சோவியத் யூனியனின் உடைவுக்கான
விளக்கமும் குழப்பமும்- நூல் மீதான விமர்சனம் சிவ சேகரம்
(சோவியத் யூனியனின் உடைவு றெஜி ஸிரிவர்தன பதிப்பாசிரியர்கள் : எம்.ஏ. நுஃமான். உ.சேரன், இனத்துவ ஆய்வுக்கான சர்வதேச நிலையம், கொழும்பு, 1992 u. 210+10)
(Reggie Sriwardena) 1987-1992 எழுதிய பத்துக் கட்டுரைகளையும் புக்காரின் நினைவான நாடகமொன்றையும் திருமதி புக்காரினுடைய கடிதமொன்றையும் கொண்ட இத்தொகுப்பின் பதிப்பாசிரியர்களது முன்னுரையிலிருந்து எடுத்தாளப்பட்ட பின்வரும் வரிகள் நுாலின் பின் உறையில் அச்சாகியுள்ளன:
“ஆயினும் தமிழில் முதல்முறையாக, மார்க்சியம், சோசலிச வரலாறு, ஆயுதப் புரட்சி, அரசியல் அறம் என்பன பற்றிக் கட்சி அரசியலுக்கு அப்பாலான, ஆதாரபூர்வமான தரவுகளின் அடிப்படையில் ஒரு திறந்த விவாதத்தை இந்த நூல் தொடக்கி வைக்கிறது.
இக்கூற்று மெய்யானதல்ல. தமிழ்நாட்டில் 1980களிலிருந்தே இவ்விடயங்கள் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. அவை றெஜியின் கண்ணோட்டத்திலான வாதங்களை உள்ளடக்காது இருந்திருக்கலாம். அந்தளவிற் தவிர, இது நிச்சயமாக 'முதற் குரங்கு அல்ல.
முன்னுரையில் மேற்கூறிய வாக்கியத்தின் முன்னராக வரும் ஒரு வசனம் பதிப்பாசிரியர்களது நிலைப்பாடு பற்றிச் சில கேள்விகளை எழுப்புகிறது.
"அவரது முடிவுகள் சில துாய மாக்சியவாதிகளை அசெளகரியப்படுத்தக் கூடியவை எனினும் அம் முடிவுகளே முடிந்த முடிவுகள் என நாம் கொள்ள வேண்டியதில்லை'. இந்த வாக்கியத்தின்படி துாய மாக்சியவாதிகளை அசெளகரியப் படுத்துகின்ற முடிவுகளுக்கு ஏதோ சிறப்பான தகுதிகள் இருந்தும், பதிப்பாசிரியர்கள், றெஜியின் முடிவுகளைத் தீர்க்கமானவையாகக் கருத அவசியமில்லை என்கிறார்கள். இது ஒரு கவனப் பிசகான வாக்கியமாக இல்லாதவிடத்து இந்த துாய மாக்சியவாதிகள் யார், அவர்களது அசெளகரியம் எவ்வாறு ஒரு நல்ல விஷயமாகிறது என்பன பற்றிய விளக்கங்களுக்கான தேவை எழுகிறது.இன்றைய நிலவரம் புதிய கேள்விகளையும் புதிய விவாதங்களையும் எழுப்பியுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆயினும் அக்கேள்விகட்குப் பதில் தேடும் முனைப்பும் விவாதங்களின் அடிப்படையும் றெஜி காட்டும் திசையிற் தான் இருக்க அவசியமில்லை. றெஜி தரும் தகவல்களின் உண்மையும் முக்கியத்துவமும் பற்றி அவர் புறக்கணிக்கும் விடயங்களையும் கணிப்பிலெடுத்தே நம்மால் மதிப்பிடப்பட முடியும்.
1940களில் உலகில் இரண்டு நாடுகளிலேயே குறிப்பிடத்தக்க ட்ரொட்ஸ்கிய இயக்கங்கள் இருந்தன. ஒன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றது இலங்கை. றெஜியின் அரசியல் சார்பு இன்று எவ்வாறிருப்பினும், ட்ரொட்ஸ்கியத்துடன் அவருக்கு இருந்த நெருக்கம் கட்டுரைகளிலும் தென்படத்தவறவில்லை. ட்ரொட்ஸ்கியக் கருத்துக்கள் உள்ள காரணத்தால் மட்டுமே றெஜியை யாரும் ஆதரிக்கவோ நிராகரிக்கவோ அவசியமில்லை. ஆயினும் உலக அரசியலை அவர் அணுகும் முறையிலுள்ள சில அடிப்படையிலான கோளாறுகட்கான தோற்றுவாய் அங்கே தான் உள்ளது. ட்ரொட்ஸ்கியத்தை நிராகரிப்பதாக றெஜி பல இடங்களிலும் எழுதினாலும் அவரது அணுகுமுறையில் அதன் பாதிப்பு மிகுதியாக உள்ளது.
அவரது கண்ணோட்டத்தில் 1917ம் ஆண்டின் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் இரண்டு முக்கியமான திருப்புமுனைகள் இருந்தன. ஒன்று லெனினுடைய மரணத்தையொட்டி 1926-29 காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றம். (இது ஸ்டாலின் பதவியேற்ற காலம்). மற்றது கொர்பச்சொவ் அதிகாரத்திற்கு வந்த காலத்தை ஒட்டியது. எனவே 1929 முதல் 1986 வரை சோவியத் யூனியனுள் ஏற்பட்ட எந்த மாற்றமும் அடிப்படையில் முக்கியமானதல்ல. சர்வதேச கம்யூனிஸ இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு கூட இதனால் முக்கியத்துவமற்றுப் போய்விடுகிறது. றெஜியின் கட்டுரைகளில் சோவியத் யூனியனின் சர்வதேச அரசியல் நடத்தை கூட தன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது.
ஸ்டாலினிஸம் என்கிற சொற்றொடர் இன்று பலரும் தமது வசதிகட்கு ஏற்ற விதமாகப் பயன்படுத்தும் ஒன்று. றெஜி பயன்படுத்தும் விதம் ட்ரொட்ஸ்கியர்களை ஒத்திருப்பது அதிசயமில்லை. ட்ரொட்ஸ்கியையும் நிராகரித்து ஈற்றில் சோவியத் யூனியனுக்கு உகந்த மார்க்கம் புக்காரினால் முன்வைக்கப்பட்டதே என்று தனது ‘விருப்பு வெறுப்பற்ற சரித்திர ஆய்வின் முடிவை வந்தடைகிற றெஜிக்கு சோவியத் யூனியனின் பிரச்சனை லெனினிச அடிப்படையிலான மத்தியத்துவப்படுத்தப்பட்ட இறுக்கமான கட்சியமைப்பாகி விடுகிறது. சோவியத் யூனியனின் உடைவை அடுத்து லெனினும் நிராகரிக்கப்படுவதையிட்டு அவர் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறார். மார்க்ஸிய ஆட்சிகளின் கீழான அரசியல் ஒடுக்குதல், ஜனநாயகமின்மை என்பன பற்றி குற்றச்சாட்டுகள் எப்போதுமே இருந்து வந்துள்ளன. இவற்றில் ஒரு பகுதி அரசியல் சுதந்திரம், ஜனநாயகம் என்பன பற்றிய முதலாளித்துவப் பிரமைகளையும் பிரசாரத்தையும் சார்ந்தன. மறுபுறம், இந்த ஆட்சிகளின் குறைபாடுகளின் விளைவான குற்றங்களும் உள்ளன. ஸ்டாலின் காலத்தில் ஏற்பட்ட தவறுகள் பற்றிய விமர்சனங்கள் சோவியத் யூனியனின் உள்ளும் வெளியிலும் இருந்து சோவியத் யூனியன் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சனைகளைக் கணிப்பி லெடுக்கத் தவறிவிடுகின்றன. மாஓ சேதுங் தலைமையின் கீழ் சீனா தன்னை உலகின் பிற பகுதிகளினின்றும் தனிமைப்படுத்திக் கொண்டது என்ற விதமான வாதங்கள் சீனாவுக்கும் உலக வல்லரசுகளுக்கு மிடையில் இருந்த உறவை எவ்வாறு திரித்தனவோ அவ்வாறே சோவியத் யூனியனில் குருசேவுக்கு முந்திய காலத்தில் நடந்த விடயங்களில் சோவியத் யூனியனை நசுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சோவியத் நடத்தையை எவ்வாறு பாதித்தன என்பதை ஒரு வகையான வரலாற்று மறதிக்கு இரையாக்கிவிட்டு விமரிசிப்பது வழமையாகிவிட்டது.
ஸ்டாலினின் தவறுகளைச் சீனாவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிந்தளவுக்கு உலகின் வேறெந்த நாடும் விடுதலை இயக்கமும் அறிந்திருக்க நியாயமில்லை. ஆயினும் ஸ்டாலினின் வரலாற்றுப் பங்கின் சர்வதேச முக்கியத்துவத்தை மாவோ சரியாகவே மதிப்பிட்டு 70 பங்கு சரி 30 பங்கு தவறு என்று ஸ்டாலினிற்குச் சாதகமாகவே தீர்ப்பளித்தார். சோவியத் யூனியனில் ஸ்டாலினின் நிராகரிப்பு எத்திசையிற் போகும் என்பது பற்றி அன்று மார்க்சிய-லெனினிய புரட்சிவாதிகள் தெரிவித்த அச்சங்கள் இன்று மெய்யாகிவிட்டன. கொர்பச்சொவின் எழுச்சியால் மிகுந்த நம்பிக்கை பெற்றவர்களுள் றெஜி ஒருவர். இது அவர் 1987ல் எழுதியது: “குருஷ்சேவை விட தான் திறமை மிக்க அரசியல்வாதி என்பதை கொர்பச்சேவ் இன்று நிரூபித்துள்ளார். குருஷ்சேவை தனது சீர்திருத்தங்களை மேலிருந்து கீழ் நோக்கிச் செயற்படுத்தினார். ஆனால் கொர்பச்சேவ் தனது சீர்திருத்தங்களுக்குப் பொதுமக்களின் ஆதரவை, கீழ்மட்டப் பலத்தைக் கட்டி எழுப்பி வருகின்றார். கொர்பச்சேவ் உட்கட்சிச் சதியொன்றின் மூலம் துாக்கியெறியப் பட்டாலும் கூட . அவரது மாற்றங்களின் பொதுப் போக்கைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் “கிளாஸ்நொஸ்தும்” பெரஸ்ரொய்க்காவும் முற்றிலும் ஒரு தனிமனிதனால் உருவாக்கப்பட்டவையல்ல" (ப. 21). இந்த அரசியல் ஆருடம் பற்றி நான் அதிகம் சொல்ல அவசியமில்லை.
கொர்பச்சொவின் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆரரயும் போது தான் றெஜியின் தடுமாற்றம் அதிகமாகிறது. 1987ம் ஆண்டு எழுதிய கட்டுரையில் இருந்த எதிர்பர்ர்ப்புக்கள் 1992ம் ஆண்டு எழுதியதில் நிராசையாகிவிட்டன. “கொர்பச்சொவ் ஏகாதிபத்தியத்தின் கையாளாக இருந்ததினாலேயே (கொர்பச்சொவின் ) இச் சரிவு நிகழ்ந்தது எனக் கூறும் வைதிக மாக்சியவாதிகள் பலர் இருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. (ப.128). இங்கு கொர்பச்சொவ் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்வதில் குருசேவை விடவும் வெகுதுாரம்
சென்றார் என்ற விடயம் பற்றி றெஜியின் மதிப்பீட்டை நம்மால் எங்கும் காண முடியாது. அது அவரது சரிவுக்கு ஒரு பங்களிப்பைச் செய்தது. சோவியத் ராணுவ சக்திகளிடையே அவருக்கு அது பகைமையை ஏற்படுத்தியது. இப்பகைமை முற்போக்கான, மூன்றாமுலகச் சார்பான ஏகாதிபத்திய எதிர்ப்பு நலன் சார்ந்து எழவில்லை. அதற்கான வாய்ப்பு குருஷ்ச்சொவ் யுகத்திலேயே கரையத் தொடங்கிவிட்டது.
“மலென்கொவும் குருஷேவும் அவமரியாதைக் குரிய முறையில் அனாமதேயங்களானார்கள். கொர்பச்சோவுக்கு இந்த விதியின் அவலங்கள் ஏதும் நிகழவில்லை" (ப.129). கொர்பச்சொவ் 1991ல் பதவி இறக்கப்பட்டபின் அடுத்தடுத்து எத்தனை முறை யெல்ட்ஸனால் அவமதிக்கப்பட்டார் என்பதையும் எவ்வாறு 1993ல் பூரண அனாமதேயரானாரென்பதையும், அதேவேளை, தவறான காரணங்கட் களாகவேனும், யெல்ட்ஸின் ஆட்சிக்கு எதிரான அணியில் ஸ்டாலின் முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் எழுச்சிக்கு எதிரான ஒரு சின்னமாகவேனும் எழுச்சி பெறுவாரெனவும் றெஜியாற் கற்பனை செய்யவும் இயலவில்லை. ஏகாதிபத்தியத்தைத் திருப்தி செய்து சோவியத் யூனியனையும் தமது அதிகாரத்தையும் காப்பாற்ற முற்பட்டவர் கொர்பச்சொவ். மேற்கு நாடுகளின் தேவை, கொர்பச்சொவ் பதவியிற் தொடர்வதல்ல. நாளை யெல்ட்ஸனை உதறித் தள்ளவும் அவர்கள் தயங்கமாட்டார்கள்.
கொர்பச்சொவ் மக்களால் நேரடியாகத் தெரியப்படும் வாய்ப்பைப் புறக்கணித்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தையும் அதற்கென ஒதுக்கப்பட்ட ஆசனங்களையுங் கொண்ட ஆட்சி மன்றத்தாற் தெரிவு செய்யப்படுவதை விரும்பியதற்கு றெஜியின் விளக்கம், "அடிப்படையில் அவர் ஒரு கட்சிக்காரன் என்பதே இதற்குக் காரணமாகும்”. (ப. 132) கொர்பச்சொவ் தனது வெற்றி வாய்ப்புக்கள் பற்றிய அச்சம் காரணமாக அல்லது தான் விரும்பும் அளவிலான பெரும்பான்மை பலம் கிடைக்குமோ என்ற நிச்சயமின்மை காரணமாகத் தயங்கியிருக்கக் கூடுமென்ற சாத்தியப்பாடு கூட றெஜிக்குத் தோன்ற வில்லை. கொர்பச்சொவின் செல்வாக்குச் சரிவுற்றதைக் கண்டே சதிப்புரட்சியில் இறங்கியவர்கட்குத் தைரியம் வந்தது என்ற விடயமும் அவரது கவனத்திற் படவில்லை.
“மார்க்ஸியத்துடன் சேர்ந்து வளர்ந்துவிட்ட காட்டுமிராண்டித்தனமான அம்சங்கள் நீக்கப்பட்ட புனித மார்க்ஸியம் நிச்சயம் மேற்குலக நாடுகளில் ஒரு வித்தியாசமான வரவேற்பைப் பெறும். மனிதரின் தலைவிதி பற்றிய தன் சொந்தப் படைப்பையும் பார்வையையும் அந்த மார்க்ஸியத்தில் அது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அத்தோடு வரலாறு ஒரு முழுச்சுற்றுவட்டத்தில் வந்து விடும்” என்ற ஐஸக் டொய்ட்ஷரின் கற்பனாவாதத்துடன் (ப. 109) றெஜி நேரடியாக உடன்படாவிட்டாலும் அவரது பார்வையில் மார்க்ஸியத்திற்குச் செழுமையூட்டிய மாஓவின் பங்களிப்புக்கு அதிக முக்கியத்துவம் இல்லாமையும் குருசேவுக்குப் பிந்திய ரஸ்யாவில் கொர்பச்சொவ் வழியாக ஒரு சிறப்பான மார்க்ஸிய சோஸலிச அமைப்பை எதிர்பார்த்து ஏமாந்து போனதைச் சீரணிக்க முடியாமையும் அவரது மேற்கு நோக்கிய கற்பனாவாதத்தின் இரு கூறுகளே.
ஸ்டாலின், ஹிட்லர், பொல்பொட், விஜேவீர எல்லேரையும் அருகருகாக அடுக்க ட்ரொஸ்கிவாதிகளே கூசுவார்கள். றெஜிக்கு இது சாத்தியமாகிறது. தவறுகளின் தோற்று வாய்களை அவர் அடையாளங் காணும் விதம், வன்முறையும் மத்தியப் படுத்தப்பட்ட கட்சித் தலைமையும் அற்ற ஒரு சமுதாய மாற்றத்திற்கான அவரது விருப்புடன் தொடர்புடையது. சிலி, நிக்கராகுவா போன்ற நாடுகளின் பாடங்கள் றெஜிக்கு நினைவில்லாவிட்டாலும் ஏகாதிபத்தியம் தொடர்ந்தும் நமக்கு நினைவூட்டத் தவறாது.
தேசியவாதம் பற்றிய மார்க்ஸியக் கண்ணோட்டத்திற்கு ஒரு வரலாற்று விருத்தி உண்டு. ரஷ்ய அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே அதை மதிப்பிடும் போதும் ஏதோ வகையான "துாய மார்க்ஸியத்தின் பேரில் விளக்கங்களை முன்வைக்கும் போதும் மார்க்ஸியத்தின் நடைமுறை சார்ந்த தன்மையை எவரும் எளிதாகவே மறந்துவிடலாம். மார்க்ஸியம் என்பது மார்க்ஸ் என்ன சொன்னார் என்பதையும் மார்க்ஸ் என்ன நினைத்தார் என்பதையும் பற்றியதல்ல. அது ஒரு விஞ்ஞான ரீதியான ஆய்வுமுறை மட்டுமன்றி, அதற்குச் சமுதாயச் சார்பான ஒரு நடைமுறை உண்டு என்பதையும் அது தொடர்ந்தும் வளர்ச்சி பெற்றுச் செல்ல வேண்டும் என்பதையும் மார்க்ஸியவாதிகள் மறந்துவிட முடியாது. பாரிய, உலகு தழுவிய ஒரு போராட்டத்தில் சமுதாயத்திற்கான சக்திகளது முன்னேற்றம் ஒருசீரானது அல்ல. எழுச்சிகளைத் தொடர்ந்து வீழ்ச்சிகள் நேரும். வெற்றிகளில் தோல்விகளின் இடையீடிருக்கும். வரலாற்றின் பொதுவான போக்கே முக்கியமானது. இன்றைய உலகின் பிரதானமான போராட்டக்களம் எது, மற்ற முரண்பாடுகளை கையாள்வது எவ்வாறு என்பன போன்ற கேள்விகள் அன்று போல் இன்றும் திரும்பத்திரும்பக் கேட்கப்பட்டுப் பதில் தேடப்படவேண்டும்.
சோவியத் யூனியனைப் பார்த்துப் பிரதி செய்யக் கூடியதல்ல பாட்டாளிவர்க்கப் புரட்சி என்பதை றெஜி சுட்டிக்காட்டு முன்னமே, சீனா அதை நடைமுறையிற் காட்டிவிட்டது. சீனாவைப் பார்த்துப் பிரதி செய்ய முயன்றோரும் தோல்விகளைச் சந்தித்தனர். வரலாற்றின் பாடங்கள் கடினமானவை. முடிந்து போனவற்றை விரிவாக விளக்க ஆயிரம் பாடநூல்கள் உண்டு. முன்னோக்கிய பாதையைக் காட்ட அவ்வாறு எதுவுமில்லை.
பதிப்பாசிரியர்கள் கூற முனைகிற திறந்த விவாதம் தமிழில் நடக்கிறதன் மூலம் புக்காரின் பற்றியும் சோவியத் யூனியனில் என்ன நடந்தது என்பது பற்றியும் புதிய தகவல்கள் கிடைக்குமாயின் அது நல்லதே. ஆயினும் அதைவிடமுக்கியமான விவாதங்கள் சில நடக்கின்றன. இன்னும் நடக்கவேண்டியனவும் பல உள்ளன.
மொழிபெயர்ப்புத் தொடர்பாகச் சில சொற்கள் கூறவேண்டும். மிகவும் சிரத்தையுடன் செய்யப்பட்டுள்ள போதும் தமிழிற் கலைச் சொற்களின் தட்டுப்பாடு காரணமாகவும் அவை தொடர்பான குழப்பங் காரணமாகவும் சொற்தெரிவில் இடையிடையே குறைபாடுகள் உள்ளன. அயற் பேர்களைத் தமிழ்ப்படுத்தும் போது, பரிச்சயமான சொற்களில் உள்ள வேறுபாடுகள் அதிகம் சிரமமளிக்காவிடினும் தமிழருக்குப் பரிச்சயமற்ற சொற்கள் பிரச்சனை தருவன. இவற்றுக்கான தமிழ்-ஆங்கில அருஞ்சொல் அகராதியொன்று பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கலாம். அல்லது அச் சொற்கள் முதல்முதலாகப் பயன்படும் இடத்தில் அயல்மொழி மூலச்சொல் அடைப்புகட்குள் தரப்பட்டிருக் கலாம். ஆங்கில வாக்கியங்களை அப்படியே தமிழ்ப்படுத்தும் போதும் நேரடியாக மொழிபெயர்க்கத் தகாத சொற்றொடர்களைத் தமிழ்ப்படுத்தும் போதும் கருத்துத் தெளிவீனம் ஏற்படுகிறது. இவற்றை வரிசைப்படுத்த இங்கு இடம் போதாது. பொதுவாக, இத்தகைய தமிழாக்கங்களை, ஆங்கிலத்திற் புலமை குறைந்தவர்களை மனதிற் கொண்டு செய்வது நல்லது. எவ்வாறாயினும் தமிழ்நாட்டிலிருந்து வரும் பல வேறு இஸங்கள் பற்றிய நூல்களுடன் ஒப்பிடுகையில் இத் தமிழாக்கக் கட்டுரைகள் எவ்வளவோ கவனமாக அமைந்துள்ளன.
இந்த நூலுக்கான விமர்சனம் மேலே கண்டோம். இதில் சில எழுத்தை தவிர நான் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
No comments:
Post a Comment