சாதிவாத, மதவாத, இனவாத அரசியலைப் புறக்கணித்து வர்க்கப் போராட்ட அரசியலை முன்னெடுப்போம்- தேன்மொழி.
அரசு என்பது ஒரு வர்க்கம் பிற வர்க்கங்களை ஒடுக்குவதற்கான வன்முறை கருவி என்று காரல் மார்க்ஸ் போதித்தார். இந்தப் போதனையை ஏற்றுக்கொண்டவர்கள்தான் மார்க்சியவாதிகள் ஆவார்கள். இந்த போதனையின் அடிப்படையில் ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்கமானது ஒன்றுபட்டு ஒடுக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராகப் போராடி, ஒடுக்கும் முதலாளி வர்க்கத்தைப் பாதுகாக்கும் மற்றும் உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கும் அரசு அமைப்பை தூக்கியெறிந்துவிட்டு உழைக்கும் வர்க்கத்தின் அரசை உருவாக்க வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று காரல் மார்க்ஸ் போதித்தார். இந்த போதனையை பின்பற்றுபவர்களே மார்க்சியவாதிகள் ஆவார்கள்..
ஆனால் உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்றுவதற்கும் உழைக்கும் மக்களின் தாக்குதலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் முதலாளி வர்க்கமானது வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்ப மக்களிடையே சாதி மோதல், மத மோதல், இன மோதல் போன்ற பிளவுவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தி மக்களைத் தூண்டிவிட்டு வர்க்கப் போராட்டத்திலிருந்து திசைதிருப்புவார்கள்.
அதாவது மார்க்சியவாதிகள் வர்க்கப் போராட்டத்தை நடத்த மக்களிடம் வர்க்க அரசியலைப் பரப்பி வர்க்க அடிப்படையில் மக்களை அணிதிரட்டி வர்க்கப் போராட்டத்தை நடத்துவதை தங்களது லட்சியமாகக் கொண்டு செயல்படுவார்கள்.
ஆனால் உழைக்கும் மக்களின் எதிரிகளும், துரோகிகளும் வர்க்க அரசியலைப் பிரச்சாரம் செய்யாமல் சாதி அரசியல், மத அரசியல், இன அரசியலைப் பிரச்சாரம் செய்து மக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும், இன ரீதியாகவும் உழைக்கும் மக்களிடம் ஒற்றுமையை சீர்குழைத்து வர்க்கப் போராட்டத்திலிருந்து திசைதிருப்பும் வேலைகளை செய்து தொடர்ந்து அனைத்து சாதி, மத, இனத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்றுபட்டு வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடவிடாமல் சதித்தனமாகத் தடுத்துவருகின்றனர்.
மார்க்சிய போதனைகளை எதிர்ப்பதற்கும் அதனை கைவிடுவதற்கும் கம்யூனிசத்தை நேரடியாக எதிர்ப்பவர்களும், கம்யூனிசத்தை ஏற்றுக் கொண்டவர்கள் போல் நடித்துக்கொண்டு மக்களை ஏமாற்றுபவர்களின் அரசியல்கள்தான் சாதி அரசியல், மத அரசியல் மற்றும் இன அரசியலாகும்.
ஆகவே மார்க்சிய போதனைகளை உண்மையாகப் பின்பற்றுபவர்களின் அரசியல் என்பது வர்க்கப் போராட்ட அரசியலே ஆகும் என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டு கம்யூனிஸ்டுகள் செயல்பட வேண்டும். சமூகப் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் சரி அவை அனைத்தும் வர்க்கப் போராட்ட அரசியலுக்கு உட்படுத்திப் பார்ப்பதும், செயல்படுபவர்கள் மட்டுமே உண்மையான மார்க்சியவாதிகள் ஆவார்கள். அத்தகைய உண்மையான மார்க்சியவாதிகள் மட்டுமே உழைக்கும் மக்களின் உண்மையான நண்பர்கள் ஆவார்கள். இதற்கு மாறாக சாதிவாத, மதவாத, இனவாத அரசியல்வாதிகள் அனைவரும் உழைக்கும் மக்களின் உண்மையான நண்பர்களாக இருக்க முடியாது, அவர்கள் அனைவரும் உழைக்கும் மக்களின் எதிரிகளே அல்லது துரோகிகளே ஆவார்கள்.
No comments:
Post a Comment