நமது படிப்பைச் சீர்செய்வோம் - மாவோ.பகுதி - 1.

 தோழர் மாவோ ஏனானில் நடைபெற்ற ஓர் ஊழியர்களின் கூட்டத்தில் இவ்வறிக்கை யினை வைத்தார். இந்த அறிக்கையும் கட்சி வேலை முறையினை சீர் செய்க மற்றும் பகட்டு எழுத்து நடையினை எதிர்ப்போம் ஆகிய இரு கட்டுரைகளும் சீர்செய் இயக்கத்தின் மீதான தோழர்மாவோவின் அடிப்படை படைப்புகள் ஆகும். அவர், இவற்றில், கருத்தியல் தளத்தில், கட்சியில் உள்ள கடந்தகால வேறுபாடுகளைத் தொகுத்து மார்க்சிய-லெனினிய முகமூடியில் கட்சியில் நிலவிய முதன்மையான அகநிலைவாத மற்றும் குறுங்குழுவாதப் போக்குகளில் தாமே வெளிப்பட்டுக் கட்சியில் பகட்டு எழுத்துநடை வடிவமாக வெளிப்பட்ட குட்டிமுதலாளியகருத்தியல் மற்றும் பாணியினைப் பகுப்பாய்வு செய்தார். தோழர்மாவோ. வேலைமுறையினை சீர்செய்ய மார்க்சிய-லெனினிய கருத்தியல் கொள்கைகளுக்கு ஏற்ப, கட்சி முழுவதும் மார்க்சிய-லெனினிய கல்வி இயக்கத்திற்காக அறைகூவல் விட்டார். அவரின் அறைகூவல் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பாட்டாளி வர்க்க மற்றும் குட்டிமுதலாளிய கருத்தியலுக்கு இடையிலான மாபெரும் விவாதத்திற்கு மிக விரைவில் இட்டுச் சென்று விட்டது. இது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பாட்டாளி வர்க்கக் கருத்தியல் நிலைப்பாட்டை திடப்படுத்தி முன்னெப்போதும் இல்லாத ஐக்கியத்தைக் கட்சி சாதிக்கவும் கருத்தியல் ரீதியாக பரந்து பட்ட ஊழியர்கள் ஒரு பெரும் அடியினை முன்வைக்கவும் வழிவகை செய்தது.

சீனகம்யூனிஸ்டு கட்சியின் இருபது ஆண்டுகள் என்பது மார்க்சியலெனினியத்தின் அனைத்தும் தழுவிய உண்மையை சீனப் புரட்சியின் பருண்மையான நடைமுறையோடு மேலும் மேலும் நெருக்கமாக ஒன்றிணைத்த இருபது ஆண்டுகளாகும்.நமது கட்சியின் குழந்தைப் பருவத்தில் மார்க்சியலெனினியத்தைப் பற்றி நமது அறிவு எவ்வளவு மேலெழுந்தவாரியாக,எவ்வளவு அற்பத்தனமாக இருந்தது என்பதை நாம் நினைவுபடுத்திப் பார்ப்போமேயானால்,இப்பொழுது நமது அறிவு எவ்வளவு ஆழமாகவும் செழுமையாகவும் இருக்கிறது என்பதை நம்மால் காணமுடியும்.துன்பச்சுமை ஏறிய சீன தேசத்தின் மிகச் சிறந்த புதல்வர்களும்,புதல்விகளும் நமது நாட்டையும் மக்களையும் காக்கும் உண்மையைத் தேடி ஒருவர் பலியான இடைவெளியை இன்னொருவர் நிரப்ப தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்து நூற்றாண்டு காலம் போராடினார்கள். உணர்ச்சிபொங்க மகிழ்ந்து பாடவும், கண்ணீர் செறியவும் நம்மை இது தூண்டுகிறது.

முதல் உலகப்போருக்கும் ரஷ்யாவின் அக்டோபர் புரட்சிக்கும் பிறகுதான் நமது நாட்டை விடுதலை செய்வதற்குரிய உண்மையில் சிறந்த உண்மையை, ஆயுதங்களில் சிறந்த ஆயுதத்தை, மார்க்சிய-லெனினியத்தை நாம் கண்டு கொண்டோம்.சீனக் கம்யூனிஸ்டு கட்சி இந்த ஆயுதத்தை பயன்படுத்தும் முன்முயற்சியாளனாக, பிரச்சாரகனாக, அமைப்பாளனாக இருந்து வந்திருக்கிறது. மார்க்சிய-லெனினிய தத்துவம் சீனப் புரட்சியின்பருண்மையான நடைமுறை யோடு இணைக்கப்பட்டவுடன், மார்க்சிய-லெனினியத்தின் அனைத்தும் தழுவிய உண்மையானது, சீனப் புரட்சிக்கு முற்றிலும் புதியதோர் தோற்றத்தைக் கொடுத்தது. ஜப்பான் எதிர்ப்பு யுத்தம் வெடித்தெழுந்ததிலிருந்து நமது கட்சி மார்க்சிய-லெனினியத்தின் அனைத்தும் தழுவிய உண்மையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் போரின்,பருண்மையான நடைமுறையைக் கற்பதிலும், இன்றைய சீனத்தையும், இன்றைய உலகத்தையும் கற்பதிலும் மேலும் ஓரடி முன்னெடுத்து வைத்தது. அத்துடன் சீன வரலாற்றைப் படிப்பதையும் தொடங்கி வைத்தது. இவை எல்லாம் மிகச் சிறந்த அறிகுறிகளாகும்.

இருப்பினும் நம்மிடம் குறைபாடுகள் இன்னும் இருக்கின்றன.அவைகள் மிகப் பெரியதாகவும் இருக்கின்றன.நாம் இந்தக் குறைபாடுகளை திருத்திக் கொள்ளா விட்டால்,நமது வேலையிலும்மார்க்சியலெனியத்தின் அனைத்தும் தழுவிய உண்மையை சீனப்புரட்சியின் பருண்மையான நடைமுறையோடு இணைக்கும் மாபெரும் இலட்சியத்திலும் நாம் இன்னொரு அடி கூடமுன்னேற முடியாது என்பது எனது கருத்து.

முதலாவதாக,தற்போதைய நிலைமைகளைப் பற்றிப் படிப்பதை எடுத்துக் கொள்வோம். இன்றைய உள்நாட்டு நிலைமைகளையும்,சர்வதேச நிலைமைகளையும் படிப்பதில் நாம் சில வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். ஆனால்,நமது கட்சியைப் போன்றதொரு பெரிய அரசியல் கட்சிக்கு நாம் சேகரித்துள்ள விசயங்கள் சிறு துண்டுகளே. அரசியல்,இராணுவம், பொருளாதாரம்,பண்பாடு ஆகிய ஒவ்வொரு அம்சங்களிலும் நமது ஆராய்ச்சி ஒழுங்கற்றதாகவேஇருக்கிறது. பொதுவாகக் கூறினால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்த அம்சங்களில் விசயங்களைச் சேகரிப்பதிலும், படிப்பதிலும் நமது வேலை ஒரு முறையானதாக, முழுமையானதாக இல்லை. புறநிலை யதார்த்தத்தைப் பரிசீலித்து படிக்கும் நிலையில் இல்லாதவர்களாகநாம் இருக்கிறோம். கண்ணைக் கட்டிவிட்டுக் கரிக்குருவி பிடிப்பது போல்அல்லது குருடன் மீனைத் தேடுவது போல நடந்துகொள்வது தாறுமாறாகக் கவனமற்று இருப்பது,வெறும் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடுவது,மேலோட்டமான அறிவோடு திருப்தி அடைவதுஇது நமது கட்சித் தோழர்கள் பலரிடம் இன்னும் உள்ள மிகமிக மோசமான வேலைப் பாணி.இவ்வேலைப்பாணி மார்க்சியலெனினியத்தின் அடிப்படை உணர்வுக்குமுற்றிலும் எதிரானது.நிலைமைகளை உணர்வுப்பூர்வமாக ஆராய வேண்டும் என்றும், அகநிலை விருப்பங்களிலிருந்து தொடங்காமல் புறநிலை யதார்த்தங் களிலிருந்து தொடங்கவேண்டும் என்றும் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் நமக்குக்கற்பித்துள்ளனர்.நமது தோழர்கள் பலர் இந்த உண்மைகளுக்கு நேர் எதிராகச்செயல்படுகின்றனர்.

இரண்டாவதாக, வரலாற்றைப் படிப்பதை எடுத்துக் கொள்வோம். ஒரு சில கட்சி உறுப்பினர்களும் அனுதாபிகளும் இந்த வேலையை எடுத்துக்கொண்ட போதிலும், இதை ஒரு ஒழுங்கான வழியில் செய்யவில்லை.பல கட்சி உறுப்பினர்கள் சென்ற நூற்றாண்டில் அல்லது பண்டைய காலங்களில் சீன வரலாற்றில் இன்னும் நுனிப்புல் மேய்பவர்களாக இருக்கின்றார் கள். பண்டைய கிரேக்க நாட்டைக் குறிப்பிடாமல் வாய் திறக்கவே இயலாதவர்களாய் இருக்கும் மார்க்சிய-லெனினிய அறிஞர்கள் பலர் இருக்கிறார்கள்.ஆனால், அவர்கள் தம் சொந்த முன்னோர்களையே மறந்து விட்டார்கள். வருத்தப்பட வேண்டியது தான்.

நடப்பு நிலைகளைப் பற்றியோ, கடந்தகால வரலாற்றைப் பற்றியோ, கவனமாகப் படிக்கும் நிலையில் இல்லை.

மூன்றாவதாக, சர்வதேச புரட்சிகர அனுபவத்தைப் படிப்பதை மார்க்சியம்-லெனினியத்தின் அனைத்தும் தழுவிய உண்மையைப் படிப்பதை எடுத்துக் கொள்வோம். பல தோழர்கள் மார்க்சியலெனினியத்தைப் புரட்சிகர நடைமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் படிப்பதில்லை. ஆனால்,வெறும் படிப்புக்காக மட்டுமே படிக்கிறார்கள்.இதன் விளைவாக அவர்கள் புத்தகத்தைப் படித்த போதிலும் அதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

 மார்க்ஸ்,எங்கெல்ஸ்,லெனின்,ஸ்டாலின் ஆகியோரிடமிருந்து மேற்கோளை மனம்போன போக்கில் ஒருதலைப் பட்சமாக எடுத்துக் காட்டுவதற்கு மட்டும்தான் அவர்களால் முடியும்.

ஆனால், மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் நிலைபாடு, நோக்குநிலை மற்றும் முறை ஆகியவற்றைப் பயன்படுத்தி சீனத்தின் இன்றைய நிலைமைகளையும் அதன் வரலாற்றையும் உருப்படியாகக் கற்பதற்கோ,அல்லது சீனப்புரட்சியின் பிரச்சனைகளை  உருப்படியாக ஆராய்ந்து தீர்வு காண்பதற்கோ அவர்களால் முடிவதில்லை. மார்க்சிய-லெனினியத்தை இப்படி அணுகுவது பெரும் தீமையை விளைவிக்கிறது. குறிப்பாக, மேல்தட்டு ஊழியர்களிடையே இப்படிப்பட்ட அணுகுமுறை ஊறு விளைவிப்பதாக உள்ளது.

நான் இங்கு குறிப்பிட்டுள்ள மூன்று அம்சங்களும்,அதாவது நடப்பு நிலைமைகளைப்படிப்பதைப்புறக்கணிப்பது,வரலாற்றைப் படிப்பதைப் புறக்கணிப்பது,மார்க்சியலெனினியத்தைப் பொருத்துவதைப் புறக்கணிப்பது இவை எல்லாம் மிக மிக மோசமானவேலை முறையாகும்.இந்தப் போக்கு பரவுவது நமது தோழர்கள் பலருக்குத் தீமைகளைவிளைவிக்கிறது.

நமது அணியில் பல தோழர்கள் நமது வேலை முறை மூலம் உண்மையிலேயே தவறான வழிக்கு இட்டுச் செல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த வேலை முறையைப் பின்பற்றுபவர்கள் நாடு, மாகாணம், பிரதேசம் அல்லது மாவட்டம் இவற்றின் உள்ளேயும் வெளியேயும் நிலவும் தனிப்பட்ட நிலைமைகளை முறையாகவும் முற்றாகவும் பரிசீலனை செய்து படிப்பதற்கு விருப்பமின்றி தங்களுடைய சொற்ப அறிவின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். இது எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது.எனவே, இது இப்படித்தான் இருந்தாக வேண்டும் என்றவாறு நடந்து கொள்கிறார்கள். இந்த அகநிலை வேலை முறை நமது தோழர்கள் மிகப் பலர் மத்தியில் இன்னும் இல்லாமலா போய்விட்டது?

நமது சொந்த வரலாற்றை அறியாமல் இருப்பதற்காக அல்லது குறைவாகவே அறிந்து கொண்டிருப்பதற்காக வெட்க்கப்படுவதற்குப் பதில் கர்வம் கொள்கிறார்கள்.

குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் வரலாற்றையும், அபினிப் போரிலிருந்து நூற்றாண்டு காலச் சீனத்தின் வரலாற்றையும் அறிந்துள்ளவர்கள் மிகச்சிலர்தான். கடந்த நூறு ஆண்டுகளின் பொருளாதார, அரசியல் இராணுவ மற்றும்

பண்பாட்டு வரலாற்று ஆய்வுகளை எவருமே கவனமாகவே படிப்பதற்கு எடுத்துக் கொள்ளவில்லை. தமது சொந்த நாட்டைப் பற்றிக் கொஞ்சம்கூட அறியாத சிலருக்குப் புராதனக் கிரேக்க நாட்டைப் பற்றியும் மற்ற வெளிநாடுகளைப் பற்றியும் மட்டும்தான் விவரிக்க முடிகிறது. இந்த அறிவும் கூட பழைய வெளிநாட்டுப் புத்தகங்களில் கிடைத்த சச்சரவும் முடிவும் அடங்கிய மிகவும் பரிதாபத்திற்குரிய அறிவுதான்.

படிப்பதற்காக வெளிநாடு சென்று திரும்பிய மாணவர்கள் பல பத்தாண்டுக் கணக்கில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களாகவேஇருக்கிறார்கள். ஐரோப்பாவிலிருந்தோ, அமெரிக்காவி லிருந்தோ, ஜப்பானிலிருந்தோ தாயகம் திரும்பிய இவர்களால், வெளிநாட்டு விசயங்களைக் கிளிப்பிள்ளை போல் சொல்ல மட்டும்தான் முடிகிறது. அவர்கள் கிராமபோன் பெட்டியாக மாறி புதியவற்றை அறிந்து படைக்க வேண்டிய தங்கள் கடமையை மறந்துவிடுகிறார்கள். இந்த நோய் கம்யூனிஸ்டுக் கட்சியிலும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

நாம் மார்க்சியத்தைப் படித்துக் கொண்டிருந்த போதிலும் நம்மில் பலர் படிக்கும் வழிமுறை மார்க்சியத்திற்கு நேர்விரோதமாகச் செல்கிறது. எப்படியென்றால், மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் மனப்பூர்வமாக நமக்கு ஆணையிட்ட அடிப்படைக் கோட்பாட்டை - கோட்பாட்டுக்கும், நடைமுறைக்கும் உள்ள ஒற்றுமையை - அவர்கள் மீறுகிறார்கள். இந்தக் கோட்பாட்டை மீறிவிட்ட அவர்கள் இதற்கெதிரான கோட்பாட்டைச் சொந்தமாகக் கண்டுபிடிக்கிறார்கள். நடைமுறையிலிருந்து கோட்பாட்டைப் பிரிப்பது என்பதுதான் அது. பள்ளிகளிலும் வேலையிலுமுள்ள ஊழியர்களுக்குத் தத்துவார்த்தத்தைப் போதிக்கும் ஆசிரியர்கள் சீனப் புரட்சியின் தர்க்கத்தைப் படிப்பதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டுவதில்லை. பொருளாதார ஆசிரியர்கள் சீனப் பொருளாதார இயல்புகளைப் படிப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டுவதில்லை. அரசியல் அறிவியலின் ஆசிரியர்கள் சீனப் புரட்சியின் போர்த்தந்திரத்தைப் படிப்பதற்குஅவர்களுக்குவழிகாட்டுவதில்லை. இராணுவ அறிவியலின் ஆசிரியர்கள் சீனாவின் தனித் தன்மைக்குப் பொருத்தமான செயலுத்திகள் மற்றும் மூலஉத்திகள் பற்றி படிப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டுவதில்லை. அதேபோல்தான் இன்னும் பலவும் இதன் விளைவாக மக்களுக்குப் பெரும் தீமை விளைவிக்கும் அளவுக்குத் தவறு பரப்பப்படுகிறது. ஒருவர் தான் ஏனானில் கற்றுக் கொண்டதை பூசியனில் எப்படிப் பயன்படுத்துவது என்பது அவருக்குத் தெரியவில்லை. பொருளாதாரப் பேராசிரியர்களால் எல்லைப்புற நாணயத்துக்கும் கோமிங்டாங் கட்சி நாணயத்துக்கும் இடையிலான உறவைச் சொல்லி விளக்க முடியவில்லை. எனவே, இயல்பாகவே மாணவர்களால் விளக்க முடியாது.

இதனால் பலரிடம் ஒரு வக்கிரமான மனோநிலை உருவாகி இருக்கிறது.சீனத்தின்  பிரச்சனையில் அக்கறை காட்டி,கட்சியின் உத்தரவுகளைக் கவனமாக எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக அவர்கள் தம் ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொண்ட முற்றானதும், நிலையானதும்,தம்மட்டமடிக்கும் வறட்டுச் சூத்திரங் களுக்குத் தங்கள் முழு மனத்தையும் பறிகொடுத்து விடுகிறார்கள்.

இருப்பினும் நான் இங்கு கூறியிருப்பவை நமது கட்சியிலுள்ள மிக மோசமான வகைகளை குறிப்பதாகும். இதுதான் பொதுவான நிலை என்று நான் கூறவில்லை.இருந்தபோதிலும் இந்த வகையான ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள்.மேலும் கூறுவதென்றால் அவர்களமிகச் சிலரே.ஆனால்,அவர்கள் பெருந்தீமையை விளைவிக்கிறார்கள்.இந்த விசயத்தை நாம் எளிதாக எடுத்துக்கொண்டு விடக்கூடாது.

 

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை.

1.நான் இங்கு குறிப்பிட்டுள்ள மூன்று அம்சங்களும்,அதாவது நடப்பு நிலைமைகளைப்படிப்பதைப்புறக்கணிப்பது, வரலாற்றைப் படிப்பதைப் புறக்கணிப்பது, மார்க்சிய-லெனினியத்தைப் பொருத்துவதைப் புறக்கணிப்பது இவை எல்லாம் மிக மிக மோசமான வேலை முறையாகும். இந்தப் போக்கு பரவுவது நமது தோழர்கள் பலருக்குத் தீமைகளை விளைவிக்கிறது”.

ஒரு கம்யூனிஸ்டு கட்சி (அமைப்பு) அதன் வேலை முறைகளை சரியாக வகுத்துச் செயல்படவேண்டும். அவ்வாறு செயல்படவில்லை என்றால் அந்த கம்யூனிஸ்டு அமைப்புக்கு தீமையே விளையும், அது மட்டுமல்லாமல் அந்த கட்சியை அல்லது அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்கு தீமையேஏற்படும். இவ்வகையான தீமைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அந்தக் கட்சி என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி மாவோவால் கொடுக்கப்பட்ட அறிக்கைதான் நமது படிப்பைச் சீர்செய்வோம் என்பதாகும்.

கம்யூனிஸ்டுக் கட்சி தலைவர்களும் அதன் உறுப்பினர்களும் நடப்பு நிலைமைகளைப் படிக்க வேண்டும் என்றார்மாவோ. அதாவது தனது நாடு மற்றும் சர்வதேசத்தில் நடக்கும் நிகழ்வுப் போக்குகளை படிக்க வேண்டும் என்றார் மாவோ. அடுத்து தனது நாடு மற்றும் சர்வதேச வரலாற்றைப் படிக்க வேண்டும் என்றார் மாவோ. அடுத்ததாக அனைத்தும் தழுவிய மார்க்சிய லெனினியத்தை நமது நடைமுறைக்கு எப்படிப் பொருத்துவது என்பதையும் படிக்க வேண்டும் என்றார் மாவோ.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் மேலே குறிப்பிட்ட மூன்று விசயங்களை கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கற்றுத் தேறவேண்டும்.

அவ்வாறு இதனை கற்றுத்தேற வேண்டுமானால்,இந்த மூன்று விசயங்களையும் ஒரு கம்யூனிச அமைப்பானது கட்சி அமைப்பில் செயல்படும் உறுப்பினர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இதற்கான கல்வியை அணிகளுக்கு கற்றுக்கொடுக்க ஒரு கம்யூனிச அமைப்பானது மார்க்சிய லெனினிய கல்வி இயக்கத்தை தொடர்ந்து நடத்திட வேண்டும்.இத்தகைய கல்வி இயக்கத்தை நடத்திடாத எந்த ஒரு கம்யூனிச அமைப்பும் அது கம்யூனிச அமைப்பாக இருக்க முடியாது.

இந்தியாவில் இத்தகைய மார்க்சிய கல்வி இயக்கத்தை நடத்திடாததன் காரணமாகவே இங்கே சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி போன்ற ஒரு கம்யூனிஸ்டுக் கட்சி இங்கு உருவாகவில்லை.

RSS,பா...போன்ற பிற்போக்கு வலதுசாரி அமைப்புகள் கூட அவர்களது பிற்போக்குஇந்துத்துவா கொள்கைகளை மக்களிடம் பரப்புவதற்கு கல்வி இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அதன் காரணமாகவே அவர்கள் மக்களிடம் செல்வாக்கு பெற்று வளர்ந்து வருகிறார்கள். இந்த உண்மையைப் புரிந்து கொண்டு,பொதுவுடமையாளர்கள் மாவோ காட்டிய வழியில் மார்க்சிய லெனினிய கல்வி இயக்கத்தை தொடங்கி நடத்த வேண்டியதுஅவசியமாகும்.

2.ஒரு கம்யூனிச அமைப்பானது தொடர்ந்து மார்க்சிய லெனினிய கல்வி இயக்கத்தைநடத்துவதன் மூலம் அவ்வப்போது ஏகாதிபத்தியவாதிகளும்,அவர்களைச் சார்ந்த பெருமுதலாளிகளும் இவர்களால் உருவாக்கி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் NGO என்று சொல்லப்படும் தொண்டு நிறுவனங்களின் சதித்தனமான கருத்துப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தி முறியடிக்க முடியும்.

3.இத்தகைய மார்க்சிய கல்வி இயக்கத்தின் மூலம் கம்யூனிச அமைப்பிலுள்ள தோழர்களை சித்தாந்த ரீதியாகவளர்க்கமுடியும். அதன் மூலம் கட்சிக்குள் உருவாகும் கருத்து முரண்பாடுகளை தீர்ப்பதற்கான உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்குபெற்று, ஒரு சரியான கருத்தை வந்தடைய முடியும். மேலும் கட்சிக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் கட்சி உறுப்பினர்களிடையே ஐக்கியத்தை அதாவது ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.

4. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியானது முதல் இருபது ஆண்டுகளில் மார்க்சிய-லெனினியத்தின் அனைத்தும் தழுவிய உண்மைகளை சீனப் புரட்சிகர நடைமுறையில்சரியாகப் பொருத்துவதன் மூலமே அங்கே புரட்சியை நடத்தி முடித்தது.அத்தகைய முயற்சியில் இந்தியப்பொதுவுடமை இயக்கம் வெற்றிபெறவில்லை. அதாவது இந்தியப் புரட்சிகர நடைமுறையில் மார்க்சிய-லெனினியத்தை பொருத்துவதற்கான திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியதன்

அவசியத்தை இந்திய பொதுவுடமைத் தலைவர்கள் உணரவில்லை.அப்படியே அவர்கள் உணர்ந்திருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு கல்வி இயக்கத்தை தொடர்ந்து நடத்திட தவறினார்கள்.

5. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியானது குழந்தைப் பருவத்தில் இருந்த பொழுது, மார்க்சிய-லெனினிய அறிவு அந்தக் கட்சித் தலைவர்களிடமும்அதன்உறுப்பினர்களிடமும்குறைவாகவும் அற்பத்தனமாகவும் இருந்ததாக மாவோ குறிப்பிடுகிறார்.எனினும் இருபதுஆண்டுகளுக்குப் பிறகு இந்த அறிவு கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே மிகவும் ஆழமாகவும் செழுமையாகவும் வளர்ந்துள்ளது என்பதை மாவோ குறிப்பிட்டு ஆனாலும், இந்த அறிவு போதாது என்று கட்சிக்கு அறிக்கை கொடுத்தார்.

6.சீன நாட்டின் மக்களையும்,அந்த நாட்டையும் பாதுகாப்பதற்காக பல தலைவர்கள் போராடி தியாகம் செய்தார்கள் என்றும். ஒருவர் மறைந்துவிட்டால் மற்றொருவர் தியாகம் செய்ய முன்வந்தார்கள் என்றும், இவ்வாறு தொடர்ந்து பல தலைவர்கள் சீன மக்களுக்காகப் போராடிய வரலாறு கொண்டது சீன மக்கள் இயக்கமாக இருந்தது என்கிறார் மாவோ.

ஆயினும் முதல் உலகப் போருக்குப் பின்னால், ரஷ்யப் புரட்சிக்குப் பின்னால்தான், சீன நாட்டையும் மக்களையும் விடுதலை செய்வதற்கு உண்மையான வழியை உண்மையானஆயுதமாகிய மார்க்சியலெனினியத்தை சீனாவின் விடுதலைக்குப் பாடுபட்டத் தலைவர்கள் புரிந்து கொண்டார்கள் என்கிறார் மாவோ.

7.சீனாவை விடுதலை செய்வதற்கு மார்க்சியம்லெனினியம்தான் சரியான ஆயுதம் என்பதை புரிந்துகொண்டதோடு நிற்காமல், அந்த ஆயுதத்தை பயன்படுத்தும் முயற்சியாளனாகவும், பிரச்சாரகனாகவும், அமைப்பாளனாகவும் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி செயல்பட்டது என்கிறார்மாவோ. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் இந்த நடவடிக்கையோடு ஒப்பிடும் போது இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் இந்த விசயத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

8.மார்க்சியலெனினியத்தின் அனைத்தும் தழுவிய உண்மையை சீனப் புரட்சியின் நடைமுறையோடு பொருத்தி இணைத்தவுடன் சீனப் புரட்சிக்கு ஒரு புதிய தோற்றத்தையும், தெம்பையும் கொடுத்தது. மார்க்சிய-லெனினிய கண்ணோட்டத்தின் அடிப்படையில், சீனாவில் நடைபெற்ற ஜப்பான் எதிர்ப்பு போரின், பருண்மையான நடைமுறையையும் அன்றையசீனாவைப் பற்றியும் உலகத்தையும் கற்பதிலும், சீன வரலாறை கற்பதிலும் சீனக்கம்யூனிஸ்டுக் கட்சியானது முன்னேறிய வளர்ச்சியைக் கண்டது. ஆனால் அன்றைய இந்திய கம்யூனிஸ்டுத் தலைவர்கள் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி செய்ததுபோல் இந்தியப் புரட்சி நடைமுறையோடு மார்க்சிய-லெனினியத்தைப் பொருத்து வதில் தவறு இழைத்தது. அன்றைய இந்தியாவையும் உலகத்தையும் கற்றுப் புரிந்துகொள்ளத் தவறியது, மேலும் இந்திய வரலாற்றை வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளாமல் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகளின்கண்ணோட்டத்திலிருந்தே இந்திய வரலாற்றைப் புரிந்து கொண்டது.

9.சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி மார்க்சிய லெனினியத்தின் அனைத்தும்தழுவிய உண்மையை சீனப் புரட்சியின் நடைமுறையோடு பொருத்தி இணைத்திருந்தாலும்,சீனப் புரட்சியின் பருண்மையான நடைமுறையை கற்பதிலும், அன்றைய சீனத்தையும் உலகத்தையும் கற்பதில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் குறைபாடுகள் இருந்ததாக மாவோ கூறினார். மேலும் இந்தக் குறைபாடுகளை அகற்றுவதன் மூலமே சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியால் புரட்சியில் முன்னேற முடியும் என்றார் மாவோ.மாவோவின் இந்த வழிகாட்டுதலுக்கு சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியிலுள்ள தலைவர்களும் அதன் உறுப்பினர்களும் முக்கியத்துவம் கொடுத்து மாவோவை பின்பற்றிய காரணத்தால் மட்டுமே சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி வெற்றி பெற்றது.ஆனால் இந்தியாவிலுள்ள கம்யூனிச அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை மாவோவின் இந்த பொதுவான வழிகாட்டுதல்களைபின்பற்றாத காரணத்தால் இந்தியப் பொதுவுடமை யாளர்களால் வெற்றிபெற முடியவில்லை.

அது மட்டுமல்லாமல் தற்போது சமீபத்தில் உருவான சில பிற்போக்கு கட்சிகள் கூட (நாம் தமிழர் கட்சி போன்றவை) கம்யூனிஸ்டுகளைக் காட்டிலும் மக்களின் செல்வாக்கைப் பெற்றுவளர்ந்துள்ளார்கள்.

10.புறநிலை யதார்த்தத்தை பரிசீலித்துப் படிக்கும் நிலையில் சீனக் கம்யூனிஸ்டுகள் இல்லை என்கிறார் மாவோ. இதனை புரிந்துகொண்ட சீனக் கம்யூனிஸ்டுகள் சீன சமுதாயத்தின் மற்றும் சர்வதேசத்தின் புறநிலை யதார்த்தத்தை கற்றுத் தேர்ந்தார்கள்.ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்டு அமைப்புத் தலைவர்கள் இன்றைய புறநிலை யதார்த்தத்தை பரிசீலித்துப் புரிந்துகொள்வதற்கு எவ்விதமான முயற்சியும் எடுக்கவில்லை. அதன் காரணமாகவே அவர்களது திட்டமானது விஞ்ஞான வகைப்பட்டதாக இல்லை. ஆகவேதான் இந்திய கம்யூனிஸ்டுகளால் புரட்சிக்காக உழைக்கும் மக்களை இதுவரை திரட்ட முடியவில்லை.

11. சீனக் கம்யூனிஸ்டுகள் வெறும் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடுவது, மேலோட்டமான அறிவோடு திருப்தி அடைவது போன்ற வகையான வேலைப்பாணியையே பின்பற்றுகிறார்கள் என்று மாவோ அவரது கட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும்

விமர்சித்து, சீனக் கம்யூனிஸ்டுகள் புற நிலைமைகளை உணர்வுப்பூர்வமாக ஆராய வேண்டும் என்றும், அகநிலை விருப்பங்களிலிருந்து தொடங்காமல் புறநிலை யதார்த்தத்திலிருந்து ஆராய்ச்சியைத் தொடங்க வேண்டும்என்றார். இந்த வழிகாட்டுதலை சீனக் கம்யூனிஸ்டுகள் பின்பற்றியதாலேயே அக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால் இந்திய கம்யூனிஸ்டுகள் மாவோவின் இந்த வழிகாட்டுதலை பின்பற்றாமல் பெருவாரியானவர்கள்அகநிலைவாதிகளாகவே இருக்கிறார்கள்.புறநிலை யதார்த்தத்தை இவர்கள் பார்ப்பதற்கு முயற்சி செய்யவே இல்லை. அதனால்தான் இன்றுவரை இந்தியப் பொதுவுடமை இயக்கம் முன்னேற வில்லை.

12.கம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டிய ஆய்வு முறைகளையும், வேலை முறைகளையும் பற்றி மார்க்சிய ஆசான்களான காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றதலைவர்கள் கம்யூனிஸ்டுகளுக்குப் போதித்துள்ளார்கள். ஆனால் இந்த போதனைகளை சீனக் கம்யூனிஸ்டுகள் பின்பற்றவில்லை என்றும் இவர்களின் போதனைகளைக்கு நேர் எதிராகவே சீனக் கம்யூனிஸ்டுகள் செயல்படுகிறார்கள் என்றும் மாவோ விமர்சனம் செய்தார். மாவோவின் இந்த விமர்சனத்தை சீனக் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொண்டு தங்களது தவறுகளைத் திருத்திக்கொண்டு, மார்க்சிய ஆசான்களது போதனைகளை கற்றுத் தேர்ச்சியடைந் தார்கள். மேலும் இந்த போதனைகளை பின்பற்றியே சீனக் கம்யூனிஸ்டுகள் அவர்களது வேலைமுறையை அமைத்துக் கொண்டதால்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.ஆனால் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் சீனக் கம்யூனிஸ்டுகள் பின்பற்றிய அதாவது மார்க்சிய லெனினியஆசான்களின் போதனைகளை இதுவரை கற்றுத் தேரவில்லை. அதன் காரணமாக அவர்களது நடைமுறை வேலை முறையானது மார்க்சிய லெனினிய வகைப்பட்டதாக அமையவில்லை.

அதாவதுஇந்தியப் பொதுவுடமையாளர்கள் உண்மையான கம்யூனிஸ்டுகளாக வளரவில்லை. இந்திய கம்யூனிஸ்டுகள் மார்க்சிய ஆசான்களது போதனைகளை கற்பத்தில் ஈடுபாடு காட்டவில்லை மாறாக இங்குள்ள தலைவர்களான காந்தி,அம்பேத்கார்,பெரியார் போன்ற தலைவர்களின் போதனைகளையே பின்பற்றுவதாலும், திருத்தல்வாதிகளான காவுத்ஸ்கி, டிராட்ஸ்கி, குருஷேவ், டெங்சியோபிங் போன்றவர்களின் போதனைகளை பின்பற்றி அவர்களது வேலைமுறைகளை வகுத்து செயல்படுவதாலும் இந்தியப் பொதுவுடமையாளர்களால் வளரவும் முடியவில்லைமக்களின்செல்வாக்கையும் இழந்துவருகிறார்கள். இவர்களுக்கு மாறாக இங்குள்ள காந்தி, அம்பேத்கார், பெரியார் போன்ற தலைவர்களை முதன்மையாகப் பின்பற்றுபவர்கள் இந்திய பொதுவுடமையாளர்களைக் காட்டிலும் வளர்ச்சி பெற்றுள்ளனர்

ஆகவே இந்திய பொதுவுடமையாளர்கள் எப்போது மார்க்சிய ஆசான்களது போதனைகளை கற்றுத் தேர்ச்சி பெற்று கம்யூனிஸ்டுகளின் தனித்தன்மையை வளர்த்து செயல்படுகிறார்களோ அப்போதுதான் கம்யூனிஸ்டுகளால் மக்களின் செல்வாக்கை பெற முடியும்.

13. சீனக் கம்யூனிஸ்டுகள் வரலாற்றைப் படிப்பதில் ஒழுங்கான வழியில் செய்யவில்லை என்றும், சீன வரலாற்றைத் தவிர வேறு நாடுகளின் வரலாற்றை படித்துள்ளார்கள். சீன வரலாற்றையும் அவர்களது சொந்த நாட்டு முன்னோர்களையும் மறந்துவிட்டார்கள் என்று மாவோ விமர்சனம் செய்தார்.அந்த விமர்சனத்தை சீனக் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொண்டு வரலாற்றை முறையாக கற்றுக் கொண்டார்கள்.ஆனால் இந்திய கம்யூனிஸ்டுகள் இந்திய வரலாற்றை வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து படிக்கவில்லை.

மாறாக பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதி களால் இந்திய வரலாறு என்று அவர்களால் எழுதப்பட்ட கட்டுக் கதைகளையே இந்திய வரலாறாகப் புரிந்துகொண்டார்கள்.அதாவது இந்தியாவின் உண்மையான வரலாற்றை இந்தியப் பொதுவுடமையாளர்கள் புரிந்துகொள்ளவே இல்லை.

கோசாம்பி போன்ற இந்திய வரலாற்று ஆசிரியர்கள்தான் உண்மையான இந்திய வரலாற்றை வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் எழுதினார்கள்.ஆகவே இந்தியாவின் உண்மையான வரலாற்றை கற்பதற்கும் கற்றதை அணிகளுக்கு கற்றுக் கொடுப்பதுவும் இந்தியப் பொதுவுடமையாளர்களின்முதன்மையான கடமையாக இருக்கிறது.இந்தக் கடமையை இந்திய பொதுவுடமையாளர் கள் சரியாகச் செய்யாததன் காரணமாகவேஆர்.எஸ்.எஸ்,மற்றுப் பா...வினர் இந்திய வரலாற்றை திரித்து பொய்யான கட்டுக் கதைகளையே இந்திய வரலாறு என்று மக்களிடம் பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆகவே இந்த வலதுசாரி துரோக கும்பலை முறியடித்திட உண்மையான இந்திய வரலாற்றை மக்களிடம் கம்யூனிஸ்டுகள் போதிக்க வேண்டியது முக்கியமான கடமையாகும்.

14.சீனக் கம்யூனிஸ்டுகளில் பலர் மார்க்சியலெனினியத்தை புரட்சிகர நடைமுறைத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் படிக்கவில்லை என்றும்,அவர்கள் பெயருக்குத்தான்அதனை படிக்கிறார்கள் என்று மாவோ விமர்சனம் செய்தார். இதனால் மார்க்சிய ஆசான்களது

மேற்கோள்களை மனம்போன போக்கில் ஒருதலைபட்சமாக எடுத்துக்காட்ட மட்டுமேஅவர்களால் முடிந்தது என்றும்,இதன்காரணமாக மார்க்சிய ஆசான்களது நிலைபாடு மற்றும்நோக்கு நிலையிலிருந்து சீனச் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு சீனப் புரட்சி பற்றியபிரச்சனைக்குத் தீர்வுகாண அவர்களால் இயலவில்லை, இப்படிப்பட்ட முறையில் மார்க்சியலெனினியத்தை அனுகுவது சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் சீன மக்களுக்கும் பெரும் தீமைவிளைவிக்கும் என்று மாவோ எச்சரிக்கை செய்தார். இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டசீனக் கம்யூனிஸ்டுகள் மாவோவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி மார்க்சிய லெனினியத்தைமுறையாக கற்றுக்கொண்டு அதனை சீனப் புரட்சியின் நடைமுறையோடு இணைப்பதற்கானபயிற்சியைபெற்றார்கள். அதன் காரணமாகவே சீனப் புரட்சியை வெற்றிகரமாக சீனக் கம்யூனிஸ்டுகள் நடத்தி முடித்தார்கள். ஆனால், இந்திய பொதுவுடமையாளர்கள் மார்க்சிய லெனினியத்தை முறையாகப் படிக்கத் தவறினார்கள். மேலும் அதனை இந்தியப் புரட்சிகரநடைமுறையோடு பொருத்தி இணைக்கத் தவறினார்கள். இதன் காரணமாக இந்தியப்புரட்சியை இந்திய பொதுவுடமையாளர்களால் நடத்த முடியவில்லை. மேலும் இவர்கள்இந்தியப் புரட்சிப் பாதையை கைவிட்டுவிட்டு வேறு திசையில் வெகுதூரம் சென்றுவிட்டனர்.

15.சீனக் கம்யூனிஸ்டுகள் சீன நாடு,மாகாணம்,மாவட்டம் போன்றவற்றின் உள்ளேயும்வெளியேயும் நிலவும் தனிப்பட்ட சிறப்பு நிலைமைகள முறையாகவும் முழுமையாகவும் பரிசீலனை செய்து படிப்பதற்கு முயற்சி செய்யாமல் அவர்களது அகவய விருப்பங்களிலிருந்து முடிவு செய்து செயல்படுகின்றனர் என்று மாவோ விமர்சனம் செய்தார்

இதன் காரணமாக அவர்களது செயல்பாட்டால் எவ்விதமான பலனும் கிடைக்காது என்றார் மாவோ. மாவோவின் இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்ட சீனக் கம்யூனிஸ்டுகள் தங்களது தவறுகளை திருத்திக்கொண்டு அவர்கள் பணியாற்றிய பகுதிகளில் நிலைமையை முறையாகவும் முழுமையாகவும் பரிசீலனை செய்து முடிவெடுப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டு சரியானமுடிவுகளை எடுப்பதற்கு கற்றுக்கொண்டு செயல்படுத்தி வெற்றி கண்டார்கள்.ஆனால்இந்தியப் பொதுவுடமையாளர்கள் கிராமங்கள் மற்றும் நகரங்களில் பணியாற்றி மக்களின்வாழ்க்கை நிலைமைகளையும் அவர்களின் உணர்வுகளையும் அவர்கள் எத்தகைய போராட்டங்களில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ளார்கள் என்பது போன்ற விசயங்களைஅறிந்து கொண்டு அவர்களை எவ்வாறு புரட்சிக்கு தயாரிப்பது என்ற சரியான முடிவுகளை எடுப்பதற்கு முயற்சி செய்யவில்லை. அதற்கு மாறாக தேர்தலில் ஈடுபட்டு மக்களிடம் எப்படி ஓட்டு வாங்குவது என்பதிலேயே இந்தியப் பொதுவுடமை யாளர்கள் கவனம் செலுத்தினர்.

இதன் விளைவாகவே இந்தியப் பொதுவுடமையாளர்களால் வெற்றிபெற முடியவில்லை.

இந்திய எம்.எல்.குழுக்களும் கள நிலைமைகளை ஆய்வு செய்து முடிவெடுக்காமல் அகநிலைவாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுத்துசெயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

16. சீனக் கம்யூனிஸ்டுகள் தனது சொந்த நாடான சீனாவின் வரலாற்றையும் அறிந்துகொள்ளவில்லை. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் வரலாற்றையும்அறிந்துகொள்ளவில்லை.கடந்த ஆண்டுகளில் பொருளாதார,அரசியல்,இராணுவம்,மற்றும் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களின் வரலாற்றையும் படிக்கவில்லை.தனது சொந்த நாட்டின் வரலாற்றை தெரிந்துகொள்ளாத இவர்களால் எப்படி சீனாவில் புரட்சி செய்ய முடியும் என்று மாவோ விமர்சனம் செய்தார்.இதனை ஏற்றுக்கொண்ட சீனக் கம்யூனிஸ்டுகள் அவர்களது சீன வரலாற்றை கற்றுத் தேர்ந்தார்கள்.ஆனால் இந்தியப் பொதுவுடமையாளர்கள் இந்தியவரலாற்றை படித்தறியவில்லை.அப்படியே படித்தாலும் இந்தியாவை ஆண்ட பிரிட்டீஷ் ஏகாதிபத்திய வாதிகளால் எழுதப்பட்ட பொய்யான வரலாற்றைத்தான் இவர்கள் உண்மையான வரலாறு என்று படித்துப் புரிந்துகொண்டார்கள்

இந்தியாவை பிரிட்டீஷார் கைப்பற்றி இங்கே காலனி ஆதிக்கம் செய்ததற்குப் பிறகு இந்த காலனி ஆதிக்கத்தின் நோக்கம் என்ன,காலனி ஆதிக்கத்தை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது போன்றவற்றை இவர்கள் கற்றுக்கொள்ளவே இல்லை

அதன் காரணமாகவே பிரிட்டீஷ் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வந்தபின்பும் காலனி ஆதிக்கம் வேறு புதிய வடிவத்தில் தொடர்வதைஇவர்கள் புரிந்துகொள்ளாமல் இந்தியாவில் சமூக மாற்றத்திற்கு தேவையானவழியைப்பின்பற்றாமல்வேறு திசையில் தங்களது பயணத்தை தொடர்வதன் மூலம் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.

17. சீனக் கம்யூனிஸ்டுகள் மார்க்சிய-லெனினியத்தை படிக்கும் வழிமுறை தவறானதாக இருக்கிறது. மார்க்சிய ஆசான்கள் நமக்கு காட்டிய வழிமுறையை சீனக் கம்யூனிஸ்டுகள் மீறுகிறார்கள், அதாவதுகோட்பாட்டுக்கும்நடைமுறைக்கும் உள்ள ஒற்றுமையை இவர்கள் மீறுகிறார்கள், அதாவது கோட்பாட்டையும் நடைமுறையையும் தனித்தனியாக பிரிக்கிறார்கள் என்று மாவோ விமர்சனம் செய்தார். நடைமுறையிலிருந்து கோட்பாட்டை மார்க்சிய  லெனினிய கண்ணோட்டத்திலிருந்து உருவாக்காமல் தனது சொந்த அகநிலையிலிருந்து அதாவது தனது மனதுக்கு சரி என்று தோன்றுவதை எல்லாம் உண்மை என்று கண்மூடித்தனமாக நம்பி முடிவெடுத்து செயல்படுவது என்று மாவோ விமர்சனம் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட சீனக் கம்யூனிஸ்டுகள் தங்களது தவறுகளை களைந்து நடைமுறையிலிருந்து மார்க்சிய கண்ணோட்டத்தைப்பின்பற்றிபொருத்தமான கோட்பாட்டு முடிவுகளுக்கு வருவதற்கான பயிற்சியைப் பெற்றனர். ஆனால், இந்தியப் பொதுவுடமையாளர்கள் மக்களோடு ஐக்கியப்படவும் இல்லை, மக்களைத் திரட்டி நடத்தப்பட்ட போராட்டங்களிலிருந்து கோட்பாடுகளை வகுக்க முயற்சி செய்யவில்லை.

உதாரணமாக பலமுறை தேர்தலில் பங்குகொண்ட போதும் அதனால் நல்ல விளைவுகள் எதுவும் நடைமுறையில் ஏற்படவில்லை மேலும் தேர்தலில் பங்குகொள்வதற்கான மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழிமுறையையும் பின்பற்றவில்லை.இந்த நடைமுறையில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து படிப்பினை பெற்று தங்களது செயல்தந்திரத்தை மாற்றிக்கொள்ளாமல் செயல்படுவதன் மூலம் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.

18.பள்ளிகளிலும் வேலையிலுமுள்ள ஊழியர்களுக்கு தத்துவத்தைப் போதிக்கும் ஆசிரியர்கள் புரட்சியில் ஏன் ஈடுபட வேண்டும் என்ற தர்க்கத்தை படிப்பதற்கு வழிகாட்டவில்லை என்றும் பொருளாதார ஆசிரியர்கள் சீனப் பொருளாதார இயல்புகளை சீனக் கம்யூனிஸ்டுகளுக்குச்சொல்லித்தரவில்லை என்றும் இதுபோல் போர்த்தந்திரத்தைப் படிப்பதற்கும், இராணுவ அறிவியலைப் படிப்பதற்கும், சீனக் கம்யூனிஸ்டுகளின் போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரத்தை படிப்பதற்கும் இந்த ஆசிரியர்கள் வழகாட்டவில்லை என்று மாவோ விமர்சனம் செய்தார்.அதனை ஏற்றுக்கொண்ட ஆசிரியர்கள் தாங்கள் அணிகளுக்கு பாடம் எடுக்கும் முறையை மாற்றிக்கொண்டனர். அதன் விளைவாக அணிகள் மார்க்சிய லெனினியவகைப்பட்ட கல்வியை சிறப்பாகக் கற்றுக்கொண்டார்கள்.ஆனால் இந்தியப் பொதுவுடமை இயக்க வரலாற்றில்,மார்க்சியலெனினியத்தை கற்றுக் கொடுக்கக் கூடிய ஆசிரியர்கள்போதுமான அளவிற்கு உருவாக்கப்படவில்லை.பல மார்க்சியலெனினியக் குழுக்களில் மார்க்சியத்தைப் போதிக்கும் ஆசிரியர்கள் ஒருவரைக்கூட உருவாக்கவில்லை.இந்த நிலையில் இந்த அமைப்புகளால் எவ்வாறு மார்க்சிய லெனினியத்தை,போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரத்தைப் போதிக்க முடியும்.ஆகவே சுருக்கமாகச் சொன்னால் மார்க்சியம்லெனினியத்தை அனைத்து மார்க்சிய லெனினிய அமைப்புமஅணிகளுக்கு போதிப்பதை கைவிட்டு விட்டார்கள்

இதன் காரணமாக மார்க்சிய லெனினிய அமைப்புகளில் செயல்படும் ஒருவருக்கும் மார்க்சிய லெனினிய அறிவு போதாமையாகவே உள்ளது.இவர்களது ஆய்வு, மற்றும் எடுக்கப்படும் முடிவுகள் மார்க்சிய வகைப்பட்டதாக இல்லை.அதாவது இவர்கள் எடுக்கும் முடிவுகளும் இவர்களது செயல்பாடும் மார்க்சியத்தி லிருந்து விலகிஅகநிலைவயப்பட்டதாக இருப்பதால்,இவர்களால் மக்களின் செல்வாக்கைப் பெறமுடியால் போகிறது.இவர்கள் செய்யும் இந்த தவறின் காரணமாகவே நேற்று முளைத்த சீமான், விஜயகாந்த் போன்றவர்கள் கூட மக்களின் செல்வாக்கு பெற்று வளர்கிறார்கள்.ஆனால் மிக உயர்ந்த விஞ்ஞான தத்துவமான மார்க்சியத்தைப் பின்பற்றுபவர்களால்வளர முடியவில்லை.

இவர்கள் எப்போது அனைத்தும் தழுவிய உண்மையான மார்க்சிய லெனினிய தத்துவ அரசியல் பொருளாதாரத்தை கற்றுத் தேர்ந்து அதன் அடிப்படையில் அவர்கள் ஆய்வுசெய்வதும், முடிவுகள் எடுப்பதும், செயல்படுவதும் என்ற நடைமுறையை வகுப்பதில் தேர்ச்சி பெறுகிறார்களோ அப்போதுதான் மாவோவின் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்டுகள்போல் இந்திய மக்களிடம் செல்வாக்கு பெற முடியும்.

19. இதுபோன்ற விமர்சனங்களை மாவோ சீனக் கம்யூனிஸ்டுகளின் மீது மாவோ வைத்தாலும், கட்சியில் உள்ளவர்களில் சிறுபான்மையினர்தான் இத்தகைய தவறுகள் செய்கிறார்கள் என்றும் அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அந்தசிறுபான்மையினரும் இந்தத் தவறுகளிலிருந்து வெளிவர வேண்டும் என்றும் அதாவது தவறுகளை களைய வேண்டும் என்றே மாவோ எடுத்துச் சொன்னார்.ஏனெனில் பாலில் ஒருதுளி விசம் கலந்தாலும் பால் முழுவதும் விசமாகிவிடும்,அது போல கட்சிக்குள் ஒரு சிறியபகுதி தவறு செய்தாலும் அது கட்சி முழைமைக்கும் பாதிப்பை கொண்டுவரும் என்பதால் அந்தத் தவறுகளை விமர்சித்து மாற்றியமைக்க வேண்டியது கட்சியிலுள்ள ஒவ்வொருவரது கடமையாக உள்ளது.ஆகவே கட்சிக்குள் வரும் தவறுகளை நாம் கண்டறிய வேண்டுமானால் சமூக விஞ்ஞானமான மார்க்சிய லெனினிய அறிவை நாம் ஒவ்வொருவரும் கற்று தேர்ச்சி பெற வேண்டும் என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் உணர வேண்டும்.

20.சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரான மாவோ,தனது சொந்தக் கட்சியிலுள்ளோர் செய்யும் தவறுகளைத்தான் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார்.அவர் தனது சொந்தகட்சிக்காரர்களின் தவறுகளை கண்டுகொள்ளாமல் விடவில்லை.சொந்த கட்சிக்காரர்களின் மனம் புண்படும் என்று கருதவில்லை.அதேபோல் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களும் அதன் உறுப்பினர்களும் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரான மாவோ அவர்கள் தங்களின்மீது குற்றம் சாட்டுவதாகக் கருதவில்லை,மாறாக ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியின் வளர்ச்சிக்கு விமர்சனமும் சுயவிமர்சனமும் மிகமிக அவசியம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டு தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை பரிசீலித்து அதன் உண்மைத் தன்மையைப் புரிந்துகொண்டு தங்களது தவறுகளை களைந்து கொண்டார்கள்

அதனால்தான் சீனக் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றார்கள்.ஆனால் இந்தியாவில் பெருவாரியான பொதுவுடமையாளர்கள் மார்க்சிய லெனினியத்தை கற்றுக்கொள்ளவில்லை,இவர்கள்பெரும்பாலும் அகநிலைவாதி களாகவே இருக்கிறார்கள்,தற்போது மார்க்சியத்தைக் காட்டிலும் பெரியார்,காந்தி,அம்பேத்கார் போன்ற தலைவர்களையே நம்புகிறார்கள்.இவர்கள் மீது விமர்சனம் வைப்பவர்களை எதிரிகளாகப் பார்க்கிறார்கள்.இதன் காரணமாகவே அமைப்பிற்குள் விமர்சனம் செய்பவர்களை எதிரியாகப் பார்த்து அவர்கள் மீது முத்திரை குத்தி புறக்கணிக்கிறார்கள் அதன் விளைவாக அமைப்பு பலவாறு பிளவுண்டு புரட்சிக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் நிலை உருவாகி வலுவடைந்து வருகிறது.மார்க்சியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் பலர் நம்பிக்கை இழந்து வருகிறார்கள்.ஆகவே இனி வரும் காலத்தில் கம்யூனிஸ்டுகள் விமர்சனம் சுயவிமர்சனத்தை ஒரு சரியானவிஞ்ஞான வழியில் பின்பற்ற வேண்டும். மார்க்சிய லெனினியத்தை படிக்க வேண்டும்.

அதனை நடைமுறையில் பொருத்து வதற்கான பயிற்சியைப் நாம் பெற வேண்டும். வரலாற்றைபடிக்க வேண்டும். மக்களோடு நாம் ஒன்றுகலக்க வேண்டும். மக்களிடத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களைப் பற்றி நடைமுறையில் புரிந்துகொண்டு வர்க்க ஆய்வுகள் செய்ய வேண்டும்.

இந்த வகையில் கம்யூனிஸ்டுகளாகிய நமக்கு முன்பு பல வேலைகள் உள்ளது. ஒவ்வொருவேலையையும் செய்வதற்கு திறமையுள்ள,வர்க்க உணர்வோடு முன்வருகின்ற தோழர்களைஇனம் கண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையை பிரித்துக் கொடுத்து அவர்களின் மூலம் பெறப்படும் அறிக்கைகளை ஒரு தலைமை அமைப்பு தொகுத்துஇந்தியப் புரட்சிக்கான போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரத்தை உருவாக்க வேண்டும்.இத்தகைய போர்த்தந்திரம் செயல்தந்திரத்தை செயல்படும் கட்சி அமைப்பு விதிகளையும் உருவாக்கி அத்தகைய புரட்சிகரமான கட்சியை அதாவது ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சியை உருவாக்க வேண்டும்.

அத்தகைய கம்யூனிஸ்டுக் கட்சியின் வழிகாட்டுதலில் வர்க்க அமைப்புகளில் கம்யூனிஸ்டுகள் செயல்படுவதன் மூலம் இந்த வர்க்க அமைப்புகளை புரட்சியை நடத்தக்கூடிய வலிமையான அமைப்புகளாக மாற்ற வேண்டும். ஆகவே இறுதியாகச் சொல்வதானால் இன்றைய காலத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை எல்லாம் நமது மார்க்சிய ஆசான்கள் சந்தித்து அதற்கு தீர்வு கண்டு வெற்றி பெற்றுள்ளார்கள். ஆகவே நாம் சந்திக்கும் எந்தப் பிரச்சனை ஆனாலும்அதற்குரிய தீர்வுகளை காண்பதற்கு நாம் மார்க்சிய ஆசான்களிடம் சென்று அவர்கள் எப்படி அந்தப் பிரச்சனைகளைத் தீர்த்தார்களோ அதே வழிமுறையை அடிப்படையாகக் கொண்டுநாம் சந்திக்கும் பிரச்சனைக்கான குறிப்பான தீர்வுகளை கண்டுபிடித்து செயல்படுவதன் மூலம்நாம் வெற்றியை நோக்கி முன்னேற முடியும்.இதற்கு மாறாக மக்களின் எதிரிகள் சொல்வது போல மார்க்சியம் போதுமானது இல்லை என்ற பொய்களை நம்பி நாம் சோர்வடையத் தேவையில்லை.தொகுத்துச் சொன்னால் நாம் மார்க்சியத்தை மறந்தோம் நாம் தோல்வியடைந்தோம். மார்க்சியத்தை நம்புவோம், அதனை கற்றுத் தேர்வோம், நிச்சயமாக நாம் வெற்றிபெறுவோம்.

தேன்மொழி.

2 comments:

  1. இந்திய கம்யூனிஸ்டுகள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டு,அதேசமயம் இன்னொரு நாட்டை நகலெடுத்துச் செயல்பட முடியுமா! தற்போது ஏகாதிபத்தியம் புதிது புதிதாக மயங்களைத் திணித்தாலும் அது மேலும் மேலும் நெருக்கடிக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. மீளமுடியாமல் யுத்தங்களைத் தேடி அலைகிறது.
    அணிகளுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை ஊட்டி மக்களைப் புரிந்துகொண்டு மாற்றுக் கொள்கைகளுக்கான விடைதேடுவது இன்றைய தேவை.

    ReplyDelete
  2. கருத்துரைத்தமைக்கு நன்றி தோழர். மிகவும் சரியாக சொன்னீர்,நாம் நகலெடுக்க வேண்டாம் என்பதே எமது கருத்தும் தோழர். படிப்பினைகள் நம்மிடையே தேவை அதனை அணுக நமது ஆசான்கள் காட்டிய பாதையை நமது நாட்டின் இன்றை நிலகேற்ப பயன்படுத்தும் திறமை வேண்டும் அல்லவா தோழர் அதற்கு நாம் நமது முன்னோடிகளின் படிப்பினைகளை பெறதில் தவறில்லை எங்கிறோம் மாற்று கருத்திருந்தால் தெரிவியுங்கள் தோழர்

    ReplyDelete

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்