நாட்டுப்புற ஏழை மக்களுக்கு பாகம் – 2. லெனின்.முதல் பாகத்தின் தொடர்ச்சி.
ரஷ்யாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லை.அது பணக்காரர்களாலும் உயர்குடிபிறந்தோர்களாலும் ஆளப்படுகிறது என்பது மட்டுமல்ல,அவர்களுள் மிகவும் கீழ்த்தரமானவர்களால் ஆளப்படுகின்றது. ஜாரின் தர்பாரிலுள்ள மிகவும் சூழ்ச்சித் திறன் வாய்ந்த சதிகாரர்களால்,மிகவும் சாமர்த்தியமாக ஏமாற்றுபவர்களால், பொய்யையும் அவதூறையும் ஜாரிடம் பரப்புபவர்களால், ஜாரை முகஸ்துதி செய்து இச்சகம் பேசுபவர்களால் ரஷ்ய நாடு ஆளப்படுகிறது.அவர்கள் நாட்டை இரகசியமாக ஆள்கிறார்கள்; என்னென்ன புதிய சட்டங்கள் தயாராகி வருகின்றன, எந்தப் போருக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன, என்ன புதிய வரிகள் வரப்போகின்றன, எவ்வித சேவைகளுக் காக எந்தெந்த அதிகாரிகளுக்குப் பரிசு வழங்கப்படுகிறது, எந்த அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர் ஆகியவை மக்களுக்குத் தெரியாது; மக்களால் தெரிந்துகொள்ளவும் முடியாது. (குறிப்பு – 1905 ஆம் ஆண்டு பதிப்பில் ‘’முடியாது’’ என்ற சொல்லுக்குப் பிறகு பின்வரும் வாசகம் சேர்க்கப்பட்டது; ‘’ஜப்பானுடன் போர்ப் பிரகடனம் செய்தது யார்அரசாங்கம் மஞ்சூரிய நிலத்திற்காக யுத்தம் செய்ய மக்கள் விரும்புகிறார்களா என்று அவர்களிடம் கேட்க்கப்பட்டதா? இல்லை, கேட்க்கப்படவில்லை. ஏனெனில் அரசுத் தலைவர் அதிகாரிகள் வாயிலாகவே மக்களை ஆள்கிறார். ஆக, அரசாங்கத்தின் குற்றத்தினால் மக்கள் கொடிய யுத்தத்தால் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டனர். லட்சக்கணக்கான இளம் படை வீர்ர்கள் கொல்லப்பட்டனர், அவர்களுடைய குடும்பங்கள் பாழாயின, ரஷ்யக் கப்பல் படை முழுவதும் நாசமாகிவிட்டது, ரஷ்யப் படைகள் மஞ்சூரியாவிலிருந்து விரட்டப்பட்டன;யுத்தம் முழுவதிலும் இரு நூறு கோடி ரூபிள்கள் செலவிடப்பட்டன(இருநூறு கோடி ரூபிள்கள் என்றால் ரஷ்யாவிலுள்ள இரண்டு கோடிக் குடும்பங்கள் மீது தலைக்கு நூறு ரூபிள்கள் ஆகின்றன) மஞ்சூரிய நிலம் மக்களுக்கு வேண்டாம். மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை.அதிகார வர்க்கத்தினரின் அரசாங்கமோ தன் இஷ்டப்படி மக்களை ஆண்டு,வெட்க்கக்கேடான, நாசகரமான,பாழ்படுத்துகிற இந்த யுத்தத்தை நடத்தும் படி அவர்களை நிர்பந்தித்தது.)வேறு எந்த நாட்டிலும்,ரஷ்யாவில் இருப்பது போல இவ்வளவு பெரிய எண்ணிக் கையில் அதிகாரிகளின் கூட்டம் கிடையவே கிடையாது. ஊமையராய் உள்ள மக்களை, பெரிய அடர்ந்த காட்டினைப் போல, அதிகாரிகள் சூழ்ந்துள்ளனர். இக்காட்டின் வழியாகச் சாதாரண தொழிலாளி ஒருபோதும் கடந்து செல்ல முடியாது; ஒருபோதும் நியாயம் பெறவே முடியாது; அதிகாரிகளின் லஞ்சம், கொள்ளை, அதிகாரதுஷ்பிரயோகம் ஆகியவற்றைப் பற்றிய ஒரு சிறு குற்றச்சாட்டு கூட வெளிவருவதில்லை. ஒவ்வொரு குற்றச்சாட்டும் அரசாங்க அலுவலகச் சிவப்பு நாடா கடுமையால் அமிழ்த்தி மூடப்படுகிறது. தனி மனிதனின் குரல் மக்கள் அனைவரிடமும் என்றும் போய்ச் சேருவதில்லை; இந்த இருண்ட காட்டினுள் அது அமிழ்ந்து போய் விடுகிறது, போலீஸ் சித்திரவதை அறையில் திணரடிக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாது, மக்களிடத்துப் பொறுப்பு ஏற்காத அதிகாரிகளின் பட்டாளம் அடர்த்தியான வலையைப் பின்னியுள்ளது; இந்த வலைக்குள் மக்கள் ஈக்களைப் போல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். (குறிப்பு – 1905 ஆம் ஆண்டு பதிப்பில் இந்த சொற்களுக்குப் பிறகு பின்வரும் குறிப்பு உள்ளது. ‘’அதிகார வர்க்கத்தினரின் இத்தகைய முழு ஆட்சி பியூரோகராட்டிக் ஆட்சி எனவும் அதிகார வர்க்கம் அனைத்தும் பியூரோக்ரஸி எனப்படும்)ஜாரின் எதேச்சிகாரம் என்பது அதிகார வர்க்கத்தினரின் எதேச்சிகாரம் ஆகும். ஜாரின்எதேச்சிகாரம் என்னவென்றால், அதிகாரவர்க்கத்தை, குறிப்பாக போலீஸாரை மக்கள் பண்ணையடிமை முறையில் சார்ந்திருத்தலாகும். ஜாரின் எதேச்சிகாரம் போலீஸ் எதேச்சிகாரம் ஆகும்.
ஆகவேதான், ‘’எதேச்சிகாரம் ஒழிக!’’ ‘’அரசியல் சுதந்திரம் நீடுழி வாழ்க!’’ என்ற கோஷங்கள் பொறித்த பதாகைகளைத் தாங்கிக் கொண்டு தொழிலாளிகள் தெருக்களில் ஊர்வலமாக வருகின்றனர்.எனவேதான்,நகரத் தொழிலாளர்களின் இந்தப் போராட்ட கோஷங்களுக்குக் கோடிக் கணக்கான நாட்டுப்புற ஏழை மக்கள் ஆதரவு தருவதோடு இவற்றைத் தங்கள்
போராட்ட கோஷங்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.அவர்களைப் போலவே கொடுமைப்படுத்தல்களால் உறுதிதளராமல்,பகைவனுடைய எந்த பயமுறுத்ததலுக்கும் பலாத்காரத்துக்கும் அஞ்சாமல்,ஆரம்பத் தோல்விகளால் தடைப்படாமல் விவசாயத் தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் ரஷ்ய மக்கள் அனைவரின் விடுதலைக்காகவும் நடத்தப்படும் தீர்மானமான இந்தப் போராட்டத்தில் பங்கு கொள்ள முன்வர வேண்டும்;முதன்முதலாக மக்கள் பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டும்படி கோர வேண்டும்.ரஷ்யா முழுவதிலும் மக்களே தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கட்டும்,அந்தப் பிரதிநிதிகள் உயர் பேரவையாகக் கூட்டட்டும்;அந்தச் சபை தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை ரஷ்யாவில் அமைக்கட்டும்,அதிகார வர்க்கத்தினரையும் போலீஸாரையும் பண்ணையடிமை முறையில் சார்ந்திருப்பதிலிருந்து மக்களை விடுதலை செய்யட்டும், தங்கள் விருப்பம்போல் கூட்டம் கூடும் உரிமையையும் பேச்சு உரிமையும் பத்திரிக்கை நடத்தும் உரிமையையும் மக்கள் பெறவழி செய்யட்டும்!
முதலும் முக்கியமானதுமாக அதைத்தான் சமூக– ஜனநாயகவாதிகள் விரும்புகிறார்கள். அவர்களுடைய முதல் கோரிக்கையின்,அதாவது அரசியல் சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையின் பொருள் அதுவேயாகும். (குறிப்பு – 1905ஆம் ஆண்டுப் பதிப்பில் இந்தவாக்கியத்தை அடுத்துப் பின்வரும் வாசகம் சேர்க்கப்பட்டது; ‘’மக்கள் பிரதிநிதிகளை அரசாங்க டூமாவில் கூட்டுவதாகச் சர்க்கார் வாக்குறுதி அளித்தது. ஆனால் இந்த வாக்குறுதியால்அரசாங்கம் மக்களை மறுபடி ஏமாற்றிவிட்டது. அரசாங்க டூமா என்ற பெயரால் அது மக்களின் உண்மையானபிரதிநிதிகளை அல்ல, பொறுக்கி எடுக்கப்பட்ட அதிகாரவர்க்கத்தினரையும்பிரபுவம்சத்தினரையும் நிலப்பிரபுக்களையும்வணிகர்களையுமே கூட்ட விரும்புகிறது.மக்கள் பிரதிநிதிகளை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கமோ சுதந்திரமான தேர்தல்களை அனுமதிப் பதில்லை. தொழிலாளர் செய்தித்தாளை மூடுகிறது,மகாநாடுகளுக்கும் கூட்டங்களுக்கும் தடை விதிக்கிறது. விவசாயிகள் சங்கத்தைத் தொல்லைப் படுத்துகிறது, விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது. போலீசாரும் ஸெம்ஸ்துவோ தலைவர்களும் தொழிலாளர் களையும் விவசாயிகளையும் முன்போலவே எள்ளிநகையாடுகிறார்கள் என்றால் உண்மையான சுதந்திரமான தேர்தல்கள் நடக்க முடியுமா?
பிரபுவம்சத்தினரும் நிலப்பிரபுக்களும் வணிகர்களும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் விட எண்ணிக்கையில் அதிகமாயில்லாதிருக்கும் பொருட்டு மக்கள் பிரதிநிதிகள் எல்லா மக்களிடையே இருந்தும் சம விகித்த்தில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிரபுவம்சத்தினரும் வணிகர்களும் ஆயிரக்கணக்கானவர்கள்,விவசாயிகளோ கோடிக்கணக்கானவர்கள்,ஆயினும் அரசாங்க டூமா என்ற பெயரால் சமமான தேர்தல்கள் இல்லாத கூட்டத்தை சர்க்கார் கூட்டுகிறது.அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் சூழ்ச்சிகரமான தேர்தல்கள் காரணமாக டூமாவில் அனேகமாக எல்லா இடங்களும் பிரபுவம்சத்தினருக்கும் வணிகர்களுக்கும் கிடைத்துவிடும்; தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்குமோ, பத்தில் ஒரு பிரதி ஸ்தானம் கூடக் கிடைக்காது.
இது பித்தலாட்ட டூமா. இது போலீஸ் டூமா. இது அதிகாரவர்க்கத்தின், சீமான்களின் டூமா.
மக்கள் பிரதிநிதிகளின் உண்மையான சபைக்கும் முழுமையான தேர்தல் சுதந்திரம் வேண்டும், எல்லா மக்களிடையே இருந்தும் சமமான அரசியல் சுதந்திரம்,அரசாங்க டூமாவுக்கு (நாடாளுமன்றத்துக்கு)தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்,கூட்டங் கூடும் சுதந்திரம், பத்திரிக்கைச் சுதந்திரம் ஆகியவை,வறுமையிலிருந்தும் ஒடுக்குதல் களிலிருந்தும் உழைப்பாளிகளை உடனே விடுவிக்காது என்பது நமக்குத் தெரியும்.பணக்காரர்களுக்காகப் பாடுபட்டு உழைக்கும் சுமையிலிருந்து நகர ஏழை மக்களையும் நாட்டுப்புற ஏழைகளையும் உடனே விடுவிக்க உடனடியான சாதனம் இல்லை. உழைப்பாளி மக்கள் தங்களைத் தவிர வேறு யாரையும் எதிர்பார்த்து யாரிடத்திலும் நம்பிக்கை வைக்கவும் முடியாது.உழைப்பாளி வறுமைப் பிடியிலிருந்து தானே தன்னை விடுவித்துக் கொள்ளாவிடில் வேறு யாரும் அவனை விடுவிக்க மாட்டார்கள். தங்களை விடுவித்துக்கொள்வதற்காக நாடு முழுவதிலும், ரஷ்யா முழுவதிலுமுள்ள தொழிலாளிகள் ஒரே சங்கத்தில், ஒரே கட்சியில் ஒன்றுபட வேண்டும்.ஆனால் எதேச்சிகாரப் போலீஸ் அரசாங்கம் எல்லாக் கூட்டங்களையும், எல்லாத் தொழிலாளிச் செய்தித்தாள்களையும், தொழிலாளி பிரதிநிதிகளின் எல்லாத் தேர்தல்களையும் தடை செய்யுமானால், கோடிக்கணக்கான தொழிலாளிகள் ஒன்றுசேர முடியாது. அப்படி ஒன்றுபட வேண்டுமானால், எல்லாவகையான சங்கங்கள் அமைப்பதற் கும் அவர்களுக்கு உரிமை வேண்டும். ஐக்கியப்படுவதற்குச் சுதந்திரம் வேண்டும், அவர்கள் அரசியல் சுதந்திரம்பெற்றிருக்க வேண்டும்.
அரசியல் சுதந்திரம் உழைப்பாளி மக்களை உடனேயே வறுமைப் பிடியிலிருந்து விடுவிக்காது.
ஆனால் அது வறுமையோடு போராடுவதற்குத் தொழிலாளிக்கு ஓர் ஆயுதத்தைத் தரும். தவிர வேறு வழியில்லை. வேறு வழி இருக்கவும் முடியாது.அரசியல் சுதந்திரம் இல்லாவிட்டால், கோடிக்கணக்கான மக்கள் ஒன்றுசேர்வதற்கு வாய்ப்பில்லை.
அரசியல் சுதந்திரத்தை மக்கள் போராடிப் பெற்ற ஐரோப்பிய நாடுகளிலெல்லாம், நீண்டகாலத்திற்கு முன்பே தொழிலாளிகள் ஒன்றுசேரத் தொடங்கி விட்டனர். நிலத்தையும் தொழிற் கூடங்களையும் சொந்தமாக வைத்திருக்காத தொழிலாளிகள், தங்கள் வாழ்நாள் முழுவதும் கூலிக்காகப் பிறருக்கு வேலை செய்யும் தொழிலாளிகள் பாட்டாளிகள் என்று ஐரோப்பா முழுவதும் அழைக்கப் படுகிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், உழைப்பாளி மக்களை ஒன்றுசேரும்படி ஓர் அழைப்பு ஒலித்தது, ‘’உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்!’’என்ற வார்த்தைகள் கடந்த ஐம்பதாண்டு காலத்தில் உலகம் முழுவதும் மீண்டும் மீண்டும் ஒலித்து எங்கும் வியாபித்தன. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான தொழிலாளர் கூட்டங்களில் திரும்பத் திரும்ப அவை ஒலிக்கின்றன. பல்வேறு மொழிகளில் லட்சக்கடக்கான சமூக–ஜனநாயகப் புத்தகங்களிலும் பத்திரிக்கை களிலும் நீங்கள் அவற்றைப் படிக்கலாம்.
லட்சோபலட்சம் தொழிலாளிகளை ஒரு சங்கமாக,ஒரு கட்சியாக இணைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு கடமை;அவ்வாறு செய்வதற்கு அவகாசமும் காரியத்தில் விடாப்பிடியும் விடாமுயற்சியும் அஞ்சாமை யும் தேவை என்பது இயல்பே. இன்மையாலும் வறுமையாலும் தொழிலாளிகள் வருத்தி நசுக்கப்பட்டு இருக்கிறார்கள்; முதலாளிகளுக் கும் நிலப்பிரபுக்களுக்கும் ஓயாது பாடுபட்டு உழைத்ததால் தொழிலாளர்கள் உணர்ச்சி மங்கியிருக்கிறார்கள்.நிரந்தர ஓட்டாண்டி களாக ஏன் இருக்கிறோம் என்பது பற்றியும் இதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றியும் எண்ணிப் பார்க்கக் கூடப் பெரும்பாலும் அவர்களுக்கு அவகாசம் இருப்பதில்லை.தொழிலாளிகள் ஒன்று சேர்வதைத் தடுக்க எல்லாம் செய்யப்படுகிறது. அரசியல் சுதந்திரம் இல்லாத ரஷ்யா போன்ற நாடுகளில் நேரான, மிருகத்தனமான பலாத்காரம் பிரயோகிக்கப்படுகிறது;மற்ற இடங்களில் சோசலிசப் போதனையைப் பரப்பும் தொழிலாளிகளுக்கு வேலை தர மறுக்கப்படுகிறது; இறுதியாக, ஏமாற்றலும் கைக்கூலி கொடுத்தலும் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனாலும், வறுமையிலிருந்து ஒடுக்குமுறையிலிருந்தும் உழைப்பாளி மக்கள் அனைவரையும் விடுவிக்கும் மாபெரும் இலட்சியத்திற்காகப் போராடும் தொழிலாளர் – பாட்டாளிகளை எந்தவித கொடுமைப் படுத்தல்களாலும் பலாத்காரத் தாலும் தடுத்து நிறுத்த முடியாது. சமூக ஜனநாயக வாதிகளான தொழிலாளிகளின் எண்ணிக்கை இடைவிடாது பெருகி வருகிறது.
உதாரணமாக, நம் அண்டை நாடான ஜெர்மனியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் உள்ளது. முன்பு ஜெர்மனியிலும் வரம்பில்லா எதேச்சிகார மன்னர் ஆட்சி இருந்தது. ஆனால் நீண்ட காலத்துக்கு முன்னரே,ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனிய மக்கள் எதேச்சிகாரத்தை ஒழித்துவிட்டு தங்கள் அரசியல் சுதந்திரத்தை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டனர்.
ரஷ்யாவில் உள்ளதைப் போல,விரல்விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரிகளால் ஜெர்மனியில் சட்டங்கள் இயற்றப் படவில்லை,மக்கள் பிரதிநிதிகள் மன்றத்தால்,நாடாளுமன்றத்தால் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. அதை ரைஹ்ஸ்டாக் என ஜெர்மனியர்கள் அழைக்கின்றனர்.
இம்மன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் வயது வந்த ஆண்கள் அனைவரும் பங்குகொள்கின்றனர். இதனால்,சமூக ஜனநாயகவாதிகளுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன என்பதைக் கணக்கிட வழி ஏற்படுகிறது.1887இல் சமூக ஜனநாயகவாதிகளுக்கு,மொத்த வாக்கு களில் பத்தில் ஒரு பகுதி கிடைத்தது. 1898 இல் (ரைஹ்ஸ்டாக்கிற்குக் கடைசித் தடவை தேர்தல் நடந்தபோது) சமூக –ஜனநாயக வாதிகளுக்குக் கிடைத்த வாக்குகள் ஏறக்குறைய மும்மடங்காக உயர்ந்தன. இம்முறை மொத்த வாக்குகளில் நான்கில் ஒரு பகுதிக்கு மேலாக சமூக –ஜனநாயக வாதிகளுக்குக் கிடைத்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு நின்ற சமூக – ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு வயது வந்த இருபது லட்சத்துக்கும் அதிகமான ஆண்கள் ஓட்டளித்தனர். ஜெர்மனியில் விவசாயத் தொழிலாளர்களிடையே சோசலிசம் இன்னும் விரிவாகப் பரவவில்லை, ஆனால் இப்போது அவர்களிடையே அது மிக விரைவாக முன்னேறி வருகிறது. பொருந்திரளான பண்ணை ஆட்களும் நாட்கூலிகளும் பஞ்சைகள் ஆகிவிட்ட ஏழை விவசாயிகளும் நகரத்தில் உள்ள தங்கள் சகோதரர்களுடன் ஒன்றுசேரும் போது, ஜெர்மானியத் தொழிலாளர்கள் வெற்றி பெற்று, வறுமையிலும் ஒடுக்கு முறையிலும் உழைப்பாளி மக்கள் அவதியுறாத ஓர் அமைப்பை நிலைநாட்டுவார்கள்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.
ரஷ்யாவில் லெனின்இந்தநூலைஎழுதும்போதுதேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற ஆட்சி இல்லை.
பணக்காரர்களாலும் உயர்குடி பிறந்தோர் களாலும் ரஷ்ய மக்கள் ஆளப்பட்டார்கள். இந்தப் பணக்காரர்களும் உயர்குடி பிறந்தோரும் நேர்மையற்ற சூழ்ச்சித்திறன் மிக்க மக்கள் விரோதிகளாகவே இருந்தனர்.ஆனால் இந்தியாவில் மக்களை ஆள்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களால் மட்டுமல்லாது ரஷ்ய ஜாரின் ஆட்சியைப் போலவே போலீஸ்,இராணுவம், அரசு அதிகாரிகளாலும் இந்திய மக்கள் ஆளப்படுகிறார்கள்.
ரஷ்யாவில் ஆட்சியிலிருந்த பணக்காரர் களும் அரசு அதிகாரிகளும் மக்களை ஏமாற்றி பொய்யும் புரட்டும் செய்தே ஆட்சி நடத்தினார்கள்.அதே போலவே இந்தியாவிலும் மக்களால் தேர்ந்தெடுக் கப்படும் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசு அதிகாரிகளும் மக்களுக்கு எதிராகவே பொய்யும் புரட்டும் செய்தே இங்கே ஆட்சி நடத்துகிறார்கள். ரஷ்யாவில் நடந்த ஜார் ஆட்சிக்கும் இந்திய பாராளுமன்ற ஆட்சிக்கும் அடிப்படையில் எவ்விதமான வேறுபாடும் அடிப்படையில் இல்லை. ஒரே ஒரு வேறுபாடு மட்டுமே உள்ளது. ரஷ்ய ஜார் ஆட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை, ஆனால் இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற மற்றும் பாராளுமன்றஉறுப்பினர்கள் மக்களுக்கான சட்டத்தை உருவாக்குகிறார்களாஎன்றால் இல்லை என்பதே எதார்த்தமாகும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட விவசாயிகளுக்கான திருத்தச் சட்டம்.இந்தியாவுக்கும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே போடப்படும் அரசியல் பொருளாதார இராணுவ ஒப்பந்தங்களுக்கும் இந்திய மக்களின் உணர்வுக்கும் ஏதாவது தொடர்பு உண்டாஇந்திய மக்களின் உரிமைகளை பறிப்பதுவும் மக்களை அரசியல் பொருளாதார இராணுவ ரீதியாக அடிமைப்படுத்தப்படும் ஒப்பந்தங்களையே மக்களுக்குத் தெரியாமல் நிறைவேற்றப் படுகிறது. இதுபோலவே அன்றைய ரஷ்ய ஜார் ஆட்சியிலும் நிறைவேற்றப்பட்டது. ஆகவே அன்றைய ரஷ்ய எதேச்சிகார ஜார் ஆட்சியையும் இன்றைய இந்திய போலி ஜனநாயக ஆட்சியையும் ஒப்பிட்டு புரிந்துகொண்டு அதனை இந்தியமக்களிடம் விளக்கி பிரச்சாரம் செய்வதும், இதற்கு மாற்றான உண்மையான மக்கள் ஜனநாயக ஆட்சி எப்படி இருக்கும் அதற்கு கம்யூனிஸ்டுகளும் உழைக்கும் மக்களும் என்ன செய்யவேண்டும், அதற்கான நமது கடமைகள் என்ன என்ன என்பதை சரியாகப் புரிந்துகொண்டு மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை ஓர் அணியில் திரட்டிட வேண்டும்.
அதற்காக நமக்கு எளிமையாக வழிகாட்டும் நூலாக நாட்டுப்புற ஏழை மக்களுக்கு என்ற லெனினது நூலை நாம் படித்து புரிந்துகொள்ள வேண்டும்.
மக்களுக்கு என்ன என்ன தேவை என்பதை புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் செயல்படக்கூடிய அரசுதான் உண்மையில் மக்களுக்கான ஜனநாயக அரசாக இருக்க முடியும்.
அத்தகைய மக்களுக்கான அரசாக இந்திய பாராளுமன்ற அரசு இருக்கிறதா? இல்லை என்பதே எதார்த்த உண்மையாகும்.இதற்கு நேர்மாறாக மக்களின் நியாயமான விருப்பங்களுக்கு நேர்எதிராக செயல்படக்கூடிய அரசுகளாகவே இந்திய மத்திய அரசும் மாநில அரசுகளும் இருப்பதை நாம் பார்க்கிறோம்.எடுத்துக்காட்டாக உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற எட்டுமணி நேர வேலைக் கொள்கையை கைவிட்டுவிட்டு உழைக்கும் மக்கள் 12மணிநேரம் உழைப்பில் ஈடுபட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வரலாற்றை பின்நோக்கி இழுத்துக்கொண்டு மக்களின் மீது தாக்குதல்கள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்து நடைமுறைப் படுத்தும்இவர்கள் மக்களிடம் கருத்து கேட்டார்களாஇல்லை.மக்களிடம் கருத்து கேட்க்காமல் முடிவெடுக்கும் இவர்களது ஆட்சிக்கும் ரஷ்ய ஜாரின் எதேச்சிகார ஆட்சிக்கும் என்ன வேறுபாடு? வேறுபாடு இல்லை. இரண்டு ஆட்சிகளுமுக்கும் ஒரே அடிப்படைதான், இரண்டு ஆட்சியும் மக்களுக்கு எதிரான ஆட்சிகளே ஆகும்.
இந்திய சட்டமன்ற பாராளுமன்ற ஆட்சியாளர்களும் இந்திய அதிகார வர்க்கங்களான போலீஸ் இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளின் மூலமே இந்திய மக்களை ஆள்கிறார்கள்.
இதே போலவே ரஷ்ய ஜாரின் ஆட்சியிலும் அரசு அதிகாரிகளைக்கொண்டே மக்களை ஜார் மன்னன் ஆண்டான்.இந்த வகையில் ஜாரின் ஆட்சிக்கும் இந்திய பாராளுமன்ற ஆட்சிக்கும் இடையில் வேறுபாடு எதுவும் இல்லை.
ரஷ்ய இராணுவத்தைப் பயன்படுத்தி ஜார் மன்னன் பல போர்களில் ஈடுபட்டான். அதன் மூலம் ஏராளமாக இராணுவத்திற்கு செலவு செய்தான். இந்திய இராணுவத்தைப் பயன்படுத்தி காஷ்மீர் மக்களின் மீதும் வடகிழக்கு மாநில பழங்குடி மக்களின் மீதும் பலாத்காரம் ஏவப்பட்டது.பாக்கிஸ்தான் ஆட்சியாளர்கள் பாக்கிஸ்தான் மக்களுக்கு எதிராக ஆட்சி நடத்துவதை மூடிமறைக்க இந்தியாவின் மீது பகையைத் தூண்டி அந்த மக்கள் பாக்கிஸ்தான் அரசுக்கு எதிராகப் போராடுவதை திசைதிருப்ப இந்தியாவிற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள். அதே போலவே இந்திய ஆட்சியாளர்களும் இந்திய மக்களுக்கு எதிராக செயல்படுவதை எதிர்த்து மக்களின் போராட்டங்களை திசைதிருப்ப பாக்கிஸ்தான் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து பாக்கிஸ்தானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதும்,அமைதிக் காலங்களில் இராணுவத்திற்காக ஏராளமாக செலவு செய்து அதாவது இராணுவ படைக்கருவிகளை ஏகாதிபத்திய நிறுவனங் களிடமிருந்து வாங்கி அந்நிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இந்திய வரிப்பணத் திலிருந்து வாரிவழங்குவதும், இந்திய மக்களுக்கான நலத்திட்டங்களை கைவிடு வதையும் நாம் பார்க்கிறோம். இவை அனைத்தும் இந்திய பெருமுதலாளிகளின் நலன்களிலிருந்தே ஆட்சியாளர்கள் எடுக்கிறார்கள். ஆனால் மக்களின் நலன்களிலிருந்தே எடுப்பதாக மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே இராணுவ விவகாரங்களைப் பொறுத்தவரை இந்திய ஆட்சிக்கும் ரஷ்ய ஜாரின் ஆட்சிக்கும் வேறுபாடு இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒருகாலத்தில் ரோமப் பேரரசு போன்ற அடிமைச் சமூக அரசு இருந்தது. இந்த அரசமைப்பு முறையானது இதற்கு முன்பு இருந்த புராதன பொதுவுடமை சமூக அமைப்பைக் காட்டிலும் முற்போக்கான சமூக அமைப்பாக வளர்ந்திருந்தது.இந்த அடிமைச் சமூக அமைப்பில் மக்களுக்கு தேவையான பொருளுற்பத்தி வளர்ந்தது.இதற்கு காரணம் புராதன பொதுவுடமை சமூகம் அழிக்கப்பட்டு வர்க்க சமூகம் உருவாகி,ஆண்டைகளின் எதேச்சிகார அரசுஉருவாக்கம்தான் இந்த வளர்ச்சிக்கு காரணமாகும்.இந்த வகையில் அடிமைகளை அடக்கி ஆளுகின்ற அடிமை ஆட்சியானது வரவேற்க்கப்பட வேண்டும்.ஆனாலும் அடிமைகளின் மீதான அடக்குமுறையின் காரணமாக ஒரு கட்டத்தில் சமூக பொருளுற்பத்தில் வளர்ச்சியிண்மை அதாவது தேக்கம் ஏற்பட்டது. அதற்கு காரணம் அடிமைகளின் வாழ்விற்கு அந்த சமூக அமைப்பு பொறுத்தமற்றதாக அடிமைகளிடம் ஏற்பட்ட உணர்வு அவர்கள் தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபட ஆர்வம் காட்டவில்லை. ஆகவே சமூகமானது அடுத்த கட்டத்திற்கு வளர வேண்டிய தேவையின் காரணமாகவும் அடிமைகளின் போராட்டம் காரணமாகவும் அடிமைச் சமூகம் தகர்க்கப்பட்டது அதற்குப் பதிலாக நிலப்பிரபுத்துவ சமூகமான மன்னராட்சி முறை உருவானது. ஆகவே நாம் மனிதகுல வரலாற்றை அலசி ஆராய்ந்து பார்த்தோமானால் மனித சமூகம் எப்போதும் ஒரே வகையான சமூக அமைப்பாக இருந்ததில்லை என்பதை நாம் காணலாம். புராதன பொதுவுடமை சமூகம் அனைத்து மக்களுக்கு இடையில் வேறுபாடு இல்லாத முற்போக்கான சமூகமாக இருந்தாலும் அந்த சமூகம் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குப் பொறுத்தமாக இல்லாத காரணத்தால் அந்த சமூக அமைப்பு தகர்க்கப்பட்டது. அதைக் காட்டிலும் உயர்ந்த சமூகமான அடிமைச் சமூகமாக மாறியது. அது போலவே அடிமைச் சமூகமும் அனைத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பொறுத்தமில்லாத காரணத்தால் அடிமைச் சமூகமும் தகர்த்து அழிக்கப்பட்டது. ஆகவே அனைத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தி லிருந்து அதற்குப் பொறுத்தமில்லாத சமூகம் தகர்த்து ஒழிக்கப்படுவதும் அதற்கு மாற்றான சமூகமும் அதற்கான அரசு அமைப்பு முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இது மனிதகுல வரலாற்று விதியாகும்.மனிதகுலம் ஒருபோதும் முன்னேற்றத்திற்கான முயற்சியை கைவிடாது. இதன் அடிப்படையி லிருந்தே ரஷ்ய மக்கள் எதேச்சிகாரம் ஒழிக!, அரசியல் சுதந்திரம் நீடூழி வாழ்க! என்று முழங்கினார்கள். ரஷ்யமக்களைப் போலவே இந்திய மக்களும் எதேச்சிகாரத்தை எதிர்த்து மக்கள் ஜனநாயகத்திற்காகவும், அரசியல் சுதந்திரத்திற்காகவும் முழக்கமிட்டு பாடுபடுவார்கள்.
மக்களின் போராட்டம் அவர்களுக்கு ஜனநாயகமும் சுதந்திரமும் கிடைக்கும்வரை ஓயாது.
மக்களின் உரிமைக்கான போராட்டங்களின் வளர்ச்சியின் போது உழைக்கும் மக்கள் அனைவரும்ஓர் அணியில் திரளுவார்கள்.அதற்காக உண்மையில் மக்களுக்காகப் பாடுபடுபவர்கள் முன்வந்துஉழைக்கும் மக்களை ஓர் அணியில் ஒன்றுபடுத்துவார்கள்.மக்களை பிளவு படுத்துபவர்களை எதிர்த்து உறுதியாக அவர்கள் போராடுவார்கள்.
உழைக்கவும் சுதந்திரமாக வாழ்வதற்கும் அவர்கள் சந்திக்கும் கொடுமைகள் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் உழைக்கும் மக்கள் ஓர் அணியில் திரள வேண்டும் என்று லெனின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.மேலும் அத்தகைய ஒற்றுமையை சாதிப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் லெனின் அறிவுறுத்தினார்.
லெனின் சொன்னது எவ்வளவு உண்மை என்பதை இந்திய அரசியலை கவனிப்பவர் களால் உணர முடியும். இந்திய உழைக்கும் மக்கள் ஓர் அணியில் ஒன்றுபடாமல் சாதியாலும், மதத்தாலும், மொழியாலும், இனத்தாலும், அரசியல் கட்சிகளாலும், கம்யூனிச குழுக்களாலும் பிளவுபட்டு இருப்பதை நாம் காணலாம். இவ்வாறு உழைக்கும் மக்கள் பிளவுபட்டு இருப்பதற்குப் பின்னால் முதலாளித்துவ வர்க்கங்களும், ஆட்சியாளர்களும், முதலாளித்துவ அரசியல் கட்சித் தலைவர்களும் இருக்கிறார்கள். மேலும் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் தலைவர்களும் அவர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலே முதலாளிகளுக்குத் துணைபோய்க் கொண்டு இருக்கிறார்கள். இந்தச் சூழலை சரியாகப் புரிந்துகொண்டு உழைக்கும் மக்களிடையே சாதி, மதம், இனம் போன்றவற்றை கடந்து அவர்களை ஒன்றுபடுத்துவதற்கு பாடுபடுபவர்கள் மட்டுமே உழைக்கும் மக்களின் உண்மையான நண்பர்கள் ஆவார்கள். சாதி, மதம் போன்றவற்றின் காரணமாக சமூகத்தில் பிரச்சனைகள் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அது போன்ற பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது? யாருடைய முயற்சியால் தீர்க்க முடியும் என்பதைப் பற்றி சிந்தித்தால் உழைக்கும் மக்களின் ஒற்றுமையாலும்,உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட புரட்சிகரமான போராட்டங்களின் மூலமே சாதிப் பிரச்சனை என்றாலும் சரி,மதப் பிரச்சனை என்றாலும் சரி,இனப்பிரச்சனை என்றாலும் சரி தீர்க்க முடியும் என்பதை சாதாரண மனிதர்களாலும் புரிந்துகொள்ள முடியும். ஆகவே இதற்கு மாறாக சாதிப் பிரச்சனையைத் தீர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை மட்டுமே அதிலும் அவர்களில் நியாயமானவர் களையும் நியாயமற்றவர்களையும்,சேர்த்துக்கொண்டு செயல்படுவதால் அந்த குறிப்பிட்ட சாதிப் பிரச்சனையைக் கூட தீர்க்க முடியாது மட்டுமல்லாமல் அந்த குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களின் பிரச்சனைகளும் மேலும் அதிகமாவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
எடுத்துக்காட்டாக உத்தரப்பிரதேசத்தில் பட்டியலின சாதியைச்சேர்ந்த மாயாவதியால் உத்திரப்பிரதேச ஆட்சியைக் கூட கைப்பற்ற முடிந்தது. ஆனால் அவர் சார்ந்த தாழ்த்தப்பட்டவர்களின் மீதான ஒடுக்குமுறைக்கு முடிவு காணப்பட்டதா? இதற்கு மாறாக தருமபுரியில் தோழர் பாலன் அவர்களின் தலைமையில் செயல்பட்ட வாலிபர் சங்கம் அனைத்து உழைக்கும் மக்களைத் திரட்டி நடத்தப்பட்ட போராட்டங்களின் பலனாக தனிக்குவளை முறை ஒழிக்கப்பட்டது.ஆகவே சாதிப் பிரச்சனையாக இருந்தாலும் சரி வேறு எந்தவகையான தனிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி உழைக்கும் மக்களை ஓர் அணியில் திரட்டுவதன் மூலமே பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு மாறாக உழைக்கும் மக்களையும் அவர்களை சுரண்டி ஒடுக்குபவர்களையும் ஒன்றுபடுத்தி குறிப்பிட்ட சாதி அடிப்படையிலோ அல்லது மதம் மற்றும் இனத்தின் ஒற்றுமை என்ற அடிப்படையில் செயல்படுவது பிரச்சனை களை தீர்க்கப் பயன்படாதது மட்டுமல்ல பிரச்சனையை பெரிதுபடுத்தவே பயன்படும். ஆகவே சாதிப் பிரச்சனை என்றாலும், மதம் இனம் போன்ற பிரச்சனையாக இருந்தாலும் அதனை தீர்ப்பதற்கு சாதி, மதம், இனம் கடந்து
அனைத்து உழைக்கும் மக்களையும் ஓர் அணியில் திரட்ட நாம் பாடுபடுவோம். அதற்காக உழைக்கும் மக்களின் நலனுக்காக பாடுபட விரும்பும் உழைக்கும் வர்க்க அமைப்புகளை ஒன்றுபடுத்த பாடுபடுவோம்.
........ தேன்மொழி.
No comments:
Post a Comment