யார் பழங்குடியினர்?
யார் பழங்குடியினர்?
பாதிக்கப்படும் நீலகிரி பழங்குடிக் குழுவினரின் கூட்டமைப்பைச் சார்ந்த கூடலூர் ஷோபா மதன் எனும் செயல்பாட்டாளர், ஆதிவாசிகளான குரும்பர் போன்றவர்களுக்கு அமைப்பாக்கப் பட்டுள்ள மதம் இல்லை எனவும், அவர்கள் தங்களது முன்னோர்களை மட்டும் வழிபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
" நான் வாழும் ஐயன்கொல்லி எனும் பகுதியின் அருகிலுள்ள கோயில்களில் அஜ்ஜி அல்லது பாட்டி என்று அழைக்கப்படும் தெய்வத்தைத்தான் வணங்கி வருகிறோம். அப்படி இருக்கும்பொழுது இந்து என்றோ, கிருத்துவர் என்றோ, முஸ்லீம் என்றோ எங்களை எவ்வாறு அடையாளப்படுத்த முடியும்?" எனக் கேட்கிறார்.
தங்களது பண்பாடு குறித்து ஆதிவாசிகள் பெருமிதம் கொள்வதாகவும், எனவே தங்களை ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது மொழிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என அரசு அடையாளப் படுத்த நிர்ப்பந்திப்பது தவறு எனவும் கூறுகிறார்.
அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மாற்றம் தேவை என நீலகிரி படுகர் அமைப்புச் சுட்டிக் காட்டுகிறது. பட்டியலினப் பழங்குடி ( ST ) பிரிவில் அரசால் உள்ளடக்கப்படா விட்டாலும், முன்னோர் வழிபாட்டை மதநம்பிக்கையாகவும், சடங்காகவும் கொண்டுள்ள சில இந்தியச் சமூகப் பிரிவுகளில் படுகர் சமூகமும் ஒன்று என
நீலகிரி ஆவண மையத்தின் கௌரவ இயக்குநர் வேணுகோபால் தர்மலிங்கம் தெரிவிக்கிறார்.
"பழங்குடியினரை ஆறு முக்கிய மதப்பிரிவுகளில் சுருக்குவதன் மூலம், பழமையான மதம் மற்றும் வழிபாட்டு முறையைப் பின்பற்றும் பெரும் பிரிவினரான பூர்வகுடி மக்களின் அடிப்படை உரிமையை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மறுக்கிறது" எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அதே போல், படுகர்கள் பேசும் மொழியைக் "கன்னடம்" என வகைப்படுத்துவது, அவர்களது மொழியாகிய படுக மொழியைக் கைவிடுவது போன்றதாகும் எனவும்,
படுக மொழி தனி மொழி எனவும், இது
ஆர்.பாலகிருஷ்ணன், சி.பைலட் - ரெய்சூர் மற்றும் பேராசிரியர் பால் ஹாக்கிங்ஸ் போன்றோர் வெளியிட்ட இலக்கணம் மற்றும் அகராதிகளின் மூலம் தெளிவாகிறது எனவும் தர்மலிங்கம் குறிப்பிடுகிறார்.
பூர்வகுடிக் குழுக்களான தோடர்கள், கோட்டர்கள், இருளர்கள், குரும்பர்கள், பனியாக்கள் மற்றும் காட்டுநாயக்கர்கள் போன்றோர் தாங்கள் புறக்கணிக்கப் படுவதாக ஏற்கெனவே வருத்தத்தில் உள்ளதாக தோடர் ஆதிவாசி சமூக அமைப்பின் உறுப்பினரும், நீலகிரி தொன்மைப் பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான நார்த்தா குட்டன் அவர்கள் தெரிவிக்கிறார்.
மேலும், " பூர்வீகக் குழுக்களின் தனித்துவமான மதத்தைக் கண்டறியும் பிரிவுகள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கட்டாயம் இருக்க வேண்டும்" எனவும் வலியுறுத்துகிறார்.
நன்றி - The Hindu dated 04/06/2023.
xxxxxxxxx
பழங்குடியினரை இந்து மற்றும் பிற பெரும் மதப்பிரிவுகளுக்குள் உள்ளிழுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இக்கால கட்டத்தில் ஆதிவாசி அமைப்புகளின் இந்தப் பிரகடனம், மிகவும் முக்கியமானதாகும்.
தவிரவும், பெரும் மதப்பிரிவுகளில் இணைந்து விட்ட பழங்குடியினரை ஆதிவாசிப் பிரிவில் ( ST ) அரசுகள் எக்காரணம் கொண்டும் சேர்க்கக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும். அரசுகள் பழங்குடியினரின் இக்கருத்தைச் செவிமடுத்து, அவர்களின் தனித்தன்மையையும், உரிமையையும் பேண வேண்டும். இது மிகவும் முக்கியம்.
No comments:
Post a Comment