இருந்தனர். சரவணனின் சகோதரர் ரவுடி தென்னரசுவை, பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலராக நியமித்தார்.


வலது கரம்



தென்னரசுக்கும், கூலிப்படை தலைவனான ஆற்காடு சுரேஷுக்கும் யார் பெரிய ரவுடி என்பதில் போட்டி ஏற்பட்டு, ஒருவரையொருவர் தீர்த்துக்கட்ட திட்டம் போட்டனர். அப்போது, தென்னரசுக்கு பாதுகாவலராக ஆம்ஸ்ட்ராங், பாம் சரவணன் ஆகியோர் இருந்தனர்.

அவர்கள் மீது, ஆற்காடு சுரேஷுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. தன்னை வளரவிடாமல் செய்யும் தென்னரசு, ஆம்ஸ்ட்ராங் மற்றும் பாம் சரவணன் ஆகியோரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

2015, பிப்., 5ல் திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே, ஆற்காடு சுரேஷ் கூட்டாளிகள் சேர்ந்து, தென்னரசுவின் கதையை முடித்தனர். இது ஆம்ஸ்ட்ராங் மற்றும் பாம் சரவணனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் கால் வைக்க முடியாதபடி செய்தனர்.

ஒருகட்டத்தில் அரசியல் செல்வாக்கு மிக்க மனிதாக மாறியதால், போலீசார் ஆம்ஸ்ட்ராங்கை நெருங்காமல் ஒதுங்கினர். வட சென்னை பகுதியைச் சேர்ந்த, தி.மு.க.,வின் முக்கிய புள்ளி ஒருவரின் வலது கரமாகவும் செயல்பட்டவர், அவர் இட்ட அதிரடியான பணிகளை செவ்வனே செய்து முடித்தார்.

சினிமா படங்களில் வரும் தாதா போல, சொகுசு கார், பாதுகாவலர்களுடன் தான் எப்போதும் வலம் வருவார். பொற்கொடி என்ற வழக்கறிஞரை திருமணம் செய்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை மாயாவதியிடம் கொடுத்து, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான சாவித்திரி பாய் புலே பெயரை சூட்டினார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நில பிரச்னை தொடர்பாக, ஆற்காடு சுரேஷுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் நேரடி பகை மூண்டுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாகவும், ஆம்ஸ்ட்ராங் தன்னை தீர்த்து கட்டி விடுவார் என, ஆற்காடு சுரேஷ் பயந்தார். வழக்கு ஒன்றில் கைதாகி, புழல் சிறையில் இருந்தபோது, பாம் சரவணனின் கூட்டாளி ஒற்றைக்கண் ஜெயபாலும், அதே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

அப்போது, ஆற்காடு சுரேசை அழைத்த ஒற்றைக்கண் ஜெயபால், 'தென்னரசு கொலைக்கு உன்னை காவு வாங்காமல் விட மாட்டோம்' என கூறி, அவரது முகத்தில் காறி உமிழ்ந்துள்ளார். இதன் பின்னணியில், ஆம்ஸ்ட்ராங் இருப்பதாகவும் சுரேஷ் கருதினார்.


கண்டிப்பு



சுரேஷ், ஒற்றைக்கண் ஜெயபால் ஆகியோர் சிறையில் இருந்து வெளியே வந்ததும், கதைகளை முடிக்க ஒருவரையொருவர் நாள் பார்த்து காத்து இருந்தனர்.

இந்நிலையில், அதிக வட்டி தருவதாக, 2,438 கோடி ரூபாய் மோசடி செய்த, ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர் ராஜசேகர், ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர் என்பதால் முதலீடு செய்தோர், அந்த பணத்தை வாங்கித் தருமாறு ஆம்ஸ்ட்ராங்கை அணுகினர்.

அவரும் பணத்தை வாங்கி கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக, ஆற்காடு சுரேஷ் களமிறங்கி, 'யாருக்கும் பணம் தர வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்' என, ராஜசேகரிடம் தெரிவித்துள்ளார். இது ஆம்ஸ்ட்ராங்கிற்கு தெரிய வந்து, சுரேசை கண்டித்துள்ளார். இது இருவருக்கும் மேலும் பகையை தீவிரப்படுத்தியது.

அதற்கு ஏற்ப, கடந்தாண்டு, ஆகஸ்ட், 18ம் தேதி, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் அணுகு சாலையில் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆற்காடு சுரேசை, தென்னரசு கொலைக்கு பழி வாங்க, ஒற்றைக்கண் ஜெயபால் மற்றும் அரக்கோணம் மோகன் உள்ளிட்ட கூலிப் படையினர் தீர்த்துக்கட்டினர்.

அப்போது, சம்பவ இடத்தில், ஒரே காரில் பாம் சரவணன், ஆம்ஸ்ட்ராங் இருந்ததாக, ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலுவுக்கு தெரியவந்தது. அதன்பின், ஆற்காடு சுரேஷ் கொலையின் நேரடி சாட்சியான, அவரது ஆதரவாளர் ரவுடி மாதவனை, ஜாம்பஜாரில் தீர்த்து கட்டினர். இது பொன்னை பாலுவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதற்கெல்லாம் ஆம்ஸ்ட்ராங் தான் காரணம் என்பதால், அவரை விட்டுவைக்கக் கூடாது என, முடிவு செய்தார். அதற்காக, ஆம்ஸ்ட்ராங்கிற்கு 'ஸ்கெட்ச்' போடும் பொறுப்பை, பெரம்பூர் பொன்னுசாமி நகரைச் சேர்ந்த, ஆற்காடு சுரேசின் கூட்டாளியான ஆட்டோ ஓட்டுனர் திருமலையிடம் ஒப்படைத்தார்.

அவர் ஒரு மாதமாக நோட்டமிட்டு, சதி திட்டத்தை தீட்டினார். பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகள், ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளில், ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டிக் கொன்றனர்.



காரில் சிக்கிய கைத்துப்பாக்கி



ஆம்ஸ்ட்ராங்கிடம், இத்தாலியில் இருந்து வாங்கப்பட்ட, பெரிட்டா டாம்கேட் ஐநாக்ஸ் 3032 எனும் மாடல் கைத்துப்பாக்கி உள்ளது. அதற்கு முறைப்படி உரிமம் பெற்று வைத்திருந்தார். இந்த துப்பாக்கி, 9 - 20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது, 400 கிராம் எடை உடையது. ஒன்பது ரவுண்ட் வரை சுட முடியும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்