இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு = லெனின். பகுதி - 3
தொழிலாளி வர்க்க இயக்கத்தினுள் எந்தெந்த பகைகளுக்கு எதிரான போராட்டம் போல்ஷ்விசம் வளர்ந்து வலிமையுற்ற உருக்கு உறுதி பெற உதவிற்று.
முதலாவதாகவும் முதன்மையானதாகவும் குறிப்பிட வேண்டியது சந்தர்ப்பவாதத்துக்கு எதிரானபோராட்டம். சந்தர்ப்பவாதமானது 1914-ல் திட்டவட்டமாய் சமூக - தேசிய வெறியாக வளர்ந்து, திட்டவட்டமாய் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராய் சென்று, முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் சேர்ந்து கொண்டது. இயல்பாகவே இது, தொழிலாளி வர்க்க இயக்கத்தினுள் போல்ஷ்விசத்தின் முதற்பெரும் பகையாகியது. இன்னமும் சர்வதேச அளவில் இது முதற்பெரும் பகையாகவே இருந்து வருகிறது. இந்தப் பகை குறித்து போல்ஷ்விக்குகள் முதன்மையான கவனம் செலுத்தினர், இப்போதும் செலுத்துகின்றனர்.
போல்ஷ்விக்குகளுடைய செயலாற்றலின் இந்தப் பகுதி இப்பொழுது வெளிநாடு களிலுங் கூடஓரளவு நன்கு தெரிந்ததாகி விட்டது.
ஆனால் தொழிலாளி வர்க்க இயக்கத்தினுள் இருக்கும் போல்ஷ்விசத்தின் மற்றொரு பகைகுறித்து இவ்வாறு சொல்வதற்கில்லை.போல்ஷ்விசமானது குட்டிமுதலாளித்துவ புரட்சிவாதத்தை எதிர்த்து நீண்ட பல ஆண்டுகள் நடத்திய போராட்டத்தின் மூலமாக உருப்பெற்று வளர்ச்சியுற்று உருக்கு உறுதியடைந்ததென்ற உண்மை குறித்து பிற நாடுகளில் அதிகம் தெரியாது. குட்டிமுதலாளித்துவ புரட்சிவாதம் அராஜகவாதச் சாயல் கொண்டது;அல்லது அராஜகவாதத்திடமிருந்து சில அம்சங் களைக் கடன் வாங்கிக் கொள்கிறது.
சாராம்சமான எல்லாத் துறைகளிலும் அது முரணற்ற பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நிலைமைகளுக்கும் தேவைகளுக்கும் உகந்த தகுதிகளைப் பெற்றதல்ல.சிறு உடமையாளர்,சிறு எஜமானர் (இந்தச் சமூக ரகத்தினர் பல ஐரோப்பிய நாடுகளில் விரிவான அளவில், வெகுஜன அளவிலுங்கூட இருந்து வருகின்றன)முதலாளித்துவத்தில் எப்பொழுதுமேஒடுக்குமுறைக்கு இலக்காகி,அடிக்கடி தமது வாழ்க்கை நிலைமைகளில் மிகக் கடுமையான,நம்ப முடியாத அளவுக்கு மிக விரைவான சீரழிவுக்கு உள்ளாகின்றார், படுநாசத்துக்குங்கூடஆளாகின்றார். இவர் எளிதில் புரட்சிகர அதிதீவிர நிலைகளுக்குச் சென்றுவிடுகிறார் என்றாலும், விடா முயற்சியுடன் போராடவோ, ஒழுங்கமைப்பு பெறவோ, கட்டுப்பாடும் உறுதிப்பாடும் கொள்ளவோ திராணியற்றவர் என்பது மார்க்சியவாதிகளுக்குத் தத்துவத்தின் வாயிலாக முழு அளவுக்கு நிலைநாட்டப் பட்டிருக்கிறது; ஐரோப்பிய புரட்சிகள், புரட்சிகரஇயக்கங்கள் ஆகியவற்றின் அனுபவத்தாலும் இது பூரணமாக ஊர்ஜிதம்செய்யப்பட்டிருக்கிறது.முதலாளித்துவத்தின் கொடுமைகளால் குட்டிமுதலாளித்துவப் பகுதியோர் “வெறிபிடித்த மூர்க்க நிலைக்குத்” தள்ளிவிடப்படுவதானது-- அராஜகவாதத்தைப் போலவே -- முதலாளித்துவ நாடுகள் யாவற்றுக்கும் இயல்பாகவே உரித்தான ஒரு சமூக நிகழ்வாகும். இந்தப் புரட்சிவாதத்தின் நிலையற்ற தன்மையும்,அதன் வறட்டுத் தனமும் மற்றும் அடங்கி அடிபணிந்துவிடும் நிலையாகவும் மனச்சோர்வாகவும் மாயக் கற்பனைகளாகவும் ஏதேனும் ஒரு முதலாளித்துவ “ஜம்பக்”கருத்தின் பால் “பைத்தியக்கார”மோகம் கொண்டு விடும் மடமையாகவுங்கூட அதிவிரைவாய் மாறி விடும்படியான அதன் போக்கும் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததே. ஆயினும், தத்துவார்த்த முறையிலோ, கருத்தியலான முறையிலோ, இவ்வுண்மைகளை ஏற்றுக்கொள்வதினால் மட்டும்,புரட்சிகர கட்சிகள் ஒருபோதும் தமது பழைய தவறுகளிலிருந்து விடுபட்டுவிட முடியாது. எதிர்பாராதசந்தர்ப்பங்களில், ஓரளவு புதிய வடிவங்களில், இதுவரை கண்டிராத ஜோடனைகளிலோ,சுற்றுச் சார்புகளிலோ, விபரீதமான -- அல்லது அனேகமாய் விபரீதமான----சூழ்நிலையிலோ இத்தவறுகள் எப்பொழுதும் தலைதூக்கிய வண்ணம்தான் இருக்கும். தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இழைக்கப்படும் சந்தர்ப்பவாதக் குற்றங்களுக்கு, ஒருவகை தண்டனையாக அராஜகவாதம் தலை தூக்கி விடுவதை அடிக்கடி காணலாம். இவ்விரு கொடும்கோரங்களும் ஒன்றுக்கொன்று துணையாகக் கரங் கோத்துச் செயல்பட்டு வந்தன.ரஷ்யாவில்பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதன் மக்கள் தொகுதி அதிக அளவு குட்டிமுதலாளித்துவ இயைபு கொண்டதாய் இருந்தபோதிலும் -- அராஜகவாதத்தின் செல்வாக்கு இரு புரட்சிகளின் போதும் (1905, 1917ஆம் ஆண்டுகளின் புரட்சிகள்), அவற்றுக்கான தயாரிப்புகளின் போதும் மிகச் சொற்பமாகவே இருந்தது. சந்தர்ப்பவா தத்தை எதிர்த்து மிகவும் கடுமையாகவும் சிறிதும் விட்டுக்கொடுக்காமலும், எப்பொழுதுமே போராடி வந்துள்ள போல்ஷ்விசத்துக்கே,சந்தேகத்துக்கு இடமின்றி இந்த நிலைமைக்குரிய பெருமையில் ஒரு பகுதி சார்ந்ததாகும். “ஒரு பகுதி” என்று நான் கூறுவதற்குக் காரணம் என்னவெனில்,ரஷ்யாவில் அராஜகவாதம் பலவீனமடைந்ததற்கு இதைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு காரணமும் இருந்தது. கடந்த காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் எழுபதாம் ஆண்டுகளில்) அராஜகவாதம் அளவு கடந்து வளர்வதற்கு வாய்ப்பு பெற்றிருந்த போது, அது முற்றிலும் தவறானது,புரட்சிகர வர்க்கத்துக்கு வழிகாட்டும் தத்துவமாகப் பணி புரியத் தகுதியற்றது என்பது கண்கூடாய் வெளிப்பட்டதே இந்த மற்றொரு காரணம்.
1903-ல் போல்ஷ்விசம் உதித்தெழுந்ததும், அது குட்டிமுதலாளித்துவ, அரைவாசி அராஜகவாத (அல்லது அராஜகவாதத்துடன் குலாவும்)புரட்சிவாதத்தையும் எதிர்த்து வெஞ்சமர் புரியும் மரபை சுவீகரித்துக் கொண்டது. புரட்சிகர சமூக -ஜனநாயகத்தில் இம்மரபு எப்பொழுதுமே இருந்து வந்தது.புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் வெகுஜனக்கட்சிக்குரியஅடித்தளங்கள்1900-03 ரஷ்யாவில் நிறுவப்பட்டு வந்த போது இம்மரபு எங்கள் நாட்டில் குறிப்பிடத் தக்கவாறு வலிமையடைந்துவிட்டது. வேறு எந்தக் கட்சியையும் விட அதிகமாய்க் குட்டி முதலாளித்துவப் புரட்சிவாதப் போக்குகளைப் பிரதிபலித்த கட்சியான “சோசலிஷ்டு புரட்சியாளர்”கட்சிக்கு எதிரான போராட்டத்தை போல்ஷ்விசம் சுவீகரித்துக் கொண்டு,அதனைத் தொடர்ந்து நடத்திச் சென்றது.இந்தப் போராட்டத்தை அது மூன்று பிரதானபிரச்சனைகள் சம்பந்தமாய் நடத்திற்று.முதலாவதாக,மார்க்சியத்தை நிராகரித்த அந்தக் கட்சி,எந்த அரசியல் செயலையும் மேற்கொள்ளுமுன் வர்க்க சக்திகளையும் அவற்றின் பரஸ்பரப் பலத்தையும் முற்றிலும் புற நோக்கு நிலையிலிருந்து மதிப்பீடு செய்வதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளப் பிடிவாதமாய் மறுத்தது (அல்லது இன்னும் பொருத்தமாகச் சொல்வதெனில், புரிந்துகொள்ளும் திறனற்றதாய் இருந்தது) என்று சொல்லலாம். இரண்டாவதாக அந்தக் கட்சி தனிநபர் பயங்கரவாதத்தை, தனியாட்களைக் கொலை புரிவதை --- மார்க்சியவாதிகளான நாம் தீர்மானமாய் நிராகரித்த இதனை --- அங்கீகரித்த காரணத்தால், தன்னை அது மிகமிகப் “புரட்சிகரமானதாக” மிகமிக “இடதுசாரித் தன்மையுடயதாகக்” கருதிக் கொண்டது.தனிநபர்பயங்கரவாதம் உசிதமானதல்ல என்ற காரணத்துக்காக மட்டுமேதான்நாம் அதை நிராகரித்தோம்.ஆனால் “கோட்பாடு அடிப்படையில்”மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியின்பயங்கரவாதத்தை,அல்லது அனைத்து உலகின் முதலாளித்துவ வர்க்கத்தால் முற்றுகையிடப்பட்டிருக்கும் வெற்றியடைந்த புரட்சிக் கட்சி ஒன்றால் கையாளப்படும் பயங்கரத்தைப் பொதுப்படையாகக் கண்டனம் செய்யக் கூடியவர்களை, 1900 - 03 லேயே பிளெஹானவ் -- அவர் மார்க்சியவாதி யாகவும் புரட்சியாளராகவும் இருந்த போது --நையாண்டி செய்து எள்ளி நகையாடினார். மூன்றாவதாக,”சோசலிஸ்டு புரட்சியாளர்கள்”
ஜெர்மன்சமூகஜனநாயகக் கட்சியின் ஒப்பளவில் அற்பமான சந்தர்ப்பவாதக் குற்றங்களைச்சுட்டிக்காட்டி ஏளனம் செய்வது மிகவும் “இடதுசாரித் தன்மையதாகும்” எனக் கருதினார்கள்.
ஆனால் அதேபோதில் அவர்கள் அக்கட்சியின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி களை -உதாரணமாய், நிலப்பிரச்சனையிலும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் பற்றிய பிரச்சனையிலும்---தாமே பின்பற்றி வந்தனர்.இதற்கிடையில்,நாம் எப்பொழுதுமே முன்வைத்து ஆதரித்து வந்த கருத்தை, அதாவது ஜெர்மன் புரட்சிகர சமூக - ஜனநாயகம்தான் (1900-03லேயே பிளெஹானவ் கட்சியிலிருந்து பெர்ன்ஷடைன் வெளியேற்றப்பட வேண்டு மென்று கோரினார் என்பதையும், இந்த மரபை எப்பொழுதுமே பின்பற்றி வந்துள்ள போல்ஷ்விக்குகள் 1913-ல் லேகினது இழிநிலையையும் கயமையையும் துரோகத்தையும் அம்பலப்படுத்தினார் (இங்கு குறிப்பிடப்படுவது “ஒருவேளைஜெர்மன் தொழிலாளர் இயக்கத்தில் இருந்து எதைக் காப்பி அடிக்கக்கூடாது” எனும் லெனின் கட்டுரையாக இருக்கும். இக்கட்டுரை “;புரோஸ்வெஷேனியே” (“அறிவொளி”) எனும்போல்ஷ்விக் சஞ்சிகையில் 1914 ஏப்ரலில் வெளியிடப்பட்டது. இதில் லெனின் ஜெர்மன் சமூக ஜனநாயகவாதி கார்ல் லேகியனின் வஞ்சகமான நடத்தையை அம்பலப்படுத்தினார்.இந்தப்பேர்வழி1912-ல் அமெரிக்கா சென்றபோது அங்கு அதிகார வட்டங்களையும் முதலாளித்துவக் கட்சிகளையும் புகழ்ந்து பேசினார்.என்பதையும் கவனிக்கவும்)வெற்றிவாகை சூடுவதற்குப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்குத் தேவைப்படும் கட்சியாக அமையும் நிலைக்கு மிக அருகாமையில் வந்த கட்சியாகும் என்பதை பரவலான,உலகு தழுவிய அளவில் வரலாறு இப்பொழுது ஊர்ஜிதம் செய்திருக்கிறது. இன்று,1920ல் யுத்த காலத்துக்கும் யுத்த பிற்கால ஆரம்ப ஆண்டுகளுக்கும் உரிய வெட்ககரமான எல்லாத் தோல்விகளுக்கும் பிற்பாடு, மேலையக் கட்சிகள் யாவற்றிலும் ஜெர்மன் புரட்சிகர சமூக - ஜனநாயகவாதிகளின் கட்சிதான் சிறந்த தலைவர்களை உருவாக்கிற்று என்பதையும், ஏனைய கட்சிகளைக் காட்டிலும் விரைவில் மீட்சியுற்று புது பலம் பெற்றது என்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.
ஸ்பார்த்தகிஸ்டுகளது கட்சியின் உதாரணத்திலும், காவுத்ஸ்கிகள், ஹில்ஃபர்டிங்குகள், லெதெபூர்கள்,கிரிஸ்பின்கள் ஆகியோரது சந்தர்ப்பவாதத் தையும் உறுதியின்மையையும் எதிர்த்து அயராத போராட்டம் நடத்திவரும் ஜெர்மன் சுயேச்சை சமூக - ஜனநாயகக் கட்சியின் இடதுசாரி, பாட்டாளி வர்க்கப் பிரிவின் உதாரணத்திலும் இதனைக் காணலாம். முழு வரலாற்றுக் கட்டம் ஒன்றின் மீது,அதாவது பாரீஸ் கம்யூனிலிருந்து முதலாவது சோசலிச சோவியத் குடியரசு வரையிலான கட்டடத்தின் மீது பரவலாகப் பார்வையை செலுத்துவோமானால்,பொதுவாக அராஜகவாதம் குறித்து மார்க்சியத்தின் போக்கு மிகவும் தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமில்லாமலும் புலப்படக் காணலாம். முடிவான பகுத்தாய்வில், மார்க்சியம்தான் சரியானது என்பது நிருபித்துக் காட்டப்பட்டுவிட்டது.
பெரும்பாலான சோசலிஸ்டுக் கட்சிகளில் அரசு குறித்து நிலவி வந்த சந்தர்ப்பவாதக்கருத்துக்களை அராஜகவாதிகள் சுட்டிக் காட்டியது நியாயமே என்றாலும்கூட, முதலாவதாக, இந்தச் சந்தர்ப்பவாதம் அரசு பற்றிய மார்க்ஸ் கருத்துக்களைப் புரட்டிக் கூறியதோடல்லாமல், வேண்டுமென்றே மூடிமறைத்தும் வந்ததால் ஏற்பட்டதாகும் என்பதைக் குறிப்பிட வேண்டும்(அரசும் புரட்சியும்) என்ற எனது புத்தகத்தில், அரசு குறித்து நடப்பிலிருந்த சமூக -ஜனநாயகக் கருத்துக்களின் சந்தர்ப்பவாதத்தைத் தெளிவாகவும் கண்கூடாகவும் அப்பட்டமாக வும் திட்டவட்டமாகவும் அம்பலம் செய்த எங்கெல்சின் கடிதம் ஒன்றை முப்பத்தாறு ஆண்டுகளாய், 1875 லிருந்து 1911 வரையில், பெபல் வெளியிடாமலே வைத்திருந்ததை எடுத்துரைத்தேன்*, இரண்டாவதாக, இந்தச் சந்தர்ப்பவாதக் கருத்துக்களைத் திருத்திச் சரிசெய்வதும், சோவியத் ஆட்சியதிகாரத் தையும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தைவிட அது மேம்பாடானதாய் இருப்பதையும் ஏற்றுக் கொள்வதும் ஐரோப்பிய, அமெரிக்க சோசலிஸ்டுக் கட்சிகளில் மிகுதியான அளவுக்கு மார்க்சியத் தன்மை கொண்டிருந்த பகுதிகளிடையே மிகவும் விரைவாகவும் நடந்தேறியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
போல்ஷ்விசம் தனது கட்சிக்குள்ளேயே “இடதுசாரித்”திரிபுகளை எதிர்த்து நடத்தியபோராட்டம் இரு சந்தர்ப்பங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க வீச்சு பெறலாயிற்று; 1908-ல்மிகவும் பிற்போக்கான ஒரு “நாடாளுமன்றத்திலும்”மிகவும் பிற்போக்கான சட்டங்களால் விலங்கிடப் பட்ட சட்டப்பூர்வமான தொழிலாளர் கழகங்களிலும் பங்கெடுத்துக் கொள்வதா, இல்லையா எனும் பிரச்சனை குறித்தும்; திரும்பவும் 1918-ல் (பிரேஸ்த் சமாதான உடன்படிக்கை) எந்த விதமான “சமரசத்துக்கும்”இடமில்லையா என்னும் பிரச்சனை குறித்தும் இப்போராட்டம் விரிவும் வீச்சும் மிக்கதாய் நடந்தேறியது.
மிகவும் பிற்போக்கான ஒரு “நாடாளுமன்றத்தில்”பங்கெடுத்துக் கொள்வதன் அவசியத்தைப்புரிந்துகொள்ளப் பிடிவாதமாய் மறுத்ததற்காக “இடதுசாரி” போல்ஷ்விக்குகள் 1908-ல் எங்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட்டனர்(இங்கு குறிப்பிடப்படுவது அத்சோவிஸ்டுகள் (“ஆத்சிவ்”எனும் ரஷ்யச் சொல்லில் இருந்து -இதன் பொருள் “திருப்பியழை” என்பது) மற்றும் இறுதி எச்சரிக்கையாளர்கள் பற்றியதாகும். இவர்களை எதிர்த்த போராட்டம் 1908 மற்றும்1909ல் வளர்ச்சியடைந்து அதன் விளைவாக அத்சோவிஸ்டு தலைவர் அ.பக்தானவ் போல்ஷ்விக்கட்சியிலிருந்துவிலக்கப்பட்டார். புரட்சிகரத் தொடர்களின் மறைவில் இந்த அத்சோவிஸ்டுகள்மூன்றாவது டூமாவில் இருந்த சமூகஜனநாயகக் கட்சி பிரதிநிதிகளை திரும்பஅழைக்கும்படியும் சட்டப்பூர்வ நிறுவனங்களான தொழிற்சங்கங்கள்,கூட்டுறவுகள்ஆகியவற்றிலான செயல்பாடுகளை நிறுத்திவிட வேண்டும் எனவும் கோரினார்கள். இறுதி எச்சரிக்கைவாதம் என்பதும் ஒரு வகைப்பட்ட அத்சோவிசமே. சமூக - ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகளுடன் நிலையுறுதியான புரட்சிகரமான வேலை செய்வதற்கு, அவர்களை நாடாளுமன்ற வாதிகளாக்குவதற்கு அவர்களுடன் விடாப்பிடியாக அன்றாட வேலைகளில் ஈடுபட வேண்டும் என்பதன் அவசியத்தை இறுதி எச்சரிக்கையாளர்கள் புரிந்து கொள்ளவில்லை. கட்சியின் மத்தியக் கமிட்டியின் முடிவுகளுக்கு டூமாவில் இருக்கும் சமூக - ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் முற்றுமுழுமையாகக் கீழடங்க வேண்டும் எனும் இறுதி எச்சரிக்கை முன்வைக்கப்படுவதை அவர்கள் ஆதரித்தார்கள்.அவர்கள் இதை ஏற்கத்தவறி னால் அவர்களை டூமாவிலிருந்து திருப்பியழைக்க வேண்டும் 1909ஜூன் மாதம் போல்ஷ்விக் செய்திப் பத்திரிக்கையான “புரொலிட்டாரியின்”விரிவுபடுத்தப்பட்ட ஆசிரியர் குழு மாநாடு தன் முடிவில் ர.ச.ஜ.தொ.கட்சியில் இருக்கும் ஒரு திட்டவட்டமான போக்கு என்ற முறையில் போல்ஷ்விசத்துக்கு அத்சோவிசத்துடனோ,இறுதி எச்சரிக்கை வாதத்துடனோஎவ்விதப் பொது அம்சமும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டியது.மற்றும் “புரட்சிகரமார்க்சியத்தின் பாதையில் இருந்து பிறழ்ந்து செல்லும் இந்தத்திரிபுகளை எதிர்த்து மிகவும்உறுதியாகப் போராடும்படி” போல்ஷ்விக்குகளை வலியுறுத்தியது.) ( இந்த “இடதுசாரிகள்”இவர்களில் பலர் கம்யூனிஸ்டு கட்சியின் போற்றத்தக்க உறுப்பினர்களாகப் பிற்பாடு இருந்த(இன்னமும் இருந்துவரும்) சிறந்த புரட்சியாளர்களாவர் -- 1905 ஆம் ஆண்டு பகிஷ்காரத்தின் வெற்றிகர அனுபவத்தை தமக்கு ஆதாரமாகக் கொண்டிருந்தனர். 1905 ஆகஸ்டில் ஆலோசனை அந்தஸ்துடைய “;நாடாளுமன்றம்” கூட்டப்படுவதாக ஜார் பிரகடனம் செய்த போது, (குறிப்பு - புலீகின் டூமா -- ஆலோசக அந்தஸ்துடைய சபை: 1905-ல் ஜார் அரசாங்கம்இதைக் கூட்டுவதாய் இருந்தது. இந்த டூமாவின் சட்டத்துக்கான நகல் உள்துறை அமைச்சர் புலீகின் தலைமையில் அமைந்த ஒருகுழுவால் தயாரிக்கப்பட்டதால், இது புலீகின் டூமா என்று அழைக்கப்பட்டது. இதன் சட்டமும் ஜாரின் அறிக்கையும் 1905-ல், ஆகஸ்டு 6 (19) ல் வெளியிடப்பட்டன. இந்த நகலின்படி டூமாவுக்குச் சட்டம் இயற்றும் உரிமை இல்லை. சில பிரச்சனைகளை விவாதிக்க மட்டுமே முடியும். இந்த டூமாவைப் பகிஷ்கரிக்கும்படி போல்ஷ்விக்குகள் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் கேட்டுக் கொண்டார்கள். இந்தடூமாவுக்கான தேர்தல்கள் நடைபெறவில்லை. 1905 ல் நடைபெற்ற அனைத்து ரஷ்ய அக்டோபர் அரசியல் வேலைநிறுத்தத்தாலும் புரட்சியின் எழுச்சியாலும் இந்த டூமா ஒழிக்கப்பட்டது).போல்ஷ்விக்குகள் எல்லா எதிர்க்கட்சி களுக்கும் மென்ஷ்விக்கு களுக்கும் எதிரான நிலையை ஏற்று, அதனைப் பகிஷ்காரம் செய்யும்படி அறைகூவினர். உண்மையில் இந்த “நாடாளுமன்றம்”1905அக்டோபரில் மூண்ட புரட்சியால் துடைத்தெறியப்பட்டு விட்டது(குறிப்பு இங்கு குறிப்பிடப்படுவது முதலாம் ரஷ்யப் புரட்சியின் போது நடந்த 1905அகில ரஷ்யஅக்டோபர் அரசியல் வேலைநிறுத்தம் ஆகும். இந்த வேலைநிறுத்தத்தில் இருபது லட்சம் மக்களுக்கு மேல் ஈடுபட்டிருந்தார் கள்.இந்தவேலைநிறுத்தம் எதேச்சிகாரத்தைஒழிப்பது, புலீகின் டூமாவை செயலூக்கத்துடன் பகிஷ்கரித்தல், அரசியல் நிர்ணய சபையைக்கூட்டுதல் மற்றும் ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவுதல் எனும் கோஷங்களின் கீழ்நடத்தப்பட்டது.அகில ரஷ்ய அரசியல் வேலைநிறுத்தம் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வலிமையை நிதர்சனப்படுத்திக் காட்டியது. நாட்டுப்புறப் பகுதி, சேனை மற்றும் கடற்படையின் புரட்சிப் போராட்டத்துக்கு ஊக்குவிப்பை அளித்தது.) அக்காலத்தில், பகிஷ்காரமே பிழையற்றதாக இருந்தது. பிற்போக்கான நாடாளுமன்றங்களில் பங்குகொள்ளாது இருப்பது பொதுவாகச் சரியானதே என்பதல்ல காரணம்; எதார்த்த நிலைமையை நாங்கள் பிழையின்றி மதிப்பிட்டோம் என்பதே காரணம். வெகுஜனவேலைநிறுத்தங்கள் முதலில் அரசியல் வேலைநிறுத்தமாகவும், பிறகு புரட்சிகர வேலைநிறுத்தமாகவும்,முடிவில் ஓர் எழுச்சியாகவும் வேகமாய் வளர்ச்சியுற்று வந்தன என்பதே அப்போதிருந்த எதார்த்த நிலைமை. தவிரவும், முதலாவது பிரதிநித்துவ சபை கூட்டப்படுவதைஜாரின் கையில் விட்டுவிடுவதா, அல்லது அதனைப் பழைய ஆட்சியிடமிருந்து பறிப்பதற்கு முயற்சி செய்வதா என்பதே அக்காலத்தியப் போராட்டத்தின் மையப் பிரச்சனையாக இருந்தது.
எதார்த்த நிலைமை இதையொத்ததாக இருக்கும் என்ற நிச்சயம் இல்லாத போதும் இருக்கமுடியாத போதும்,இதையொத்த ஒரு போக்கும் இதே வளர்ச்சி வேகமும் இருக்குமென்றநிச்சயம் இல்லாத போதும் இருக்க முடியாத போதும், பகிஷ்காரம் சரியானதல்ல.1905-ல் போல்ஷ்விக்குகள் “நாடாளுமன்றத்தைப்”பகிஷ்கரித்ததானது, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு மதிப்பிடற்கரிய அரசியல் அனுபவத்தை அளித்துச் செழுமைப்படுத்திற்று. சட்டப்பூர்வமான, சட்டவிரோதமான போராட்ட வடிவங்களும், நாடாளுமன்ற, நாடாளுமன்றத்துக்குப் புறம்பான போராட்ட வடிவங்களும் ஒன்றிணைக்கப் படுகையில், சில நேரங்களில் நாடாளுமன்ற வடிவங்களைக் கைவிடுவது பயனளிப்பதாக இருப்பதுடன் அவசியமும் ஆகிவிடுகிறது என்பதை அது தெளிவுபடுத்திற்று. ஆனால் இந்த அனுபவத்தைக் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே காப்பியடிப்பதும், விமர்சனப் பார்வையின்றி பிற நிலைமைகளிலும் பிற சூழல்களிலும் அனுசரிப்பதும் பெருந் தவறாகிவிடும். 1906-ல்போல்ஷ்விக்குகள் டூமாவை பகிஷ்கரித்தது சிறிய பிழையே என்றாலும், எளிதில் நிவர்த்திசெய்து கொள்ளத் தக்கதே என்றாலும் பிழையே ஆகும்.*
(*குறிப்பு - தனிநபர்களுக்குப் பொருந்துவது, தக்க மாறுதல்களுடன், அரசியலுக்கும் கட்சிகளுக்கும் பொருந்தும், பிழையே செய்யாதவரல்ல புத்திசாலி. அத்தகையோர் யாருமில்லை,இருக்கவும் முடியாது.யாருடைய பிழைகள் கடுமையான பிழைகளாய் இல்லையோ,யார் அவற்றைச் சுலபமாகவும் சீக்கிரமாகவும் சரிசெய்து கொள்ள முடிகிறதோ,அவர்தான் புத்திசாலி)1907லிலும் 1908லிலும் அடுத்து வந்த ஆண்டுகளிலும் டூமாவின் பகிஷ்காரம் மிகவும் கடுமையான, நிவர்த்தி செய்வதற்குக் கடினமான தவறாகிவிட்டது. ஏனெனில், ஒரு புறத்தில், புரட்சி அலை வேகமாக உயர்ந்தெழுந்து, எழுச்சியாக மாறிவிடுமென்று எதிர்பார்க்க முடியாமல் இருந்தது. மறுபுறத்தில், முதலாளித்துவ முடியாட்சி புதுப்பிக்கப்பட்ட போது உருவான வரலாற்று நிலைமை சட்டப்பூர்வமான செயற்பாடுகளையும் சட்டவிரோதமான செயற்பாடுகளையும் ஒன்றிணைத்துக் கொள்வதை அவசியமாக்கிவிட்டது. முழு நிறைவு எய்திவிட்ட இந்த வரலாற்றுக் கட்டம் இதற்குப் பிந்தைய கட்டங்களுடன் கொண்டுள்ள இணைப்பு இப்பொழுது மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. முடிவுற்றுவிட்ட இக்கட்டத்தை இன்று நாம் திரும்பிப் பார்க்கையில், சட்டப்பூர்வமான போராட்ட வடிவங்களையும் சட்டவிரோதமான போராட்ட வடிவங்களையும் ஒன்றிணைத் துக் கொள்வது இன்றியமையாத கடமையாகும். மிகவும் பிற்போக்கான நாடாளுமன்றத்திலும் பிற்போக்கான சட்டங்களால் கட்டுண்டிருக்கும் இதர பல நிறுவனங்களிலும் (இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முதலானவை) பங்கெடுத்துக் கொள்வது இன்றியமையாத கடமையாகும் என்னும் கருத்தோட்டத்தை போல்ஷ்விக்கு கள் மிக உக்கிரமாய் போராடி நிலைநிறுத்தி யிராவிடில், 1908 - 14-ல் அவர்களால் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கட்சியின் உறுதியான மையப்பகுதியை (பலப்படுத்து வதும் வளர்த்திடுவதும் உரப்படுத்துவதும் இருக்கட்டும்) சிதையாது பாதுகாத்துக் கொள்ளக்கூட முடியாமற் போயிருக்கும் என்று மிகத் தெளிவாய்த் தெரிகிறது.
1918-ல் பிளவு ஏற்படும் நிலை தோன்றிவிடவில்லை. அக்காலத்தில் “இடதுசாரி” கம்யூனிஸ்டுகள் எங்கள் கட்சிக்குள் அமைந்த ஒரு தனிப் பிரிவாகவே, அல்லது “உட்குழுவாகவோ” இருந்து வந்தனர். அதுவுங் கூட அதிக காலத்துக்கு நீடிக்கவில்லை. அதே ஆண்டில், 1918 லேயே, “இடதுசாரி கம்யூனிசத்தின்’ மிக முக்கியப் பிரதிநிதிகள், உதாரணமாய் தோழர்கள் ராதெக்கும் புகாரினும், தமது தவறைப் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டனர். பிரேஸ்த் சமாதான உடன்படிக்கை, கோட்பாட்டு அடிப்படையில் எந்தநியாயமும் இல்லாமலும், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சிக்குத் தீங்கு பயக்கும் விதத்திலும் ஏகாதிபத்தியவாதிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒரு சமரசமாகும் என்று அவர்களுக்குத் தோன்றிற்று. அது ஏகாதிபத்தியவாதிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒரு சமரசம் என்பது மெய்தான், ஆனால் அப்போதிருந்த நிலைமைகளில் செய்தே ஆக வேண்டியிருந்த ஒரு சமரசமாகும்.
பிரேஸ்த் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட எங்களது போர்த்தந்திரம் இன்று, உதாரணமாக, “சோசலிஸ்டு - புரட்சியாளர்களால்” தாக்கப்படுவதைக் கேட்க்கும் போதும், அல்லது தோழர் லான்ஸ்பரி என்னுடன் உரையாடுகையில் “சமரசம் செய்து கொள்ள போல்ஷ்விசத் துக்கு அனுமதி உண்டெனில், சமரசம் செய்து கொள்ளத் தமக்கும் அனுமதி உண்டென எங்கள் பிரிட்டீஷ் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் சொல்லுகிறார்கள்” என்று கூறுவதைக் கேட்க்கும் போதும், முதலில் நான் சாதாரணமாய் “ஜனரஞ்சமான: ஓர் எளிய எடுத்துக்காட்டைக் குறிப்பிட்டு, பின்வருமாறு பதிலளிக்கிறேன்.
ஆயுதங்கள் கொண்ட கொள்ளைக் கூட்டத்தினர் உங்களுடைய காரை வழிமறித்துக் கொள்வதாய் நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பணம், பாஸ்போர்ட், ரிவால்வார், கார் ஆகிய யாவற்றையும் அவர்களிடம் கொடுத்து விடுகிறீர்கள், இதற்குப் பதில் நீங்கள் கொள்ளைக் கூட்டத்தினரின் விரும்பத்தகாத சகவாசத்திலிருந்து விடுபடுகிறீர்கள், இது ஒரு சமரசமே என்பதில் சந்தேகமில்லை. “Do ut des” (பணம், ரிவால்வார், கார் ஆகியவற்றை நான் உனக்குத் “தருகிறேன்” முழு உடலுடன் போய்ச் சேரும் வாய்ப்பை “நீ எனக்குத் தா”). ஆனால்இத்தகைய ஒரு சமரசம் “கோட்பாடு அடிப்படையில் எந்த நியாயமும் இல்லாதது” என்றோ(கொள்ளைக் கூட்டத்தினர் இந்தக் காரில் ஏறி அதனையும் ரிவால்வாரையும் மேலும் பலரையும் கொள்ளையடிப்பதற்காகப் பயன்படுத்தலாம் என்றாலும்) சமரசம் செய்து கொண்டவரைக் கொள்ளைக் கூட்டத்தினருக்கு உடந்தையாக இருந்தவர் என்றோசித்த சுவாதீனமுடையயவர் எவரும் கூற மாட்டார்.ஜெர்மன் ஏகாதிபத்தியக் கொள்ளைக் கூட்டத்தின ருடன் நாங்கள் செய்து கொண்ட சமரசம் இது போன்றதொரு சமரசமேயாகும்.
ஆனால் 1914 - 18 லிலும் பிறகு 1918 - 20 லிலும் ரஷ்யாவில் மென்ஷ்விக்குகளும் சோசலிஸ்டு- புரட்சியாளர்களும்,ஜெர்மனியில் ஷெய்டெமன்வாதிகளும் (கனிசமான அளவுக்கு காவுத்ஷ்கிவாதிகளும்),ஆஸ்திரியாவில் ஒட்டோபௌவரும் பிரெடெரிக் ஆட்லரும் (ரென்னர்களையும் அவர்களைச் சேர்ந்தோரையும் கூறவே வேண்டியதில்லை), பிரான்சில் ரெனொடேல்களும் லொங்கேகளும், அவர்கள் கூட்டத்தினரும், பிரிட்டனில் ஃபேபியன்களும் “சுயேச்சையாளர்களும்” “தொழிற்கட்சியினரும்” (குறிப்பு - Labourites (தொழிற்கட்சியினர்) --1900 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிரிட்டீஷ் தொழிற்கட்சியின் உறுப்பினர்கள். இதுதொழிற்சங்கங்கள், சோசலிஸ்டு நிறுவனங்கள்,குழுக்கள் ஆகியவை இணைந்த நாடாளுமன்றத்துக்குத் தொழிலாளர் பிரதிநிதிகளை நேர்ந்தெடுக்கும் நோக்கம் கொண்ட (“தொழிலாளர் பிரதிநிதித்துவக் கமிட்டி”) அமைப்பாகும். 1906 ல் இக்கமிட்டி தன் பெயரை தொழிற்கட்சி என்று மாற்றிக் கொண்டது. தொழிற்சங்கங்களை வைத்து முதலில் உருவாக்கப்பட்ட இக்கட்சி (பின்னால் இதில் பல குட்டிமுதலாளித்துவ நபர்கள் சேர்ந்தார்கள்)தன் சித்தாந்தம் மற்றும் போர்த்தந்திரங்கள் விஷயத்தில் ஒருசந்தர்ப்பவாத அமைப்பாக இருந்தது.இக்கட்சியின் ஆரம்பம் முதலே இதன் தலைவர்கள் முதலாளிகளுடனான ஒரு ஒத்துழைப்புக் கொள்கையைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள். முதல் உலகப் போரின் போது இக்கட்சியின் தலைவர்கள் ஆர்த்தர் ஹெண்டர்சன் மற்றும் பிறர்) ஒரு சமூக - தேசியவெறி நிலை மேற்கொண்டனர். அரசாங்கத்தில் பதவி ஏற்றனர். அவர்களது உதவியுடன் அரசாங்கம் (நாட்டை ராணுவமயமாக்கல் உட்பட) பல தொழிலாளர் - விரோத சட்டங்களை நிறைவேற்றியது).தமது சொந்த நாடுகளின் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக,தமது சொந்த முதலாளித்துவ வர்க்கக் கொள்ளையர்களுடனும் சில நேரங்களில் “நேசநாடுகளது”முதலாளித்துவ வர்க்கக் கொள்ளையருடனும் சமரசங்கள் செய்து கொண்ட போது, இந்தக் கனவான்கள் எல்லோரும் உண்மையில் கொள்ளைக்கு உடந்தையாளர்களாகவே செயல்பட்டனர்.
முடிவு தெளிவாக விளங்குகிறது; “கோட்பாடு அடிப்படையில்” சமரசங்களை நிராகரிப்பது, எவ்வகையானவை என்பதை கருதாமலேயே பொதுப்பட எல்லாச் சமரசங்களையும் நிராகரிப்பது சிறுபிள்ளைத்தனமாகும்; பரிசீலனை செய்வதற்கே தகுதியற்ற ஒன்றாகும்.
புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்குப் பயனுள்ள பணியாற்ற விரும்பும் அரசியல் தலைவருக்கு, சமரசங்களில் சிறிதும் நியாயமில்லாத,சந்தர்ப்பவாதத்தின்,துரோகத்தின் வெளியீடாக அமைந்த ஸ்தூலமான உதாரணங்களை இனம் கண்டு கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்.
குற்றவிமர்சனத்தின் முழு சக்தியையும்,தயவு தாட்சண்யமின்றி அம்பலம் செய்து சிறிதும் விட்டுக் கொடுக்காமல் போராடுவதன் முழுத் தீவிரத்தையும் அவர் இந்த ஸ்தூலமானசமரசங்களுக்கு எதிராகச் செயல்பட வைக்க வேண்டும். அனுபவமிக்க “வியாபாரிகளான” சோசலிஸ்டுகளும் நாடாளுமன்ற எத்தர்களும் “பொதுப் படையாக சமரசங்கள்” பற்றிய வியாக்கியா னங்கள் மூலமாய்த் தமது பொறுப்பைத் தட்டிக் கழித்துத் தப்பியோடுவதற்கு அவர் அனுமதிக்கலாகாது. பிரிட்டீஷ் தொழிற் சங்கங்கள், ஃபேபியன் கழகம் மற்றும் “சுயேச்சைத்” தொழிற்கட்சி இவற்றின் “தலைவர்கள்” தாம் புரிந்த துரோகத்துக்கான பொறுப்பை-மெய்யாகவே படுமோசமான சந்தர்ப்பவாதமாகவும் துரோகமாகவும் காட்டிக்கொடுக்கும் வஞ்சகமாகவும் விளங்கும் இத்தகைய சமரசத்தை செய்து கொண்டதற்கான பொறுப்பை --இம் முறையில்தான் தட்டிக் கழித்து தப்பிக்க முயலுகின்றனர்.
சமரசங்களில் பல வகை உண்டு.அந்தந்த சமரசத்துக்குமான அல்லது சமரசத்தின் ஒவ்வொருவகைக்குமான சூழ்நிலையும் ஸ்தூல நிலைமைகளையும் பகுத்தாராயத் தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகும். கொள்ளைக் கூட்டத்தினர் செய்யக் கூடிய தீங்கை குறைக்கும் பொருட்டும், அவர்கள் பிடிபட்டு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு உதவும் பொருட்டும், அவர்களிடம் தனது பணத்தையும் ரிவால்வாரையும் கொடுக்கும் ஒருவரையும், கொள்ளையில்பங்கு பெறும் பொருட்டுத் தனது பணத்தையும் ரிவால்வாரையும் கொள்ளைக்கூட்டத்தினருக்கு கொடுக்கும் ஒருவரையும் வேறுபடுத்தி இனம் கண்டு கொள்ளத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.சிறு பிள்ளைக்குரிய இந்த எளிய உதாரணத்தில் இருப்பது போல் அரசியலில் எப்பொழுதும் இது அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை.ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அப்படியே எடுத்துக் கையாளக் கூடிய தயார் நிலையிலுள்ள தீர்வுகளை அளிக்கக் கூடிய ஒருவகைச் சூத்திரத்தை தொழிலாளர்களுக்கு வகுத்தளிக்க முற்படுகிறவர் எவரும், அல்லது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் கொள்கை எக்காலத்திலும் கடினமான அல்லது சிக்கலான நிலைமைகளை எதிர்ப்படாதென வாக்குறுதி அளிப்பவர் எவரும் ஏமாற்று வித்தைக்காரரே ஆவார்.
தவறான விளக்கத்துக்கு இடம் தராமல் இருக்கும் பொருட்டு, ஸ்தூலமான சமரசங்களின் பகுத்தாராய்வுக்கான சில அடிப்படை விதிகளை மிகச் சுருக்கமாக வேனும் இங்கு குறிப்பிட முயலுகிறேன்.
பிரேஸ்த் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டு ஜெர்மன் ஏகாதிபத்திய வாதிகளுடன் ஒரு சமரசம் செய்து கொண்ட கட்சியானது,1914ஆம் ஆண்டின் முடிவிலிருந்தே தனது சர்வதேசியத்தை நடைமுறையில் உருவாக்கி வந்துள்ளது.ஜாரிச முடியாட்சியை முறியடிக்குமாறு அறைகூவல் விடுக்கவோ,இரு ஏகாதிபத்திய கொள்ளைக் காரர்களிடையேநடைபெற்ற ஒரு போரில் “தாயகப் பாதுகாப்பைக்” கண்டனம் செய்யவோ அது அஞ்சியதில்லை. இக்கட்சியின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள்,முதலாளித்துவ அரசாங்கத்தில் அமைச்சர் பதவிக்கு இட்டுச் செல்லும் பாதையை மேற்கொள்வதைக் காட்டிலும் தண்டனைக்கு உள்ளாகி சைபீரியாவுக்கு கடத்தப்படுவதே மேலெனக் கொண்டனர்.ஜாரிசத்தைக் கவிழ்த்துவிட்டு ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவிய புரட்சியானது இக்கட்சியை மகத்தானதொரு புதிய சோதனைக்கு உள்ளாக்கிற்று -- இக்கட்சி தனது “சொந்த” ஏகாதிபத்தியவாதி களுடன் எந்த உடன்பாடுகளிலும் இறங்கவில்லை, அதற்குப் பதில் அவர்களைக் கவிழ்ப்பதற்காக வேலை செய்து, அவ்வாறே கவிழ்க்கவும் செய்தது. இக்கட்சி அரசியல் ஆட்சியதிகாரம் ஏற்றதும்,அது நிலப்பிரபுத்துவ உடமையையும் முதலாளித்துவஉடமையையும் தகர்த்து தரைமட்டமாக்கிவிட்டது.ஏகாதிபத்தியவாதிகளது இரகசிய ஒப்பந்தங்களைப் பகிரங்கப்படுத்தி அவற்றை நிராகரித்த பின்,இக்கட்சி எல்லா நாடுகளின்மக்களுக்கும் சமாதானத்தைப் பிரேரணை செய்தது. ஆங்கில - பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகள் சமாதானம் ஏற்படாதபடி குழிபறித்த பிற்பாடுதான், ஜெர்மனியிலும் பிற நாடுகளிலும்புரட்சியைத் துரிதப்படுத்து வதற்காக போல்ஷ்விக்குகள் மனித சக்திக்கு இயன்றதனைத்தையும் செய்த பிற்பாடுதான்,இக்கட்சி பிரேஸ்த் கொள்ளைக்காரர்களின் வன்முறைக்குப் பணிந்தது.
இத்தகைய ஒரு கட்சி இத்தகைய ஒரு நிலையில் செய்துகொண்ட இந்தச் சமரசம் முற்றிலும் சரியே என்பது எல்லோருக்கும் நாளுக்கு நாள் மேலும் மேலும் கண்கூடாகி வருகிறது.
ரஷ்யாவில்மென்ஷ்விக்குகளும் சோசலிஸ்டு - புரட்சியாளர்களும் (உலகெங்கும் 1914 - 20-ல் இரண்டாவது அகிலத்தின் தலைவர்கள் எல்லோரும் செய்தது போலவே), நேரிடையாகவோ மறைமுகமாகவோ “தாயகப் பாதுகாப்பு” -- அதாவது, தமது சொந்தக் கொள்ளைக்கார முதலாளித்துவ வர்க்கத்தின் பாதுகாப்பு -- நியாயமானதே என்பதாக வாதாடி, துரோகச்செயலுடன் தமது பணியைத் துவக்கினர். தமது சொந்த நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன்கூட்டு சேர்ந்து கொண்டு, தமது சொந்த முதலாளித்துவ வர்க்கத்துடன் தோளிணைத்து, தமது சொந்த நாட்டின் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராகப் போராடி அவர்கள் தமது துரோகத்தைத் தொடர்ந்து செயல்படுத்திச் சென்றனர். ரஷ்யாவில் முதலில் கெரென்ஸ்கியுடனும் காடேட்டுகளுடனும் பிற்பாடு கல்ச்சாக்குடனும் தெனீக்கினுடனுமான அவர்களுடைய கூட்டு --- அவர்களது சகாக்கள் வெளிநாடுகளில் அவரவரது நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் நிறுவிக் கொண்ட கூட்டைப் போலவே --- உண்மையில் அவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்குஎதிராளியாகி, முதலாளித்துவ வர்க்கத்தின்பக்கத்துக்கு ஓடித் துரோகம் புரிந்ததையே குறித்தது. ஏகாதிபத்தியக் கொள்ளைக் கூட்டத்தாருடன் செய்து கொள்ளப்பட்ட அவர்களுடைய சமரசமானது ஆதிமுதல் அந்தம் வரை ஏகாதிபத்தியக் கொள்ளையில் அவர்கள் உடந்தையாளர்கள் ஆகி விட்டனர் என்பதையே குறித்தது.
நாம் தெரிந்துகொள்ளவேண்டியவை.
1.தொழிலாளி வர்க்கமும் அதன் கட்சியும் தனக்கு எதிரான வர்க்கப் பிரிவை சரியாகத் தீர்மானித்து அதனை எதிர்த்துப் போராடுவதன் மூலமே தொழிலாளி வர்க்க இயக்கம் வளரும்.
2.முதலாவதாகவும் முதன்மையாகவும் தொழிலாளிவர்க்க கட்சியானது சந்தர்ப்ப வாதத்தை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும். அதற்கு தற்காலத்தில் நிலவும் சந்தர்ப்பவாதம் எது?என்பதை ஆய்வு செய்து தீர்மானித்து அந்த சந்தர்ப்பவாதத்தை அணிகளிடமும் மக்களிடமும் அம்பலப் படுத்த வேண்டும்.
3.பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குள் உள்ள தேசிய வெறியானது பாட்டாளி வர்க்க கட்சியை முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவை செய்யும் கட்சியாக மாற்றும்.
4.சமூக தேசிய வெறி என்ற பாட்டாளி வர்க்கத்திற்கு பகைத் தன்மை வாய்ந்த கொள்கையானது லெனின் காலத்திலேயே நிலவியது.அந்தக் கொள்கை இப்போதும் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குள் சர்வதேச அளவில் நிலவுகிறது.இந்த தீய கொள்கையை புரிந்துகொண்டு முறியடிக்க வேண்டியது நமது கடமையாகும்.
5. பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குள் நிலவும் குட்டிமுதலாளித்துவ புரட்சிவாதம், அதனை எதிர்த்தும் நாம் போராட வேண்டும்.
6. குட்டிமுதலாளித்துவ புரட்சிவாதம் என்பது சாராம்சத்தில் அராஜகவாத சாயல் கொண்டது.
7.சமுகத்தில் வாழும் சிறு உடமையாளர்கள் இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் பலநெருக்கடிகளை சந்திக்கிறார்கள்.பல துண்பங்களுக்கு ஆளாகிரார்கள்.ஆகவே இவ்வர்க்கத்தினர் விரைவில் புரட்சிகர அதிதீவிர நிலைகளுக்குச் சென்று விடுகிறார்கள். எனினும் விடாமுயற்சியுடன் போராடவோ,ஒழுங்கமைத்து கட்டுப்பாட்டுடன் செயல்படுவதில்லை. இத்தகைய கட்டுபாடற்ற போராட்ட முறைகள் பாட்டாளிவர்க்க இயக்கத்திற்கு எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும்.
8.குட்டிமுதலாளித்துவவாதிகள்புரட்சிகரமாக போராடினாலும் எதிரியின் நெருக்கடியின் போது தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டு எதிரியிடம் சரணடைவார்கள். ஆகவே இத்தகைய குட்டிமுதலாளித்துவ தலைவர்களைக் கொண்ட கட்சியானது ஆளும்வர்க்கங்களிடம் சரணடைவதை நாம் பார்க்கலாம்.
9. குட்டிமுதலாளித்துவ தலைவர்கள் தங்கள் அணிகளுக்கு நம்பிக்கை ஊட்ட மாட்டார்கள். அணிகளுக்கு மனச்சோர் வையும் மடமையையும் கற்பனையாக சிந்திக்கும் தன்மையும் ஏற்படுத்துவார்கள்.மாறாக விஞ்ஞான கம்யூனிசத்தின் மீதும் மார்க்சிய லெனினிய தத்துவ அரசியல் கொள்கையின் மீதும் நம்பிக்கை ஏற்படுத்த மாட்டார்கள். மார்க்சிய லெனினிய தத்துவ அரசியலை அணிகளுக்கு போதிக்கக் கூட மாட்டார்கள்.
10.பாட்டாளி வர்க்க இயக்கம் இதுவரை செய்த தவறுகளை கருத்தியலாக நாம் ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது. அந்த தவறுகளை களைவதற்கு நாம் கடுமையாகமுயற்சி செய்ய வேண்டும்.
11. பாட்டாளி வர்க்க இயக்கம் செய்த தவறுகளை களைந்து முன்னேறினாலும், மீண்டும் மீண்டும் புதிய வடிவங்களில் தவறுகள் செய்வதற்கு வாய்ப்பு எப்போதுமே இருக்கும். ஆகவே நாம் தவறே செய்ய மாட்டோம் என்று கருதுவது மிகவும் தவறானதாகும். நமது அமைப்பிற்குள்உள்ள தோழரோ அல்லது வெளியிலிருந்தோ நமது தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அந்த தவறுகளை களைந்தால் மட்டுமே ஒரு பாட்டாளி வர்க்க அமைப்பு உழைக்கும்வர்க்கங்களின் நலன்களுக்காகப் பாடுபடும்.தவறுகளை களையவில்லை என்றால் அந்தக் கட்சியானது முதலாளிகளின் பக்கத்தில் சேர்ந்து உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கும். இந்தியபொதுவுடமை இயக்க வரலாற்றைப் பார்த்தால் உழைக்கும் வர்க்க கட்சித் தலைவர்கள் தங்களது தவறுகளை களைய மறுப்பதைக் காணலாம். அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினாலே தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களை எதிரிகளாகப் பார்ப்பதும் அவர்கள் மீது அவதூறான குற்றச்சாட்டு களை சுமத்துவதும் அவர்களது தவறான கொள்கைகள்தான் சரியானது என்று தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சாதிப்பதையும் நாம் காணலாம்.இத்தகைய தலைவர்களை நம்பி உழைக்கும் மக்கள் பின்தொடர்வதால்தான் உழைக்கும் வர்க்கம் இன்றுவரை விடுதலை பெறாமல் அடிமைகளாகவே இருக்கிறோம்.
12.தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாத தவறுகள் இழைக்கப்படும் போது அதனை எதிர்த்தப் போராட்டத்தில் சில வேளைகளில் அராஜகவாதத்தில் வீழ்ந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போராடும்போது நாம் அராஜகவாதத்தில் மூழ்கிவிடாமல் அராஜகவாதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும். இந்தியாவில் சிபிஐ, சிபிஎம் கட்சியின் சந்தர்ப்பவாதத் தலைமையை எதிர்த்துப் போராடி உருவான எம்.எல். கட்சியானது அழித்தொழிப்பு பாதை என்ற அராஜகப் பாதையைத் தேர்ந்தெடுத்துசெயல்பட்டதை கணக்கிலெடுத்துப் பார்த்தால் இந்த உண்மையை நாம் புரிந்துகொள்ளலாம்.
13.ரஷ்யாவில் குட்டிமுதலாளித்துவ அராஜகவாதம் இருந்தது.அது நரோத்னிக்குகள் என்ற அமைப்பின் மூலம் வெளிப்பட்டது.ஆனால் இந்த நரோத்தினியத்தை லெனின் சரியான சித்தாந்தப் போராட்டத்தின் மூலம் முறியடித்தார்.தொடர்ந்து லெனினும் போல்ஷ்விக்கட்சியும் ரஷ்யாவில் நிலவிய சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி ரஷ்ய தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் அராஜகவாதத்தின் செல்வாக்கை முறியடித்தனர்.ஆனால் இந்தியாவில் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குள் நிலவும் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போராட்டம் நடைபெறவில்லை. அதன் காரணமாக ஒரு பக்கத்தில் திருத்தல்வாதமும் மறுபக்கத்தில் அராஜகவாதமும் மொத்தத்தில் குறுங்குழு வாதமும் நீடிக்கிறது. ஆகவேஇந்தியாவில் சந்தர்ப்பவாதத்தையும், அராஜகவாதத் தையும் குறுங்குழுவாதத்தையும் எதிர்த்துப்போராட வேண்டியது ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.
14.இந்தியாவில் மார்க்சிய கட்சி என்று சொல்லிக்கொள்பவர்களில் பல கட்சித் தலைவர்கள் மார்க்சியத்தை நிராகரித்து தலித்தியவாதிகளாகவும், இனவாதிகளாகவும், அடையாளஅரசியலை பின்பற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் அவர்களின் அரசியலை செயல்படுத்துவதற்கு முன்பு நாட்டிலுள்ள வர்க்க சக்திகளையும்அவற்றின் பரஸ்பர பலத்தையும் அவ்வர்க்கங்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு எந்த வர்க்கங்களை எந்த வர்க்கங்களுக்கு எதிராகத் திரட்டி போராடி உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது என்று செயல்படுவதில்லை. மாறாக தலித்தியவாதிகள், இனவாதிகள், அடையாள அரசியல்வாதிகளின் துணையோடு செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்து செயல்பட்டு கம்யூனிச லட்சியங்களின் அவசியத்தை உழைக்கும் மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு மாறாக மார்க்சியத்திற்கு எதிரான தத்துவ அரசியலுக்குப் பழியாகி கம்யூனிசத்தின் மீது மக்களை வெறுப்படையச் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
15.குட்டிமுதலாளித்துவ அராஜகவாத நிலையிலிருந்து தனிநபர்களை அழித்து ஒழித்தல் என்ற கொள்கையைப் பின்பற்றி ஆயுதப் போராட்டத்திற்கும் அரசியல் போராட்டத்திற்கும் இடையிலான இயங்கியல் உறவைப் புரிந்துகொள்ளாமல் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுபோய்விட்ட மாவோயிஸ்டுகள் வர்க்கங்களை அரசியல் அடிப்படையில் அணிதிரட்டதவறுகிறார்கள்.
16.சந்தர்ப்பவாதிகளை விமர்சிக்கும் சிலர் அவர்களை அறியாமலேயே அதே வகையான சந்தர்ப்பவாதத்தில் மூழ்கிவிடு கிறார்கள்.
17.பாரீஸ் கம்யூனிலிருந்து ரஷ்யப் புரட்சிவரையிலான காலப்பகுதியை நாம் ஆய்வு செய்தால் சந்தர்ப்பவாதம்,அராஜகவாதம் போன்ற மார்க்சியத்திற்கு எதிரான தத்துவ அரசியல் வெற்றிபெறவில்லை என்பதையும் அதற்கு நேர் எதிரான மார்க்சிய தத்துவ அரசியல்தான் உலகில் இதுவரை வெற்றி பெற்றுள்ளது என்பதை வரலாற்றிலிருந்து நாம் அறியலாம்.மார்க்சிய தத்துவ அரசியலை நடைமுறைப்படுத்திய லெனின் மாவோ போன்றவர்களால் மட்டுமே உழைக்கும் மக்களுக்கான உன்னதமான ஆட்சியை நிறுவ முடிந்தது.
18.பெரும்பாலான சந்தர்ப்பவாதிகள் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை ஏற்றுக்கொள்வதில்லை.அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை சில சந்தர்ப்பவாதிகள் முற்றிலும் நிராகரிக் கின்றனர்.இன்னும் சில சந்தர்ப்பவாதிகள் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை திரித்துப் புரட்டுகிறார்கள். ஆகவே ஒவ்வொரு உண்மையான கம்யூனிஸ்டும் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை படித்து உள்வாங்கி அதன் அடிப்படையில் அரசியல் கொள்கைகளை வகுத்துக்கொள்ள பயிற்சி பெறவேண்டும்.
19.சோவியத்து சோசலிச ஆட்சி முறைக்கும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஆட்சி முறைக்கும் இடையிலான வேறுபாடு களையும் சோவியத்து சோசலிச ஆட்சி முறையானது முதலாளித்துவ நாடாளுமன்ற ஆட்சி முறைக்கும் மேலான உழைக்கும் மக்களுக்கு நலன் பயக்கும் ஆட்சி முறை என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் புரிந்துகொண்டு அதனை மக்களிடம் பரப்ப வேண்டும். நிலவுகின்ற முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சியைத் தூக்கியெறிந்து விட்டு உண்மையில் உழைக்கும் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும் சோவியத்து சோசலிச ஆட்சிக்காக போராடுவதற்கு உழைக்கும் மக்களைத் திரட்ட வேண்டும்.
20.மிகவும் பிற்போக்கான நாடாளுமன்றத் திலும் அதாவது நாடாளு மன்றத் தேர்தல்களிலும் கம்யூனிஸ்டுகள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று லெனின் சொன்னார். இருந்தபோதும் ரஷ்ய போல்ஷ்விக்குகள் டூமாவுக்கான (நாடாளுமன்ற தேர்தல்) தேர்தல்களை சிலசமயம் புறக்கணிக்கவும் செய்தனர்.அதன் மூலம் நாடாளுமன்னத் தேர்தலை எப்போதுபுறக்கணிப்பது எப்போது அதில் கலந்துகொள்வது என்பது பற்றியும் இந்த நூலில் லெனின் விளக்கியுள்ளார். லெனினது கருத்தை திருத்தல்வாதிகளான சிபிஐ, சிபிஎம் கட்சித்தலைவர்களும் புரிந்துகொள்ள வில்லை,இடது தீவிரவாதிகளான எம்.எல் கட்சித் தலைவர்களும் புரிந்துகொள்ள வில்லை.
21.பாராளுமன்ற ஆட்சிமுறையை தூக்கியெறிவதற்கான சூழல் உள்ளதா? அல்லதுபாராளுமன்றத்தை உடனடியாக தூக்கியெறிவதற்கான அமைப்பு பலமோ, மக்களின் உணர்வு நிலையோ இல்லாதிருக்கிறதாஎன்பதை சரியாக மதிப்பிட்டே பாராளுமன்றத் தேர்தலில் நாம்பங்குகொள்வதா அல்லது புறக்கணிப்பதா என்பதை பாட்டாளிவர்க்க கட்சி முடிவுசெய்யவேண்டும்.
22.எந்த சூழலிலும் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் பங்குகொள்வது என்பது வலது சந்தர்ப்ப வாதம் ஆகும். எந்த சூழலிலும் தேர்தலில் பங்குகொள்ளாமல் புறக்கணிப்பது என்பது இடது தீவிரவாதம் ஆகும்.
23.ஒரு பாட்டாளிவர்க்க கட்சியானது சட்டப்பூர்வமான போராட்டங்களை மட்டுமேநடத்துவது என்பது தவறான வலது சந்தர்ப்பவாதம் ஆகும்.ஆகவே கட்சியானதுசட்டப்பூர்வமான போராட்டங்களையும் சட்டவிரோதமான போராட்டங்களையும் நடத்தவேண்டும். மேலும் இவ்விருவகை யான போராட்டங்களையும் இணைக்கும் திறன் வேண்டும்.
24.மிகவும் பிற்போக்கான நாடாளுமன்றங் களிலும் பங்கெடுத்துக்கொள்வது ஒரு பாட்டாளி வர்க்க கட்சிக்கு அவசியமாகும்.
25.சில வேளைகளில் ஏகாதிபத்தியவாதி களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு பாட்டாளிவர்க்ககட்சியானது சமரசம் செய்துகொள்ள வேண்டும்.புரட்சியின் நலன் கருதியே இத்தகைய சமரசங்களை கட்சி செய்துகொள்ள வேண்டும்.
26.ரஷ்யாவில் செயல்பட்ட மென்ஷ்விக்கு களைப் போலவோ, ஜெர்மனியில் செயல்பட்டகாவுத்ஷ்கிவாதி களைப் போலவோ முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவோ அல்லது முதலாளி வர்க்கத்துடன் சரணடையும் நோக்கத்தோடு சமரசம் செய்துகொள்ளக் கூடாது.
27.ஒரு பாட்டாளிவர்க்க கட்சியானது கொள்கை கோட்பாடுகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.மாறாக நடைமுறையில் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றிக்காக சமரசம் செய்துகொள்ளலாம்.ஆகவே எப்போது எத்தகைய சூழலில் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்பதை வரலாற்று அனுபவங்களிலிருந்து கட்சித் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
28.பிரிட்டீஷ் தொழிற்சங்கத் தலைவர்கள்,ஃபேபியன் கழகத் தலைவர்கள் மற்றும் சுயேச்சை தொழிற்கட்சித் தலைவர்கள் செய்த துரோகத்தனமான சமரசங்களைப் போன்ற சமரசங்களை ஒரு புரட்சிகர பாட்டாளிவர்க்கக் கட்சித் தலைவர்கள் செய்யக்கூடாது.அத்தகைய சமரசங்கள் தொழிலாளி வர்க்கத்தை அதன் எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கும் செயலாகும்.
29.எப்போதும்,எந்த சூழ்நிலைக்கும் பொருத்தமான அப்படியே எடுத்து கையாளக்கூடிய தயார் நிலையிலான தீர்வுகளை அளிக்கக் கூடிய தீர்வுகள் எதுவும் இல்லை. குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட தீர்வுகளை காண்பதற்கு பாட்டாளி வர்க்கக் கட்சித் தலைவர்களுக்குவழிகாட்டும் தத்துவமாகவே மார்க்சிய லெனினியம் உள்ளது. ஆகவே மார்க்சிய லெனினிய தத்துவத்தையும் பாட்டாளி வர்க்கப் புரட்சிகர வரலாற்று அனுபவத்தின் அடிப்படையிலும் குறிப்பிட்ட சூழலை மதிப்பிட்டு தீர்வுகளைக் காண்பது கட்சித் தலைவர்களின் கடமையாகும்.
30. பாட்டாளிவர்க்க இயக்க வரலாற்றை நாம் ஆழ்ந்து கற்க வேண்டும். புரட்சிகர மார்க்சியவாதிகளான மார்க்ஸ்,எங்கெல்ஸ்,லெனின்,ஸ்டாலின் மாவோ போன்ற தலைவர்களின் போதனைகளையும் அவர்களின் அனுபவங்களையும்நாம் கற்று அவற்றை பின்பற்ற வேண்டும்.மார்க்சியத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் துரோகம்செய்த ரஷ்ய மென்ஷ்விக் தலைவர்களையும்,காவுத்ஷ்கி,டிராட்ஸ்கி,குருஷேவ்,டெங்சியோபிங் போன்ற துரோகத் தலைவர்களின் துரோகங்களை யும் நாம் தெரிந்துகொண்டு அவர்களின் துரோகக் கொள்கைகளையும் துரோக நடைமுறையும் நாம் புறக்கணிக்க வேண்டும்.அதன் மூலம் மட்டுமே நாம் உண்மையிலேயே மக்களின் நண்பர்களாகி சமூகத்தை புரட்சிகரமாக மாற்ற முடியும்.
தேன்மொழி.
No comments:
Post a Comment